Thursday, December 11, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...9

அத்தியாயம் 9 - வீரபாண்டியன் காதல்

அடுத்த நாள் இளவழுதி திருவரங்கத்திற்குப் பயணப்பட்டான். வீரபாண்டியனும் மதுரைக்குக் கிளம்பலாம் என்று முடிவு செய்த போது, மாராயர் இளவழுதி திரும்பிவரும்வரையில் தாமதிக்குமாறு கூறினார். அவர் பேச்சைத் தட்ட முடியாத வீரபாண்டியன் அங்கேயே தங்கினான். பகலில் மாராயர் ஏதோ வேலையாக ஊராருடன் சென்றுவிட்டார். வீட்டில் பெண்களுடன் வீர பாண்டியன் மட்டும் இருந்தான்.

எண்ணங்கள் எங்கெங்கோ சுழன்றன. மனம் ஒரு நிலையில் இல்லாத வகையில் மாலை வரை தன் அறையிலேயே அடங்கிக் கிடந்தவன் எங்காவது செல்வோம் என்று வெளியில் கிளம்பினான்.

வாயிலில் அவனை மறித்த கயல்விழி (இளவழுதியின் தங்கை), 'எங்கே செல்கிறீர்கள் என்று கேட்கலாகாது. ஆனால் உங்கள் சகோதரர் காணாமல் போனது போல் வழிதவறிப் போய்விடாதீர்கள்' என்றாள். இயற்கையிலேயே அவள் பேச்சில் எள்ளல் துள்ளி விளையாடும். இப்போது அப்பிராணி போல் வீர பாண்டியன் அகப்பட்டு விட்டானல்லவா. அது மேலும் கற்பக விருட்சமாய் வளர்ந்தது.

ஏற்கனவே கேட்ட செய்திகளால் நொந்து போயிருந்தான் வீர பாண்டியன். 'என்னைச் சிறையெடுத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் வெளியில் சென்று வரக்கூட சுதந்திரம் இல்லையா?' .

'ஏன் கோபப் படுகிறீர்கள். நான் என்ன தவறாகப் பேசிவிட்டேன். நீங்கள் எங்கள் விருந்தாளி. உங்களைக் கவனிக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. இல்லத்தில் தந்தையும் இல்லை, அண்ணனும் இல்லை. இப்போது என் அதிகாரம்தான். ஆகவேதான் அவ்வாறு கேட்டேன். உங்களுக்கு இல்லத்தில் பொழுது போக வில்லையென்றால் சற்று காலார கழனிப்பக்கம் சென்று வரலாம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால்' என்றாள் சிரித்த வாறே.

இயற்கையிலேயே கூச்ச சுபாவமுள்ளவன் வீர பாண்டியன். பெண்களிடத்தில் அதிகப் பழக்கமில்லாதவன். 'எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை' என்றான்.

இருவரும் சற்று நேரம் ஏதும் பேசாமல் நடந்து வந்தார்கள். இது கயல்விழியின் இயல்புக்கு மாறானதாகையால், 'உங்களுக்கு பேசவே தெரியாதா?' என்று வம்புக்கிழுத்தாள். இப்படியே இருவரும் பேசிப்பேசி இரவுக்குள் ஒரு வரம்புக்குள் வந்து விட்டார்கள்.

அன்று இரவெல்லாம், வீரபாண்டியனும் தூங்கவில்லை, கயல்விழியும் தூங்கவில்லை. இருவரும் தன் சுயத்தை இழந்து விட்டதாக எண்ணினார்கள். அதே சமயம் வேறொன்று தன்னில் புகுந்ததாகவும் நினைத்தார்கள். அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னவென்று தெரியாவிட்டாலும் அது நல்லதென்று உணர்ந்தார்கள்.

கடமை அழைப்பு காத்திருக்கக் காதல் கவிந்தது கள்வனின் நெஞ்சில். ஆம், வீரபாண்டியன் தான் கயல்விழியின் உள்ளம் கவர்ந்த கள்வனாகிவிட்டானே! காதலும் வீரமும் தமிழரின் இரு கண்ணல்லவா? அதனால்தானே, அகநானூறும் புறநானூறும் தீந்தமிழில் இருக்கின்றன.

மறு நாள் காலை.

இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர். காலை போஜனத்திற்குப் பின் மீண்டும் வெளியே செல்ல யத்தனித்தான் வீர பாண்டியன். அவனுக்குத் துணையாக கயல்விழியையே அனுப்பினார் மாராயர்.

தற்போது கயல்விழி மவுனம் சாதித்தாள்.

'ஏன் கயல், ஒன்றுமே பேசாமல் வருகிறாயே. நேற்று அவ்வளவு பேசினாயே. என்னவாயிற்று. எல்லாம் நேற்றே பேசியாயிற்றா?'

'இல்லை. பேச வேண்டியது நிரம்ப இருக்கிறது. எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது தான் தெரியவில்லை'

'உன் கண்களெனும் வில்லை எடு. காதலெனும் கணைகளை விடு' என்று சொல்லமுடியுமா என்ன? வீர பாண்டியன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான். 'அட தானும் கவிஞனாகிவிட்டோமோ' என்று எண்ணினான்.

'நீ சொல்வதெல்லாம் தேவையானதுதான். சொல்லாததெல்லாம் தேவையற்றதுதான். ஆகவே ஏதாவது பேசு' என்று உபசாரமாகக் கூறிவைத்தான்.

அவளால் அப்போதும் ஒன்றும் பேச முடியவில்லை. பெருமூச்சு ஒன்று வெளிவந்தது. உடல் எழுந்து தணிந்தது. உள்ளத்தீ எழுந்தது. தணியவில்லை.

இருவரும் நடந்து செல்லும் போது அவ்வப்போது ஏற்படும் உரசல்கள் அவர்களுக்குள் இருந்த தீயை மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்தன.

ஒரு நாளில் ஏற்படும் இந்த மாற்றம் நிலைக்குமா? என்று வினவிக்கொண்டான் வீர பாண்டியன். ஒரு நிலையில் இல்லாத கயல்விழியால் ஒன்றையும் கோர்வையாக நினைக்க முடியவில்லை. தன்னையே வைது கொண்டாள்.

இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்த வீர பாண்டியன் 'கயல்விழி' என்றான் மென்மையாக.

அவன் குரலும் அழைத்த விதானமும் அவள் உள்ளக் கிளர்ச்சியை அதிகப் படுத்தின. 'ஹூம்' என்ற ஒற்றை வார்த்தை கிளம்பியது பெருமூச்சுடன்.

'உடல் நிலை சரியில்லையா. வேற்கிறார்ப்போல் இருக்கிறதே' என்று தொடமுயன்றான்.

என்ன இருந்தாலும் தமிழ்ப்பெண்ணல்லவா. சற்று விலகினாள் கயல்விழி. 'இ..இல்லையே. எ..எப்போதும் போல்தான் இருக்கிறேன்'.

'கயல். எனக்கு எதையும் பூடகமாகப் பேசிப் பழக்கமில்லை. கடந்த இரு தினங்களாக என் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை என்னால் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கிறேன். இந்நிலையில் நேற்று உன்னுடன் பேசியது முதல் நான் நானாக இல்லை. கடமை என் கண் முன் இருக்க, என் மனம் உன் முன் இருக்கிறது. இதற்கு மேல் தாமதித்தால் நான் மதியிழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நேரடியாகக் கேட்கிறேன். நான் நீ என்னை மணக்கச் சம்மதமா?'

அவன் கேட்டு விட்டான். அவளால் கேட்கமுடியவில்லை. பதில் சொல்லவும் துணிவில்லை. 'சே, நேற்றுவரை இருந்த கயல்விழி என்னவானாள். எத்தனை பேரை நாம் எள்ளி நகையாடியிருக்கிறோம். நம் நிலையும் இவ்வாறு ஆகிவிட்டதே' என்று தன்னையே திட்டிக் கொண்டாலும் அதிலும் ஒரு வித சந்தோஷம் இருப்பதை எண்ணி உள்ளூர நகைத்தாள். அது அவள் இதழோரம் புன்னகையாக வெளிப்பட்டது.

'உன் புன்சிரிப்பை, சம்மதமென்று கொள்ளலாமா?'

