Friday, January 29, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 22

அத்தியாயம் 22 : இவை போதாது.

கொல்லி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த மாலிக்கின் படைகளை நடத்தி வந்த ஜலாலுதீன், மாலிக்கிடமிருந்து ஒரு தகவலும் வராமல் போகவே என்ன செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். கொள்ளைக் கூட்டத்தின் கலவையாக அமைந்திருந்த அந்தப் படையினர் நீண்ட காலம் அமைதியாக இருந்து அறியாதவர்கள். அப்போதே அவர்களிடத்தில் சிறு சலசலப்பு ஏற்படத் துவங்கியிருந்தது.

ஆயினும் விஷயம் கைமீறிச் செல்வதற்குள் மாலிக் வந்து சேர்ந்தான். வந்தவன் முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குக் கோபத்தின் உச்சியில் இருந்ததைக் கண்ட ஜலாலுதீனுக்கு அவனை அண்டவும் அச்சமாக இருந்தது. மாலிக்கின் அழைப்பிற்காகக் காத்திருந்தவன் படைகளிடையே மாலிக்கின் வருகையை அறிவிக்கும் படி பணித்துவிட்டு, அவைகளை வரிசைப்படுத்தவும் உத்தரவிட்டான்.

ஜலாலுதீனின் இந்த ஏற்பாடுகள் மாலிக்கின் மனதை ஓரளவு சாந்தப்படுத்தின. அவனை அருகில் அழைத்து, "மிகச் சிறப்பாகப் படையை அழைத்து வந்திருக்கிறாய், ஜலாலுதீன். இத்தகைய முரட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எனக்கே சில காலம் பிடித்தது. உன்னிடத்தில் விரைவாக பணிந்துவிட்டார்கள்." என்றான்.

"எல்லாம் உங்கள் உத்தரவுப்படியே நடந்தது, ஹுசூர். தாங்கள் சொல்லியபடியே செய்ததால் ஒரு குறைவும் இல்லை. இனியும் உங்கள் ஹுக்குமிற்காகக் காத்திருக்கிறோம்." என்றான் பணிவுடன்.

"அச்சா. ஜலாலுதீன், நம்மைத் தக்காணத்திற்கு, சுல்தான் அனுப்பிய போது என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா"

"நிச்சயமாக ஹுசூர். அதை மறக்க முடியுமா. தக்ஷிண பாரதத்தின் முக்கியமாக மாபாரின் (மதுரையை மாபார் என்று அழைத்தனர் சுல்தானியர்கள். பின்னர் அதுவே திரிந்து மலபார் ஆனது) உயர்ந்த செல்வங்களைப் பற்றி தான் அறிந்தவற்றைக் கூறினார். அந்தப் பகுதி தன் ஆளுகைக்குட்பட்டு இருக்கவேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினார். அதற்கான தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர்கள். இறைவன் அந்த சந்தர்ப்பத்தையும் தங்களுக்குக் காட்டியுள்ளான்" என்று நிதானமாக அதே சமயத்தில் தீர்க்கமாக எடுத்துரைத்தான் ஜலாலுதீன்.

"அத்தகைய பெரும் பொறுப்பை எனக்கு அளித்ததன் காரணம் என்ன?" என்று வினவினான் ஜலாலுதீனின் அறிவைச் சோதிக்க எண்ணி.

"சுல்தானுக்காக முதலிலேயே தேவகிரியைப் பிடித்தீர்கள். அவர்களிடமிருந்து வரியையும் வசூலித்து வருகிறீர்கள். தக்காணம் தங்களுக்குத் தலைகீழ்ப்பாடம். சிறிய படையையும் வைத்துக் கொண்டு பெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளீர்கள். இவை போதாதா. உங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க"

"ம். ஆம். இவை போதாது. ஜலாலுதீன், இவை போதாதுதான்" என்றான் மாலிக் சற்று விரக்தியுடன்.

"ஹுசூர். மன்னிக்க வேண்டும். புரியவில்லை"

"ஜலாலுதீன். சுல்தானுக்கு மாபாரைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், தன்னிடம் இருக்கும் 4,75,000 வீரர்களையும் என்னுடன் அனுப்பியிருப்பார். அத்துணை பேர் இங்கு வந்திருந்தாலும், அவர்களால் இங்கே இருக்கும் செல்வத்தைக் கவர்ந்து செல்வது மிகக் கடினமான செயல். அவ்வளவு செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது. ஹும். நான் வந்து கவர்ந்து செல்வதென்பது, ஆற்று நீரை நாய் நக்கிக் குடிப்பது போன்றது. ஆனாலும் பரவாயில்லை. வந்ததற்குச் சிலவற்றைக் கவர்ந்து சென்று மீண்டும் வரவேண்டும் என்று சுல்தானிடம் கூறுவேன். அப்போது நீ தனியாக வர வேண்டியிருக்கலாம். ஆகவே, இந்தப் பகுதிகளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்."

"உத்தரவு ஹுசூர். இப்போது படை நடத்த அனுமதி உண்டா."

"படையெடுப்பை மேற்கொண்டு நடத்துவது, மதுரையில் பாண்டியப் படையின் நிலையைப் பொறுத்தது. அருகில் உறையூரில் வந்து இறங்கியிருக்கும் வல்லாளனைச் சந்திக்க வேண்டும். அவன் நிலை என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பாவம். என்னை நன்றாக நம்பிவிட்டான் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், தன் தலை நகரை நிர்க்கதியாக விட்டுவிட்டு வந்திருப்பானா. இந்தப் படையெடுப்பை முடித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்று, துவாரசமுத்திரத்தைத் தாக்க வேண்டும். ஆகவே, நமது படைகளில் குதிரைப் படையையும், மங்கோலிய வில்லாளிகளையும் இப்போதே பிரித்துவிடு. துவார சமுத்திரத்தை நீதான் தாக்க வேண்டும். அது உன் பயிற்சிக் களமாக இருக்கும். புரிந்ததா." என்று கூறி நிறுத்தினான் மாலிக்.

"அவ்வாறே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றான் பலமாகத் தலையைத் தாழ்த்தி.

"இன்ஷா அல்லாஹ். இப்போதைக்கு படையைப் பிரிப்பதற்குக் காரணம், வியூகம் அமைப்பதுதான் என்று சொல்லிவிடு. துவார சமுத்திரத்தைத் தாக்கும் திட்டம் மிக ரகசியமாக இருக்கட்டும். மீண்டும் மாலைத் தொழுகைக்குப் பின் என்னை வந்து பார்." என்று அவனை அனுப்பினான்.

