Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Wednesday, June 17, 2009

ஏன் ? (இது கேள்வி பதில் தொடர்தான்!!)

நான் ஒரு பட்டயக் கணக்கர். அதாவது ஆடிட்டர். திருவிளையாடல் தருமி போன்று எனக்கு கேக்கதான் தெரியும்.

ஆனாலும் தொடர் பதிவு, அதுவும் சுய புராணம் பாடுவது என்பது அல்வா சாப்பிடுவது போல் என்பதால் இதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு மாதத்திற்கும் மேல் பதிவு ஏற்ற முடியாத நிலை. ஆனால் அவ்வப்போது இந்தப் பக்கம் வந்து யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வது, தவிர்க்க முடியாத சூழலில்(!) பின்னூட்டமிடுவது என்று ஓடியது ஒரு மாதம். இந்தச் சூழலில் தொடர் பதிவு.

ஆஹா யாராவது நம்மை அழைக்க மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. மருத்துவர் ஐயா அதாவது சுரேஷ் (பழனியிலிருந்து) இழுத்து விட்டார்.


சுரேஷ் (பழனியிலிருந்து) அவர்களே, ஒரு அருமையான லீட் கொடுத்து கூப்பிட்டு இருக்கீங்களே, உங்களுக்கு என் பொன்னான மணியான முத்தான இன்னும் பிறவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எந்தப் பெயர்? ஏன் இந்த கேள்வி? இது ஒரு கேள்வியா ரெண்டு கேள்விகளா? அப்படின்னுல்லாம் கேக்கத் தோணுது. ஆனாலும் அதையெல்லாம் கேக்காம நீங்க கேட்டதுக்கு பதில் சொல்றேன். நோட் பண்ணிக்குங்க.

நமக்கு ஒரு புனைப் பெயர் தேவையா இருந்திச்சா. நமக்கு வரலாற்று நாவல்னா ரொம்பப் புடிக்குமா. அதுலயும் சாண்டில்யன்னா உசுரா. அதுலயும், யவனராணியும், கடல்புறாவும் என்னை ரொம்பவும் கவர்ந்துச்சா. அதுல வர்ற ஈரோக்கள் ரொம்ப சூப்பரான கேரக்டர்களா இருப்பாங்களா.

நமக்கு சொந்த ஊரு காஞ்சிபுரமாச்சா. ஒரு கெத்து கெடக்கணும்னு தோணுச்சா. அதனால பிளாக் டைட்டில் காஞ்சித்தலைவன்னு வச்சனா. அதுக்கு சமமா யோசிச்சனா. இளையபல்லவன் மாட்டிச்சா. இப்படித்தான் வந்தது என் பட்டப்பெயர்.

நாம செலக்ட் பண்ணது நமக்கே பிடிக்காமப் போகுமா. ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா அமஞ்சுதுன்னு தோணுது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அவ்வ்வ்வ்னு கமென்ட் போட்டா அழுதா மாதிரின்னா இன்னிக்கி கூட அப்படியாச்சு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எந்த கையெழுத்து. சிக்னேசர்னு சொல்லுவாங்களே அதுவா அல்லது பொதுவா எழுதறதா? அப்படி எழுதறதுன்னா எந்த மொழியில? தமிழா, இங்கிலிபீசா, இந்தியா, கன்னடமா, மலையாளமா, துளுவா, கொண்கணியா, ஹனலுலுவா, மடகாஸ்கரா, ஐஸ்லாண்டா, அலஸ்காவான்னு கேக்கலாமுன்னுபாத்தா பதில் சொல்லத்தான் இந்தப் பதிவுங்கறாங்க.

சரி எதுனாலும் என் கையெழுத்து ரொம்ப நல்லாவே இருக்கும்.


4.பிடித்த மதிய உணவு என்ன?

பசி ருசியறியாது. ஆனாலும் சாய்ஸ்னு பாத்தா நுனி வாழையிலையில் பரிமாறப்படும் ஃபுல் மீல்ஸ்தான் ஃபர்ஸ்ட் பிரிஃபெரென்ஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்னாங்க இது. வேற யாரோட வச்சிக்காம என்னோடயேவா நட்பை வச்சிக்கிறது. நல்லா கேக்கறாங்கப்பா. நாங்களே (பட்டயக் கணக்கர்களே) தேவலாம் போல இருக்கே!.
உடனே நட்ப வச்சிக்குவேன். கொஞ்சம் காலம் போன பிறகுதான் தொடர்வதா வேணாமான்னு தெரியும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் உவ்வே. அருவியில் ஊலலல்லா..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரைத்தான்!

