Wednesday, October 29, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...4


அத்தியாயம் 4: ஆலோசனையும் ஆபத்தும்.

வீரபாண்டியனும், இளவழுதியும் அவ்வாறு பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பகுதியில், கோப்பெருஞ்சிங்கனும், வல்லாளனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.


'ஆசாரியாரின் சக்கரவியூகத்தின் அர்த்தம்தான் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்றான் கோப்பெருஞ்சிங்கன். சுருக்கமாக சிங்கன்.
'சிங்கா. எனக்கும் ஒரு சிறிய பொறிதான் தட்டியது. ஆசாரியர் நிச்சயமாக போர் வியூகத்தை மட்டும் சொல்ல வர வில்லை. அது மாதவனுக்கு முழுமையாகப் புரிந்திருக்கிறது. அவர்தான் நமக்குப் பிறகு தெரிவிப்பதாகக் கூறிவிட்டாரே. அதைப் பற்றி இப்போது என்ன கவலை. வேறு விஷயத்தைப் பற்றி பேசுவோம். நீ இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்.' என்று கேட்டான் வல்லாளன்.


'நான் இந்த ஊர்தானே, நேராக அரண்மனைக்குச் சென்று, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகுதான் யோசிக்க வேண்டும். உன்னுடைய உத்தேசம் என்ன?'


'நான் தொரசமுத்திரத்திற்கு (ஹொய்சளர்களின் தலை நகரம்) செல்லப் போகிறேன். அதற்குமுன் திருவரங்கம் சென்று அரங்கனைத் தரிசித்து விட்டுச் செல்லலாம் என்றிருக்கிறேன்.'


'நல்லது. நாம் மீண்டும் தில்லையில் சந்திப்போம்' என்று கூறி வல்லாளனை ஆரத் தழுவிக் கொண்ட பின் தன் அரண்மனை திரும்பினான் கோப்பெருஞ்சிங்கன்.


====


மாதவன் ஆசாரியாரை அடுத்த நாள் சந்தித்தான்.


'குருவே, நேற்று நடந்தது...' என்று இழுக்க.


'மாதவே, காரணமாகவே அவ்வாறு பாதியில் நிறுத்தினேன். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் மிக நல்ல மாணவர்களாயினும் அரசியல் என்று வரும்போது அவ்வாறு இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் சக்கர வியூகத்தைப் பற்றித் தெரிந்துவிட்டால், இறுதியில் அனைவரும் அழிந்துவிடுவர். ஆகவே அவ்வாறு நிறுத்த நேரிட்டது'.


'அப்படியானால் அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம் அல்லவா'


'மிக நல்ல கேள்வி. இவ்வாறு ஒன்று இருப்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் இதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் வரும். எது விதை, எது பதர் என்பது தெரிய வரும். ஒன்று மட்டும் நிச்சயம் மாதவா, இந்த சக்கர வியூகத்தைப் பற்றி நல்லவனுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும். இது சத்தியம்' என்றார்


'ஆனால் குருவே, வரும் மார்கழி திருவாதிரையன்று தில்லையில் அவர்களுக்கு இதைப் பற்றி விளக்குவதாக வாக்குக் கொடுத்து விட்டேனே'


'அப்படியா...' நீண்ட சிந்தனைக்குப் பின்.


'சற்று அவசரப் பட்டுவிட்டாயே மாதவா.. பரவாயில்லை. நான் சொல்வது போல் செய். எல்லாம் அந்த ஏகம்பன் அருளாலும் அன்னை காமாக்ஷியின் கருணையாலும் நன்மையாகவே முடியும்' என்றவர் மாதவனுக்கு மட்டும் கேட்குமாறு மிக நீண்ட நேரம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.


அவர் சொல்லச் சொல்ல மாதவனின் முகத்தில் சொல்லவொண்ணா திருப்தியும் சாந்தியும் நிலவத் தொடங்கியது.


'மிக்க நன்றி குருவே. அவ்வாறே செய்கிறேன். நம்மால் முடிந்த வரை மனித குலம் வாழவே பாடு படுவோம். அழிவென்று வந்தால் தீமையே அழியட்டும். குருவே, நானும் சற்று தேசாந்திரம் சென்று வரலாம் என்று உள்ளேன். உத்தரவு வேண்டும்'


'நல்லது. எங்கே செல்வதாக உத்தேசம்.'


'தெற்கே சென்று, தென் தமிழகத் திருத்தலங்களைத் தரிசித்த பின், கேரளம் சென்று, காலடி க்ஷேத்திரத்தைத் தரிசித்துத் திரும்பலாம் என்று எண்ணியுள்ளேன்.'


'அவ்வாறே செய். திருவரங்கத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகனைச் சந்திப்பதாக நேற்று இரவு கூறினாயே. மறந்து விட்டாயா?'


'இல்லை சுவாமி. அது மறக்கக் கூடிய சந்திப்பா. என் வாழ்வில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்திய நிகழ்வல்லவா? அவரைத்தான் முக்கியமாக சந்திக்க வேண்டும். தில்லைக்கூட்டத்திற்கு முன் இந்த சந்திப்பு நிகழவேண்டும் என்று எண்ணுகிறேன்.' என்றவாறு மாதவன் கிளம்பினான்.


'ஆஹா.. இந்தத் தமிழகத்திற்கு வரப்போகும் ஆபத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? இவர்களுக்குத் தேவையான பலத்தையும் யுக்தியையும் இறைவன் தான் அளிக்க வேண்டும். எல்லாம் இறைவன் செயல்' என்றெண்ணியவாறு நின்றார் பாஸ்கராசாரியார்.


(தொடரும்)

Saturday, October 25, 2008

நேற்று சென்னையில் கடும் போக்குவரத்து கூழ்

நேற்றைய டிராஃபிக் ஜாம் தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும். சென்னையில் நேற்று கடும் மழையுடன் டிராஃபிக் ஜாமும் சேர்ந்து கொண்டது.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல குறைந்தது 3 முதல் 5 மணி நேரங்களானது.

அம்பத்தூரில் மாலை 5 மணிக்குப் புறப்பட்ட ஒருவர் தாம்பரம் சேரும் போது மணி இரவு பனிரெண்டரை.


பலரும் பேருந்து, தொடர்வண்டி, விமானம் முதலியவற்றைத் தவறவிட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தீபாவளிக்காக ஊருக்குச் செல்பவர்களாவார்கள்.

இது தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும்.

அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.

Wednesday, October 22, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் ...3

அத்தியாயம் மூன்று: கதையின் வரலாறு

இரண்டு அத்தியாயங்கள் முடிந்து விட்ட நிலையில், இந்தத் தொடர் நடக்கும் காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இந்தக் கதை துவங்கும் ஆண்டு கி.பி. 1308 !. ஆம். சரியாக 700 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இக்கதை புனையப்பட்டுள்ளது. அதற்கு முன் வரையிலான தமிழக வரலாற்றையும், தென்னிந்திய வரலாற்றையும் சற்றே ஆராய்வோம்.

