Monday, August 30, 2010

இளையபல்லவன்:- பதிவரசியல்! அயல் நாட்டு அன்னிய சக்திகளின் சதி!!

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ன பதிவுலகமடா இது? திருந்துமென்று பார்த்தால் திரும்பவும் சாக்கடைக்கல்லவா சென்று விட்டது? ஏன்? ஏன்? ஏன்? கருத்துச் சுதந்திரம் கூடாதா? பதிவெழுதச் சுதந்திரமில்லையா? உரிமைக் குரல் கொடுப்போரின் குரல்வளை நெறிக்கப்பட்டால் கூட கூக்குரலெழும். ஆனால் அவர்களையே இருட்டடிப்புச் செய்துவிட்டால்.... ஆஹா.. இது ஒரு தனி முயற்சியல்ல. பலமான கூட்டணியின் பயங்கரச் சதி.. மேலே படியுங்கள்...


மக்களே.. இவ்வளவும் இளையபல்லவனுக்கு இன்று நேர்ந்திருக்கலாம். நாளை உங்களுக்கும் நேராதென்பது என்ன நிச்சயம். ஒன்றாகப் போராடுவோம். இளையபல்லவனுக்கு விடிவு காலம் வரும் வரை பசி நோக்காமல், கண் துஞ்சாமல், எவ்வெவ்வருத்தம் பாராமல், கருமமே கண்ணாக இருப்போம். இந்த அறை கூவலைக் கேட்டு வாரீர் வாரீர்.. நடக்கும் கொடுமைகளைப் பாரீர்... பாரீர்...


என்ன நடந்தது?? இளையபல்லவனிடமே கேட்டோம். 'போல்ட்' எழுத்துக்களில் உள்ளவை தானைத் தலைவர், தன்மானச் சிங்கம், இளையபல்லவர் சொன்னது.



எந்தப் பதிவு போட்டாலும் என் பெயர் தெரிவதில்லை...


அட.. பதிவின் தலைப்பை வைத்தே நான்தான் பதிவு போட்டேன் என்று மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரபலமான பதிவராகிவிட்டேனா என்று எனக்கு வந்த ஆச்சரியம், வழக்கமாகக் கடைப்பக்கம் வரும் ஒன்றிரண்டு பேர் கூட வராமல் போனபோதுதான் தெளிவாகியது.

பதிவின் பெயர் மட்டும் வருகிறது. வகைப்படுத்திய விதம் தெரிகிறது. என் பெயர் மட்டும் இல்லை:(

இதுவாவது பரவாயில்லை. ஒரு வாரத்திற்கு முன் 'புதியது'?! என்ற லேபிள் வேறு!!!



ஆஹா. இது என்ன கொடுமை? யார் குரல் கொடுத்தார்கள் என்று தெரியவிடாமல் செய்யப்படுகிறதா?? அதுவும் பழைய குரலை புதிய குரல் என்று அறிமுகம் செய்யப்படுகிறதா??



அடுத்து...


மறுமொழிகள் திரட்டப்படுவதில்லை...


அய்யா... என் பதிவெல்லாம் ஒரு சில மணித்துளிகளாவது முகப்பில் தெரிகிறதென்றால் அது அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களினால்தான். அப்படி பின்னூட்டம் வராவிட்டால் நமக்கு நாமே திட்டத்தின் படி ஒன்றிரண்டு 'டெஸ்ட்' பின்னூட்டங்கள் போடும் திட்டத்தைச் செயல் படுத்தி பதிவை 'மார்க்கெட்டிங்' செய்திருக்கிறேன்.

அய்யகோ.. ஆனால் இப்போதோ, முதலுக்கே மோசம் வந்தது போல்.. மொத்தமாக அந்த வரிசையிலேயே வருவதில்லை...



அந்தோ பரிதாபம்.. தில்லாலங்கடி வேலை செய்தாவது தன் பதிவை அவயத்து முந்தியிருப்பச் செய்யும் செயலைக் கூட தடுக்கும் தன்னிகரல்லா உலகமடா இஃது..



