Showing posts with label திரைக்கதை. Show all posts
Showing posts with label திரைக்கதை. Show all posts

Wednesday, August 18, 2010

திரைக்கதை எழுதுவது எப்படி - 7 : கனவு காணுங்கள்!

முன்னுரை:- சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நின்று விட்ட இந்தத் தொடரை மீண்டும் இப்போது தொடர்கிறேன். தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை பழைய பதிவுகளைப் படித்தல் நலம்.

===

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு செயல் அல்ல. அது பல செயல்களின் தொகுப்பு. A series of events. நான் ஒரு நவீன கட்டிடத்தில் பணி புரிகிறேன். 24லட்சம் சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள் கட்டிடம் அது. இந்தக் கட்டிடத்தை கட்டி முடிப்பது என்பது ஒருவர் மட்டுமே செய்யக் கூடியதல்ல. பல்வேறு துறை வல்லுனர்களின் பங்களிப்பும் தேவைப்படும்.

அடிப்படையாக, ஒரு rendering அளிப்போம். அதாவது கட்டிடம் முடியும் போது அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் படம். இனி Backwork செய்ய வேண்டும். பிறகு, கட்டிட வரைபடம். வரைபடத்தின் டீட்டெயில்கள். பல்வேறு கோணங்களில் அதே வரைபடத்தின் நகல்கள் ஆகியவை தயாரிக்கப்படும்.

Facade எனப்படும் வெளிப்புறம் எவ்வாறு இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சப்போர்ட் என்ன? கட்டிடத்தின் strength, column, pillar, beam, post tensioning ஆகிய சிவில் எஞ்சினீரிங் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் தேவைகளும், விவரமாக எழுதப்பட வேண்டும். பிறகு இவை எவ்வாறு எப்போது கிடைக்க வேண்டும் என்பதும் முடிவு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு, அதை எப்படி செய்வது? கடன் வாங்க வேண்டுமா? சொந்தப்பணத்திலா? ஆகிய பல்வேறு கேள்விகள், பதில்கள், விளக்கங்கள். ஏனைய, ஏனைய...

இதே போல்தான் திரைப்படம் எடுப்பதும். திரைக்கதை ஒரு கதையை சொல்லும் விதம். கதை என்பது ஒரு கட்டிடம் என்று எடுத்துக்கொண்டால் நமது கட்டிடத்தை தனித்துவமாகத் தெரிய வைக்கும் செயல் திரைக்கதை எனலாம். அப்படித் தனித்துவமாகத் தெரிய வைக்க அதிக செலவும் செய்யலாம். அல்லது ஒரு சில சிறிய மாற்றங்கள் மூலம் மிக அழகாகவும் தெரியச் செய்யலாம்.

ஆனால் ஒன்று, திரைக்கதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதன் வரையறைக்குட்பட்டே அனைவரும் திரைக்கதை எழுதுகின்றனர். ஒரு சிலர் புதிய முயற்சிகளைச் செய்தாலும், முன்னர் நான் கூறிய முறைகளில் திரைக்கதைகளை அமைக்கிறார்கள்.

ஃ ஃ ஃ ஃ ஃ

திரைக்கதை எழுத மிக முக்கியத் தேவை உங்கள் visualization திறமை. காட்சிப்படுத்துதல் அல்லது கனவு காணுதல். ஒரு இயக்குனர் தன் நடிகர் நடிகையிடம் தான் நினைப்பதை எதிர்ப்பார்க்கிறார். அதனால்தான் அவரது திருப்திக்கு ஏற்றார்ப்போல் காட்சி அமையும் வரை ரீடேக் வாங்குகிறார்.

தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி. இயக்குனர் வசன கர்த்தாவிடம், தங்கை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை காட்சிப் படுத்துமாறு கேட்க அந்த வசன கர்த்தா பழைய முறையில் தூக்கு, விஷம் என்று எழுதுவார். அதை மறைவிலிருந்து பார்க்கும் பாக்கியராஜ் அருமையாக 'டபுள் பிரமோஷன்' கான்சப்டை இதில் புகுத்துவார். அங்கே நிற்கிறது திரைக்கதையாசிரியரின் தனித்துவமும் விஷுவலைசேஷனும். ஆனால் அதே டயலாக் இன்றைய காலகட்டத்தில் எடுபடாதென்பது வேறு விஷயம்! அதனால்தான் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை!!

இன்று செண்டிமெண்ட் சீன் ஒன்று வைத்தாலும் படம் அவுட்டாகிவிடும் என்ற நிலை உள்ளது. இன்றைய தேதியில் கடைசியில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் கிழக்குச் சீமையிலே. அது கூட புதிய கதைக் களத்திற்காகத்தான் வெற்றி பெற்றது.

ஒரு காலத்தில் புராணப்படங்களும், பக்திப் படங்களும் வந்தன (எம்.கே.டி, பி.யூ.சி). அடுத்து ஏழ்மை ஒழிப்பு (எம்.ஜி.ஆர்), அடுத்து புரட்சிகர கருத்துக்கள், கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான படங்கள்(ருத்ரைய்யா, பாலச்சந்தர்), கிராமத்துக் கதைகள் (பாரதிராஜா, பாக்கியராஜ், ராமராஜன்). ஆனால் இவை யாவும் ஒரு காலத்திற்கு மேல் தொடர்ந்து நிலைக்க வில்லை.

இன்று வரும் கிராமத்துப் படங்களும் அன்று வந்த கிராமத்துப் படங்களும், வெவ்வேறான கிராமங்களை வெளிக்கொணர்கின்றன. ராவணன் வெற்றிபெறாததற்குக் காரணம் அந்த கிராமத்தை நம்மோடு தொடர்பு படுத்த முடியவில்லை.

ஆக, விஷுவலைசேஷனும் காலத்திற்கேற்ப இருக்கவேண்டுமே ஒழிய பழையதைப் போட்டால் யாரும் காசு கொடுத்து சாப்பிட மாட்டார்கள்!

அன்றும், இன்றும், என்றும் வற்றாத ஜீவ நதிகள் மூன்று. அவை, காதல், ஆக்ஷன், காமெடி...

