Sunday, December 14, 2008

காஞ்சிபுரத்துக்கு வாங்க...

காஞ்சியில் முக்கியமானவை அதன் கோவில்கள், காஞ்சிப் பட்டு, காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா பிறந்த இடம், மற்றும் பல.

காஞ்சிப் பட்டு

இந்த வகைப் பட்டு இழை பெங்களூர் மற்றும் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப் படுகிறது. நெய்வது மட்டும்தான் காஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள். காஞ்சிப் பட்டு சற்று கனமாக இருக்கும். இழைகள் சற்று தடிமனாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். மற்றபடி அதிக / புதிய / காம்ப்ளிகேடட் டிசைன்களில் புடவைகள் நெய்வதில் காஞ்சியின் நெசவாளர்கள்தான் கெட்டிக்காரர்கள். எனவேதான் காஞ்சிப் பட்டு சற்று விலை அதிகம். காஞ்சிப் பட்டை முக்கிய கூட்டுறவுச் சங்கங்களிலோ, கோ ஆப்டெக்ஸிலோ, அல்லது முக்கியக் கடைகளிலோ வாங்குங்கள். மற்ற இடங்களில் வேறு பட்டை, காஞ்சிப் பட்டு என்று சொல்லிவிடலாம்.காஞ்சிக் கோவில்கள்


காஞ்சியில் எங்காவது தடுக்கி விழுந்தால் கூட ஒரு கோவில் முன் தான் விழுவோம் என்று சொல்வது வழக்கம் அத்துணை கோவில்கள். காஞ்சியில் முக்கிய சைவத் திருத்தலங்களும், வைணவத் திருத்தலங்களும் அதிகம். அதிலும், காஞ்சியிலேயே பதினாங்கு திவ்ய தேசங்கள் உள்ளன. இது வேறெந்த ஊருக்கும் இல்லாத சிறப்பாகும்.

பெரிய காஞ்சிபுரம் என்ற பகுதியில் அதிக அளவில் சிவன் கோவில்களும், சின்ன காஞ்சிபுரம் என்ற பகுதியில் அதிக அளவில் விஷ்ணு கோவில்களும் இருக்கின்றன. ஆகவே பெரிய காஞ்சிபுரம் சிவகாஞ்சி என்றும் சின்ன காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி என்றும் அழைக்கப் படுகிறது (காவல் நிலையங்களும் இந்தப் பெயரில்தான் இருக்கின்றன!).

மற்றொரு காஞ்சி ஜின காஞ்சி. கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்குப் பின்னால் திருப்பருத்திக் குன்றம் என்ற இடத்தில் மிகப் பழமையான சமண ஆலயம் இருக்கின்றது. இதனாலேயே இந்தப் பகுதி ஜின காஞ்சி என்று அழைக்கப் படுகிறது.


முக்கியத் திருத்தலங்கள்.

1. ஏகாம்பர நாதர் ஆலயம்.

காஞ்சியின் முக்கிய ஆலயம். மிக உயரமான ராஜ கோபுரம். இறைவன் ஏகாம்பர நாதர். இறைவி ஏலவார்குழலியம்மை.
லிங்கம் மண்ணாலானது. எனவே அபிஷேகம் இல்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்தப் படுகிறது.

ஆயிரங்கால் மண்டபம் உண்டு. இரண்டு குளங்கள் உள்ளன. இங்கு இருந்த மாமரத்தின் நான்கு கிளைகளில் நான்கு விதமான ருசியுடைய மாங்கனிகள் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பழைய மரத்தின் கிளைகள் வீழ்ந்து விட்டன. இப்போது மரம் துளிர்க்கத் துவங்கியுள்ளது. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் மற்றும் முக்கியத் திருப்பணிகள் விஜய நகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் மேற்கொள்ளப் பட்டவை. பங்குனி உற்சவம் மிக முக்கியத் திருவிழா.

