அத்தியாயம் 13 - கொல்லிப் பாவை
கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றார்ப்போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே விட்டு இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடறுத்து ஓடுவதால் தொடர்ச்சியாக இருக்க முடிவதில்லை போலும்.
அத்தகைய கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் கொல்லி மலை.கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்கியது கொல்லி மலை. அழகில் தான் ஆபத்து இருக்குமோ. ஆம் கொல்லிப் பாவையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முனிவர்கள் தவம் செய்ய இங்கு வந்த போது, அவர்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அங்கு வந்த தீய சக்திகளைத் தன் புன்னகையாலே கொன்றவளாம் கொல்லிப் பாவை. அவள்தான் இந்த கொல்லி மலையின் காவல் தெய்வம். இன்றும் அவளுக்கு அங்கே இருக்கும் கோயிலைக் காணலாம்.
கொல்லி மலை கடையெழு வள்ளல்களில் ஒருவனான 'வல் வில்' ஒரியின் இருப்பிடம் கூட. ஒரே அம்பில் சிங்கம், புலி, மான் மற்றும் கரடிகளைத் தொளைத்தெடுத்ததால் வல்வில் ஓரி என்று புகழப்பட்டான். கொல்லிமலையைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புற நானூறு, அக நானூறு போன்றவை செப்புகின்றன.
உயர்ந்த மலைகள் இல்லை. ஆனால் அடர்ந்த காடுகள் உண்டு. பனி பொழியும் சிகரங்கள் இல்லை. இனிமை சேர்க்கும் எழில்கள் உண்டு. அத்தகைய கொல்லி மலையின் மேற்கு நுழைவாயிலில் நாம் இருக்கிறோம். நாம் மட்டும் தனியாக வந்திருந்தால் அங்கே நிறைந்திருக்கும் பற்பல பொறிகளில் சிக்கிக் கொண்டிருப்போம். ஆனால் அங்கே இருவர் செல்கின்றார்களே. அவர்களுக்காக அத்துணை பொறிகளும் செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன. அவர்கள் கடந்தவுடன் அவை மீண்டும் செயல் படத்துவங்கும்.
முன்னால் ஒரு வயதானவர் செல்கிறார். அவரைத் தொடர்ந்து தட்டுத் தடுமாறி ஒரு இளைஞன் செல்கிறான். அவர்கள் செல்லும் பாங்கைப் பார்க்கும் போது அந்தப் பெரியவருக்குஅந்தப்பாதை புதிதல்லவென்று புரிகிறது. இளைஞன் புதிதாக வருகிறான் போலிருக்கிறது.
அடர்ந்த கானகத்தினூடே மலையை ஏறியதும் தோன்றிய எழில் கொஞ்சும் காட்சி அந்த இளைஞனை சற்று தேக்கியது. ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள். நடுவே மிகப் பெரிய சமவெளி. ஒரு பக்கத்திலிருந்து வெண்பஞ்சாய்ப் பொழியும் அருவி. கரும்பச்சைப் பட்டாடை அணிந்த இயற்கை மங்கை தன் வனப்புகளை மறைக்க சற்று சிரமப்பட்டாள். சில்லென வீசிய சிறுகாற்றும் அதில் கலந்திருந்த மெல்லிய மலர்களின் நறுமணமும் மனதை கொள்ளை கொண்டன. வனப்பறவைகளின் வகைவகையான ஓசைகள் அமைதியான சூழலுக்கு ஆதார சுருதி சேர்த்தன. அகண்டு விரிந்த இயற்கை அழகை அள்ளிப் பருக கண்கள் இரண்டு போதவில்லை கட்டிளங்காளைக்கு.
இவை ஒன்றும் அந்தப் பெரியவரை பாதித்ததாகத் தெரியவில்லை. இவன் இங்கேயே நின்றுவிட அவர் சற்றுதூரம் சென்றதும்தான் அவனைத் திரும்பிப் பார்த்தார். இப்போது இவர்கள் யாரென்பதை நீங்கள் ஒருவழியாக ஊகித்திருக்கலாம். ஆம் சரிதான். அவர்கள் முறையே, மாராயர் மற்றும் இளவழுதி.
'கடமை அழைக்கும் போது கண்களின் கவனம் கலையக்கூடாது' என்று சற்று கடினமாக வந்த மாராயரின் வார்த்தைகள் இளவழுதியின் ஆகாய சஞ்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தாய்ப்பசுவின் மடியிலிருந்து பால் குடித்துக் கொண்டிருக்கும் போது இழுக்கப்பட்ட கன்றைப்போல் நின்றான்.
'இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. இருட்டிவிட்டால் இங்கிருந்து செல்வது மிகக்கடினம். இவை எங்கும் போய்விடாது. பிறகு பார்த்து ரசித்துக் கொள். இப்போது வா வேகமாக' என்று மாராயர் கூறியதற்குப் பிறகு எதுவும் பேசாமல் அவரவர் சிந்தனையில் மனதைத் தேக்கி, விழிகளை வழியில் நிறுத்தி இலக்கை நோக்கிச் சென்றனர் இருவரும். நேரம் செல்லச் செல்ல காடும் அடர்ந்து கொண்டு வந்தது. சற்று நேரம் கழித்து மெல்லிய ஓசை கேட்டது இளவழுதிக்கு. வர வர ஓசை பெரிதாகிக் கொண்டே வந்தது. அது மனிதர்கள் எழுப்பும் 'ஹா' 'ஹோ' 'ஹூ' முதலிய சப்தங்கள். ஒரு வேளை மலை மக்கள் விழாவோ . ஆனால் உடுக்கை, பறை, கொம்பு முதலிய வாத்தியங்களின் ஓசை கேட்கவில்லையே. எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்து விடுகிறது என்று எண்ணினான். நடை தொடர்ந்தது.
அடர்ந்த கானகத்திலிருந்து சட்டென்று அகன்றது ஒரு பெரிய மைதானம். சுற்றிலும் சிறு குடில்கள். சற்றுத் தொலைவில் ஒரு கல் வீடு. மாராயரைப் பார்த்ததும் ஒரு சிறு கொம்போசை கேட்டது. பிறகு ஒரு பேரிகை முழக்கம். சற்றேறக்குறைய ஐநூறு பேர் அங்கே வரிசையாக நின்று மாராயருக்கு வணக்கம் செலுத்தினர். அனைவரின் கையிலும் வில். அங்கே தலைவன் போலிருந்த ஒருவன் முகக்கவசமணிந்து நின்றிருந்தான். மாராயருக்கு தனியாக வணக்கம் செலுத்தினான்.
அனைவருக்கும் ஆசி கூறி மீண்டும் காலையில் சந்திப்பதாகத் தெரிவித்து அவரவர் குடில்கள் திரும்பப் பணித்த மாராயர் தலைவனைத் தம்முடன் வருமாறு கூறினார். அவர்கள் சென்றதும், அங்கிருந்த கல்வீட்டிற்கு சென்றனர் மூவரும். இளவழுதி தன் வாழ்க்கையில் ஆச்சரியப் பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய காலம் போலும் என்று எண்ணிக்கொண்டான்.
'இளவழுதி, இவர்கள் யாரென்று உனக்குச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாலேயே உன்னை இங்கு அழைத்து வந்தேன். இவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டுகளாக இவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறேன், என்றேனும் சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவலாம் என்ற ஆசையில். தற்போது சோழகுலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லையாயினும் இந்தப் பாசறையை அமைத்து இவர்களைப் போஷித்து வருகிறேன். இவர்கள் அனைவரும் வல்வில் ஓரியின் வழி வந்தவர்கள். வில்லவர்கள். மற்ற போர்முறைகளிலும் வல்லவர்கள். அவர்களது திறமை மறைந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். இப்போது அவர்கள் திறமைக்கு ஒரு சவால் வந்திருக்கிறது.
அதை ஆமோதிப்பது போல், அது வரை கவசத்தைக் கழட்டாத படைத் தலைவர் அப்போது தலைக் கவசத்தைக் கழட்டினார். இளவழுதி யூகித்திருந்தது சரியாகப் போய்விட்டது ஒரு வழியாக . அது அவன் மாமன் மகள் தேன்மொழிதான். அவர்களின் விழிகள் சந்தித்தன ஒரு கணம். மீண்டும் மாராயரைப் பார்த்தான் இளவழுதி.
