Thursday, December 31, 2009

பெருத்த சந்தேகம்.. 1000 பின்னூட்டம் பரிசு !!

வலையுலகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி!

வலைத் திரைத் திலகங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

இளையபல்லவனாருக்கு 2009ல் வந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஒரு பெருத்த்த்த்த்த்த்த்த்த சந்தேகம் எழுந்துள்ளது. அதைத் தீர்த்து வைப்போருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆயிரம்ம்ம் பின்னூட்டங்கள் பரிசாக அளிக்கப் படும்.

சந்தேகம் இதோ.....


2009ல் வந்த படங்கள்??


1. பேட்டராசு

2. இரு நதிகள்

3. இன்னொருவன்

4. ஆடாத ஆட்டமெல்லாம்

5. எங்க ராசி நல்ல ராசி (முரளி ஹீரோ)

6. இளம்புயல்

7. மஞ்சள் வெயில்

8. ஒலியும் ஒளியும்

9. பொள்ளாச்சி மாப்பிள்ளை (சத்தியராஜ்)

10. நீ உன்னை அறிந்தால் (முரளி)

11. உன்னைக் கண் தேடுதே

12. தொட்டுச் செல்லும் தென்றல்

13. வைகை

14. புதிய பயணம்

15. தலையெழுத்து

16. கண்ணா நீ எனக்குத்தாண்டா

17. ஆறுமனமே

18. சாமி சொன்னா சரிதான்

19. நேசி

20. மாதவி

21. நேற்று போல் இன்று இல்லை ((புதுகை?)அப்துல்லா)

22. ஒரே மனசு

23. இரு விழிகள்

24. வேடப்பன்

25. ஓணான்

26. கரகம்

27. வைதேகி

28. தம்பிவுடையான்

29. ஸ்வேதா 5/10 வெலிங்க்டன் ரோடு

30. தமிழகம்

31. விழியிலே மலர்ந்தது

32. மீண்டும் மீண்டும் நீ

33. வைரம்

34. தோழி

35. பச்சையாபுரம்

36. பலம்

37. எனக்குள் ஒரு காதல்


(நன்றி: விக்கிப்பீடியா)



எவ்வளவோ மூளையைப் போட்டுக் கசக்கியும் இந்தப் பேரெல்லாம் கேட்டதாகவோ, பாத்ததாகவோ நினைவில் இல்லை.


இந்தப் படங்களெல்லாம் 2009ல் ரிலீஸ் ஆனதா?

அப்படி ஆனால் அது எந்த தியேட்டரில்?

எத்தனை ஷோக்கள் ஓடியது?

இவற்றில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 2009லேயே வந்தவை எவை?



என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பின்னூட்டம் பரிசாக கி.பி.2100க்குள் வழங்கப்படும்

வருக! வருக!! வருக!!!

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 18

அத்தியாயம் 18 - திரிசூலம் !

ஜலாலுதீனிடம் உத்தரவைப் பிறப்பித்த சிறிது நேரத்திலேயே அந்தக் காட்டிலிருந்து ஒரு குதிரையில் புறப்பட்டு விட்டான் மாலிக். உடன் வர நினைத்த சில காவலர்களையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அங்கிருந்து நேர் தெற்கு நோக்கிச் செல்லாமல் தென்கிழக்காகப் பயணப் பட்டான். சற்றேறக்குறைய ஒரே வாரத்தில் திருமலையடிவாரத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து காஞ்சி வழியாக செல்வதுதான் அவனது திட்டம். ஒரே வாரத்தில் அவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டதால் சற்று இளைப்பாற நினைத்தான். அவனது படைகளும் வந்து சேர வேண்டுமல்லவா?

