Monday, September 14, 2009

ரவை உப்புமா - சமையல் குறிப்பு

முன்குறிப்பு:- என் பதிவை யாரும் 'ஹேக்' செய்யவில்லை. நான் தான் என் கம்பெனியால் ஹேக் செய்யப்பட்டுள்ளேன்! சில காலம் இந்த உப்புமா பதிவுகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!!

ரவை உப்புமா போன்ற செய்வதற்கு எளிமையான உணவு இதுவரை எதுவும் இல்லை. அதை டேஸ்டி (?!)யாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.


முதலில் ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.

1. வாணலி
2. கரண்டி
3. கத்தி (காய்கறிகளை நறுக்க)
4. காய்கறி நறுக்கும் பலகை
5. தட்டு - இரண்டு, மூன்று

இனி ரவை உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்.

1. பாம்பே ரவை - 200 கிராம்
2. வெங்காயம் - பெரியது 1
3. தக்காளி - மீடியம் 1
4. உருளைக்கிழங்கு - மீடியம் 1
5. கேரட் - சிறியது 1
6. பச்சைப் பட்டாணி - கொஞ்சம்.
7. பச்சை மிளகாய் - 2 - 3
8. இஞ்சி - 1 துண்டு
9. கருவேப்பிலை
10. கொத்தமல்லி

தாளிக்க

1. கடுகு
2. கடலை பருப்பு
3. உளுத்தம் பருப்பு
4. பெருங்காயம்
5. ரீஃபைண்டு ஆயில்
6. உப்பு - தேவையான அளவு
7. தண்ணீர் - ரவையின் அளவைப்போல் இரண்டிலிருந்து இரண்டரை பங்கு

செய்முறை.

பார்ட் 1.

1. வாணலியை அடுப்பில் வைக்கவும்.
2. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
3. சிறிதளவு எண்ணெயை விடவும்.
4. ரவையைக் கொட்டி கிளறி வறுக்கவும்.
5. சற்று சிவப்பாக வரும் போது அதை ஒரு தட்டில் ஆர வைக்கவும்.
6. அடுப்பை அணைக்கவும்.

பார்ட் 2

1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
4. பச்சைப்பட்டாணியை உரித்து வைத்துக்கொள்ளவும்.
5. பச்சை மிளகாயை 'ஸ்லிட்' செய்து வைத்துக்கொள்ளவும்.
6. இஞ்சியை தோல் சீவி சிறிய சைசில் கட் செய்யவும். அல்லது 'கிரேட்' செய்யலாம்.
7. கருவேப்பிலை, கொத்தமல்லையை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.

பார்ட் 3

1. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
2. வாணலியை அடுப்பின் மேல் வைக்கவும்.
3. எண்ணெயை விடவும்.
4. எண்ணெய் சூடானவுடன் கீழ்கண்ட வரிசையில் பொருட்களை எண்ணெயில் போடவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு.
5. இவை சற்று பொன்னிறமாக வதங்கியபின், உருளைக்கிழங்கையும், கேரட்டையும் சேர்க்கவும்.
6. தண்ணீர் விடாமல் வதக்கவும்.
7. பட்டாணி சேர்க்கவும்.
8. தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. இவை அனைத்தும் ஒரு பதமாக திரண்டு வரும் போது, தண்ணீரை விடவும். கருவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
10. தண்ணீர் கொதிக்கும் போது, ரவையை மெதுவாக விட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டி கட்டிவிடும்.
11. அடுப்பை சிம்மில் வைத்து மேலே ஒரு தட்டு போட்டு மூடி, ஆவியில் வேக வைக்கவும்.

இறக்கினால் சூடான ரவை உப்புமா தயார்.

இது கிச்சடி அல்ல. கிச்சடிக்கு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இது வெஜிடபுள் உப்புமா. இதற்கு சர்க்கரை தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ஊறுகாய், சட்னி, சாம்பார் என்ற ஆர்டரில் தொட்டுக்கொள்ளலாம்.

மிகவும் டேஸ்டியான ஐட்டம்!!

Tuesday, September 1, 2009

அரிசி உப்புமா - சமையல் குறிப்பு

இன்று தங்கமணி ஊரில் இல்லை. வழக்கமாக தங்க்ஸ் ஊரில் இல்லாத நாட்களில் காசிவினாயகாவுக்கு ஜூட் விட்டுவிடுவேன். இன்று வித்தியாசமாகச் செய்யலாம் என்று பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த, நான் செய்ததை நண்பர்கள் ரசித்துச் சாப்பிட்ட டிபன் அரிசி உப்புமா செய்வது என்று முடிவு செய்தேன். அதை நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்.