ஆக உங்கள் கதையை

1. விஷுவலைஸ் செய்யுங்கள்.
2. நிகழ் காலத்திற்கு ஏற்ப கதைக்களனைத் தேர்ந்தெடுங்கள்.
3. மூன்று ஜீவ நதிகளையும் இணையுங்கள்!!

மீண்டும் சந்திப்போம்.

Sunday, August 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? - கந்தசாமி - காம்ப்ரமைஸ்? .. 6

ஒரு படம் எப்படியிருக்கும் என்ற சஸ்பென்ஸ் அதை முதலில் பார்க்கும் போதே உடைந்துவிடும். அல்லது அதைப்பற்றிய விமர்சனத்தைப்படிக்கும் போது கட்டுடைக்கப்பட்டு விடும். இதையும் மீறி அந்தத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுவது எது? அதுதான் திரைக்கதை..

ஜென்டில்மேன் சங்கரின் முதல் படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். மலைக்கள்ளன் புரட்சித்தலைவரின் அதிரடிப்படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். இவை தவிர நிறைய ராபின் ஹூட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சில வெற்றிகள். பல பிளாப்கள்.

வெற்றித் திரைக்கதை அமைப்பதற்கான சில அடிப்படை அமைப்புகளைப்பார்ப்போம். இது இன்க்விசிஷன் செஷன் என்று சொல்லலாம்.

1. நான் இந்தப்படத்தை ரசிகனாகப்பார்க்க நேர்ந்தால் என்ன செய்வேன்?
2. பணம் கொடுத்து சினிமாவிற்கு வரும் ரசிகனுக்கு நான் கொடுக்கும் 'வேல்யூ' என்ன?
3. இந்தப் படம் மூலம் நான் எந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறேன்.
4. மெசேஜ் இருந்தால் அதன் 'டோசேஜ்' எவ்வளவு? மற்ற மசாலாக்களில் அது நீர்த்துப் போகுமா?
5. தயாரிப்பாளர், நடிகர்கள் முதலிய 'ஸ்டேக் ஹோல்டர்'களை என் திரைக்கதை பாதிக்கிறதா?

இந்தக் கேள்விகளை ஒரு திரைக்கதை ஸ்கெட்ச் அமைக்கும் போது கேட்டுக்கொள்ள வேண்டும். 100% சரியென்று வந்தால் அந்தப்படம் வெற்றியடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் இல்லை.

இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்துத்தான் நம் அடுத்த பாடங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

அதற்கு முன்னர் இப்போது பரபரப்பாக அடிபடும் கந்தசாமியைப் பற்றி பார்ப்போம்.

செலவைப் பற்றி கவலையே படாத தயாரிப்பாளர் - கலைப்புலி தாணு
வித்தியாசமான படங்களைத் தந்த இயக்குனர் - சுசி கணேசன்
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே நடித்துவிட்ட நாயகி - ஸ்ரேயா
அடுத்த சூப்பர் ஸ்டாராக அடியெடுத்துக் கொண்டிருக்கும் - விக்ரம்
புதுமை ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம்
சமீபகாலமாக கலக்கிவரும் இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீப்ரசாத்
மற்றும் வடிவேலு, பிரபு, ஆஷீஷ் வித்யார்த்தி, எக்ஸ், ஒய், இசட்...
வெரைட்டி லொக்கேஷன்கள்



இப்படி ஒரு மெகா கூட்டணியிருந்தும் மக்களுக்கு திருப்தியில்லாமல் போனது ஏன்?


பிரம்மாண்டத்தில் காணாமல் போன லாஜிக். அதனாலேயே அன்னியப்பட்டுவிட்ட காட்சியமைப்புகள்.

சிவாஜிக்கு அளிக்கப்பட்டதை விட கூடுதலாகக் கொடுத்து விட்டதால் ஸ்ரேயா கூடுதலாக குறைக்க வேண்டிய நிலை. அதனாலேயே முகத்தைச் சுளிக்கும் மக்கள்.

சம்பிரதாயத்திற்கு தலை காட்டுவது போல் வடிவேலு.

வலுவில்லாத வில்லன் ஆசீஷ் வித்யார்த்தி.

இத்தனைக்கும் படம் ஒடுவது மூன்று மணி நேரத்திற்கும் மேல்.

=====


என்னைப் பொறுத்தவரை இயக்குனர் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

கலைஞனுக்கு சுதந்திரம் முக்கியம். அவனது கிரியேட்டிவிட்டியில் மற்றவர்கள் கைவைத்தால் அவ்வளவுதான். அன்ஃபார்ச்சுனேட்லி, இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் நிலை இதுதான்.



====

சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?

Monday, July 20, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . ௫

திரைக்கதை எழுதுவது என்பது வெறும் கதையை சொல்லும் விதத்தை வரையறுப்பது மட்டுமன்று. அதனோடு, காட்சியமைப்பு, அதன் பின்னணி, அதன் பிற தேவைகள் ஆகியவற்றையும் பட்டியலிடுவதாகும். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் எனினும், நாம் மெதுவாகவும், முழுமையாகவும் அந்தத் தூரத்தைக் கடப்போம்.

திரைக்கதை அமைப்பதன் அடிப்படை முறைகளைப் பற்றி பார்த்து வருகிறோம். இதுவரை, த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் முறையையும், கதா நாயகன் பயண முறையைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். புதிதாக வருபவர்கள் திரைக்கதை என்ற பிரிவில் கோர்க்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இனி, சீக்வென்சிங் தியரியைப் பற்றி பார்ப்போம்.

இந்த முறையை ஃப்ராங்க் டேனியல் என்ற அமெரிக்க திரைக்கதை வல்லுனர் கண்டுபிடித்தார். எட்டு பிரிவுகளாகக் கதையைப் பிரித்து அலசும் முறையை சீக்வென்சிங்க் என்று அறிமுகப் படுத்தினார்.

