Tuesday, June 23, 2009

நடிகர்களுக்கு கட்சி தேவையா?

நடிகர் திரு.விஜய், 'அரசியலுக்கு வருவதில் தவறில்லை' என்ற கருத்தைத் தனது பிறந்த நாளன்று சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதே. பொதுப்பணியாற்றுவதற்கு ரசிகர் மன்றம் என்ற அமைப்பை விட கட்சி என்ற அமைப்பு அதிக வலுவானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என்ற கருத்தும் ஏற்புடையதே. அவருக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு மக்கள் அவரது செய்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தவற மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி தலைப்புக்கு வருவோம் (!!!). சேர்ந்தே இருப்பது என்று இப்போது சிவனார் தருமியைப் பார்த்து கேட்பாரேயானால், நடிகர்களும் கட்சிகளும் என்று சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு நடிகர்கள் கட்சிகளைத் துவக்கியும், கட்சிகளில் இணைந்தும் வருகிறார்கள். எல்லாருக்கும் ஆதர்சமாக இருப்பவர்கள் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் அவர்களும் இன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களும்தான். அவங்களே முதல்வராயிட்டாங்க நாம ஆக முடியாதா! என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கலாம். அதாவது இவர்கள் அவர்களை விட சற்று அதிகத் தகுதி வாய்ந்தவர்கள் என்ற எண்ணம் என்றும் சொல்லலாம்.

இப்போதைய கேள்வி, நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் போணியாகுமா ஆகாதா? என்பதுதான். சற்று வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் இதற்கான விடை கிடைக்கலாம்!


நடிகர்களின் அரசியல் வரலாறு:

நடிகர்கள் என்ற ஒரு பிரிவினர் தோன்றியது 19ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் என்று கொள்ளலாம். அதுவரை இருந்த கலைஞர்களாக இருந்தவர்கள் அரசர்களையும், நிலப் பிரபுக்களை நம்பியும் காலம் தள்ள வேண்டிவந்தது. பெரும்பான்மையினரின் கல்வியறிவின்மையால் புதுமை மற்றும் புரட்சிக் கருத்துக்களை மக்களி டையே பரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

பிரிட்டிஷாரின் கல்வி முறையும் நிர்வாக சீர்திருத்தங்களும் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, பண்டைய பாரம்பரிய சமுதாய அமைப்பைக் கட்டுடைத்தன. புதிய நகரங்கள் தோன்றி பல்வேறு மக்கள் குடியேறும் நிலை ஏற்பட்டு அவர்களின் பொழுது போக்கிற்காக கலை நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. இவ்வாறு புதிய நகரங்களில் புதுமையான நிகழ்ச்சிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பாய்ஸ் கம்பெனி போன்ற நாடகக் குழுக்கள் தொடங்கப் பட்டன.

இதற்கிடையே சினிமா என்ற அரிய கண்டுபிடிப்பு நகர மாந்தர்களிடையே புதுக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமாவும் நாடகமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாகவே இருந்தன. நாடகத்திலிருந்து சினிமாவிற்குச் செல்வது இயற்கையான பரிணாம வளர்ச்சியாகக் கருதப்பட்டது.

இந்தக்கால கட்டத்தில்தான் இரு பெரும் அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று சுதந்திரப் போராட்டம். மற்றொன்று சமூக நீதிப் போராட்டம். இவற்றின் இன்றியமையாமையையும் தாக்கத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் ஊடகமாக நாடகங்களும் சினிமாவும் செயல்பட்டன.

இயற்கையாகவே அமைந்த திறமை, போராட்டத்தால் ஏற்பட்ட தாக்கம், அதுவரை கண்டும் கேட்டுமிராத கதைகள், வசனங்கள் ஆகியவை மக்களைக் கட்டிப்போட்டன. இந்தக் கால கட்டத்தில் சினிமா என்பது மாயக்கண்ணாடியாகவே அறியப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் முதல்வர்கள் முறையே, சி.என்.அண்ணாதுரை அவர்கள், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்கள் நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் பிரவேசித்தார்கள். அப்போதுதான் பாடல்கள் ஆக்கரமித்திருந்த சினிமாவில் வசனங்கள் இடம்பெற ஆரம்பித்தன. கூர்மையான வசனங்களை அளித்த எழுத்தாளர்களும், அவற்றை மக்களுக்கு அளித்த நடிகர்களும் தெய்வமாகவே (Larger than Life portrayal) மதிக்கப் பட்டார்கள்.

இவர்கள் சமகாலத்தில் அரசியல் அரங்கிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆக இவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலிலிருந்து சினிமாவிற்குச் சென்றதால் ஏற்றமடைந்தார்கள் என்றால் மிகையாகாது.