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் பிடிக்காது. பிடிக்காத விசயம் பிடிச்சதுன்னு கடிக்கலாம்னு பாத்தா முடிய மாட்டேங்குதே.

பிடித்தது விடா முயற்சி. பிடிக்காதது அதன் காரணம் பற்றி எழும் கூடுதல் சுமை.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என்னங்க இது என் சரிபாதியும் என்னில்தானேங்க இருக்குது. அப்படின்னா எந்த சரிபாதி? வலதா இடதா, மேலேயா, கீழேயான்னு வெவரமா கேளுங்கன்னு கேக்கலாம். சரிபாதிங்கறது வாழ்க்கைத் துணைன்ற பொருள் கொண்டு பதில் சொல்றேன்.

பிடித்தது: வேறுபட்ட ரசனைகள்

பிடிக்காதது: எல்லாவற்றையும் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்து என்னை சோம்பேறியாக்குவது.


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

புதசெவி.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை வேட்டி. சென்னை வெயிலுக்கு இதுவே சாஸ்தி...

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிடரைப் பார்த்துக் கொண்டு, கீபோர்ட் ஒலியையும் மின் விசிறியின் ஒலியையும் மற்றும் பரவியுள்ள நிசப்தத்தின் ஒலியையும் கேட்டுக்கொண்டு.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மல்டிகலர்னு சொன்னா கோச்சுப்பீங்களான்னு தெரியல. ஆனா பிடித்த வர்ணம் நீலம். ஆகவே நீல வர்ண பேனான்னு வச்சுக்கலாம்.

14.பிடித்த மணம்?

குழந்தையின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எல்லாரையும் எல்லாரும் அழைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் அழைக்கலாம் என்று நினைப்பது வாத்தியார் அவர்களை. முன்னமே சினிமா தொடருக்கு அழைத்திருக்கிறேன். அப்போது ரொம்ப பிசின்னு சொன்னார். இப்போ என்னன்னு தெரியல பாப்பம்.

அவரைப் பத்தி தெரிஞ்சிக்கலாமேன்னுதான்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

எதைத் தள்ள எதை அள்ள அப்படின்னு ஒரு சொலவடை உண்டு. நண்பர் சுரேஷ் (பழனியிலிருந்த்) அவர்களுடைய கனவுகளே வலைப்பூவில் உள்ள அனைத்து மலர்களுமே வாசம் வீசும் செண்டு. அதன் மகரந்தத்தில் மயங்கிய நான் ஒரு வண்டு. அவரது எழுத்தில் எல்லா சுவைகளும் உண்டு. எப்பொழுதும் அவர் எழுத்தில் களிப்பேன் கண்டு (கவித கவித).
இதன்னியில் அவர் மருத்துவம் சார்ந்து எழுதிய கேன்சர் பற்றிய தகவல் மிக மிக உபயோகமானதாக இருந்தது.


17. பிடித்த விளையாட்டு?

அ அ விளையாட்டு.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நல்ல படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்

21.பிடித்த பருவ காலம் எது?

யாருக்குன்னு நெறய பேர் கேட்டுட்டாங்க. ரெண்டு மூணு படிச்சிருக்கேன். நல்லா இருந்தா மாதிரிதான் இருந்தது.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

போன வாரம் வரை கம்பெனி செக்ரடரி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். இப்போது சிவகாமியின் சபதம் (ந்த் டைம்) படித்துக் கொண்டிருக்கிறேன்.

இது தவிர டாக்டர் மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தாரின் தமிழ் நாட்டு வரலாறு (சோழப் பெருவேந்தர் காலம்) ஆகியவை.

ஆங்கிலப் புத்தகங்கள் மிக அரிதாகத்தான் படிப்பது வழக்கம். நீண்ட காலத்திற்கு முன் ஜான் கிரிஷாம் எழுதிய தி ஃபர்ம் மற்றும் தி ரெயின் மேக்கர் மறக்க முடியாதவை.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதும் இல்லை.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தவை குழந்தைகளின் மழலை மற்றும் சிரிப்பு. பறவைகளின் சத்தம். இளையராஜாவின் இன்னிசைப் பாடல்கள். நிசப்தம்.

