Showing posts with label நட்சத்திர வாரம். Show all posts
Showing posts with label நட்சத்திர வாரம். Show all posts

Monday, December 15, 2008

முடிவும்... தொடரும்...

ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை என்று சொல்ல ஆசைதான். ஆனால் ஒரு வாரத்தில் பதிவுகள் இட மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக ஒப்பேற்றிவிட்டேன் என்பதுதான் உண்மை. அழுத்தும் பணிகளுக்கிடையே பதிவுகள் எழுதுவது ஒரு சவாலாகவே அமைந்தது.

முதலில் கூறியது போல், மேலும் புதிய நண்பர்களின் அறிமுகத்தை எதிர்பார்த்து இந்த நட்சத்திரப் பதிவராக வந்தேன். இது நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


முதல் நாள் அனுபவம்


முதல் நாளன்று, பழமை பேசிக்குப் பிறகு என் பதிவு தெரியவில்லை வேறு ஏதோ ஒரு பதிவரின் லிங்க் வெளியானது. உடனே தமிழ்மணத்திற்குத் தொடர்பு கொண்ட போது, டெக்னிக்கல் கோளாறு என்று தெரிவித்தார்கள். பிறகு, இரவு வரை அந்தக் கோளாறு இருந்தது. இடையே, என் ப்ரொஃபைல் குறிப்புகள் மட்டும் '+' குறியை அழுத்தும் போது தெரிந்தது. ஆகவே நான் தான் நட்சத்திரப் பதிவர் என்று உறுதி செய்து கொண்டேன். இரவிலிருந்து எல்லாம் சரியானது.

நட்சத்திரத்தினிடையே ஐம்பதாவது பதிவு இடும் நிகழ்ச்சியும் அரங்கேறியது.


ஒரு சில ஸ்டேடிஸ்டிக்ஸ்

இந்த வாரத்தில் இந்தப் பதிவையும் சேர்த்து பதினான்கு பதிவுகள். இது நான் சென்ற மாதம் மொத்தமாக எழுதிய பதிவுகளுக்குச் சமமானது. சென்றமாதம் தான் அதிகமான பதிவுகள் எழுதப்பட்டது.

இந்த வாரத்தில் மட்டும் பேஜ் 2000த்தைத் தாண்டியுள்ளது. கடந்த நாங்கு மாதங்களில் பேஜ் 6000 தான். ஆகவே நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதுவும் ஒரு ஆப்ஜெக்டிவ் ஆக இருந்தது.

மற்ற பதிவுகளுக்கு வந்து படித்து பின்னூட்டமிடுவதை முடிந்த வரையில் செய்திருக்கிறேன்.


இந்த வாரத்தில் இடப்பட்ட பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவையாகவும் சுவையுள்ளவையாகவும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.


ஆக இந்த நட்சத்திர வாரம் முடிந்தாலும் தொடர்வது நம் தொடர்புகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


மிக்க நன்றிகளுடனும் அன்புடனும்,

என்றும் உங்கள்

இளைய பல்லவன்.

Sunday, December 14, 2008

காஞ்சிபுரத்துக்கு வாங்க...

காஞ்சியில் முக்கியமானவை அதன் கோவில்கள், காஞ்சிப் பட்டு, காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா பிறந்த இடம், மற்றும் பல.

காஞ்சிப் பட்டு

இந்த வகைப் பட்டு இழை பெங்களூர் மற்றும் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப் படுகிறது. நெய்வது மட்டும்தான் காஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள். காஞ்சிப் பட்டு சற்று கனமாக இருக்கும். இழைகள் சற்று தடிமனாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். மற்றபடி அதிக / புதிய / காம்ப்ளிகேடட் டிசைன்களில் புடவைகள் நெய்வதில் காஞ்சியின் நெசவாளர்கள்தான் கெட்டிக்காரர்கள். எனவேதான் காஞ்சிப் பட்டு சற்று விலை அதிகம். காஞ்சிப் பட்டை முக்கிய கூட்டுறவுச் சங்கங்களிலோ, கோ ஆப்டெக்ஸிலோ, அல்லது முக்கியக் கடைகளிலோ வாங்குங்கள். மற்ற இடங்களில் வேறு பட்டை, காஞ்சிப் பட்டு என்று சொல்லிவிடலாம்.



காஞ்சிக் கோவில்கள்


காஞ்சியில் எங்காவது தடுக்கி விழுந்தால் கூட ஒரு கோவில் முன் தான் விழுவோம் என்று சொல்வது வழக்கம் அத்துணை கோவில்கள். காஞ்சியில் முக்கிய சைவத் திருத்தலங்களும், வைணவத் திருத்தலங்களும் அதிகம். அதிலும், காஞ்சியிலேயே பதினாங்கு திவ்ய தேசங்கள் உள்ளன. இது வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பாகும்.

பெரிய காஞ்சிபுரம் என்ற பகுதியில் அதிக அளவில் சிவன் கோவில்களும், சின்ன காஞ்சிபுரம் என்ற பகுதியில் அதிக அளவில் விஷ்ணு கோவில்களும் இருக்கின்றன. ஆகவே பெரிய காஞ்சிபுரம் சிவகாஞ்சி என்றும் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி என்றும் அழைக்கப் படுகிறது (காவல் நிலையங்களும் இந்தப் பெயரில்தான் இருக்கின்றன!).

மற்றொரு காஞ்சி ஜின காஞ்சி. கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்குப் பின்னால் திருப்பருத்திக் குன்றம் என்ற இடத்தில் மிகப் பழமையான சமண ஆலயம் இருக்கின்றது. இதனாலேயே இந்தப் பகுதி ஜின காஞ்சி என்று அழைக்கப் படுகிறது.


முக்கியத் திருத்தலங்கள்.

1. ஏகாம்பர நாதர் ஆலயம்.

காஞ்சியின் முக்கிய ஆலயம். மிக உயரமான ராஜ கோபுரம். இறைவன் ஏகாம்பர நாதர். இறைவி ஏலவார்குழலியம்மை.
லிங்கம் மண்ணாலானது. எனவே அபிஷேகம் இல்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்தப் படுகிறது.

ஆயிரங்கால் மண்டபம் உண்டு. இரண்டு குளங்கள் உள்ளன. இங்கு இருந்த மாமரத்தின் நான்கு கிளைகளில் நான்கு விதமான ருசியுடைய மாங்கனிகள் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பழைய மரத்தின் கிளைகள் வீழ்ந்து விட்டன. இப்போது மரம் துளிர்க்கத் துவங்கியுள்ளது. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் முக்கியத் திருப்பணிகள் விஜய நகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் மேற்கொள்ளப் பட்டவை. பங்குனி உற்சவம் மிக முக்கியத் திருவிழா.

தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். சுந்தரர் இங்கு வந்து ஒரு கண் பெற்றார். அருணகிரி நாதரும் இங்கே ஒரு பாடல் பாடியிருக்கிறார். பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்வி(பூமி)த் தலம்.


உப தகவல்கள்: காஞ்சிபுரத்தில் சினிமா ஷூட்டிங் என்றால் இந்தக் கோயிலில் தான் நடக்கும். பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இந்தக் கோயிலுக்கு சமீபத்தில் வந்திருந்தார். இந்தக் கோயில் ஆயிரங்கால் மண்டபம் படிப்பதற்கு ஏற்ற இடம். கோவிலில் ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. அங்கேதான் கிரிக்கெட் விளையாடுவோம்.




2. வரதராஜப் பெருமாள் ஆலயம்


ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ஸ்ரீ ரங்கத்தை அடுத்து மிக முக்கிய கோவில் வரதராஜப் பெருமாள் ஆலயம். தாயார் பெருந்தேவித் தாயார். கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. அதற்கு அத்தி கிரி என்று பெயர். இங்கு உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் அரிய சிற்பங்கள் உள்ளன.

அத்தி வரதர் என்ற அத்தி மரத்தாலான வரத ராஜர் சிலை இந்தத் திருக்கோவில் குளத்தின் உள்ளே வைக்கப் பட்டிருக்கிறது. 48 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த வரதர் வெளியே வருவார். ஒரு சில நாட்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. மீண்டும் நீருக்குள் போய் 48 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார்.

இங்கு தான் தங்க பல்லி, வெள்ளி பல்லி என்று இரு சிலைகள் கூரையில் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதைத் தொட்டால் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் காஞ்சியில் பல்லி விழுந்தால் எந்த தோஷமும் இல்லை.

முதலாழ்வார்கள் முதற்கொண்டு அனைவரும் பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். வைகாசியில் முக்கியத் திருவிழா. இதில் கருட சேவையும், தேரும் மிகப் பிரசித்தம். கருட சேவையன்று வானிலும் கருடன் சுற்றும். முன்பு தேர் நிலைக்கு வர 10 - 15 நாட்கள் கூட ஆகும். தற்போது புல்டோசர் வைத்து இழுத்து விடுகிறார்கள்.

இராபர்ட் க்ளைவ் ஆற்காட்டைப் பிடிப்பதற்கு முன் இந்தக்கோவிலில் வந்து ப்ரார்த்தனை செய்த்தாகவும் அது பலித்து விடவே ஆற்காட்டிலிருந்து கைப்பற்றிய பொக்கிஷத்திலேயே விலை உயர்ந்த மகர கண்டியை வரதராஜருக்குக் காணிக்கை அளித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இன்றும் விசேஷ் தினங்களில் இந்த மகர கண்டி வரதராஜரை அலங்கரிக்கிறது.

