Tuesday, December 9, 2008

ஆர்.பி.ஐ. செய்தது - வங்கிகள் செய்யாதது

இந்தியாவின் பொருளாதார நிலை உலகப் பொருளாதார நிலையை விட சற்று மேம்பட்டதாகத்தான் இருக்கிறது. பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 'ஆர்.பி.ஐ'ஸ் க்ரோத் ஸ்டிமுலஸ்' என்ற அதிகார பூர்வ வெளியீடு, தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, யூரோ நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் அதிகார பூர்வ 'ரிசஷனில்' இருக்கின்றன என்று கூறுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு நெடுங்காலமாகலாம் என்றும் ஐ.எம்.எஃப். அடுத்த வருடத்தின் வளர்ச்சி 3% ஆக இருக்கும் என்று முதலில் கூறியிருந்தது. தற்போது 2.2%ஆக குறைத்து மதிப்பிட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

முதலில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த ரிசஷன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டது. இப்போது அவ்வாறு இல்லை என்றும் வளரும் நாடுகளுக்கும் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உலகளாவிய வகையில் மத்திய வங்கிகள் (ஆர்.பி.ஐ போன்றவை), இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் வணிக வங்கிகள் (கமர்ஷியல் பேங்க்ஸ்) இந்த நடவடிக்கைகளின் பலனை தொழில் துறையினருக்கு அளிப்பதாகத் தெரியவில்லை. வங்கிக் கடன் வழங்கலில் கடந்த ஒரு சில மாதங்களில் அதிக பட்ச சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

உதாரணமாக, ரிவர்ஸ் ரெபோ என்ற ஒன்று இருக்கிறது. வங்கிகள் தங்களிடம் இருக்கும் சர்ப்ளஸ் நிதியை ஆர்.பி.ஐ. வசம் டெபாசிட் செய்யும். இதற்குப் பெயர் தான் ரிவர்ஸ் ரெபோ. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த ரிவர்ஸ் ரெபோ வெறும் 25 கோடிகள் தான். ஆனால் தற்போது இது கிட்டத்தட்ட 30000 கோடி ரூபாய்கள். சி.ஆர்.ஆர். குறைக்கப் பட்டதால் வங்கிகளுக்குக் கிடைத்த கூடுதல் நிதியை தொழில்துறைக்கு அளிக்காமல் அதை மீண்டும் ஆர்.பி.ஐ வசமே கொடுத்து விட்டன வங்கிகள்.

இவ்வாறு வங்கிகள் கடன் கொடுக்காத நிலை, 'க்ரெடிட் க்ரஞ்ச்' எனப்படுகிறது. இந்த க்ரெடிட் க்ரஞ் தேவை(டிமாண்ட்)யில் ஒரு மந்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது உண்மையிலேயே தேவை இருக்கிறது. ஆனால் வங்கிகள் கடன் கொடுக்காததால் வாங்க முடிவதில்லை. ஆகவே உற்பத்தி குறைகிறது. இதனால் மந்த நிலை உருவாகிறது.


சி.ஆர்.ஆர். (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) என்றால் என்ன?

வங்கிகளின் முக்கியப் பணி, மக்களிடமிருந்து வட்டிக்குப் பணம் பெற்று தேவையானவர்களுக்கு வட்டிக்குக் கடன் அளிப்பது ஆகும். குறைந்த வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்குக் கொடுத்து லாபம் பார்ப்பதுதான் வங்கித் தொழில். இந்த நிலையில், வட்டிக்கு டிபாசிட் செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம் என்ற நிலையில், வங்கிகள் எல்லா டிபாசிட்களையும் கடன் கொடுத்துவிட முடியாது. அப்படிக் கொடுப்பதும் வங்கிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆர்.பி.ஐ.யிடம் கொடுத்து வைக்க வேண்டும். இது தான் கேஷ் ரிசர்வ் ரேஷியோ.

நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும் போது, கடன்கள் அதிகரிக்கின்றன. வங்கிகள் இஷ்டத்திற்குக் கடன் அளிக்கின்றன. இதைத் தடுக்க அல்லது குறைக்க ஆர்.பி.ஐ. சி.ஆர்.ஆர்-ஐ அதிகப் படுத்துகிறது. இதன் மூலம் நாட்டின் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது ஆர்.பி.ஐ.

ஆர்.பி.ஐ. முதன் முதலில், அதாவது கடந்த செப்டம்பரில், சி.ஆர்.ஆர்-ஐ குறைத்த போது உண்மையிலேயே வங்கிகளிடத்தில் பணமில்லை. உதாரணமாக, ஒரு வங்கி வார இறுதியில் ஆர்.பி.ஐ.யிடம் கேஷ் ரிசர்வ்-ஆக 1000 கோடி ரூபாயை இருப்பு வைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இது அந்த வங்கியின் மொத்த டிபாசிட் தொகையில் 8 % என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கியிடம் வார இறுதியில் ரூ.875 கோடிகள் தான் இருக்கிறது. ஆகவே, ஆர்.பி.ஐ. வேறு வழியின்றி, சி.ஆர்.ஆர்-ஐ 8%லிருந்து 7%வீதமாகக் குறைத்தது. அதாவது அந்த வங்கி ரூ.875 கோடியை இருப்பு வைத்தால் போதும். அவ்வளவுதானே அந்த வங்கியிடம் இருக்கிறது.