=====

மாலிக் திருமலையடிவாரத்தை அடைந்த அதே சமயத்தில் குவலாலாவிற்கு வந்த குதிரைப்படைத் தலைவன் வெளியேறினான். அதற்குப் பிறகு மாதண்ட நாயகத்தின் உத்தரவின் படி படைகள் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினான். முதலில் உணவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டிகள் முன்னே சென்றன. அவற்றின் பின், தண்டு இறக்கும் போது தேவையான கூடாரங்கள், நீண்ட கழிகள், வடங்கள் ஆகியவை அடங்கிய வண்டிகள் சென்றன. அதைத் தொடர்ந்து, தளவாடங்களைச் சுமந்து செல்லும் பொதிகள் சென்றன. அவற்றின் மேல் பாதுகாப்புக் கருதி வைக்கோல் போர்த்தப்பட்டிருந்தது. இவற்றோடு யானைப்படையும் புறப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமலிருக்கும் பொருட்டு, அதற்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆகவே யானைகள் எது சொன்னாலும் செய்யும் பூனைகளைப் போல் சாதுவாகக் கிளம்பிச் சென்றன.

இவை குவலாலாவை விட்டுக் கிளம்பிய மூன்றாவது நாள், காலாட்படையினரை உறையூர் நோக்கிச் செல்லுமாறு பணித்தான் ஆதவன். வழியில் முன்னே சென்ற உணவுப் பொதிகள் மூலமாக இந்தப் படைக்கு ஆங்காங்கே உணவு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கிளம்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு குதிரைப்படைகள் புறப்பட்டன. அவற்றுடன் முக்கிய தளபதிகளுக்கான ரதங்களும் புறப்பட்டன.

இவ்வாறாக ஒரே வாரத்தில் அவனது படைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் உறையூர் சேரும் வகையில் படைகளை நடத்தினான். படைகள் செல்லும் பெருவழியில் எந்த வித நெருக்கமும் ஏற்படாத வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார் மாதண்ட நாயகம். கோட்டையைப் பாதுகாக்க சிறு படையை விட்டுவிட்டு மாதண்ட நாயகமும், ஆதவனும் உறையூர் புறப்பட்டனர்.

======

ஜலாலுதீன் தன் படைகளை மாலிக் கஃபூரின் உத்தரவுப் படி தென் மேற்காக நடத்திச் சென்றான். நேராக கொல்லி மலை செல்லாமல், வட ஆந்திரத்திலிருந்து மேற்கே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி தலைக்காடு வரை இறங்கி அங்கிருந்து மீண்டும் தென்கிழக்காகத் திரும்பி கொல்லி மலையை அடைந்தான்.

அவனது படையில் மங்கோலியர்கள் முதலிய இனத்தவர் இருந்ததால் அவர்களுக்குக் காட்டு வழியே இனிமையாக அமைந்தது ஆங்காங்கே தென் பட்ட விலங்குகளையே வேட்டையாடி உண்டனர். திறந்த வெளிகளிலேயே உறங்கினர். அவர்களிடமிருந்த வேல், வில், அம்பு தவிர வேறொரு தளவாடமும் அவர்களிடத்தில் இல்லை. ஆகவே அவர்களது பயணம் துரிதகதியில் அமைந்தது.

======

வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டில் அமைந்திருந்த வீர பாண்டியனின் படைகள் மற்றும் வில்லவர் ஐந்நூறு பேரும் சிதம்பரம் வழியாக தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கினர். அளவில் சிறு படையான வீர பாண்டியன் படை வீரதவளப்பட்டணத்திலிருந்து தஞ்சைக்கு ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விட்டது. இப்படியாக மதுரையை நோக்கி மூன்று படைகள் முறையே கொல்லிமலை, உறையூர் மற்றும் தஞ்சையில் தண்டு இறங்கியிருந்தன.