கோவில் இட்லி என்ற ஒன்றின் பிறப்பிடம் வரதராஜர் கோவில்தான். மற்ற ஊர்களில் அது காஞ்சிபுரம் இட்லி. இதன் சுவையும் செய்முறையும் அலாதி. எழுதும் போதே நாவில் நீர் ஊற்றெடுக்கின்றது.

3. காமாக்ஷி அம்மன் ஆலயம்

நகருக்கு மையமாக அமைந்துள்ளது காமாக்ஷி அம்மன் ஆலயம். காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி ஆகிய மூவரில் முதலானவர். இங்கு அம்மன் தனியாகக் கோவில் கொண்டுள்ளது மற்ற இரு கோவிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு. உக்ர காமாக்ஷியாக இருந்த அம்மனை, ஸ்ரீ சக்கரம் ப்ரதிஷ்டை செய்து ஆதி சங்கரர் சாந்திப் படுத்தினார் என்பது கோவில் குறிப்பில் காணப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்று.

மாசி மாதத்தில் முக்கியத் திருவிழா.


காஞ்சியில் ஏகாம்பர நாதர் ஆலயத்திற்கும் காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் அமைந்துள்ளது திருக்குமரக்கோட்டம் என்னும் முத்துக் குமாரசுவாமி ஆலயம். இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சோமாஸ்கந்தர் உருவங்கள் பல்லவர்கள் எடுப்பித்த கோவில்களில் நிரம்பக் காணலாம்.




4. பரமேஸ்வர விண்ணகரம் (அ) வைகுந்தப் பெருமாள் கோவில்.
5. கைலாச நாதப் பெருமான் ஆலயம்


இவையிரண்டும் பக்தி மார்க்கத்திலும், கலை, சிற்பங்களிலும் மிக முக்கியமானவை. அருமையான சுதைச் சிற்பங்கள் நிறைந்த கோவில்கள். இரண்டும் ஏ.எஸ்.ஐ-யின் பராமரிப்பில் இருக்கின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டப் பெருமாள் கோவிலிலும், சிவ ராத்திரி அன்று கைலாச நாதப் பெருமான் ஆலயத்திலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் இவை சுற்றுலாத் தலம்தான் :((.


மேலே சொன்னவற்றில் கைலாச நாதப் பெருமான் கோவில் தவிர அனைத்தும் திவ்ய தேசம்தான் !!

உலகளந்தப் பெருமாள் கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் இருக்கின்றன. பாண்டவ தூதப் பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஆகியோரும், தூப்புல், வேளுக்கை, பவளவண்ணன், திருப்புட்குழி ஆகிய கோவில்களும் இருக்கின்றன. திருப்புட்குழி காஞ்சியிலிருந்து சற்றுத் தள்ளி வேலூர் செல்லும் மார்க்கத்தில் இருக்கிறது. மற்றவை ஊரிலேயே இருக்கின்றன.

சைவக் கோவில்களில், கச்சபேஸ்வரர் கோவில், கச்சி மேற்றளி முதலியவை மிகவும் அருமையான கோவில்கள்.

இவ்வளவு கோவில்கள் நிறைந்த காஞ்சியை உங்களில் பல பேர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். அவர்களை மீண்டும் வருகவென்றும், மற்றோரை வருக வருகவென்றும் காஞ்சியின் சார்பின் அன்புடன் அழைக்கிறேன் ! ! !

Saturday, December 13, 2008

குழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்

குழந்தை வளர்ப்பதில் முதல் குழந்தை வளர்ப்பதற்கும் இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் சாம்பிளுக்கு ஆறு.


ப்ரெக்னென்சி கன்ஃபர்ம் ஆகும் போது

ரங்கு: பாத்துமா. மெதுவா. தல சுத்துதா? டாக்டர் கிட்ட போலாமா? நான் வேண்ணா லீவு போட்டுடட்டுமா?

ரங்கு: தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். இன்னிக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங். கண்டிப்பா லீவு போட முடியாது. வேணுண்ணா, நாளைக்கு சாயந்திரம் நீயே போயிட்டு வந்துடு.


டெலிவரிக்குப் பின்

ரங்கு: குழந்தையை யாரும் தூக்க விடாதே, நீயே தூக்கு. நானா. அய்யோ எனக்கு பிடிக்கத் தெரியாதே. இப்படி அழுதுகிட்டே இருக்கே, ஏதாவது குடேன்.

ரங்கு: குழந்தைய நானே வச்சிக்கிறேன். பெரியதுக்கு நீதான் வந்து சாப்பாடு போடணுமாம். அழுதா ரெண்டு தடவ ஆட்டினா சரியா போயிடுது.


வளரும் போது - மூன்று வயது வரை

தங்கு: ட்ரிங்..ட்ரிங்... ஏங்க (ஆப்ஷனல்) குழந்த அழுதுகிட்டே இருக்குங்க. என்ன பண்றதுன்னே தெரியல. உடனே சைல்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போணும். கெளம்பி வாங்க.

ரங்கு: சரி உடனே வரேன்.


ரங்கு: காலைல சின்னது அழுதுகிட்டே இருந்துதே என்னாச்சு.

தங்கு: அதுக்கு பொழுது போலன்னு அழுது. ரெண்டு அடி குடுத்தேன். நிப்பாட்டிடுச்சு.



ஸ்கூலுக்கு அனுப்பும் போது

தங்கு: ஏங்க (ஆப்ஷனல்), குழந்தைய நல்லா பாத்துக்குவங்களா? அதுக்கு மூச்சா வருதுன்னு கூட சொல்லத் தெரியாதே. நான் வேண்ணா விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்துரவா? ஸ்கூல் போமாட்டேன்னு அழுதே. அங்க அடிச்சிருப்பாங்களோ. கம்ப்ளெயின்ட் பண்ணலாமா? இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல.



ரங்கு: நேத்தி ஸ்கூல் போமாட்டேன்னு சின்னது சொன்னதே என்னாச்சு.

தங்கு: சும்மா? வீட்ல் ஒக்காந்து டோரா பாக்கணும்னு ஆக்ஷன் பண்ணுது. வெரட்டி உட்டுட்டேன்.



காலேஜ் அட்மிஷன்

ரங்கு: நல்ல காலேஜ்ல அலஞ்சு திரிஞ்சு அட்மிஷன் பண்ணனும். நாம கேக்கற சப்ஜக்ட் கெடைக்கறதுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா என்ன?

ரங்கு: கெடச்ச காலேஜ்ல கெடச்ச சப்ஜக்ட் சூஸ் பண்ணு. பரவால்ல. எல்லாமே நல்ல சப்ஜக்ட்தான். இல்லாட்டி ஏன் அதை வைக்கப் போறாங்க. நாம படிக்கறதுல தான் இருக்கு.


கல்யாணம்

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

நார்மல் டெக்ஸ்டில் இருப்பது முதல் குழந்தை டயலாக். இடாலிக்ஸில் இருப்பது இரண்டாவது குழந்தை டயலாக்.

இதன் மூலம் கிடைக்கும் நீதி. முதல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, இரண்டாம் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. முதலாவது ரொம்ப ரொம்ப ஓவர், அடுத்தது ரொம்ப ரொம்ப கம்மி.

நீங்க மொதல் குழந்தையா ரெண்டாவது (அ) அதற்கு மேற்பட்ட குழந்தையா?

Friday, December 12, 2008

இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் ?

இந்தியா ஒரு வளரும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இது பல வருடங்களாக வளரும் நாடாகவே இருந்து வருவதுதான் கவலை அளிக்கும் விஷயம். சரி, இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும்? இந்தக் கேள்விக்கு பதில் தேடிய போது கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, பின் தங்கிய நாடு என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர அதன் 'டெஃபனிஷன்' என்ன?

உலகில் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என்று நிர்ணயம் செய்கின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகியவற்றுடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் இந்த நிர்ணயத்தை வழங்குகிறது.

பொதுவாக ஒரு நாடு வளர்ந்த நாடாக இருக்க கீழ்கண்டவற்றில் பெருமளவு வளர்ச்சியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்திருக்க வேண்டும்.

1. முழுமையான ஜன நாயக அரசு ( Democratic Governments)

2. தொழில் மயமாக்கம் (Industrialization)

3. கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் (Free Market Economies)

4. சமூக நலத் திட்டங்கள் செயல் பாடுகள் (Social Programs)

5. மனித உரிமை உறுதிப்பாடு (Human Rights Guarantee)

பெரும்பாலும், யு.எஸ்.ஏ, யு,கே, ஆஸ்திரேலியா, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. இந்த நாடுகள் மேலே குறிப்பிட்ட அனைத்து குறியீடுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இஸ்ரேல், சைப்ரஸ், தென் கொரியா ஆகியவையும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளன.

இவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் வளரும் நாடுகள் அல்லது பின் தங்கிய நாடுகள். இப்போது வளரும் நாடுகளில் பல்வேறு உட்பிரிவுகள் வந்து விட்டன.

புதிய தொழில் மயமான நாடுகள் (Newly Industrialized Economies), மேலே வரும் நாடு (Emerging Economies) என்று புதிய உட்பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

இந்தியா, சீனா, ப்ரேசில், அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகள் 'Bigger Emerging Economies' என்று வழங்கப் படுகின்றன.

இந்த அளவில் இந்தியா வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவும், சீனாவும் 2030ல் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.

