Saturday, November 7, 2009

பதிவர்களைப் பாதிக்கும் பயங்கர நோய்கள் . . . 2

அன்புள்ள பதிவுலகக் குடிமக(ன்/ள்)களே!, பதிவுலகில் நுழைய எழுதும் தகுதியோ எண்ணும் தகுதியோ இருந்தால் மட்டும் போதாது. இங்கே இருக்கும் பயங்கர நோய்களை எதிர் கொள்ளும் திறமையும் வேண்டும்.

சென்ற பதிவில், பின்னூட்டஃபோபியா, ஃபாலோமேனியா, நட்சத்திரைடீஸ், ஹிட்டீரியா, முதலிய நோய்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில், சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ போன்றவற்றைப் பற்றி பார்ப்போம்.




சூடெங்கு:-


இந்த நோய் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது!. கடந்த ஆறு மாதங்களுக்குள் பதிவுலகிற்குள் நுழைந்தவர்களுக்கு இந்த நோயைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதாவது, தமிழ்மணம் திரட்டியின் இடது ஓரத்தைக் கவனித்திருப்பீரேயானால் அது வாசகர் பரிந்துரை என்று காட்டும். அங்கே மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருக்கும். சிலகாலத்திற்கு முன்பு வரை அங்கே "சூடான இடுகைகள்" என்ற பகுதி இருந்ததை பழைய பதிவர்களால் மறக்கவே முடியாது. அந்த சூடான இடுகைப் பகுதியில் தன் இடுகையை எப்பாடு பட்டாவது இடம் பெறச் செய்துவிட வேண்டுமென்று நினைக்க வைக்கும் நோயே "சூடெங்கு". இது முழு நேர / முக்கிய பதிவர்களை இயல்பாகவே தாக்கக்கூடியது. மற்றவர்கள் விவகாரமான தலைப்பை வைத்து தனது பதிவுகளை சூடேற்றிக்கொள்வார்கள். பலர், சூட்டுக்காக சூடு போட்டுக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியதை பழம்பெரும் பதிவர்கள் இதைப் படிக்கும் போது நினைத்துக் கொள்வார்கள்!!!

இப்போது இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதால், புதிய பதிவர்களுக்கு இதன் வீரியம் தெரிய வாய்ப்பில்லை. இப்போது இருக்கும் பரிந்துரையும் முதலில் காமெடியாக ஆரம்பித்ததுதான். ஒரு சிலருக்கு நூற்றுக்கும் மேல் பரிந்துரை எண் வரும்!!. இப்போது இந்த முறை சரி செய்யப்பட்டு விட்டதாக அறிகிறேன்.



சர்ச்சையோபியா:-


நீங்கள் அனைவருமே திருவிளையாடல் (சிவாஜி & கோ) பார்த்திருப்பீர்கள். குறைந்த பட்சம் தருமி எபிசோட்-ஆவது கட்டாயம் பார்த்தோ / கேட்டோ / அறிந்தோ இருப்பீர்கள். அதில் நக்கீரன் என்று ஒரு தாத்தாவுக்கும், சிவாஜி தாத்தாவுக்கும் ஒரு போட்டி வரும். அப்போது முத்துராமன் தாத்தா, "புலவர்களே, சண்டை போடாதீங்க" என்று சமாதானம் பேச வருவார். உடனே சிவாஜி தாத்தா "நாங்கல்லாம் ஒரே ஜாதி, இன்னிக்கி அடிச்சிக்குவோம், நாளைக்கு சேந்துக்குவோம். எங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.. நீ எட்ட நின்னுக்கோ. இல்லன்னா டரியலாயிடும்" னு சொல்லுவார். முத்துராமன் தாத்தாவோ, மனதிற்குள் "இதுதான் சொ.செ.சூ" போல இருக்குன்ற மாதிரியே பாத்துக்கிட்டு, "எங்களையும் வாழவிடுங்கள்" விலங்குகள் போல போஸ் கொடுப்பார்.