அடுத்து...
தமிழ்மணம் கருவிப்பட்டை செய்யும் மக்கர்...

என்பதிவின் மேல் தமிழ்மணம் கருவிப்பட்டை, பதிவை அனுப்புவதற்கு முன் எப்படியிருக்குமோ அப்படியே இருக்கிறது. யாராவது கருணை மனம் மிகுந்த தர்மவான்கள்/தர்மவானிகள் இரக்கப்பட்டு அவ்வப்போது போடும் அரை வோட்டு அல்லது ஒன்றரை ஓட்டு கூட விழாமல் சதி செய்யப்பட்டு விட்டது!!!

இப்படி அடுக்கடுக்காக, எனக்கு எப்போதாவது எழுதவேண்டும் என்று வரும் ஆசையை முளையிலேயே கிள்ளியெறியவும், அந்த ஒன்றிரண்டு பதிவுக்காக பரிதாபப்பட்டு வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் வரக்கூடாது, வந்தாலும் தெரியக்கூடாது என்ற நல்(?!)லெண்ணத்திலும், ஓட்டுப்போடுவதையே கடமையாகக்கொண்டுள்ள ஓரிரண்டு நல்லவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் பொருட்டும் இவ்வாறெல்லாம் சதி செய்யப்படுகிறது என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாவிட்டாலும்... நம்பாமல் இருக்க முடியவில்லை...

ஓட்டு வாங்கும் உரிமையும் ஓட்டுப்போடும் உரிமையும் ஒருங்கே தட்டிப் பறிக்கப்படுகிறதே. ஐயகோ.. என்செய்வோம்?. என்செய்வோம்?...



அ.உ.இ.ப.மு.கவின் செயற்குழு, பொதுக்குழு, மற்றும் அனைத்துக் குழுக்களின் கூட்டுக்குழம்பு(சாரி குழு) எடுத்த முடிவினை உங்கள் முன் எடுத்து வைக்கிறோம்...

அ. மேற்கண்ட குறைகளையெல்லாம் உடனே சீர் செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணமாக கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு பதிவிட்டு தமிழ்மண முகப்பு நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அ.உ.இ.ப.மு.க. (அகில உலக இளையபல்லவன் பதிவுகள் முன்னேற்ற கழகம்) உறுப்பினர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

1. பதிவுலகிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த பிரபல பதிவர் தலைமையில் ஒரு கமிஷன் வைத்து விசாரணை செய்
2. இடைக்கால நிவாரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு இளையபல்லவனை நட்சத்திரமாக்கு
3. இளையபல்லவனின் அனைத்து இடுகைகளுக்கும் உடனே 25 வாக்குகளை வழங்கு
4. இளையபல்லவனின் அனைத்து இடுகைகளுக்கும் உடனே 50 மறுமொழிகளை வழங்கு

குறிப்பு:-

1. மேலும் கோரிக்கைகள் அ.உ.இ.ப.மு.க.வினர் சார்பாக வரவேற்கப்படுகின்றன
2. அ.உ.இ.ப.மு.க.வில் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3. அ.உ.இ.ப.மு.க. இல்லாத இடமே இல்லையென்றாலும், மேலும் கிளைகள் துவங்க அனுமதி வழங்கப்படுகிறது.
4. அ.உ.இ.ப.மு.க. சார்பாக போராட்டம் நடத்த தகவல்களுடன் தொடர்பு கொள்ளவும்.
5. 200க்கும் மேல் தொகுதிகள் கொடுத்து கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவோர், தொடர்புகொள்ளவும்.


இப்படிக்கு:-
இ.ப.மு.க. சார்பில்
தமிழ்மண நிர்வாகிகளின் 'கடைக்கண் காட்சி'
காணக்காத்திருக்கும்
'குணா' -
இளையபல்லவன்.

பின்குறிப்பு:- என் பிளாக்கிற்கு இவ்வளவு பிரச்சினைகளை அளித்து ஒரு பதிவெழுத வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

இளைய பல்லவன்:- முடிவில்லா மௌனத்தின் மொழி. . .