தமிழகமும், தமிழும் மிகப் பழமை வாய்ந்தவை என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை நிலவியது.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலவியது களப்பிரர்களின் ஆட்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும், இக்காலக் கட்டத்தில் யார் யார் மன்னர்கள், என்னென்ன இலக்கியங்கள் என்பன குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெளிவாகக் கிடைக்க வில்லை. எனவே, களப்பிரர்களின் காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடுகிறார்கள், வரலாற்று வல்லுனர்கள். இவர்கள் சமணர்கள் என்றும், இவர்களுக்குப் பின் ஏற்பட்ட சைவ சமய அரசுகளின் காரணமாக இவர்களைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் அழிக்கப் பட்டன என்றும் ஒரு சாரார் குறிப்பிடுகிறார்கள். களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல, இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்பது அவர்களின் வாதம்.

கி.பி. 6ம் நூற்றாண்டு முதல், இக்கதை நடைபெறும் 13ம் நூற்றாண்டு வரை தமிழகத்தையோ, தென்னிந்தியாவையோ, ஒரே வம்சம் தான் ஆட்சி செய்து வந்துள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என பெரும்பாலும் தமிழகத்தின் அரசுகளே தென்னிந்தியாவை ஆண்டு வந்துள்ளன.


ஆந்திரம், கர்னாடகம் ஆகிய பகுதிகளில் மேலைச் சாளுக்கியர்கள், காகதீயர்கள், ஹொய்சளர்கள், கடம்பர்கள் ஆகிய பல்வேறு வம்சங்கள் இருந்தாலும் அவற்றின் பலம் சிறிது குறைவுதான். 12ம் நூற்றாண்டு முதல் டெல்லி சுல்தானியர்களின் வரவு தெற்கே தக்காணம் வரை இருந்தது. சுல்தானியர்களின் வரவைத்தடுக்கும் பணியில் மேற்கண்டவர்கள் ஈடுபட்டிருந்ததால், தமிழகத்தின் பக்கம் அவர்களின் பார்வை சிறிது குறைவாகவே இருந்து வந்தது.

இன்னிலையில்தான், தமிழகத்தின் இறுதித் தமிழ் வம்சமான பிற்காலப் பாண்டியர்களின் சாம்ராஜ்யம், ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்னும் மாவீரன் தலைமையில் மறுபிறவி எடுத்தது. இந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் முதலில் ஹொய்சளர்களோடு இணைந்து சோழர்களை அடியோடு அழித்தான். பின்னர் ஹொய்சளர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகமாகிவிடவே, முதலில் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நாட்டிற்கே சென்று அவர்களைத் தோற்கடித்தான். சிறிது காலம் ஹொய்சளர்கள் நாடின்றி இருந்தனர். இவன் காலத்தில் கொங்கணக் கடற்கரை வரை பாண்டிய நாடு விரிந்திருந்தது. அது மட்டுமின்றி, முதலில் சோழர்களோடு இணைந்திருந்த காஞ்சியின் காடவப் பல்லவர்களையும் தோற்கடித்தான்.

இவனது செயல்களைப் பற்றியே இது போல் பற்பல புதினங்களை எழுதிவிடலாம். ஆயினும் தமிழகத்தின் தலைவிதி வேறு விதமாயிருந்தது, இவனுக்குப் பின் வந்தவர்கள் மட்டும் இவன் செயலில் பாதியாவது செய்திருப்பார்களேயானால் இன்றைய தமிழக வரலாறு வேறு விதமாயிருந்திருக்கும். இவன் சந்ததியர் யாருமே இவன் அளவுக்கு வீரமும் விவேகமும் இல்லாது போயினர். இந்தக் கதை நடைபெறும் காலத்தில், மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் மதுரையில் அரசாண்டு கொண்டிருந்தான். இவனது மூத்த மகன் தான் வீர பாண்டியன். ஆனால் பட்டத்து ராணிக்குப் பிறந்தவனல்லன் என்று முன்னமே பார்த்தோம். இவனது இளைய மகன் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் அவ்வளவாக ஆகாது.

சிங்கம் சிறுத்தால் சிறு நரிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போல், பாண்டிய அரசர்களின் திறமைக் குறைவால் தமிழகத்தின் வரலாறு அடியோடு மாறிப்போனது.

ஆகவே, பாண்டியர்களுக்கு உட்பகை, அதாவது பரம்பரை வைரிகளான சோழர்களின் தொல்லை இல்லாவிட்டாலும், வெளிப்பகையான, ஹொய்சளர்கள், காடவப் பல்லவர்கள் முதலானவர்களின் விரோதம் இருந்து கொண்டுதான் இருந்தது.

இன்னிலையில் தான், காஞ்சியின் கடிகாஸ்தானத்தில், பாண்டியனுடன், ஹொய்சள வீர வல்லாளன், காடவக் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரும் பயிற்சி எடுத்துக் கொண்டனர். இவர்களுடன் பயின்ற ஹரிஹர ராயனும், புக்க ராயனும் சங்கம வமிசத்தைத் தோற்றுவித்து, விஜய நகர அரசுக்கு அடிகோலியவர்கள். ஆக இவர்கள் அனைவரும் வரலாற்றுப் பாத்திரங்கள்.
மாதவன் என்பவர் தான் பின்னாளில், வித்யாரண்யர் என்ற பெயருடன் விஜய நகர அரசு தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்தார். இவர் விஜய நகர அரசின் குல குருவாக மட்டுமல்லாது, ஸ்ருங்கேரி சாரதா பீடத்தையும் அலங்கரித்தார்.

தூப்புல் வேங்கட நாதன் என்னும் வேதாந்த தேசிகரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஸ்ரீ இராமானுஜருக்குப் பிறகு ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை சீர் படுத்தியவர். ஸ்ரீ ரங்கத்தில் இவர் இருந்த காலத்தில் தான் மாலிக் கஃபூரின் தாக்குதல் நடைபெற்றது. இவரும் மாதவரும் இக்கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள்.
இவர்கள் தவிர இதுவரை அறிமுகப் படுத்தப் பட்ட பாஸ்கராசாரியாரும், நக்கன் இளவழுதியும் கற்பனைப் பாத்திரங்கள். ஒரு வரலாற்றுப் புதினத்தை நடத்திச் செல்ல இத்தகைய கற்பனைப் பாத்திரங்கள் மிகவும் அவசியம்.
மேலும் சில வரலாற்றுப் பாத்திரங்களும், கற்பனைப் பாத்திரங்களும் கதையின் வழியில் நம்முடன் இணைவார்கள்.