இதுவரை கூறப்பட்டு வந்த கதா நாயகன் சார்ந்த திரைக்கதை அமைப்பிலிருந்து மாறுபட்டு கதா நாயகனுடன், இரண்டாவது முக்கிய கேரக்டரைச் சுற்றி கதையை அமைக்கும் முறைதான் இந்த சீக்வென்சிங் தியரி. இரண்டாவது கேரக்டரை அவர் "பாண்டிங் கேரக்டர்" (பிணைக்கும் பாத்திரம்) என்று அழைக்கிறார். அது கதா நாயகியாகவும் இருக்கலாம், வில்லனாகவும் இருக்கலாம். அவர்கள் பார்வையிலிருந்தும் கதையைக் கொண்டு செல்லும் போது அதன் விறுவிறுப்பு கூடும் என்பது அவர் கருத்து.

இனி இதன் பிரிவுகளைப் பார்ப்போம். இது மேலே சொன்னது போல் எட்டு பிரிவுகளாக உள்ளது. அமெரிக்க திரைக்கதையாசிரியர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ரீல் (10 முதல் 15 நிமிடங்கள்) ஒதுக்குவார்கள். அவர்களது படம் அதிக பட்சம் 100 நிமிடங்களைத் தாண்டாது. எனவே இந்த ஃபார்முலா அவர்களுக்கு ஒத்து வரும். நமது படங்கள் குறைந்த பட்சம் 150 நிமிடங்களாவது ஓடவேண்டும். அப்போதுதான் படம் பார்த்த திருப்தி ரசிகனுக்கு இருக்கும்!

1. செட் அப் (களப்படுத்துதல்):- த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் முதல் பகுதியான செட்டிங் பகுதி என்று இதைக் கொள்ளலாம். களத்தைத் தெளிவாக விளக்குவது ஒரு படத்தை நன்கு புரிந்து கொண்டு அதில் ஈடுபட உதவுகிறது. கேரக்டர்களை அறிமுகப்படுத்துவது முதலானது இங்கு நிகழ்கிறது. உதாரணமாக, துடிக்கும் கரங்கள் படத்தில், ஜெய்சங்கரின் பிறந்த நாள் விழாவைக் காட்டுவார்கள். அவர் மேலே இருந்து பணத்தை அள்ளி வீச அதைப் பொறுக்க வரும் மக்கள் கூட்டத்தில் சிக்கி ஒரு சிறுவன் மரணமடைவதாக வரும். ஆனால் ஜெய்சங்கர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ரஜினியோ கொதித்துப் போய்விடுவார். ஆக இந்த ஒரு காட்சியில் வில்லனையும் ஹீரோவையும் களப்படுத்தி அதன் தாக்கத்தைப் படம் பார்ப்போர் மனதில் விதைத்து விடுகிறார், திரைக்கதை ஆசிரியர்.

2. பிணைக்கும் நிகழ்வு (பாண்டிங் இவண்ட்):- கதையின் போக்குக்கு அடிப்படையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் இருத்தல் வேண்டும். இந்த நிகழ்வு இல்லையெனில் கதை இல்லை. ராமன் வனவாசம் புறப்பட்டது அந்தக் கதையின் துவக்க நிகழ்வு. மஹாபாரதத்தில் அஸ்தினாபுரம் கட்டப்பட்டு அங்கு துரியோதனன் அவமானப்படுத்தப்பட்டது பிணைக்கும் நிகழ்வு. ஆக பிணைக்கும் நிகழ்வுகள், ஒரு கதையின் அடித்தளமாக இருக்கின்றன. அந்த நிகழ்வுகளை எந்த அளவுக்குத் தனிமைப்படுத்தி ஸ்பெஷலாகக் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு திரைக்கதை சிறப்பாக அமையும்.

3. எதிர் வினை:- கதா நாயகனின் இமேஜ் உயர வேண்டுமென்றால், வில்லனின் திறமையும் அதிகமாக இருக்க வேண்டும் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். ஆக எதிர்வினை (அட்டாக்கிங் ஃபோர்ஸ்) பற்றிய பகுதி மிகத் தரமாகச் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். பயங்கரமாக உருவகப் படுத்திக் காட்டுவதோ, கொலை, டார்ச்சர் போன்றவற்றைக் காட்டுவதோ அருவருப்பை ஏற்படுத்தலாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வில்லனை கேரக்டரைஸ் செய்யலாம். ஒவ்வொரு படத்தின் கதைக்கேற்ப இதன் அளவை நிர்ணயிக்க வேண்டும்

4. மோதல் நிகழ்வு (லாக்கிங் இவண்ட் ):- மோதல் என்பது ஹீரோவுக்கும் இரண்டாம் கேரக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலாகக் கொள்ள வேண்டும். இங்குதான் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அதுவரை அமைதியாகச் சென்று கொண்டிருந்த படம் இங்கே வேகமெடுக்கிறது. உதாரணமாக, வில்லனுடன் ஏற்படும் சவாலான நிகழ்வை சுட்டலாம்.

5. உச்ச நிகழ்வு (எஸ்கலேடிங் இவண்ட்):- பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை வரவைக்கக் கூடியதான நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்க வேண்டும். ஹீரோ கேரக்டரைசேஷன், அவன் எதையும் தாங்குபவனாகவும், தனக்குக் கெடுதல் செய்பவரையும் மன்னித்தருள்பவனாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும். அத்தகைய அமைதிப்பூங்காவே, எரிமலையாகக் குமுற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்ட வேண்டும். இப்படியாக வரும் போது திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது. உதாரணமாக, ராமாயணத்தில் சீதையை ராவணன் கவரவில்லை என்றால் அங்கே கதையில்லை. மஹாபாரதத்தில், சூதாடி வனவாசம் செய்த பின்பும் நிலம் திருப்பித்தராத நிகழ்வு இல்லையென்றால் மஹாபாரதப் போர் இல்லை.