=====

தென்னிந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என்று கூறுவர். ஆனால் மாலிக் கஃபூர் படையெடுத்து வந்து தமிழகச் செல்வங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி அவ்வளவாக பாராட்டப்படுவது கிடையாது. களப்பிரர்கள் சில நூற்றாண்டுகளில் செய்த செயல்களை மாலிக் ஒரு சில மாதங்களிலேயே செய்ய முற்பட்டான். அதில் வெற்றி பெற்றானா? அவன் எண்ணம் ஈடேறியதா? மாபார் சுல்தானின் ராஜ்ஜியத்தில் இணைந்ததா?.

(தொடரும்...)

Thursday, January 21, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 21

அத்தியாயம் 21 - உன்னுடன் சேர்ந்து போராட.

ஹொய்சளத் தலை நகர் தொரசமுத்திரத்தை நோக்கித் தனக்கு அளிக்கப்பட்ட படைகளுடன் புறப்பட்ட ஆதவனுக்கு, வல்லாளனே நேரில் வந்து வழியனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புறப்படும் முன், வல்லாளனின் கால்களில் விழுந்து ஆசி பெற வந்த ஆதவனைத் தடுத்து நிறுத்திய வல்லாளன்,

'ஆதவா, ஒரு நாட்டிற்குத் தலை நகரம் முக்கியமானது. என் கவனக் குறைவால் அதைப் போதிய பாதுகாப்பின்றி விட்டுவிட்டேன். அங்கே முக்கியமாக, ஹொய்சள வம்சத்தின் வாரிசு, என் மகன் இருக்கிறான். என்னைப் பற்றிய கவலை இல்லை. ஆனால் என்னுடன் ஹொய்சள வம்சம் முடிந்து விட்டதாக ஏற்படக்கூடாது. ஆகவே உன்னை அங்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம், என் மகனைக் கண்ணின் இமை போல் காத்துவர வேண்டும் என்பதுதான். அப்படியே கோட்டையையும் பலப்படுத்த வேண்டும். உன்னால் நிச்சயம் முடியும் என்று நம்பியே இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். அரசியாருக்கு ஒரு ஓலை தருகிறேன். அவர்கள் சொல்படியும் கேட்டு நடந்து கொள். வெற்றி உனதே போய்வா. இங்கிருந்து அவ்வப்போது ஓலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதே போன்று அங்கிருந்தும் எனக்குச் செய்திகள் வர வேண்டும்." என்று மிக சுருக்கமாக எடுத்துரைத்தான்.

இதைப் போன்று ஏதாவது இருக்கும் என்று நினைத்த ஆதவனும், அரசனின் உத்தரவைப்பெற்ற உடன், தனது படைகளை நடத்தத் துவங்கினான்.

=====

மதுரையைப் போர் மேகங்கள் சூழ்ந்திருக்க, அங்கே அரண்மனையில் அமைதியின்றி அமர்ந்திருந்த சுந்தர பாண்டியனுக்கு விக்ரம பாண்டியர் ஒரு தூது அனுப்பியிருந்தார். அவனைத் தனியாகச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் உள்ள நிலையில் விக்ரம பாண்டியரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் சுந்தர பாண்டியனை ஆட்கொண்டது. நீண்ட சிந்தனைக்குப் பின், விக்ரம பாண்டியரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தான்.

மதுரைக்கு வடமேற்கே தஞ்சை செல்லும் பெரு வழியில் அமைந்திருந்த ஒரு சத்திரத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

"சுந்தரா நலமா"

"நாடு உள்ள நிலையில் நல்ல கேள்வி." சுந்தரனின் பதிலில் வேதனை மிகுந்திருந்தது.

"சுந்தரா, அது நம் மனதைப் பொறுத்தது. எந்த நிலையிலும் நம்மை நாம் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எதிர்ப்பார்ப்பிற்கும், அதனால் ஏற்படும் ஏமாற்றத்திற்கும், நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாகாது. இது உனக்குத் தெரியாததா" குரலில் சற்று கனிவும், கண்டிப்பும் கூட்டிப் பேசினார் விக்ரம பாண்டியர்.

"மாமா, தங்கள் அறிவும், அனுபவமும் என்னை விட வீரபாண்டியனுக்கே அதிகம் பயன் படும் போது, எனக்குக் குறைவாகத் தெரிந்திருப்பதில் வியப்பில்லையல்லவா?"

"சுந்தரா, என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவருமே சமம் தான். உங்களுக்கு மேலாக இந்தப் பாண்டியப் பேரரசைப் பேணிக்காப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்பொழுது, வீர பாண்டியனுடன் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவ்வளவுதான். கூடிய விரைவில் உன்னுடனும் இருப்பேன். என்னை நீ நம்பலாம்"

"நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கிறேன். சரி. என்ன விஷயமாக வரச்சொல்லியிருந்தீர்கள்"

"நம்பிக்கைக்கு நன்றி சுந்தரா. ஒன்றை நன்றாக நினைவில் கொள். விக்ரம பாண்டியன் ஒரு போதும், பாண்டிய மண்ணிற்கோ, மன்னர்களுக்கோ துரோகம் செய்யமாட்டான். சரி விஷயத்திற்கு வருவோம். மதுரைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அறிவாயல்லவா?"

"ம். மதுரையை நோக்கித் திரிசூலம் குறிவைக்கப்பட்டிருக்கிறது." சுந்தர பாண்டியனின் பதிலில் அவனது இயலாமை வெளிப்பட்டது.

"அல்ல. திரிசூலம் அல்ல. ஒரு வேல், அதனுடன் ஒரு வால். அவ்வளவுதான்" என்றார் நகைச் சுவையாக.

"என்ன வேலும் வாலுமா."

"ஆம். வேல், மாலிக் கஃபூரைக் குறிக்கும். அவன் அடியொற்றி வந்த வல்லாளனைத்தான் வால் என்று அழைத்தேன். மாலிக் கஃபூர் மதுரையைத் தாக்கும் போது தானும் இடையில் புகுந்து பழைய கணக்கைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான் வல்லாளன். ஆனால் அந்த வேலையும் முறியடிக்க வேண்டும். வாலையும் நறுக்க வேண்டும்."

"அப்படியென்றால் வீர பாண்டியனின் படை?" சுந்தரனின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

விக்ரம பாண்டியரது உதட்டில் புன் முறுவல் மிகுந்தது. மிகுந்த நிதானத்துடனும், மெதுவாகவும் சொன்னார், அவனுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம். "ஆம். அது, உன்னுடன் சேர்ந்து போராட"

சுந்தர பாண்டியன் மயக்கமுறும் நிலையை எய்தினான். சற்றுத் தெளிந்தபின் விவரமாகக் கூறுமாறு விக்ரம பாண்டியரைக் கேட்டுக்கொண்டான். அவ்வாறே விக்ரம் பாண்டியர் அவரது வியூகத்தைப் பற்றி எடுத்துரைக்க, சுந்தர பாண்டியனது முகத்தில் பரவசம் கூடியது.