இப்போது எதற்கு இந்தக் கதை என்று கேட்கிறீர்களா? அப்படிக் கேட்டால், நீங்கள் ஒரு அப்பாவி, உங்களுக்கும் பதிவுலகிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. தயவு செய்து இந்தப் பதிவைப் படித்தவுடன் அப்படியே 'அப்பீட்' ஆகிவிடுங்கள்.

மற்றவர்களுக்கு நான் மேற்கொண்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சர்ச்சையில் சிக்கி, ஆலையிட்ட கரும்பாக ஆனவர்களும், காணாமல் போனவர்களும் அதிகம் பேர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், கலைஞர்கள்தான், பதிவர்கள் அல்ல. பதிவர்கள் வேறு, கலைஞர்கள் வேறு என்பதை பதிவர்கள் புரிந்து கொண்டால், இந்த நோய் மீண்டும் வர வாய்ப்பில்லை. அதற்கு எல்லோரும் "பிளாக்"என்னும் பழம் தந்த கூகிளாண்டவரைப் பிரார்த்தனை செய்வோம்.



தொடரோயன்சா:-


இது ஒரு ஒட்டுவாரொட்டி நோய். ஏதாவது ஒரு தொடர் பதிவு வந்தால் நம்மை யாராவது தொடர அழைக்கமாட்டார்களா என்று ஏங்க வைக்கும். இரண்டு மூன்று சுற்றுக்களிலேயே நாம் முக்கியப்பதிவர்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்களாகி விட்டோம் என்று எண்ண வைக்கும். தொடர் பதிவு வர ஆரம்பித்த உடனேயே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். நாம் யோசித்துவைத்திருக்கும் தலைப்பில் யாராவது பதிவு போட்டுவிட்டால் பற்றிக்கொண்டு வந்துவிடும்.

என்னைப் போல் பதிவே போட முடியாதவர்கள் கூட தொடரோயன்சாவால் பாதிக்கப்பட்டு பதிவு போட்டுவிடுவார்கள்! இப்படியாக தொடரோயன்சா அவ்வளவு கடுமையான நோய அல்லவென்றாலும் சற்று பயங்கரமான நோய்தான்.

தொடரைத் தொடராமல் இருந்தால் தொடரோயன்சா உங்களைத் தொடாது!!


பிரபலூ:-


ஸ்வைன் ஃப்லூ என்ற ஒரு வியாதி உலகெங்கிலும் உள்ளவர்களைப் பிடித்து ஆட்டுவது போல், பதிவுலகில் உள்ளவர்களைப் பிடித்து ஆட்டும் ஒரு வியாதிதான் பிரபலூ. இது வந்துவிட்டால் நான் தான் 'பிரபல பதிவர்' என்ற எண்ணம் வந்து விடும். யாராவது 'பிரபல பதிவரே' என்று அழைக்க வேண்டும், மற்றவர்கள் தங்களை விட ஒரு படி கீழேதான், தன்னுடைய கருத்துதான் இறுதி மற்றும் நாட்டாமை தீர்ப்பு என்ற எண்ணங்கள் தானாகத் தோன்றி விடும். இதில் என்ன வேடிக்கை என்றால், பிரபலூ பிடித்தவர்கள், அது ஒரு வியாதியல்ல, பெரிய பட்டம் என்று நினைப்பதுதான்.

மக்களே, பிரபலூ பிடித்துக் கொண்டால் அவ்வளவுதான். உங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச 'கிரியேட்டிவிட்டி'யும் உங்களை விட்டு ஓடிவிடும்.

பிரபலூவுக்கான அறிகுறி இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் பழகுங்கள். எட்டி நிற்பது இன்னும் பயன் தரும். இல்லையென்றால் தொற்றிக்கொண்டு விடும். எப்போதும் நாம் பதிவராக இருந்தால் போதும். பிரபலூவை விரட்டி விடுவோம்.

