Monday, December 29, 2008

2008ல் வந்த தமிழ்ப் படங்கள் ?

இந்த படமெல்லாம் 2008ல வந்ததா சொல்றாங்க. உங்களுக்குத் தெரியுமா?



1. ஆறு மனமே

2. ஆட்ட நாயகன்

3. அயன்

4. ஆதிவாசியும் அதிசயப்பேசியும்

5. ஆனந்த தாண்டவம்

6. அசோகா

7. பலம்

8. இன்னொருவன்

9. ஜெயலக்ஷ்மி

10. கண்களும் கவிபாடுதே

11. குளிர்

12. காதலர் கதை

13. பார்க்கலாம் பழகலாம்

14. பொக்கிஷம்

15. புலி வருது

16. சரித்திரம்

17. சில நேரங்களில்

18. தங்கம்

19. தித்திக்கும் இளமை

20. தாவணி போட்ட தீபாவளி

21. திரு.கவுதம் எஸ்.எஸ்.எல்.சி

22. வாடா

23. வம்புசண்டை

24. வர்ணம்

25. வாழ்த்துக்கள்

26. வேள்வி

27. வள்ளுவன் வாசுகி

28. வசூல்

29. யாருக்கு யாரோ

30. என்னைத் தெரியுமா



இந்த முப்பதுல உங்களுக்கு எத்தனைப் படம் தெரியும்னும் எத்தனை படம் பாத்தீங்கன்னும் கொஞ்சம் சொன்னீங்கன்னா என்னுடைய சினிமா அறிவை வளத்துக்குவேன்.

Saturday, December 27, 2008

வரலாற்று கேள்வி-பதில்கள்

என்னுடைய சிறு முயற்சிக்கு முதல் ஆதரவுக்கரம் நீட்டி ஆதரித்த அன்பு அண்ணன் ஆதவன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் !)

இப்போது கேள்வி பதில்கள்

நான்-ஆதவன்
1. பிருத்திவிராஜ் மற்றும் சம்யுக்தா இவர்கள் காதல் கதையை கேட்டிருந்தாலும் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் காதல் கதையைப் பற்றி விளக்கவும். அவர்கள் கல்யாணம் செய்திருந்தால் ,அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸியமான சம்பவம் இருந்தாலும் தெரியப்படுத்தவும். (ஹி ஹி இது முதல் கேள்வியா, அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கட்டுமேன்னு :-)

ரொமான்டிக்காவே ஸ்டார்ட் பண்ணுவோம் சார். இவர்கள் காதல் கதை உண்மைதான். பெரும்பாலும் காணாமலே காதல் தான். ஆனால் வரைபடம் பார்த்து காதல். பிறகு களவுவழி காதல் (திருட்டுத்தனமாக சந்திப்பது). இது எப்படியோ சம்யுக்தாவின் தந்தைக்குத் தெரிந்து போய், சுயம்வரம் வைத்தவர் பிரிதிவிராஜுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் அவனைப் போல் சிலை ஒன்றை மண்டபத்தில் வைத்துவிடுகிறான். சிலைக்கு மாலையிடச் சென்ற சம்யுக்தா சிலைக்குப் பின் நின்ற பிரிதிவிராஜுக்கு மாலையிடுகிறாள். அவன் அப்படியே அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். இவ்வாறு கூறுகிறது 'ப்ரிதிவிராஜ் ரஸோ' என்ற பிரிதிவிராஜன் சரித்திரம்.

இவனது அவைப் புலவனும் நெருங்கிய நண்பனுமான சந்த் பர்தாய் என்பவன்தான்'ப்ரித்விராஜ் ரஸோ' என்ற இலக்கியத்தைப் படைத்தவன். இதை நம்மூர் கலிங்கத்துப் பரணி போன்று எடுத்துக் கொள்ளலாம். சம்யுக்தாவின் தந்தை ஜெய்சந்த். ஜெய்சந்தை டில்லிக்கு அரசனாக்காமல் பிரிதிவிராஜை அரசனாக்கியதில் ஜெய்சந்துக்கு முதலிலேயே ஏகப்பட்ட கடுப்பு. இப்போது மகளைக் கவர்ந்துவிட்டதில் அது இரட்டிப்பாகிவிட்டது.

வெறும் 24 வயது வரையே வாழ்ந்து மறைந்த காவியத் தலைவன் ப்ரிதிவிராஜ் சவுகான் என்னும் ப்ரிதிவிராஜ். ராஜ்புதன அரசர்களிலேயே இவனும் ராணா ப்ரதாப் சிங்கும் மிகப் பிரபலமானவர்கள். ப்ரிதிவிராஜ் டில்லியின் கடைசி வெற்றிகரமான ஹிந்து அரசன் என்று சொல்லலாம். இவனது தலை நகரம் டில்லி மற்றும் அஜ்மீர்.

பிரிதிவிராஜ் டில்லியை ஆண்ட போது பலப்பல தொல்லைகள் இருந்து வந்திருக்கின்றன. போரிடவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. திருமணத்திற்குப் பின் காதல் என்னவாயிற்று என்பதற்கான குறிப்புகள் குறைவே:((



2. காஷ்மீர் மக்களின் வரலாறு. முக்கியமாக எப்போது இருந்து அங்கு முஸ்ஸீம் இனத்தவர் வாழ்க்கின்றனர். அதற்கு முன் இருந்த மக்களை ஆண்டது யார். காஷ்மீர் பண்டித்துக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிந்தவற்றை விளக்கவும். (இந்த கேள்வி உண்மையில் எனக்கு காஷ்மீர் வரலாறு தெரியாத்தால் கேட்கப்பட்டது. தற்போதைய காசுமீர் நிலவரம் எனக்கு தெரியும் ஆனால் அதன் வரலாறு தெரியாது, பாடபுத்தகங்களில் படித்ததாகவும் ஞாபகம் இல்லை )

காஷ்மீர் பற்றிய முதல் குறிப்பு கல்ஹணர் என்பவர் எழுதிய 'ராஜதரங்கிணி' என்னும் சமஸ்கிருத வரலாற்று நூலில் கிடைக்கிறது. மவுரிய வம்சத்து அசோகர் ஆண்டபகுதியாக இருந்தது பின்னர் குஷாண வம்சத்திற்கு மாறியது. கனிஷ்கர் மிகப்ரபலமானவர். கி.பி.12ம் நூற்றாண்டுவரை தொடர்ந்த ஹிந்து அரசுகள் மற்ற இந்திய அரசுகளைப் போல் வீழ்ந்துவிட்டன.

பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த முஸ்லீம் அரசுகள் பெரும்பாலும் ஆஃப்கன், துருக்கிய, முகலாய அரசுகள்தான். மக்கள் முஸ்லீம்களாக மாறினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி சீக்கியர் வசமானது. லாஹூரிலிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார். பிறகு ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த போரில் இது ஆங்கிலேயர் வசமாகிவிட குலாப் சிங் என்பவர் ராவி நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் சிந்து நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதிகளையும் 1847ல் ரூ.75 லட்சத்திற்கு அவர்களிடமிருந்து வாங்கினார். பிறகு இவரது மகன் ரன்வீர் சிங் கில்கிட், ஹுன்ஸா, நகர் முதலிய பகுதிகளை இணைத்தார். இப்படியாக லடாக்கில் பௌத்தர்கள், காஷ்மீரில் முஸ்லீம்கள், ஜம்முவில் ஹிந்துக்கள் என காக்டெயில் நாடாக விளங்கியது காஷ்மீர். 1857க்குப் பிறகு ப்ரின்ஸ்லி ஸ்டேட் ஆக மாறியது. மொத்தத்தில் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள். அந்தந்தப் பகுதியில் மற்றவர்கள் மெஜாரிடி. காஷ்மீரில் பண்டிட்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் மைனாரிடிதான்.

இப்போது பண்டிட்டுகள் பெரும்பாலும் ஜம்முவிலும், டில்லியிலும் வாழ்வதாகத் தெரிகிறது. இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் உள் நாட்டில் புலம்பெயர்ந்தோர் என்பதை மறுக்க முடியாது. 1989க்குப் பிறகு கடந்த சில வருடங்களாக காஷ்மீரிலுள்ள சரஸ்வதி கோவிலுக்கு யாத்திரை சென்று வருகிறார்கள். மற்றபடி பண்டிட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் 'சர் நேம்' பெரும்பாலும் ஒன்றாக இருக்கும்.

தற்போதைய காஷ்மீர் நிலவரம் பற்றியும் இதன் பின்புலம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. தேவையெனில் அதைப் பற்றி தனிப் பதிவாகவோ கேள்விபதிலாகவோ போடலாம்.

===

நாஞ்சில் பிரதாப்
3.அக்பருக்கு ஆயிரம் பொண்டாட்டியாம்ல...உண்மையா???எப்படிங்க???


என்னங்க அக்பர் சக்ரவர்த்திய குறைவா மதிப்பிட்டுட்டீங்க!?. பொதுவா பாதுஷாக்கள்லாம் இதுல கணக்கே வச்சிக்கறதில்லையே. அதுவும் அக்பர் இதை ஒரு தந்திரமாகவே கையாண்டவராச்சே. கணக்கு சொல்றவங்க 300லருந்து 5000 வரைக்கும் சொல்றாங்க.

ஜலாலுதீன் அக்பர், மொகலாயப் பேரரசர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர். பல்வேறு கலைகள் தெரிந்தவர். ஒன்றைத் தவிர. அதாவது படிப்பு. எழுதப்படிக்கத் தெரியாதவர்.

ஹிந்துக்களைக் கவர நிறைய ராஜபுதன இளவரசிகளை மணந்தவர். எம்மதமும் சம்மதம் என்று மதத்திற்கு ஒரு முக்கிய அரசியை வைத்திருந்தார். இவையல்லாது போகும் போது வரும்போது பார்ப்பதையெல்லாம் அந்தப்புரத்தில் சேர்ப்பது பாதுஷாவுக்கு பொழுது போக்கு.

ஆகவே கணக்கு கேக்காதீங்க. உங்களுக்கு தோணின ஃபிகர (அதாவது நம்பர்) வச்சுக்கங்க ;-))


இவைதான் இந்த வார கேள்விகள். அடுத்த வார கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்.

கொ(நெ)டுஞ்சாலைகள்

நீங்கள் சென்னையிலிருந்து வடக்கில் ஆந்திரா செல்கிறவரா? வடமேற்கில் பெங்களூரு செல்கிறவரா? தெற்கில் திண்டிவனம் வரை செல்கிறவரா? இவற்றிற்கெல்லாம் ஆம் என்று பதில் சொன்னால் கையைக் கொடுங்கள். நீங்கள்தான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. தின்டிவனத்திற்குத் தெற்கே பயணப் பட்டவர்கள் சென்ற பிறப்பில் கழுதையைத் துன்புறுத்தியிருக்க வேண்டும். அவ்வளவு பாவத்தையும் சுமந்து கொண்டு கஷ்டப்படுவதைப் போன்ற கொடுமை நமது நெடுஞ்சாலைகளில் பயணிப்பது.

தங்க நாற்கரம் என்கிறார்கள். வடக்கு தெற்கு சிறப்புச்சாலை என்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழிப் பாதைகளாக்குகிறோம் என்கிறார்கள். ஆனால் நடப்பதெல்லாம் ஒன்றுதான். அது வாகனங்கள்தான்.

ஆம். வாகனங்கள் நமது நெடுஞ்சாலைகளில் நடக்கின்றன. ஓடவில்லை.

திருச்சி - சென்னை 330 கி.மீ. இதைக் கடக்க பேருந்துகள் எடுத்துக் கொள்ளும் நேரம் சர்வசாதாரணமாக பத்து முதல் பனிரெண்டு மணி நேரங்கள். அதாவது ஒரு மணிக்கு 30 கி.மீக்கும் குறைவான வேகம். இதுவும் அரசு விரைவுப் பேருந்தில்!.

கடந்த வியாழனன்று திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக வைத்தீஸ்வரன் கோவில் செல்ல நேரிட்டது. வழக்கமாக திருச்சியிலிருந்து கிளம்பினால் 45 நிமிடங்களில் சிற்றுந்தில் தஞ்சையை அடைந்துவிடலாம். ஆனால் அந்தோ பரிதாபம். இந்த முறை சற்றேறக்குறைய 2 மணி நேரங்களாயின. வழியெங்கும் நான்குவழிப்பாதையாக்குகிறோம் என்று சொல்லி 'லிடரல்லி' சாலையைக் குதறி வைத்திருந்தார்கள்.

இதே நிலைதான் மதுரை, திண்டுக்கல், கரூர் சாலைகளுக்கும். சேலம் சாலை இப்போதைக்கு நான்கு வழி அல்ல என்றாலும் அதுவும் குண்டும் குழியுமாகத் தான் இருக்கிறது.

மிகமிக அவலமான நிலையில் இருக்கின்றன தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள். ஆனால் தமிழக மாநில நெடுஞ்சாலைகள் பரவாயில்லை. நன்றாக போடப்பட்டுள்ளன. புதுப்புது அரசுப் பேருந்துகள் சிறப்பாக இயங்கும் நிலையில் இந்த மோசமான நெடுஞ்சாலைகளால் விரைவில் பணிமனை சேரும் அபாயம் உள்ளது.

அய்யா நெடுஞ்சாலைத் துறையினரே, நீங்கள் நான்கு வழிப்பாதை அமைப்பதைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள் போக்குவரத்திற்கான பாதையை நன்றாகப் பராமரிக்கலாம் அல்லவா? அதற்கு வரி வேறு செலுத்துகிறோமே. பாதை சரியில்லாததால் எவ்வளவு சிக்கல்கள். நட்டங்கள். எரிபொருள் வீணாக்கம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லையா?

என்றுதான் மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ?

எல்லாம் வல்ல இணையத்தின் கடவுளர்களான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனையும், பாடிகாட் முனீஸ்வரரையும், மலைக்கோட்டை மாணிக்க வினாயகரையும் வணங்கி வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

Wednesday, December 24, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...11

அத்தியாயம் 11 - மதுரை

பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்த மாநகர் மதுரையில் நாம் இருக்கிறோம். கருக்கலிலேயே வந்து விட்டதால் அவ்வளவு தெளிவாகக் காட்சிகள் தெரியவில்லை. சற்று நேரம் பொறுத்தால் விடிந்து விடுகிறது. வைகை சலசலத்தோடும் ஓசை மட்டுமே கேட்கிறது. கருக்கலாதலால் புள்ளினங்களும் உறங்கச் சென்றுவிட்டன. மரங்கள் அசையும் ஓசை கூட இல்லாதது அவையும் ஓய்வெடுக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வளவிலும் காவற்காரர்களின் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது. இயற்கை ஓய்ந்தாலும் மனிதனின் ஆசை ஓட்டம் ஓயாது என்பது போல் வைகையின் சலசலப்பும், காவற்காரர்களின் ஓசையும் காலைக் கருக்கலின் அந்தகாரத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தன. பெரும்பாலான மாளிகைகளிலும், இல்லங்களிலும் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தாலும், ஆங்காங்கே தெரிந்த ஒரு சில விளக்குகளின் வெளிச்சம் இருளை அதிகப்படுத்துவது போலிருந்தது.

அதோ கீழ்வானில் சுக்கிரன் தோன்றிவிட்டான். இனி வானம் சிவத்தால் வெளிச்சம் வந்துவிடும். வானத்தில் விடிவெள்ளி முளைத்து விட்டது. மதுரைக்கு?...

சற்றுத் தூரத்தில் இரண்டு பேர் நடந்து வருகிறார்ப்போல் தெரிகிறது. அவர்கள் அருகில் வர வர ஒருவர் ஆணென்றும் மற்றவர் பெண்ணென்றும் தெளிவாகிறது. ஆம். சந்தேகமே இல்லை. அவர்கள் வீரபாண்டியனும் கயல்விழியும். அட.. மதுரைக்கும் விடிவெள்ளியோ...

====

'கயல் விழி, இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். விடியலுக்குள் மதுரைக்குள் சென்று உன்னை என் மாமனின் இல்லத்தில் சேர்ப்பித்து விடுகிறேன். பிறகு நான் மீண்டும் நேர் வழியில் மதுரைக்கு வர வேண்டும்.'

'அன்பரே, இவ்வளவு தூரம் தங்களுடன் வந்தவள் இப்போது பிரிய வேண்டுமே என்று நினைக்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது'

'இரண்டு நாட்கள்தான் சேர்ந்திருந்தார்கள். அதற்குள்ளாகவே அவர்களின் தொடர்பு யுகயுகாந்திரமாய் தொடர்வதாய்ப் பட்டது. இடையே வீரபாண்டியன் நாம் இப்படியே எங்காவது சென்று விடலாமென்றும் அவளை அவன் காப்பாற்றுவதாகவும் தேசமே தேவையில்லை என்றும் உளறினான். அவள் தெளிவாக அவனை மதுரைக்கு அழைத்துவந்தாள். இங்கு அவன் தெளிவு பெற அவளிடத்தில் கலக்கம்.

அவளது வேதனையை அந்த இருட்டிலும் அவனால் பார்க்க முடிந்தது. உணர முடிந்தது. நெகிழ்ச்சியுடன், கரம் பற்றி அவளை அணைத்தான் ஆதரவாக.

'கயல்விழி, என்னை இங்கு அழைத்து வந்ததே நீதான். இப்போது நீ இப்படி சொன்னால் நான் தெளிவாக இருக்க முடியுமா? மிஞ்சிப் போனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள். நாம் மீண்டும் சந்திக்கப் போகிறோம். ஆகவே கவலையை விடு' என்றான்.

ஒருவழியாக அவளை சமாதானப் படுத்தி அவனது மாமன் விக்ரம பாண்டியன் மாளிகையில் சேர்ப்பித்ததுடன் மற்ற விஷயங்களைப் பற்றி அவள் சொல்வாளென்றும் அவளை அரண்மனைக்குள் எப்படியாவது சேர்த்துவிட வேண்டுமென்றும் மாமனிடம் கூறிவிட்டு வேகமாக மீண்டும் மதுரையை விட்டு வெளியேறினான்.

====

விடியலும் வந்தது. பொழுதும் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்ப்பரித்தன. மரத்திலிருந்து வெளிப்பட்டு மீண்டும் மரத்திற்குத் திரும்பியது உடற்பயிற்சி செய்தனவோ என்று எண்ணுமாறு இருந்தது. மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் ஆலய ஆலாட்சிமணி, காலைப் பூசைகள் துவங்கியதற்கான அறிகுறியாக ஒலித்தது. மக்களின் ஆரவாரமும் துவங்கியது.