ஆக பொருளாதாரம் தான் ஒரு நாட்டை வளர்ந்த நாடா, வளரும் நாடா என்று முக்கியமாகத் தீர்மானிக்கிறது. இதில் முக்கியமான அளவுகோல் மொத்த உள் நாட்டு உற்பத்தி (Gross Domestic Product). இதையும் மொத்தமாகப் பார்க்காமல் ஒரு மனிதனுக்கு எவ்வளவு உற்பத்தி என்று பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் தெரியும். இதற்குப் பெயர்தான் Gross Domestic Product - Per Capita Level.

இதையும் இரு வகையாகப் பார்க்கலாம். ஒன்று 'நாமினல்' அதாவது உள் நாட்டு கரன்சியின் அளவு கோலில் பார்ப்பது. இது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மற்றொன்று, Purchase Power Parity, வாங்கும் சக்தியின் அடிப்படையில் பார்க்கப் படுகிறது. இது சற்று துல்லியமானது.

ஜி.டி.பி. - பெர் கேபிடா (Gross Domestic Product - Per Capita Level) அளவுகோல்.

மொத்த உள் நாட்டு உற்பத்தி (க்ராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட்) என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவு கோலாக இருக்கிறது.

ஜி.டி.பி = முதலீடு + அரசு செலவீனம் + (ஏற்றுமதி - இறக்குமதி) + உள் நாட்டு பயனீடு, அதாவது Internal Consumption

இதை நாட்டின் சராசரி மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி மனித மொத்த உள் நாட்டு உற்பத்தி. பெர்கேபிடா ஜி.டி.பி.

இந்த வகையில் இந்தியாவின் ஜி.டி.பி= 2365 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சீனா - 5300 டாலர்கள். இது பர்சேஸ் பவர் பேரிடி (Purchase Power Parity)முறையில் கணிக்கப் பட்டது.

நமது நாட்டின் பிரச்சினைகள் இரண்டு. அதிக அளவிலான இறக்குமதி, அதிக மக்கள் தொகை. இவையிரண்டும் நமது பெர் கேபிடா ஜி.டி.பி-ஐ மேலே வர விடாமல் தடுக்கின்றன.

சரா சரியாக 10000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பெர் கேபிடா ஜி.டி.பி இருக்கும் நாடுகள் வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. நமது நாடு 10000 அமெரிக்க டாலர் பெர் கேபிடா அளவை அடைய என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறிய கணக்கு.

தற்போதைய பெர் கேபிடா - 2365 அமெரிக்க டாலர்கள்.

தற்போதைய மக்கள் தொகை - 110 கோடி

மொத்த ஜி.டி.பி. = 2,60,150 கோடி அமெரிக்க டாலர்கள்

மக்கள் தொகை இதே நிலையில் இருந்தால், 10000 டாலரைக் கடக்க நமக்குத் தேவையான ஜி.டி.பி. 11 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்.

இது இந்திய ரூபாயில் 5,50,00,00,00,00,00,00,000 ரூபாய்கள்.

இதுவும் மக்கள் தொகை ஏறாமல் இருந்தால் மட்டுமே.

ஆக நாம் வளர்ந்த நாடாக ஆக வேண்டுமென்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் தொகை குறைய வேண்டும்.

என்னதான் பெரிய ஜன நாயக நாடாக இருந்தாலும், சமூக நலத் திட்டங்கள், தொழில் மயமாக்கல், தனி மனித உரிமைகள் இருந்தாலும், மக்கள் தொகை குறையாத வரையில் நாம் வளரும் நாடாகவே இருப்போம்.

இப்போது சொல்லுங்கள் நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோமா இல்லையா? இந்த வளர்ச்சி சரியானது இல்லை தானே.

வாசித்தல் அனுபவம்

என்னை தொடருக்கு அழைத்த நண்பர் குடுகுடுப்பைக்கு நன்றி.

படிப்பது என்பது இப்போது என்னைப் பொறுத்தவரை மூச்சுவிடுவது போல் இயற்கையான செயலாகி விட்டது. சாப்பிடும் போது தட்டில் உணவிருக்கிறதோ இல்லையோ பக்கத்தில் புத்தகமோ, நாளிதழோ இருக்க வேண்டும். அது எத்தனையாவது முறை படிக்கப் படுகிறது என்பது ஒரு பொருட்டல்ல. இதற்காக தங்கமணியிடம் எவ்வளவோ திட்டு வாங்கியும் ஒன்றும் மாறவில்லை. தங்க்ஸ் விக்ரமாதித்தி. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராததால் இப்போதும் திட்டுக்கள் தொடர்கின்றன.

எனக்கு நினைவு தெரிந்து மூன்றாவது படிக்கும் போது அம்புலிமாமா படிக்க ஆரம்பித்தேன். வந்தவாசியில் அண்ணன் (பெரியப்பா மகன்) இருந்தார். அவரும் பெரியப்பாவும் அம்புலிமாமா, பாலமித்ரா தவிர மாயாஜாலக் கதைப் புத்தகங்கள் படித்திருக்கிறேன். மந்திரக் குகை, ஏழுகடல் தாண்டி பூவில் அரக்கன் உயிர் என்று ஞாபகம் இருக்கிறது. ஸ்டார் காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் முதலியவை படித்திருக்கிறேன்.

வந்தவாசிக்கு அருகில் ஆரியாத்தூர் என்று ஒரு கிராமம். அங்கு பெரியப்பா இருந்தார். அந்த ஊரில் ஒரு அக்கா இருந்தார்கள். அவர்கள் ராணி முத்து படிக்கத் தருவார்கள். குரும்பூர் குப்புசாமியின் ஒரு கதை படித்தது ஞாபகம் இருக்கிறது. இதெல்லாம் ஐந்தாவது படிக்கும் போது. இவையின்றி திருப்பதிக்குச் செல்லும் போது அங்கு தேவஸ்தானப் பதிப்புகளாக பக்திக் கதைகளும், இராமகிருஷ்ண விஜயமும் பக்தி ரசம் வார்த்தன.

ஆறாவது படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு லைப்ரேரியன் குடியிருந்தார். அவர் பலப்பல சிறுவர் கதைப் புத்தகங்கள் படிக்கத் தருவார்.

இப்படியாக எல்லாம் படித்து விட ஏழாவது வகுப்பில் படிக்கும் போது, பெரிய காஞ்சிபுரம் கிளை நூலகத்தில் மெம்பரானேன். அங்கு முதலிலேயே கண்ணில் பட்டது பொன்னியின் செல்வன் நாலாம் பாகம். முதலில் அதைப் படித்து, பிறகு கிடைக்கும் பாகங்களையெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக படித்தது படித்த மாதிரியே இல்லை. மீண்டும் ஒரு முறை நூலகரிடம் சொல்லி வைத்து வரிசையாகப் படித்து முடித்தேன். இடையே, தமிழ்வாணன், கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன், லக்ஷ்மி, எஸ்.வி.வெங்கட்ராம், ராஜேந்திரன், தேவன், பிரபஞ்சன் என்று பலரும் அறிமுகமானார்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கருத்துத்தாகத்தில் இலக்கியப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து முடியாமல் விட்டுவிட்டேன்.

பனிரெண்டாம் வகுப்பிற்குள், இவையெல்லாம் முடிந்துவிடவே, ஆங்கிலப் புத்தகங்களை முயற்சிக்கலாம் என்று முதலில் ஜேம்ஸ் ஹாட்லி சேசைப் படிக்க ஆரம்பித்தேன். சுத்தமாகப் புரியவில்லை. வீம்புக்காக ராபர்ட் லுட்லும், ஜேனாதன் ப்ளாக் ஆகியோரின் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். புத்தகம்தான் கையில் இருந்ததே ஒழிய, உள்ளே ஒன்றும் ஏறவில்லை.

இதற்குப் பிறகு, ஒரு ப்ரின்டிங் பிரசில் வேலை செய்து கொண்டே, பி.காம் படிக்க வேண்டியிருந்தது. இது மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அம்பேத்கார் பற்றிய ஒரு புத்தகம் நான் வேலை செய்த அச்சகத்தில்தான் தயாரித்தார்கள். மற்றொரு புத்தகம் திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரின் 'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா' இதை படித்த பிறகுதான் சரித்திரத்தில் மிகுந்த ஆவல் ஏற்பட்டது. இப்போது புது எடிஷன் வாங்கியிருக்கிறேன்.

இந்தக் காலத்தில்தான் பட்டாம்பூச்சி (தி பாபில்யான்) தமிழில் கிடைத்தது. அது உண்மைக் கதை என்றாலும் பெரும்பாலும் புனைவாகப் பட்டது. அருமையான புத்தகம். கிடைத்தால் மறக்காமல் படியுங்கள்.

இதனூடே, பாக்கெட் / மாத நாவல்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல, 'ஙே' ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன், தேவிபாலா மற்றும் பலர் ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. பாலகுமாரன் எழுத்தில் மயங்கிப் போய் இருந்தேன். ஆனால் அவரது எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றம் என்னையும் மாற்றிவிட்டது.

இன்னும் நான் சொல்லாத மூவர் கல்கி, சுஜாதா, சாண்டில்யன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்கள் இவர்கள்தான். கல்கியின் எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப் பட்ட பின் அவரது பொன்னியின் செல்வன், அலையோசை, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் அடங்கிய ஒரு கிட் வாங்கினேன். இது வரை பொ.செ. எத்தனை முறை படித்திருப்பேன் என்ற கணக்கையே விட்டுவிட்டேன். இப்போது படித்தாலும் புதிதாக ஒன்று தென்படும்.