அக்காலத்து மற்றவர்கள்:

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நடிகர் திலகம் அரசியலில் சோபிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. எஸ்.எஸ்.ஆர். பெருமளவு சாதிக்கவில்லை.

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவகுமார் போன்றோர் நல்ல நடிகர்களாகப் பரிணமித்தும் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்கள். இவர்களுக்கு அரசியல் பின் புலம் இல்லை என்பதே உண்மை.

முக்கியமாக புரட்சித் தலைவி ஜெயலலிதா மட்டுமே அரசியல் பின் புலமின்றி, நடிகையாகப் பரிணமித்து அரசியலில் வெற்றி கண்டவர் என்று சொல்லலாம்.


இக்காலத்து மற்றவர்கள்:

திரு.விஜயகாந்த், திரு. சரத் குமார், திரு. விஜய டி. ராஜேந்தர், திரு.கார்த்திக் போன்றோர் கட்சிக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்குமே திரைக்கு வருவதற்கு முன் நேரடி அரசியல் பின்புலம் இல்லை. இவர்களால் அரசியலில் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.

மற்றபடி திரு.தியாகு, திரு.சந்திரசேகர், திரு. நெப்போலியன், திரு.ராதாரவி, திரு.எஸ்.எஸ்.சந்திரன், திரு.எஸ்.வி.சேகர் மற்றும் பலர் பல காலம் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பவர்கள். இவர்களுக்கு முதல்வர் நாற்காலி மேல் காதல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் முன் பாராவில் சொன்னவர்களுக்கு அந்தக் காதல் அதிகம் உண்டு.

ஜெ.கே.ரித்தீஷ் இவர்களில் வித்தியாசமானவர், முதலில் சிறு அளவில் அரசியல், பின்பு சிறு அளவில் நடிப்பு என்று வந்து இப்போது பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவரது வளர்ச்சி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


ஆக வெள்ளித் திரையில் காண்பது பிம்பம் என்ற உண்மை மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அத்தகைய பிம்பத்தை நேரில் பார்க்கும் ஆவல் உண்டாவது இயற்கையே. அதனால்தான் நடிகர்கள் எங்கு சென்றாலும் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தை அரசியல் சக்தியாக மாற்றலாம் என்ற எண்ணம் தவறானதென்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் போது, இந்த நடிகர்களுக்குத் தெரியாமல் போவது வருந்தத்தக்கது.

நடிகர்கள் நடிகர்களாகவே இருக்க விரும்புவதில்லை. அதற்கும் மேல் சென்று ஒரு கை பார்த்துவிட விரும்புகிறார்கள். ஆனால் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதே உண்மை. அரசியலில் நிரந்தர வெற்றிபெற நல்ல அடித்தளம் வேண்டும். சினிமா அத்தகைய அடித்தளத்தை தராது என்பதே இன்றைய காலத்தின் கோலம்.

நடிகர்களுக்குக் கட்சி தேவையாக இருக்கலாம்.

ஆனால் நடிகர்களின் கட்சி மக்களுக்குத் தேவையா என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது????

3 comments:

☀நான் ஆதவன்☀ said...

//ஆனால் நடிகர்களின் கட்சி மக்களுக்குத் தேவையா என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது????//

வேறு யார் மக்கள் தான். அதான் இந்த தேர்தல்ல சொன்னாங்களே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நடிகனைத் திட்டினால் ரசிகனுக்கு ஏன் கோபம் வருகிறது?

படித்துவிட்டீர்களா தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அரசியலில் நிரந்தர வெற்றிபெற நல்ல அடித்தளம் வேண்டும். சினிமா அத்தகைய அடித்தளத்தை தராது என்பதே இன்றைய காலத்தின் கோலம்.//


என்றுமே அதுதான் உண்மை தல..,


மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது அகிலனின் கயல்விழி கதையாவது படித்திருப்பீர்கள்.,

நாட்டின் இளவரசன் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை வளரச் செய்ய பாடல்கள் புனைந்தும் கூத்துக்கள், நாடகங்கள் நடத்தியும் தெரிவில் இறங்கி கூட்டம் கூட்டுவதாக கதையின் போக்கு போகும்.

அதாவது அந்த அரசியல்வாதி தனக்குக் கூட்டம் சேர்க்கவும், தன் கருத்துக்களைப் பரப்பவும் இயல்,இசை,நாடகக் கலையைப் பயன் படுத்துகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

அவரப் பார்த்த மற்ற புலவர்களோ, கூத்துக் காரர்களோ அதைப் பின் பற்றி ஆட்சியைப் பிடிக்க நினைப்பது அறிவீனம் அல்லவா..,