இப்போது மதுரையை நன்றாகப் பார்க்க முடிகிறதே. வைகை ஒரு புறம் மதிலாக அமைந்த மதுரை மாநகர் வெகு தூரத்திற்கு வெகு தூரம் பரவியிருந்தது. தமிழகத்தின் தற்போதைய பேரரசின் தலை நகருக்குரிய அனைத்து லக்ஷணங்களும் பொருந்தியிருந்தது மதுரை நகரில். ஊரைக் கடந்து கோட்டையை அடைவதற்கே அரை நாழிகை பிடித்தது. வழியில் மக்களும், பொதி சுமந்த வாகனங்களும் பல்வேறு திக்குகளிலிருந்து வந்திருந்தன. கோட்டைக்கு வெளியே சந்தையும், பிற வியாபாரத் தலங்களும் இருந்தன. கோட்டையில் முத்தங்காடிகளும், பொற்கொல்லர்களும் இருந்தார்கள்.

ஒவ்வொரு நூறடிக்கும் வீரர்கள் அந்த அதிகாலையிலும் நின்று கொண்டிருந்தனர். மக்களை ப்ரதான வாயிலுக்குள் செல்ல விடாமல் வேறு வழியாகத் திருப்பி விட்டுக் கொண்டிருந்தனர். என்னேரத்திலும் பிடி இறுகும் வகையில் படை நிறுத்தப் பட்டிருந்தது. வேகமாக அரண்மனைக்குச் செல்லவேண்டுமென்ற அவாவில், வீர பாண்டியன் காலையில் கடைப்பிடித்த கவனத்தைத் தவறவிட்டான். நகரின் காவல் நிலையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனிக்க வில்லை.

ப்ரதான வாயிலை அடைந்தவுடன் தன் முகத்தில் பாதி மறைத்திருந்த மேலங்கியை நீக்கியபடி நின்றான். நடந்து வந்த அவனைக் கண்டதும் ஆச்சரியப் பட்ட கோட்டைக்காவலர்கள் வேகமாக வாயிலைத் திறக்க முற்பட்டனர். அங்கே ஒரு குதிரையை எடுத்துக் கொண்டு வேகமாக அரண்மனை நோக்கிச் சென்றான்.

அரண்மனையின் கம்பீரம் சொல்லமுடியாததாகவிருந்தது. பல்வேறு அடுக்குகளும் கட்டங்களுமாக அரண்மனை பிரிக்கப் பட்டிருந்தது. நன்கு அறிந்தவர்களே அந்த அரண்மனையில் துணையின்றி உலாவ முடியும். அரண்மனையின் அமைப்பைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது வீர பாண்டியன் நோய்வாய்ப்பட்டிருந்த குலசேகர பாண்டியனின் அறைக்கு விரைந்து சென்றான்.


குலசேகரர் சற்று தெளிவுடனே இருந்தார். மருத்துவர்கள் அந்தக் காலை நேரத்திலும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மகனைக் கண்டதும் வியப்பு மேலிட,

'வா வீரா. வருவதாகக் தகவலே இல்லையே. உன் படிப்பு முடிந்ததா?'

வீரபாண்டியனால் தந்தையின் நிலை கண்டு பேசவும் முடியவில்லை. அப்படியே அமர்ந்து விட்டான். சிறிது நேரம் கழித்தே அவர் கேட்டது அவனுக்கு உறைத்தது.

'தந்தையே இது என்ன? தங்கள் உடல் நிலை பற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லையே. என்னை ஒதுக்கிவிட்டீர்களா? இல்லை மறந்துவிட்டீர்களா?' என்று ஆவேசமாகவும் துக்கத்துடனும் கேட்டான்.

'வீரா, உன் கோபம் புரிகிறது. ஆனால் அதற்கு இது சமயமல்ல. நீ நேரடியாக இங்கு வந்திருக்கிறாய். என் நிலை ஒன்றும் அவ்வளவு க்ஷீணித்து விடவில்லை. ஆகவே ஸ்னான பானங்களை முடித்துக் கொண்டு இங்கு வா. உன் மாமன் விக்ரமனையும் வரச் சொல். சுந்தரனையும் வரச் சொல்லிவிடுகிறேன்.'

சுந்தரன் பெயரைக் கேட்டதுமே வீரனுக்கு இருப்புக் கொள்ள வில்லை. 'அவன் எதற்கு. அவனை சந்திக்க ....' என்று இழுத்தான்

'வீரா. நான் நோய்வாய்ப்பட்டாலும் சிலவிஷயங்கள் தெரிந்திருக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறேன். உனக்கும் அவனுக்கும் இருக்கும் பகையில் பாண்டிய நாடு அழிந்து படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் தந்தையும் உன் பாட்டனாரும் இந்த் ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கு பட்ட கஷ்டங்கள் வீணாகி விடக்கூடாது. ஆகவே அவற்றை மறந்து விடு. இதை அறிவுரையாக ஏற்காவிட்டால் என் ஆணையாகக் கொள்ளலாம். இனி நீ செல்லலாம்' என்றார்

ஏதோ சொல்ல வாயெடுத்த வீரன், குலசேகரரின் கண்ணசைவைக் கண்டு, தலையசைத்தான் பவ்யமாக. களமும் காலமும் கனிவாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான் அவர் கண்ணசைவில்.

====

குலசேகரரின் அந்தரங்க அறையில் அவர் படுக்கையருகே மூவர் அமர்ந்திருந்தனர். மருத்துவர்கள் அவரை அமரக்கூடாது என்று திட்டம் செய்து விட்டதால் அவர் படுக்கையிலேயே சாய்ந்த நிலையில் இருக்க வேண்டியதாகிவிட்டது. மற்றவர்கள் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அவர்கள் மாமன் விக்ரம பாண்டியனும்தான் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் தேவையில்லை.

அரசரே விவாதத்தைத் தொடங்குதல் மரபு என்பதால் அனைவரும் குலசேகரரின் குறிப்பறிந்து காத்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்ப்பதையும் தவிர்த்தனர். இதில் விக்ரம பாண்டியன் மத்திம வயதுடையவனாகக் காணப்பட்டான். பாண்டியர்களில் அரசுரிமையில்லாதோர் சிறு நில மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். அவ்வாறு தென் தமிழகத்தின் ஒரு பகுதியை விக்ரம பாண்டியன் ஆண்டு வந்தான். குல சேகரர் மற்ற உறவினர்களை விட விக்ரமன் மீதே அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவனும் அந்த நம்பிக்கைக்குப் பாத்திரனாகவே நடந்து கொண்டிருந்தான்.

அனைவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்த பின்,' விக்ரமா, வீரா, சுந்தரா. உங்களை இங்கு அழைத்ததன் நோக்கத்தை நான் விளக்க விரும்பவில்லை. அது உங்களுக்குத் தேவையும் இல்லை. இன்றைய நிலையில் பாண்டிய நாடு நசிந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆசை. இது நிறைவேற உங்கள் உதவியை எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்'

'உதவி என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம் அரசே, ஆணையிடுங்கள் நிறைவேற்றக் காத்திருக்கிறோம்.' என்றான் விக்ரமன். மற்றவர்கள் மௌனம் காத்தார்கள்.

'நீ சொல்லிவிட்டாய். இவர்கள் வாயே திறக்கவில்லையே'

அப்போதும் இருவரின் மவுனமும் கலையவில்லை. குலசேகரரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிவந்தது.

'அரசே, இவர்களை விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் நீங்கள் பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே எங்கள் ப்ரார்த்தனை. ஆகவே மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இன்றுதான் வீர பாண்டியன் வந்திருக்கிறான். உங்கள் முன் விவாதிக்க இருவருமே தயங்குவது தெரிகிறது. இதுவே அவர்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. ஆகவே பழமையான பாண்டிய வம்சத்திற்கு எந்தவொரு குறைவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை' என்று தைரியப் படுத்தினான் விக்ரமன்.

உண்மையிலேயே இருவரின் மனமும் அவ்வாறுதான் இருந்தது. என்ன இருந்தாலும் தந்தை இருக்கும் போதே அரியாசனத்திற்கான போட்டி என்பது இருவராலுமே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுந்தரனின் மன நிலை மதுரைக்கு வந்து தந்தையை மீண்டும் பார்த்தவுடன் ஓரளவு மாறிவிட்டிருந்தது.

'ஆம் தந்தையே' என்றனர் இருவரும் ஒரே சமயத்தில். இது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது குலசேகரருக்கு.

(தொடரும்)

Tuesday, December 23, 2008

சூடான இடுகை, வாசகர் பரிந்துரை: தமிழ்மணத்திற்கு ப்ராக்டிகலான யோசனை.

நெஜமாவே தெரியாம கேட்கிறேன். ஒரு பக்கம் சூடான இடுகைகள்ன்னு ஒரு தலைப்பு இருக்கு. அதுல ரெண்டு டேப் இருக்கு. ஒண்ணு இன்றைய சூடான இடுகைகள். அதுக்குப் பக்கத்திலேயே இன்னொன்று. அது இந்த வார சூடான இடுகைகள்.

இதில் இடம் பிடிக்க மினிமம் ஹிட்ஸ் ஏதாவது இருக்கா? எந்த அடிப்படையில ஒரு இடுகையை சூடானதா செலக்ட் செய்றாங்க?

ஏன்னா நான் நெறைய சூடான (?!?!) மேட்டர்லாம் எழுதிப்பாத்துட்டேன். ஒண்ணுமே இதுல வரல. கட்டம் கட்டற அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்ல. அப்ப ஏன் சூடான இடுகையில வரமாட்டேங்குது?

வாசகர் பரிந்துரை பண்ணுங்கன்னு ஒரு இடுகையில கேட்டதனால பெரிய மனசு பண்ணி நேத்து முதல் தடவையா என்னுடைய இடுகையும், இரண்டாவது தடவையா என்னுடைய பேரும் (ஒரு முறை சுரேஷ், என் பேரை தலைப்புல வச்சி சூடாக்கிட்டார். அது வாசகர் பரிந்துரைலயும் வந்தது) வந்திருக்கு.

====

இப்ப லாஜிகலா (?!?!) யோசிப்போம்.

ஒரு இடுகை சூடாகணும்னா என்ன நடக்கணும்?. நெறைய பேர் வந்து பார்க்கணும்.

எப்ப பாப்பாங்க? ஒண்ணு இடுகை மேலே தெரியணும் இல்லைன்னா நம்மள பதிவர்களுக்கோ, வாசகர்களுக்கோ தெரியணும். அப்பதான் நம்மளப்பாக்க நம்ம வலைப் பக்கம் வருவாங்க.

சரி அப்ப என்ன மாதிரிப் புதுப்பதிவர்லாம் என்ன பண்றது?

ஒரு நல்ல (?!) இடுகையைப் போட்டுட்டு யாராவது வருவாங்களான்னு பாத்துக்கிட்டிருக்கும் போதே நம்ம இடுகை நடுசென்டர்லர்ந்து மறைஞ்சி போயிடும்.

அப்புறம்..... 'அந்தப்புறம்தான்'. அதாவது உள்ள அதாவது பின்னாடி ஒரு பக்கம் இருக்கில்ல அங்க போயிடும்னு சொல்றேங்க.

===

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னன்னா... எல்லாரும் சூடான இடுகைக்கு ஆசைப் படுறாங்க. (இதுல தெரிவிக்கறது என்ன இருக்கு. இதுதான் லோல் பட்டுகிட்டிருக்கேன்னு நீங்க கேக்கப்போறது எனக்கு இப்பவே கேக்குது).

ஆகவே தமிழ்மண நிர்வாகிகளே, தயவு செய்து நடுவில் தெரியும் பட்டைக்கு 'சூடான இடுகை / வாசகர் பரிந்துரை' என்று தலைப்பு வைத்துவிடவும். அப்போது எல்லோரது பதிவும் தோன்றும் போதே சூடான, பரிந்துரைத்த பதிவாகிவிடும்.

எப்படி நம்ம ஐடியா ?

===

ஆக நம்ம பங்குக்கு நாமளும் இந்த மேட்டர்ல நம்ம மேலான கருத்த சொல்லிட்டோம்.

இதுக்கு தம்ஸ் அப்ல ஒரு குத்து குத்திட்டு போங்க (இது பரிந்துரைக்கு). மீண்டும் மீண்டும் வாங்க (இது சூட்டுக்கு).

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. தமிழக வரலாற்றில் அதற்கு முன் முற்காலச் சோழர்களில் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியும் கொலை செய்யப்பட்டதாக சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையைப் போன்ற நிகழ்வாக அது அமையவில்லை. இந்த நிகழ்வு இத்துணை பிரபலமானதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று கூறலாம்.

இப்போது இந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பது பற்றிய ஒரு அலசல். நண்பர் சுரேஷ் குந்தவை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் பலவித சந்தேகங்கள் எழும்புவது இயல்பே.

நம் பங்கிற்கு, நமக்குத் தெரிந்த வரையில் இதைப் பற்றிய விரிவான அலசல் ஒன்றை ஏற்கனவே செய்துள்ளோம். அது பொன்னியின் செல்வன் யாஹூ க்ரூப்பில் வெளிவந்துள்ளது. அதனடிப்படையில் அமைந்த ஒரு அனலிசிஸ் கீழே தரப்பட்டுள்ளது. இந்த அலசல் கீழ்கண்ட பிரிவுகளாக உள்ளது.

1. நிகழ்வு (The Incident)
2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)
3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)
4. குந்தவை கூட்டாளிகள்
5. உத்தம சோழன் கூட்டாளிகள்
6. பாண்டிய ஆபத்துதவிகள்
7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)
8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)
9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)





1. நிகழ்வு (The Incident)

ஆதித்த கரிகாலன் அதாவது சோழ அரசின் பட்டத்து இளவரசன் மர்மமான முறையில் இறந்ததுதான் நிகழ்வு. அவன் கொலை செய்யப்பட்டானா, தற்கொலையா, இயற்கையான மரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலும், இயற்கையான மரணம் ஏற்படக்கூடிய வயதும் காரணமும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டான் என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.



2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)


சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்கள் மறைந்த பிறகு களப்பிரர்கள் தலையெடுத்தார்கள். சற்றொப்ப முன்னூறு ஆண்டுகால களப்பிரர் ஆட்சிக்குப் பின் தலையெடுத்தது பாண்டியர்களும் பல்லவர்களும். சோழர்கள் கோழி என்றழைக்கப்படும் உறையூரிலேயே முடங்கியிருந்தனர். பின்னர் விஜயாலய சோழன் காலத்தில் தலையெடுத்தார்களேயொழிய, இந்தக் கொலை நிகழ்ந்த சுந்தர சோழன் காலம் வரை அவர்களால் ஒரு பேரரசை நிறுவ முடியவில்லை. உண்மையில் பேரரசாக மாறத் துவங்கியது உத்தம சோழன் காலத்தில்தான்.

இந்தக் காலகட்டத்தில் வடக்கே ராஷ்டிரகூடர்களின் தொல்லை இருந்து வந்தது. ஆகவேதான் காஞ்சியில் ஆதித்த கரிகாலன் படைவீடமைத்தான். அங்கே ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்த முடிந்ததே ஒழிய அதற்கு வடக்கே அவனால் செல்ல இயலவில்லை. தெற்கே வீர பாண்டியனை அழித்துவிட்டாலும், பாண்டியர்களின் எழுச்சி என்னும் அச்சம் இருந்து வந்தது. பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை அரசை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. சேரர்களுடன் கொள்வினை இருந்ததால் அந்த சமயத்தில் நேரடித் தொல்லை இல்லை.

இவ்வாறாக பாண்டிய பல்லவர்கள் இல்லையாயினும் உதயமாகும் ஒரு அரசிற்குத் தேவையான அனைத்துத் தலைவலிகளும் சோழர்களுக்கு இருந்தன. நண்பர்களை விட பகைவர்களே அதிகமிருந்தனர்.

அரச குடும்பத்தை நோக்குங்கால், சுந்தர சோழர் நேரடியாக போர்களில் பங்கேற்கவில்லை. அருள்மொழிவர்மன் இளைஞன். மதுராந்தகனான உத்தமனும் போர்களில் பங்கெடுக்க வில்லை. வீரத்தைக் காட்டி எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. வீர பாண்டியனைக் கொன்றதுடன் ராஷ்டிர கூடர்களைத் தடுத்து நிறுத்தும் தன்மையும் பெற்றிருந்தான். மேலும் யுவராஜனாக பட்டமேற்றுக்கொண்டதால் சுந்தர சோழனுக்குப் பிறகு அவன் ஆட்சியில் எதிரிகள் நிலை மேலும் மோசமாகலாம் என்ற நிலை இருந்தது.


இவைதான் பின்னணி. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோழர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்களுக்கு முதல் குறி ஆதித்த கரிகாலன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)

குற்றம் சாட்டப்பட்டோரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. குந்தவை, அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன்
2.உத்தம சோழன் மற்றும் சிற்றரசர்கள்
3. பாண்டிய ஆபத்துதவிகள்

ராஷ்டிரகூடர்கள் வலிமையாக இருந்ததால் ஆதித்த கரிகாலனே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே அவர்கள் விலக்கப் படுகிறார்கள். இப்போது ஒவ்வொருவராகப் பார்ப்போம்.


4. குந்தவை கூட்டாளிகள்

குந்தவை சோழ நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறாள். தன் சொல் படி நடக்கும் தம்பி அருள்மொழிவர்மனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன் காதலர் வந்தியத்தேவனை உன்னதப் பொறுப்பில் நிறுத்தி ஆட்சி அதிகாரத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன்னுடைய தோழியை தன் தம்பிக்கு மணமுடிக்கிறாள். இவற்றால் சோழ தேசத்தின் அரியணையை ஆட்டுவிக்க எண்ணுகிறாள். இவையனைத்தும் பொ.செ.வில் கூறப்பட்டவைகள்.

உண்மையில் நடந்தது என்ன? குந்தவை மிகப் பெரிய செல்வாக்குடன் விளங்கியிருக்கிறாள் என்பது தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டொன்றைப் பார்த்தால் தெரியவரும். கோவில் கட்ட நிதியளித்தவர்கள் பட்டியலைப் பற்றி ராஜராஜன் எழுதியிருக்கும் கல்வெட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

'நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும்...' என்று ஆரம்பித்து அனைவரது பெயரும் இடம்பெறும். இதிலிருந்து தமக்கு அடுத்தபடியாக தமக்கையின் பெயரைச் செதுக்கியிருக்கிறார் ராஜராஜர். அது கூட தான் அரசர் என்பதால் முதலில் தன் பெயரை எழுதியிருக்கிறார். இல்லையென்றால் முதலில் தமக்கையின் பெயரைத்தான் எழுதியிருப்பார்.