வங்கிகள் அதிகப் பணத்தை ஆர்.பி.ஐ.யிடம் வைக்கும் போது அவற்றிற்குக் குறைவான வட்டி கிடைக்கிறது. எனவே, சி.ஆர்.ஆர். ஏறும் போதெல்லாம் வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டிக்காக, கடன்கள் மீதான வட்டியை ஏற்றுகின்றன. மொத்தத்தில், பணப்புழக்கம் குறைகிறது. வட்டி வீதம் ஏறுகிறது. ஆகவே, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் வேகம் குறைகிறது.

மொத்தத்தில் சி.ஆர்.ஆர். என்பது ஆர்.பி.ஐ-யிடம் உள்ள கடிவாளம் போன்றது. தேவைப் படும் போது தளர்த்தியும், இறுக்கியும் பொருளாதாரத்தை நடத்திச் செல்கிறது ஆர்.பி.ஐ.


தற்போது நடப்பது என்ன?

தற்போது, ஆர்.பி.ஐ. மிக அதிக அளவில் சி.ஆர்.ஆர்-ஐக் குறைத்த பிறகும் வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. தற்போது அதிகமான கடன் தேவைப்படும் துறை, ரியல் எஸ்டேட். ஆனால் இதிலிருந்து பணம் திரும்ப வருவதற்கு அதிகக் காலம் ஆகும். சில சமயம் பணம் வருவது கூட கடினம்தான். எனவே, வங்கிகள் இந்தத் துறைக்குக் கடன் கொடுக்க மறுக்கின்றன அல்லது தயங்குகின்றன.

ரியல் எஸ்டேட் துறை தான் இரும்பு போன்றவற்றை அதிக அளவில் பயன் படுத்தி வந்தன. தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தால் இரும்பின் பயன்பாடு குறைந்து விலை ஏறக்குறைய பாதியாகக் குறைந்து விட்டது. கடந்த ஆகஸ்டில் ரூ.55க்கு விற்ற ஒரு கிலோ இரும்பு தற்போது ரூ.35க்குக் கிடைக்கிறது. ஆனால் வாங்குவார்தான் இல்லை:).

இந்த சூழல் அப்படியே செயின் ரியாக்ஷனாக மற்ற துறைகளையும் பாதிக்கிறது. இது வேலையில்லாத் திண்டாட்டம், கதவடைப்பு என்று நீண்டு கொண்டே போகும்.

ஆகவே தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது வங்கிகள்தான். ஆனால் இது வரை வங்கிகள் பாசிடிவ்-ஆக ஒன்றும் செய்யவில்லை. திரு. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தவரை, வங்கிகள் சுதந்திரம் என்ற பெயரில் தான் தோன்றித்தனமாக இயங்கி வந்தன. தேவையில்லாத போது அளவிற்கதிகமாகக் கடன் கொடுப்பது. தேவையான போது ஒன்றும் செய்யாமல் விடுவது என்று இருந்து வந்தன. தற்போது திரு. மன்மோகன் சிங் நிதியமைச்சரான நிலையில் இந்த நிலை மாறும் என்று நிச்சயமாக நம்பலாம்.

6 comments:

துளசி கோபால் said...

இரும்பு மட்டுமா?

செம்பு?

ஒரு கிலோ ஆட்டுக்கறி, ஒரு கிலோ செம்புவைவிட விலை அதிகமுன்னு
நண்பர் ( கேபிள் & ஒயர் நிறுவனம்) புலம்புறார்.

கறியைச் சமைச்சுச் சாப்புடலாம். ஆனால் செம்பு?
பத்திரம். எடுத்து உள்ளே வையுங்க. பின்னாளில் உதவுமுன்னு சொல்லி வச்சேன்.

Sathis Kumar said...

மலேசியாவிலும் உலோக விற்பனைத் தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த உலக பொருளாதார மந்த நிலை குறைந்தது ஒரு வருடத்திற்கும்மேல் நம்மை பதம் பார்த்துவிட்டுதான் மறையும் என்று நினைக்கிறேன்..

CA Venkatesh Krishnan said...

// துளசி கோபால் கூறியது... //




ஆமாம். அனைத்து உலோகங்களும் வீழ்ச்சி கண்டுள்ளன.

இதற்குக் காரணம் விலையேறும் போது யாரும் அதைக் கட்டுப் படுத்தாததுதான்.

இப்போது கூட லாபம் குறைந்துள்ளதே தவிர யாரும் அடக்க விலையை விடக் குறைத்து விற்க வில்லை.

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
//


எல்லோரும் சொல்வது 'த வொர்ஸ்ட் இஸ் யெட் டு கம்'

பார்ப்போம்.

☀நான் ஆதவன்☀ said...

உண்மை தான் பல்லவன்...கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 1 டன் இரும்பு 6500 திரம்ஸில் (துபாய் ரூபாயில்) இருந்தது, ஆனால் இன்று 4500 திரம்ஸ்க்கும் கீழ். ஆனால் இப்போது வாங்கினால் செய்ய ப்ராஜெக்ட் இப்போது எதுவும் இல்லை :-(

தகவல்களுக்கு நன்றி பல்லவன்

CA Venkatesh Krishnan said...

ஆமாம் ஆதவன்,

உலகமெங்கும் இதே நிலைதான். அதனால்தான் பதிவின் முதலிலேயே சொல்லிவிட்டேன்.

''இந்தியாவின் பொருளாதார நிலை உலகப் பொருளாதார நிலையை விட சற்று மேம்பட்டதாகத்தான் இருக்கிறது.''

இது ஆர்.பி.ஐ-யின் நடவடிக்கைகளால்தான்.