'தந்தையே, தேன்மொழி வீட்டில் இல்லாத போதே நான் யூகித்தேன் இது போல் ஏதாவது இருக்குமென்று. இனி விவரமாக நீங்களே கூறிவிடுங்கள்'
'இளவழுதி, நீ வந்ததும் வீரபாண்டியனும், கயல்விழியும் மதுரைக்கு சென்று விட்டனர். ஆனால் தேசிகர் சொன்ன செய்தி என் மனதை சற்று பாதித்து விட்டது. ஆகவே, முதலில் நாம் செயல் பட வேண்டியது திருவரங்கத்தில்தான் என்று முடிவு செய்துவிட்டேன். ஆகவே கடந்த இரு வார காலமாக நாம் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று அவ்வூர்த்தலைவர்களிடம் எச்சரிக்கை செய்யவேண்டியதாயிற்று. இதற்கிடையில் நீ இவளைப் பற்றி கேட்ட போது அவளை நம் உறவினர் இல்லத்திற்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தேன். உன்னை திருவரங்கத்திற்கு அனுப்பியவுடன் இவளை இங்கு அனுப்பிவிட்டேன். இவள் மூலமாக இங்கிருப்பவர்களுக்குப் பயிற்சியளிக்கிறேன். பெரும்பாலும் இவள் இங்குதான் இருப்பாள். இவளது செல்லப்பெயர் கொல்லிப் பாவை ஆயிற்றே. நாளையே நான் மீண்டும் திருவெள்ளரைக்குப் புறப்படுகிறேன். நீங்கள் மேலும் சில காலம் இங்கிருந்து இந்தப் படையைப் பழக்குங்கள். என் குறிப்பு கிடைத்ததும் நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம். தேன்மொழி, இளவழுதியின் திறமையை சற்று சோதனை செய். அவன் படித்தது நமக்கு உதவுமா என்று பார். இல்லையேல் நம் படையில் சேர்த்து அவனுக்கும் பயிற்சி கொடு. நான் சற்று கொல்லிப் பாவை கோவில் வரை சென்று வருகிறேன்'
===
தனித்து விடப்பட்ட தேன்மொழியும் இளவழுதியும் சிறிது நேரம் வரை பேசவில்லை. உண்மையில் இளவழுதிக்கு தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் மாராயர் பேசியது குறித்தும் சற்று கோபமாகத்தானிருந்தது. தேன்மொழியும் அவன் பேசட்டும் என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். இறுதியில் மவுனம் கலைத்தது தேன்மொழிதான்.
'வீரரே'
'சொல்லுங்கள் படைத்தலைவரே'
'மாராயர் சொன்னது புரிந்ததல்லவா?'
'தமிழ் எனக்குத் தெரியும்'
'நேராகப் பதில் சொன்னால் நலமாக இருக்கும்'
'உத்தரவு படைத்தலைவரே'
'சொல்லுங்கள்'
'என்ன'
'கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள்'
'என்ன கேட்டீர்கள்'
'இப்படி இருக்கிறீர்களே. ஹூம். மாராயர் சொன்னது புரிந்ததல்லவா?'
'அவர் நிறைய சொன்னார். நீங்கள் எதைப் பற்றி கேட்கிறீர்கள்'
'வீரரே'
'சொல்லுங்கள் படைத்தலைவரே'
இதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை. 'அத்தான் விளையாடாதீர்கள்.'
'நான் எங்கே விளையாடுகிறேன். நீயும் என் தந்தையும் அல்லவா என்னை குழப்பி விட்டு விளையாடுகிறீர்கள். நான் என்ன சிறு பிள்ளையா? என்னிடம் இவற்றை மறைப்பதால் என்ன பயன்? எதுவும் முழுமையாகத் தெரியாமல் எப்படி செயலில் இறங்குவது? விளையாட்டாம் விளையாட்டு' என்றான் சொல்லவொண்ணா கோபத்தோடு.
உண்மையான அவன் வார்த்தைகள் அவளை அசைத்தன. சிறு புன்னகையுடன் எழுந்து அவனருகே வந்து அவன் தோளைப் பற்றியவாறே, 'அத்தான் உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. நீங்களோ நெடு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் உங்களுக்கு இந்தத் தலைவலிகளெல்லாம் எதற்கு என்றுதான் மாமா விட்டிருப்பார். அவர் சொல்லாமல் நான் எப்படி சொல்வது? ஒன்றையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்' என்றாள் தேன்மொழி மென்மையாக.
அவள் சொல்லும் செயலும் இளவழுதியை இளக்கிவிட்டிருந்தது. பழைய காதல் மன்னனாக ஆகிவிட்டிருந்தான் இளவழுதி.
'தேன்மொழி, மன்னிப்பெல்லாம் எதற்கு. நீ சொல்வதில் உண்மைதான். கோபம்தான் என் கண்ணை மறைத்து விட்டது.'