ஆகவே அவள் ராஜராஜன் காலத்தில் மிகப்பிரசித்தி பெற்றிருந்தாள் என்பது உண்மை. ஆனால் தன் தமையனைக் கொலை செய்ய முன் வந்தாளா? தமையனை எதற்காகக் கொலை செய்யவேண்டும்? அவன் வீரத்தில் சிறந்தவன். சோழப் பேரரசை நிறுவ அனைத்து விதத்திலும் தகுதியானவன். தமக்கை சொல் கேளாதவன் என்ற நிலை பொ.செ.வில் எடுக்கப்பட்டதே ஒழிய உண்மை நாமறியோம். வந்தியத் தேவனுக்கும் ஆதித்தனுக்கும் மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் வந்தியத் தேவன் ஆதித்தன் இருந்த தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன். மேலும் அதுவரையிலோ, அதற்குப் பிறகோ சகோதரக் கொலை என்பது தமிழரசர்களின் வரலாற்றில் இல்லாதவொன்றாக இருக்கிறது.

அருள்மொழிவர்மன் இலங்கை சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை. அது பொ.செ.வில் கூறப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, அதாவது உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் தான் அருள்மொழிவர்மனின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. உத்தமன் சந்ததியில்லாமல் இறந்தபிறகே அருள்மொழி ஆட்சிக்கட்டில் ஏறியுள்ளான்.



5. உத்தம சோழன் கூட்டாளிகள்

'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா'வில், திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், 'Uthama conspired the assasination of Athitha' என்று சொல்கிறார். ஏனெனில் வாரிசுரிமைப் படி அவன் தந்தை கண்டராதித்தனுக்குப் பிறகு முடி சூட வேண்டிய உத்தமன் யுவராஜனாகக் கூட தெரிவு செய்யப் படவில்லை. பொ.செ.வில் சுந்தர சோழன் எவ்வாறு அரியணை ஏறினான் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கண்டராதித்தன் இறந்துவிட, அவருடைய தம்பி அரிஞ்சயனும் இறந்து விட அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏறுகிறான். ஆனால் பொ.செ.வில் குறிப்பிட்டுள்ளது போல் சுந்தர சோழனும் அவன் சந்ததியருமே அரசாள வேண்டும் என்ற எந்தவொரு திட்டமும் இல்லை. இது கதையை நகர்த்துவதற்காக கல்கி கையாண்ட முறை.

ஆகவே, உத்தமனுக்கு வழமையாகச் சேரவேண்டிய அரசுரிமை அவன் வயதிற்கு வந்த பின்பும் அவனிடம் சேர்க்கப்படாமல் ஆதித்தனை யுவராஜனாக முடிசூட்டியது கண்டிப்பாக கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இது நடு நிலையான சிற்றரசர்கள் மத்தியில் கூட சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதுவரை போரைச் சந்தித்திருக்காத ஒரு நபர். போரில் பல வெற்றிகளைக் குவித்து ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு நபர். எதிரிகள் முழுமையாக முறியடிக்கப்படாத நிலையில், இவ்விருவரில் உரிமைப் போர் என்ற பெயரில் முதல் நபரைத் தேர்ந்தெடுத்தால் எதிரிகளின் தொல்லையை அனுபவிக்கப்போவது உத்தமனல்ல இந்தச் சிற்றரசர்கள்தான்.


6. பாண்டிய ஆபத்துதவிகள்

வீரபாண்டியன் காலத்தில் பாண்டியர்கள் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். இலங்கை அரசனின் உதவியும் இருந்தது. ஆனால் ஆதித்த கரிகாலனால் வீரபாண்டியன் கொல்லப்பட்டவுடன் பாண்டியத் தலையெடுப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆபத்துதவிகளும், வேளக்காரர்களும் அரச மெய்க்காப்பாளர்கள் என்ற செய்தி உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. தாங்கள் இருந்தும் தங்கள் தலைவர் மரணமடைந்ததை எந்தவொரு ஆபத்துதவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிரியே இல்லாத நிலையை விட பலமில்லாத எதிரி என்பவன் உபயோகமானவன். ஆகவே மொத்த சோழகுலத்தை அழிப்பதற்குப் பதில் ஆணிவேராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்தனை அழித்துவிட்டால் ஆட்டம் கண்டுவிடும் என்பதே ஆபத்துதவிகளின் கணக்கு. அவர்களின் எண்ணத்தில் எவ்விதத்தவறுமில்லை.


7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)

இந்த ஆதித்தன் கொலைவழக்கில் கிடைத்த ஒரே ஒரு ஆதாரம் உடையாளூர் கல்வெட்டுக்கள். இந்தக் கல்வெட்டுகள், ஆதித்தனைக் கொன்ற குற்றத்திற்காக ரவிதாசன் ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படுவதுடன் அவர்கள் உறவினர்கள் உட்பட அனைவரையும் தேசப்ப்ரஷ்டம் செய்வதாகவும் உத்தரவு உள்ளது.

இது நேர்மையான விசாரணையின் முடிவாக இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் சோழ தேசத்தின் நிர்வாகச் சீர்திருத்தங்கள், வழக்கு விசாரணை அமைப்புகள் ஆகியவற்றைக் குறித்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது நீதி நியாயமான முறையில் வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)

சகோதரக் கொலை செய்யுமளவிற்குத் தமிழரசகுலத்தில் எந்த நிகழ்வுகளும் இல்லை, அவர்களின் தரம் தாழ்ந்துவிடவில்லை என்ற அடிப்படையில் குந்தவையும் மற்றவர்களும் இந்தக் கொலையில் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

உத்தம சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் ஆதித்தனின் மறைவால் ஏற்படும் இழப்பு மிக அதிகம். அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பேரரசின் கீழ் இருக்க விரும்பும் சிற்றரசர்கள் நல்ல தலைமையையே விரும்புவார்கள். மேலும், ஆதித்தன் இறந்தவுடன் உத்தமன் 'Stop Gap arrangement' முறையில் அரசாண்டிருக்கிறான். ஆகவே உத்தமனுக்கும் இதில் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை.

ஆபத்துதவிகளின் நோக்கமும் செயலும் இயல்பானவை மற்றும் காலத்துடன் இயைந்தவை. தன் மன்னனைக் கொன்றவனைக் கொல்வது இயல்பேயன்றி வேறில்லை. ஆகவே ஆபத்துதவிகள் கொன்றிருப்பார்கள் என்பதுடன் அவர்களுக்கு உதவிய சோழதேசத்தினனான ரவிதாசன் மற்றும் கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பது நேரியல் முடிவிற்கு வர ஏதுவாக இருக்கிறது.

எனவே ஆதித்தனைக் கொன்றது பாண்டிய ஆபத்துதவிகள்தான் என்பதை மறுதளிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.


9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)

1. உத்தமன் அரியணை ஏறிய பின் சந்ததியின்றி போகக் காரணமென்ன?
2.வந்தியத் தேவனின் 'லோ ப்ரொஃபைல்' ஏன்?
3. குந்தவையின் 'சுப்ரீமசி' ஏன்?
4. ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றது ஏன்?

மேலும் பல கேள்விகளும், உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.

திருமணமான பெண் குழந்தைகள்

இந்தக் காலத்தில் பெண்கள் நிறையப் படித்து நல்ல வேலைக்குச் சென்று விடுகிறார்கள். இஞ்சினியரிங்கோ, ஜர்னலிசமோ, அக்கவுன்டன்சியோ, மேனேஜ்மென்டோ எந்த ப்ரொஃபெஷனிலும் மிக்ச் சிறந்த நிலையை எய்திவிடுகிறார்கள். டிகிரி முடித்தவர்கள் கூட பி.பி.ஓ போன்ற துறைகளில் சக்கைப் போடு போடுகிறார்கள். இவர்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருப்பதோடு பாராட்டத்தக்கதாகவும் பெருமைப்படத்தக்கதாகவும் இருக்கிறது. இது முற்றிலும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று.

இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சற்றுப் பொறுங்கள். இது சூடான இடுகையை எதிர்பார்த்து வைக்கப்பட்ட தலைப்பல்ல. பதிவின் முடிவில் இதன் அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கும். பதிவை முழுமையாகத் தொடர்ந்து படியுங்கள்

சரி பெண்கள் இவ்வளவு முன்னேற்றமடைந்திருக்கிறார்களே, அவர்களைப் பெற்றவர்கள் என்ன ஆனார்கள்?. இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே அல்லவா இருந்து கொண்டிருக்கிறார்கள்!. ஆட்டோவின் பின்னால் பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதியதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததால் (ஆட்டோவில்தான் இவர்கள் ஏற மாட்டார்களே! ஏக்கத்தோடு ஆட்டோ போன பின்பு ஆட்டோவைப் பார்க்கும் போது இது கண்ணில் தவறாமல் பட்டுவிடுகிறது) பெண்ணிற்கு 21வயதில் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து விடுகிறார்கள்.

எனவே, பெண் என்னதான் படித்திருந்தாலும், நல்ல வேலைக்குச் சென்றாலும் திருமணம்தான் முக்கியம் என்று 21-22 வயதிலேயே கல்யாணத்தை முடித்து விடுகிறார்கள். அதிகபட்சமாக 25ஐப் பெரும்பாலோர் தாண்டுவதில்லை.

அது வரை பெண்கள் எவ்வாறு வளர்ந்திருக்கிறார்கள். பையன்களாவது கடைக்குப் போவது, வண்டி துடைப்பது என்று குறைந்த பட்ச வேலைகளைச் செய்வார்கள். பெண்களுக்கோ சமையலறை எந்தப் பக்கம் என்பது கூடத் தெரிந்திருக்காது. கடைசியாகத் திருமணத்திற்கு முன் இதுதான் சமையலறை என்று ஒரு டூர் அடித்து விட்டு வென்னீர் போட (அடுப்பு பற்றவைக்க என்று புரிந்து கொள்ளவும்!) கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.

ஆக இந்த வகையில் ஒன்றும் தெரியாத பாப்பாவாகத் தான் ரங்கமணிகளின் தலையில் கட்டப்படுகிறார்கள். இப்படி பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளின் கையில் அகப்பட்ட பொம்மையாக இருக்கிறார்கள் ரங்கமணிகள் (பொறுங்கள் பொறுங்கள். இது பெண்களுக்கு எதிரான பதிவல்ல.. தொடர்ந்து படியுங்கள்..).

இதுவாவது பரவாயில்லை. திருமணமானபின் நடை, உடை பாவனைகளில் எவ்வித மாற்றமும் இல்லாமல், குழந்தை போலவே (அதாவது தி.மு. எப்படி இருந்தார்களோ அதைப் போலவே ) இருப்பதுதான் இவர்களின் விசேஷம். எனவேதான் இவர்களை திருமணமான பெண் குழந்தைகள் என்கிறோம்.

இவற்றையெல்லாம் விடுங்கள். மிக முக்கியமான ஒன்று. குழந்தைகள் என்ன செய்யும்?. எல்லாம் செய்யும் அல்லவா? மிகச் சரியான விடை. ஆனால் ஒன்றை மட்டும் செய்யாது. அதுதான் ஹோம் வொர்க். (அடிக்க வராதீர்கள்..). குழந்தைகளின் ஹோம் வொர்க்கை யார் செய்வார்கள்?. பெரும்பாலும் குழந்தைகளின் அம்மாக்கள் தானே. அதுதானே நடக்கிறது.

இவர்களெல்லாம் குழந்தையாக இருந்து குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் அந்தக் குழந்தையின் குழந்தையைப் பார்த்துக்கொள்வது குழந்தையின் அம்மாவின் அம்மாதானே (இது எப்படி இருக்கு!). இந்த ஹோம் வொர்க் தவிர மற்ற ஹோம் வொர்க்குகளுக்கு இருக்கவே இருக்கிறார்கள் பாவப்பட்ட ரங்க மணிகள். ஆக இந்தத் திருமணமான பெண் குழந்தைகளுக்கு ஹோம் வொர்க் பற்றிய கவலையே இல்லாமல் ஜாலியாக இருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்தப் பதிவின் மூலம் திருமணமான பெண்கள் குழந்தைகள்தான் என்பது உறுதி பட வெளிப்படுகிறதல்லவா? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே திருமணமான பெண் குழந்தைகளையும் கொண்டாடுங்கள். (அப்பாடா.. பார்த்தீர்களா. எப்படி உங்களையெல்லாம் கொண்டாட வைத்துவிட்டேன்.)

இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும் எல்லாப் பெருமையையும் ஒரு பதிவிலேயே கொண்டுவருதல் இயலாக் காரியமல்லவா? எனவேதான் இத்துடன் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். பின்னூட்டத்தில் இந்தக் குழந்தைகளின் பெருமையை குழந்தைகளும் அவர்களின் காப்பாளர்களும் தெரியப் படுத்தலாம்.

மேலும் தம்ஸ் அப்பில் குத்தினால் இதை அனேகம் பேர் வாசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும் பல சிறப்புகள் வெளிப்படக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன. ஆகவே மறக்காமல் தம்ஸ் அப்பில் குத்துங்கள்.

Monday, December 22, 2008

வேண்டாம் வரலாறு

வரலாறு என்ற பாடம் பள்ளிகளிலிருந்து நீக்கப் படவேண்டும். வாழ்க்கைக்கு உதவாத ஒரு பாடம் உண்டென்றால் அது வரலாறுதான். மற்ற பாடங்களிலாவது நமக்குத் தேவையானவை இருக்கிறது. அசோகர் மரம் நட்டார். அவர் குளம் வெட்டினார். இவர் கால்வாய் கட்டினார். இவர் அவரை வென்றார். அவர் இவரை கொன்றார் என்பதெல்லாம் படிப்பதால் என்ன லாபம்?

மேலே சொன்னவை என் நண்பர் ஒருவரின் கருத்துகள். அவர் மிகத் தீவிரமாக வரலாற்றை எதிர்த்தவர்.

சிலர் படிக்கும் போது பாஸ் செய்யவேண்டிய அளவுக்கு வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், வரலாறு மிக முக்கியமானது (நன்றி:இ.அ.இ.மூ.புலிகேசி). ஏனென்றால் இப்போது நாம் ஓரிடத்தில் இருக்கின்றோம், ஓர் திக்கை நோக்கிப் பயணிக்கின்றோம் என்றால், எங்கிருந்து வந்தோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். அந்த ஆர்வத்திற்கு தூபம் போடும் விதமாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளேன். அதாவது வரலாறு கேள்வி-பதில் தொடங்கியிருக்கிறேன். தமிழக / இந்திய / உலக வரலாற்றில் ஏதேனும் கேள்விகளோ, சந்தேகங்களோ இருந்தால், ஏதோ ஒருவிதமாகத் தேடிப்பிடித்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையலாம்.

===

முதல் பகுதியானதால் நானே கேள்வி, நானே பதில்.

1. இதைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? இதற்கு வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

வரலாற்றின் பால் பெரும்பான்மையோருக்கு ஒரு வித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதை மறுக்கவியலாது. ஆயினும், வரலாற்றை அறிந்து கொள்வதை மக்களிடம் பரவலாக்கி அதன் மூலம் நம் பெருமை அருமைகளை அனைவரும் அறிந்திடல் வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடே இந்தச் சிறு முயற்சி.

நன்முயற்சிகள் யாவிற்கும் வரவேற்பில் எவ்விதக் குறைவுமிராது என்ற நம்பிக்கையே இந்த முயற்சியின் அடித்தளம்.


2. வரலாறு என்றால் என்ன?

வரலாறு என்பது அரசுகள், வம்சங்கள் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற ஓயாப் பெரும்போர்களின் நாட்குறிப்பே என்ற தவறான புரிதல் அனைவருக்கும் உண்டு. புவியியல் சார்ந்த அரசியல் நிலப்பகுப்பில் இருந்த அரசுகள், மக்கள், பழக்க வழக்கங்கள், வணிகம், இலக்கியம், கலை மற்றும் பல விடயங்கள் அனைத்தும் வரலாறுதான். இங்கு புவியியலுக்கும், அரசியலுக்கும் வரலாற்றில் முக்கியப்பங்குண்டு. ஏனெனில் மேற்சொன்னவற்றின் வளர்ச்சி வீழ்ச்சிகளில் அரசியல் மற்றும் புவியியலின் தாக்கம் பெரும்பான்மையினது. ஆகவே அரசியல் முக்கியமாகவும் மற்றவை அதன் அடியொற்றியும் விவரிக்கப் படுகின்றன.

அஃதாவது சுருங்கக் கூறின், இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு.

3. வரலாறு எவ்வாறு அறியப்படுகின்றது?

வரலாறு இலக்கியங்கள் வாயிலாகவும், அரசு சாசனங்கள் வாயிலாகவும், பயணக்குறிப்புகள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியப் படுகின்றது. ஆகவே தற்போது நமக்குக் கிடைக்கும் வரலாறு ஒரு சராசரியே தவிர சரியானதன்று.

மேலும் இவற்றில் கிடைக்கும் தகவல்கள் மற்ற தகவல்களுடன் ஒத்துப் போகின்றனவா என்ற நோக்கிலும் சரிபார்க்கப் படுகிறது. ஒரே தகவல் பல்வேறு தரவுகளிலிருந்து கிடைக்குமாயின் அத்தகவல் உண்மைதான் என்று உறுதிப்படுத்தப் படுகிறது.


4. வரலாறு உண்மையானதா? புனைந்துரைத்ததா?

வரலாறு என்பது நிகழ்வுகளின் பதிவுகளன்று. அது வரலாற்றைப் புனைபவரின் பார்வையும் கருத்துமாகும் (History is not the listing of facts. It is full of reporter's views and perspectives).

ஆகவே வரலாறு எப்போதுமே ஒரு பக்கத்தைத் தாழ்த்தியும் மறு பக்கத்தை உயர்த்தியும் காட்டும். இதைச் சமன் செய்து பார்க்கவேண்டியது பயனீட்டாளர்களின் பணியாகிறது.

இவ்வகையில் நோக்குங்கால் வரலாறு பெரும்பாலும் புனைவேயென்பதும், அன்னப்பறவை நீர் விடுத்து பாலருந்தும் விதமாய் புனைவு நீக்கி உண்மை அறிதல் தேவையென்பதும் தெள்ளென விளங்கும்.


5. வரலாற்றைப் படிப்பதால் பயன் என்ன?

ஒரு நாகரீகமோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ செயல் படும் போக்கானது அதன் வரலாற்றைச் சார்ந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் தமிழரல்லாத தலைவர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றவிடங்களில் அவ்வாறன்றி பிற மொழியாளர்கள் சற்றும் மேலே வருவது காண்பதரிதாயிருக்கின்றது. இதன் காரணத்தை ஆய்வோமெனில் கடந்த 7 நூற்றாண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி தமிழரல்லாதோர் வசம் இருத்தல் காணலாம். இதனடிப்படையிலமைந்ததே நம் சக்கரவியூகம்.