====

இதுவரை உங்களுக்கு பதிவுலகில் நிலவும் பயங்கர வியாதிகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு இந்த நோய் இருந்தால் உடனே நான் சொன்ன மருத்துவ முறைகளைக் கையாளுங்கள். நோய்கள் "போயே போச்".

====

வாழ்க தமிழ்ப்பதிவுகள்!

வளர்க தமிழ்ப்பதிவுலகம்!!

ஓங்குக தமிழ்ப்பதிவர்கள் ஒற்றுமை!!!

நீங்குக தமிழ்ப்பதிவுலக நோய்கள்!!!!


Friday, November 6, 2009

தொடர் பதிவுகள் ஏன்?

தீபாவளிக்கான தொடர் பதிவு என்னை அடைந்த போது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது. நேற்றுதான் நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் அந்தத் தொடர் பதிவை அஃபீஷியலாகத் துண்டித்தார். ஏதோ ஒரு இடத்தில் ஒரு காரணத்துக்காகத் துவக்கப் படும் தொடர் பதிவுகள் சில சமயம் திரட்டிகளின் முகப்பை முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. இந்தத் தொடர் பதிவுகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான என் ஆராய்ச்சியின் விளைவுதான் இந்தப் பதிவு!

தொடர்பதிவுகளில் ஒற்றுமைகள்.

1. கேள்விகள் பொதுவாக ஒருவரது கருத்தைக் கேட்கும் வகையில் அமைக்கப் படுகின்றன. இதன் மூலம் ஒரு பதிவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

2. பெரும்பாலும், அனைவரும் விரும்பும் வகையில் கவர்ச்சிகரமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. சினிமா, பிடித்தவை பிடிக்காதவை, வாசித்தல் அனுபவம் போன்றவை இயல்பாகவே வசீகரிக்கும் தன்மையுடையன.

3. பதிவர் பதில் சொல்லும் போது தன்னை ஒரு 'அரசு / மதன் / தராசு / குருவியார்' போல நினைத்துக் கொண்டு பதில் சொல்ல வாய்ப்பாக அமைகிறது. இங்கே பதிவரின் 'ஈகோ' திருப்திப் படுத்தப் படுகிறது.

4. தன்னைப் பற்றி நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகச் சொல்வதும், தன்னைப் பற்றிய பெருமையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

5. நமக்குத் தெரிந்தவர் அழைக்கும் போது மறுக்கமுடியாத மறைமுக நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். தான் தொடர்வதோடு தமக்குத் தெரிந்த சிலரையும் அழைக்கின்றனர். அப்படியே சங்கிலியாகச் செல்கிறது. ஒரு சிலர் மட்டும் இதில் விதி விலக்கு.

6. கடைசியாக என்னைப் போன்றவர்களுக்கு தொடர் பதிவு ஒரு வரப்பிரசாதம். என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்போருக்கு 'லட்டு' போல் ஒரு மேட்டர் கிடைத்தால் நழுவ விட மாட்டார்கள் அல்லவா?!!


அப்படி எனக்கு 'லட்டு' கொடுத்தவர் சுரேஷ் (பழனியிலிருந்து). இதோ நான் தொடரும் அந்தப் பத்து

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

1. அரசியல்வாதி
பிடித்தவர் : ஜி.கே.வாசன்
பிடிக்காதவர் : மரு. இராமதாசு

2. எழுத்தாளர்
பிடித்தவர் :
பிடிக்காதவர் : பாலகுமாரன்

3. கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து
பிடிக்காதவர் :

4. இயக்குனர்
பிடித்தவர் : சங்கர்
பிடிக்காதவர் : பேரரசு

5. நடிகர்
பிடித்தவர் : நாசர்
பிடிக்காதவர் :

6. நடிகை
பிடித்தவர் :
பிடிக்காதவர் : நமீதா

7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : விஜய் ஆண்டனி

8. நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : விவேக்

9. தொழிலதிபர்
பிடித்தவர் : நா. மகாலிங்கம்
பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்

10. விஞ்ஞானி
பிடித்தவர் : அப்துல் கலாம்
பிடிக்காதவர் :

இங்கே விடுபட்டவைகள், என்னால் நிரப்பப்பட முடியாதவைகள். அந்த கேட்டகிரியில், நன்றாக யோசித்தும் எந்தப் பெயரும் பொருந்தவில்லை.