மொத்தத்தில், பாண்டியர்களின் உரிமைப் போரில் பிற தேசத்தவர் தலையீட்டையும், அதனால் தமிழகத்திற்கு விளைந்த தீங்குகளையும், பின்னர் விஜய நகர சாம்ராஜ்யம் நிறுவப் பட்ட வரலாற்றையும், சுவாரசியமாக விளக்கும் முயற்சியே இந்தப் புதினம்.

மேற்கண்ட தகவல்களுடன் இத்தொடரைப் படிப்பது சுவையாக இருக்கும் என்பது என் எண்ணம். இனி தொடர் தொடர்கிறது.

======

தன் அறைக்குத் திரும்பிய வீர பாண்டியன் சுரத்தின்றியே காணப்பட்டான். அவன் செய்கைகளைக் கண்ட நக்கன் இளவழுதி,

'என்ன வீரா, ஒரு மாதிரியாக இருக்கிறாயே? கடிகையை விட்டுப் போகிறோம் என்ற கவலையா அல்லது ஆசாரியர் சக்கர வியூகத்தைப் பற்றி சரியாகச் சொல்லவில்லையே என்ற எண்ணமா?'

'அதெல்லாம் ஒன்றுமில்லை இளவழுதி. எனக்குத்தான் தற்போது மதுரைக்குச் செல்ல விருப்பமில்லை. அங்கிருக்கும் நிலைமைதான் உனக்குத் தெரியுமே. சென்றால் வீணாக வம்பு வரும் என்று நினைக்கிறேன். இங்கேயே இருந்துவிடலாமா, அல்லது, மல்லையிலிருந்து கடல் மார்க்கமாக எங்காவது சென்றுவிட்டு வரலாமா என்று எண்ணுகிறேன்.

'சரிதான். அதனால் மனம் ஒடிந்து போய் விட வேண்டுமா. என்னுடன் திருவெள்ளரைக்கு வந்துவிடு. அங்கு சில காலம் தங்கியிருந்து உன் மனதை மாற்றிக்கொள். அருகே கொல்லி மலை இருக்கிறது. அங்கே சில ஆச்சரியமான விஷயங்களும் இருக்கின்றன. என்ன சொல்கிறாய்?'

'ஆம். அவ்வாறுதான் செய்ய வேண்டும். சரி உன்னுடனே வருகிறேன். மிக்க நன்றி இளவழுதி.'

'இதற்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. சரி சரி, நாளை விடியும் முன்னரே கிளம்பி விடுவோம். அப்பொழுதுதான் களைப்பின்றி நீண்ட தூரத்தைக் கடந்து விடலாம். இப்பொழுது நிம்மதியாகத் தூங்கு.'

'நான் தூங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்று உனக்குத் தெரியாது' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட வீரபாண்டியன் 'அவ்வாறே ஆகட்டும் இளவழுதி' என்றான்.

(தொடரும்)

Sunday, October 19, 2008

மெய்ப்புல அறைகூவலர்-னா இன்னாங்க?

இது ஒரு ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ப்படுத்தப் பட்ட சொல். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா... யாராவது சொல்லுங்களேன்.

சென்னையின் ஒரு முக்கியமான இடத்தில் இந்த தமிழாக்கத்தைப் பார்த்தேன். முதலில் ஆங்கில சொல்லுக்கும் இதற்கும்
சம்பந்தமே இல்லாதது போல் தெரிந்தாலும், மண்டையைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து யோசித்ததில் திடீரென இதன் தமிழாக்கப் பின்னணி புரிந்தது.

அதாவது 'ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' என்பதைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள்.

ஃபிசிகல்லி - ' ஃபிசிகல்' - மெய். ஆகவே ஃபிசிகல்லி - மெய்ப்புல.

சேலஞ்ச்டு - 'சேலஞ்' - அறைகூவல் - ஆகவே சேலஞ்ச்டு - அறைகூவலர்.

எனவே,' ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' - மெய்ப்புல அறைகூவலர். நேரடித் தமிழாக்கம்.
அடங்கொக்கா மக்கா... இப்படியெல்லாமா தமிழ்ப் படுத்துவாங்க.

அதனாலதான் கேக்கறேன். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா.

யாராவது சொல்லுங்களேன்.

Thursday, October 16, 2008

சினிமா - கேள்வி பதில் தொடர்


என்னை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்த அணிமாவுக்கு நன்றிகள் பல. இந்த நேரத்தில் என்னுடைய சினிமா பற்றிய ஒரு தொடர் அதாவது 'பழைய படம் - புதிய பார்வை' பற்றிய அறிவிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி.இனி நேரடியாகக் கேள்வி பதில்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது ஞாபகம் இல்லை. ஆனால் நினைவு தெரிந்து பார்த்தது புரட்சித் தலைவரின் முகராசி. வந்தவாசி பாலன் திரையரங்கம் என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளைக் கைத்தட்டி ரசித்தது நினைவில் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். சத்யம் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்பதற்காக இ-புக்கிங் செய்து பார்த்தேன். செலவுதான் கையைக் கடித்து விட்டது :((

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


என்னுடைய மடிக் கணினியில், ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் பார்த்தேன். ஐரோப்பாவில் எடுக்கப் பட்ட முதல் படம் என்று நினைக்கிறேன். அருமையான கதை. ஆனால் தவறான கதா நாயகன். எம்.ஜி.ஆர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சட்டென்று நினைவிற்கு வருவது உன்னால் முடியும் தம்பி.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவமும் தாக்கியதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றும் வாலிபன், அண்ணாமலை, பாபா முதலியவை காலம் காலமாக நடந்து வருபவை. அவை மேலும் தொடரக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.

திருவிளையாடல் தருமியைப் போல் சொன்னால் சேர்ந்தே இருப்பது, தமிழ் சினிமாவும் அரசியலும். ;-))

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில் நுட்பம் என்பது 'ரிலேடிவிடி தியரி' அல்லது 'இரு கோடுகள்' தத்துவம் போன்றது.

சரியான தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வந்த கர்ணனின் படங்கள் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். கர்ணனின் ஒளிப்பதிவுத் திறமை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் :0). ஜம்பு, எங்க பாட்டன் சொத்து முதலிய படங்கள் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா


வண்ணத்திரை, சினிமா எக்ஸ்ப்ரஸ் ஆகிய சினிமா சம்பந்தப் பட்ட பத்திரிகைகளை வாசிக்காவிட்டாலும், எங்கே எப்போது சினிமா பற்றிய செய்தி வந்தாலும் வாசிக்கத் தவறுவதில்லை. அது, கிசுகிசுவாகட்டும் அல்லது புதுப்படம் பற்றிய தகவலாகட்டும்.

7.தமிழ்ச்சினிமா இசை?