சாண்டில்யனின் யவன ராணிதான் நான் முதலில் படித்த நாவல். பிறகு விலை ராணி, ஜலதீபம், ராஜ பேரிகை, ராஜ முத்திரை, கடல் புறா என அனைத்து முக்கிய நாவல்களையும் முடித்து விட்டேன். இவற்றில் பெரும்பாலானவை என்னுடைய அலமாரியை அலங்கரிக்கிறது.

சுஜாதாவை எப்போது படித்தாலும் முடிவில் ஒரு வியப்பு தொங்கி நிற்கும். என் இனிய இயந்திரா. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மிகவும் பிடித்தவை. காந்தளூர் வசந்தகுமாரன் கதையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சி.ஏ. படிக்கும் போது, சி.ஏ. இன்ஸ்டிடியூட் லைப்ரரியுடன் சென்னை கன்னிமாரா, யு.எஸ்.ஐ.எஸ். லைப்ரரி, ப்ரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி மெம்பர்ஷிப்களையும் சேகரித்துக் கொண்டேன். இவற்றில் இருந்து பெரும்பாலும் சி.ஏ. சார்ந்த புத்தகங்கள் தான் படித்தேன். ஆனால் கன்னிமாராவில் நல்ல நல்ல வரலாற்றுப் புத்தகங்களெல்லாம் கிடைக்கும். கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம் அங்குதான் படித்தேன்.

இடையே, ஆங்கிலப் புத்தகங்களின் பால் மீண்டும் மோகம் கிளம்பியது. இந்த முறை ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் நன்றாக இருந்தது. ஜான் க்ரிஷாமின் தி ஃபர்ம், ரெயின் மேகர் ஆகியவை மிகப் பிடித்த நாவல்கள். நார்மன் வின்சன்ட் பீல்-ன் 'த பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்' த பவர் ஆஃப் பாசிடிவ் லிவிங் ஆகியவை படித்திருக்கிறேன். ஐ ஆம் ஓகே யூ ஆர் ஓகே அருமையான உளவியல் புத்தகம். இவ்வளவுதான் என் ஆங்கிலப் புத்தக அறிவு.

இவற்றுடன் வழக்கமாக வாலிப வயதில் படிக்க வேண்டிய புத்தகங்களும் படித்திருக்கிறேன்;).

இணையத்தின் அறிமுகத்திற்குப் பிறகு படிப்பது அதிகமாகி விட்டது. விக்கிதான் முதல் ரெஃபரென்ஸ். பதிவுலகம் பார்த்தபின் சொல்லவே வேண்டாம்.

வரலாறு.காம் என்று ஒரு தளம் இருக்கிறது. அங்கு சே.கோகுல் என்பவர் சரித்திரத் தொடர் எழுதுகிறார். ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ரெஃபரன்ஸ் கொடுத்திருப்பார். அதுதான் அவர் ஸ்பெஷாலிடி. அவரைப் பார்த்துதான் சக்கர வியூகம் எழுதவேண்டும் என்ற ஆவல் வந்தது.

கவிதைகள் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. கி.ராஜ நாராயணன், புதுமைப் பித்தன், லா.ச.ரா ஆகியோரை அவ்வப் போது படித்ததுண்டு. ஆனால் எதுவும் நினைவில் இல்லை. மு.வ. வின் அகல் விளக்கு என்னைப் பெரிதும் பாதித்த நாவல். மிகப் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்டது. பொது அறிவு சம்பந்தப் பட்ட எதையும் படித்து விடுவேன்.

விகடன், குமுதம், கல்கி, துக்ளக், நக்கீரன், ஜூ.வி., மங்கையர் மலர், பக்தி ஸ்பெஷல், சக்தி விகடன், பிசினஸ் இன்டியா, பிசினஸ் டுடே, அவுட்லுக் ஆகிய வார மாத இதழ்களும், கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர்களும் சேர்ந்திசை வாசித்திருக்கின்றன.

ஆக கண்டதையும் படிப்பவன் என்று சொல்லிக் கொள்ளலாம். என்னை உண்மையான வாசிப்பாளி என்று கூறியுள்ளார் குடுகுடுப்பையார். என் அனுபவத்தைப் படித்து விட்டு அவர் சொன்னது சரியா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

தொடரைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

SUREஷ்
சதீசுகுமார்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நிறைவுப் பகுதி

முதல் பகுதி

முதலில் இருந்த ஒரு இறுக்கமான சூழ நிலை இப்போது இல்லை. மிஷின் விவகாரத்தில் ஐஸ் ப்ரேக் ஆகி விட்டிருந்தது. அவள் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள். தினமும் லேட்டாகத் தான் கிளம்புவாள். அவள் வீடும் என் வீடும் ஒரே பகுதி என்பதால் என் வண்டியிலேயே ட்ராப் செய்து கொண்டிருந்தேன். கம்பெனியில் வேலை செய்யும் மற்ற மேனேஜர்களின் வீடு நேரெதிர் பகுதி என்பதால் என்னைத்தான் நம்பியிருந்தாள்.

அது ஃபாக்டரி. ஐ.டி. கம்பெனி அல்ல. ஃபாக்டரியில் பெண்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அக்கவுன்ட்ஸ், பில்லிங், கமர்ஷியல் ஆகிய துறைகளில்தான் பெண்களைப் பார்க்க முடியும். அதுவும் அவர்களுடைய ட்ரஸ் சென்சைப் பார்த்தால் 70ஸ் 80ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். பெண்களுடன் பேசுவதே ஒரு டபூ. இந்த சூழலில் சுவேதா என்னுடன் பழகுவதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அவள் ஐ.டி. கம்பெனியிலிருந்து வந்திருக்கிறாள் (அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறாள்) என்பதால் தவறாக எண்ணவில்லை.

திடீரென்று ஒரு நாள் எனக்குப் பார்ட்டி கொடுக்கிறேன். நாளை அடையார் பார்க் போகலாம் என்று கூறினாள்.

===

ஏன் அடையார் பார்க்கிற்கு வந்தோம் என்று ஆகிவிட்டது. நானும் சைவம். அவனும் சைவம். பேசாமல் ஒரு நல்ல உடுப்பி ஹோட்டலுக்கு சென்றிருக்கலாம் என்று வாய் வரை வந்ததை விழுங்கிவிட்டேன். ஒருவேளை திண்ணிப் பண்டாரம் என்று நினைத்துவிட்டால்.

பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி பேசினோம். பிடித்தது, பிடிக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது கேட்காதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் தெரிந்து கொண்டோம்.

முதலில் பிடிக்காமல் வேலைக்குச் சேர்ந்த நான், இப்போதெல்லாம் எப்பொழுது ஃபாக்டரிக்குச் செல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். ஏன். எனக்கே தெரியவில்லை.

===

சி.டபள்யூ.ஏ. பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதை முடித்து விட்டால் நேரடியாக மேனேஜராக ப்ரமோஷன் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டார் ஜி.எம். ஆனால் என்னால்தான் படிக்க முடிவதில்லை.ஏனென்று புரியவில்லை. எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று கஷ்டப்பட்டு படித்தும் பாதிதான் ஏறுகிறது. என்ன செய்வது. சுவேதாவைக் கேட்கலாம்.

===

எனக்கு சஜஷன் சொன்னவன் என்னிடமே கேட்கிறான். என்ன சொல்வது. அவன் மனது அலைபாய்வது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என் மேல் ஏதாவது ஈடுபாடு இருக்கலாமோ? இருந்தால் நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே. ஏன் இப்படி செய்கிறான். மனதிற்குள் நன்றாகத் திட்டினேன். சரி நாமே ப்ரபோஸ் செய்யலாம். அதையும் அவன் பாஸ் செய்தவுடன் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். நிச்சயமாக மறுக்க மாட்டான். தேவையான இன்டிகேஷன்கள் கிடைத்துவிட்டன.

பாஸ் செய்தால் அவன் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் தருவதாக ப்ராமிஸ் செய்தேன். என்ன ட்ரீட் என்று முடிவும் செய்துவிட்டேன்.

===

என்ன ட்ரீட் ஆக இருக்கும். ஏற்கனவே பெரிய ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து விட்டாள். அதைவிட பெரிய ட்ரீட் இருக்க முடியாது. ஏதாவது வாங்கித் தரப் போகிறாளா? அவளைச் சுற்றியே மனம் திரிகிறதே. ஒரு வேளை... அது தானா இல்லையா. கேட்டுப் பார்க்கலாமா? கேட்டு ஏதாவது ஏடாகூடமாகப் போய்விட்டால்? இருப்பதும் போய்விட்டால்...

குழப்பமாக இருந்தது. சரவணா.. மனதை ஒருமுகப் படுத்து. படி. பாஸ் செய். பிறகு உனக்கே தெரிந்து விடுகிறது. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஜி.எம். கூடுதல் லீவும் கொடுத்து விட்டார். மொத்தமாக 25 நாட்கள். தேர்வு நாட்களையும் சேர்த்து. செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஃப்ரென்ட் வீட்டிற்குப் படிக்கப் போய்விட்டேன். அங்கிருந்தே எக்சாம் எழுதினேன். நன்றாக எழுதி முடித்துவிட்டேன்.

சுவேதா கேட்ட போது, சுமார்தான் என்று உதட்டைப் பிதுக்கினேன். நல்ல ரிசல்ட் வந்தால் சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று.

===

சரவணன் தேர்வெழுத லீவ் போட்டிருக்கும் போது என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. பையன் யு.எஸ்.-ல் இருக்கிறான். நான் அங்கே சென்ற பிறகு இன்ஸ்ட்ருமென்டேஷனிலேயே வேலை செய்யலாம்.