ஆனால் மாலிக் கஃபூர் அதுவரை வாளாவிருக்கவில்லை. இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே துவக்கிவிட்டான் அவனது ஆட்டத்தை.

(தொடரும்)

Friday, January 15, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 20

அத்தியாயம் 20 - வல்லாளனின் தெளிவு

தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கியிருந்த வீரபாண்டியனின் படைத்தளத்தில் அமைந்திருந்த ஒரு கூடாரத்தில் வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர் மற்றும் இளவழுதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேற்கொண்டு படை நடத்த வேண்டியதைப் பற்றி விவாதிப்பதற்காகவே அவர்கள் அங்கே அமர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.

"விக்ரம பாண்டியரே, நாம் இங்கே வந்து சற்றேறக்குறைய ஒரு வாரம் ஆகிவிட்டது. கொல்லி மலை வில்லவர்களும் வந்து சேர்ந்து விட்டனர். நமது படைகள் மதுரையை நோக்கி உடனே புறப்படுவது நல்லது. இல்லாவிட்டால் படை வீரர்களிடத்தில் சோம்பலும் உற்சாகக் குறைவும் தோன்றிவிடும்" என்றார் மாராயர்.

"மாராயரே, அதை உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் நாம் மதுரையை அடையும் போது மாலிக் கஃபூரின் படைகளும் அங்கே வந்து சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சுந்தரன் நம்மைத் தாக்குவதா அல்லது மாலிக்கஃபூரைத் தாக்குவதா என்று புரியாமல் குழப்பமடைவான். ஆகவே மாலிக்கின் படைகளின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அங்கிருந்து தக்க செய்தி வந்தவுடன் நம் புறப்பட்டுவிடலாம்." விக்ரமரின் பதிலில் இருந்த தந்திரம், மாராயரை அமைதிப்படுத்தியது.

=====

உறையூரின் அருகே தண்டு இறங்கியிருந்த ஹொய்சளப்படைகளைப் பார்வையிட்டபடியே அவற்றின் ஊடாக நடந்து சென்ற குவலாலா கோட்டைத் தலைவன் ஆதவனுக்கு இந்தப் படையெடுப்பிற்கான காரணம் முற்றிலும் விளங்கவில்லை. இதை ஒருசில உப தளபதிகளும் வாய்விட்டு கேட்கவே செய்தனர். அவர்களையெல்லாம் மன்னர் உத்தரவு என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்கியாயிற்று. ஹொய்சளத்தின் ப்ரதான படைகள் இங்கே வந்து விட தேசம் நிர்க்கதியாக இருக்கிறதே என்ற கவலை ஏற்பட்டது அவனுக்கு. நாற்புறமும் பகைவர் இருக்க, அனைத்துப் படைகளையும் தெற்கு நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஓலை மூலம் தெரிவித்திருந்த மன்னரும் வந்து சேரவில்லை. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இங்கே அமைதியாக அமர்ந்திருப்பது? வந்த வேகத்தில் நேராக மதுரை மீது இறங்கியிருந்தால் இந்நேரம் மதுரைக் கோட்டையில் ஹொய்சளர்களின் கொடி பறந்திருக்கும். இந்த மாதண்ட நாயகம் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் இருக்கிறாரே ஒழிய ஒரு உத்தரவும் தருவதில்லை. ம்ஹூம். ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லையே. இது எங்கே கொண்டு போய் விடும்? தாயே ஹொய்சளர்களைக் காப்பாற்று என்று குவலாலாவின் காவல் தெய்வம், துர்க்கையை மனதார வேண்டிக் கொண்டான்.

அந்த வேண்டுதலை குவலாலா கோலாரம்மன் காதில் விழுந்திருக்க வேண்டும். அன்று மாலையே ஹொய்சள மன்னன் வல்லாளன் அந்த படைத்தளத்திற்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் முகத்தில் உற்சாகம் சிறிதளவும் இல்லை. வந்தவுடன் ஸ்நானபானங்களைக் கூட கவனிக்காமல், மாதண்ட நாயகத்துடன் தனியாக ஆலோசனையில் இறங்கி விட்டான். சற்றேறக்குறைய நான்கு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு வெளிப்போந்த மாதண்ட நாயகத்தின் முகத்திலும் ஈயாடவில்லை. எதற்கும் அசைந்து கொடுக்காத மாதண்ட நாயகத்தையே ஆட்டம் காண வைத்த செய்தி என்னவாக இருக்கும் என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் ஆதவனுக்குப் புலப்படவில்லை. எனினும் அவராகவே சொல்லட்டுமென்று விட்டுவிட்டான்.

அடுத்த நாள் காலை அவனை அழைத்த மாதண்ட நாயகம், மன்னனின் பாசறைக்குச் செல்ல வேண்டுமென்று கூறி அழைத்துச் சென்றார். அங்கே கவலையின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான் வல்லாளன். இரவு உறங்கச் செல்லவில்லை என்பதற்கு அறிகுறியாக அவனது பாசறையில் இடப்பட்டிருந்த மஞ்சம் கலையாமல் இருந்தது. இதற்கு முன் பல முறை வல்லாளனைப் பார்த்திருக்கிறான் ஆதவன். வல்லாளன் எந்த நிலையிலும் கலங்காதவன் என்ற பெயரைப் பெற்றிருந்தான். அப்படிப்பட்டவனும் இவ்வளவு கலங்கியிருக்கிறானென்றால், மாதண்ட நாயகம் நேற்று அவ்வாறு இருந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைத்துக் கொண்டான். மேற்கொண்டு அரசரோ, மாதண்ட நாயகமோ பேசட்டுமென்று வாளாவிருந்தான்.

வந்து சிறிது நேரமாகியும், மன்னன் தங்கள் பக்கம் திரும்பாதிருக்கவே, சற்று தொண்டையைக் கனைத்து அரசனது கவனத்தைத் திருப்பப்பார்த்தார் மாதண்ட நாயகம். அதில் வெற்றியும் பெற்றார். இவர்கள் பக்கம் திரும்பிய வல்லாளன், ஆதவன் மீது கண்களை நன்றாக ஓட்டினான். அது ஆதவனை என்னவோ செய்தது. வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டான். அந்த செய்கை வல்லாளனின் முகத்தில் புன்முறுவலை வரவழைத்தது.