6. போராட்டம்:- இது இறுதிப் போர். இதில் கதா நாயகன் முயற்சிகளும் அதைத் தடுக்கும் வில்லனின் செயல்களும் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். முதல் முயற்சியில் கதா நாயகன் தோற்பது போலவும், வில்லன் ஜெயிப்பது போலவும், அதன் பிறகு சுய பரிசோதனை செய்யும் கதா நாயகன் தன்னிடத்தில் இருக்கும் குறைக்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்து மீண்டும் மோதுவது போலவும், இறுதியில் வெற்றி பெறுவது போலவும் அமைப்பது சாலச் சிறந்தது.

7. வெற்றி:- போராட்டத்தில் வெற்றி முக்கியமானது. எல்லோருக்கும் ஹீரோதான் ஜெயிப்பான் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் படம் பார்க்க வருகிறார்கள்? அவன் மற்ற படங்களை விட இங்கே எப்படி வித்தியாசமாக வெற்றி பெறுகிறான் என்பதைப் பார்க்க வருகிறார்கள். அந்த வெற்றி பெறும் நிகழ்வை வித்தியாசமாகக் காட்டுவது அந்தப் படத்தின் வெற்றியையே நிர்ணயிக்கும் என்றால் மிகையல்ல.

8. பரிசு:- வெற்றி பெறுவதுடன் படம் முடிந்துவிட்டால் நன்றாக இருக்காது. அதன் பிறகு அவனுக்குக் கிடைக்கும் பரிசும் அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இருத்தல் வேண்டும். அந்த வெற்றிக்கு ஈடான பரிசே ரசிகனின் நெஞ்சில் நிலைத்திருக்கும். வில்லனைத் தோற்கடித்த பிறகு அவனது மகளை மணந்து கொள்ளுதல். அவனிடமிருந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அவர்களது அன்புக்குப் பாத்திரமாதல், புதிய பதவி, அங்கீகாரம் ஆகியவை பரிசுகளாக இருக்கலாம்.

இப்படியாக கதையைத் துருவித் துருவி அலசி ஆராய்ந்து அக்கு வேறாகப் பிரித்து அமைக்கும் போது அது வெற்றிப்படத்துக்கான திரைக்கதை ஆகிறது.

இந்தப் பகுதி சற்றே தொழில் நுட்பம் சார்ந்தது. நாம் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவது. ஆகவே, இதை நன்றாக நெஞ்சில் நிறுத்துங்கள். உங்கள் சந்தேகங்கள், கருத்துகள் ஆகியவற்றை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, July 11, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .4

நண்பர்களே! சென்ற பதிவுகளில் திரைக்கதையைப் பற்றி ஓரளவு அறிமுகப்படுத்திக் கொண்டோம். இனி தொடர்ந்து பார்ப்போம்.

சென்ற பதிவில் காமெடி, டிராஜெடி என்று இரு பிரிவுகளைப்பற்றி பார்த்தோம். காமெடி என்றால் சினிமா வழக்கில் நாம் நினைக்கும் காமெடி அல்ல. பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட மேம்பட்ட நிலையில் கதா நாயகன் இருந்தால் அது காமெடி படம்!

படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட கீழான நிலையில் அதாவது அவல நிலையில் படத்தின் முடிவில் இருந்தால் அது டிராஜெடி!

=====

சரி, சென்ற முறை த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் திரைக்கதை அமைப்பைப் பற்றி பார்த்தோம். இப்போது மற்ற முறைகளையும் பார்ப்போம்.

திரைக்கதை ஒரு ஹீரோவை மையமாக வைத்துத்தான் எழுதப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிவோமல்லவா? அந்த அடிப்படையில் கீழ்கண்ட திரைக்கதை அமைக்கும் முறைகள் உள்ளன.

1. கதா நாயகனின் பயணம்
2. சீக்வென்சிங்
3. ஸிட் ஃபீல்ட் மாடல்

இவையனைத்திற்கும் த்ரீ ஸ்ட்ரக்சர் தான் அடிப்படை. இனி இந்த திரைக்கதை அமைப்பு முறைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

=====

1. கதா நாயகன் பயணம்.

நமது கதைகள் பெரும்பாலும் கதா நாயகன் சார்ந்துதான் அமையப்பெற்றிருக்கும். அவனது சாதனைகளும் சோதனைகளும்தான் கதையை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் இந்தத் திரைக்கதை அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த மாதிரி திரைக்கதையை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அ. கதா நாயகனை எதிர் கொள்ளும் சவால்: இந்த சவால் அவனாகவே ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கலாம். அல்லது அவன் மீது திணிக்கப் படலாம். எது எப்படி இருந்தாலும், அமைதியான வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வை மையப்படுத்தும் பகுதி இது.


ஆ. அந்த சவாலை சமாளிக்கும் போது ஏதிர்படும் சங்கடங்கள்: சவாலை வென்றாக வேண்டிய சூழ்நிலையில் கதாநாயகன் என்னென்ன சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இந்தப் பகுதியில் தெரிவிக்கப் படும். சங்கடங்களின் தாக்கம் அதிகமாகும் போது ஹீரோ அதிக அளவில் மதிக்கப் பெறுகிறான்.


இ. இந்தப் பாதையில் கதா நாயகனுக்குக் கிடைக்கும் புதிய சக்தி அல்லது யுக்தி: சங்கடங்களை எதிர்கொள்ளத் தேவையான சக்தி சமயத்தில் கிடைக்கும் போது ஹீரோவின் பயணம் சற்று சுலபமாகிறது. இந்தப் பகுதி மிகஆழமாக அலசப்படும் போது ஹீரோவின் இமேஜ் அதிகரிக்கிறது. இந்தப் பகுதிதான் படம் பார்க்கும் மக்கள் தங்களை அந்தப் படத்துடன் ஒப்பிட்டுக்கொள்ள (ரிலேடிங் ஒன்செல்ஃப் டு தி மூவி) உதவுகிறது. எந்த அளவு ஒரு ரசிகன் தன்னைப் படத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறானோ அந்த அளவு அவன் அந்தக் கதையுடன் ஒன்றி விடுகிறான். ரசிகர்கள் கதையுடன் ஒன்றும் போது திரைப்படம் இயல்பாகவே வெற்றியடைகிறது!!