மேலே உள்ள வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறியிடப்பட்டுள்ள வழியாக ஜலாலுதீன் மாலிக்கின் படைகளை அழைத்துவந்தான். சிவப்பு நிற வழியாக ஹொய்சள வல்லாளனின் படைகள் துவாரசமுத்திரத்திலிருந்து கிளம்பி குவலாலா வழியாக உறையூரை அடைந்தன. நீல நிறக்குறியீட்டின் வழியாக வீர பாண்டியனின் படைகள் வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டிலிருந்து நேராக தஞ்சைக்கு சற்று வடக்கே முகாமிட்டிருந்தன. இந்த அமைப்பு மதுரையைத் தாக்கும் திரிசூலத்தை ஒத்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த மூன்று படைகளும் மிக விரைவாகவும் மறைவாகவும் வந்து சேர்ந்ததால் மற்ற படைகளின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியாமல் போயிற்று. ஆனால் மதுரையிலிருந்த சுந்தரனுக்கோ இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனே தெரிய வந்தது. அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருந்ததால் அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.

மதுரையை நோக்கி நீண்டிருந்த திரிசூலம் அவன் மனதை பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியது. அவனது நண்பன் மாலிக் கஃபூரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. மாலிக்கின் படையில் மாலிக் கஃபூர் இல்லை என்பதும், ஜலாலுதீன்தான் அந்தப்படைகளுக்குத் தலைமை வகிக்கிறான் என்பதும் அவனுக்குக் கிடைத்திருந்தது.

மதுரைக்கு ஒரு பெரும் ஆபத்து நெருங்கிவிட்டதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான்.

(தொடரும்)

Thursday, December 24, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 17

அத்தியாயம் 17 - ஜலாலுதீன்

மாலிக் கஃபூரின் படைத்தளத்திற்கு மீண்டும் வருகிறோம். முன்பு சுந்தர பாண்டியன் வந்த போது நாமும் அவனுடன் ரகசியமாக வந்து திரும்பி விட்டதால் அவனது படை பலத்தைப் பார்க்க முடியவில்லை. இப்போது வெட்ட வெளிச்சத்தில் அந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த படைத்தளத்தைக் கண்ணாரக் காணலாம்.

தில்லியிலிருந்து அழைத்து வந்த படையும், இடையே இணைந்த படையும் சேர்ந்து ஒரு சிறு பெரும் சைன்யமாகியிருந்தது. எந்த ஒரு பிடிப்பும் இன்றி, மாலிக் கஃபூரின் ஆணைக்குக் கட்டுப்பட்டோ, பயந்தோதான் பணியாற்றிக்கொண்டிருந்தனர் அந்தப் படை வீரர்கள். அவர்களை வீரர்கள் என்று அழைப்பதே வீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.

மங்கோலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குதிரைப்படயினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் இருந்தனர். செங்கிஸ்கானின் குதிரைப்படையின் சாகசத்திற்கு தில்லி பலமுறை பலியாகியிருக்கிறது. அந்த மங்கோலியர்களையே பணத்தாசை காட்டி மயக்கிவிட்டான் மாலிக் கஃபூர். இந்தப் புறம் வில்லாளிகள். மத்திய ஆசியப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டையாடுவது என்பது மூச்சுவிடுவதைப் போன்று இயல்பான ஒன்று. ஈவு, இரக்கம் என்ற இரண்டு வார்த்தையும் இவ்விரு பிரிவினரின் அகராதியிலும் கிடையாது. இப்படிப்பட்ட படையினரை வைத்துத்தான் யாதவர்களை வீழ்த்தியும், காகதீயர்களை அடிபணியவைத்தும் தனது வெற்றிப்பாதையை வகுத்து வந்திருந்தான் மாலிக் கஃபூர்.

ஒரு தலைவன் தான் எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டியது அவனுக்குள்ள முதல் கடமை. அந்தப் பணி சரியா தவறா என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அந்தப் பணியை முடிக்கத் தேவையான தளவாடங்கள், உத்திகள், உதவிகள், தந்திரங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். யார் மூலமாக என்ன சாதிக்க வேண்டுமோ, அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிட்டும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று மேலாண்மை பாடம் நடத்துகிறார்!