'ஆண்களைப் போல் வாய்ச்சொல்லில் வீரர்களல்ல பெண்கள். நாங்கள் உள்ளத்தால் ஒருவனை நினைத்த பின் உருவத்தால் மாற்றான் சொல் கூடக் கேட்க மாட்டோம். உங்களுடன் இவ்வளவு நேரம் இருக்கும் போதே தெரியவில்லையா' எப்படியோ கோர்வையாகச் சொல்லி விட்டாள் கயல்விழி.

இனித் தாமதமென்ன. 'நன்றி கயல்விழி. உன்னால் பாலைவனமான என் வாழ்வில் வசந்தம் பூத்தது. எரிமலையாய் இருந்த என் நெஞ்சத்தில் தென்றல் வீசுகிறது.' என்று அவள் கரம் பற்றினான் உரிமையுடன்.

சிலிர்த்து நின்றாள் கயல்விழி. சில்லிட்டது அவள் கைகள். 'ஐயா. தங்களுக்கு எப்படியோ தெரியாது. நான் என்னை உங்களுக்குக் கொடுத்து விட்டேன். இனி எதுவாயினும் உங்களுடன் தான். ஆனால் என் தந்தையும், சகோதரனும் என்ன சொல்வார்கள் என்று நினைத்தால் சற்று வேதனையாக இருக்கிறது'

'கவலைப் படாதே கயல்விழி. இப்போதே உன் தந்தையிடம் இதைப் பற்றி பேசுகிறேன். மதுரைப் பிரச்சனை முடிந்தவுடன் நமது திரும்ணம்'

சற்று யோசித்த கயல்விழி, 'நானும் உங்களுடன் மதுரைக்கு வருவேன். இப்போதே. அதற்கு ஒரு திட்டமிருக்கிறது' என்றாள் உறுதி கண்களில் மின்ன.

சட்டென்று மாறிய அவள் சிந்தனையை கண்டு பிரமித்து நின்றான் வீர பாண்டியன்.

(தொடரும்)

12 comments:

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்ம் கொஞ்சம் லேட்டா வந்தாலும் காதல் ரசம் சொட்ட சொட்ட வந்திருக்கு..

//'நீ சொல்வதெல்லாம் தேவையானதுதான். சொல்லாததெல்லாம் தேவையற்றதுதான்.//

இது ஏதோ "ஆணி புடுங்குற" டயலாக் மாதிரி இருக்கே :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இப்படியே இருவரும் பேசிப்பேசி இரவுக்குள் ஒரு வரம்புக்குள் வந்து விட்டார்கள்.//



சரித்திர கதைனா இப்படி அடிக்கடி பேச வேண்டும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர்.//


சாண்டில்யன் சாயல்????

CA Venkatesh Krishnan said...

// SUREஷ் கூறியது...
சரித்திர கதைனா இப்படி அடிக்கடி பேச வேண்டும்
//

உண்மைதான் :)

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...
//இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர்.//


சாண்டில்யன் சாயல்????
//

:((

தவறுதான். அடுத்த முறை நேராமல் ஜாக்கிரதையாக இருக்கிறேன். சுட்டியமைக்கு நன்றி.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...

ம்ம்ம் கொஞ்சம் லேட்டா வந்தாலும் காதல் ரசம் சொட்ட சொட்ட வந்திருக்கு..
//

ஆதவன் நான் நெனச்சதையே நீங்க சொல்லிட்டீங்க. காதல் ரசம்தான்.

//
இது ஏதோ "ஆணி புடுங்குற" டயலாக் மாதிரி இருக்கே :-)
//

ஆஹா, ஒரு டயலாக் எழுத முடியலையேப்பா...;-))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சாண்டில்யன் சாயலை நாங்கள் வரவேற்கிறோம்

நசரேயன் said...

காதல் ரசம் கலந்த பாகம் மிகவும் அருமை

CA Venkatesh Krishnan said...

// SUREஷ் கூறியது...
சாண்டில்யன் சாயலை நாங்கள் வரவேற்கிறோம்
//

:)))

CA Venkatesh Krishnan said...

// நசரேயன் கூறியது...
காதல் ரசம் கலந்த பாகம் மிகவும் அருமை
//
நன்றி நசரேயன்.

Anonymous said...

இன்று தான் சக்கர வியுகம் 1 to 9 படித்தேன்! அருமை!! இன்று முதல் நான் இந்த கதையின் ரசிகன்!!

CA Venkatesh Krishnan said...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, புவனேஷ் ! ! !