"நாயகரே, இவன் நமது திட்டத்தை சரியாக நிறைவேற்றுவானா? இப்படி வெட்கத்தில் வளைந்து நிற்கிறானே?" என்று கேட்டான் வல்லாளன். தொடர்ந்து சிறு சிரிப்பும் வெளிவந்தது அவன் வாயிலிருந்து.

"அரசே, தங்கள் முகத்தில் இந்த மந்தகாசத்தை உண்டாக்கியவன் நிச்சயம் நம் திட்டத்தை நன்றாக நிறைவேற்றுவான். குவலாலாவிலிருந்து உறையூருக்குப் படைகளை நகர்த்திய விதத்திலேயே இவன் திறமையைக் கண்டுபிடித்துவிட்டேன். குவலாலாவில் இப்போது பெரிய படைகள் இல்லாவிட்டாலும், அதை யாராலும் உடனே பிடித்து விட முடியாது. அப்படிப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறான்."

"நல்லது. ஆதவா, உன்னை இங்கே அழைத்ததன் காரணத்தை மாதண்ட நாயகம் விளக்கினாரா?"

"இல்லை அரசே, நேராகத் தங்களிடம் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்" என்றான் ஆதவன் பணிவுடன். அவனிடமிருந்த வெட்கம் சற்று விலகியிருந்தது.

"ம். இந்தப் படையெடுப்பு சில பல ஊகங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த ஊகங்கள் தவறாகலாம் என்ற நிலை இப்போது இருப்பதாகப் படுகிறது எனக்கு. மாதண்ட நாயகமும் அப்படியே நினைக்கிறார். இந்நிலையில் நமது திட்டத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே நாம் இங்கிருந்து ஒரு பிரிவுப் படையை நகர்த்திக் கொண்டு மீண்டும் தொரசமுத்திரத்திற்கே செல்லவேண்டும். இங்கிருக்கும் மற்றொரு பிரிவு மதுரையைத் தாக்க வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால், யார் தொரசமுத்திரத்திற்குச் செல்வது என்பதுதான். நான் இங்கே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. நீண்ட நாட்களாகத் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று பாண்டியர்களிடம் உள்ளது. ஆகவே தொரசமுத்திரத்திற்குச் செல்லும் படைக்கு உன்னைத் தளபதியாக நியமிக்கலாம் என்று மாதண்ட நாயகம் கருதுகிறார். உனக்குச் சம்மதமா?" என்று சுருக்கமாக எடுத்துரைத்தான் வல்லாளன.

ஆதவனுக்குக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. குவலாலாவின் கோட்டைப் பொறுப்பையே இப்போதுதான் ஏற்றுக்கொண்டிருந்தான். அப்படியிருக்க உடனடியாகப் படைப்பிரிவிற்குத் தளபதியென்றால் என்ன ஆவது? அந்தப் படையில் இருக்கும் மற்ற உபதளபதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா? நம்மால் முடிகிற காரியமா? என்ற பல்வேறு கேள்விகள் அவன் மனதில் கணப்பொழுதில் எழுந்தன. அதனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. ஆனால் மாதண்ட நாயகம் விடுவதாக இல்லை.

"அரசே, மவுனமாக இருப்பதிலிருந்தே அவனுக்குச் சம்மதம் என்று தெரிகிறதே. இனி தாமதப் படுத்தாமல் படையைப் பிரித்து வடக்கே நடத்த வேண்டியதுத்தான். இம்முறை ராஜபாட்டையிலேயே செல்லலாம்." என்றார் மாதண்ட நாயகம்.

"சரி, நீங்கள் சென்று என் உத்தரவை அனைத்து உபதளபதிகளுக்கும் தெரியப்படுத்துங்கள். நான் சற்று நேரம் ஆதவனுடன் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது" என்ற வல்லாளன் மாதண்ட நாயகத்தை வெளியேற்றிவிட்டு, ஆதவனை அருகில் அழைத்தான். மாதண்ட நாயகம் வெளியே சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, தன் உடையிலிருந்து ஒரு வரைபடத்தை எடுத்து வைத்தான். அது தக்ஷிணபாரதத்தின் படம் என்பது தெள்ளென விளங்கியது ஆதவனுக்கு. மேற்கொண்டு அரசன் பேசுவதற்காகக் காத்திருந்தான்.

"ஆதவா, இந்தப் படத்தை நன்றாகப் பார். இது தக்ஷிண பாரதத்தின் படம் என்பது உனக்குப் புரிந்திருக்கும். நாம் உறையூரில் இருக்கிறோம். இங்கிருந்து நேர் தெற்கே மதுரை இருக்கிறது. சற்றுத் தள்ளி வடமேற்கில் கொல்லி மலை அடிவாரத்தில் மாலிக் கஃபூரின் படைகள் இருக்கின்றன. கிழக்கே தஞ்சைக்கருகில், வீரபாண்டியனின் படைகள் இருக்கின்றன. இந்தப் படைகள் மூன்றும் மதுரையை நோக்கி இருக்கின்றன. வேகமாக வந்து சேர்ந்த இந்தப் படைகள் அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காக மதுரையைத் தாக்காமல் கடந்த ஒரு வார காலமாக நின்று கொண்டிருக்கின்றன. இதன் காரணம் என்னவென்று உன்னால் ஊகிக்க முடிகிறதா?" என்று வினவினான் வல்லாளன்.

"இந்தப் படைகள் எதிர்ப்பார்த்து வந்த ஒரு நிகழ்வு இன்னும் நடக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை தேங்கி நிற்க எந்த ஒரு காரணமும் இல்லை"

"நன்று ஆதவா. நன்று. இந்தப் படையெடுப்பின் பின் புலத்தை நீ அறிய வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர்கள் ஹொய்சளர்களை கண்ணூர் கொப்பத்திலிருந்து விரட்டியடித்தனர். கண்ணூர்க்கொப்பம், ஹொய்சளர்களின் தமிழகத் தலை நகரம். அதன் பிறகுதான் நாம் குவலாலாவை பலப்படுத்தினோம். இப்போது குவலாலா ஹொய்சளர்களின் எல்லையாக விளங்குகிறது. கண்ணூர்க்கொப்பத்தை மீட்டெடுப்பது மட்டுமின்றி மதுரையையும் அழிப்பதே என் படையெடுப்பின் முக்கிய நோக்கம். இதன் காரணமாக மாலிக் கஃபூரையும் நான் சந்தித்தேன். அவனையும் துணைக்கழைத்தேன். அவனும் ஒப்புக்கொண்டான். அவ்வாறே அவனது படைகளையும் கொல்லிமலைக்கருகில் நிறுத்தியிருக்கிறான்."