இவ்வாறாக வரலாற்றைப் படிப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்குக் குறிப்பான தீர்வு காணுதல் இயலுமென்பதை சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்.

====

இப்படிதாங்க. பொதுவா கேக்கலாம். குறிப்பா கேக்கலாம். வரலாறு சம்பந்தமா இருக்கணும் அவ்வளவுதான். இனி நீங்க கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..

சரி இந்த நடை எப்படி இருக்கு? அதையும் சொல்லிட்டு போங்க.

தம்ஸ் அப்ல குத்துங்க. அப்பதான் எல்லாரும் வந்து கேள்விக்கணைகளத் தொடுக்கறதுக்கு வசதியா இருக்கும். என்ன நாஞ்சொல்றது?

உலகக் காதலனின் உன்னதப் படங்கள்

சென்னையில் உலகத் திரைப்பட விழா நடக்கும் வேளையில் ஒரு மிகச் சிறந்த உலகத் திரைப்பட நாயகனைப் பற்றிய அறிமுகப் பதிவு இது. உலகத் திரைப்படங்களில் அமெரிக்கத் திரைப்படங்களுக்குப் பிறகு சிறப்பான இடம் ஐரோப்பியத் திரைப்படங்களுக்கு அதுவும் குறிப்பாக இத்தாலியத் திரைப்படங்களுக்கு உண்டு. அத்தகைய இத்தாலியத் திரைப்படத் துறையின் முக்கியமான நபரைப் பற்றிய சிறுகுறிப்புதான் இது.


மூன்று முறை 'சிறந்த நடிகருக்கான' ஆஸ்கார் நாமினேஷன். இரண்டு முறை கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 'சிறந்த நடிகருக்கான' பரிசு. இந்த இரண்டு சிறப்புகளுமே இதுவரை இருவருக்குத்தான் உள்ளது. இரண்டு சிறப்புகளும் இவருக்கு மட்டுமே உள்ளது.பாஃப்டா அவார்ட். கோல்டன் க்ளோப் அவார்ட். இன்னும் பல. தற்போது இவர் பெயரில் ஒரு சிறந்த அறிமுக நடிகருக்கான அவார்ட். இவ்வளவுக்கும் சொந்தக்காரர் 'மார்செல்லோ வின்சென்சோ டோமினிகோ மாஸ்ட்ரோயன்னி'. சுருக்கமாக மார்செல்லோ மாஸ்ட்ரோயன்னி அல்லது மார்செல்லோ. லத்தீன் லவர் என்றால் மிகப் பிரபலம். அந்தக் காலத்தில் உலகக் காதல் மன்னனாக அறியப் பட்டவர்.

இத்தாலியின் ஃபோன்டானா லிரி என்ற இடத்தில் 1924ல் பிறந்து, டூரின், ரோம் ஆகிய இடங்களில் வளர்ந்தார். நாஜிப் படையால் கைது செய்யப்பட்டு பின் தப்பித்தவர். முதலில் நாடக நடிகராக வாழ்க்கையைத் துவக்கியவர். 1996ல் கணையப் புற்றுநோயினால் அவதிப்பட்டு இறந்தார்.

இவரது பெரும்பாலான படங்கள் காதல், காமம், கசமுசா கலந்த காமெடி கலாட்டாக்கள்தான் (எத்தனை 'க'!). அனைடா ஏக்பெர்க், சோஃபியா லாரென், கேதரின் (பின்னர் இவரது துணைவி) மற்றும் பலர் இவருடன் நடித்ததால் பிரபலமானவர்கள். இவரது மனைவி ஃப்ளோராவும் ஒரு நடிகைதான்.

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய டைரக்டர் ஃபெடரிகோ ஃபெல்லினியுடன் அருமையான கெமிஸ்டிரி. இருவரும் இணைந்த படங்கள் நிச்சயம் ஏதாவது ஒரு பரிசைத் தட்டிக் கொண்டு போய்விடும்.

இவரது சகோதரர் ரக்கெரோ மாஸ்ட்ரயோன்னி ஒரு எடிட்டர்.

இவரது பிரபலமான சில படங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

லா டோல்ஸ் வீடா - La Dolce Vita - A Sweet Life (1960)
டைரக்ஷன்: ஃபெடரிகோ ஃபெல்லினி



மார்செல்லோ இதில் ஒரு ரிப்போர்ட்டர். ஒரு ரிப்போர்ட்டரின் வாழ்க்கையில் ஏழு பகல் ஏழு இரவுகள் நடக்கும் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஃபெல்லினி. இதில் திரை நட்சத்திரங்கள், கடவுள் நம்பிக்கைகள், அரசாங்க உயர் வர்க்கத்தினர் ஆகியவற்றைப் பற்றி ரிப்போர்ட் செய்வதுதான் இந்தப் படக் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

அனைடா ஏக்பெர்க் இதில் அமெரிக்க நடிகையாக நடித்துள்ளார். ரோம் நகரின் 'ட்ரெவி ஃபவுன்டனில்' குளிக்கும் காட்சி இந்தப் படத்தின் ஹை-லைட். (தற்போதைய தமிழ் படங்களை எடுத்துக் கொண்டால் இதற்கு 'யு' சர்டிஃபிகேட் கிடைக்கும்)



பாப்பராசி (paparazzi) என்ற வார்த்தை உலகிற்குக் கிடைத்தது இந்தப் படத்திலிருந்துதான்.இதில் மார்செல்லோவுடன் வரும் போட்டோகிராஃபரின் பெயர் பாபராசோ.

நியூ யார்க் டைம்ஸ் '1960களின் அதிகமாகப் பார்க்கப் பட்ட ஐரோப்பியப் படங்களில் ஒன்று' என்று வர்ணித்திருக்கிறது. நான்கு ஆஸ்கார் நாமினேஷன், ஒரு ஆஸ்கார், கேன்ஸில் கோல்டன் பாம். இதற்குப் பரிசுகள்.

இந்தப் படம் மார்செல்லோவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையாகாது.



டிவோர்ஸ் - இடாலியன் ஸ்டைல் (1962)
டைரக்ஷன்: பெட்ரோ ஜெர்மி

இது ஒரு சூப்பர் காமெடி படம். ஒரு இளமுதிய இத்தாலிய டான். அவரது மனைவியை பிடிக்க வில்லை. அவரது இத்தாலியில் டைவர்ஸ் அந்தக் காலத்தில் சட்டவிரோதமானது. ஆனால் மனைவிக்கு கள்ளத் தொடர்பிருப்பதாக நிரூபித்து கொன்றுவிட்டால் கருணைக் கொலையாக எடுத்துக் கொண்டு மூன்றாண்டுகள் மட்டுமே தண்டனை கிடைக்கும்.எனவே படாத பாடு பட்டு, மனைவிக்கு முன்னாள் காதலனுடன் கள்ளத் தொடர்பிருப்பதாக எப்படியோ நிரூபித்து கொன்று விடுகிறார். ஜெயிலுக்குப் போய் வந்து தனக்குப் பிடித்தவளை மணந்து கொள்கிறார்.





ஆனால் கடைசி காட்சியில் இருவரும் தழுவிக்கொண்டிருக்கும் போது, புது மனைவியின் கால்கள் படகோட்டியை தடவிக் கொண்டிருப்பதாக முடித்திருப்பார்கள்.

இதற்கு மார்செல்லோவிற்கு சிறந்த நடிகர் உட்பட மூன்றுஆஸ்கார் நாமினேஷன்கள். ஆனால் சிறந்த கதை, திரைக்கதைக்கான ஆஸ்கார் அவார்ட் தான் கிடைத்தது.


மேரேஜ் - இடாலியன் ஸ்டைல் (1964)
டைரக்ஷன்: விட்டாரியோ டி சிகா

இதை டிவோர்ஸின் சீக்வல் என்று கொள்ளலாம். ஒரு தொழிலதிபர் (மார்செல்லோ) பலகாலமாக ஒரு பெண்ணை மணக்காமல் துணைவியாக வைத்திருக்கிறார். இவள் அலுத்துவிட வேறொரு பெண்ணை மணக்கத் திட்டமிடுகிறார். இதைத் தெரிந்து கொண்ட அந்த துணைவியார் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடித்து தொழிலதிபரை மணந்து கொள்கிறார்.

இவள் இறப்பதற்காக காத்திருக்கும் தொழிலதிபர் இடையில் புதுக் காதலியுடன் தொடர்பு கொள்கிறார். கடைசியில் துணைவியாருடனேயே தொடர வேண்டியதாகிறது. துணைவியாராக சோஃபியா லாரென்.

கடைசியில் மார்செல்லோ தன் காதலியுடன் தொலைபேசியில் கடலை போட்டுக்கொண்டிருப்பார். கடலையின் மணத்தைக் கண்டுபிடித்து வரும் சோஃபியா, காதலியிடம் விரைவில் மறைந்துவிடுவேன் என்று கூறிவிட்டு, கணவனிடம், நான் இனிமேல் இங்குதான் இருப்பேன் என்று முடிப்பாள்.

இது ஃபிலோமினா மார்ச்சுரானோ என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம்.

இதற்கு இரண்டு ஆஸ்கார் நாமினேஷன்கள்.


8 1/2 (1963)
டைரக்ஷன்: ஃபெடரிகோ ஃபெல்லினி

இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற படம். பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டின் 'ஆல் டைம் பெஸ்ட் ஃபிலிம்' வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த படம். ஃபெல்லினியின் டைரக்ஷனில் ஒரு மைல் கல். இது அவரைப் பற்றிய ஒரு சுய சரிதை என்பார்கள்.

ஒரு டைரக்டர். ஒருவிதமான மன நோயினால் அவதியுறுகிறார். அவர் இயக்கும் படம் குப்பைதான் என்றாலும் எல்லோராலும் அறிவியல் சார்ந்த படம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திருமண உறவில் ஏற்பட்ட பிரச்சனைகள், கலையுலகில் ஏற்படும் பிரச்சனைகள் அவரை வாட்டுகிறது. இடையிடையே வரும் பழைய நினைவுகளும், புதிய நிகழ்வுகளும் பின்னிப் பிணைகின்றன.

இது முழுக்க முழுக்க ஃபெல்லினியின் வாழ்க்கையைப் பற்றிய படம்தான் என்று அவரும் கூறியிருக்கிறார். எட்டரை என்பது அவர் அதுவரை இயக்கிய படங்களின் எண்ணிக்கை. ஆறு முழுப் படங்கள். இரண்டு குறும்படங்கள். ஒரு படம் மற்றொரு டைரக்டருடன் இணைந்து பணியாற்றியது.

மாஸ்கோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் இந்தப் படத்தை எட்டாயிரம் பேருக்குத் திரையிட்ட போது படத்தின் முடிவில் அனைவரும் சேர்ந்து செய்த கரகோஷம், 'சுதந்திரத்திற்கான அழுகுரல்' என்று வர்ணிக்கப் பட்டது.

இது ஃபெல்லினியின் படமென்றாலும், இந்தப் படம் வெல்ல மார்செல்லோவின் பங்களிப்பு மிக முக்கியமானது.


பிஸ்ஸா ட்ரையாங்கிள் (1970)
டைரக்ஷன்: எட்டோரி ஸ்கோலா

மார்செல்லோவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை கேன்ஸில் பெற்றுத்தந்த படம். ஒரு முக்கோணக் காதல் கதை. ஒரு பெண், மணமான ஒரு கட்டிடத் தொழிலாளியை(மார்செல்லோ) விரும்புகிறாள். இடையில் ஒரு பிஸ்ஸா குக்கும் இவளைக் காதலிக்கிறான். நடக்கும் சண்டையில் அந்தப் பெண் காயமுறுகிறாள். பிறகு மூவரும் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனாலும் மீண்டும் மோதல். அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது அவள் இன்னொருவனுடன் காதலில் விழுகிறாள். மார்செல்லோ மீண்டும் குறுக்கிடுகிறான். இறுதியில் அந்தப் பெண் இறந்து போகிறாள்.

கேன்ஸில் மார்செல்லோவிற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்த படம்.


காசனோவா 70 (1970)
டைரக்ஷன்: மரியோ மோனிசெல்லி

ஒரு இத்தாலிய மேஜர் பாரிசில் உள்ள நேடோ தலைமையகத்துக்கு மாற்றலாகிச் செல்கிறார். மிகவும் ஆபத்தான வேளைகளில் தான் அவருக்கு காதல் தாகம் மேலோங்கும். அப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கும் காதல் காட்சிகள் காமெடிக் காட்சிகளாக மாறுகின்றன. மேஜராக மார்செல்லோ.



இதற்கும் ஒரு ஆஸ்கார் நாமினேஷன்.


எ ஸ்பெஷல் டே (1977)
டைரக்ஷன்: எட்டோரி ஸ்கோலா

மார்செல்லோவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்த மற்றொரு படம். சோஃபியா லாரனுடன் நடித்திருப்பார். ஹிட்லர், முசோலினி காலத்திய கதை. ஹிட்லர் ரோமிற்கு வரும் நாளில் ஒரு ஃபாசிஸ்டு தன் மனைவியை(சோஃபியா லாரென்) வீட்டில் விட்டுவிட்டு ஹிட்லரை பார்க்கச் செல்கிறான். வீட்டில் சோஃபியா தனியாக இருக்கும் போது உள்ளே வருகிறார் மார்செல்லோ. பேசிக் கொண்டிருக்கும் போது பாசிச கருத்துக்களுக்கு எதிரானவர் என்று தெரிகிறது. இதனால் முதலில் அதிர்ச்சியடைந்தாலும் இறுதியில் காதல் செய்கிறார்கள் (என்ன கொடுமைடா சாமி). கடைசியில் போலீஸ் அவரை பிடித்துச் செல்கிறது.

இதற்கு கோல்டன் க்ளோப் விருது. ஆஸ்கருக்கு இரண்டு நாமினேஷன்கள்(சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டு படம்). ஃப்ரான்சிலும் ஒரு அவார்டு.


டார்க் ஐஸ் (1987)
டைரக்ஷன்: நிகிதா மிகால்கோவ்

இது ரஷ்ய, இத்தாலிய கூட்டுத் தயாரிப்பு. ஒரு மணமான ரஷ்யப் பெண்மணிக்கும் ஒரு மணமான இத்தாலிய ஆண்மகனுக்கும் இடையே நடக்கும் காதல் போராட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னணியில் எடுக்கப் பட்டது.

இதற்கும் மார்செல்லோவிற்கு ஒரு ஆஸ்கார் நாமினேஷன் கிடைத்தது. கேன்ஸிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.




இவற்றில் நான் பார்த்த ஒரே படம் 'லா டோல்ஸ் வீடா'. மற்றவையும் கூடிய விரைவில் பார்க்கவேண்டும் என்று ஆவல்.

Thursday, December 18, 2008

கிறுக்கலாய் சில கவிதைகள்....

முதன்மை

முதல் கவிதை

முதல் காதல்

முதல் முத்தம்

முடியும் வரை

தொடரும்...

===

முழுமை

அழகாய் நீ

அணிகலனாய் நான்

முயல்வோம்

முழுமை பெற

===


எதிர்பார்ப்பு

ஏங்குகிறது

எந்தன் நெஞ்சு

ஏந்திழையை

எதிர்பார்த்து

===

துணை

கனவும் கற்பனையும்

காதவழி வாராது

செயலும் சொல்லும்

செல்லும் எங்கெங்கும்

===

ஒன்று

நான் நீ

நீ நான்

நாம் நாம்

எல்லாம் ஒன்று

Wednesday, December 17, 2008

உங்களையெல்லாம் திருத்தவே முடியாது . . .

இன்றைய பதிவுலகின் சீரியஸ் (சீரிய அல்ல) நிலை பற்றிய சீரிய (சீரியஸ் அல்ல) கருத்துப் பரிமாற்றத்தின் வெளிப்பாட்டை உங்களுடன் பகர்வதில் நட்சத்திரப் பதிவரானதினும் மெத்த மகிழ்ச்சியுறுகிறேன்.


நான்: சார் நான் சரித்திரத் தொடர்கதை எழுதறேன்.

நலம் விரும்பி: ப்ராஜக்ட் ரிப்போர்டெல்லாம் தயார் பண்றீங்க. சரித்திரத் தொடர் எழுத முடியாதா?

===

நான்: ஒருவாரம் தமிழ்மணத்தில நட்சத்திரமா போட்டிருக்காங்க.

நலம் விரும்பி: அப்ப சீக்கிரம் ரிடையராயிடுவீங்க !

===

நான்: எப்படியாவது புகழ்பெற்ற பதிவராயிடணும்..

நலம் விரும்பி: அப்ப உங்க குழந்தை பேர 'புகழ்' - னு மாத்திடுங்க !

===

நான்: எனக்கு ஹிட் நெறைய வரணும்...

நலம் விரும்பி: ஹைவே-ல போய் நிக்கலாமே !!

===

நான்: என்னோட பதிவு எதுவும் சூடான இடுகை ஆக மாட்டேங்குதே

நலம் விரும்பி: தோசக்கல்லுல வச்சு இடுகையப் போடுங்க !

===

நான்: யாரும் தம்ஸ் அப்ல குத்தவே மாட்டேங்கிறாங்க போலருக்கே. பரிந்துரையே இல்ல.

நலம் விரும்பி: யாருடைய பரிந்துரையும் ஏற்கக்கூடாதுன்னு, அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் சொல்லியிருக்கார்ல!!

===

நான்: ஏதாவது உருப்படியா ஒண்ணு சொல்லுங்க..

நலம் விரும்பி: டி.வி., ஃப்ரிட்ஜ், டேபிள், சேர்னு நெறைய உருப்படிகள் இருக்கே. உங்களுக்கு என்ன வேணும் ? !

===

நான்: இப்ப என்ன பண்ணலாம்?

நலம் விரும்பி: இத பதிவா போடுங்க ! !

===

நான்: அப்ப ஹிட்டு, புகழ், சூடு, பரிந்துரை எல்லாம் கிடைக்குமா?

நலம் விரும்பி:உங்களையெல்லாம் திருத்த்த்த்த்த்தவேஏஏஏஏஏஏ முடியாது :(((

===

பி.கு.:
1. (நலம் விரும்பியின் பதிலுக்குப் பிறகு... நான்: (மனதிற்குள்) அடக்கடவுளே!! என்பதைச் சேர்த்துக் கொள்ளவும்)

2.பதிவர் ஆயில்யன் என்னுடைய 'தல' பதிவுல கொஞ்சம் 'டெரரா' யோசிச்சு தலைப்பு வைங்கன்னு சொன்னார். மொதல்ல நான் வச்ச தலைப்பு ' நானும் நலம் விரும்பியும்'. கொஞ்சம் 'டெரரா' யோசிச்ச பிறகு வச்ச தலைப்பு தான் இது. இதுக்கு மேல 'டெரரா' யோசிக்க முடியலைங்க.