நிச்சயமாக இளையராஜா.
தமிழ்ச் சினிமா இசை என்றாலே நம் நினைவுக்கு வருவது பாடல்கள்தான். அதையும் தாண்டி, பின்னணி என்று ஒன்று இருப்பதைக் காட்டியவர் இளையராஜாதான். இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் பாமரனும் ரசிக்கும் வண்ணம் காட்டியதில் அவருக்கு நிகர் அவர்தான்.
ஒரு பார்த்திபன் படத்தில் 'இசை அலயஸ் இளையராஜா' என்று போட்டிருப்பார்கள். இது உண்மை.
மற்றபடி தமிழ்ச் சினிமாவும், தமிழ்ச்சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு மிகச் சிறந்த பரிணாம வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகள்.
60-70 பாடல்களாக இருந்தது, 10-12 பாடல்களாகக் குறைந்து, இப்பொழுது 5 பாடல்கள் இருந்தாலே அதிகம் என்ற நிலையில் இருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆந்திராவில் இருந்த போது அதிகமாகத் தெலுங்குப் படங்கள் பார்த்திருக்கிறேன். சி.ஏ. படிக்கும் போது தில்வாலே துலனியா லே ஜாயேங்கே மொழியே தெரியாமல் 6 முறை பார்த்திருக்கிறேன் :)
உலகச் சினிமாக்கள் என்ற வரிசையில் பார்க்க ஆரம்பித்தது குங்க் ஃபூ படங்களைத்தான்.

சமீபத்தில் வேர்ல்ட் சினிமா சேனலில் தி வொயிட் பலூன் என்ற ஈரானிய மொழிப்படம் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த படம். இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு நிச்சயம் உண்டு.



9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்கள் ஊரில் நடைபெற்ற வைதேகி காத்திருந்தாள் ஷூட்டிங்கை எட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். பிறகு ஏகாம்பர நாதர் கோவிலில் நடைபெற்ற இன்னொரு விஜயகாந்த் ஷூட்டிங்கையும் பார்த்திருக்கிறேன். விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற ரமணா ஷூட்டிங்கின் ஃபைட் காட்சியை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். (அட. எல்லாமே விஜயகாந்த் படங்கள்.;-))
மீண்டும் ஷூட்டிங்க் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நேரமிருந்தால் செய்யலாம்.

தமிழ் சினிமா மேம்பட இது உதவுமா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒன்றும் தோன்ற வில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு பெரிதாக ஒன்றும் நேராது. சன் டிவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் (கலைஞர் டி விக்கு புதுப்படம் கிடைக்காதே). நாடகத்துறை வளர்ச்சியுறும் என்று நினைக்கிறேன். மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.


இந்தச் சங்கிலியைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

1. நான் ஆதவன்

2. வெங்கடராமன்

3. டாக்டர் ப்ரூனோ

4. கோவியார்

5. வாத்தியார்

நன்றி ! ! !

Wednesday, October 15, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 2


அத்தியாயம் 2: அரசியலும், அர்ஜுனனும் ஆசாரியனும்


முன்னோட்டம் முதல் அத்தியாயம்

அனைவரின் கவனத்தையும் கண்டு மகிழ்ச்சியுற்ற பாஸ்கராசாரியார் மேலும் தொடர்ந்தார்.

'நீங்கள் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள். இப்போது நமது பாரதக் கண்டம் உள்ள நிலையை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அரச பரம்பரையின் கீழ் ஆளப்பட்டு வருகிறது. ஒருவர் மற்றவரைத் தாக்குவதும், மிகச் சிறந்த் குலங்கள் எழுவதும் வீழ்வதும் சாதாரணமாக நாம் காணக் கூடியதாக இருக்கிறது. இத்துணை பிரிவினைகள், தேசங்கள் இருந்தாலும், சனாதன தர்மம், ஒரு நூல் பிரிந்திருக்கும் முத்துக்களைச் சேர்த்துக் காப்பது போல இந்தப் பரந்த பாரதக் கண்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தற்போது, முகம்மதியர்கள், இந்த்ரப்ரஸ்தத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தத் தொடங்கியுள்ளனர். நமக்குள் இருக்கும் சகோதர சண்டை தான் இதன் முக்கியமான காரணமாகத் தெரிகிறது.

அவர்கள் விந்தியாசலத்தைத் தாண்டி, தக்காணம் வரை வந்தாலும், தமிழகத்திற்குள் இது வரை வர வில்லை. அவர்கள் தமிழகத்திற்குள் வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை நாம் தள்ளிப் போடலாமே தவிர, தவிர்க்க முடியாது. நாமாக அழைக்காமல் இருந்தாலே நல்லது.



அரசியல், மதம் ஆகியவை - பாவும், ஊடும் ஒரு துணியில் இருப்பது போல நாட்டில் நிலவுகிறது. அரசனானவன் தன் நாட்டிற்குரிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற மதங்களும் இயைந்து வாழப் பாடு பட வேண்டும். அனைத்து மதங்களின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும், மக்களைப் பிரிக்க மதங்களைக் காலம் காலமாக அரசுகள் பயன் படுத்தி வந்திருக்கின்றன. இறுதியில் அத்தகைய மூடத்தனமான கொள்கைகளாலேயே அவ்வரசுகள் வீழ்ந்திருக்கின்றன.

இத்தகைய சரித்திரங்கள் நிதர்சனமாக இருந்தும் அரசுகள் மாற்று வழியைக் கடைப் பிடிக்காமல் முன்னேர் வழியில் பின்னேர் செல்வது போல் சென்று கொண்டிருக்கின்றன. நீங்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே என் அவா.' என்று சற்று நிறுத்தினார்.

சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்தவர் வேறு விஷயத்தைப் பற்றி பேசுகிறாரே என்று நினைத்தாலும், அவர் பேசுவதில் ஏதாவது காரணம் இருக்கும் என்று அனைவரும் தொடர்ந்து குழப்பத்துடன் கவனித்தவாறு இருந்தனர்.

மாதவனிடம் மட்டும் ஆசாரியர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்ததற்கான தெளிவு பிறந்தது. ஆயினும் அதை வெளிக்காட்ட வில்லை.

அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் ஆசாரியர் மேலும் தொடர்ந்தார்.


'மாணவச் செல்வங்களே, உங்கள் சிந்தனையை என்னால் கிரகித்துக் கொள்ள முடிகிறது. ஆயினும் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்டேன். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பாரத தேசத்தையும், ஆதியந்தமில்லாத சனாதன தர்மத்தையும் காப்பாற்ற வேண்டும். நான் உங்கள் அனைத்து நற்காரியங்களிலும் துணையிருப்பேன். மாதவன் என்னிடத்தில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொண்டு விட்டான். அவன் யாருடன் இருக்கிறானோ அவர்கள் பக்கம் விஜயலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் வியாபித்து இருக்கும். சென்று வாருங்கள். ஜய விஜயீ பவ:' என்று கூறி ஆசீர்வதித்தார்.