யாரும் என்னைக் கேட்கவில்லை. சம்பிரதாயத்திற்குக் கேட்ட போது மவுனமாக இருந்தேன். சம்மதம் என்று எடுத்துக் கொண்டார்கள்.

என்ன முடிவு செய்வது. சரவணனுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ட்ரீட் என்னாவது. அவனே சுமாராக எழுதியிருக்கிறேன் என்று சோகமாகச் சொன்னானே. பிறகு எப்படி ப்ரபோஸ் செய்வது? அப்பா வேறு நிறைய ஆசை வைத்திருக்கிறார். தங்கை வேறு இருக்கிறாள். எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் இது போல் எதுவும் நிகழ்ந்ததில்லை. இப்படி ஏதாவது செய்து ஏடாகூடமாக ஆகி விட்டால்? நினைக்கவே பயங்கரமாக இருந்தது.

அவன் நன்றாக எழுதவில்லை என்று சொன்னது ஆறுதலைத் தந்தது. ஃபெயிலாகிவிட்டால் ட்ரீட் என்று ப்ரபோஸ் செய்ய முடியாது.

அப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுத்தேன்.

===

சுவேதா திருமணத் தகவலைச் சொன்ன போது என்ன செய்வதென்றே தோன்றவில்லை. இப்போது சொல்லிவிடலாமா? வேண்டாம் என்று முடிவெடுத்தேன். திருமண நாளன்றுதான் எனக்கு ரிசல்ட் வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றேன்.

===

திருமணத்திற்கு முன் வேலையை ரிசைன் செய்துவிட்டேன். மணப்பெண் கலராகவும், பூசினாற்போலவும் இருக்கவேண்டுமாம். ஆகவே வீட்டிலேயே ஈட்டிங் ட்ரீட்மென்ட்.

திருமணம் காலையில் முடிந்தது. மாலையில் ரிசப்ஷன். பரிசுடன் வந்திருந்தான் சரவணன்.

===

மேரேஜ் கிஃப்டைக் கொடுத்துவிட்டு பாஸ் ஆன செய்தியையும் தெரிவித்துவிட்டு, உங்கள் மனைவி நான் பாஸ் செய்தால் ஒரு ட்ரீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று சுவேதாவின் கணவனிடம் கூறினேன். அவன் மையமாகச் சிரித்தான். சுவேதாவிடமிருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. கிஃப்ட் கொடுப்பதற்காக மற்றவர்கள் அவசரப் படுத்தினார்கள். சாப்டுட்டு போங்க என்றான் மணப்பையன்.

(முடிந்தது)
* * * * *

இது ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் ஸ்டைலில் எழுதப்பட்டது. உரையாடல்களே இருக்காது. நடை எப்படி இருக்கிறது என்பதையும் சற்றுத் தெரிவியுங்கள்.

Thursday, December 11, 2008

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

வணக்கம். என் பெயர் சரவண முத்துக் குமார். சுருக்கமாக சரவணன். எம்.காம் வரை படித்து விட்டு, ஒரு ஆட்டோமொபைல் ஒ.இ.எம். கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசராகக் கடந்த 6 வருடங்களாகப் பணிபுரிகிறேன். இடையே ஐ.சி.டபள்யூ.ஏ. வுக்கும் படித்துத் தேர்வெழுதி வருகிறேன். இது முடித்தால் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைக்கும்.

நான் இதுவரை ஃபெயிலானதில்லை. இதை வைத்து என் வயதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லையல்லவா?. வீட்டில் நான் இரண்டாவது பிள்ளை. அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. தந்தை அரசாங்க அதிகாரி. தாய் ஹோம் மேக்கர். எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை. தற்போது இந்த விவரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

என் நிறுவனம் ஒரு வெளி நாட்டுக் கார் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த பாகங்கள் ஃபாக்டரிக்கு சப்ளை செய்வதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.

ஆனால் நாங்கள் பில்லிங் செய்வது அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் விங்கிற்குத்தான். இது போக வெளி நாட்டிலுள்ள இந்தக் கம்பெனியின் ஃபாக்டரிகளுக்கும் சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த கம்பெனிப் பொருட்களில் கடந்த மூன்று மாதங்களாக குவாலிடி பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. ரிஜக்ஷன், ரீ-வொர்க் என வேலைப்பளு அதிகமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது நான் பணிபுரியும் நிறுவனத்தின் இமேஜையே பாதித்து விட்டது.

நான் காஸ்ட் அக்கவுண்டன்சி படித்து வருவதால், ஒரு பெரிய அனலசிஸ் செய்து குவாலிடி பிரச்சனையால் லாபம் 35% வரை குறையும் என்று ஒரு விரிவான அறிக்கை அளித்திருந்தேன். இந்த அறிக்கை என் வாழ்வின் போக்கையே மாற்றும் என்று தெரிந்திருந்தால் இதை தயாரித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

=====

வணக்கம். என் பெயர் சுவேதா. படித்தது பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன். எனது ஃபேவரிட் கல்லூரியில் ட்ரிபிள் ஈ யோ, சி.எஸ்-சோ. கிடைக்காததால் கிடைத்த இன்ஸ் ட்ருமென்டேஷனில் சேர்ந்து விட்டேன். என்னுடன் கல்லூரியில் ட்ரிபிள் ஈ, சி.எஸ் சேர்ந்தவர்களுக்கு மூன்றாமாண்டே கேம்பசில் ப்ளேஸ்மென்ட் ஆகிவிட, அப்போதுதான் ஏண்டா இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தோம் என்று வேதனைப் பட்டேன்.

நல்ல வேளையாக படித்து முடித்தவுடன், உலகின் மிகப் பெரிய இன்ஸ் ட்ருமென்டேஷன் கம்பெனியில் பூனாவில் வேலை கிடைத்தது. எல்லோருக்கும் ட்ரீம் ஜாப்-ஆக இருக்கும் இந்தக் கம்பெனியில் வேலை கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்தது. இப்போது வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடம் முடிந்து விட்டது.

சேர்ந்தது முதல் டூர் தான். இந்தியா, ஜெர்மனி, யு.எஸ்., சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என கோபால் பல்பொடி கணக்காக உலகம் சுற்றும் வாலிபி ஆகிவிட்டேன். இதுதான் பிரச்சனையாக முடிந்திருக்கிறது.

வீட்டில் நான் தான் முதல் பெண். தங்கை ஐ.டி. ஃபைனல் இயர் படிக்கிறாள். எனக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என்பது அப்பாவின் எண்ணம். இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே பெண் பார்ப்பது?

ஆகவே, சென்னைக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விடு என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இங்கே அனுப்பமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கம்பெனிக்கு சென்னையில் மிகப் பெரிய கிளை உள்ளது.

நான் வராமல் போகவே, அப்பாவே சென்னையில் அவருடைய நண்பர் ஜி.எம்.ஆக இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.உடனே ஜாயின் செய்ய வேண்டுமாம். நேரில் தகவல் சொல்கிறாராம். இங்கே, பேப்பர் போட்டுவிட்டு, உடனே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். வேலையைப் பற்றி விசாரித்தேன்.

அடக் கடவுளே, ஒரு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஓ.இ.எம். கம்பெனியில் குவாலிடி பிரச்சனையாம். ஆகவே என்னை குவாலிடி மேனேஜராகப் போட்டிருக்கிறார்களாம். என்ன கொடுமை சரவணன் இது, என்று கேட்டேன் அப்பாவிடம். அவர் பெயர் சரவணன் இல்லை. ஆனால் இதே பெயரை தினமும் உச்சரிப்பேன் என்று எனக்கு அப்போது தெரியாது.

===

எனது அறிக்கை நன்றாக வேலை செய்தது. குவாலிடியில் எப்படி பாகங்கள் க்ளியர் ஆகிறது என்று யாருக்கும் புரிய வில்லை. குவாலிடி மேனேஜர் ஒரு பெருசு (பெரியவர்கள் மன்னிப்பார்களாக). அவர் முதலில் ஒரு பட்டறையில் டீ வாங்கிக் கொடுத்து தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

படிப்படியாக முன்னேறி தற்போது குவாலிடி மேனேஜராக உள்ளார். வண்டியைப் பற்றி நல்ல அனுபவம் உண்டு. ஒரு வண்டியை பிரித்து மீண்டும் கட்டி விடுவார். ஆனால் குவாலிடி என்பது அவருடைய சிலபசில் இல்லை. ஆனாலும் ஜி.எம். சொல்லைத் தட்டாமல் குவாலிடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம் என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆட்டோ குவாலிடி மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கொடுத்தார். அந்த மிஷினின் விலை 150 லட்ச ரூபாய். அந்த மெஷினைத் தயாரித்த கம்பெனியிடம் கேட்ட போது அவர்களும் இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

உடனே மிஷினை மாற்ற விரும்பவில்லை நிர்வாகம். எனவே, குவாலிடிக்கு ஒரு புது ஆளைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் ஒரு பெண்ணாம். ஃபாக்டரி ஹெட்டிற்கு ப்ரொடக்ஷன் ப்ரச்சனையைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் இன்னொரு ஃபாக்டரியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

நான் குவாலிடி பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுத்ததால் அந்தப் பெண்ணை எனக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லிவிட்டார். அவள் குவாலிடி மேனேஜரிடமிருந்து இன்டிபென்டன்டாக இருக்க வேண்டுமாம். என்ன கொடுமை சரவணா இது என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

===

அந்தக் கம்பெனி நகரத்திலிருந்து மிகத் தள்ளி இருந்தது. கம்பெனி வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வரும். வேலை அப்படியில்லையே. ஒரு எம்.என்.சி.யில் வேலை செய்துவிட்டு இங்கு எதுவுமே பிடிக்க வில்லை. போதாதற்கு ஒரு அக்கவுன்ட்ஸ் ஆபீசருக்கு ரிப்போர்ட் செய்யவேண்டுமாம். அவனுக்கு என்ன தெரியும் நான் அவனிடம் ரிப்போர்ட் செய்ய. என்ன செய்வது. எல்லாம் நேரம் என்று அவனிடம் சென்றேன்.