"திட்டப்படி சரியாகத்தான் இருக்கிறது. இனி தாமதமின்றி மதுரையைத் தாக்கலாமே."

"அப்படித்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் மாலிக் கஃபூரின் சூழ்ச்சியும் வஞ்சகமும் இப்போதுதான் புரிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறான். ஹொய்சளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே உள்ள பகையைப் பயன் படுத்தி இருவரையும் அழித்து அவன் பயன் பெற நினைக்கிறான். அவன் விரித்த வலையில் தக்ஷிண பாரதம் முழுவதும் விழுந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஆனால் ஹொய்சளர்களை அவ்வளவு எளிதில் அவனால் அழித்துவிட முடியாது. எனக்கு உதவுவதாகச் சொன்னது போல் சுந்தர பாண்டியனிடமும் சொல்லியிருக்கிறான். அதனால்தான் சுந்தர பாண்டியன் யாரையும் முன்னேறித் தாக்கவில்லை. மாலிக் கஃபூரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இதன் படி, மாலிக் நம்மையும் பாண்டியரையும் மோதவிட்டு இடையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வழியில் தொரசமுத்திரத்தையும் அழித்துவிட்டு மீண்டும் தில்லி திரும்பத் திட்டமிட்டுள்ளான். தொரசமுத்திரத்தைத் தாக்க மாட்டேன் என்று என்னிடம் கூறிய உறுதிமொழியை உடைப்பதாக முடிவெடுத்துவிட்டான். அவனை நம்பியது என் தவறுதான். அதற்கான பரிகாரம் தேட வேண்டியதும் என் பொறுப்பு. ஆகவே நான் இங்கிருந்து மாலிக் கஃபூரையும், சுந்தர பாண்டியனையும் கவனித்துக்கொள்கிறேன். நீ தொரசமுத்திரத்திற்குச் சென்று அதன் பாதுகாப்பை கவனித்துக்கொள். இங்கே போர் முடிந்தவுடன் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன். இனி நாம் படைத்தளத்திற்குச் சென்று தொரசமுத்திரம் செல்ல வேண்டிய படைகளைப் பிரித்தெடுப்போம்" என்று சொல்லி வேகமாக வெளியே சென்றான் வல்லாளன்.

ஆதவனுக்கு அது அரசனின் ஆணை என்று புரிந்தது. இனி எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியவாறு அரசனைத் தொடர்ந்து சென்றான்.

(தொடரும்)

Friday, January 8, 2010

ஊட்ல சொல்னு வன்ட்டியா. (தமிழ் மொழியாக்கம்)

மிக முக்கியமான பதிவு சென்னையின் சிங்காரத் தமிழில் எழுதியதால் பெரும்பாலானோருக்குப் புரியாமல் போய் விட்டது :(. ஆகவே இதை அனைவரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் தூயதமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். வருக. பயன் பெறுக.

வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்களா?

இங்கே அமர்ந்திருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலம். நீங்களனைவரும் நலமா? என்னைப் பேச அழைத்த அன்பின் சகோதரர் நான் ஆதவன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புத்தாண்டின் முதல் தேதியிலிருந்து இன்று வரை (பதிவு எழுதப்பட்டது 07.01.2010 அன்று) ஏதோ கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்களாம். அதன் பெயர் சாலை பாதுகாப்பு வாரம் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றிப் பேசுவதற்குத்தான் வந்திருக்கிறேன். அதற்குப் பெயர்தான், வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்களா?

நீங்கள் எப்போதாவது சென்னைக்கு வந்திருக்கும் போது, தானியங்கியிலோ, மிதிவண்டியிலோ செல்லும் போது இந்த வாக்கியத்தைக் கேட்டிருக்கலாம். இதன் கூடவே சென்னைக்கே உரித்தான அருச்சனை மொழிகளான 'பேமானி, நாதாரி, கய்தே, கஸ்மாலம் (இவற்றுக்கெல்லாம் விளக்கம் சொல்ல ஒரு தனி பதிவுத் தொடர்தான் எழுத வேண்டும்!). போன்றவற்றையும் கேட்டிருக்கலாம். நாங்களெல்லாம் பேசத்துவங்கினாலே இந்தவிதமான வார்த்தைகள் தானாக வந்துவிடும்.

உண்மையில் இப்படி கேட்பவர்கள்தான் தவறான பாதையில் வந்திருப்பார்கள். சென்னையில் நாம் முதலிலேயே மிகவும் சாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நம்மை நடுத்தெருவில் நிறுத்தி நாய்படாத பாடு படுத்திவிடுவார்கள். (பேஜார், காவாலி - விளக்கம் தனியாக). இப்படித்தான் ஒரு முறை, மாவா மனோகர் [மாவா என்பது அடைமொழி. சென்னையில் எல்லாருக்கும் ஒரு அடைமொழி உண்டு. டொமாரு குமாரு, பிளேடு பக்கிரி, செயின் செல்வம், என்பது போல். இந்த மனோகர் மாவா என்ற பொருளை வாயில் குதப்பிக்கொண்டே இருப்பான். அதனால் மாவா மனோகர். மாவா என்றால் பான் பராக் போன்ற ஒரு வஸ்து. அதை வாயின் உள் புறத்தில் உதட்டுக்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். ம்ம்முடியல..] என்னிடம் தன் கைவரிசையைக் காட்ட முயன்றான். நான் விட வில்லை. சாலையில் நான் செய்த செயல்களில் (ஊடு கட்னது) அவன் அரண்டுவிட்டான் (டகுலு பிகிலு ஊதிட்சி - இவை இரண்டும் நேர் மொழி மாற்றம் இல்லையென்றாலும் இந்த அளவுக்குத்தான் செய்ய முடிகிறது :( ). அதற்குப் பிறகு அவன் என் கண்ணிலேயே தென் படவில்லை. இன்னொரு இடத்தில் காஜா கபாலி (காஜா என்பது அடைமொழி - காஜா தைக்கும் பையன்). அட. சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறெங்கோ சென்று விட்டேன் போலிருக்கிறதே (போயினேகிறேன்போலகீதே).