வீரபாண்டியனும் கோப்பெருஞ்சிங்கனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வீர வல்லாளன் முகத்தில் ஒரு வித சலனமும் இல்லை. இளவழுதிக்கு ஆசாரியர் சொன்னது ஓரளவிற்கு விளங்கிற்று. ஹரிஹரனும், புக்கனும் முகத்தில் கேள்விக் குறிகளைத்தேக்கினர்.

ஆசாரியர், ' மேற்கொண்டு நீங்கள் மாதவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நேரமாவதால் நான் ஓய்வெடுக்கச் செல்ல வேண்டியது அவசியமாகிறது' என்றார்.

அனைவரும் ஆசாரியன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ஆசிகளைப் பெற்று வெளியே வந்தனர்.

***

'ஆசிரியர் விளக்கியது, அபிமன்யுவிற்கு அர்ஜுனன் சொன்னது போல், பாதிதான் கூறியதாகத் தெரிகிறது' - இளவழுதி ஏமாற்றத்துடன் கூறினான்.

'நண்பர்களே, ஆசாரியர் முழுமையாகக் கூறாவிட்டாலும், அவரின் கருத்துக்கள் தெளிவாகவே இருக்கின்றன. நான் உங்களுக்கு அவசியம் ஏற்படும் போது அதை விளக்குவேன். கேள்வியில் தான் விடையிருக்கிறது. குழப்பத்தில் தான் தெளிவிருக்கிறது. எனினும் தற்போது இதைப் பற்றி மேலும் விவாதிக்கத் தேவையில்லை. காலம் வரும் போது நிச்சயமாக விளங்கும். கவலை வேண்டாம். நீங்கள் அனைவரும் நெடுங்காலம் இங்கு தங்கியிருக்கிறீர்கள். தற்போது உங்கள் கல்வி பூர்த்தியாகி விட்டதால் நீங்கள் உங்கள் இல்லம் திரும்புங்கள். வரும் மார்கழித் திருவாதிரை அன்று நாம் அனைவரும் தில்லையில் சந்திப்போம்.' என்றான் மாதவன்.

மாதவன் ஆசாரியப் பட்டத்திற்கு அடுத்து வரவேண்டியவன் என்றாலும், இவர்களை விட சற்றே மூத்தவன். எனவே எப்போதும் நண்பனைப் போல இவர்களோடு இணைந்திருப்பவன். அவன் சொல்வது சரியென்று படவே அனைவரும் தத்தம் ஊர் திரும்பும் பணிகளில் ஈடுபடத் துவங்கினர்.

* * * **

இரவு போஜனம் முடிந்த பிறகு ஆசாரியர் அழைப்பதாய் அவரது பணியாள் வந்து கூறவே, உடனே அவரது அறையை நோக்கிப் புறப்பட்டான் மாதவன். ஆசாரியாரது அறைக்குள் நுழைந்த போதுதான் அங்கே இன்னொருவர் அமர்ந்திருக்கக் கண்டான். மாதவன் வந்ததும் பேச்சை நிறுத்திய ஆசாரியர், 'வா மாதவா, இவர் யாரென்று தெரிகிறதா' என்று புன்முறுவலுடன் வினவினார்.

அந்த மனிதரும் இவன் பக்கம் திரும்பி புன்னகையுடன், 'நமஸ்காரம்' என்றார். அவரைப் பார்த்ததும், 'யாரது ? !, வேதாந்த தேசிகரா !' என்று வினவினான் ஆச்சரியத்துடன்.

'ஆம். ஆனால் இவர் எனக்கு எப்போதும், தூப்புல் வேங்கட நாதன் தான்' என்றார் பாஸ்கராசாரியார் பலத்த சிரிப்புடன்.


(தொடரும்)



Monday, October 13, 2008

வானவில் 13-10-2008

அன்புள்ள நண்பர்களே,

கடந்த ஒரு வாரமாக பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பதிவுலகப் பக்கம் வர முடியவில்லை. இதோ இன்னொரு வான வில்.

தமிழகத்தில் நிலவி வரும் 6 1/2 மணி நேர மின்வெட்டைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள் போலிருக்கிறது. இது மேலும் அதிகமாகாமல் இருந்தால் சரி. உ.பி.யில் கூட இவ்வளவு மின்வெட்டு இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி.:((

=====

பங்குச் சந்தையின் வீழ்ச்சியை அடுத்து, மிக வேகமாக செயல்பட்ட ஆர்.பி.ஐ. கேஷ் ரிசர்வ் ரேஷியோ (இதற்கெல்லாம் தமிழ் அர்த்தம் தெரிய வில்லையே சாமி..)வை, 1.50 சதவீதத்தை உடனடியாகக் குறைத்தது. .25% (25 அடிப்படைப் புள்ளிகள்) ஏற்றினாலே அரை சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை வட்டியை ஏற்றும் வங்கிகள், இந்த சி.ஆர்.ஆர் குறைப்பைப் பற்றி வாயையே திறக்க வில்லை.
ஆனாலும் வங்கிகளுக்குப் பேராசைதான்.

====

நேற்று (ஞாயிறு) சென்னையில் நல்ல மழை பெய்தாலும், மக்கள் ரங்கனாதன் தெருவில் கூடுவதை நிறுத்த வில்லை. மழையை விட இவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்றுதான் வடகிழக்குப் பருவமழையின் முதல் மழை பெய்தது. நேற்றே சென்னையின் பல முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒன்றிரண்டு மணி நேரங்களில் இது குறைந்து விட்டாலும், விடாது மழை பெய்தால் சற்று சிரமம்தான்.

====

சென்னையில் மக்கள் அப்படி எங்குதான் செல்வார்களோ தெரியவில்லை. எப்போது பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் ஒரே டிராஃபிக் தான்.
இப்போதெல்லாம் மெயின் ரோடுக்குப் பக்கத்தில் இருக்கும் சந்து பொந்துகளெல்லாம் கூட வண்டிகளால் நிரம்பி வழிகின்றன.

====

தீபாவளிக்காக விடப்பட்ட சிறப்பு ரயில்களிலும் ஹவுஸ் ஃபுல். இ டிக்கட் தான் இதற்கும் காரணம் என்கின்றனர். இ. டிக்கட்டிற்கும் கோட்டா வேண்டும் என்பது, திருச்சி ரயில் நுகர்வோரின் கோரிக்கை. நியாயமான கோரிக்கையாகத்தான் படுகிறது.

====

நாளை மறு நாள், சக்கர வியூகத்தின் அடுத்த பகுதி வெளி வர இருக்கிறது. படிக்கத் தவறாதீர்கள்.


அன்புடன்
இளைய பல்லவன்.