ஈ. புதிய சக்தி கொண்டு சவாலை முறியடித்தல் அல்லது வெற்றி பெறுதல்: இது க்ளைமாக்ஸ் எனப்படுகிறது. தனது அடிப்படைத் திறமை, சவால் காரணமாக தான் அனுபவித்த துன்பங்கள், புதிய சக்தி கொடுத்த நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், அவனது திறமை வெளிப்பட்டு சவாலை முறியடித்து வெற்றி பெறும் பகுதி இது. இதன் மூலம் கதா நாயகனின் பயணம் நிறைவு பெறுகிறது. அத்துடன் கதையும் முடிவடைகிறது.

இதுதான் கதா நாயகன் பயணம் என்ற முறையில் அமைக்கப் படும் திரைக்கதைகளின் அமைப்பு. இந்த வகையிலும் படம் பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? ஆனால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள் தான் நம் நெஞ்சில் நினைவாடும்!!!

===

இது த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது??

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில், சூழ் நிலையைப் புரியவைப்பது ஒரு பெரும் பகுதி.

ஆனால், அப்படித் தேவையில்லை. கதையுடனான போக்கிலேயே சூழலைப் புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் கதா நாயகனின் பயணம் என்ற முறை ஏற்பட்டது. சூழலை அதன் போக்கிலேயே காட்டி, மெல்ல மெல்ல நம்மை திரைக்கதைக்குள் இழுக்கும் முயற்சி இது.

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் ஹீரோ சவாலை நேரடியாக வெல்வதாகக் காட்டும் முயற்சி நடைபெறும். இங்கு அப்படியல்ல. ஹீரோ சாமானியமானவன். ஆனால் அவன் எதிர் கொள்ளும் சவாலைச் சமாளிக்க அவனுக்கு ஒரு புதிய சக்தி தேவைப் படுகிறது. அந்த புதிய சக்தி எப்படி அவனுக்குக் கிடைக்கிறது. அதை அவன் எப்படி பயன் படுத்துகிறான் என்பது போன்ற நிக்ழச்சிகள் விரிவாக அலசப்படும் போது அந்தத் திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது.

இதுதான் த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சருக்கும் ஹீரோ ஜர்னிக்கும் உள்ள வேறு பாடு. இந்த மாதிரி திரைக்கதைகளில் லாஜிக் அதிகமாக இருக்க வேண்டும். இது சூப்பர் ஸ்டார்களுக்கும் சூப்பர் ஸ்டாராக நினைப்பவர்களுக்கும் ஒத்துவராத மாடல். அதனால்தான் இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழில் வருவதில்லை.

===

இப்போது நாம் முதலில் பார்த்த கதையை இந்த முறையில் திரைக்கதையாக அமைத்துப்பார்த்தால்,

1. சவால் பகுதி: நேரடியாகவே கதா நாயகன் ஏமாற்றப்படும் காட்சிகளைக் காட்டிவிடலாம். அதன் ஊடாக களனை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் போது முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழும்.

2. சங்கடங்கள் பகுதி: அந்த சவால் காரணமாக அவன் நகரம் நோக்கி வந்த காரியம் நிறைவேறாமல் போகிறது. அல்லது அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது.

3. புதிய சக்தி: அந்த எதிரிகளை எதிர் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது. (அவர்கள் தொழிலில் போட்டியாக வருவது போன்றவை). மேலே சொன்னது போல் இங்கே லாஜிக் இடித்தால் அது த்ரீ ஆக்ட் ஆகிவிடும். இது எந்த அளவுக்கு மக்களைக் கவர்கிறதோ அந்த அளவுக்குத் திரைக்கததை வெற்றி பெறும்.

4. சவாலை முறியடித்தல் வெற்றி பெறுதல்: இது இறுதியான தீர்வாக அமைந்து, கதா நாயகனின் வாழ்க்கைப்பயணத்தில் அமைந்த தடைக்கற்கள் தகர்த்தெறியப்பட்டு அவன் வெற்றியுடன் மேலும் முன்னேறுகிறான் என்று நிறைவு செய்யும் பகுதி. இதை க்ரிஸ்ப் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். வசனங்களால் இழுக்காமல், காட்சியமைப்புகளால் மெசேஜ் சொல்லும் போது ரீச் அதிகமாக இருக்கும்.

இப்படியாக ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் ஒரு ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வருவதோடு மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்கவும் செய்வான்.

===

சரி நண்பர்களே, அடுத்த பகுதியில் மற்ற திரைக்கதை முறைகளையும் அலசுவோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவதன் மூலம் இந்தப் பதிவுத் தொடரை அனைவரும் படித்துப் பயனடையுமாறு செய்யலாம்.

நன்றி...

(தொடரும்...)

Saturday, July 4, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .3

சென்ற பதிவில், த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் பற்றி தெரிந்து கொண்டோம். முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைக்குமாறும் கேட்டிருந்தேன். இப்போது த்ரீ ஆக்ட் திரைக்கதை (அவுட்லைன்) எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.


கதை:

ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


இதற்கான த்ரீ - ஆக்ட் ஸ்ட்ரக்சர்.

1. செட்டிங் (சூழல்)

கிராமத்து இளைஞன், கிராமம், நகரம், நகர மாந்தர் இயல்பு இவை அடிப்படை சூழல்கள்

2. பிரச்சனை, போராட்டம் (சிக்கல்)

ஏமாற்றப்படுதல், தெளிவு பெறுதல், முன்னேறுதல்

3. தீர்வு

ஏமாற்றியவர்களைக் காப்பாற்றுவது, திருந்தச் செய்வது, வெற்றி பெறுவது.

இப்படி பார்ட் பார்ட் ஆக எடுத்துக் கொள்ளலாம். இதையே திரைக்கதை அவுட்லைன் ஆக சொல்லும் போது இப்படிச் சொல்லலாம்.

1. கிராமத்து சூழலையும், கள்ளம் கபடமற்ற மக்களையும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, நம்பி வாழ்வதையும் இத்தகைய சூழலில் வளரும் இளைஞன் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாவதையும் சொல்ல (காட்ட) வேண்டும்.