பிடிக்காதது எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வேலை விஷயமாக லூதியானா சென்ற போது வாகா பார்டர் சென்றிருக்கிறேன். இதுவரை இந்திய எல்லையைத் தாண்டியதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஆஹா, இதைப் பத்தி ஒரு தொடரே போடலாமே. ஆனாலும் அவையடக்கம் பற்றி 'ஏகசந்தாக்ரஹி' என்று கல்கி அவர்கள் ஒரு வார்த்தையாடல் செய்வார். அதைப் போன்று எந்த ஒன்றைப் பற்றியும் உடனடியாக புரிந்து கொள்வது எனது தனித் திறமை என்று கருதுகிறேன். பிறகு.... (இப்போதைக்கு இது போதும்)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எல்லா மலைவாசஸ்தலங்களும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இருந்தா இப்படி இருக்கணும்னு எல்லாரும் சொல்றா மாதிரி இருக்கணும்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதிவு போடுவதுதான்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரி எப்படிங்க. வருமான வரி, வணிக வரி, சுங்கவரி, சேவை வரி, சாலை வரி, கல்விவரி, உற்பத்தி வரி, நுழைவு வரின்னு வரிவரியா வருதுங்களே.

ஆக்சுவலா இதை சொல்லலாம்னு நினைக்கிறேன்.

"முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை வெல்லாது" ஆகவே, முயன்று வாழ்க்கையை 'வாழ்வோம்'.


அப்பாடா ஒரு வழியா எழுதி முடித்து விட்டேனுங்க. இனி உங்க பொன்னான கருத்துக்களை கண்டிப்பா சொல்லிட்டு போங்க.

Friday, February 20, 2009

பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..

தொற்று வியாதி மற்ற இடங்களில் பரவுகிறதோ இல்லையோ, வலையுலகில், பதிவுலகில் அதிவேகமாகப் பரவி விடுகிறது. பத்து கேள்விகள் போடாவிட்டால் நாம் நம் இமாலயக் கடமையிலிருந்து தவறிவிடுகிறோமோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. ஆகவே நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவை இந்தக் கேள்விக்கணைகள்.


கேள்வி கேட்பது என்று முடிவு செய்தவுடந்தான் இந்த கஷ்டம் தெரிந்தது யாரிடம் கேட்பது. எல்லோரும் எல்லாரிடமும் கேட்டுவிட்டார்களே. அடடடடடா.. தலையைப் பிய்த்துக் கொண்டு நான் கடவுள் ஆர்யா போசில் யோசித்ததில் உதயமானதுதான் கேள்வி கேட்பவரிடமே கேள்வி கேட்பது என்ற ஐடியா..


இப்போ ஸ்ட்ரெயிட்டா கேள்விக்கு போகலாம்


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?



நான் கேள்வியோட நிக்க மாட்டேன்.

பதில் எதிர்பார்ப்பேன்.

தயவு செய்து பதில் சொல்லுங்க.

பதில் சொல்லுங்க.

பதில் சொல்லுங்க.



(நம்ம சோலி முடிஞ்சுது. எங்கப்பா கோலி சோடா? (இது கேள்வில வராது. ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு போட்டது)

Sunday, November 16, 2008

ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?

தோழர் வினவு, ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற அவரது நட்சத்திரப் பதிவில், ஐ.டி.துறையில் தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவிற்குப் பின்னூட்டமிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த சிந்தனைகள் ஒரு முழுப் பதிவிற்குண்டான செய்திகளை அளித்ததால் இந்தப் பதிவு.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.

அவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும்?. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.

முதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?

தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.

இத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.

2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.

இது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.

4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.

ஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.

5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.

இது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.


கலெக்டிவ் பார்கெய்னிங்

மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.

ஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.

தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.


இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.


ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.

இந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Sunday, November 9, 2008

எதை எழுதுவது ?

என்னாடா இது, 25 பதிவுகள் எழுதுவதற்குள்ளாகவே எனக்கு இந்தக் கேள்வி தோன்றி விட்டதே.

நானும் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாய் இந்தப் பதிவுலகம் பக்கம் வந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

சிலருடைய பதிவுகளில் இது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
சிலர் என்ன எழுதுவது என்று பதிவு போட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் கூட பதிவு போட முடியுமா என்று நினைத்ததுண்டு.

ஆனால் என்னுடைய கேள்வி வேறு விதமானது.

எனக்கு வந்திருக்கும் ப்ராப்ளம் என்னவென்றால், என்னிடம் பதிவெழுதுவதற்கு நிறைய ஸ்கூப் களும், கான்செப்ட் களும் இருக்கின்றன.

தமிழ் சினிமாக்களைப் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

சமீப காலமாக பல்வேறு உலகத் திரைப் படங்களைப் பார்த்து வருகிறேன். அவற்றைப் பற்றி பதிவெழுதலாம்.