அதாகப்பட்டது, என்ன சொல்ல வருகிறேன் என்றால், நாம் சாலையில் செல்லும் போது அது நமக்கே சொந்தமான ஒன்று என்று நினைத்துக்கொண்டு செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் வருகிறவர்களும் போகிறவர்களும், நம்மீது இடறிவிழ (உயுண்ட்டு - விழுந்துவிட்டு என்பதன் மரூஉ)வாய்ப்பிருக்கிறது. பிற்கு நம் வாழ்க்கைதான் வீணாகிவிடுமேயன்றி (பேஜார்) நம்மை இடறியவர்களுக்கு ஒன்றும் ஆகாது. அட அவர்களுக்கு என்ன ஆனால் நமக்கென்ன. முதலில் நாம் நம்மை சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (நம்ம லுங்கி கயலாம பாத்து நாஜுகா - நம் உடை கழண்டு விடாமல் நாசூக்காக என்பது நேர் மொழிமாற்றம். இங்கே உவமையாகக் கூறப்பட்டுள்ளதை அறிக). நாம் ஒழுங்காக (ஒயுங்கா) இருந்தால் வீட்டில் மனைவிமக்கள் (புள்ளகுட்டி) மகிழ்ச்சியுடன் (குஜாலா) இருப்பார்கள் என்பதை மனதில் நிறுத்தினால் எல்லாமே சரியாகிவிடும்.

பிறகு, தினம் முழுவதும் காவலர்கள் (டாணாகாரங்கோ) சாலையில் நின்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு இரு நிமிடம் நின்றாலே கண்கள் மது (சல்பேட்டா) உண்டதைப் போல் (அட்ச்சகணக்கா) சிவந்து விடுகிறது. அதுவும் வண்டி ஓட்டுனர்கள் செய்யும் தொல்லையால் ரத்த அழுத்தம் (டெம்பர்) நேராக (ஸ்டெய்ட்டா - ஸ்ட்ரெய்ட் என்பதன் மரூஉ) உச்சியில் (எல்லைசி - எல்.ஐ.சி கட்டிடம் சென்னையின் உயரமான கட்டிடம் என்பதால் உவமையாகக்காட்டப்பட்டு மருவியுள்ளதைக் கவனிக்க) ஏறிவிடுகிறது (அவர்களது துன்பத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும் என்பது இதன் சாரம்!). ஆகவே அவர்கள் நிற்கச்சொன்னால் நின்று போகச்சொன்னால் போய்க்கொண்டுமிருந்தால் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பிறகு (அப்பாலிக்கா, அப்றமேல்ட்டு ஆகியவற்றின் பொது அர்த்தம்), சிக்னல்களில் நீண்ட நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால் வண்டியின் எஞ்சினை ஓடவிட்டுக்கொண்டிருக்காமல் (டுர்ரு டுர்ரு .. வண்டியின் ஓசை) நிறுத்திவிட்டால், பெட்ரோல் செலவு மிச்சமாகிவிடும். (அய - அழ.)

இன்னொரு முக்கிய விஷயம் (சமாசாரம்). டாஸ்மாக்கில் மதுஅருந்திவிட்டு மயக்கமாக (கேரா) இருக்கும் போது (சொல்லோ என்ற வார்த்து போது என்ற அர்த்தத்தில் பயன்படும் போசொல்லோ - போகும் போது, வர்சொல்லோ - வரும்போது) வண்டி ஓட்டவே கூடாது. எடுத்தால் அவ்வளவுதான். நேராக மேலுலகம்தான் செல்வீர்கள். (கண்ணம்மா பேட்டையும், கிருட்டினாம்பேட்டையும் சென்னையின் மிக பிரபலமான மயானங்கள். இங்கே சூசகமாகச் சொல்லப்பயன்படுத்தப்பட்டிருக்கிறது) அது கூட நீங்களாகச் செல்லத்தேவையில்லை (போதாவல - போகத்தேவையில்லை என்பதன் திரிபு). அவர்களே தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் (பூடு - போய்விடு). அதனால் இந்த விஷயத்தில் மட்டும் அனைவரும் சாக்கிரதையாக (ஸ்ரிக்டா - ஸ்ட்ரிக்டாக) இருந்து கொள்ளுங்கள்.

இதைப் போன்ற சிந்தனைகள் (ரோஜன - யோசனை - சிந்தனை) எல்லாருக்கும் வந்துவிட்டால் எல்லோரும் சாலையில் ஒழுங்காக அவர்கள் பாதையைப் பார்த்துக்கொண்டு சென்று கொண்டே இருப்பார்கள். பிறகு, விபத்து (ஆஸ்டண்டு - ஆக்சிடெண்டின் சென்னைத்தமிழாக்கம்!) என்ற பேச்சே இருக்காது. இதுதான் நான் சொல்ல விழைந்தது.

அடுத்த முறை (தபா - தடவை என்பதன் திரிபு) சாலையில் செல்லும் போது யாராவது உங்களை முந்திச் சென்றால் (சைடு வாங்குனா) வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டாயா என்று கேட்பதை விட்டுவிட்டு (உட்டுட்டு - விட்டு விட்டு), என்ன நண்பரே (நைனா - அப்பா, ஆனால் அன்பாக அழைக்கும் சொல்), நலமா, வீட்டில் அனைவரும் நலமா, பிறகு என்ன சொல்லுங்கள்' என்று கேட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், முந்திச் சென்றவனுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?!.

நீங்கள் தலைவர் (தலிவரு - ரஜினிகாந்த் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!) சொன்னதைப்போல் (மேரி, மாரி, மாறி - போல்), ச்ச்சும்மா அதிருதுல்ல என்று கேட்டவாறே நம் தலையை தட்டிக் காண்பித்துவிட்டு (காம்சிட்டு) நம் வழியில் சந்தோஷமாக (ஜில்ப்பா) போய்க்கொண்டே இருக்கலாம்.

ஏதோ எனக்குத் தோன்றியது சொல்லிவிட்டேன். சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக இருந்தால் சொல்லுங்கள். என்னை மாற்றிக்கொள்கிறேன்.

வரட்டுமா???

(டிஸ்கி 1. : அப்பாடி.. நான் எழுதியதிலேயே மிக நீளமான பதிவு என்று நினைக்கிறேன்.
டிஸ்கி 2: இது கூட நன்றாக இருக்கிறதே. சென்னைத் தமிழ்ப்பதிவு ஒன்றும் அதற்கு நிகரான ஒரு தமிழ்ப்பதிவும் போட்டு விட்டால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!!)

Thursday, January 7, 2010

ஊட்ல சொல்னு வன்ட்டியா..

ஆ. குந்திகினுகீற அல்லா சனங்களுக்கும் வணக்கம்ப்பா. நா நல்லாகீறேன். நீங்கோ அல்லாரும் நல்லாகீறீங்களா. அப்பாலிக்கா நம்பள பேச கூப்ட நான் ஆதவரு அண்ணாத்தக்கி டாங்க்ஸ் சொல்லிக்கிறேன்.