2. அத்தகைய இளைஞன் தவிர்க்க முடியாத சூழலில் நகரத்திற்கு வருவதைக் காட்ட வேண்டும்.

3. நகரத்து சூழலையும், இளைஞனை ஏமாற்றப் போகும் மனிதர்களின் இயற்கை அராஜக நிகழ்வுகளையும், நகரில் இதெல்லாம் சாதாரணம் என்பதான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காட்சிகளையும் காட்ட வேண்டும்.

இது செட்டிங் (சூழல்) பார்ட். ஸ்டார்டர் மாதிரி. இப்படிப்பட்ட சூழலில் நகருக்கு வரும் இளைஞன் என்ன பாடு படப்போகிறானோ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் இந்தப் பகுதியின் அப்ஜெக்டிவ்.



4. நகரத்தில் மனிதர்களை நம்புவதையும், அதனால் ஏமாற்றப்பட்டு இருக்கும் உடைமைகளை இழப்பதையும் காட்ட வேண்டும். (இங்கே, கிராமத்து நிகழ்வையும், அதே போன்று நகரத்தில் மாறுபட்ட நிகழ்வையும் காட்டலாம்)

5. மேலும் திரைக்கதைக்கு வலு சேர்க்க, இரண்டாவது முறையும் ஏமாற்றப்படுவதாகக் காட்டலாம். ஆனால் ஓவர்டோஸ் ஆகிவிடாமல் இருக்க வேண்டும்.

6. இதிலிருந்து பாடம் கற்பதாகவும், உழைக்கும் வழி கிடைப்பதாகவும் காட்டவேண்டும்.

7. அந்த உழைப்பிலிருந்து முன்னேறும் நிகழ்வுகள் படிப்படியாகக் காட்டப்பட வேண்டும். (இங்கேதான் லாஜிக் முக்கியம். பெரும்பாலான படங்களில் ஒரு பாட்டில் நாயகன் உயரத்திற்குச் சென்றுவிடுவான்.)

8. அப்படி வளரும் இளைஞன் ஏமாற்றியவர்களுக்கு சிறு சிறு இடைஞ்சல்கள் தருவதாகக் காட்டுவது இளைஞன் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வதாகக் காட்டும்.


இது சிக்கல் பகுதி. மெயின் கோர்ஸ். விஸ்தாரமாகவும், காரசாரமாகவும் இருக்கவேண்டும். பாசிடிவ் திங்கிங் இருந்தால் எப்படி ஒருவன் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை விதைக்கக்கூடிய அளவுக்கு இருத்தல் அவசியம்.


9. இறுதியில் ஏமாற்றியவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்க, இளைஞன் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற வகையில் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும்.

10. ஏமாற்றியவர்கள் செய்வதறியாது நிற்க, இளைஞன் தானாகவே சென்று உதவி செய்து அவர்களை மீட்பது போலவும், அதற்கு அவர்கள் நன்றிக்கடன் பட்டு திருந்துவது போலவும் காட்சியமைப்பு வேண்டும்.

11. இறுதியில் உண்மையே வெல்லும் என்ற மெசேஜுடன் திரைப்படம் முடியவேண்டும்.

இது தீர்வுப்பகுதி. டெஸர்ட். சுவீட்டாகவும், ஹாட்டாகவும், கூலாகவும் இருக்க வேண்டும். குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் காம்பினேஷன் போல.

என்ன படித்து விட்டீர்களா??? படிக்கும் போதே பல்வேறு திரைப்படங்களின் காட்சிகள் கண்முன் நிழலாடியிருக்குமே!!!

இந்த அடிப்படையில்தானே பெரும்பாலான படங்கள் வருகின்றன? ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் வெற்றிபெறச் செய்வதில்தான் திரைக்கதை அமைப்பாளரின் கைவண்ணம் இருக்கிறது.


இது அடிப்படை திரைக்கதை அமைப்பு முறை. இதே முறையில் எந்தக் கதையையும் திரைக்கதையாக மாற்றி விடலாம்.

இவ்வளவுதானா?

இல்லை. இனிமேல்தான் எல்லாம்....

இப்படி அமைக்கப் பட்ட திரைக்கதை ப்ளெயின் ரைஸ் போன்றது. இதனுடன், காதல், டூயட், காமெடி, சென்டிமென்ட் போன்ற மசாலாக்களை சேர்த்து, நமக்கு பிரியாணியாக வழங்குகிறார்கள். ஒரே பிரியாணியை மீண்டும் மீண்டும் கொடுத்தால் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்பார்கள்.

உண்மையில் எல்லோரும் அரைத்த மாவைத்தான் அரைக்கிறார்கள். ஆனால் அது வெளியே தெரியாத அளவிற்கு அரைப்பதில்தான் இருக்கிறது திறமை.

====

இதுவரை அடிப்படை திரைக்கதை அமைக்கும் முறையைத் தெரிந்து கொண்டோம். மேலும் சில வகைகள், காமெடி, டிராஜெடி போன்றவற்றைத் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து வாருங்கள்...

எக்சர்சைஸ்: மேலே சொன்ன திரைக்கதையை மையமாகக் கொண்டு நீங்கள் பார்த்த வெற்றிப் படங்கள் என்னென்ன? தோல்விப்படங்கள் ஏதேனும் உண்டா?? பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

(தொடரும்)

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப்ப்போடுவது, இந்தப்பதிவைப் பலரும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

Tuesday, June 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . 2

சென்ற பகுதியில் தமிழ் சினிமாவின் ஒரு அறிமுகத்தையும், திரைக்கதையின் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். ஒரு கதையைக் கொடுத்து அதற்கான திரைக்கதையை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். நண்பர் சுரேஷ், உடனடியாக ஒரு திரைக்கதையை எழுதி அசத்திவிட்டார். அதை இங்கே பார்க்கலாம்.

இப்போது திரைக்கதையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.


திரைக்கதை என்றால் என்ன?