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...10

அத்தியாயம் 10 - வல்லாளனின் மாற்றம்

'என்ன என்னுடன் மதுரைக்கு வருகிறாயா? நடக்கிற காரியமா?' வீர பாண்டியன் சந்தேகத்துடன் வினவினான், உள்ளூர அவள் வரவேண்டும் என்ற ஆசையுடன்.

'அன்பரே, இப்போது என் தந்தையின் எண்ணம் தமிழகத்தில் மாலிக் கஃபூரை வர விடாமல் தடுப்பது. நமது எல்லோருடைய எண்ணமும் அதுதான். அதே போன்று, நீங்கள் மதுரை அரியணையேற வேண்டும் என்பதும் அனைவரது விருப்பம். இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் சிலவற்றைச் செய்துதானாக வேண்டும். ஒற்றாடல் என்பது இந்தச் சமயத்தில் மிக அவசியமானதொன்றாகிறது. திருவள்ளுவர் இதைப் பற்றி ஒரு அதிகாரத்தையே எழுதிவைத்து விட்டுப் போனாரல்லவா? ஆகவே நான் மதுரையில் ஒற்றாடப் போகிறேன். என் தந்தையும் ஒப்புக் கொள்வார்" என்றாள் மந்தகாசத்துடன்

****

திருவரங்கம் சென்ற இளவழுதி, அந்தத் தீவின் அழகில் சொக்கிப் போய் நின்றான். கார்காலம் துவங்கிவிட்டதால் காவிரியும் கொள்ளிடமும் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு நொங்கும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தன. ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் படகுப் போக்குவரத்தே சிரமமாக இருந்தது. ஆயினும் ஒரு சில பெரிய படகுகள் நீரின் வேகத்தைப் பொருட்படுத்தாமல் சென்றுகொண்டிருந்தன.

எங்கும் பச்சையின் வண்ணம் மிளிர்ந்திருந்தது. இதைப் பார்த்துதான் அரங்கனைப் பாடிய ஆழ்வானுக்கும் பச்சை முதலில் ஞாபகம் வந்து பச்சைமாமலை போல் மேனி என்று ஆரம்பித்திருப்பான் போலும் ! என்று எண்ணிக் கொண்டான் இளவழுதி.

மாபெரும் மதில்களும் ஏழு சுற்றுகளும் சேர அமைந்திருந்தது திருவரங்கத் திவ்யக்ஷேத்ரம். அதன் அருகில் அதே தீவில் எப்போதும் ஜலகண்டனாய் ஜம்புகேஸ்வரருடன் வீற்றிருக்கும் திருவானைக்காவல். இப்படி ஒரே தீவில் இவர்கள் இருந்தது எப்போதும் ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.

இவ்வாறு பச்சை நிறம் நிறைந்தும், நீல நிற நீர் சூழ்ந்தும் இருந்த திருவரங்கத் தீவின் இயற்கை எழிலில் சிறிது நேரம் கிறங்கிப் போன இளவழுதி, நேராக கோவிலுக்குச் சென்று அரங்கனையும், தாயாரையும் தரிசனம் செய்து எடுத்த காரியம் நல்லவிதமாக முடிய வேண்டுமென்று விண்ணப்பமும் செய்துகொண்டான். மற்ற சன்னதிகளை வணங்கிய பின், வேதாந்த தேசிகர் தங்கியிருந்த மடத்திற்குச் சென்றான்.

அங்கு மாராயர் சொன்னது போல் ஏற்கனவே வல்லாளன் வந்து காத்துக் கொண்டிருந்தான். இருவரும் புன்முறுவலுடன் ஆரத் தழுவிக்கொண்டனர்.

'இவ்வளவு விரைவில் மீண்டும் சந்திப்போம் என்று எண்ணவில்லை இளவழுதி. இங்கே அருகில் தானே உன் ஊர் இருக்கிறது. அரங்கனைத் தரிசிக்க வந்தாற்போலிருக்கிறது" கேள்விக் கணைகளை வீசினான் வல்லாளன்.

'ஆமாம். அத்துடன் வேறு காரியமும் இருக்கிறது. அதில் உன்னுடைய பங்கும் மிக முக்கியம். இவற்றைப் பற்றி தேசிகரிடம் வழி கேட்கவே இங்கு வந்தேன். என் தந்தையார் நினைத்தது போல் நீயும் இங்கிருக்கிறாய்." என்ற இளவழுதி மாலிக்கஃபூரின் விஷயங்களை சுருக்கமாகக் கூறினான்.

பதிலேதும் கூறாவிட்டாலும், இந்தச் செய்தி வல்லாளனை வெகுவாகப் பாதிக்கவில்லை என்பதை அவன் முகம் தெள்ளென எடுத்துக் காட்டியது. "இளவழுதி, உன்னிடம் சொல்வதில் தவறேதும் இல்லை. மேலும் இது அனைவருக்கும் தெரிந்ததுதான். எங்கள் முதலில் பாண்டியர்களை நாங்கள் நேரடியாக எதிர்க்கவில்லை. ஜடாவர்ம சுந்தர பாண்டியர் முதலில் என் பாட்டனாரோடு சேர்ந்து சோழரை எதிர்த்தார். சோழர்கள் வீழ்ந்ததால், நாங்கள் இங்கே சமயபுரம் அருகே படைவீடு அமைத்துத் தங்கினோம். பாண்டியர்கள் சுயராஜ்ஜியம் அமைத்தார்கள்.

ஆனால் முடிவில் எங்களையே தாக்கத் தலைப்பட்டார்கள். அப்போது பலவீனமடைந்திருந்த எங்கள் படை பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. விடாமல் துரத்திய பாண்டியர்கள், எங்களை முறியடித்ததுடன் எங்கள் தேசத்திலேயே அவரது சகோதரர் வீர பாண்டியரை தளபதியாக நிறுவி எங்களை அவமானப் படுத்தினார். இவையெல்லாம் எங்கள் கோபத்தை அதிகப் படுத்தின. எனவேதான் சமயம் வரட்டுமென்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

அந்த வாய்ப்பு இப்போது கனிந்து வந்திருக்கிறது. இப்போதிருக்கும் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் அரியணைத்தகராறு என்பதை நான் அறிவேன். இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்திருக்கிறேன். பார்ப்போம் என்ன செய்வதென்று. எதற்கும் தேசிகரின் வழிகாட்டுதலையும் பெறுவோம்." என்று பொதுவாக முடித்தான்.

[ இங்கே வல்லாளன் கூறியிருப்பது அவன் பக்க நியாயம். அரசுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டாலும், ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் மட்டும் தானாக மோதும் போக்கை ஒரு போதும் கடைப் பிடித்ததில்லை. முதலில், கேரள மன்னனான வீர ரவி, கொற்கை முத்துக்களைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். அவனை அடக்க அவன் மீது படையெடுத்த போது, ஹொய்சளர்கள் பாண்டிய தேசத்தைக் கைப்பற்றவும், வீர ரவிக்கு உதவி செய்யவும் தலைப் பட்டார்கள். எனவே, வீர ரவியை முறியடித்த பின், ஹொய்சளர்களை அடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஜடாவர்மருக்கு.]

இளவழுதிக்கு இரு பக்க நிலவரம் தெரிந்திருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் தேசிகரை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அரங்கனின் பகல் பொழுது ஆராதனைகளை முடித்துவிட்டு, கோவில் நிர்வாக வேலைகளை மேற்பார்வையிட்டு மடத்திற்குத் திரும்பியபின் இருவரையும் தனது அறைக்கு அழைத்துவரச் செய்தார் தேசிகர். ஆரம்ப நமஸ்கார, குசல விசாரிப்புகளுக்குப் பிறகு தந்தை அளித்த ஓலையை சமர்ப்பித்தான் இளவழுதி. அதைப் படித்த தேசிகர் "வல்லாளனுக்கு நிலையை விளக்கி விட்டாயா இளவழுதி?" என்றார்.

"ஆமாம் சுவாமி. அவனும்..."

"தெரியும். அவன் நிலையில் அதை தற்போது ஆமோதிப்பது சற்று கடினம் தான். வல்லாளா, நீ என்ன நினைக்கிறாய்?"

"சுவாமி, மாலிக் கஃபூரை இங்கே வர விடக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆயினும் எங்களிடம் இரு பகைவரையும் தாக்கும் அளவுக்கு படைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இருவரையும் அழித்து விட முடியும். இதை இப்போது சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆகவே, மாலிக் கஃபூரை அழிப்பதற்காக பாண்டியரை விட்டுவிட முடியாது" என்று கூறினான் உறுதியாக.

இந்த பதிலை ஓரளவு யூகித்திருந்தான் இளவழுதி. தேசிகரின் குறிப்புக்காகக் காத்துக்கிடந்தான். அவர் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். யோசிக்கிறாரா, மோன நிலையில் ஆழ்ந்துவிட்டாரா என்பதை இருவராலும் யூகிக்க முடியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, 'நாராயண' என்ற வார்த்தை உதிர்ந்தது அவர் நாவிலிருந்து. பார்வை நிலைத்தது வல்லாளன் மீது.

"வீர பாண்டியனுடன் இணைய ஒப்புக்கொள்கிறேன் சுவாமி" என்றான் வல்லாளன். ஒரு புன்னகையே பதிலாக வந்தது தேசிகரிடமிருந்து. இளவழுதியின் அதிர்ச்சிஅளவிடமுடியாததாக இருந்தது.

(தொடரும்)

Monday, December 15, 2008

முடிவும்... தொடரும்...

ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை என்று சொல்ல ஆசைதான். ஆனால் ஒரு வாரத்தில் பதிவுகள் இட மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக ஒப்பேற்றிவிட்டேன் என்பதுதான் உண்மை. அழுத்தும் பணிகளுக்கிடையே பதிவுகள் எழுதுவது ஒரு சவாலாகவே அமைந்தது.

முதலில் கூறியது போல், மேலும் புதிய நண்பர்களின் அறிமுகத்தை எதிர்பார்த்து இந்த நட்சத்திரப் பதிவராக வந்தேன். இது நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


முதல் நாள் அனுபவம்


முதல் நாளன்று, பழமை பேசிக்குப் பிறகு என் பதிவு தெரியவில்லை வேறு ஏதோ ஒரு பதிவரின் லிங்க் வெளியானது. உடனே தமிழ்மணத்திற்குத் தொடர்பு கொண்ட போது, டெக்னிக்கல் கோளாறு என்று தெரிவித்தார்கள். பிறகு, இரவு வரை அந்தக் கோளாறு இருந்தது. இடையே, என் ப்ரொஃபைல் குறிப்புகள் மட்டும் '+' குறியை அழுத்தும் போது தெரிந்தது. ஆகவே நான் தான் நட்சத்திரப் பதிவர் என்று உறுதி செய்து கொண்டேன். இரவிலிருந்து எல்லாம் சரியானது.

நட்சத்திரத்தினிடையே ஐம்பதாவது பதிவு இடும் நிகழ்ச்சியும் அரங்கேறியது.


ஒரு சில ஸ்டேடிஸ்டிக்ஸ்

இந்த வாரத்தில் இந்தப் பதிவையும் சேர்த்து பதினான்கு பதிவுகள். இது நான் சென்ற மாதம் மொத்தமாக எழுதிய பதிவுகளுக்குச் சமமானது. சென்றமாதம் தான் அதிகமான பதிவுகள் எழுதப்பட்டது.

இந்த வாரத்தில் மட்டும் பேஜ் 2000த்தைத் தாண்டியுள்ளது. கடந்த நாங்கு மாதங்களில் பேஜ் 6000 தான். ஆகவே நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதுவும் ஒரு ஆப்ஜெக்டிவ் ஆக இருந்தது.

மற்ற பதிவுகளுக்கு வந்து படித்து பின்னூட்டமிடுவதை முடிந்த வரையில் செய்திருக்கிறேன்.


இந்த வாரத்தில் இடப்பட்ட பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவையாகவும் சுவையுள்ளவையாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.


ஆக இந்த நட்சத்திர வாரம் முடிந்தாலும் தொடர்வது நம் தொடர்புகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


மிக்க நன்றிகளுடனும் அன்புடனும்,

என்றும் உங்கள்

இளைய பல்லவன்.

Sunday, December 14, 2008

காஞ்சிபுரத்துக்கு வாங்க...

காஞ்சியில் முக்கியமானவை அதன் கோவில்கள், காஞ்சிப் பட்டு, காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா பிறந்த இடம், மற்றும் பல.

காஞ்சிப் பட்டு

இந்த வகைப் பட்டு இழை பெங்களூர் மற்றும் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப் படுகிறது. நெய்வது மட்டும்தான் காஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள். காஞ்சிப் பட்டு சற்று கனமாக இருக்கும். இழைகள் சற்று தடிமனாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். மற்றபடி அதிக / புதிய / காம்ப்ளிகேடட் டிசைன்களில் புடவைகள் நெய்வதில் காஞ்சியின் நெசவாளர்கள்தான் கெட்டிக்காரர்கள். எனவேதான் காஞ்சிப் பட்டு சற்று விலை அதிகம். காஞ்சிப் பட்டை முக்கிய கூட்டுறவுச் சங்கங்களிலோ, கோ ஆப்டெக்ஸிலோ, அல்லது முக்கியக் கடைகளிலோ வாங்குங்கள். மற்ற இடங்களில் வேறு பட்டை, காஞ்சிப் பட்டு என்று சொல்லிவிடலாம்.



காஞ்சிக் கோவில்கள்


காஞ்சியில் எங்காவது தடுக்கி விழுந்தால் கூட ஒரு கோவில் முன் தான் விழுவோம் என்று சொல்வது வழக்கம் அத்துணை கோவில்கள். காஞ்சியில் முக்கிய சைவத் திருத்தலங்களும், வைணவத் திருத்தலங்களும் அதிகம். அதிலும், காஞ்சியிலேயே பதினாங்கு திவ்ய தேசங்கள் உள்ளன. இது வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பாகும்.

பெரிய காஞ்சிபுரம் என்ற பகுதியில் அதிக அளவில் சிவன் கோவில்களும், சின்ன காஞ்சிபுரம் என்ற பகுதியில் அதிக அளவில் விஷ்ணு கோவில்களும் இருக்கின்றன. ஆகவே பெரிய காஞ்சிபுரம் சிவகாஞ்சி என்றும் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி என்றும் அழைக்கப் படுகிறது (காவல் நிலையங்களும் இந்தப் பெயரில்தான் இருக்கின்றன!).

மற்றொரு காஞ்சி ஜின காஞ்சி. கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்குப் பின்னால் திருப்பருத்திக் குன்றம் என்ற இடத்தில் மிகப் பழமையான சமண ஆலயம் இருக்கின்றது. இதனாலேயே இந்தப் பகுதி ஜின காஞ்சி என்று அழைக்கப் படுகிறது.


முக்கியத் திருத்தலங்கள்.

1. ஏகாம்பர நாதர் ஆலயம்.

காஞ்சியின் முக்கிய ஆலயம். மிக உயரமான ராஜ கோபுரம். இறைவன் ஏகாம்பர நாதர். இறைவி ஏலவார்குழலியம்மை.
லிங்கம் மண்ணாலானது. எனவே அபிஷேகம் இல்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்தப் படுகிறது.

ஆயிரங்கால் மண்டபம் உண்டு. இரண்டு குளங்கள் உள்ளன. இங்கு இருந்த மாமரத்தின் நான்கு கிளைகளில் நான்கு விதமான ருசியுடைய மாங்கனிகள் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பழைய மரத்தின் கிளைகள் வீழ்ந்து விட்டன. இப்போது மரம் துளிர்க்கத் துவங்கியுள்ளது. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் முக்கியத் திருப்பணிகள் விஜய நகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் மேற்கொள்ளப் பட்டவை. பங்குனி உற்சவம் மிக முக்கியத் திருவிழா.

தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். சுந்தரர் இங்கு வந்து ஒரு கண் பெற்றார். அருணகிரி நாதரும் இங்கே ஒரு பாடல் பாடியிருக்கிறார். பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்வி(பூமி)த் தலம்.


உப தகவல்கள்: காஞ்சிபுரத்தில் சினிமா ஷூட்டிங் என்றால் இந்தக் கோயிலில் தான் நடக்கும். பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இந்தக் கோயிலுக்கு சமீபத்தில் வந்திருந்தார். இந்தக் கோயில் ஆயிரங்கால் மண்டபம் படிப்பதற்கு ஏற்ற இடம். கோவிலில் ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. அங்கேதான் கிரிக்கெட் விளையாடுவோம்.




2. வரதராஜப் பெருமாள் ஆலயம்


ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ஸ்ரீ ரங்கத்தை அடுத்து மிக முக்கிய கோவில் வரதராஜப் பெருமாள் ஆலயம். தாயார் பெருந்தேவித் தாயார். கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. அதற்கு அத்தி கிரி என்று பெயர். இங்கு உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் அரிய சிற்பங்கள் உள்ளன.

அத்தி வரதர் என்ற அத்தி மரத்தாலான வரத ராஜர் சிலை இந்தத் திருக்கோவில் குளத்தின் உள்ளே வைக்கப் பட்டிருக்கிறது. 48 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த வரதர் வெளியே வருவார். ஒரு சில நாட்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. மீண்டும் நீருக்குள் போய் 48 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார்.

இங்கு தான் தங்க பல்லி, வெள்ளி பல்லி என்று இரு சிலைகள் கூரையில் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதைத் தொட்டால் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் காஞ்சியில் பல்லி விழுந்தால் எந்த தோஷமும் இல்லை.

முதலாழ்வார்கள் முதற்கொண்டு அனைவரும் பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். வைகாசியில் முக்கியத் திருவிழா. இதில் கருட சேவையும், தேரும் மிகப் பிரசித்தம். கருட சேவையன்று வானிலும் கருடன் சுற்றும். முன்பு தேர் நிலைக்கு வர 10 - 15 நாட்கள் கூட ஆகும். தற்போது புல்டோசர் வைத்து இழுத்து விடுகிறார்கள்.

இராபர்ட் க்ளைவ் ஆற்காட்டைப் பிடிப்பதற்கு முன் இந்தக்கோவிலில் வந்து ப்ரார்த்தனை செய்த்தாகவும் அது பலித்து விடவே ஆற்காட்டிலிருந்து கைப்பற்றிய பொக்கிஷத்திலேயே விலை உயர்ந்த மகர கண்டியை வரதராஜருக்குக் காணிக்கை அளித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இன்றும் விசேஷ் தினங்களில் இந்த மகர கண்டி வரதராஜரை அலங்கரிக்கிறது.