புது வர்ச மொத தேதிலருந்து இன்னி வரிக்கும் ஏதோ கொண்டாடிகினு கீறாங்களாம்.அதும்பேரு 'சாலை பாதுகாப்பு வாரமின்னு சொல்றாங்கோ. அத்தபத்திதான் பேசற்துக்கு வந்துகீறேன். அதுக்கு பேர்தான் 'ஊட்ல சொல்னு வண்ட்டியா..'

நீங்கோ எப்பனா பட்ணத்துக்கு வந்திரிக்கசொல்லோ ஆட்டோல, ரிக்சால போசொல்லோ, இத்த கேட்டிரிப்பீங்கோ. இதுங்கூடவே, டேய்.. பேமானி, நாதாரி, கய்தே, கஸ்மாலம்னு கூட கேட்டிருப்பீங்கோ. நாங்கல்லாம் வாயதொறந்தாலே இதுலாம் ஆட்டமாடிகா வந்து உயுந்துடும்.

இதுல இன்னா கூத்துன்னா இதுமாரி கேக்றவன்தான் ராங்கா வந்துர்ப்பான். பட்ணத்துல மொதல்லயே உஜாராயிட்டம்னாக்கா அப்பாலிக்கா பேஜாராவதேவல. இல்லாங்காட்டி பஜார்லயே நிஜார உருவி சொம்மா பேஜார் பண்டுவானுங்கோ காவாலிப் பசங்கோ. அப்டித்தான், நம்ம மாவா மனோகரு ஒர் தபா எங்கைல ராங் காட்னான். உட்டனா நானு. ரோட்லயே ஊடு கட்னதுல அவனோட டகுலு பிகிலு ஊதிட்சி. அப்பாலிக்கா அவன் எங்கண்லயே மாட்ல. உன்னோருதபா, காஜா கபாலி இப்பிடிதான்...அட. ரூட் மாறி போயினேகிறம்போலகீதே..

அதாவுது இன்னா சொல்றன்னா, நாமோ ரோட்ல போசொல்லோ, அது நம்ம அப்பன் ஊட்டு ரோடுன்னு நென்சிகினே போகூடாது. அப்டி போனாக்கா ரோட்ல வற்ரவன்லாம் நம்ம மேல உயுந்து எயுந்து பூடுவான். அப்பாலிக்கா நம்ம பொயப்புதான் பேஜாரா பூடுமேகண்டி நம்ம மேல உயுரவனுக்கு ஒண்ணியும் ஆவாது. அட அவுனுக்கு எதுனா ஆனா இன்னா ஆவாட்டி நமக்கின்னா. மொதல்லோ நம்ம லுங்கி கயலாம பாத்து நாஜுகா இர்ந்துகுணம்பா. நாம ஒயுங்கா இர்ந்தா ஊட்ல புள்ள குட்டிங்கல்லாம் குஜாலா இர்க்குன்றத்த மன்சுல வச்சிகினா அல்லாமே ரைட்டாபூடும்பா..

அப்பாலிக்கா, இந்த டாணாகாரங்கல்லாம் ரோட்ல தெனம்பூறா நின்னுகினே இர்க்காங்கோ. நம்புளுக்கு ரெண்டு நிம்சம் நின்னாலே கண்ணுல்லாம் சல்பேட்டா அட்ச்ச கணக்கா செவுந்து பூடுது. அதுலயா இந்த வண்டிகாரனுங்கோ பண்ற கலாட்டால டெம்பர் ஸ்டெயிட்டா எல்லைசி மேலே ஏறி குந்திக்குது. அதுனால அவுங்க நிக்க சொன்னா நின்னு போ சொன்னா போயிகினே இருண்ட்டா டிராபிக் ஜாம்லா ஆவாதுன்றேன்.

அப்றமேல்ட்டு, சிக்னலாண்ட ரொம்ப நேரம் நிக்கறா மாரி ஆயிட்சின்னா டுர்ரு டுர்ருன்னு சவுண்டு குடுக்காதிக்கி வண்டிய ஆப் பண்டாக்கா, பெட்ரோலுக்கு துட்டு அயவேண்டியிர்க்காது.

உன்னோண்ணு ரொம்போ முக்கியமான சமாசாரம். டாஸ்மாக்ல சரக்கட்ச்சிட்டு கேரா இருக்கசொல்லோ வண்டியெடுக்கவே கூடாது. எட்த்தா அவ்ளோதான். நேரா கண்ணம்மா பேட்டயோ, கிஷ்ணாம்பேட்டயோதான். அது கூட நீ போதாவல. அவுங்களே தூக்கினு பூடுவானுங்கோ. அதுனால இந்த மேட்டர்ல மட்டும் அல்லாரு ரொம்ப ஸ்ரிக்டா இர்ந்துகுங்கோ.

இதே மாறி ரோஜனலாம் அல்லாருக்கும் வந்திட்சினா அல்லாரும் ரோட்ல ஒயுங்கா அவங்கவுங்கோ ரூட்ட பாத்துகினு ஸ்டெய்ட்டா போய்கினே இர்ப்பானுங்கோ. ஊட்ல சொல்னு வண்டியான்ற பேச்சே இல்லாமபூடுமே. அப்பாலிக்கா ஆஸ்டண்டுன்ற பேச்சே இர்க்காதே. இதாம்பா நா சொல்னும்னு வந்தது.

அட்த்த தபா ரோட்ல போசொல்லோ யாராது சைடு வாங்குனா 'ஊட்ல சொல்னு வண்ட்டியான்னு கேக்கற்த உட்டு 'இன்னா நைனா நல்லாகீறியா. ஊட்ல அல்லாரும் நல்லாகீறாங்களா. அப்பாலிக்கா இன்னா சொல்லுன்னு சொன்னேன்னு வச்சிக்கயேன், சைடுவாங்குனவனுக்கு எப்பிடி இர்க்கும் தெரிமா, தலிவரு சொன்னாமேரி 'ச்ச்ச்சும்மா அதிருதுல்ல' ந்னு நம்ம தலய தட்டிகாம்சிட்டு நம்ம ரூட்ல ஜில்ப்பா போய்கினே இருக்கலாம்.

ஏதோ எனக்கு தோண்ச்சி. அத்தல்லாம் சொல்ட்டேன். ரைட்டா இர்ந்தா எட்துக்குங்கோ. தப்பா இர்ந்திச்சின்னா சொல்லுங்கோ. என்னிய மாத்திக்கிறேன்.

வ்வ்வ்வர்ட்ட்டாஆஆ.