Wednesday, October 8, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் (1)

அத்தியாயம் 1 : காஞ்சிக் கடிகையில் கண்டெடுத்த ரத்தினங்கள்

காஞ்சியின் புகழ்பெற்ற கடிகாஸ்தானத்தின்(பல்கலைக் கழகம்) ப்ரதானாசாரியார் (தலைமை ஆசான்) அறையில் குழுமியிருந்தவர்களின் எண்ணிக்கை அந்த கடிகையிலேயே பெரிய அறையை சிறிதாக்கிக் காட்டியது.
விஜயதசமி நன்னாளில் வழக்கமான பூஜைகள் மற்றும் நிவேதனங்களின் முடிவில் அங்கு குழுமியிருந்தோரை தனியாக அழைத்திருந்தார் ப்ரதானாசாரியாராகிய பாஸ்கராசாரியார். பார்வைக்கு எண்பது வயதானவராகக் காணப்பட்டாலும், பேச்சிலும் பார்வையிலும் தீக்ஷண்யம் மிகுந்து காணப்பட்டது.

அங்கு குழுமியிருந்தவர்களை பார்த்துக்கொண்டே அவர்களின் பின்னணியை நினைத்துக் கொண்டார்.

முதலாக நின்றவன் வீர பாண்டியன். மதுரை மன்னன் மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் முதல் புதல்வன். எனினும் பட்டத்து ராணிக்குப் பிறந்தவனல்லன். அவன் பாட்டனார் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் வீரமும் விவேகமும் இவனிடம் நிறைந்திருக்கக் கண்டார். இவனது சகோதரன் சுந்தர பாண்டியன் பட்டத்து இளவரசனாக வரவேண்டியவன் என்றாலும், தகுதியிலும் திறமையிலும் வீர பாண்டியனுக்கு சற்றும் பொருந்தாதவன்.

அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கன். காஞ்சியைத் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் காடவர் குலக்கொழுந்து. இவன் பெயர் கொண்ட இவனது பாட்டனார், சோழ மன்னனான இரண்டாம் ராஜாதிராஜனையே மூன்றாண்டுகள் சிறை வைத்து சாதனை படைத்தவர். கலைகளையும், கோவில்களையும் போஷிப்பதில் நிகரற்றவர். இவர் காலத்தில் மீண்டும் காஞ்சி தலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தாலும் அது முடியாமலே போனது. காடவர் குலம் இந்த கோப்பெருஞ்சிங்கனைத்தான் தற்போது நம்பியிருக்கிறது.

வீர வல்லாளன். ஹொய்சள தேச இளவல். தமிழகத்தில் நிலவி வரும் தற்காலிக சமரசத்திற்கு காரணம் இவன் முப்பாட்டன் வீர சோமேஸ்வரன். தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும் ஹொய்சள நாட்டின் அடுத்த பட்டத்தரசன்.

ஹரிஹர ராயன். இவன் தந்தை ஏகாம்பர நாதன் காஞ்சியைச் சேர்ந்த ஒரு சாதாரண வணிகன். இந்தக் கடிகையின் மிகச் சிறந்த மாணாக்கன்.

புக்க ராயன். ஹரி ஹரனின் சகோதரன். அவனைப் போலவே மிகச் சிறந்த அறிவாளி.

நக்கன் இளவழுதி. சிராப் பள்ளியை அடுத்த திரு வெள்ளரையைச் சேர்ந்தவன். வேளிர் குடியினன். பாஸ்கராசாரியாரின் அத்யந்த சீடன்.

தற்போது, தனது அருகிலுள்ள மாதவனைப் பார்த்தார். தனக்கு அடுத்து இந்தக் கடிகையை நடத்தப் போகும் வாரிசாக நியமித்து விட்டாலும், இன்னும் அவனிடத்தில் இருக்கும் பணிவும், எதனையும் நொடியில் ஆராய்ந்து கிரகித்து விடக்கூடிய அறிவும் அவரைக் கவர்ந்ததென்றால் மிகையாகாது.

இவ்வாறு அனைவரையும் ஒரு க்ஷணத்தில் நோக்கிவிட்டாரானாலும், அவர்களைத் தனியாக அழைத்ததின் நோக்கத்தை விளக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.

'எனதருமை மாணாக்கர்களே, இன்று விஜயதசமி. ஸ்ரீ ராம பிரான் தர்மத்தை நிலை நாட்டிய நாள். தர்மோ ரக்ஷதி ரக்ஷித:. அதாவது தர்மத்தைக் காப்பவரை தர்மமே காக்கும் என்பது இதன் சாரம். ஸ்ரீ ராமன் ஒவ்வொரு செயலிலும் தர்மத்தைக் கடைபிடித்தான். எனவே தர்மம் அவனைக் காத்தது.

இந்த கடிகாஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு விஜய தசமியன்றும் வித்யாப்யாசம் முடிந்து மாணவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்புதல் வழக்கமான நடைமுறையாகும். அதைப் போலவே இவ்வருடமும் காலையில் அனைவருக்கும் வித்யாப்யாச நிறைவு சிறப்பாக நடைபெற்றது. நீங்களும் கற்க வேண்டியதெல்லாம் சிறப்பாகக் கற்றுக் கொண்டீர்கள்.

ஒரு ஆசிரியன் தன்னிடத்தில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் தனது மாணாக்கர்களிடம் அளிக்கவே விரும்புவான். ஆனால் அத்தகைய திறமையும் தகுதியும் வாய்ந்த மாணாக்கர்கள் கிடைப்பது துர்லபம் என்பது எனது கருத்து. இத்துணை காலமாக இந்த கடிகாஸ்தானம் பல்வேறு மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்து வந்துள்ளது. நானே இங்கு ஒரு மாணவனாக நுழைந்தவன் தான். எனது ஆசிரியர் என்னைக் கண்டெடுத்து அவர் அறிந்ததெல்லாம் எனக்குப் பயிற்றுவித்தார். அதே போன்று நானும் அந்த வித்யைகளை சரியான மாணவனுக்கு கற்பிக்க வேண்டும் என்பதே அவரது அவா.

ஆனால் குழந்தைகளே, எனக்கு இத்துணை வருடமாக அத்தகைய மாணவர்கள் யாரும் கிடைக்க வில்லை. இப்போது தான் நீங்கள் அனைவரும் ஒன்று போல் கிடைத்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தக் கடிகை கண்ட ரத்தினங்கள். ஆகவேதான் உங்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகளும், பற்பல ரகசிய தந்திரங்களும் கற்றுக் கொடுத்தேன். ஆயினும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.

அது தான் சக்கர வியூகம்...

நான் இது வரை சொன்னது பொதுவான கருத்துக்கள் தான். இனிமேல் சற்று கவனமுடன் கேளுங்கள்'

இவ்வாறாக ஆசாரியர் சொல்லவும் அது வரையும் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மேலும் சிரத்தை காட்டத் தொடங்கினார்கள்.