உள்ளே உறங்கா
மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...

எண்ணங்கள் . . .
வார்த்தை உலகின்
வார்த்திடாத வண்ணங்கள் . . .

அவை..
உள்ளே உறங்கா மௌனம்
காலம் தொடாத கோலம்...


பார்வையின் வழியே பயணம் - யாரும்
பார்த்திட முடியாத ஜனனம் . . .
கேள்வியின் முடிவில் மீளாத பதிலின்
அடிநாத சலனம். . .

அது..
உள்ளே உறங்கா மௌனம்
காற்றும் புகாத உலகம்..


மீண்டும் ஒரு கவிதை! (முயற்சி)

Tuesday, August 24, 2010

நாட்டாமைகள் - கதை

ஒரு ஊர். அதில் இரு பங்காளிக் குடும்பங்கள். அவர்கள் தான் அந்த ஊர் நாட்டாமைகள். சின்ன நாட்டாமை இறந்துவிட பெரிய நாட்டாமை தம்பியின் நாட்டாமைத் தனத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார். தம்பியின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குரிய நாட்டாமை உரிமையை அளித்து விடுகிறார்.

இதில் பெரிய நாட்டாமையின் மகனுக்கு ஏக பொறாமை. எப்படியாவது சித்தப்பா மகன்களை ஏமாற்றி அவர்களுடைய நாட்டாமையைப் பறித்துவிடவேண்டுமென்று தன் தாய்மாமனுடன் சதிசெய்கிறான். அதன் படி அவர்களை ஏமாற்றி ஊரை விட்டுத் துரத்தியும் விடுகிறான்.

காலங்கள் பல கடந்த பின், மீண்டும் ஊருக்குத் திரும்பும் தம்பி பிள்ளைகள், தங்கள் நாட்டாமைத்தனத்தைக் கேட்கின்றனர். ஆனால் பெரிய நாட்டாமையின் மகன் அவர்களை அவமானப்படுத்தி விடுகிறான். ஊரில் சிலர் சின்ன நாட்டாமையின் மகன்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

சமரசம் செய்ய ஒரு ஜகஜால கில்லாடி வருகிறார். அவருக்கும் அல்வா கொடுக்கிறான் பெரிய நாட்டாமையின் மகன். இனி பேசிப்பயனில்லை என்று சண்டைக்கு அழைக்கின்றனர் சின்ன நாட்டாமையின் மகன்கள். ஜகஜால கில்லாடி இவர்கள் பக்கம்.

இந்த ஜஜாகியின் தில்லாலங்கடி வேலைகள் மூலமாக சின்ன நாட்டாமையின் மகன்கள் பெரிய நாட்டாமையின் மகனையும் மற்றவர்களையும் அழித்து விடுகின்றனர். பெரிய நாட்டாமை, மகன் இறந்த துயரத்தில் ஊரை விட்டே சென்று விடுகிறார்.

இறுதியில் மொத்த ஊரும் சின்ன நாட்டாமையின் மகன்களின் கட்டுப்பாட்டில் வருகிறது.

பி.கு:- கதையைப் படித்து விட்டு தயை கூர்ந்து உங்கள் விமர்சனங்களை பின்னூட்டங்களாகத் தெரிவிக்கவும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க விரும்புவோர்க்கு திரைக்கதை அமைத்துத் தரப்படும்!

Monday, August 23, 2010

Wednesday, August 18, 2010

திரைக்கதை எழுதுவது எப்படி - 7 : கனவு காணுங்கள்!

முன்னுரை:- சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நின்று விட்ட இந்தத் தொடரை மீண்டும் இப்போது தொடர்கிறேன். தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை பழைய பதிவுகளைப் படித்தல் நலம்.

===

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு செயல் அல்ல. அது பல செயல்களின் தொகுப்பு. A series of events. நான் ஒரு நவீன கட்டிடத்தில் பணி புரிகிறேன். 24லட்சம் சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள் கட்டிடம் அது. இந்தக் கட்டிடத்தை கட்டி முடிப்பது என்பது ஒருவர் மட்டுமே செய்யக் கூடியதல்ல. பல்வேறு துறை வல்லுனர்களின் பங்களிப்பும் தேவைப்படும்.