கோவில் இட்லி என்ற ஒன்றின் பிறப்பிடம் வரதராஜர் கோவில்தான். மற்ற ஊர்களில் அது காஞ்சிபுரம் இட்லி. இதன் சுவையும் செய்முறையும் அலாதி. எழுதும் போதே நாவில் நீர் ஊற்றெடுக்கின்றது.

3. காமாக்ஷி அம்மன் ஆலயம்

நகருக்கு மையமாக அமைந்துள்ளது காமாக்ஷி அம்மன் ஆலயம். காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி ஆகிய மூவரில் முதலானவர். இங்கு அம்மன் தனியாகக் கோவில் கொண்டுள்ளது மற்ற இரு கோவிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு. உக்ர காமாக்ஷியாக இருந்த அம்மனை, ஸ்ரீ சக்கரம் ப்ரதிஷ்டை செய்து ஆதி சங்கரர் சாந்திப் படுத்தினார் என்பது கோவில் குறிப்பில் காணப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்று.

மாசி மாதத்தில் முக்கியத் திருவிழா.


காஞ்சியில் ஏகாம்பர நாதர் ஆலயத்திற்கும் காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் அமைந்துள்ளது திருக்குமரக்கோட்டம் என்னும் முத்துக் குமாரசுவாமி ஆலயம். இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சோமாஸ்கந்தர் உருவங்கள் பல்லவர்கள் எடுப்பித்த கோவில்களில் நிரம்பக் காணலாம்.




4. பரமேஸ்வர விண்ணகரம் (அ) வைகுந்தப் பெருமாள் கோவில்.
5. கைலாச நாதப் பெருமான் ஆலயம்


இவையிரண்டும் பக்தி மார்க்கத்திலும், கலை, சிற்பங்களிலும் மிக முக்கியமானவை. அருமையான சுதைச் சிற்பங்கள் நிறைந்த கோவில்கள். இரண்டும் ஏ.எஸ்.ஐ-யின் பராமரிப்பில் இருக்கின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டப் பெருமாள் கோவிலிலும், சிவ ராத்திரி அன்று கைலாச நாதப் பெருமான் ஆலயத்திலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் இவை சுற்றுலாத் தலம்தான் :((.


மேலே சொன்னவற்றில் கைலாச நாதப் பெருமான் கோவில் தவிர அனைத்தும் திவ்ய தேசம்தான் !!

உலகளந்தப் பெருமாள் கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் இருக்கின்றன. பாண்டவ தூதப் பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஆகியோரும், தூப்புல், வேளுக்கை, பவளவண்ணன், திருப்புட்குழி ஆகிய கோவில்களும் இருக்கின்றன. திருப்புட்குழி காஞ்சியிலிருந்து சற்றுத் தள்ளி வேலூர் செல்லும் மார்க்கத்தில் இருக்கிறது. மற்றவை ஊரிலேயே இருக்கின்றன.

சைவக் கோவில்களில், கச்சபேஸ்வரர் கோவில், கச்சி மேற்றளி முதலியவை மிகவும் அருமையான கோவில்கள்.

இவ்வளவு கோவில்கள் நிறைந்த காஞ்சியை உங்களில் பல பேர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். அவர்களை மீண்டும் வருகவென்றும், மற்றோரை வருக வருகவென்றும் காஞ்சியின் சார்பின் அன்புடன் அழைக்கிறேன் ! ! !

Saturday, December 13, 2008

குழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்

குழந்தை வளர்ப்பதில் முதல் குழந்தை வளர்ப்பதற்கும் இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் சாம்பிளுக்கு ஆறு.


ப்ரெக்னென்சி கன்ஃபர்ம் ஆகும் போது

ரங்கு: பாத்துமா. மெதுவா. தல சுத்துதா? டாக்டர் கிட்ட போலாமா? நான் வேண்ணா லீவு போட்டுடட்டுமா?

ரங்கு: தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். இன்னிக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங். கண்டிப்பா லீவு போட முடியாது. வேணுண்ணா, நாளைக்கு சாயந்திரம் நீயே போயிட்டு வந்துடு.


டெலிவரிக்குப் பின்

ரங்கு: குழந்தையை யாரும் தூக்க விடாதே, நீயே தூக்கு. நானா. அய்யோ எனக்கு பிடிக்கத் தெரியாதே. இப்படி அழுதுகிட்டே இருக்கே, ஏதாவது குடேன்.

ரங்கு: குழந்தைய நானே வச்சிக்கிறேன். பெரியதுக்கு நீதான் வந்து சாப்பாடு போடணுமாம். அழுதா ரெண்டு தடவ ஆட்டினா சரியா போயிடுது.


வளரும் போது - மூன்று வயது வரை

தங்கு: ட்ரிங்..ட்ரிங்... ஏங்க (ஆப்ஷனல்) குழந்த அழுதுகிட்டே இருக்குங்க. என்ன பண்றதுன்னே தெரியல. உடனே சைல்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போணும். கெளம்பி வாங்க.

ரங்கு: சரி உடனே வரேன்.


ரங்கு: காலைல சின்னது அழுதுகிட்டே இருந்துதே என்னாச்சு.

தங்கு: அதுக்கு பொழுது போலன்னு அழுது. ரெண்டு அடி குடுத்தேன். நிப்பாட்டிடுச்சு.



ஸ்கூலுக்கு அனுப்பும் போது

தங்கு: ஏங்க (ஆப்ஷனல்), குழந்தைய நல்லா பாத்துக்குவங்களா? அதுக்கு மூச்சா வருதுன்னு கூட சொல்லத் தெரியாதே. நான் வேண்ணா விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்துரவா? ஸ்கூல் போமாட்டேன்னு அழுதே. அங்க அடிச்சிருப்பாங்களோ. கம்ப்ளெயின்ட் பண்ணலாமா? இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல.



ரங்கு: நேத்தி ஸ்கூல் போமாட்டேன்னு சின்னது சொன்னதே என்னாச்சு.

தங்கு: சும்மா? வீட்ல் ஒக்காந்து டோரா பாக்கணும்னு ஆக்ஷன் பண்ணுது. வெரட்டி உட்டுட்டேன்.



காலேஜ் அட்மிஷன்

ரங்கு: நல்ல காலேஜ்ல அலஞ்சு திரிஞ்சு அட்மிஷன் பண்ணனும். நாம கேக்கற சப்ஜக்ட் கெடைக்கறதுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா என்ன?

ரங்கு: கெடச்ச காலேஜ்ல கெடச்ச சப்ஜக்ட் சூஸ் பண்ணு. பரவால்ல. எல்லாமே நல்ல சப்ஜக்ட்தான். இல்லாட்டி ஏன் அதை வைக்கப் போறாங்க. நாம படிக்கறதுல தான் இருக்கு.


கல்யாணம்

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

நார்மல் டெக்ஸ்டில் இருப்பது முதல் குழந்தை டயலாக். இடாலிக்ஸில் இருப்பது இரண்டாவது குழந்தை டயலாக்.

இதன் மூலம் கிடைக்கும் நீதி. முதல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, இரண்டாம் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. முதலாவது ரொம்ப ரொம்ப ஓவர், அடுத்தது ரொம்ப ரொம்ப கம்மி.

நீங்க மொதல் குழந்தையா ரெண்டாவது (அ) அதற்கு மேற்பட்ட குழந்தையா?

Friday, December 12, 2008

இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் ?

இந்தியா ஒரு வளரும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இது பல வருடங்களாக வளரும் நாடாகவே இருந்து வருவதுதான் கவலை அளிக்கும் விஷயம். சரி, இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும்? இந்தக் கேள்விக்கு பதில் தேடிய போது கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, பின் தங்கிய நாடு என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர அதன் 'டெஃபனிஷன்' என்ன?

உலகில் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என்று நிர்ணயம் செய்கின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகியவற்றுடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் இந்த நிர்ணயத்தை வழங்குகிறது.

பொதுவாக ஒரு நாடு வளர்ந்த நாடாக இருக்க கீழ்கண்டவற்றில் பெருமளவு வளர்ச்சியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்திருக்க வேண்டும்.

1. முழுமையான ஜன நாயக அரசு ( Democratic Governments)

2. தொழில் மயமாக்கம் (Industrialization)

3. கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் (Free Market Economies)

4. சமூக நலத் திட்டங்கள் செயல் பாடுகள் (Social Programs)

5. மனித உரிமை உறுதிப்பாடு (Human Rights Guarantee)

பெரும்பாலும், யு.எஸ்.ஏ, யு,கே, ஆஸ்திரேலியா, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. இந்த நாடுகள் மேலே குறிப்பிட்ட அனைத்து குறியீடுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இஸ்ரேல், சைப்ரஸ், தென் கொரியா ஆகியவையும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளன.

இவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் வளரும் நாடுகள் அல்லது பின் தங்கிய நாடுகள். இப்போது வளரும் நாடுகளில் பல்வேறு உட்பிரிவுகள் வந்து விட்டன.

புதிய தொழில் மயமான நாடுகள் (Newly Industrialized Economies), மேலே வரும் நாடு (Emerging Economies) என்று புதிய உட்பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா, சீனா, ப்ரேசில், அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகள் 'Bigger Emerging Economies' என்று வழங்கப் படுகின்றன.

இந்த அளவில் இந்தியா வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவும், சீனாவும் 2030ல் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.

ஆக பொருளாதாரம் தான் ஒரு நாட்டை வளர்ந்த நாடா, வளரும் நாடா என்று முக்கியமாகத் தீர்மானிக்கிறது. இதில் முக்கியமான அளவுகோல் மொத்த உள் நாட்டு உற்பத்தி (Gross Domestic Product). இதையும் மொத்தமாகப் பார்க்காமல் ஒரு மனிதனுக்கு எவ்வளவு உற்பத்தி என்று பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் தெரியும். இதற்குப் பெயர்தான் Gross Domestic Product - Per Capita Level.

இதையும் இரு வகையாகப் பார்க்கலாம். ஒன்று 'நாமினல்' அதாவது உள் நாட்டு கரன்சியின் அளவு கோலில் பார்ப்பது. இது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மற்றொன்று, Purchase Power Parity, வாங்கும் சக்தியின் அடிப்படையில் பார்க்கப் படுகிறது. இது சற்று துல்லியமானது.

ஜி.டி.பி. - பெர் கேபிடா (Gross Domestic Product - Per Capita Level) அளவுகோல்.

மொத்த உள் நாட்டு உற்பத்தி (க்ராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட்) என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவு கோலாக இருக்கிறது.

ஜி.டி.பி = முதலீடு + அரசு செலவீனம் + (ஏற்றுமதி - இறக்குமதி) + உள் நாட்டு பயனீடு, அதாவது Internal Consumption

இதை நாட்டின் சராசரி மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி மனித மொத்த உள் நாட்டு உற்பத்தி. பெர்கேபிடா ஜி.டி.பி.

இந்த வகையில் இந்தியாவின் ஜி.டி.பி= 2365 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சீனா - 5300 டாலர்கள். இது பர்சேஸ் பவர் பேரிடி (Purchase Power Parity)முறையில் கணிக்கப் பட்டது.

நமது நாட்டின் பிரச்சினைகள் இரண்டு. அதிக அளவிலான இறக்குமதி, அதிக மக்கள் தொகை. இவையிரண்டும் நமது பெர் கேபிடா ஜி.டி.பி-ஐ மேலே வர விடாமல் தடுக்கின்றன.

சரா சரியாக 10000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பெர் கேபிடா ஜி.டி.பி இருக்கும் நாடுகள் வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. நமது நாடு 10000 அமெரிக்க டாலர் பெர் கேபிடா அளவை அடைய என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறிய கணக்கு.

தற்போதைய பெர் கேபிடா - 2365 அமெரிக்க டாலர்கள்.

தற்போதைய மக்கள் தொகை - 110 கோடி

மொத்த ஜி.டி.பி. = 2,60,150 கோடி அமெரிக்க டாலர்கள்

மக்கள் தொகை இதே நிலையில் இருந்தால், 10000 டாலரைக் கடக்க நமக்குத் தேவையான ஜி.டி.பி. 11 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்.

இது இந்திய ரூபாயில் 5,50,00,00,00,00,00,00,000 ரூபாய்கள்.

இதுவும் மக்கள் தொகை ஏறாமல் இருந்தால் மட்டுமே.

ஆக நாம் வளர்ந்த நாடாக ஆக வேண்டுமென்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் தொகை குறைய வேண்டும்.

என்னதான் பெரிய ஜன நாயக நாடாக இருந்தாலும், சமூக நலத் திட்டங்கள், தொழில் மயமாக்கல், தனி மனித உரிமைகள் இருந்தாலும், மக்கள் தொகை குறையாத வரையில் நாம் வளரும் நாடாகவே இருப்போம்.

இப்போது சொல்லுங்கள் நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோமா இல்லையா? இந்த வளர்ச்சி சரியானது இல்லை தானே.

வாசித்தல் அனுபவம்

என்னை தொடருக்கு அழைத்த நண்பர் குடுகுடுப்பைக்கு நன்றி.

படிப்பது என்பது இப்போது என்னைப் பொறுத்தவரை மூச்சுவிடுவது போல் இயற்கையான செயலாகி விட்டது. சாப்பிடும் போது தட்டில் உணவிருக்கிறதோ இல்லையோ பக்கத்தில் புத்தகமோ, நாளிதழோ இருக்க வேண்டும். அது எத்தனையாவது முறை படிக்கப் படுகிறது என்பது ஒரு பொருட்டல்ல. இதற்காக தங்கமணியிடம் எவ்வளவோ திட்டு வாங்கியும் ஒன்றும் மாறவில்லை. தங்க்ஸ் விக்ரமாதித்தி. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராததால் இப்போதும் திட்டுக்கள் தொடர்கின்றன.

எனக்கு நினைவு தெரிந்து மூன்றாவது படிக்கும் போது அம்புலிமாமா படிக்க ஆரம்பித்தேன். வந்தவாசியில் அண்ணன் (பெரியப்பா மகன்) இருந்தார். அவரும் பெரியப்பாவும் அம்புலிமாமா, பாலமித்ரா தவிர மாயாஜாலக் கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். மந்திரக் குகை, ஏழுகடல் தாண்டி பூவில் அரக்கன் உயிர் என்று ஞாபகம் இருக்கிறது. ஸ்டார் காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் முதலியவை படித்திருக்கிறேன்.

வந்தவாசிக்கு அருகில் ஆரியாத்தூர் என்று ஒரு கிராமம். அங்கு பெரியப்பா இருந்தார். அந்த ஊரில் ஒரு அக்கா இருந்தார்கள். அவர்கள் ராணி முத்து படிக்கத் தருவார்கள். குரும்பூர் குப்புசாமியின் ஒரு கதை படித்தது ஞாபகம் இருக்கிறது. இதெல்லாம் ஐந்தாவது படிக்கும் போது. இவையின்றி திருப்பதிக்குச் செல்லும் போது அங்கு தேவஸ்தானப் பதிப்புகளாக பக்திக் கதைகளும், இராமகிருஷ்ண விஜயமும் பக்தி ரசம் வார்த்தன.

ஆறாவது படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு லைப்ரேரியன் குடியிருந்தார். அவர் பலப்பல சிறுவர் கதைப் புத்தகங்கள் படிக்கத் தருவார்.

இப்படியாக எல்லாம் படித்து விட ஏழாவது வகுப்பில் படிக்கும் போது, பெரிய காஞ்சிபுரம் கிளை நூலகத்தில் மெம்பரானேன். அங்கு முதலிலேயே கண்ணில் பட்டது பொன்னியின் செல்வன் நாலாம் பாகம். முதலில் அதைப் படித்து, பிறகு கிடைக்கும் பாகங்களையெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக படித்தது படித்த மாதிரியே இல்லை. மீண்டும் ஒரு முறை நூலகரிடம் சொல்லி வைத்து வரிசையாகப் படித்து முடித்தேன். இடையே, தமிழ்வாணன், கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன், லக்ஷ்மி, எஸ்.வி.வெங்கட்ராம், ராஜேந்திரன், தேவன், பிரபஞ்சன் என்று பலரும் அறிமுகமானார்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கருத்துத்தாகத்தில் இலக்கியப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து முடியாமல் விட்டுவிட்டேன்.

பனிரெண்டாம் வகுப்பிற்குள், இவையெல்லாம் முடிந்துவிடவே, ஆங்கிலப் புத்தகங்களை முயற்சிக்கலாம் என்று முதலில் ஜேம்ஸ் ஹாட்லி சேசைப் படிக்க ஆரம்பித்தேன். சுத்தமாகப் புரியவில்லை. வீம்புக்காக ராபர்ட் லுட்லும், ஜேனாதன் ப்ளாக் ஆகியோரின் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். புத்தகம்தான் கையில் இருந்ததே ஒழிய, உள்ளே ஒன்றும் ஏறவில்லை.

இதற்குப் பிறகு, ஒரு ப்ரின்டிங் பிரசில் வேலை செய்து கொண்டே, பி.காம் படிக்க வேண்டியிருந்தது. இது மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அம்பேத்கார் பற்றிய ஒரு புத்தகம் நான் வேலை செய்த அச்சகத்தில்தான் தயாரித்தார்கள். மற்றொரு புத்தகம் திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரின் 'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா' இதை படித்த பிறகுதான் சரித்திரத்தில் மிகுந்த ஆவல் ஏற்பட்டது. இப்போது புது எடிஷன் வாங்கியிருக்கிறேன்.

இந்தக் காலத்தில்தான் பட்டாம்பூச்சி (தி பாபில்யான்) தமிழில் கிடைத்தது. அது உண்மைக் கதை என்றாலும் பெரும்பாலும் புனைவாகப் பட்டது. அருமையான புத்தகம். கிடைத்தால் மறக்காமல் படியுங்கள்.

இதனூடே, பாக்கெட் / மாத நாவல்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல, 'ஙே' ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன், தேவிபாலா மற்றும் பலர் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. பாலகுமாரன் எழுத்தில் மயங்கிப் போய் இருந்தேன். ஆனால் அவரது எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் என்னையும் மாற்றிவிட்டது.

இன்னும் நான் சொல்லாத மூவர் கல்கி, சுஜாதா, சாண்டில்யன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்கள் இவர்கள்தான். கல்கியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப் பட்ட பின் அவரது பொன்னியின் செல்வன், அலையோசை, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் அடங்கிய ஒரு கிட் வாங்கினேன். இது வரை பொ.செ. எத்தனை முறை படித்திருப்பேன் என்ற கணக்கையே விட்டுவிட்டேன். இப்போது படித்தாலும் புதிதாக ஒன்று தென்படும்.