(தொடரும்)..

Monday, October 6, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது இயற்கையின் நியதி. சரித்திரத்தின் இரத்தம் தோய்ந்த ஏடுகளைப் புரட்டினால் நமக்குத் தெரிவது எழுந்து விழுந்த பேரரசுகளும் பெருநகரங்களும்தான்.

இந்த நாவலை எழுதத்தூண்டிய கேள்வி இதுதான்.

நகரேஷு காஞ்சி என்று வர்ணிக்கப்பட்டும், பல்லவப் பேரரசின் தலை நகரமாய் விளங்கியும், ஆதித்த கரிகாலன் எடுப்பித்த பொன் மாளிகையை தன்னகத்தே கொண்டும், சோழர்களின் வடதிசை மாதண்ட நாயகத்தின் தலைமையகமாகத் திகழ்ந்தும், குலோத்துங்கன் காஞ்சியில் இருந்து, கலிங்கத்தைக் குலைத்துப் பெற்ற வெற்றியும் இன்ன பிற அரசியல் நிகழ்வுகளின் ஆதாரமாக விளங்கி கச்சி என்றும், காஞ்சி என்றும் பெயர் பெற்ற காஞ்சிபுரம் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்து மற்றுமொரு சாதாரணமான நகரமாக மாறக் காரணம் என்ன?

இதற்காக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த போது என் கண் முன் விரிந்தது இக் கேள்விக்கான விடை மட்டுமல்ல. தற்காலத் தமிழக நிலையின் அடித்தளமான நிகழ்வுகளுமாகும்.

நண்பர்களே, கடந்த 700 ஆண்டுகளில் தமிழகத்தை தமிழர்கள் ஆண்டது 70 ஆண்டுகள் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது மிகப் பிரபலமான கருத்து.

இன்றைய அரசியல் சூழ் நிலையில் தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் தம் தாய் மொழியல்லாத மற்றவர் ஆட்சிக் கட்டில் ஏறிடல் சாத்தியமா? தமிழகத்தில் மட்டும் இந்த நிலையினை சர்வ சாதாரணமாக நாம் ஏற்றுக் கொண்டோமே, எதனால் என்று சிந்தித்திருக்கிறீர்களா?

தமிழகத்தில் ஏற்பட்ட கலாசார மாற்றமும், சாரி சாரியான பிறமொழியினத்தவர்களின் (குறிப்பாகத் தெலுங்கர்கள்) குடியேற்றத்தினால் ஏற்பட்ட மாற்றங்களென்ன? கர்னாடக இசையின் மும்மூர்த்திகள் காவிரி டெல்டாவில் தோன்றிய அதிசயமென்ன? அவ்வாறு பெயர் சொல்லக் கூடிய தமிழிசை அறிஞர்களோ, புலவர்களோ தோன்றாததன் காரணம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் வாழ்ந்து வருவதன் காரணமென்ன?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள் . . . .

விடைகள் எங்கே? ஒன்றா, இரண்டா?.

இந்தக் கேள்விகளுக்கான ஆதார சுருதியாய் விளங்கும் விடைகளை எடுத்தியம்பும் முயற்சிதான் இந்தப் புதினம்.

ஆம். இவை அனைத்துக்கும் காரணமான சம்பவங்கள் நிகழ்ந்தது 13ம் - 14ம் நூற்றாண்டில்.

இந்தக் கதையும் அந்த மாற்றம் நிகழத் துவங்கிய காலத்திலிருந்து மாற்றம் முழுமையடைந்த காலம் வரை பயணிக்கிறது.

தமிழகத்தின் கடைசித் தமிழ் மாமன்னன் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன். இவன் ஆட்சியில்தான் தென்னிந்தியா முழுவதும் ஒரே நாடாக அதாவது தமிழ் நாடாக இருந்தது. இவனுக்குப் பிறகு இவன் வாரிசுகளுக்குள் ஏற்பட்ட பதவி ஆசைதான் தமிழகத்தில் அதுவரை நுழையாமல் இருந்த தில்லி சுல்தான் ஆட்சிக்கும் அதன் பின் ஆற்காட்டு நவாபின் ஆட்சிக்கும் அடி கோலியது. மேலும், அப்போதுதான் மலரத் துவங்கிய விஜய நகரப் பேரரசுக்கு பட்டுக் கம்பளம் விரித்துத் தங்கத் தாம்பாளத்தில் தமிழகத்தை தாரை வார்த்துக் கொடுத்ததும் நிகழக் காரணமாயிருந்தது.

இந்தக் கதை காஞ்சி, மதுரை, விஜய நகரம், திருச்சி, ஆற்காடு, வேலூர், செஞ்சி முதலிய இடங்களில் நடைபெறுகிறது.

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், மாலிக் கஃபூர், கோப்பெருஞ்சிங்கன், எகாம்பர நாதன், ஹரிஹர சங்கமன், புக்க சங்கமன் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள். மேலும் சில வரலாற்றுப் பாத்திரங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.

காதல், கிளு கிளு, இளவரசி முதலிய விஷயங்கள் புதினத்தின் சுவையைக் கூட்டவே பெரும்பாலும் பயன் பட்டிருக்கின்றன. இப் புதினத்திலும் இவற்றை இணைக்கக் கூடுமான வரையில் முயல்கிறேன்.

திரு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியாரின் ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா வும், பற்பல விக்கி இணைப்புகளும் இவ்வரலாற்றுப் புதினத்தை இயற்றுவதற்குப் பெரிதும் துணையாயிருந்தன.

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் நண்பர்களிடமும் இம்முயற்சியைப் பற்றி எடுத்துச் சொல்லி, எனக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.


உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிகள் பல.

Sunday, October 5, 2008

எனது இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை


நேற்று ஒரு இடுகையை சேர்த்து விட்டு அடுத்த இரு இடுகைகளை சேர்க்கலாம் என்று தமிழ்மணக் கருவிப் பட்டையை அழுத்திய போது 'உங்கள் பதிவில் புதிய இடுகைகள் எதுவும் இல்லை' என்று வந்தது:(


இது போல் நிகழாமல் இருக்க என்ன செய்யலாம்?

Saturday, October 4, 2008

விவசாய சி.பொ.ம (SEZ)

நேற்று ஒரு சொந்தப்பணி நிமித்தமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருந்தது.

எப்பொழுதும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகி விடுகிறது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.

இப்போதோ, மருந்துக்குக் கூட ஒரு வயல் காடு கூட இல்லை.:-((

முதலில், ஹுன்டாய் வந்தது, பிறகு செயின்ட் கோபேய்ன். அதன் பின் நோக்கியா, மோட்டரோலா, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், டெல், கபரோ என்று உலகத்தின் 'பெத்த' பேர்கள் எல்லாம் வரிசையாகத் தென் படத்துவங்கியது.