மாலிக் கஃபூர் நிச்சயமாக திருக்குறளைப் படிக்கவில்லையென்றாலும், அவரது வாய்மொழிக்கேற்ப, அவனது படையில் மங்கோலியர்களையும், மத்திய ஆசிய வில்லாளர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இவர்களோடு பணம் மட்டுமே குறியாகக் கொண்ட படையும், தில்லியிலிருந்து வந்த சுல்தானின் படையும் சேர்ந்து கொண்டதால், வெற்றி மட்டுமே அவனது சொந்தமாக இருந்து வந்தது.

எப்போது படை நகர வேண்டும், எவ்வளவு படை நகர வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதற்காக, தனது தளபதிகளை தனது கூடாரத்திற்கு அழைத்தான் மாலிக். அவனது ஆலோசனைக் கூட்டம் எப்போதுமே அவன் உத்தரவு செய்வதும் மற்றையோர் ஆமோதிப்பதுமாகவே நடைபெறுவது வழக்கம். அன்றும் அதே போல் அவனது உத்தரவை எதிர்பார்த்து வந்திருந்தனர் தளபதிகள்.

"நாம் தெற்கு நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது" சுருங்கச் சொன்னான் மாலிக்.

"உத்தரவிடுங்கள். படை நகரத் தயாராக இருக்கிறது" கூட்டத்திலிருந்து ஒரு குரல்.

"ம். இதுவரை நாம் படை நடத்தியதற்கும், இனி நடப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது." என்று சொன்ன மாலிக் தளபதிகளின் மீது தன் கண்களை ஓட்டினான். அவனே மேலும் தொடர்வான் என்பதால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.

"இனி நாம் செல்ல இருக்கும் தேசம், இதுவரை நாம் பார்த்ததற்கு முற்றிலும் மாறு பட்டது. அங்கே நமது பாரம்பரிய போர் முறை எடுபடாது. செல்வங்கள் அங்கே அரண்மனைகளில் இல்லை. அவை இருப்பது கோவில்களில். புரிந்ததா?"

ஒரு மாதிரியாகத் தலையாட்டி வைத்தனர் தளபதிகள்.

"நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசன் வேறு. ஆண்டவன் வேறு. அரசன் மீது நாம் போர் தொடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு இருக்காது. ஆண்டவனிடம் நம் கைவரிசையைக் காண்பித்தால், மக்கள் நம்மை வாழ விடமாட்டார்கள். ஆகவே நமது திட்டமும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று சற்று நிறுத்தினான் மாலிக் கஃபூர்.

இவ்வளவு ஆணித்தரமாக அலசும் எந்த ஒரு தலைவனையும் அவனது உபதளபதிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் மாலிக்கிற்கு வாய்த்த உபதளபதிகளுக்கோ இவை ஒன்றும் சுத்தமாகப் புரியவில்லை. அவன் இதெல்லாம் ஏன் சொல்கிறான் என்று கூட ஓரிருவர் யோசிக்கத் துவங்கினார்கள்.

"சரி, இவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நமது படைகள் சற்று பிரிந்து செல்ல வேண்டும். ஆகவே நமது படைகள் இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு பத்து தவணைகளில் இங்கிருந்து புறப்படும். நாம் இருப்பது ஹொய்சள தேசத்தின் வட எல்லையில். நாம் செல்ல வேண்டியது பாண்டிய தேசத்திற்கு. நாம் படை நடத்தும் போது இடையில் இருக்கும் ஹொய்சள தேசத்தை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. ஹொய்சளர்கள் நமது படையைத் தடுக்கும் வகையில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சுல்தானின் கொடி முன்னே செல்ல வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே சென்றால் நாம் கொல்லி மலையை அடைவோம். நமது படைகள் அங்கே தண்டு இறங்கட்டும். அதற்குப் பிறகு நடக்க வேண்டியதைப் பற்றி நான் அங்கே வந்து சொல்கிறேன். இனி என்னை நீங்கள் அங்கு தான் பார்க்க முடியும்." என்று விவரித்தவன் இறுதியாக "புரிந்ததா?" என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தான்.