இனி இப்பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்.

1. அமீரக அமைதிப்புயல் "நான் ஆதவன்"

2. நைஜீரிய நைல் நதி "இராகவன், நைஜீரியா"

3. வகுப்பறை வாத்தியார், "சுப்பையா" அவர்கள்


4. சிங்கைக்கரை கங்கை, "கோவி. கண்ணன்"


வாங்க, வாங்க, இனி உங்கள் பணி...

Wednesday, November 4, 2009

பதிவர்களை வாட்டும் பயங்கர நோய்கள் . . .

பிளாக்கர்கள் என்று செல்லமாக அழைக்கப்படும் வலைப்பதிவர்களாகிவிட்டால் ஒரு சில வியாதிகளும் தொற்றிக்கொண்டுவிடுகின்றன. என்னதான் நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டாலும், இவை தாக்குவதைத் தடுக்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு நோயாவது ஒவ்வொரு பதிவரையும் தாக்கியிருக்கும். அனைத்து நோய்களும் தாக்கியவரை முழு நேர பதிவர் என்று அழைக்கலாம்.

பின்னூட்டஃபோபியா, ஃபாலோமேனியா, நட்சத்திரைடீஸ், ஹிட்டீரியா, சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ போன்றவையே பதிவர்களைத் தாக்கும் பயங்கர நோய்களாகும்!



இவற்றைப் பற்றி ஒரு சிறு குறிப்பு இதோ !!!



பின்னூட்டஃபோபியா:-

தான் எவ்வளவும் மொக்கையாக, படிக்கவே முடியாத பதிவுகளைப் போட்டாலும், குறைந்தபட்சம் நாற்பது கமெண்டுகளாவது வந்து நாற்பது பிளஸ் டேபில் தமது பதிவு வந்து விட வேண்டும் என்று நினைப்பது இந்த மாதிரி போபியா.

கும்மியடிப்போர் இந்த ஃபோபியாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். ஒருவர் மற்றவருடன் கூட்டு சேர்ந்து இவர் பிளாக்கில் அவர் பின்னூட்டம் போடுவதும், அவர் பிளாக்கில் இவர் பின்னூட்டம் போடுவதும் நடக்கும். சில நேரங்களில் ஒரே பின்னூட்டத்திற்கு பத்து பதில் பின்னூட்டம் போடும் ஆசையும் தோன்றும்.

அனானியாக வந்து தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்பவர்களும் உண்டு. இதையே பின்னூட்டக்கயமை அல்லது பின்னூட்ட டுபுரித்தனம் என்று சொல்வார்கள்.

பின்னூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நல்ல பதிவுகள் போட வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டால் இந்த ஃபோபியா போய் விடும்.


ஃபாலோமேனியா:-

நமது பதிவுகளை தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகள் மூலம் படிப்போர் தவிர்த்து, நமது எழுத்து நடையில் மயங்கி (?!) நம்மை ஃபாலோ செய்பவர்கள் உண்டு. அந்த வகையில் அதிகம் ஃபாலோயர்களைப் பெற்றவர்கள் நன்றாக எழுதுவார்கள் என்ற எண்ணம் பதிவர்களிடையே உண்டு.