===

பழைய குவாலிடி மேனேஜர் மெஷினை மாற்ற வேண்டும் என்று சொன்னதால், முதலில் மெஷினை செக் செய்யுமாறு சுவேதாவிடம் சொன்னேன். ஏதாவது உள்ளே பழுதடைந்து இருக்கலாம் என்ற என் சந்தேகத்தையும் சொன்னேன். அவள் சரியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இவன் என்ன சொல்வது, நாம் எஞ்சினியர் என்ன கேட்பது என்ற நிலையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் நடக்காதுமா என்று நினைத்துக் கொண்டு, மாலை ரிவியூ செய்யலாம் என்று சொல்லி வெளியில் சென்றுவிட்டேன்.

===

முதலில் வேறு விதமாக ட்ரை செய்து பார்த்தேன். சென்சார், ப்ரோக்ராம் என்று எல்லாவற்றையும் செக் செய்தும் பேக் டு ஸ்கொயர் ஒன் தான். சரி சரவணன் சொன்னதை ட்ரை செய்து பார்க்கலாம் என்று மிஷினை ஆராய்ந்தேன். என்னுடைய பழைய கம்பெனியின் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாகங்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொன்றாக ஆராய்ந்த போது, ஹுர்ரே!! டக்கென்று அந்த ஃப்ளா பிடிபட்டது. எர்ரர் வேல்யூ டிடெக்ட் செய்யும் சர்க்யூட் ஷார்ட் ஆகி பைபாஸ் ஆகி விட்டிருக்கிறது. எனவே, எர்ரர் வேல்யூ வந்தாலும் பைபாஸ் ஆகி விடுவதால் குவாலிடி ஓக்கே என்று வந்து விடுகிறது.

இதைக் கண்டு பிடித்து ரிப்போர்ட் கொடுத்தவுடன் நான் நோபல் பரிசுக்குத் தகுதியானவள் போல் எல்லோரும் என்னைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஓவர் நைட் என்னுடைய வேல்யூ எகிறிவிட்டது. என் அப்பாவிற்கே ஜி.எம் ஃபோன் செய்து, உன் பெண் ஒரு ஜீனியஸ் என்று சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார். சி.டி.சி.யில் 50% இன்சென்டிவும் கொடுத்து விட்டார்

இதற்கெல்லாம் காரணம் சரவணனின் சஜஷன் தான் என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அவனுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

Wednesday, December 10, 2008

உல்ழான் - திரை விமர்சனம்


வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது. இது இந்தப் பட டைரக்டர் வோல்கர் ஷ்லூன்டர்ஃப் சொன்ன கருத்து.

உல்ழான் (Ulzhaan) - இது ஒரு ஃப்ரென்ச் மொழித் திரைப்படம். கஜக்ஸ்தானில் எடுக்கப் பட்டது.

மொத்தம் மூன்று பாத்திரங்கள்தான். மற்றவர்கள் ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிறார்கள்.

கதை

ஒருவன் ஏதோ ஒன்றைத் தேடிச் செல்கிறான். ஒருத்தி அவனுக்கு உதவுகிறாள். ஏன்? அவன் தேடிச் சென்றது கிடைத்ததா? அவள் என்ன ஆனாள்? இவ்வளவுதான் கதை.




திரைக்கதை

கதையின் நாயகன் ஏதோ ஒன்றைத் தேடி கஜக்ஸ்தானில் உள்ள 'கான் டெங்க்ரி' மலைக்குத் தனியாகச் பயணப் படுகிறான். கூட யார் வந்தாலும் தடுத்து விடுகிறான். அவனது செயலும் பேச்சும் சந்தேகப் படும் வகையில் இருக்கிறது.முதலில் அங்கு ஒரு புதையலைத் தேடிச் செல்வதாகச் சொல்கிறான். ஆனால் அவன் நோக்கம் அதுவல்ல என்று பிறகு தெரிகிறது.

செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் குதிரை வாங்குகிறான். அந்த குதிரை வாங்கும் போது, உல்ழான் என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் தானும் அவனுடன் வருவேனென்று அடம் பிடிக்கிறாள். இருவரும் குதிரையில் கஜக்ஸ்தானின் 'ஸ்டெப்பி' காடுகளின் வழியே பயணிக்கிறார்கள்.

வழியில் ஷகுனி என்று ஒருவன் தன்னை 'வார்த்தை வியாபாரி' என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான். இப்போதுதான் 'தர்மா' என்ற வார்த்தையை விற்றதாகச் சொல்கிறான். (இது அந்தப் பகுதி மக்களின் அறியாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது). அவன் தன்னை 'ஷமன்' என்று கூறிக் கொள்கிறான். 'ஷமன்' என்போர் நம்மூர் மந்திரவாதி போன்றவர்கள். உலகின் பல பகுதியில் இவர்கள் இருக்கிறார்கள்.

மேலும் செல்லும் வழியில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்திய பகுதியைக் கடக்கிறார்கள். அங்கு ஒரு புல் பூண்டு கூட இல்லை. இயந்திரங்களும் கட்டடங்களும் பாழடைந்து கிடக்கின்றன.

இறுதியில் கான் டெங்க்ரி மலைப் பகுதியை அடைகிறார்கள். கஜக்ஸ்தானின் உயரமான மலை அது. நமது எவரெஸ்ட் போல பனி படர்ந்த மலை. சுற்றிலும் பனியைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கங்கே ஒரு சில பாறைகள். உல்ழானைத் திரும்பிப் போக வற்புறுத்துகிறான். அவளையும் வந்த குதிரையையும் அங்கேயே விட்டுவிட்டு எதையும் கொண்டு செல்லாமல் சூன்யத்தை நோக்கி திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பிக்கிறான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் உல்ழான் இரு குதிரைகளையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்கிறாள்.

ஆனால் மீண்டும் திரும்பி வந்து ஒரு கல்லில் அந்தக் குதிரையைக் கட்டிவிட்டு, அந்த்க் குதிரைக்கு சிறிது புல்லும் போட்டு விட்டு அவள் மட்டும் சென்று விடுகிறாள். மலையில் வெகுதூரம் சென்றுவிட்ட நாயகன், திரும்பிப் பார்க்கிறான். குதிரை புல்லைத் தின்பது தெரிகிறது. உல்ழான் செல்வது தெரிகிறது. இந்தக் காட்சியில் படம் நிறைவுறுகிறது.

இறுதிக் காட்சி, எதுவும் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவும், அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப்படத்தில் பிலிப் டோர்டன் நாயகனாக நடித்துள்ளார். அகனத் சென்பாய் (தி நோமாட்ஸ் -ல் நடித்தவர்) உல்ழானாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். டேவிட் பென்னெட் ஷகுனியாக நடித்துள்ளார். இவர் இந்த இயக்குனர் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற 'தி டின் ட்ரம் (1979)'ல் சிறு பையனாக நடித்தவர். படம் வெளி வந்த ஆண்டு 2007.

படத்தின் கருத்து

மேலை நாகரீகத்தின் பொருள்சார் தேடல்களுக்கும் (மெடீரியலிஸ்டிக் வேர்ல்ட்) கீழை நாடுகளின் அகத்தேடல்களுக்கும் (ஸ்பிரிசுவலிஸ்டிக் வேர்ல்ட்) இடையே ஏற்படும் ஒவ்வாமையை படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டு எதையோ தேடித் தனியாகச் செல்வது, முன்பின் பார்த்திராத ஒருவனுக்காக ஒருத்தி அவன் பின் செல்வது, ஒருவன் தன்னை வார்த்தை வியாபாரி என்று கூறிக் கொள்வது நம்மைப் பொறுத்தவரை, அதாவது 'மெடீரியலிஸ்டிக் அவுட்லுக்கில்' பைத்தியக்காரத் தனம். ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு அர்த்தம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

அதனால்தான் 'வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது'.

வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இந்தப் படத்தைப் பாருங்கள்.

Tuesday, December 9, 2008

விவசாய சி.பொ.ம (SEZ)

நேற்று ஒரு சொந்தப்பணி நிமித்தமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருந்தது.


எப்பொழுதும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகி விடுகிறது.


சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.


இப்போதோ, மருந்துக்குக் கூட ஒரு வயல் காடு கூட இல்லை.:-((


முதலில், ஹுன்டாய் வந்தது, பிறகு செயின்ட் கோபேய்ன். அதன் பின் நோக்கியா, மோட்டரோலா, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், டெல், கபரோ என்று உலகத்தின் 'பெத்த' பேர்கள் எல்லாம் வரிசையாகத் தென் படத்துவங்கியது.


இதே நிலைதான் செங்கல்பட்டு வரையிலும்.:(இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்காவது விவசாயம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.


