Thursday, September 6, 2012

பூரி கிழங்கு - சமையல் குறிப்பு

பூரி கிழங்கு (சில ஊர்களில் பூரி மசால்) சரியாகச் செய்யப்படும் பட்சத்தில் மிகச்சுவையான டிஃபன் வகையாகும். அப்படி சுவையாகச் செய்யும் முறையை இப்போது பார்ப்போம்.


பூரி செய்யத் தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - சல்லிக்காமல் இருந்தால் நல்லது
பால் - சிறிதளவு (ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
வெண்ணை அல்லது எண்ணை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு




மாவு பிசையும் முறை:-




சப்பாத்திக்கும் பூரிக்கும் வெவ்வேறு முறையில் மாவு பிசைய வேண்டும். பூரிக்கு சற்று இளகிய பதத்தில் மாவு பிசைய வேண்டும். சிலர் மாவு பிசைந்தவுடன் அதை வெறும் மாவில் புரட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயல். இதனால் எண்ணையில் கசண்டு தங்கி விடும்.

முதலில் மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உப்பைப் போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள்.
பிறகு சற்று குழிவாகச் செய்து முதலில் பாலையும், பிறகு நீரையும் ஊற்றுங்கள். மெதுவாகப் பிசையுங்கள். கையில் மாவு ஒட்டாத வகையில், சேர்ந்த பிறகு, வெண்ணையையோ எண்ணையையோ விட்டு நன்றாகப் பிசையுங்கள். மாவு இறுக்கமாக இல்லாமல் சற்று தளதள வென்று நீரோட்டமாக இருக்க வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊறினால் போதும்.




பூரி சுடும் முறை




எண்ணை வாணலியை அடுப்பில் ஏற்றி, அரை வாணலிக்குச் சற்று குறைவாக எண்ணை விட்டுக்கொள்ளுங்கள்.

ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக மாவை வட்டமாகத் தேய்க்கும் போது உலர்ந்த மாவில் புரட்டக் கூடாது. மாவைத் தேய்க்க எவர்சில்வர் பூரிக்கட்டை / தட்டு அல்லது மொழு மொழு தரை (கிச்சன் ஸ்லாப்) மிகச் சிறந்தது. அந்த இடத்தில் சற்று எண்ணையை விட்டு தேய்த்தால் அருமையாக வரும். மிக மெல்லியதாகத் தேய்க்காமல் சற்று கனமாக இட வேண்டும்.

எண்ணை காய்ந்தவுடன் ஒரு பூரியை வாணலியில் போட்டு அதன் மேல் காய்ந்த எண்ணையைத் துடுப்பால் தள்ள வேண்டும். அப்போது புஸ்ஸென்று பூரி உப்பிக் கொண்டு வரும். பிறகு திருப்பி விட்டு சற்று பொன்னிறமானவுடன் வெளியே எடுத்து விடவேண்டியதுதான்.

இப்போது ஓட்டலில் கிடைப்பது போலவே உப்பலான, மெதுவான சுவையான பூரி தயார்!!!




அடுத்து கிழங்கு செய்யும் முறை:-




முதலில் தேவையான பொருட்கள்.


உருளைக்கிழங்கு - 4 - 5 பெரிய கிழங்குகள்
வெங்காயம் - 2 - 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் - 3 - 4
இஞ்சி - ஒரு இன்ச் சைசுக்கு ஒரு துண்டு.
கொத்து மஞ்சள் - ஒரு விரற்கிடை
தாளிக்கத் தேவையான பொருட்கள் (கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு)
தணியாப் பொடி (மல்லிப் பொடி) - சிறிதளவு
கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:-


உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சற்று சிறிய அளவில் நசுக்கியோ, நறுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீள வாக்கில் சின்னதாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
பச்சை மிளகாயை நீளவாக்கில் 'ஸ்லிட்' செய்து வைத்துக் கொள்ளுங்கள்
இஞ்சியை இரண்டு மூன்றாக அரிந்து, நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கொத்து மஞ்சள் கிடைத்தால் அதை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையைத் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்த உடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு என்ற வரிசையில் போட்டு கடுகு வெடிக்கும் வரையும், பருப்புகள் சிவக்கும் வரையும் அதை துடுப்பால் தள்ளிக் கொண்டே இருங்கள். பிறகு பச்சை மிளகாயைச் சேருங்கள். அடுத்து இஞ்சியையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும்.

இவை வதங்கும் போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். இவை வதங்கும் போது உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒன்றாகக் கிளரி அதன் மேல் தணியாத் தூளைத் தூவி நன்றாக வதக்க வேண்டும்.

இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். சற்று இளகிய பதம் வரும் போது அதன் மேல் மல்லித் தழையும், கருவேப்பிலையையும் கிள்ளிப்போட்டு இறக்கி விடுங்கள்.

இப்போது சுவையான கிழங்கு தயார்!!!

கொத்து மஞ்சள் கிடைக்க வில்லையென்றால் மஞ்சள் தூளை வெங்காயம் வதங்கும் போது மஞ்சள் தூளைச் சேர்க்கலாம்.

இந்தக் காம்பினேஷனுக்கு இணையான டிஃபன் உலகத்திலேயே இல்லை.

செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

Saturday, April 21, 2012

குழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்

குழந்தை வளர்ப்பதில் முதல் குழந்தை வளர்ப்பதற்கும் இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் சாம்பிளுக்கு ஆறு.


ப்ரெக்னென்சி கன்ஃபர்ம் ஆகும் போது

ரங்கு: பாத்துமா. மெதுவா. தல சுத்துதா? டாக்டர் கிட்ட போலாமா? நான் வேண்ணா லீவு போட்டுடட்டுமா?

ரங்கு: தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். இன்னிக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங். கண்டிப்பா லீவு போட முடியாது. வேணுண்ணா, நாளைக்கு சாயந்திரம் நீயே போயிட்டு வந்துடு.


டெலிவரிக்குப் பின்

ரங்கு: குழந்தையை யாரும் தூக்க விடாதே, நீயே தூக்கு. நானா. அய்யோ எனக்கு பிடிக்கத் தெரியாதே. இப்படி அழுதுகிட்டே இருக்கே, ஏதாவது குடேன்.

ரங்கு: குழந்தைய நானே வச்சிக்கிறேன். பெரியதுக்கு நீதான் வந்து சாப்பாடு போடணுமாம். அழுதா ரெண்டு தடவ ஆட்டினா சரியா போயிடுது.


வளரும் போது - மூன்று வயது வரை

தங்கு: ட்ரிங்..ட்ரிங்... ஏங்க (ஆப்ஷனல்) குழந்த அழுதுகிட்டே இருக்குங்க. என்ன பண்றதுன்னே தெரியல. உடனே சைல்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போணும். கெளம்பி வாங்க.

ரங்கு: சரி உடனே வரேன்.


ரங்கு: காலைல சின்னது அழுதுகிட்டே இருந்துதே என்னாச்சு.

தங்கு: அதுக்கு பொழுது போலன்னு அழுது. ரெண்டு அடி குடுத்தேன். நிப்பாட்டிடுச்சு.



ஸ்கூலுக்கு அனுப்பும் போது

தங்கு: ஏங்க (ஆப்ஷனல்), குழந்தைய நல்லா பாத்துக்குவங்களா? அதுக்கு மூச்சா வருதுன்னு கூட சொல்லத் தெரியாதே. நான் வேண்ணா விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்துரவா? ஸ்கூல் போமாட்டேன்னு அழுதே. அங்க அடிச்சிருப்பாங்களோ. கம்ப்ளெயின்ட் பண்ணலாமா? இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல.



ரங்கு: நேத்தி ஸ்கூல் போமாட்டேன்னு சின்னது சொன்னதே என்னாச்சு.

தங்கு: சும்மா? வீட்ல் ஒக்காந்து டோரா பாக்கணும்னு ஆக்ஷன் பண்ணுது. வெரட்டி உட்டுட்டேன்.



காலேஜ் அட்மிஷன்

ரங்கு: நல்ல காலேஜ்ல அலஞ்சு திரிஞ்சு அட்மிஷன் பண்ணனும். நாம கேக்கற சப்ஜக்ட் கெடைக்கறதுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா என்ன?

ரங்கு: கெடச்ச காலேஜ்ல கெடச்ச சப்ஜக்ட் சூஸ் பண்ணு. பரவால்ல. எல்லாமே நல்ல சப்ஜக்ட்தான். இல்லாட்டி ஏன் அதை வைக்கப் போறாங்க. நாம படிக்கறதுல தான் இருக்கு.


கல்யாணம்

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

நார்மல் டெக்ஸ்டில் இருப்பது முதல் குழந்தை டயலாக். இடாலிக்ஸில் இருப்பது இரண்டாவது குழந்தை டயலாக்.

இதன் மூலம் கிடைக்கும் நீதி. முதல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, இரண்டாம் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. முதலாவது ரொம்ப ரொம்ப ஓவர், அடுத்தது ரொம்ப ரொம்ப கம்மி.

நீங்க மொதல் குழந்தையா ரெண்டாவது (அ) அதற்கு மேற்பட்ட குழந்தையா?