தேவார மூவரும் பாடியிருக்கிறார்கள். சுந்தரர் இங்கு வந்து ஒரு கண் பெற்றார். அருணகிரி நாதரும் இங்கே ஒரு பாடல் பாடியிருக்கிறார். பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்வி(பூமி)த் தலம்.


உப தகவல்கள்: காஞ்சிபுரத்தில் சினிமா ஷூட்டிங் என்றால் இந்தக் கோயிலில் தான் நடக்கும். பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இந்தக் கோயிலுக்கு சமீபத்தில் வந்திருந்தார். இந்தக் கோயில் ஆயிரங்கால் மண்டபம் படிப்பதற்கு ஏற்ற இடம். கோவிலில் ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. அங்கேதான் கிரிக்கெட் விளையாடுவோம்.
2. வரதராஜப் பெருமாள் ஆலயம்


ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ஸ்ரீ ரங்கத்தை அடுத்து மிக முக்கிய கோவில் வரதராஜப் பெருமாள் ஆலயம். தாயார் பெருந்தேவித் தாயார். கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. அதற்கு அத்தி கிரி என்று பெயர். இங்கு உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் அரிய சிற்பங்கள் உள்ளன.

அத்தி வரதர் என்ற அத்தி மரத்தாலான வரத ராஜர் சிலை இந்தத் திருக்கோவில் குளத்தின் உள்ளே வைக்கப் பட்டிருக்கிறது. 48 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்த வரதர் வெளியே வருவார். ஒரு சில நாட்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி. மீண்டும் நீருக்குள் போய் 48 ஆண்டுகள் கழித்துத்தான் வருவார்.

இங்கு தான் தங்க பல்லி, வெள்ளி பல்லி என்று இரு சிலைகள் கூரையில் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதைத் தொட்டால் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் காஞ்சியில் பல்லி விழுந்தால் எந்த தோஷமும் இல்லை.

முதலாழ்வார்கள் முதற்கொண்டு அனைவரும் பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். வைகாசியில் முக்கியத் திருவிழா. இதில் கருட சேவையும், தேரும் மிகப் பிரசித்தம். கருட சேவையன்று வானிலும் கருடன் சுற்றும். முன்பு தேர் நிலைக்கு வர 10 - 15 நாட்கள் கூட ஆகும். தற்போது புல்டோசர் வைத்து இழுத்து விடுகிறார்கள்.

இராபர்ட் க்ளைவ் ஆற்காட்டைப் பிடிப்பதற்கு முன் இந்தக்கோவிலில் வந்து ப்ரார்த்தனை செய்த்தாகவும் அது பலித்து விடவே ஆற்காட்டிலிருந்து கைப்பற்றிய பொக்கிஷத்திலேயே விலை உயர்ந்த மகர கண்டியை வரதராஜருக்குக் காணிக்கை அளித்ததாகவும் வரலாறு கூறுகிறது. இன்றும் விசேஷ் தினங்களில் இந்த மகர கண்டி வரதராஜரை அலங்கரிக்கிறது.

கோவில் இட்லி என்ற ஒன்றின் பிறப்பிடம் வரதராஜர் கோவில்தான். மற்ற ஊர்களில் அது காஞ்சிபுரம் இட்லி. இதன் சுவையும் செய்முறையும் அலாதி. எழுதும் போதே நாவில் நீர் ஊற்றெடுக்கின்றது.

3. காமாக்ஷி அம்மன் ஆலயம்

நகருக்கு மையமாக அமைந்துள்ளது காமாக்ஷி அம்மன் ஆலயம். காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி ஆகிய மூவரில் முதலானவர். இங்கு அம்மன் தனியாகக் கோவில் கொண்டுள்ளது மற்ற இரு கோவிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு. உக்ர காமாக்ஷியாக இருந்த அம்மனை, ஸ்ரீ சக்கரம் ப்ரதிஷ்டை செய்து ஆதி சங்கரர் சாந்திப் படுத்தினார் என்பது கோவில் குறிப்பில் காணப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்று.

