Showing posts with label யவனராணி. Show all posts
Showing posts with label யவனராணி. Show all posts

Saturday, June 20, 2009

யவன ராணி Vs கடல் புறா

சாண்டில்யனின் பல்வேறு படைப்புகளில் மிகச் சிறந்தவையாக நான் கருதுபவை யவன ராணியும், கடல் புறாவும். இவையன்றி, ராஜ திலகம், ராஜ பேரிகை, விலை ராணி, ஜல தீபம், ராஜ முத்திரை உள்ளிட்டவைகளையும் படித்திருக்கிறேன்.

ஆயினும் யவனராணியும் கடல்புறாவும் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இவ்விரண்டில் எது முதன்மையானது என்பதைப் பற்றிய என் ஆய்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.


முதலில் இப்படைப்புகளைப் பற்றி சிறு அறிமுகம்.

யவன ராணி

இது முற்காலச் சோழர்களின் தலை சிறந்த அரசனான கரிகால்வளவன் சோழப் பேரரசை மீட்டதைப் வந்ததைப் பற்றிய கதை. கோச்செங்கட்சோழனின் மறைவிற்குப் பின் சோழ நாட்டில் வேளிர்களின் ஆட்சி நடக்கிறது. சோழ குல இளவல் திருமாவளவனை அழிக்கவும் திட்டமிடுட்டு அவன் தங்கியிருந்த அரண்மனைக்கு தீயிடுகிறார்கள் அங்கிருந்து தப்பிக்கும் போது திருமாவளவனின் கால் தீயினால் கருகுகிறது. அன்று முதல் திருமாவளவன் கரிகால்வளவனாகிறார். இது வரலாற்றை ஒட்டிய நிகழ்வு.

யவனர்கள் (ஐரோப்பியர்கள்) தமிழகத்தில் மிக அதிக அளவில் வாணிபம் செய்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் முக்கியமானது 'தி பெரிப்ளூஸ் ஆஃப் எரித்ரீயன் ஸீ" என்ற நூலாகும். இது ஒரு 'ட்ராவலாக்'.

இதன் அடிப்படையில் தமிழகத்தின் முக்கியத் துறைமுகமான புகாரைக் கைப்பற்றி அங்கு யவன அரசு அமைக்கும் முயற்சி நடை பெறுகிறது. அதை இந்தப் புதினத்தின் நாயகன் இளஞ்செழியன் எப்படித் தடுத்தான். அவனுடைய அயல் நாட்டுப் பயணங்களில் என்ன நிழந்தது என்று மிகச் சுவையாக புனையப்பட்டிருக்கும்.

யவன ராணி, பூவழகி என்று வழக்கம் போல் இரு நாயகிகள். பிரும்மானந்தர் என்ற ஒரு முக்காலும் அறிந்த சாமியார். டைபீரியஸ் என்ற யவன தளபதி. மற்றும் சாம்பிராணி நாட்டு மன்னன், அவனது மகள் அங்கே ஒரு சாமியார்ஆகிய கேரக்டர்கள் உண்டு. இரண்டு பாகங்கள்.


கடல் புறா

இராஜராஜ சோழனுக்குப் பிறகு இராஜேந்திர சோழத் தேவர் ஆட்சி ஏறும் போது அவருக்கு வயது கிட்டத்தட்ட 55க்கு மேல். அவர் ஆட்சிக்குப் பிறகு 10 வருடங்களுக்குள்ளாகவே நான்கு அரசர்களை அரியணையேற்ற வேண்டிய நிலை சோழர்களுக்கு. அவர்களுக்குப் பிறகும் நேர் வாரிசு இல்லாத காரணத்தால் மகள் வழி மகனான அனபாயன் சோழ சாம்ராஜ்யத்திற்கு வாரிசானான்.

இந்த அனபாயன் தான் சுங்கம் தவிர்த்த சோழன், கலிங்கம் கொண்ட குலோத்துங்கன். இவனது காலத்தில் சீன சாம்ராஜ்யத்திற்கு ஒரு அரச தூதுக் குழு சென்றதற்கான ஆதாரம் உள்ளது. இதே காலத்தில் கடாரம், ஸ்ரீவிஜயத்திலும் சோழ வீரர்கள் வந்து சென்றதற்கான ஆதாரமும் உள்ளது. மேலும் கலிங்கப் போர் ஏற்படக் காரணமாக ஒரு நிகழ்வு புனையப் படுகிறது. இதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் மூன்று பாகங்கள் கொண்ட கடல் புறா.

கதையின் நாயகன் இளையபல்லவன். (கதை அருமையாக இருக்கும் என்பதற்கு இதற்கு மேலும் சான்று வேண்டுமா?!) இவனது இயற்பெயர் கருணாகர தொண்டைமான். கலிங்கத்துப் பரணியில் இவன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. வழக்கம் போல் இரு நாயகிகள். காஞ்சனாதேவி, மஞ்சளகி. அகூதா என்ற சீன கடலோடி. சுவர்ணதீபத்தில் ஒரு தளபதி என்று வெரைட்டி உண்டு.



இனி இவற்றின் ஒற்றுமைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. இரண்டுமே சோழர்களைப் பற்றியது.

2. இரண்டும் சோழ வாரிசு குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

3. கடல் மற்றும் கப்பல் சம்பந்தப் பட்டவை

4. அயல் தேசத்தில் நமது வீரர்களின் சாகசங்கள் விவரிக்கப் பட்டிருக்கும்.

5. இரண்டிலும் இரண்டு நாயகிகள்.

6. இரண்டிலும் அரச பரம்பரையினரின் சாகசங்களை விட தளபதிகளின் சாகசம் அதிகமாக விவரிக்கப் பட்டிருக்கும்.

7. இரண்டு நாயகர்களுக்கும் ஆரம்பம் "இளைய" என்றிருக்கும். இளஞ்செழியன், இளையபல்லவன்.

8. இரண்டு நாயகர்களும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்களல்ல. இளஞ்செழியன் பாண்டிய நாட்டவன். இளையபல்லவன் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன்.



பொதுவாகவே, சாண்டில்யனின் நாயகர்கள் 'இன்வின்சிபிள்' வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்வார்கள். ஆனால் சூழலின் கடுமையும் அதிலிருந்து 'லாஜிக்கல்'ஆக வெளிவரும் தன்மையை விவரிக்கும் விதமுமே அந்த நாயகர்களின் மதிப்பை உயர்த்தும். அவ்விதத்தில் கடல் புறாவில் லாஜிக் அதிகம் உள்ளது.


யவனராணியில், சாம்பிராணி நாட்டில் இளஞ்செழியன் நிகழ்த்தும் சாகசம் மடசாம்பிராணியால் கூட நம்ப முடியாது! மேலும் யவன தேசத்தில் அவன் தேரோட்டுவதும் பொருள் தீட்டுவதும் அதீத கற்பனைக்கும் மேல் என்றால் மிகையாகாது!.


எப்படியிருந்தாலும், இவையிரண்டுமே மிகச் சிறந்த 'விருந்து' என்பதில் ஐயமில்லை!.


"ஃபர்ஸ்ட் அமாங்க் ஈக்வல்ஸ்" என்ற அடிப்படையில் கடல் புறாவே சிறந்தது என்பதை நடு நிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் என ஐயம்திரிபற சொல்லலாம். (கதையின் நாயகன் இளைய பல்லவன் என்பதால் இந்த முடிவு அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்!!!)


உங்கள் கருத்துக்களையும் சொல்லலாமே.