(சாலை பாதுகாப்பு வாரத்திற்கான சிறப்பு பேச்சாளர் திரு. இளையபல்லவன் வழங்கிய சிறப்புரையைப் படித்தீர்கள். உங்கள் மேலான கருத்துக்களையும், ஆதரவுகளையும் தெரிவியிங்கள். அவ்வப்போது அவரை சிறப்புப் பேச்சாளராக அழைக்கலாம்)

Wednesday, January 6, 2010

சக்கரவியூகம் - இரண்டாம் பாகம் . . . 19

அத்தியாயம் 19 - சுந்தர பாண்டியன் திட்டம்

தென்னகத்தின் வரலாற்றில், குறிப்பாகத் தமிழகத்தின் வரலாற்றில் ஏற்பட்ட முக்கியத் திருப்பம் மாலிக் கஃபூரின் மதுரைப் படையெடுப்பு. இந்தப் படையெடுப்பைப் பற்றி வரலாற்றில் பல்வேறு விதமான குறிப்புகள் காணப்படுகின்றன. அமீர் குஸ்ரூ என்பவர், சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே பகை இருந்ததென்றும் அதைப் பயன் படுத்திக்கொண்டு மாலிக் கஃபூர் மதுரை மீது படையெடுத்தான் என்றும் தெரிவிக்கிறார். இதை வன்மையாக மறுக்கின்றனர் தமிழக வரலாற்றாய்வாளர்கள். வீர பாண்டியனும் சுந்தர பாண்டியனும் தனித்தனியாக அரசாண்டு வந்தாலும் அவர்களிடையே பகையில்லையென்றும், ஒரே நேரத்தில் இருவரும் அரசாள்வது பாண்டிய குலத்தின் வழமையான ஒன்றேயென்றும் தெரிவிக்கின்றனர். சுந்தர பாண்டியன் தன் தந்தை மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்திருந்தான் என்றும், தன் தந்தையின் உடல் நலம் பெற வேண்டி கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இப்புதினத்தைப் புரிந்து கொள்ள மேலும் வலு சேர்க்கும்.

=====

இரவு நன்றாக மலர்ந்து விட்டாலும், மதுரை வீதிகளில் கூட்டம் குறையாததால் ஆங்காங்கே ஏற்றப்பட்ட பந்தங்களால் நகரம் ஜொலித்தது. நகருக்கு வடக்கே சில காத தூரத்தில் எதிரிப் படைகள் தண்டு இறங்கியிருந்த செய்தி நகர மக்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்திருந்தாலும், அதைப் பற்றி அவர்கள் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவர்களது வழக்கமான கோலாகலத்திற்கும் குறைவில்லை.

ஆனால், அதேநேரத்தில் அரண்மனையின் மாடத்தில் அமைதியின்றி நின்றிருந்தான் சுந்தர பாண்டியன். அவன் திட்டம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவன் மனதில் எழுந்தது. ஆதரவுக்கரம் நீட்ட தகுதியான யாரும் இல்லாத நிலையில் தான் இருப்பதாகப் பட்டது அவனுக்கு. மாலிக் கஃபூரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சென்ற ஆட்களும் இன்னும் திரும்பவில்லை. ஒரு நெடிய பெருமூச்சில் தன் மனதிலிருந்த பாரத்தைக் குறைக்கப்பார்த்தான். அது கூடியதே தவிர குறையவில்லை.

எதிரிப்படைகள் தளம் அமைத்து சற்றேறக்குறைய பதினைந்து தினங்கள் ஆகிவிட்டன. எந்நேரமும் அவை முன்னேறக்கூடும். அவனது படைகளும் போருக்கு ஆயத்தமாகவே இருந்தன. ஆனால் ஒரே சமயத்தில் மூன்று பேர் தாக்கினால் அவை சிதறிவிடும் அபாயம் இருந்தது. இந்த வீர பாண்டியனும் சமயம் பார்த்து மூக்கை நுழைக்கிறானே என்ற கோபம் அவனை வாட்டியது. முதலில் அவனைத்தான் தாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். மேலும் சில நாழிகைகள் கடந்தும் அடுத்து செய்யவேண்டிய செயல் என்னவென்பது முடிவெடுக்க முடியாததாக இருந்தது. மன பாரத்தை இறுதியில் மீனாட்சியம்மையின் பாதத்தில் வைத்துவிடவேண்டியதுதான் என்று எண்ணினான்.

====

மாலிக் கஃபூருக்குத் திடீரென மர்மக் காய்ச்சல் ஏற்படவே, திருமலைக் காட்டிலேயே சில காலம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் சாதாரண உடையிலேயே இருந்ததால் அவனை யாரும் அடையாளம் காண முடியவில்லை. அவ்வப்போது இசுலாமிய வீரர்கள் அந்தப் பகுதியில் உலாவுவதால் யாருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. எங்கே என்ன நடக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. மனதில் இருப்புக் கொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். அவனுக்கு வைத்தியம் பார்ப்பவர்களோ, அவனை எங்கும் வெளியில் செல்ல விடாமல், மயக்க மருந்தைக் கொடுத்து சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னரே அவன் உடல் நிலை தேறியது. அதுவரையில் சிகிச்சை போதுமென்று பலவந்தமாக அங்கிருந்து கிளம்பி காஞ்சி வழியாகப் பயணப்பட்டான்.

காஞ்சியில் அப்போது திருவாதிரைத் திருநாளும், வைணவத் தலங்களில் பகல் பத்து உற்சவங்களும் நடைபெற்று வந்தன. வழியில் தென் பட்ட கோவில்களில் நடந்த இந்த உற்சவங்களும், தெய்வத்திருமேனிகளின் வீதியுலாக்களும் அத்திருமேனியில் படர்ந்திருந்த விலைமதிப்பில்லாத ஆபரணங்களும் நவரத்தினங்களும் அவன் உள்ளக்கிடைக்கைக்குப் பெரிதும் தூபம் போட்டன. ஆனால் ஏதும் செய்யவியலாத கையறு நிலையில் இருந்தான். ஆஹா... வடக்கே இருக்கும் ஆலயங்களைக் கொள்ளையடித்து மார்தட்டிக் கொண்டார்களே, இங்கேயல்லவா அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. இருக்கட்டும் இருக்கட்டும், இவையனைத்தும் ஒரு நாளைக்கு என் வசமாகும். அப்போது பார்க்கிறேன் தில்லி பாதுஷாவை.. என்று மனதில் கறுவிக்கொண்டான்.

அப்படி நினைத்துக் கொண்டே அந்தப் பக்கமாக வந்த ஒரு சிவனாரின் தெய்வத்திருமேனி மீது அவன் கண்கள் படர்ந்தன. அவன் எண்ணத்தைக் கண்டு கொண்டதாக இருந்தது சிவனாரின் கொவ்வைச் செவ்வாயிலிருந்து வெளிப்பட்ட குமிழ் சிரிப்பு!!!.

(தொடரும்)