அடிப்படையாக, ஒரு rendering அளிப்போம். அதாவது கட்டிடம் முடியும் போது அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் படம். இனி Backwork செய்ய வேண்டும். பிறகு, கட்டிட வரைபடம். வரைபடத்தின் டீட்டெயில்கள். பல்வேறு கோணங்களில் அதே வரைபடத்தின் நகல்கள் ஆகியவை தயாரிக்கப்படும்.

Facade எனப்படும் வெளிப்புறம் எவ்வாறு இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சப்போர்ட் என்ன? கட்டிடத்தின் strength, column, pillar, beam, post tensioning ஆகிய சிவில் எஞ்சினீரிங் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் தேவைகளும், விவரமாக எழுதப்பட வேண்டும். பிறகு இவை எவ்வாறு எப்போது கிடைக்க வேண்டும் என்பதும் முடிவு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு, அதை எப்படி செய்வது? கடன் வாங்க வேண்டுமா? சொந்தப்பணத்திலா? ஆகிய பல்வேறு கேள்விகள், பதில்கள், விளக்கங்கள். ஏனைய, ஏனைய...

இதே போல்தான் திரைப்படம் எடுப்பதும். திரைக்கதை ஒரு கதையை சொல்லும் விதம். கதை என்பது ஒரு கட்டிடம் என்று எடுத்துக்கொண்டால் நமது கட்டிடத்தை தனித்துவமாகத் தெரிய வைக்கும் செயல் திரைக்கதை எனலாம். அப்படித் தனித்துவமாகத் தெரிய வைக்க அதிக செலவும் செய்யலாம். அல்லது ஒரு சில சிறிய மாற்றங்கள் மூலம் மிக அழகாகவும் தெரியச் செய்யலாம்.

ஆனால் ஒன்று, திரைக்கதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதன் வரையறைக்குட்பட்டே அனைவரும் திரைக்கதை எழுதுகின்றனர். ஒரு சிலர் புதிய முயற்சிகளைச் செய்தாலும், முன்னர் நான் கூறிய முறைகளில் திரைக்கதைகளை அமைக்கிறார்கள்.

ஃ ஃ ஃ ஃ ஃ

திரைக்கதை எழுத மிக முக்கியத் தேவை உங்கள் visualization திறமை. காட்சிப்படுத்துதல் அல்லது கனவு காணுதல். ஒரு இயக்குனர் தன் நடிகர் நடிகையிடம் தான் நினைப்பதை எதிர்ப்பார்க்கிறார். அதனால்தான் அவரது திருப்திக்கு ஏற்றார்ப்போல் காட்சி அமையும் வரை ரீடேக் வாங்குகிறார்.

தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி. இயக்குனர் வசன கர்த்தாவிடம், தங்கை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை காட்சிப் படுத்துமாறு கேட்க அந்த வசன கர்த்தா பழைய முறையில் தூக்கு, விஷம் என்று எழுதுவார். அதை மறைவிலிருந்து பார்க்கும் பாக்கியராஜ் அருமையாக 'டபுள் பிரமோஷன்' கான்சப்டை இதில் புகுத்துவார். அங்கே நிற்கிறது திரைக்கதையாசிரியரின் தனித்துவமும் விஷுவலைசேஷனும். ஆனால் அதே டயலாக் இன்றைய காலகட்டத்தில் எடுபடாதென்பது வேறு விஷயம்! அதனால்தான் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை!!

இன்று செண்டிமெண்ட் சீன் ஒன்று வைத்தாலும் படம் அவுட்டாகிவிடும் என்ற நிலை உள்ளது. இன்றைய தேதியில் கடைசியில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் கிழக்குச் சீமையிலே. அது கூட புதிய கதைக் களத்திற்காகத்தான் வெற்றி பெற்றது.