இது எங்கு சென்று விடும் என்பதும் புரிய வில்லை.இந்நிலையில் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி என்பது கடினமாகி விடும்.

நான் எதிர் பார்ப்பது எல்லாம் இதுதான்.

.

.

அக்ரிகல்சுரல் எஸ்.இ.இஜட் களை......


ஆம் விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்.


நாம் எல்லோரும் இதை வரவேற்கத் தயாராக இருப்போம்..

.

நீங்க என்ன சொல்றீங்க ! ! !



இது ஒரு மீள் பதிவு.

ஆர்.பி.ஐ. செய்தது - வங்கிகள் செய்யாதது

இந்தியாவின் பொருளாதார நிலை உலகப் பொருளாதார நிலையை விட சற்று மேம்பட்டதாகத்தான் இருக்கிறது. பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 'ஆர்.பி.ஐ'ஸ் க்ரோத் ஸ்டிமுலஸ்' என்ற அதிகார பூர்வ வெளியீடு, தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, யூரோ நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் அதிகார பூர்வ 'ரிசஷனில்' இருக்கின்றன என்று கூறுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு நெடுங்காலமாகலாம் என்றும் ஐ.எம்.எஃப். அடுத்த வருடத்தின் வளர்ச்சி 3% ஆக இருக்கும் என்று முதலில் கூறியிருந்தது. தற்போது 2.2%ஆக குறைத்து மதிப்பிட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

முதலில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த ரிசஷன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டது. இப்போது அவ்வாறு இல்லை என்றும் வளரும் நாடுகளுக்கும் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உலகளாவிய வகையில் மத்திய வங்கிகள் (ஆர்.பி.ஐ போன்றவை), இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் வணிக வங்கிகள் (கமர்ஷியல் பேங்க்ஸ்) இந்த நடவடிக்கைகளின் பலனை தொழில் துறையினருக்கு அளிப்பதாகத் தெரியவில்லை. வங்கிக் கடன் வழங்கலில் கடந்த ஒரு சில மாதங்களில் அதிக பட்ச சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக, ரிவர்ஸ் ரெபோ என்ற ஒன்று இருக்கிறது. வங்கிகள் தங்களிடம் இருக்கும் சர்ப்ளஸ் நிதியை ஆர்.பி.ஐ. வசம் டெபாசிட் செய்யும். இதற்குப் பெயர் தான் ரிவர்ஸ் ரெபோ. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த ரிவர்ஸ் ரெபோ வெறும் 25 கோடிகள் தான். ஆனால் தற்போது இது கிட்டத்தட்ட 30000 கோடி ரூபாய்கள். சி.ஆர்.ஆர். குறைக்கப் பட்டதால் வங்கிகளுக்குக் கிடைத்த கூடுதல் நிதியை தொழில்துறைக்கு அளிக்காமல் அதை மீண்டும் ஆர்.பி.ஐ வசமே கொடுத்து விட்டன வங்கிகள்.

இவ்வாறு வங்கிகள் கடன் கொடுக்காத நிலை, 'க்ரெடிட் க்ரஞ்ச்' எனப்படுகிறது. இந்த க்ரெடிட் க்ரஞ் தேவை(டிமாண்ட்)யில் ஒரு மந்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது உண்மையிலேயே தேவை இருக்கிறது. ஆனால் வங்கிகள் கடன் கொடுக்காததால் வாங்க முடிவதில்லை. ஆகவே உற்பத்தி குறைகிறது. இதனால் மந்த நிலை உருவாகிறது.


சி.ஆர்.ஆர். (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) என்றால் என்ன?

வங்கிகளின் முக்கியப் பணி, மக்களிடமிருந்து வட்டிக்குப் பணம் பெற்று தேவையானவர்களுக்கு வட்டிக்குக் கடன் அளிப்பது ஆகும். குறைந்த வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்குக் கொடுத்து லாபம் பார்ப்பதுதான் வங்கித் தொழில். இந்த நிலையில், வட்டிக்கு டிபாசிட் செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம் என்ற நிலையில், வங்கிகள் எல்லா டிபாசிட்களையும் கடன் கொடுத்துவிட முடியாது. அப்படிக் கொடுப்பதும் வங்கிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆர்.பி.ஐ.யிடம் கொடுத்து வைக்க வேண்டும். இது தான் கேஷ் ரிசர்வ் ரேஷியோ.

நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும் போது, கடன்கள் அதிகரிக்கின்றன. வங்கிகள் இஷ்டத்திற்குக் கடன் அளிக்கின்றன. இதைத் தடுக்க அல்லது குறைக்க ஆர்.பி.ஐ. சி.ஆர்.ஆர்-ஐ அதிகப் படுத்துகிறது. இதன் மூலம் நாட்டின் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது ஆர்.பி.ஐ.

ஆர்.பி.ஐ. முதன் முதலில், அதாவது கடந்த செப்டம்பரில், சி.ஆர்.ஆர்-ஐ குறைத்த போது உண்மையிலேயே வங்கிகளிடத்தில் பணமில்லை. உதாரணமாக, ஒரு வங்கி வார இறுதியில் ஆர்.பி.ஐ.யிடம் கேஷ் ரிசர்வ்-ஆக 1000 கோடி ரூபாயை இருப்பு வைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இது அந்த வங்கியின் மொத்த டிபாசிட் தொகையில் 8 % என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கியிடம் வார இறுதியில் ரூ.875 கோடிகள் தான் இருக்கிறது. ஆகவே, ஆர்.பி.ஐ. வேறு வழியின்றி, சி.ஆர்.ஆர்-ஐ 8%லிருந்து 7%வீதமாகக் குறைத்தது. அதாவது அந்த வங்கி ரூ.875 கோடியை இருப்பு வைத்தால் போதும். அவ்வளவுதானே அந்த வங்கியிடம் இருக்கிறது.

வங்கிகள் அதிகப் பணத்தை ஆர்.பி.ஐ.யிடம் வைக்கும் போது அவற்றிற்குக் குறைவான வட்டி கிடைக்கிறது. எனவே, சி.ஆர்.ஆர். ஏறும் போதெல்லாம் வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டிக்காக, கடன்கள் மீதான வட்டியை ஏற்றுகின்றன. மொத்தத்தில், பணப்புழக்கம் குறைகிறது. வட்டி வீதம் ஏறுகிறது. ஆகவே, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் வேகம் குறைகிறது.

மொத்தத்தில் சி.ஆர்.ஆர். என்பது ஆர்.பி.ஐ-யிடம் உள்ள கடிவாளம் போன்றது. தேவைப் படும் போது தளர்த்தியும், இறுக்கியும் பொருளாதாரத்தை நடத்திச் செல்கிறது ஆர்.பி.ஐ.


தற்போது நடப்பது என்ன?

தற்போது, ஆர்.பி.ஐ. மிக அதிக அளவில் சி.ஆர்.ஆர்-ஐக் குறைத்த பிறகும் வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. தற்போது அதிகமான கடன் தேவைப்படும் துறை, ரியல் எஸ்டேட். ஆனால் இதிலிருந்து பணம் திரும்ப வருவதற்கு அதிகக் காலம் ஆகும். சில சமயம் பணம் வருவது கூட கடினம்தான். எனவே, வங்கிகள் இந்தத் துறைக்குக் கடன் கொடுக்க மறுக்கின்றன அல்லது தயங்குகின்றன.

ரியல் எஸ்டேட் துறை தான் இரும்பு போன்றவற்றை அதிக அளவில் பயன் படுத்தி வந்தன. தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தால் இரும்பின் பயன்பாடு குறைந்து விலை ஏறக்குறைய பாதியாகக் குறைந்து விட்டது. கடந்த ஆகஸ்டில் ரூ.55க்கு விற்ற ஒரு கிலோ இரும்பு தற்போது ரூ.35க்குக் கிடைக்கிறது. ஆனால் வாங்குவார்தான் இல்லை:).

இந்த சூழல் அப்படியே செயின் ரியாக்ஷனாக மற்ற துறைகளையும் பாதிக்கிறது. இது வேலையில்லாத் திண்டாட்டம், கதவடைப்பு என்று நீண்டு கொண்டே போகும்.

ஆகவே தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது வங்கிகள்தான். ஆனால் இது வரை வங்கிகள் பாசிடிவ்-ஆக ஒன்றும் செய்யவில்லை. திரு. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தவரை, வங்கிகள் சுதந்திரம் என்ற பெயரில் தான் தோன்றித்தனமாக இயங்கி வந்தன. தேவையில்லாத போது அளவிற்கதிகமாகக் கடன் கொடுப்பது. தேவையான போது ஒன்றும் செய்யாமல் விடுவது என்று இருந்து வந்தன. தற்போது திரு. மன்மோகன் சிங் நிதியமைச்சரான நிலையில் இந்த நிலை மாறும் என்று நிச்சயமாக நம்பலாம்.

Monday, December 8, 2008

தல

நாம் ஏன் பதிவெழுதுகிறோம்? நமது எண்ணத்தைப் பதிவு செய்கிறோம். நமது கருத்துச் சுதந்திரத்தைப் பயன் படுத்துகிறோம். சரி நாம் எழுதிவிட்டோம். அதனால் என்ன பயன்? நான்கு பேர் படித்தார்களா? அவர்கள் நமது கருத்துடன் ஒத்துப் போகிறார்களா? நமது பார்வையும் சிந்தனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறதா? இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சரி இதெல்லாம் எப்போது தெரியும். நாலு பேர் இந்தப் பக்கம் வர வேண்டும். வந்து படிக்க வேண்டும். படித்து பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நம் சிந்தனை சரியா இல்லையா என்பது தெரிய வரும்.