'சரி போகட்டும். மற்றவற்றைப் பார்ப்போம்.' என்றாள் தேன்மொழி.
'ஆமாம் ஆமாம். திருவெள்ளரையில் பார்க்கவேண்டியதே இன்னும் பார்க்க முடியவில்லை. அவற்றையும் சேர்த்துப் பார்த்துவிட வேண்டியதுதான்' என்றான் கண் சிமிட்டியவாறே. நன்றாகக் குழைந்திருந்த தேன்மொழி, மீண்டுமொருமுறை மந்தகாசப் புன்னகை பூத்தாள்.
'இப்படித்தான் சிரிப்பாளாம் கொல்லிமலைப் பாவை' என்று அவளைத் தன்னருகில் இழுத்தான் இளவழுதி.
(தொடரும்)
17 comments:
சக்கர வியூகம். வெற்றிகரமான 94வது நாள். அடுத்த பகுதியை நூறாவது நாள் சிறப்பு இடுகையாகக் கொடுக்கவும்
//அங்கு வந்த தீய சக்திகளைத் தன் புன்னகையாலே கொன்றவளாம் கொல்லிப் பாவை//
மல்லிகா மாதிரி ஆளோ...
//மல்லிகா மாதிரி ஆளோ...//
யாருங்க அந்த மல்லிகா?
மல்லிகா ஷெராவத்தா?
எபிசோட் வழக்கம் போல ஜூப்பரு..
மிகுந்த ரசணையுடன் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
//
SUREஷ் கூறியது...
சக்கர வியூகம். வெற்றிகரமான 94வது நாள். அடுத்த பகுதியை நூறாவது நாள் சிறப்பு இடுகையாகக் கொடுக்கவும்
//
சூப்பர் சுரேஷ், உங்களுடைய இந்த ஸ்டேடிஸ்டிக்ஸ் மிகவும் வியக்க வைக்கிறது. மிக மிக நன்றி.
//
SUREஷ் கூறியது...
மல்லிகா மாதிரி ஆளோ...
//
இங்க எதுக்குங்க இது?
//
நான் ஆதவன் கூறியது...
//மல்லிகா மாதிரி ஆளோ...//
யாருங்க அந்த மல்லிகா?
மல்லிகா ஷெராவத்தா?
//
நீங்க தமிழ் நாட்டுல இல்லன்னு இந்த கேள்வியப் பாத்து தெரிஞ்சிக்கலாம்.
//
நான் ஆதவன் கூறியது...
எபிசோட் வழக்கம் போல ஜூப்பரு..
//
இப்டி பொதுவா சொல்லிப்போட்டீங்கன்னா எப்படிண்ணே !
//
சதீசு குமார் கூறியது...
மிகுந்த ரசணையுடன் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
//
மிக்க நன்றி சதீசுகுமார்
ரசணை - ரசனை (வேகமாக தட்டச்சியிருப்பீர்கள்)
நல்ல வர்ணனை, அருமையான நடை
பாகத்திற்கு பாகம் எழுத்தின் நளினம் நல்லா வருகிறது.
பின்னி படல் எடுங்க
நல்ல எழுத்து ...
இன்னும் இத்தொடரை படிக்க துவங்கவில்லை
படித்துவிட்டு ...
//இளைய பல்லவன் சொன்னது…
//
SUREஷ் கூறியது...
மல்லிகா மாதிரி ஆளோ...
//
இங்க எதுக்குங்க இது?//
//நீங்க தமிழ் நாட்டுல இல்லன்னு இந்த கேள்வியப் பாத்து தெரிஞ்சிக்கலாம்.//
சத்தியமா புரியல கொஞ்சம் விளக்கவும்
நன்றி நசரேயன்,
எனக்கும் அதுதான் தோன்றுகிறது. எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் கருத்துரைகளும்தான்.
நன்றி ஜமால்,
//
நான் ஆதவன் கூறியது...
//இளைய பல்லவன் சொன்னது…
//
SUREஷ் கூறியது...
மல்லிகா மாதிரி ஆளோ...
//
இங்க எதுக்குங்க இது?//
//நீங்க தமிழ் நாட்டுல இல்லன்னு இந்த கேள்வியப் பாத்து தெரிஞ்சிக்கலாம்.//
சத்தியமா புரியல கொஞ்சம் விளக்கவும்
//
இ.பி.கோ.498 ஏ - ன்னு ஒருத்தர் எழுதியிருக்கார். பாருங்க.
Nice Description of Nature.
Writing is getting matured.
Post a Comment