சூடாகவும் சுவையாகவும் அரிசி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போமா? (நன்றி டாக்டர் மா.நன்னன்)

முதலில் உப்புமா செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.



1. மிக்ஸி (ஜார் அவசியம், மின்சாரம் மிக மிக அவசியம்)
2. வாணலி, அல்லது அடி கனமான பாத்திரம்
3. குக்கர், குக்கருக்குள் போடும் பிளேட், குக்கருக்குள் போடும் பாத்திரம், அதை மூட ஒரு தட்டு, குக்கர் மூடி, விசில்.
4. கரண்டி - ஜல்லிக் கரண்டி அல்லது சட்டுவம்.
5. அரிசி எடுக்க ஒரு பாத்திரம்.
6. கேஸ் அடுப்பு - கேஸ் இருக்க வேண்டும்., லைட்டர்

அடுத்து உப்புமா செய்வதற்குத் தேவையான பொருள்கள்

1. பச்சை அரிசி - 200 கிராம்
2. துவரம்பருப்பு - 20 கிராம்
3. மிளகு - 10 கிராம்
4. சீரகம் - 10 கிராம்

இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு (ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்).

5. எண்ணெய் (நல்லெண்ணை பெஸ்ட், ரீஃபைண்ட் ஆயில் ஓக்கே, கடலை எண்ணை டேஸ்ட் நன்றாக இருக்கும்) - 15 மில்லி
6. கடுகு - சிறிதளவு
7. வெந்தயம் - சிறிதளவு
8. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
10. மிளகாய் வற்றல் - இரண்டு அல்லது மூன்று
11. கருவேப்பிலை - சிறிதளவு

இவை தாளிக்கத் தேவையான பொருட்கள் - இந்த வரிசையில்தான் தாளிக்க வேண்டும்.

இவற்றோடு முக்கியமாக உப்பு. உப்பு இல்லையேல் அது உப்புமா இல்லை, சப்புமா ??

தண்ணீர் - அரைத்துக்கொண்ட பொருட்களின் அளவுக்கு இரண்டு பங்கு (பழைய அரிசியாக இருந்தால் இரண்டரை பங்கு)

செய்முறை:-

ப்ராசஸ் 1:-

1. அடுப்பைப் பற்ற வைக்கவும்
2. வாணலி அல்லது அடி கனமான பாத்திரைத்தை அடுப்பின் மேல் வைக்கவும்
3. எண்ணையை விடவும்
4. எண்ணை காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு திருப்பவும்.
5. இவை சற்று பொன்னிறமாக வந்ததும், பெருங்காயத்தூள், மிளகாய்வற்றல் ஆகியவற்றைப் போடவும்.
6. கார நெடி சற்று குறைந்ததும் கருவேப்பிலையைப் போடவும்.
7.கருவேப்பிலை வெடித்தவுடன் தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றவும்.
8. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
9. மீதியிருக்கும் தண்ணீரை ஊற்றவும்.
10. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

ப்ராசஸ் 2:-

1. தண்ணீரை வாணலியில் ஊற்றிவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அடுத்த பர்னரை பற்ற வைக்கவும்.
2. குக்கரை அதன் மேல் ஏற்றவும். குக்கருக்குள் தண்ணீர் விடவும். மூடியில் கேஸ்கெட் போட்டு தயாராக வைக்கவும். விசில் தயாராக வைக்கவும்.
3. வாணலியில் தண்ணீர் கொதிக்கும் நிலைக்கு வந்ததும், சற்று சிம் செய்யவும்.
4. அரைத்து வைத்திருக்கும் அரிசி ஆகிய வற்றை மெதுவாகக் கொட்டிக்கொண்டே கிளறவும்.
5. இரண்டு மூன்று முறை கிளறியதும், குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்திற்கு இதை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்யவும்.
6. குக்கருக்குள் குக்கர் பாத்திரத்தை இறக்கி, மூடி போட்டு, விசிலையும் போடவும்.
7. பர்னரை 'ஹை'யில் வைக்கவும்.
8. இரண்டு விசில் வந்ததும் 'சிம்' செய்யவும்.
9. இன்னும் இரண்டு விசில் வந்ததும் ஆஃப் செய்யவும்.
10. சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்டீம் போன பின் குக்கரைத் திறந்தால் .....

ஆஹா.... நாவில் சுவையூற வைக்கும் அரிசி உப்புமா தயார். அதை ஒரு கிளறு நன்றாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

பெஸ்ட் சைட் டிஷ்:- எலுமிச்சங்காய் ஊறுகாய், அல்லது தக்காளி சாம்பார்.

செய்து பார்த்து சுவைத்து விட்டுச் சொல்லுங்கள்..

இன்னும் நிறைய ஐட்டங்கள் இருக்கின்றன!!!