இன்றைய தமிழ்மணத் தகவலின் படி,
மொத்தப் பதிவுகள் : 4000
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 159
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 1643

ஆக நாலாயிரம் பேர் எழுதுவதற்கு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 159 பதிவுகள் வெளி வருகின்றன. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சரா சரியாக, 6.67 பதிவுகள். இது இந்தியப் பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும்.

இப்படி இருக்கும் போது நமக்குத் தேவை நம் பதிவைப் பார்த்து மக்கள் கருத்துக் கூற வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டாலும் எட்டியாவது பார்க்க வேண்டும். இதற்குத் தேவை அருமையான தலைப்பு.

அவ்வைப் பிராட்டியார் இப்பொழுது தமிழ்ப்பதிவுலகத்தில் இருந்திருந்தால் இவ்வாறு பாடியிருப்பார்.

பெரியது கேட்கின் வரிவடிவேலோய், பெரிது பெரிது பதிவுலகம் பெரிது.
அதனினும் பெரிது, தமிழ்மணத் திரட்டி.
அதனினும் பெரிது அவற்றில் பதிவுகள்.
பதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.

(கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்குங்க:) )

நாம் என்ன எழுதுகிறோம் என்பது பெரிய விஷயமில்லை. எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதும் முக்கியமில்லை. ஆனால் மிக முக்கியமானது எழுதுவதற்கு வைக்கப் படும் தலைப்புதான்.

எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.
எவ்வளவு எழுதினாலும் தலைப்பே முக்கியம் - இது பதிவுலக மொழி

நல்ல பதிவுகளெல்லாம் சூடாவதில்லை. ஆனால் நல்ல தலைப்புகள் நிச்சயம் சூடாகி விடும்.

தலைப்பின் வகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமான தலைப்பு

உதாரணத்திற்கு, தற்போது கார்க்கி 'டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^' இப்படி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

உள்ளே போய்ப் படித்தால் அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த மேட்டரை எழுதியிருக்கிறார்.

இதற்கு 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றோ,
'இலக்கு' என்றோ,
'நானும் ஆசிரியரும்' என்றோ,
'அடிக்காத வாத்தியார் அடித்த கதை' என்றோ தலைப்பு வைத்திருக்கலாம்.

ஆனால் இவையெல்லாவற்றையும் விட இந்தத் தலைப்பு வித்தியாசமாக இருக்கவே, 'அட என்னமோ இருக்கு போல இருக்கே' என்று எட்டிப் பார்க்கத் தூண்டும்.
இப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்.

காரசாரமான தலைப்பு

இன்றைக்கு நிறைய 'கல்லா கட்டும்' (விளக்கத்திற்கு பழமை பேசியைத் தொடர்பு கொள்ளவும்) தலைப்பு இந்த வகையைச் சார்ந்ததுதான். உதாரணத்திற்கு அதிஷாவின் 'முஸ்லீம்கள் குறித்த பதிவு. அதுவும் டிசம்பர் ஆறாம் தேதி.
சட்டக் கல்லூரி வன்முறை, மும்பாய் பயங்கரம் ஆகிய நாட்டு நடப்புகளை பற்றி, கார சாரமான உணர்ச்சி மயமான தலைப்பு வைக்க வேண்டும். உள்ளேயும் ஓரிரு இடங்களில் அவ்வாறு எழுத வேண்டும்.
நீங்கல்லாம் ***க்குப் பொறந்தவங்களா? என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@! போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.
நான் இதே மும்பை பயங்கரத்திற்கு ஒரு பதிவிட்டேன். தலைப்பு 'தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்'. எவ்வளவு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது பார்த்தீர்களா.

கேள்வித் தலைப்பு

இது தான் மிக முக்கியமான வகைத் தலைப்பு. பெரும்பாலான இடுகைகள் இந்த வகையைச் சார்ந்தவை. நாம்தான் தருமி (பதிவர் அல்ல, திருவிளையாடல் தருமி) வகையினராயிற்றே. நமக்குத்தான் கேள்வி கேட்கவும் தெரியும். கேள்வி கேட்பவர்களையும் பிடிக்குமே. ஆகவே, சரியான கேள்விப் பதிவு நிறைய போக்குவரத்துக்கு வழி செய்யும்.

உதாரணமாக இட்லி வடை யார்? என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா? இந்து மதம் எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.

நான் கூட 'ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?' என்ற ஒரு பதிவை எழுதினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.

இதைப் போல் நிறைய உள்ளது. போகப் போகத்தான் தெரியும். நான் ஒரு குழந்தைப் பதிவன். ஆகவே, சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுவேன். நீங்களும் அப்படித்தானே?
இப்போது எல்லாரும் கேட்பதைப் போல் தம்ஸ் அப்பில் ஒரு குத்து எலியை வைத்து குத்துங்க என்று கேட்டுக் கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

இப்ப நீங்க சொல்லுங்க. நான் இந்தப் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பு சரியா? இல்லைன்னா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா வைத்திருக்கலாமா?

மேற்கொண்டு பின்னூட்டத்தில் தொடர உங்களை அழைக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.

நட்சத்திரக் கூத்து

சற்றேறக்குறைய நான்கு மாதங்கள். நாற்பது சொச்சப் பதிவுகள். எட்டு பின் தொடர்வோர். வழக்கமாக தளத்திற்கு வருவோர் அதைப்போல் இரண்டு மூன்று மடங்கு. பெயர் சொல்ல ஒரு சரித்திரத் தொடர். இவ்வளவுதான் பதிவுலகில் என் பின்புலம். இதற்குத்தான் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவராக அழைப்பு. ஆகவே பதிவுலகில் நான் ஒரு குழந்தை. இது எனக்குத் தமிழால் கிடைத்த பெருமையே அன்றி வேறில்லை.

என்றேனும் ஒரு நாள் நட்சத்திரப் பதிவராவோம் என்ற எண்ணம் அனைத்துப் பதிவர்களைப் போல் எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடைபெறும் என்பது எதிர்பாராதது. ஆகவே தற்போது நடப்பது நான் எதிர் பார்த்தது. ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்பது எதிர் பாராதது :).

இந்த நட்சத்திர வாரத்தில் வழக்கமான சக்கர வியூகத்துடன் பல்வேறு விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தின் மூலம் நான் அடைய விரும்புவது, அதிக அளவிலான 'ரீச்'. மேலும் பல நண்பர்கள். அதன் மூலம் எனது எழுத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம். உங்கள் ஒத்துழைப்பு. இவை நிச்சயம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.

இடையிடையே என் எழுத்தில் ஏற்பட்ட தொய்வினைச் சரிகட்டியும் என்னுடைய பதிவிற்குத் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப் படுத்தி வரும் அணிமா, சதீசு குமார், சுரேஷ், குடுகுடுப்பை, ஆதவன் மற்றும் பலருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் பெருமையை எனக்களித்த தமிழுக்கு நன்றி.

தங்கள் மேலாதரவான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்க்கும்,

உங்கள்
இளைய பல்லவன்.

பின் குறிப்பு:- இந்தப் பதிவை நேற்று ட்ராஃப்டாக வைத்திருந்து இன்று பப்ளிஷ் செய்தேன். ஆனால் நேற்றைய தேதியிலேயே இது வெளி வந்துவிட்டது. ஆகவே தமிழ்மண முகப்பில் தெரியவில்லை போலிருக்கிறது. ஆகவே, ரீ பப்ளிஷ் செய்யப் படுகிறது.

Sunday, December 7, 2008

தமிழால் கிடைத்த பெருமை

சற்றேறக்குறைய நான்கு மாதங்கள். நாற்பது சொச்சப் பதிவுகள். எட்டு பின் தொடர்வோர். வழக்கமாக தளத்திற்கு வருவோர் அதைப்போல் இரண்டு மூன்று மடங்கு. பெயர் சொல்ல ஒரு சரித்திரத் தொடர். இவ்வளவுதான் பதிவுலகில் என் பின்புலம். இதற்குத்தான் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவராக அழைப்பு. ஆகவே பதிவுலகில் நான் ஒரு குழந்தை. இது எனக்குத் தமிழால் கிடைத்த பெருமையே அன்றி வேறில்லை.

என்றேனும் ஒரு நாள் நட்சத்திரப் பதிவராவோம் என்ற எண்ணம் அனைத்துப் பதிவர்களைப் போல் எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடைபெறும் என்பது எதிர்பாராதது. ஆகவே தற்போது நடப்பது நான் எதிர் பார்த்தது. ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்பது எதிர் பாராதது :).

இந்த நட்சத்திர வாரத்தில் வழக்கமான சக்கர வியூகத்துடன் பல்வேறு விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தின் மூலம் நான் அடைய விரும்புவது, அதிக அளவிலான 'ரீச்'. மேலும் பல நண்பர்கள். அதன் மூலம் எனது எழுத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம். உங்கள் ஒத்துழைப்பு. இவை நிச்சயம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.

இடையிடையே என் எழுத்தில் ஏற்பட்ட தொய்வினைச் சரிகட்டியும் என்னுடைய பதிவிற்குத் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப் படுத்தி வரும் அணிமா, சதீசு குமார், சுரேஷ், குடுகுடுப்பை, ஆதவன் மற்றும் பலருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் பெருமையை எனக்களித்த தமிழுக்கு நன்றி.

தங்கள் மேலாதரவான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்க்கும்,

உங்கள்
இளைய பல்லவன்.