மாசி மாதத்தில் முக்கியத் திருவிழா.


காஞ்சியில் ஏகாம்பர நாதர் ஆலயத்திற்கும் காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் அமைந்துள்ளது திருக்குமரக்கோட்டம் என்னும் முத்துக் குமாரசுவாமி ஆலயம். இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சோமாஸ்கந்தர் உருவங்கள் பல்லவர்கள் எடுப்பித்த கோவில்களில் நிரம்பக் காணலாம்.
4. பரமேஸ்வர விண்ணகரம் (அ) வைகுந்தப் பெருமாள் கோவில்.
5. கைலாச நாதப் பெருமான் ஆலயம்


இவையிரண்டும் பக்தி மார்க்கத்திலும், கலை, சிற்பங்களிலும் மிக முக்கியமானவை. அருமையான சுதைச் சிற்பங்கள் நிறைந்த கோவில்கள். இரண்டும் ஏ.எஸ்.ஐ-யின் பராமரிப்பில் இருக்கின்றன.

வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டப் பெருமாள் கோவிலிலும், சிவ ராத்திரி அன்று கைலாச நாதப் பெருமான் ஆலயத்திலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் இவை சுற்றுலாத் தலம்தான் :((.


மேலே சொன்னவற்றில் கைலாச நாதப் பெருமான் கோவில் தவிர அனைத்தும் திவ்ய தேசம்தான் !!

உலகளந்தப் பெருமாள் கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் இருக்கின்றன. பாண்டவ தூதப் பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஆகியோரும், தூப்புல், வேளுக்கை, பவளவண்ணன், திருப்புட்குழி ஆகிய கோவில்களும் இருக்கின்றன. திருப்புட்குழி காஞ்சியிலிருந்து சற்றுத் தள்ளி வேலூர் செல்லும் மார்க்கத்தில் இருக்கிறது. மற்றவை ஊரிலேயே இருக்கின்றன.

சைவக் கோவில்களில், கச்சபேஸ்வரர் கோவில், கச்சி மேற்றளி முதலியவை மிகவும் அருமையான கோவில்கள்.

இவ்வளவு கோவில்கள் நிறைந்த காஞ்சியை உங்களில் பல பேர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். அவர்களை மீண்டும் வருகவென்றும், மற்றோரை வருக வருகவென்றும் காஞ்சியின் சார்பின் அன்புடன் அழைக்கிறேன் ! ! !

16 comments:

கார்க்கி said...

என் சித்தி காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் இருப்பதால் அடிக்கடி வருவதுண்டு. எனக்கு கோயிகளில் பெரிய நாட்டமில்லை. அதனால் அந்த ஊர் எனக்கு புடிக்காது. மற்றபடி பெரிதாக அந்த ஊரில் எதுவும் இல்லை என்பது என்கருத்து. ஆனால் அடுத்த முறை இளைய பல்லவனை பார்க்க வேண்டும் என்பதற்காக வர வேண்டும் போலிருக்கிறது. "))

கபீஷ் said...

வந்துடறோம். உங்க வீட்டுல இட்லி கிடைக்குமா?:-):-)

இளைய பல்லவன் said...

நீங்க சொல்றது சரிதான் கார்க்கி. காஞ்சிபுரத்தில் கோவில்களைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு நாட்டின் தலை நகராக இருந்த காஞ்சியில் எதுவும் ஏன் இல்லை என்ற கேள்வியின் அடிப்படையில் பிறந்ததுதான் சக்கர வியூகம்!!!

வாங்க வாங்க ஆனா இப்போ இளைய பல்லவன் காலத்துக்கேற்றாற்போல் காஞ்சியில் இல்லை, சிங்காரச் சென்னையில் இருக்கிறார் :)))

இளைய பல்லவன் said...

வாங்க கபீஷ்,

எங்க வீட்லல்லாம் சாதா இட்லிதான். காஞ்சிபுரம் இட்லி ப்ராசஸ் ரொம்ப கஷ்டம் :((.