இதே நிலைதான் செங்கல்பட்டு வரையிலும்.:(இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்காவது விவசாயம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.

இது எங்கு சென்று விடும் என்பதும் புரிய வில்லை.இந்நிலையில் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி என்பது கடினமாகி விடும்.

நான் எதிர் பார்ப்பது எல்லாம் இதுதான்.

.

.

அக்ரிகல்சுரல் எஸ்.இ.இஜட் களை......

ஆம் விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்.

நாம் எல்லோரும் இதை வரவேற்கத் தயாராக இருப்போம்..

.

நீங்க என்ன சொல்றீங்க ! ! !



இது ஒரு மீள் பதிவு.

Friday, October 3, 2008

வானவில் 03-10-2008

வருக வருக நண்பர்களே. இது என் எண்ணங்களின் வண்ணங்கள்.

காஞ்சிபுரத்திற்குச் சிறந்த வண்டி, 76 பி என்னும் பேருந்து. கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வழியாகப் பூந்தமல்லியை அடைந்து அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் காஞ்சிபுரம் சேர்ந்து விடலாம். 76 சி என்று ஒரு ரூட் இருக்கிறது. இது கோயம்பேட்டிலிருந்து 100 அடி சாலை வழியாக மவுன்ட், போரூர் என்று சுற்றி பூந்தமல்லிக்கு செல்கிறது. மூன்றாவது ரூட் 79. இது தாம்பரம் சென்று அங்கிருந்து வண்டலூர் வழியாகவோ, முடிச்சூர் வழியாகவோ படப்பை, வாலாஜாபாத் என்று சுற்றிக்கொண்டு காஞ்சிபுரம் சேரும். ஒவ்வொரு ரூட்டிற்கும் ஒவ்வொரு பயன். எனவே, நமது தேவையைப் பொறுத்து ரூட் செலக்ட் செய்து கொள்ளலாம். பெரும்பாலான மக்கள் நாடுவது 76 பி-யைத்தான். இந்த ரூட்டில் தான் சர்வீஸ் அதிகம்.

***********

சமீபத்தில் (1960களில் அல்ல), அதாவது கடந்த இரண்டு - மூன்று மாதங்களில் எங்காவது ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறீர்களா? அப்படி ஓட்டலுக்குப் போனால் சுற்றி முற்றிப் பார்க்கும் வழமை உண்டா? ஏதாவது மாற்றத்தைப் பார்த்தீர்களா..

நான் ஒரு மாற்றத்தைக் கவனித்தேன். பெரும்பாலான ஓட்டல்களில் விலைப் பட்டியலை நிரந்தரமாக எடுத்து விட்டார்கள். சில ஓட்டல்களில் அயிட்டங்களின் பெயர் மட்டுமே இருக்கிறது. விலை இல்லை.

பொருட்களின் விலையோ ஒவ்வொரு வாரமும் ஏறிக் கொண்டே இருக்கிறது.

*********

சென்னையின் போக்குவரத்தில் டூ வீலர் ஓட்டுவது என்பது, 'ரோட் ரேஷ்' கணிணி விளையாட்டு விளையாடுவது போல உள்ளது. சிக்னல் போடாவிட்டாலும் டுர் ர் ர் ர் என்று அனைத்து டூ வீலர்களும் பறக்கின்றன.
100 அடி சாலையில் அசென்டாஸ், காசி தியேட்டர், அஷோக் பில்லர் ஆகிய இடங்களில் பாதசாரிகள் கடப்பதற்காக சிக்னல் போடுகிறார்கள். இதனால் டிராபிக் ஜாம் ஏற்படுவது ஒரு புறம் இருக்க, எக்கச்சக்கமான எரிபொருள் வீணாகிறது. இந்த வீணாகும் எரிபொருளைக் கணக்கிட்டால் இந்த இடங்களில் எஸ்கலேட்டருடன் கூடிய மேம்பாலங்களை அமைக்கலாம். இதனால் எரி பொருளும், நேரமும் மிச்சமாகும்.

உங்கள் கருத்தென்ன.

*******

நான் எழுத நினைப்பதெல்லாம் . . . .


எனக்குத்தான் இப்படி நடக்கிறதா...

நான் என்ன எழுத நினைக்கிறேனோ அதையே மற்றவர்கள் செய்து விடுகின்றனர்.

உதாரணமாக, நான் ஒரு சரித்திரத் தொடர் கதை எழுதலாம் என்றிருந்தேன்.

ஆனால் பாருங்கள், நர்சிமும், லக்கியும் முதலிலேயே துவக்கி விட்டனர்.:-((

ஆனாலும் நான் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதப் போகிறேன்.

கதைக் களம்.. முக்கியமாகக் காஞ்சிபுரம். இதைப் பற்றிய கர்டெயின் ரைசரைப் படிக்கத்தவறாதீர்கள்.

கதைக் காலம்.. 14-15ம் நூற்றாண்டு.

கதைக் கரு... நகரேஷு காஞ்சி என்று, புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல்வேறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்நகரம், தன் பெருமையை ஆற்காட்டிடமும், செஞ்சியிடமும், வேலூரிடமும், சென்னையிடமும் இழந்த்தது ஏன்?


பொருத்தமான தலைப்பைக் கூறுங்களேன்...

* * * * * * * * * * * * * * * * * * * * *

கூட்டாஞ்சோறு, அவியல், பொரியல் என்று ஆளாளுக்கு கலந்து கட்டுகிறார்களே என்று நானும், கதம்பம் என்று ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் பாருங்கள், ஒருவர் கதம்பம் என்று எழுத ஆரம்பித்து விட்டார் :-((

நானும் விடப் போவதில்லை. என்ன தலைப்பு வைக்கலாம் ? என்று யோசித்த போது,

மினி மீல்ஸ்

மினி டிபன்

மிக்சர்

ஃப்ரூட் சாலட்

என்றெல்லாம் யோசனை வந்தது. ஆனால் பாருங்கள், இவற்றில் எதுவும்
தமிழ்ப் பெயர் இல்லை. தமிழ்ப் படுத்தினால், சிறு சாப்பாடு என்றோ, சிறு சிற்றுண்டி என்றோ, கலவை என்றோ, பழக்குழவி என்றோ எழுத வேண்டும்..:-))

என்ன செய்வது?
.
.
.
.
உம்... மாத்தி யோசி....
.
.
.
மாத்தி யோசிக்கும் போது தான் , வானவில் என்று தோன்றியது.
ஆம். நான் எழுதப் போகும், கூட்டாஞ்சோறு, அவியல், கதம்ப மேட்டருக்குப் பெயர்,

'வான வில்'.

இது வானவில் .. என் எண்ணங்களின் வண்ணங்கள்.


வழக்கம் போல் உங்கள் மேலான ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்.