ஒரு காலத்தில் புராணப்படங்களும், பக்திப் படங்களும் வந்தன (எம்.கே.டி, பி.யூ.சி). அடுத்து ஏழ்மை ஒழிப்பு (எம்.ஜி.ஆர்), அடுத்து புரட்சிகர கருத்துக்கள், கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான படங்கள்(ருத்ரைய்யா, பாலச்சந்தர்), கிராமத்துக் கதைகள் (பாரதிராஜா, பாக்கியராஜ், ராமராஜன்). ஆனால் இவை யாவும் ஒரு காலத்திற்கு மேல் தொடர்ந்து நிலைக்க வில்லை.

இன்று வரும் கிராமத்துப் படங்களும் அன்று வந்த கிராமத்துப் படங்களும், வெவ்வேறான கிராமங்களை வெளிக்கொணர்கின்றன. ராவணன் வெற்றிபெறாததற்குக் காரணம் அந்த கிராமத்தை நம்மோடு தொடர்பு படுத்த முடியவில்லை.

ஆக, விஷுவலைசேஷனும் காலத்திற்கேற்ப இருக்கவேண்டுமே ஒழிய பழையதைப் போட்டால் யாரும் காசு கொடுத்து சாப்பிட மாட்டார்கள்!

அன்றும், இன்றும், என்றும் வற்றாத ஜீவ நதிகள் மூன்று. அவை, காதல், ஆக்ஷன், காமெடி...

ஆக உங்கள் கதையை

1. விஷுவலைஸ் செய்யுங்கள்.
2. நிகழ் காலத்திற்கு ஏற்ப கதைக்களனைத் தேர்ந்தெடுங்கள்.
3. மூன்று ஜீவ நதிகளையும் இணையுங்கள்!!

மீண்டும் சந்திப்போம்.

Monday, August 16, 2010

வானவில் 16.08.2010

நம் நாடு:-

இந்தியாவின் 64வது சுதந்திர தினம் வழக்கம் போல் வரலாறு காணாத பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கு சுதந்திரம் யாருக்கு? யாருக்கோ...

===

சவால்:-

இலவச பம்புசெட் வழங்கப்போவதாக வந்த புதிய அறிவிப்பு நிச்சயம் 14ம் தேதி அம்மையார் திருச்சியில் நிகழ்த்திய உரையின் எதிரொலிதான் என்பதில் சந்தேகமில்லை. இதே போக்கில் போனால் மக்கள் அம்மையாரை எதிர்க்கட்சியாகவே இருக்க வைத்து தேவையானதைப் பெற்றுக் கொள்வார்கள் போலிருக்கிறது! எதற்கும் அ.தி.மு.க. சற்று முன் சாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது.


===


காமன்வெல்த் போட்டிகள் துவங்குவது சந்தேகமே. அப்படியே துவங்கினாலும் நல்ல விதமாக நடைபெறுவது சற்று சிரமம்தான். கட்டுமானத்துறையில் பணிபுரியும் நான், தற்போது வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, புதிய தலைமைச் செயலகப் பாணியில் ஒப்பேற்றலாமே ஒழிய முழு அளவில் விளையாட்டுக்களை நடத்தத் தகுதியற்றவையாகவே காட்சியளிக்கின்றன இந்த மைதானங்களும் விளையாட்டரங்கங்களும். எந்நேரத்திலும் மாற்றுத் தகவல் வரலாம்!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே...

===


ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்:-

இலங்கைக்குத் கருணாஸ் செல்வதைத் தடுத்தவர்கள், இலங்கையில் நடக்கும் துடுப்பாட்டப் போட்டியை தடுக்காதது ஏனோ? அதில் பங்கு பெறும் முரளி விஜயைக் கூட கண்டிக்கவில்லையே? குறைந்த பட்சம் அந்தத் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கூட கண்டிக்கவில்லையே என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க நான் ஒன்றும் கே.. அல்ல. ஆகவே நான் என் வழியில் போகின்றேன்!