ஹோட்டல்களில் கிடைக்கும். ஆனால் வரதராஜப் பெருமாள் கோவில் இட்லி போல் வரவே வராது..

கபீஷ் said...

கோவில்ல இப்போ கிடைக்குமா? அதாவது இன்னும் நீங்க சொன்ன மாதிரி இட்லி கிடைக்குமா இல்ல இட்லி குடுக்கறத நிறுத்திட்டாங்களா? இந்த பதிலைப் பொறுத்துதான் காஞ்சிபுரம் போணுமா வேண்டாமானு வரலாற்று முடிவு எடுக்கணும்:-):-)

ச்சின்னப் பையன் said...

நல்ல பதிவு.

வாழ்நாளில் ஒரே ஒரு நாள்தான் காஞ்சிக்கே வந்திருக்கிறேன்....

இனிமேதான் நீங்க இருக்கீங்களே.. உங்களயும் பாத்தா மாதிரி ஆச்சு, ஊரையும் பாத்தா மாதிரி ஆச்சு.. வந்துடவேண்டியதுதான்....

அமர பாரதி said...

கோவில்களுக்காக புகழ் பெற்ற "நகரேஷு காஞ்சி" யை பார்க்க வேண்டும். ஹ்ம்ம்ம். எப்போது கொடுப்பினையோ. அதுவரை கோவில்களின் புகைப்படம் மற்றும் குறிப்புகளோடு ஒரு பதி போடுங்களேன்.

இளைய பல்லவன் said...

கோவிலில் இப்போதும் இட்லி கிடைக்கும் காலை 10 மணி போல சென்றால் குளத்திற்கெதிரே ஒரு மண்டபத்தில் கோவில் ப்ரசாதங்கள் விற்பார்கள் அங்கே கிடைக்கும்.

இளைய பல்லவன் said...

வாங்க சின்னப்பையன், அவசியம் வந்து காஞ்சிபுரத்தைப் பாருங்க. இளைய பல்லவனைப் பார்க்க புதிய தலை நகருக்கு வர வேண்டும்:))

இளைய பல்லவன் said...

நன்றி அமரபாரதி,

விரைவில் வர வாழ்த்துக்கள். கண்டிப்பாக ஒரு பதிவுத் தொடர் போட்டு விடலாம்.

துளசி கோபால் said...

போன வருசம் வந்தேங்க.

முடிஞ்சா விவரம்

இங்கே பாருங்க.

நான் ஆதவன் said...

ஒரே ஒரு முறை காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்திருக்கேன் பல்லவன். இன்னொரு தடவை போகனும்ன்னு ஆசை இருந்துச்சு. இப்ப அதிகமாயிடுச்சு. காஞ்சியில ஒரு பதிவர் கூட்டம் போடுங்க வந்திடுவோம் :-)

இளைய பல்லவன் said...

துளசி மேடம்,

அதை அப்பவே பாத்துட்டங்க.

//
இவ்வளவு கோவில்கள் நிறைந்த காஞ்சியை உங்களில் பல பேர் ஏற்கனவே பார்த்திருக்கலாம். அவர்களை மீண்டும் வருகவென்றும்,
//

அதானாலதான் மீண்டும் வருகன்னு அழைச்சிருக்கேன் :))

siva said...

sir ,

Marriage between the GOD and GODESS really happens in Embaranathar temple.
There is no rituals using cat during marriage.
Please correct it.I had seen the marriage many times.

இளைய பல்லவன் said...

Dear Siva,

Afaik, it is the way I explained. However, I will confirm once again and include it. In the mean time, I have removed that portion.

Thanks.

Alvin Vasanth said...

நான் பிறந்து,வளர்ந்து,படித்த ஊர் காஞ்சிபுரம்.குறிப்பாக ஏகம்பரநாதர் கோயில் சொல்லிகொடுத்தது நிறையவே....