அவனது வியூகம் ஒன்றும் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஒரு மாதத்திற்குப் படை நடத்தினால் எதிரி விழித்துக் கொள்வானே? முதலில் இருக்கும் ஹொய்சளர்களைத் தாக்கினால் அந்த படையையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளலாமே? படை கிளம்பி நேராக இலக்கைத் தாக்கினால் முழு வேகத்துடன் தாக்கி எளிதில் வெற்றி அடையலாமே? எதற்கு இடையில் கொல்லி மலையில் தங்க வேண்டும்? இப்படியெல்லாம் ஒருவரும் யோசிக்க வில்லை. அப்படி யோசிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தரப்படவில்லை. அனைவரும் எழுந்து அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி வணங்கி அவனது கூடாரத்தை விட்டு வெளியேறினர். அப்படி சென்றவர்களில் ஒருவனை மட்டும் நிறுத்தினான் மாலிக். மற்றவர்கள் அகன்றுவிட்டனர் என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின் அவனைத் தன் அருகில் அழைத்து "உன்னை மட்டும் அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறதா ஜலாலுதீன்?" என்று புன்னகையுடன் வினவினான்.

ஜலாலுதீன் என்று அழைக்கப்பட்ட ஜலாலுதீன் அசன் கான், சற்றேறக்குறைய இருபது வயதுடையவனாகத் தோன்றினான் . தில்லி சுல்தானியப் படைப் பிரிவின் தளபதியாக சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் நியமிக்கப் பட்டவன். நல்ல அறிவாளியானாலும் அதை மாலிக் கஃபூர் இருக்கும் போது உபயோகிப்பது தன் தலையைத் தானே கொய்து கொள்வது போல் என்பதை உணர்ந்திருந்தானாகையால் அவனது போக்கு இந்தப் படையெடுப்பில் மாலிக் காலால் இட்டதைத் தலையால் செய்வதென்பதாகவே இருந்தது. இதுவே மாலிக் அவனிடத்தில் மதிப்பு வைப்பதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் சுல்தான் தேர்ந்தெடுத்த ஒருவரை தன் அருகில் வைத்துக் கொள்வது நாளைக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மை பயக்கும் என்பதும் மாலிக்கின் எண்ணம்.

"அப்படியெல்லாம் இல்லை. தங்கள் உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணியென்பதை சுல்தான் தெளிவுபடுத்தியுள்ளார்". என்றான் அடக்க ஒடுக்கமாக.

"ஜலாலுதீன், இப்போது போன தளபதிகளெல்லாம் நான் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அவர்களாக ஒன்றும் யோசிக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படியல்ல. சுல்தான் அவர்களே உன்னை பிரத்யேகமாக தேர்வு செய்துள்ளார். தில்லியை விட்டுக் கிளம்பும் போது கூட என்னைத் தனியாக அழைத்து உன்னை நல்ல படியாக நடத்துமாறு உத்தரவிட்டார். நீயும் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாய். அதனால்தான், இனி படையை நடத்தும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கலாம் என்று எண்ணுகிறேன்" மாலிக் சற்று நிறுத்தி அவன் கண்களை ஊடுறுவினான். ஜலாலுதீனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. இதில் ஏதோ சூது இருப்பது மட்டும் அவன் உள்ளத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.

"அத்தகைய திறமை என்னிடம் இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் அதில் தவறேதுமிருக்காது என்பது என் எண்ணம்."

அதைக் கேட்டு பெரிதாக நகைத்த மாலிக், "ஜலாலுதீன், இந்த பதில் மூலம் நீ மிக மிக புத்திசாலி என்பது உறுதியாகிறது. நல்லது. நான் சொன்னது போல், உங்களைப் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தப் படையெடுப்பு மிகவும் வித்தியாசமானது. ஆகவேதான் அவ்வாறு உத்தரவிட்டேன். இனி நான் இல்லாத போது நீதான் படைகளை நடத்த வேண்டும். அதற்கான உத்தரவுப் பத்திரம் இதோ. இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேள்" என்று அவனிடம் ஒரு சீலையைக் கொடுத்துவிட்டு அவன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தான்.