ஒரு கதையை திரைப்படமாக எடுப்பதற்காக மாற்றப்படுவது திரைக்கதை எனப்படுகிறது. கதை என்பது நாம் படித்துத் தெரிந்து கொள்வது. அதில் படிப்பவரின் கற்பனைக்குத்தான் முதலிடம். ஆனால் திரைப்படம் அப்படியல்ல. பார்ப்பவரை நம் பார்வைக்குத் திருப்ப வேண்டும். அப்படி திருப்பும் முயற்சிதான் திரைக்கதை. இது சரியாக இருக்கும் போது படம் வெற்றியடைகிறது. இல்லாவிட்டால் தோல்வி.


கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம் ?

கதையில் வர்ணனைகளும் காட்சியமைப்பும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். திரைக்கதையில் அதை விஷுவலாகக் காட்ட முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு கிராமத்தைப் பற்றி விளக்க கதையில் இரண்டு பக்கங்களில் விவரிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு காட்சியில் அத்தனையையும் பார்ப்பவருக்கு விளக்கிவிடலாம். கூட ஒரு பின்னணி இசை சேரும்போது அதன் எஃபெக்ட் உச்சமாகும்.

ஆனால் கதையில் கிராமத்து வர்ணனையை நான் படிக்கும் போது நான் பார்த்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வேன். நீங்கள் படிக்கும் போது உங்களுக்குத் தெரிந்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வீர்கள்.

ஆனால் திரையில் தோன்றுவது ஒரு கிராமம்!. நம் அனைவரையும் அதையே உருவகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தும். அதை நாம் விரும்புவதும் விரும்பாததும் படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். திரைக்கதை என்பது ஒரு நேர்த்தியான மாஸ்டர் ப்ளான் போல இருக்க வேண்டும். டெக்னிகலான மேட்டர்களைப் பிறகு பார்ப்போம்.

திரைக்கதையால் என்ன பயன்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், ஒருவன் அல்லது ஒருத்தி எதற்காகத் திரைப்படம் பார்க்க வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்? நான் எதற்காக திரைப்படம் பார்க்கச் செல்கிறேன்?

1. எனக்கு ஒரு என்டெர்டெய்ன்மென்ட் தேவைப்படுகிறது.
2. எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது
3. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு கிடைக்க வேண்டும். (வேல்யூ ஃபார் மனி)
4. என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டது என்று நான் எண்ணக்கூடாது.

இந்த எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எந்தத் திரைக்கதையும் வெற்றித் திரைக்கதைதான்!!


சரி இனி முக்கிய மேட்டருக்குச் செல்வோம்...

நீங்கள் நிறைய திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றின் ஒற்றுமையை சற்று அலசுவோமா?

1. முதலில் இனிமையாகத் துவங்கும். கதாபாத்திரங்கள் (நாயகன், நாயகி, வில்லன் போன்றோர்), கதைக்களம் ஆகியவற்றின் அறிமுகம்

2. பிரச்சனை உருவாதல். போராட்டம்.

3. முடிவு.

99.99% படங்களின் அமைப்பு இவ்வாறு இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இதைத்தான் த்ரீ-ஆக்ட்-ஸ்ட்ரக்சர் என்று சொல்வார்கள். புராண இதிகாசங்கள் முதல் புதுப்படங்கள் வரை இந்த ஸ்ட்ரக்சர் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இப்படிச் சொல்வது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமைத்துப் பரிமாறுவதுதான் சமையல் கலை என்று சொல்வதற்கு ஒப்பாகும். அல்லது, புத்தகத்தில் கணக்கெழுதி, வருடத்திற்கு ஒருமுறை ஆடிட் செய்து டாக்ஸ் கட்டுவதுதான் கணக்குப் பதிவியல் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மையல்ல....


மேற்கொண்டு தொடர்வோம்...

எக்சர்சைஸ் 2: இந்த த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் அடிப்படையில் முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைத்துத்தாருங்கள்.

(தொடரும்)..

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டுப்போடுவது, இந்தப்பதிவு பலரையும் சென்றடைய உதவி செய்வதாக இருக்கும்.

Sunday, June 28, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . . 1

ஸ்கிரீன் ப்ளே என்பதன் நேரடித்தமிழாக்கம்தான் திரைக்கதை என்றாலும், காட்சியாக்கம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். ஒரு திரைப்படம் வெற்றிபெற இன்னின்ன காரணிகள்தான் வேண்டும் என்ற ஃபார்முலா, அதாவது சக்சஸ் ஃபார்முலா எதுவும் இல்லை.

அப்படி இருந்திருந்தால் தோல்விப்படங்களே இருக்காது. ஆனால் எது இருக்கிறதோ இல்லையோ திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் அந்தப் படம் நிச்சயம் ஓடாது. பாடல்கள் தனியே ஹிட்டாகலாம், காமெடி ஹிட்டாகலாம் ஆனால் வலுவான திரைக்கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற இயக்குனர்கள் திரைக்கதையில் மிக்க கவனம் கொண்டிருந்தனர். ஆனாலும், பிற்காலத்தில் அவர்கள் படம் வெற்றி பெறவில்லை. இதற்கான காரணத்தைப் பின்னர் ஆராய்வோம்.

பதிவின் உள்ளே செல்லும் முன் ஒன்றை தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். திரைப்படம் பார்ப்பதைத் தவிர திரைத்துறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனினும் ஒரு ரசிகனின் பார்வையில் அல்லது ஒரு வருங்கால இயக்குனரின் (?!) பார்வையில் திரைக்கதை எழுதுவதைப் பற்றிய கருத்துதான் இது.


திரைக்கதைக்கு அடித்தளம்

திரைக்கதைக்கு அடித்தளம் கதைதான். 99.99% கதைகள் நல்லவர்கள் முதலில் கஷ்டப்படுவதும் தீயவர்கள் அதிக சக்தியுடன் இருப்பதும், இறுதியில் நன்மையே வெல்வதும் என்ற பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆக அடிப்படையில் நன்மையே வெல்லும் என்ற 'மெசேஜ்' அனைத்துக் கதைகளிலும் இருக்கிறது. ஆனால் சில வெற்றி பெறுகின்றன. மற்றவை தோல்வியடைகின்றன.