சாண்டில்யனின் யவன ராணிதான் நான் முதலில் படித்த நாவல். பிறகு விலை ராணி, ஜலதீபம், ராஜ பேரிகை, ராஜ முத்திரை, கடல் புறா என அனைத்து முக்கிய நாவல்களையும் முடித்து விட்டேன். இவற்றில் பெரும்பாலானவை என்னுடைய அலமாரியை அலங்கரிக்கிறது.

சுஜாதாவை எப்போது படித்தாலும் முடிவில் ஒரு வியப்பு தொங்கி நிற்கும். என் இனிய இயந்திரா. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மிகவும் பிடித்தவை. காந்தளூர் வசந்தகுமாரன் கதையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சி.ஏ. படிக்கும் போது, சி.ஏ. இன்ஸ்டிடியூட் லைப்ரரியுடன் சென்னை கன்னிமாரா, யு.எஸ்.ஐ.எஸ். லைப்ரரி, ப்ரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி மெம்பர்ஷிப்களையும் சேகரித்துக் கொண்டேன். இவற்றில் இருந்து பெரும்பாலும் சி.ஏ. சார்ந்த புத்தகங்கள் தான் படித்தேன். ஆனால் கன்னிமாராவில் நல்ல நல்ல வரலாற்றுப் புத்தகங்களெல்லாம் கிடைக்கும். கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் அங்குதான் படித்தேன்.

இடையே, ஆங்கிலப் புத்தகங்களின் பால் மீண்டும் மோகம் கிளம்பியது. இந்த முறை ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் நன்றாக இருந்தது. ஜான் க்ரிஷாமின் தி ஃபர்ம், ரெயின் மேகர் ஆகியவை மிகப் பிடித்த நாவல்கள். நார்மன் வின்சன்ட் பீல்-ன் 'த பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்' த பவர் ஆஃப் பாசிடிவ் லிவிங் ஆகியவை படித்திருக்கிறேன். ஐ ஆம் ஓகே யூ ஆர் ஓகே அருமையான உளவியல் புத்தகம். இவ்வளவுதான் என் ஆங்கிலப் புத்தக அறிவு.

இவற்றுடன் வழக்கமாக வாலிப வயதில் படிக்க வேண்டிய புத்தகங்களும் படித்திருக்கிறேன்;).

இணையத்தின் அறிமுகத்திற்குப் பிறகு படிப்பது அதிகமாகி விட்டது. விக்கிதான் முதல் ரெஃபரென்ஸ். பதிவுலகம் பார்த்தபின் சொல்லவே வேண்டாம்.

வரலாறு.காம் என்று ஒரு தளம் இருக்கிறது. அங்கு சே.கோகுல் என்பவர் சரித்திரத் தொடர் எழுதுகிறார். ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ரெஃபரன்ஸ் கொடுத்திருப்பார். அதுதான் அவர் ஸ்பெஷாலிடி. அவரைப் பார்த்துதான் சக்கர வியூகம் எழுதவேண்டும் என்ற ஆவல் வந்தது.

கவிதைகள் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. கி.ராஜ நாராயணன், புதுமைப் பித்தன், லா.ச.ரா ஆகியோரை அவ்வப் போது படித்ததுண்டு. ஆனால் எதுவும் நினைவில் இல்லை. மு.வ. வின் அகல் விளக்கு என்னைப் பெரிதும் பாதித்த நாவல். மிகப் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்டது. பொது அறிவு சம்பந்தப் பட்ட எதையும் படித்து விடுவேன்.

விகடன், குமுதம், கல்கி, துக்ளக், நக்கீரன், ஜூ.வி., மங்கையர் மலர், பக்தி ஸ்பெஷல், சக்தி விகடன், பிசினஸ் இன்டியா, பிசினஸ் டுடே, அவுட்லுக் ஆகிய வார மாத இதழ்களும், கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர்களும் சேர்ந்திசை வாசித்திருக்கின்றன.

ஆக கண்டதையும் படிப்பவன் என்று சொல்லிக் கொள்ளலாம். என்னை உண்மையான வாசிப்பாளி என்று கூறியுள்ளார் குடுகுடுப்பையார். என் அனுபவத்தைப் படித்து விட்டு அவர் சொன்னது சரியா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

SUREஷ்
சதீசுகுமார்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நிறைவுப் பகுதி

முதல் பகுதி

முதலில் இருந்த ஒரு இறுக்கமான சூழ நிலை இப்போது இல்லை. மிஷின் விவகாரத்தில் ஐஸ் ப்ரேக் ஆகி விட்டிருந்தது. அவள் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள். தினமும் லேட்டாகத் தான் கிளம்புவாள். அவள் வீடும் என் வீடும் ஒரே பகுதி என்பதால் என் வண்டியிலேயே ட்ராப் செய்து கொண்டிருந்தேன். கம்பெனியில் வேலை செய்யும் மற்ற மேனேஜர்களின் வீடு நேரெதிர் பகுதி என்பதால் என்னைத்தான் நம்பியிருந்தாள்.

அது ஃபாக்டரி. ஐ.டி. கம்பெனி அல்ல. ஃபாக்டரியில் பெண்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அக்கவுன்ட்ஸ், பில்லிங், கமர்ஷியல் ஆகிய துறைகளில்தான் பெண்களைப் பார்க்க முடியும். அதுவும் அவர்களுடைய ட்ரஸ் சென்சைப் பார்த்தால் 70ஸ் 80ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். பெண்களுடன் பேசுவதே ஒரு டபூ. இந்த சூழலில் சுவேதா என்னுடன் பழகுவதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அவள் ஐ.டி. கம்பெனியிலிருந்து வந்திருக்கிறாள் (அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறாள்) என்பதால் தவறாக எண்ணவில்லை.

திடீரென்று ஒரு நாள் எனக்குப் பார்ட்டி கொடுக்கிறேன். நாளை அடையார் பார்க் போகலாம் என்று கூறினாள்.

===

ஏன் அடையார் பார்க்கிற்கு வந்தோம் என்று ஆகிவிட்டது. நானும் சைவம். அவனும் சைவம். பேசாமல் ஒரு நல்ல உடுப்பி ஹோட்டலுக்கு சென்றிருக்கலாம் என்று வாய் வரை வந்ததை விழுங்கிவிட்டேன். ஒருவேளை திண்ணிப் பண்டாரம் என்று நினைத்துவிட்டால்.

பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி பேசினோம். பிடித்தது, பிடிக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது கேட்காதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் தெரிந்து கொண்டோம்.

முதலில் பிடிக்காமல் வேலைக்குச் சேர்ந்த நான், இப்போதெல்லாம் எப்பொழுது ஃபாக்டரிக்குச் செல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். ஏன். எனக்கே தெரியவில்லை.

===

சி.டபள்யூ.ஏ. பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதை முடித்து விட்டால் நேரடியாக மேனேஜராக ப்ரமோஷன் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டார் ஜி.எம். ஆனால் என்னால்தான் படிக்க முடிவதில்லை.ஏனென்று புரியவில்லை. எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று கஷ்டப்பட்டு படித்தும் பாதிதான் ஏறுகிறது. என்ன செய்வது. சுவேதாவைக் கேட்கலாம்.

===

எனக்கு சஜஷன் சொன்னவன் என்னிடமே கேட்கிறான். என்ன சொல்வது. அவன் மனது அலைபாய்வது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என் மேல் ஏதாவது ஈடுபாடு இருக்கலாமோ? இருந்தால் நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே. ஏன் இப்படி செய்கிறான். மனதிற்குள் நன்றாகத் திட்டினேன். சரி நாமே ப்ரபோஸ் செய்யலாம். அதையும் அவன் பாஸ் செய்தவுடன் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். நிச்சயமாக மறுக்க மாட்டான். தேவையான இன்டிகேஷன்கள் கிடைத்துவிட்டன.

பாஸ் செய்தால் அவன் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் தருவதாக ப்ராமிஸ் செய்தேன். என்ன ட்ரீட் என்று முடிவும் செய்துவிட்டேன்.

===

என்ன ட்ரீட் ஆக இருக்கும். ஏற்கனவே பெரிய ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து விட்டாள். அதைவிட பெரிய ட்ரீட் இருக்க முடியாது. ஏதாவது வாங்கித் தரப் போகிறாளா? அவளைச் சுற்றியே மனம் திரிகிறதே. ஒரு வேளை... அது தானா இல்லையா. கேட்டுப் பார்க்கலாமா? கேட்டு ஏதாவது ஏடாகூடமாகப் போய்விட்டால்? இருப்பதும் போய்விட்டால்...

குழப்பமாக இருந்தது. சரவணா.. மனதை ஒருமுகப் படுத்து. படி. பாஸ் செய். பிறகு உனக்கே தெரிந்து விடுகிறது. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஜி.எம். கூடுதல் லீவும் கொடுத்து விட்டார். மொத்தமாக 25 நாட்கள். தேர்வு நாட்களையும் சேர்த்து. செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஃப்ரென்ட் வீட்டிற்குப் படிக்கப் போய்விட்டேன். அங்கிருந்தே எக்சாம் எழுதினேன். நன்றாக எழுதி முடித்துவிட்டேன்.

சுவேதா கேட்ட போது, சுமார்தான் என்று உதட்டைப் பிதுக்கினேன். நல்ல ரிசல்ட் வந்தால் சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று.

===

சரவணன் தேர்வெழுத லீவ் போட்டிருக்கும் போது என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. பையன் யு.எஸ்.-ல் இருக்கிறான். நான் அங்கே சென்ற பிறகு இன்ஸ்ட்ருமென்டேஷனிலேயே வேலை செய்யலாம்.

யாரும் என்னைக் கேட்கவில்லை. சம்பிரதாயத்திற்குக் கேட்ட போது மவுனமாக இருந்தேன். சம்மதம் என்று எடுத்துக் கொண்டார்கள்.

என்ன முடிவு செய்வது. சரவணனுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ட்ரீட் என்னாவது. அவனே சுமாராக எழுதியிருக்கிறேன் என்று சோகமாகச் சொன்னானே. பிறகு எப்படி ப்ரபோஸ் செய்வது? அப்பா வேறு நிறைய ஆசை வைத்திருக்கிறார். தங்கை வேறு இருக்கிறாள். எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் இது போல் எதுவும் நிகழ்ந்ததில்லை. இப்படி ஏதாவது செய்து ஏடாகூடமாக ஆகி விட்டால்? நினைக்கவே பயங்கரமாக இருந்தது.

அவன் நன்றாக எழுதவில்லை என்று சொன்னது ஆறுதலைத் தந்தது. ஃபெயிலாகிவிட்டால் ட்ரீட் என்று ப்ரபோஸ் செய்ய முடியாது.

அப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுத்தேன்.

===

சுவேதா திருமணத் தகவலைச் சொன்ன போது என்ன செய்வதென்றே தோன்றவில்லை. இப்போது சொல்லிவிடலாமா? வேண்டாம் என்று முடிவெடுத்தேன். திருமண நாளன்றுதான் எனக்கு ரிசல்ட் வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றேன்.

===

திருமணத்திற்கு முன் வேலையை ரிசைன் செய்துவிட்டேன். மணப்பெண் கலராகவும், பூசினாற்போலவும் இருக்கவேண்டுமாம். ஆகவே வீட்டிலேயே ஈட்டிங் ட்ரீட்மென்ட்.

திருமணம் காலையில் முடிந்தது. மாலையில் ரிசப்ஷன். பரிசுடன் வந்திருந்தான் சரவணன்.

===

மேரேஜ் கிஃப்டைக் கொடுத்துவிட்டு பாஸ் ஆன செய்தியையும் தெரிவித்துவிட்டு, உங்கள் மனைவி நான் பாஸ் செய்தால் ஒரு ட்ரீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று சுவேதாவின் கணவனிடம் கூறினேன். அவன் மையமாகச் சிரித்தான். சுவேதாவிடமிருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. கிஃப்ட் கொடுப்பதற்காக மற்றவர்கள் அவசரப் படுத்தினார்கள். சாப்டுட்டு போங்க என்றான் மணப்பையன்.

(முடிந்தது)
* * * * *

இது ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் ஸ்டைலில் எழுதப்பட்டது. உரையாடல்களே இருக்காது. நடை எப்படி இருக்கிறது என்பதையும் சற்றுத் தெரிவியுங்கள்.

Thursday, December 11, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...9

அத்தியாயம் 9 - வீரபாண்டியன் காதல்

அடுத்த நாள் இளவழுதி திருவரங்கத்திற்குப் பயணப்பட்டான். வீரபாண்டியனும் மதுரைக்குக் கிளம்பலாம் என்று முடிவு செய்த போது, மாராயர் இளவழுதி திரும்பிவரும்வரையில் தாமதிக்குமாறு கூறினார். அவர் பேச்சைத் தட்ட முடியாத வீரபாண்டியன் அங்கேயே தங்கினான். பகலில் மாராயர் ஏதோ வேலையாக ஊராருடன் சென்றுவிட்டார். வீட்டில் பெண்களுடன் வீர பாண்டியன் மட்டும் இருந்தான்.

எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றன. மனம் ஒரு நிலையில் இல்லாத வகையில் மாலை வரை தன் அறையிலேயே அடங்கிக் கிடந்தவன் எங்காவது செல்வோம் என்று வெளியில் கிளம்பினான்.

வாயிலில் அவனை மறித்த கயல்விழி (இளவழுதியின் தங்கை), 'எங்கே செல்கிறீர்கள் என்று கேட்கலாகாது. ஆனால் உங்கள் சகோதரர் காணாமல் போனது போல் வழிதவறிப் போய்விடாதீர்கள்' என்றாள். இயற்கையிலேயே அவள் பேச்சில் எள்ளல் துள்ளி விளையாடும். இப்போது அப்பிராணி போல் வீர பாண்டியன் அகப்பட்டு விட்டானல்லவா. அது மேலும் கற்பக விருட்சமாய் வளர்ந்தது.

ஏற்கனவே கேட்ட செய்திகளால் நொந்து போயிருந்தான் வீர பாண்டியன். 'என்னைச் சிறையெடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் வெளியில் சென்று வரக்கூட சுதந்திரம் இல்லையா?' .

'ஏன் கோபப் படுகிறீர்கள். நான் என்ன தவறாகப் பேசிவிட்டேன். நீங்கள் எங்கள் விருந்தாளி. உங்களைக் கவனிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இல்லத்தில் தந்தையும் இல்லை, அண்ணனும் இல்லை. இப்போது என் அதிகாரம்தான். ஆகவேதான் அவ்வாறு கேட்டேன். உங்களுக்கு இல்லத்தில் பொழுது போக வில்லையென்றால் சற்று காலார கழனிப்பக்கம் சென்று வரலாம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால்' என்றாள் சிரித்த வாறே.

இயற்கையிலேயே கூச்ச சுபாவமுள்ளவன் வீர பாண்டியன். பெண்களிடத்தில் அதிகப் பழக்கமில்லாதவன். 'எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை' என்றான்.

இருவரும் சற்று நேரம் ஏதும் பேசாமல் நடந்து வந்தார்கள். இது கயல்விழியின் இயல்புக்கு மாறானதாகையால், 'உங்களுக்கு பேசவே தெரியாதா?' என்று வம்புக்கிழுத்தாள். இப்படியே இருவரும் பேசிப்பேசி இரவுக்குள் ஒரு வரம்புக்குள் வந்து விட்டார்கள்.

அன்று இரவெல்லாம், வீரபாண்டியனும் தூங்கவில்லை, கயல்விழியும் தூங்கவில்லை. இருவரும் தன் சுயத்தை இழந்து விட்டதாக எண்ணினார்கள். அதே சமயம் வேறொன்று தன்னில் புகுந்ததாகவும் நினைத்தார்கள். அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னவென்று தெரியாவிட்டாலும் அது நல்லதென்று உணர்ந்தார்கள்.

கடமை அழைப்பு காத்திருக்கக் காதல் கவிந்தது கள்வனின் நெஞ்சில். ஆம், வீரபாண்டியன் தான் கயல்விழியின் உள்ளம் கவர்ந்த கள்வனாகிவிட்டானே! காதலும் வீரமும் தமிழரின் இரு கண்ணல்லவா? அதனால்தானே, அகநானூறும் புறநானூறும் தீந்தமிழில் இருக்கின்றன.

மறு நாள் காலை.

இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர். காலை போஜனத்திற்குப் பின் மீண்டும் வெளியே செல்ல யத்தனித்தான் வீர பாண்டியன். அவனுக்குத் துணையாக கயல்விழியையே அனுப்பினார் மாராயர்.

தற்போது கயல்விழி மவுனம் சாதித்தாள்.

'ஏன் கயல், ஒன்றுமே பேசாமல் வருகிறாயே. நேற்று அவ்வளவு பேசினாயே. என்னவாயிற்று. எல்லாம் நேற்றே பேசியாயிற்றா?'

'இல்லை. பேச வேண்டியது நிரம்ப இருக்கிறது. எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது தான் தெரியவில்லை'

'உன் கண்களெனும் வில்லை எடு. காதலெனும் கணைகளை விடு' என்று சொல்லமுடியுமா என்ன? வீர பாண்டியன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான். 'அட தானும் கவிஞனாகிவிட்டோமோ' என்று எண்ணினான்.

'நீ சொல்வதெல்லாம் தேவையானதுதான். சொல்லாததெல்லாம் தேவையற்றதுதான். ஆகவே ஏதாவது பேசு' என்று உபசாரமாகக் கூறிவைத்தான்.

அவளால் அப்போதும் ஒன்றும் பேச முடியவில்லை. பெருமூச்சு ஒன்று வெளிவந்தது. உடல் எழுந்து தணிந்தது. உள்ளத்தீ எழுந்தது. தணியவில்லை.

இருவரும் நடந்து செல்லும் போது அவ்வப்போது ஏற்படும் உரசல்கள் அவர்களுக்குள் இருந்த தீயை மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்தன.

ஒரு நாளில் ஏற்படும் இந்த மாற்றம் நிலைக்குமா? என்று வினவிக்கொண்டான் வீர பாண்டியன். ஒரு நிலையில் இல்லாத கயல்விழியால் ஒன்றையும் கோர்வையாக நினைக்க முடியவில்லை. தன்னையே வைது கொண்டாள்.

இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்த வீர பாண்டியன் 'கயல்விழி' என்றான் மென்மையாக.

அவன் குரலும் அழைத்த விதானமும் அவள் உள்ளக் கிளர்ச்சியை அதிகப் படுத்தின. 'ஹூம்' என்ற ஒற்றை வார்த்தை கிளம்பியது பெருமூச்சுடன்.