"அப்படியே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றவாறே வெளியேறினான் ஜலாலுதீன். அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த மாலிக்கின் வாயிலிருந்த் சிறிது நேரம் கழித்து வந்தன "இன்ஷா அல்லாஹ்" என்ற சொற்கள்.


(தொடரும்)

Wednesday, December 23, 2009

சுய தேடல் . . .

தூரத்தே தெரியும் மலைகள்
அருகே விரியும் வயல்கள்
சற்றே நெளியும் ஓடை - அவை
யாவிலும் இல்லை கவனம்

செவியில் கேட்கும் மழலை
ஆசையாய் பேசும் மனைவி
காலைச் சுற்றும் பூனை - எதுவும்
தொடவில்லை என்னை

இருந்தும் இல்லாமல் இருக்கும்
இன்றைய வாழ்வின் நிலைக்கும்
நேற்றைய பொழுதின் சிந்தனை - அதுவும்
அண்டவில்லை என்னை

இன்பம் இல்லா வாழ்வென
துன்பத்தில் மனம் தினம் வாட
கண்ணெதிரே இருக்கும் நீரை மறுத்து
கானலுக்கேங்கும் மனிதா

உன்னுள் தேடு
உண்மை தேடு
உன்னைத் தேடு

Wednesday, December 16, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 16

அத்தியாயம் 16 - இணைந்த இதயங்கள்


நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் வீரதவளப்பட்டணத்திற்குச் செல்கிறோம். வீரபாண்டியன் தன் தலை நகரை மிக விரைவில் நிர்மாணம் செய்து செயல்பட வைத்திருந்தான். காஞ்சிக்கு சற்று அருகில் இருந்தும், இந்த நகருக்குள் பல்வேறு புதிய கட்டடங்களையும் எழுப்பியிருந்தான். வீரதவளப்பட்டணத்திலிருந்து சற்று தள்ளி இருந்த படைவீட்டில் (தற்போது படவேடு என்று அழைக்கப்படுகிறது) அவனது படைகள் தண்டு இறங்கியிருந்தன. பாண்டியப்படைகளில் ஒரு பகுதியும், இந்த நகரம் அமைந்தபின் சேர்த்த படையுமாக சேர்த்து, சற்றேறக்குறைய பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். அவர்களை பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்காக, மாராயர் அங்கேயே முகாமிட்டிருந்தார். அவருக்குத் துணையாக இளவழுதியும் அங்கேயே இருந்தான். அவர்களோடு, கொல்லிமலை வில்லவர்கள் ஐன்னூற்றுவரும் அங்கே இருந்து வந்தனர்.

போருக்கான ஆயத்தம் செய்யவேண்டும் என்று விக்ரம பாண்டியர் சொல்லிவிட்டதன் விளைவாக, அங்கே பல்வேறு பொருட்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பொதி வண்டிகள், அவற்றை நடத்த பொதி மாடுகள், படைகள் தங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட கூடாரங்கள், உணவு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், அரிசி, பருப்பு ஆகியவை தனியே ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டது.

போர்த்தளவாடங்களான, வாள், வேல், கவசம், சலாகை முதலியவை அங்கேயே அமைக்கப்பட்ட கொல்லர் பட்டறைகளில் தயாராகிக் கொண்டிருந்தன. மேலும் குதிரைகள், யானைகளுக்குத் தேவையான கவசங்களும், உணவுப் பண்டங்களும் திரட்டப்பட்டன.

ஆனால் இத்தனை பெரிய படையை அங்கே நிர்வகிப்பது, புதிய அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் சுணக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. புதிய அரசுக்கு வரி கொடுப்பதில் ஆங்காங்கே குழப்பம் நீடித்தது. ஆயினும் இவற்றையெல்லாம், விக்ரம பாண்டியர் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு வந்தார்.