ஆக நல்ல கதை, சுமாரான கதை என்றெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் நல்ல கதை. தோல்வியடைந்தால் கதை நன்றாக இருந்தாலும் 'ப்ச்'தான். எதுவாயினும் ஒரு கதை வேண்டும்.

மற்ற காரணிகள்.


1. மக்கள் ரசனை


சினிமா துவங்கப்பட்டது முதல் 1950கள் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள். 2000க்குப் பிறகு புராணப் படங்கள் அரிதாகி விட்டது. புராணப் படங்களே இல்லை எனலாம்.

60களில் பிழியப்பிழிய அழ வைக்கும் சென்டிமென்ட் படங்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது வரும் படங்களில் உள்ள ஒன்றிரண்டு சென்டிமென்ட் சீன்களில் கூட விசில் பறப்பதைப் பார்த்திருக்கலாம்.

70களில் புரட்சிகரமான கருத்துக்களுடன் படங்கள் வெளிவந்தன. ருத்ரய்யா, பாலச்சந்தர் போன்றோர் சமூகக்கட்டமைப்பை உடைத்தெறியும் முயற்சியில் பெரிதும் வெற்றி பெற்றனர். இப்போது அத்தகைய படங்கள் (உதாரணம்: தனம்) வரவேற்கப் படுவதில்லை.

80களில் காதலை மையமாக வைத்துப் படங்கள் பெருவெற்றி பெற்றன. இன்னிசை படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இப்போதும் காதல் படங்கள் வந்தாலும் அந்த அளவுக்கு வெற்றி பெறுவது குறைவுதான்.

90களில் கிராமத்தை மையமாகக் கொண்ட படங்கள் பெரிதும் வெற்றி பெற்றன. இப்போது ராஜ்கிரண், , ராமராஜன் போன்றோரின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

புதிய நூற்றாண்டில் இப்படி எந்த ஒரு லாஜிக்கும் இல்லை.

ஏன்?? மக்கள் ரசனை மாறுகிறதா?

இல்லை என்பதே என் பதில். இதற்கான காரணம் பின்னர்...


2. தொழில் நுட்பம்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், கலர், சினிமாஸ்கோப், 70 எம்.எம்., டி.டி.எஸ்., டிஜிடல் சினிமா என்று தொழில் நுட்பத்தில் பரிணாமித்திருக்கிறது சினிமா. எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், கிராஃபிக்ஸ் என்று மற்ற துறைகளிலும் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது.

இந்தத் தொழில் நுட்பங்கள் ஒரு பண்டத்தை எவ்வளவு நன்றாக ப்ரெசன்ட் செய்ய வேண்டிய அளவுக்குப் பயன் படுத்த வேண்டும். இவை நன்றாக இருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டும்.


3. நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு ரஜினி கமல் படங்கள் அபவ் ஆவரேஜ் வெற்றியைத் தந்தன. அதே போன்று விஜய் அஜித் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இவர்கள் படம் கூட வெற்றி பெறாமல் போய்விடுகிறது. புது முகங்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று விடுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த கதா நாயகிகள் அருகிக் கொண்டே வருகின்றனர். மொத்தமும் இறக்குமதிதான். மற்ற கலைஞர்களின் பங்களிப்பு ஓரளவுக்கு இருக்கும்.

ஆக கலைஞர்கள் தேர்வு முக்கியமானதல்ல.


4. இசை

இசையைப் பொறுத்தவரை மிக அடிப்படையான வாதம் இதுதான். வெற்றி பெற்ற படங்களின் இசை தானாக வெற்றி பெற்று விடும். இசை மிகப் பிரமாதமாக இருந்தாலும் படம் தோல்விடையலாம். ஆகவே இசை என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனாலும் படம் வெற்றி பெற கூடுதல் உந்து சக்தி அளிக்கும்.

மற்றவற்றை அவ்வப்போது பார்ப்போம்.


இப்போது ரசனையைப் பற்றிய எனது கருத்து:

மக்கள் ரசனை மாறிவிட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவியலாது. Human beings are emotionally charged animals. காலங்கள் மாறினாலும், நமது அடிப்படை என்றுமே மாறாது. பிறகு ஏன் புராண, சென்டிமென்ட், கிராமப் படங்கள் இப்போது வெற்றி பெறுவதில்லை? ஏனென்றால் நம்மிடையே இவை ஏற்கனவே இருக்கின்றன.

சென்டிமென்டிற்கு ஒரு பாசமலர் ஏற்கனவே இருக்கும் போது மீண்டும் எதற்கு ஒரு சென்டிமென்ட் படத்தைப் பார்க்க வேண்டும்? சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், போன்ற படங்கள் இருக்க ஏன் மீண்டும் நான் ஒரு புது புராண படத்தைப் பார்க்க வேண்டும்? கரகாட்டக்காரனும், சேரன் பாண்டியனும் இருக்க நான் ஏன் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையைப் பார்க்க வேண்டும்?

இவை அனைத்தும் நம்மிடையே ஆர்கைவ் ஆக இருக்கின்றன. ஆகவே இப்போது தேவைப் படுவது வேறு. இதே காரணம் தான் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் பிறகு என்ன ஆனார்கள்?. பாக்யராஜ், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரின் நிலைமை என்ன? இவர்களின் படங்கள் பிற்காலத்தில் ஏன் தோல்வியடைந்தன? ஆனால் இவர்களது பழைய படங்களை மக்கள் இன்னும் ரசித்துப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

எம்.எஸ்.விஸ்வனாதனுக்கு என்னவாயிற்று? இளையராஜாவால் இப்போது மக்களை மயக்கமுடியவில்லையே? ஆனால் இவர்களது பழையபாடல்களை விரும்பாதார் யார்?

இப்போது புரிகிறதா?. . . தொடர்வோமா??

எக்சர்சைஸ்:
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


பின்குறிப்பு:- தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டைப் போடுங்கள். அது இந்தப் பதிவுத்தொடரைப் பலரிடமும் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.