நம் துறை சார்ந்த பதிவுகளாக நடப்புப் பொருளாதார நிலையும் இந்தியப் பொருளாதாரமும் என்று நிறைய எழுதலாம்.

தினசரி நாம் சந்திக்கும் பல்வேறு நபர்களைப் பற்றி சிறுகதைகள் எழுதலாம்.

அரசியலரங்கின் நிகழ்வுகளைப் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் பதிவு செய்யலாம்.

ஏதாவது எதிர் பதிவு போடலாம்.

இது போல நிறைய யோசித்து வைத்திருக்கிறேன்.

இவற்றில் எதை முதலில் எழுதுவது என்பது தான் என்னுடைய குழப்பம்.

சே.. எதையாவது எழுதணும் என்று எண்ணிக்கொண்டே ஒரு சில நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய் விடுகிறது.

சக்கர வியூகம் மட்டும், ஒவ்வொரு புதன் கிழமையும் வெளி வர வேண்டுமென்பதால் அது மட்டும் முடிந்து விடுகிறது.

எழுத எழுதத்தான் எழுத்தும் எண்ணமும் மெருகேறும் என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளனாக வர தொடர்ந்து எழுத வேண்டும் என்பது பால பாடம்.

தினமும் ஒரு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியோடு இந்தப் பதிவை முடிவு செய்கிறேன்.

Sunday, October 19, 2008

மெய்ப்புல அறைகூவலர்-னா இன்னாங்க?

இது ஒரு ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ப்படுத்தப் பட்ட சொல். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா... யாராவது சொல்லுங்களேன்.

சென்னையின் ஒரு முக்கியமான இடத்தில் இந்த தமிழாக்கத்தைப் பார்த்தேன். முதலில் ஆங்கில சொல்லுக்கும் இதற்கும்
சம்பந்தமே இல்லாதது போல் தெரிந்தாலும், மண்டையைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து யோசித்ததில் திடீரென இதன் தமிழாக்கப் பின்னணி புரிந்தது.

அதாவது 'ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' என்பதைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள்.

ஃபிசிகல்லி - ' ஃபிசிகல்' - மெய். ஆகவே ஃபிசிகல்லி - மெய்ப்புல.

சேலஞ்ச்டு - 'சேலஞ்' - அறைகூவல் - ஆகவே சேலஞ்ச்டு - அறைகூவலர்.

எனவே,' ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' - மெய்ப்புல அறைகூவலர். நேரடித் தமிழாக்கம்.
அடங்கொக்கா மக்கா... இப்படியெல்லாமா தமிழ்ப் படுத்துவாங்க.

அதனாலதான் கேக்கறேன். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா.

யாராவது சொல்லுங்களேன்.

Sunday, October 5, 2008

எனது இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை


நேற்று ஒரு இடுகையை சேர்த்து விட்டு அடுத்த இரு இடுகைகளை சேர்க்கலாம் என்று தமிழ்மணக் கருவிப் பட்டையை அழுத்திய போது 'உங்கள் பதிவில் புதிய இடுகைகள் எதுவும் இல்லை' என்று வந்தது:(


இது போல் நிகழாமல் இருக்க என்ன செய்யலாம்?

Friday, September 26, 2008

நீங்க நல்லவரா கெட்டவரா ?


வலையுலகில் சர்ச்சை அலை ஓயாது போலிருக்கிறது. சிறிது காலம் கும்மியும், மொக்கையுமாகப் போய்க்கொண்டிருந்த பதிவுலகில் சர்ச்சையானது தனிமனித்தாக்குதலாகப் பரிணாமித்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? உளறலா?


எது உண்மை,

எது பொய்,

எது உளறல்.

உளறல் தான் உண்மையா?

உண்மை உளறலா?

இரண்டுமே பொய்யா?

பொய்யென்பதுதான் நிஜமா?

இது அடுத்த நிலையை எப்போது எப்படி எடுக்கும்.

என்னைப் போன்ற புதிய பதிவர்களாகிய அர்ஜுனர்களுக்கு, பீஷ்ம பிதாமகர்களும், கிருஷ்ண பரமாத்மாக்களும் கூறும் அறிவுரைகள் என்ன?.

கொஞ்சம் வந்து வெவரமா வெளக்கிட்டு போனீங்கன்னா, நாங்களும் இந்த ஜோதியில ஐக்கியமாகறதுக்கு வசதியா இருக்கும் ! ! !