===



வலையுலகில் அவ்வப்போது நடக்கும் பதிவர்களுக்கிடையேயான மோதல்கள் எள்ளளவும் யாருக்கும் நன்மை பயப்பதில்லை. இது மிக அதிக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. பதிவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது...

===


மெக்சிகோ கடலில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு அடங்குவதற்குள் மும்பைத் துறைமுகத்தை ஒட்டியே இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவு அந்தப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதித்துள்ளதாகச் சிலரும் அப்படியொன்றும் பாதிப்பில்லையென்று அமைச்சரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருதுளியானாலும் பெருவெள்ளமானாலும், விஷம் விஷமே.

உலகை அழிக்க யாரும் புதிதாய் இனி பிறக்கத் தேவையில்லை.


===

கொள்ளையிலும் கொள்ளை பகல் கொள்ளை!


சென்னையில் உள்ள ஹோட்டல்களைப் போல் கொள்ளையடிக்கும் கும்பல் வேறு எந்த ஊரிலாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. நேற்று (15.08.2010) அன்று மாலை வடபழனி பேருந்து நிலையம் அருகே உள்ள நம்மவீடு வசந்த பவனுக்கு சென்றோம். மாஸ்டர் இல்லாததால் சில உணவு வகைகள் இல்லை என்றார்கள். ரவா தோசை கேட்டால் வீட்டில் செய்யும் மைதா தோசையை எண்ணை வழிய கொண்டுவந்து கொடுக்கிறார்கள். பூரி கேட்டல் அதுவும் அப்பளம் போல் இருக்கிறது ஆனால் மிகவும் சிறிய வடிவில்!. விலை என்னவோ 35 ரூபாய், 40 ரூபாய் என்று பட்டப் பகல் கொள்ளை. புகார் அளிக்கலாம் என்று மேனேஜரைப் பார்க்கச் சென்றால் அவர் இல்லையாம்! வெறும் சேர் டேபிள்தான்.

இங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களுமே இப்படித்தான். அட பணத்தை வாங்குகிறீர்களே அதற்கு ஒழுங்காக ஏதாவது போடவேண்டாமா? இப்படி வரும் பணம் உங்களிடத்தில் நிலைக்குமா? எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். இன்றைய தேதியில் சென்னையில் ஓட்டலுக்குச் செல்லும் அனைவரின் மனமும் இப்படித்தான் சாபமிடும். இதை உணர்ந்து திருந்துவார்களா??

Monday, August 9, 2010

புதியது: இளையபல்லவன்.காம்

என் இனிய வலையுலக மக்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆகஸ்டு 9ம் நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க.

Welcome to the new http://www.ilayapallavan.com


தொட்டணைத்தூறும் மணற்கேணி என்றார் திருவள்ளுவர். எவ்வளவு எடுக்கின்றோமோ அவ்வளவும் சுரக்கும். கடந்த சிலமாதங்களாகவே என் அறிவின் ஊற்று தூர்க்கப்படாமல் மூடிவிட்டது! இப்போதுதான் தூர் வாரிக்கொண்டிருக்கிறேன்.

இதை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டும், மீண்டும் எழுத வரும் ஒரு முயற்சியின் முதற்கட்டமாகவும், என் வலைத்தளத்தை பிளாக்கரிலிருந்து, டாட் காம் ஆக மாற்றியிருக்கிறேன். டாட் காமிற்கு மாற்ற செலவு செய்துவிட்டதால் அதற்காகவாவது எழுதுவேன் என்று நினைக்கிறேன் (கணக்காளன் அல்லவா !)

என் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் டெம்ப்ளேட் முதலியவைகளை மாற்றியமைத்துத்தருவதாகக் கூறியிருக்கிறார். ஆக சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து உங்கள் முன்னால் வருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இளையபல்லவனின் காஞ்சித்தலைவன் தளம்.


மீண்டும் வலையில் என் எழுத்துக்கள் நிறைய சிக்க வேண்டுமென்பதே என் அவா. தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!!

என்றும் மாறா நன்றிகளுடன்,
இளைய பல்லவன்.