Monday, April 12, 2010

எனக்குப் பிடித்த நடிகையர் 10/10 - பார்ட் 1























பிரிக்க முடியாததும், சேர்ந்தே இருப்பதுமாகிய தமிழும் திரையுலகமும் நம்மை என்றும் காப்பதாக!

"லாங்க் லாங்க் அகோ, சோ லாங்க் அகோ, நோ படி கேன் சே ஹவ் லாங்க் அகோ" என்ற ஆங்கிலப் பழமொழி(?!)க்கேற்ப என்றோ ஒரு காலத்தில் என்னை இந்தத் தொடருக்கு அழைத்த மாமனிதர் வாழ்க வளர்க!!

ஆனால் ஒன்று. என்னைப் போன்றவர்களிடம் உங்களுக்குப் பிடித்த பத்து நடிகைகளைப் பட்டியலிடுங்கள் என்று கேட்டால், என்ன செய்வது. இது நிச்சயமாக மாட்டிவிடும் வேலைதானே. பட்டியலில் இல்லாதவர்களிடம் திட்டு வாங்குவது நானா இவர்களா? பட்டியலில் இருப்பவர்களிடம் கூட எனக்கு ஏன் முதலிடம் தரவில்லை என்ற கேள்விக்கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறதே, இதைப் பற்றியாவது சற்று சிந்தித்தார்களா? - என்றெல்லாம் கேட்கத் தோன்றினாலும், நமக்கு அவ்வளவு காட்சிமை (சீன்) இல்லை என்பதால், ஏதோ நம் பங்குக்கு பத்தைப் போட்டு ஒப்பேற்றுவோம்.

இதில் புதுமையைப் புகுத்தும் விதமாக நான்கு கால கட்டங்களாகப் பிரித்துக் கொண்டேன்.

ஒன்று 'ஓல்டு இஸ் கோல்டு',

இரண்டு 'கலர்ஃபுல் இஸ் சியர்ஃபுல்',

மூன்று 'சினிமாஸ்கோப் - லாட்ஸ் ஆஃப் ஸ்கூப்',

நான்கு - 'லேட்டஸ்ட் - டேஸ்டஸ்ட்'.


இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் " ஓல்டு இஸ் கோல்டு "

1. டி.ஆர்.ராஜகுமாரி


தமிழ்த் திரையுலகில் நம் பாட்டன், முப்பாட்டன்களைக் கட்டிப்போட்ட பெயர், டி.ஆர். ராஜகுமாரி. சந்திரலேகா ஒன்று போதும், இவர் பெயர் சொல்ல. எம்.கே.தியாகராஜ பாகவதரின் படங்கள் ஓடியதில் டி.ஆர். ராஜகுமாரிக்குப் பெரும் பங்குண்டு. இன்றளவும், நெம்பர் ஒன் வில்லி நடிகை டி.ஆர். ராஜகுமாரிதான்.

2. பத்மினி

நாட்டியப் பேரொளியின் பிற்காலப் படங்களில் அவ்வளவாக அவரால் ஜொலிக்க முடியாவிட்டாலும், அவரது முற்காலப் படங்கள் அவருக்கு நடிப்பில் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தன. வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தியுடன் ஆடும் ஆட்டமும் பி.எஸ். வீரப்பாவின் 'சபாஷ் சரியான போட்டி'யும் மறக்க முடியுமா?


3. விஜயகுமாரி

விஜயகுமாரியின் 'தமிழ்' முகமும் வசன உச்சரிப்பும், ஆழ்ந்த நடிப்பும், மிகவும் சிறப்பானவை. அவரது பல படங்கள் கிளாசிக் மூவீஸ் வகையைச் சேர்ந்தவை. நானும் ஒரு பெண்ணாகட்டும், வானம்பாடியாகட்டும் அல்லது பிற படங்களாகட்டும், தன் நடிப்புத் திறமையால் சவாலான பாத்திரங்களை இயல்பாக நடித்துக் கொடுத்தவர். எஸ்.எஸ்.ஆருடன் இணைந்து நடித்தவை கூடுதல் வெற்றி கண்ட படங்கள்.


4. அஞ்சலி தேவி

நன்றாகத் துவங்கிய அவரது கேரியர், சிறந்த அம்மா கேரக்டராக வந்து முடிந்தது. அடுத்த வீட்டுப் பெண் முதலான பல படங்கள் பேர் சொல்லும் படங்கள். உன்னைக் கண் தேடுதே, 'எக்' என்று சொல்லும் ஒரு 'எக்'கில் கிக் இருப்பதை அன்னாள் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்கள்!


5. பானுமதி

லேடி சூப்பர்ஸ்டார், என்ற பெயருண்டு இவருக்கு. பற்பல கண்டிஷன்கள் போட்ட ஒரே நடிகை இவர்தான். இவரது டயலாக் டெலிவரியும் மேனரிசமும் இவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டின.


6. சரோஜாதேவி

கீச்சுக்குயில் சரோஜாதேவியை பட்டியலில் சேர்க்க வேண்டுமேயென்று சேர்த்திருக்கிறேன். பற்பல படங்கள் நடித்திருந்தாலும், என்னைப் பொறுத்த வரை, அவரது பெர்ஃபார்மன்ஸ் இன்னும் சற்று பெட்டராக இருக்கலாம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


7. சாவித்ரி

சரோஜா தேவிக்குப் போட்ட கமெண்டே இவருக்கும் போடலாம்.



8. ஈ.வி.சரோஜா

ஒரு திறமையான ஆனால் சரியாகக் கவனிக்கப்படாத நடிகை. என் தங்கையில் அறிமுகமாகி, வீரத்திருமகன், குலேபகாவலி, படிக்காத மேதை என்று பற்பல படங்களில் நடித்தவர். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவி.


9. சச்சு

மற்றுமொரு திறமையான நடிகை, தடம் புரண்டு காமெடி நடிகையானது வரலாற்றுச் சோகம்.


10. தேவிகா

நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்பது வரை சரி. இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது என்பது எந்த ஊர் நியாயம் என்பது தெரியவில்லை. இருந்தாலும், ஆண்டவன் கட்டளை முதலான நல்ல படங்களில் நடித்துள்ளார்.



அடுத்த தலை முறை நடிகைகளைப் பற்றி, அடுத்த பதிவில்....

(மேற்கண்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)



Friday, April 9, 2010

பார்வை



காற்றின் மெல்லசைவும்
கடலின் நல்லலையும்
சங்கின் வெண்ணிறமும்
சலங்கை ஒலிக்குரலும்

தேனின் தீஞ்சுவையும்
தீயின் தண்ணொளியும்
நிலவின் தண் பொழிவும்
நீரின் இன் சுவையும்

பனியின் இளங்குளிரும்
பாலின் நறுசுவையும்
மானின் மருள்விழியும்
மயிலின் சிறு நடையும்

மழையின் சிறுதுளியும்
மலையின் பெருவெளியும்
யாழைப் பழித்த மொழியும்
வாளைப் பழித்த விழியும்


ஆஹா...



கண்ணே...



உன்னை உலகிலுள்ள அத்துணை

பொருளாகவும் பார்க்கக்

கற்றுக் கொடுத்து விட்டார்கள்...



.




.





.



.




.




.








பெண்
ணாகத் தவிர...