அதிகம் ஃபாலோயர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் அதிகமாக அதிகமாக இந்த மேனியா வந்து துன்புறுத்தும். இங்கேயும் கூட்டுக் கும்மிக்கு இடம் உண்டு. என் ஃப்ரென்ட்சும் நானும் உனக்கு ஃபாலோயர்கள். உன் ஃப்ரென்ட்சும் நீயும் எனக்கு ஃபாலோயர்கள் என்று மாற்றி மாற்றி ஃபாலோவிக்கொள்வார்கள்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன், இப்பொழுதுதான் எனக்கு ஐம்பது ஃபாலோயர்கள் சேர்ந்திருக்கிறார்கள்! இது தேடிப்பிடித்த கூட்டமல்ல, தன்னால் வந்த கூட்டம் என்று கொள்கை முழக்கம் செய்தால் இந்த மேனியா, நம் மேனியை விட்டு ஓடிவிடும்.

நட்சத்திரைடீஸ்:-

தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு வாரம் நம் பதிவை ஏற்றிவைக்கும் நிகழ்வுக்கு நட்சத்திரம் என்று பெயர். மற்ற திரட்டிகளும் இதைச் செயல் படுத்தினாலும், தமிழ்மண நட்சத்திரம் என்பதன் ரேன்ஜே தனி. எப்படி நட்சத்திரமாக தேர்வு செய்கிறார்கள் என்பது ஜீ பூம்பா ரகசியத்தை விட ரகசியமானது. இதை விமர்சிக்காத பதிவர்களே இல்லை.

பதிவர்கள் எல்லாருக்கும் நாமும் நட்சத்திரமாக வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். இது ஒரு காமன் (கவனம் தேவை. பொதுவான என்ற கருத்தில் வரும்) நோய்.

சிறுவயதிலேயே (அதாவது பிளாக் தொடங்கி நான்கு மாதங்களுக்குள்ளாகவே ) எனக்கு நட்சத்திரம் போட்டுவிட்டதால் இந்த நோய் என்னை வாட்டாது !

ஹிட்டீரியா:-

நன்றாக கவனிக்கவும். எழுத்துப் பிழை அல்ல. ஹிட்டுகளுக்காக ஏங்கும் மக்கள் நிறைந்த உலகமல்லவா இந்த பிளாக் உலகம்? இது ஒரு பொதுவான வியாதி. ஹிட்டு அதிகமாக அதிகமாக பிட்டு (நல்ல பதிவு) ஓட்டலாம் என்று எண்ணுவோர் பலர். சிலர் பிட்டு (உண்மையான பிட்டு) போட்டால் ஹிட்டு அதிகமாகும் என்றும் நினைப்பர்.

ஹிட்டுக்களை அதிகமாக்கிக்காட்ட பேஜ் ரெஃப்ரெஷ் செய்வோரும் உண்டு. சிலர் ரெஃப்ரெஷ் பட்டன் மீது செங்கல் கூட ஏற்றி வைத்து விடுவார்களாம்! இதுதான் ஹிட்டீரியாவின் உச்சக்கட்டம். இதுவரை லட்சாதிபதிகளும், மில்லியனர்களும் மட்டுமே பிளாக் உலகில் உண்டு. இன்னும் கோடீஸ்வரர்கள் உருவாகாத ஏழை உலகம் பிளாக் உலகம்:((


ஹிட்டீரியா அதிகமாகும் போது சிலருக்கு ஹிட் கவுண்டர் (சரியாகப் படிக்கவும், சாதிப்பெயர் அல்ல) மேலேயே சந்தேகம் வந்துவிடும். அத்தகையோர் இரண்டு மூன்று ஹிட் கவுண்டர்களை சேர்த்துவிடுவார்கள்!

ஹிட் கவுண்டரை இழுத்து மூடுவதே இந்த நோய்க்கு சிறந்த மருந்து.



மற்ற நோய்களான, சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...

உங்களுக்குத் தெரிந்த வேறு நோய்கள் பற்றி பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதைப்பற்றியும் விரிவாக அலசப்படும்...