'உடல் நிலை சரியில்லையா. வேற்கிறார்ப்போல் இருக்கிறதே' என்று தொடமுயன்றான்.

என்ன இருந்தாலும் தமிழ்ப்பெண்ணல்லவா. சற்று விலகினாள் கயல்விழி. 'இ..இல்லையே. எ..எப்போதும் போல்தான் இருக்கிறேன்'.

'கயல். எனக்கு எதையும் பூடகமாகப் பேசிப் பழக்கமில்லை. கடந்த இரு தினங்களாக என் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை என்னால் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கிறேன். இந்நிலையில் நேற்று உன்னுடன் பேசியது முதல் நான் நானாக இல்லை. கடமை என் கண் முன் இருக்க, என் மனம் உன் முன் இருக்கிறது. இதற்கு மேல் தாமதித்தால் நான் மதியிழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நேரடியாகக் கேட்கிறேன். நான் நீ என்னை மணக்கச் சம்மதமா?'

அவன் கேட்டு விட்டான். அவளால் கேட்கமுடியவில்லை. பதில் சொல்லவும் துணிவில்லை. 'சே, நேற்றுவரை இருந்த கயல்விழி என்னவானாள். எத்தனை பேரை நாம் எள்ளி நகையாடியிருக்கிறோம். நம் நிலையும் இவ்வாறு ஆகிவிட்டதே' என்று தன்னையே திட்டிக் கொண்டாலும் அதிலும் ஒரு வித சந்தோஷம் இருப்பதை எண்ணி உள்ளூர நகைத்தாள். அது அவள் இதழோரம் புன்னகையாக வெளிப்பட்டது.

'உன் புன்சிரிப்பை, சம்மதமென்று கொள்ளலாமா?'

'ஆண்களைப் போல் வாய்ச்சொல்லில் வீரர்களல்ல பெண்கள். நாங்கள் உள்ளத்தால் ஒருவனை நினைத்த பின் உருவத்தால் மாற்றான் சொல் கூடக் கேட்க மாட்டோம். உங்களுடன் இவ்வளவு நேரம் இருக்கும் போதே தெரியவில்லையா' எப்படியோ கோர்வையாகச் சொல்லி விட்டாள் கயல்விழி.

இனித் தாமதமென்ன. 'நன்றி கயல்விழி. உன்னால் பாலைவனமான என் வாழ்வில் வசந்தம் பூத்தது. எரிமலையாய் இருந்த என் நெஞ்சத்தில் தென்றல் வீசுகிறது.' என்று அவள் கரம் பற்றினான் உரிமையுடன்.

சிலிர்த்து நின்றாள் கயல்விழி. சில்லிட்டது அவள் கைகள். 'ஐயா. தங்களுக்கு எப்படியோ தெரியாது. நான் என்னை உங்களுக்குக் கொடுத்து விட்டேன். இனி எதுவாயினும் உங்களுடன் தான். ஆனால் என் தந்தையும், சகோதரனும் என்ன சொல்வார்கள் என்று நினைத்தால் சற்று வேதனையாக இருக்கிறது'

'கவலைப் படாதே கயல்விழி. இப்போதே உன் தந்தையிடம் இதைப் பற்றி பேசுகிறேன். மதுரைப் பிரச்சனை முடிந்தவுடன் நமது திரும்ணம்'

சற்று யோசித்த கயல்விழி, 'நானும் உங்களுடன் மதுரைக்கு வருவேன். இப்போதே. அதற்கு ஒரு திட்டமிருக்கிறது' என்றாள் உறுதி கண்களில் மின்ன.

சட்டென்று மாறிய அவள் சிந்தனையை கண்டு பிரமித்து நின்றான் வீர பாண்டியன்.

(தொடரும்)

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

வணக்கம். என் பெயர் சரவண முத்துக் குமார். சுருக்கமாக சரவணன். எம்.காம் வரை படித்து விட்டு, ஒரு ஆட்டோமொபைல் ஒ.இ.எம். கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசராகக் கடந்த 6 வருடங்களாகப் பணிபுரிகிறேன். இடையே ஐ.சி.டபள்யூ.ஏ. வுக்கும் படித்துத் தேர்வெழுதி வருகிறேன். இது முடித்தால் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைக்கும்.

நான் இதுவரை ஃபெயிலானதில்லை. இதை வைத்து என் வயதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லையல்லவா?. வீட்டில் நான் இரண்டாவது பிள்ளை. அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. தந்தை அரசாங்க அதிகாரி. தாய் ஹோம் மேக்கர். எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை. தற்போது இந்த விவரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

என் நிறுவனம் ஒரு வெளி நாட்டுக் கார் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த பாகங்கள் ஃபாக்டரிக்கு சப்ளை செய்வதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.

ஆனால் நாங்கள் பில்லிங் செய்வது அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் விங்கிற்குத்தான். இது போக வெளி நாட்டிலுள்ள இந்தக் கம்பெனியின் ஃபாக்டரிகளுக்கும் சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த கம்பெனிப் பொருட்களில் கடந்த மூன்று மாதங்களாக குவாலிடி பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. ரிஜக்ஷன், ரீ-வொர்க் என வேலைப்பளு அதிகமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது நான் பணிபுரியும் நிறுவனத்தின் இமேஜையே பாதித்து விட்டது.

நான் காஸ்ட் அக்கவுண்டன்சி படித்து வருவதால், ஒரு பெரிய அனலசிஸ் செய்து குவாலிடி பிரச்சனையால் லாபம் 35% வரை குறையும் என்று ஒரு விரிவான அறிக்கை அளித்திருந்தேன். இந்த அறிக்கை என் வாழ்வின் போக்கையே மாற்றும் என்று தெரிந்திருந்தால் இதை தயாரித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

=====

வணக்கம். என் பெயர் சுவேதா. படித்தது பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன். எனது ஃபேவரிட் கல்லூரியில் ட்ரிபிள் ஈ யோ, சி.எஸ்-சோ. கிடைக்காததால் கிடைத்த இன்ஸ் ட்ருமென்டேஷனில் சேர்ந்து விட்டேன். என்னுடன் கல்லூரியில் ட்ரிபிள் ஈ, சி.எஸ் சேர்ந்தவர்களுக்கு மூன்றாமாண்டே கேம்பசில் ப்ளேஸ்மென்ட் ஆகிவிட, அப்போதுதான் ஏண்டா இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தோம் என்று வேதனைப் பட்டேன்.

நல்ல வேளையாக படித்து முடித்தவுடன், உலகின் மிகப் பெரிய இன்ஸ் ட்ருமென்டேஷன் கம்பெனியில் பூனாவில் வேலை கிடைத்தது. எல்லோருக்கும் ட்ரீம் ஜாப்-ஆக இருக்கும் இந்தக் கம்பெனியில் வேலை கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்தது. இப்போது வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடம் முடிந்து விட்டது.

சேர்ந்தது முதல் டூர் தான். இந்தியா, ஜெர்மனி, யு.எஸ்., சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என கோபால் பல்பொடி கணக்காக உலகம் சுற்றும் வாலிபி ஆகிவிட்டேன். இதுதான் பிரச்சனையாக முடிந்திருக்கிறது.

வீட்டில் நான் தான் முதல் பெண். தங்கை ஐ.டி. ஃபைனல் இயர் படிக்கிறாள். எனக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என்பது அப்பாவின் எண்ணம். இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே பெண் பார்ப்பது?

ஆகவே, சென்னைக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விடு என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இங்கே அனுப்பமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கம்பெனிக்கு சென்னையில் மிகப் பெரிய கிளை உள்ளது.

நான் வராமல் போகவே, அப்பாவே சென்னையில் அவருடைய நண்பர் ஜி.எம்.ஆக இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.உடனே ஜாயின் செய்ய வேண்டுமாம். நேரில் தகவல் சொல்கிறாராம். இங்கே, பேப்பர் போட்டுவிட்டு, உடனே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். வேலையைப் பற்றி விசாரித்தேன்.

அடக் கடவுளே, ஒரு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஓ.இ.எம். கம்பெனியில் குவாலிடி பிரச்சனையாம். ஆகவே என்னை குவாலிடி மேனேஜராகப் போட்டிருக்கிறார்களாம். என்ன கொடுமை சரவணன் இது, என்று கேட்டேன் அப்பாவிடம். அவர் பெயர் சரவணன் இல்லை. ஆனால் இதே பெயரை தினமும் உச்சரிப்பேன் என்று எனக்கு அப்போது தெரியாது.

===

எனது அறிக்கை நன்றாக வேலை செய்தது. குவாலிடியில் எப்படி பாகங்கள் க்ளியர் ஆகிறது என்று யாருக்கும் புரிய வில்லை. குவாலிடி மேனேஜர் ஒரு பெருசு (பெரியவர்கள் மன்னிப்பார்களாக). அவர் முதலில் ஒரு பட்டறையில் டீ வாங்கிக் கொடுத்து தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

படிப்படியாக முன்னேறி தற்போது குவாலிடி மேனேஜராக உள்ளார். வண்டியைப் பற்றி நல்ல அனுபவம் உண்டு. ஒரு வண்டியை பிரித்து மீண்டும் கட்டி விடுவார். ஆனால் குவாலிடி என்பது அவருடைய சிலபசில் இல்லை. ஆனாலும் ஜி.எம். சொல்லைத் தட்டாமல் குவாலிடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம் என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆட்டோ குவாலிடி மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கொடுத்தார். அந்த மிஷினின் விலை 150 லட்ச ரூபாய். அந்த மெஷினைத் தயாரித்த கம்பெனியிடம் கேட்ட போது அவர்களும் இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

உடனே மிஷினை மாற்ற விரும்பவில்லை நிர்வாகம். எனவே, குவாலிடிக்கு ஒரு புது ஆளைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் ஒரு பெண்ணாம். ஃபாக்டரி ஹெட்டிற்கு ப்ரொடக்ஷன் ப்ரச்சனையைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் இன்னொரு ஃபாக்டரியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் குவாலிடி பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுத்ததால் அந்தப் பெண்ணை எனக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லிவிட்டார். அவள் குவாலிடி மேனேஜரிடமிருந்து இன்டிபென்டன்டாக இருக்க வேண்டுமாம். என்ன கொடுமை சரவணா இது என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

===

அந்தக் கம்பெனி நகரத்திலிருந்து மிகத் தள்ளி இருந்தது. கம்பெனி வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வரும். வேலை அப்படியில்லையே. ஒரு எம்.என்.சி.யில் வேலை செய்துவிட்டு இங்கு எதுவுமே பிடிக்க வில்லை. போதாதற்கு ஒரு அக்கவுன்ட்ஸ் ஆபீசருக்கு ரிப்போர்ட் செய்யவேண்டுமாம். அவனுக்கு என்ன தெரியும் நான் அவனிடம் ரிப்போர்ட் செய்ய. என்ன செய்வது. எல்லாம் நேரம் என்று அவனிடம் சென்றேன்.

===

பழைய குவாலிடி மேனேஜர் மெஷினை மாற்ற வேண்டும் என்று சொன்னதால், முதலில் மெஷினை செக் செய்யுமாறு சுவேதாவிடம் சொன்னேன். ஏதாவது உள்ளே பழுதடைந்து இருக்கலாம் என்ற என் சந்தேகத்தையும் சொன்னேன். அவள் சரியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இவன் என்ன சொல்வது, நாம் எஞ்சினியர் என்ன கேட்பது என்ற நிலையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் நடக்காதுமா என்று நினைத்துக் கொண்டு, மாலை ரிவியூ செய்யலாம் என்று சொல்லி வெளியில் சென்றுவிட்டேன்.

===

முதலில் வேறு விதமாக ட்ரை செய்து பார்த்தேன். சென்சார், ப்ரோக்ராம் என்று எல்லாவற்றையும் செக் செய்தும் பேக் டு ஸ்கொயர் ஒன் தான். சரி சரவணன் சொன்னதை ட்ரை செய்து பார்க்கலாம் என்று மிஷினை ஆராய்ந்தேன். என்னுடைய பழைய கம்பெனியின் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாகங்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொன்றாக ஆராய்ந்த போது, ஹுர்ரே!! டக்கென்று அந்த ஃப்ளா பிடிபட்டது. எர்ரர் வேல்யூ டிடெக்ட் செய்யும் சர்க்யூட் ஷார்ட் ஆகி பைபாஸ் ஆகி விட்டிருக்கிறது. எனவே, எர்ரர் வேல்யூ வந்தாலும் பைபாஸ் ஆகி விடுவதால் குவாலிடி ஓக்கே என்று வந்து விடுகிறது.

இதைக் கண்டு பிடித்து ரிப்போர்ட் கொடுத்தவுடன் நான் நோபல் பரிசுக்குத் தகுதியானவள் போல் எல்லோரும் என்னைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஓவர் நைட் என்னுடைய வேல்யூ எகிறிவிட்டது. என் அப்பாவிற்கே ஜி.எம் ஃபோன் செய்து, உன் பெண் ஒரு ஜீனியஸ் என்று சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார். சி.டி.சி.யில் 50% இன்சென்டிவும் கொடுத்து விட்டார்

இதற்கெல்லாம் காரணம் சரவணனின் சஜஷன் தான் என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அவனுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

Wednesday, December 10, 2008

உல்ழான் - திரை விமர்சனம்


வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது. இது இந்தப் பட டைரக்டர் வோல்கர் ஷ்லூன்டர்ஃப் சொன்ன கருத்து.

உல்ழான் (Ulzhaan) - இது ஒரு ஃப்ரென்ச் மொழித் திரைப்படம். கஜக்ஸ்தானில் எடுக்கப் பட்டது.

மொத்தம் மூன்று பாத்திரங்கள்தான். மற்றவர்கள் ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிறார்கள்.

கதை

ஒருவன் ஏதோ ஒன்றைத் தேடிச் செல்கிறான். ஒருத்தி அவனுக்கு உதவுகிறாள். ஏன்? அவன் தேடிச் சென்றது கிடைத்ததா? அவள் என்ன ஆனாள்? இவ்வளவுதான் கதை.




திரைக்கதை

கதையின் நாயகன் ஏதோ ஒன்றைத் தேடி கஜக்ஸ்தானில் உள்ள 'கான் டெங்க்ரி' மலைக்குத் தனியாகச் பயணப் படுகிறான். கூட யார் வந்தாலும் தடுத்து விடுகிறான். அவனது செயலும் பேச்சும் சந்தேகப் படும் வகையில் இருக்கிறது.முதலில் அங்கு ஒரு புதையலைத் தேடிச் செல்வதாகச் சொல்கிறான். ஆனால் அவன் நோக்கம் அதுவல்ல என்று பிறகு தெரிகிறது.

செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் குதிரை வாங்குகிறான். அந்த குதிரை வாங்கும் போது, உல்ழான் என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் தானும் அவனுடன் வருவேனென்று அடம் பிடிக்கிறாள். இருவரும் குதிரையில் கஜக்ஸ்தானின் 'ஸ்டெப்பி' காடுகளின் வழியே பயணிக்கிறார்கள்.

வழியில் ஷகுனி என்று ஒருவன் தன்னை 'வார்த்தை வியாபாரி' என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான். இப்போதுதான் 'தர்மா' என்ற வார்த்தையை விற்றதாகச் சொல்கிறான். (இது அந்தப் பகுதி மக்களின் அறியாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது). அவன் தன்னை 'ஷமன்' என்று கூறிக் கொள்கிறான். 'ஷமன்' என்போர் நம்மூர் மந்திரவாதி போன்றவர்கள். உலகின் பல பகுதியில் இவர்கள் இருக்கிறார்கள்.

மேலும் செல்லும் வழியில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்திய பகுதியைக் கடக்கிறார்கள். அங்கு ஒரு புல் பூண்டு கூட இல்லை. இயந்திரங்களும் கட்டடங்களும் பாழடைந்து கிடக்கின்றன.

இறுதியில் கான் டெங்க்ரி மலைப் பகுதியை அடைகிறார்கள். கஜக்ஸ்தானின் உயரமான மலை அது. நமது எவரெஸ்ட் போல பனி படர்ந்த மலை. சுற்றிலும் பனியைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கங்கே ஒரு சில பாறைகள். உல்ழானைத் திரும்பிப் போக வற்புறுத்துகிறான். அவளையும் வந்த குதிரையையும் அங்கேயே விட்டுவிட்டு எதையும் கொண்டு செல்லாமல் சூன்யத்தை நோக்கி திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பிக்கிறான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் உல்ழான் இரு குதிரைகளையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்கிறாள்.

ஆனால் மீண்டும் திரும்பி வந்து ஒரு கல்லில் அந்தக் குதிரையைக் கட்டிவிட்டு, அந்த்க் குதிரைக்கு சிறிது புல்லும் போட்டு விட்டு அவள் மட்டும் சென்று விடுகிறாள். மலையில் வெகுதூரம் சென்றுவிட்ட நாயகன், திரும்பிப் பார்க்கிறான். குதிரை புல்லைத் தின்பது தெரிகிறது. உல்ழான் செல்வது தெரிகிறது. இந்தக் காட்சியில் படம் நிறைவுறுகிறது.

இறுதிக் காட்சி, எதுவும் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவும், அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப்படத்தில் பிலிப் டோர்டன் நாயகனாக நடித்துள்ளார். அகனத் சென்பாய் (தி நோமாட்ஸ் -ல் நடித்தவர்) உல்ழானாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். டேவிட் பென்னெட் ஷகுனியாக நடித்துள்ளார். இவர் இந்த இயக்குனர் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற 'தி டின் ட்ரம் (1979)'ல் சிறு பையனாக நடித்தவர். படம் வெளி வந்த ஆண்டு 2007.

படத்தின் கருத்து

மேலை நாகரீகத்தின் பொருள்சார் தேடல்களுக்கும் (மெடீரியலிஸ்டிக் வேர்ல்ட்) கீழை நாடுகளின் அகத்தேடல்களுக்கும் (ஸ்பிரிசுவலிஸ்டிக் வேர்ல்ட்) இடையே ஏற்படும் ஒவ்வாமையை படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டு எதையோ தேடித் தனியாகச் செல்வது, முன்பின் பார்த்திராத ஒருவனுக்காக ஒருத்தி அவன் பின் செல்வது, ஒருவன் தன்னை வார்த்தை வியாபாரி என்று கூறிக் கொள்வது நம்மைப் பொறுத்தவரை, அதாவது 'மெடீரியலிஸ்டிக் அவுட்லுக்கில்' பைத்தியக்காரத் தனம். ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு அர்த்தம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

அதனால்தான் 'வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது'.

வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இந்தப் படத்தைப் பாருங்கள்.