வீரபாண்டியன் தன் மனையாள் கயல்விழியுடன் வீரதவளப்பட்டணத்திலேயே சிறிது காலம் உல்லாசமாக இருந்து வந்தான். அவர்கள் இருவருக்கும் மிக மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றிருந்தது. ஆகவே நமக்குக் கூட அழைப்பு அனுப்பவில்லை!. இப்போதுதான் நாம் தெரிந்து கொண்டாலும் மனதைத் தேற்றிக்கொண்டு மணமக்களை வாழ்த்துவோம்!!.

ஆனால் இளவழுதியும், தேன்மொழியும் இன்னும் சிறிது காலம் காதலர்களாகவே தொடர்ந்து இருப்பதாக முடிவு செய்து விட்டனர் போலிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தேன்மொழி, வீரதவளப்பட்டணத்திலேயே இருந்து வந்தாள். படைவீடு செல்ல அவளுக்கு விருப்பமென்றாலும், ஏனோ மாராயர் மறுத்து வந்தார். அவ்வப்போது அங்கே வரும் இளவழுதிக்கு சில நல்ல யோசனைகளும் தெரிவித்து வந்தாள்.

====

காதலர்களுக்கு உகந்த நேரம் மாலைப் பொழுதுதான். அப்போதுதான் சூரியன் மலைவாயிலில் விழுவதற்கும் சந்திரன் அலைவாயிலில் எழுவதற்கும் சரியாக இருக்கும். அப்போது ஒளியிருந்தும் இல்லாதது போன்ற ஒரு மயக்கமான சூழல், காதலர்களின் மனதை ஒத்ததாக இருப்பதால் அவர்களுக்கும் அந்தி நேரத்தில் எண்ணங்கள் விழுந்தும் எழுந்தும் ஒருவித மயக்கத்தைத் தரும். அத்துடன் பூங்கா போன்ற மனதிற்கினிய இடத்தில் இருந்துவிட்டால் இந்த மயக்கம் மேலும் வாட்டி எடுக்கும். இதை பசலை நோய் என்பர் கவிஞர் திலகங்கள்!

அத்தகைய ஒரு அழகான உத்தியான வனத்தில் மாலை உலா சென்ற தேன்மொழிக்கு அத்தகைய பசலை கண்டு பலவேறு எண்ணங்கள் வந்து வாட்டின. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோமல்லவா? இது என்ன? பொதுவாக பசலை படர்ந்தவர்கள் இளைத்து காணப்படுவர். ஆனால் தேன்மொழியோ நல்ல வனப்புடன் இளமைச் செழிப்புடன் இருக்கிறாளே? ஒருவேளை பசலையென்பது பொய்யோ? ஆனால் அவ்வப்போது விம்மித்தணியும் எழில் சிகரங்கள் அவளது மனப்பாங்கை ஒருவாறு உணர்த்துவதை நாம் அறியலாம். என்ன செய்வது. இருந்த ஒரு தோழி கயல்விழியும் கல்யாணம் செய்துகொண்டு கற்புக்கரசியாகிவிட்டாள். இவள் பாடு அல்லவா திண்டாட்டமாகிவிட்டது.

தேன்மொழியின் இதயத்தில் இளவழுதியின்பால், அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, துக்கம், பயம் போன்ற விதவிதமான உணர்ச்சிகள் அலையலையாய் எழும்பின. இன்று வருவதாய் வாக்களித்திருந்தவனிடம் வெளிப்படையாகக் கேட்டுவிடுவது என்றே எண்ணியிருந்தாள். திருமணம் என்ற உறவு ஏற்பட்டால்தான், உரிமை பலப்படும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

உத்தியான வனத்திலிருக்கும் விளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரியேற்றுவோர், தம் பணிகளைச் செய்யத் துவங்கினர். இரூளும் மெல்ல சூழ்ந்தது. காத்திருந்த கண்கள் களையிழந்தன. காதலனைக் காணாத காரணத்தால். தேன்மொழி தன்னையே கடிந்து கொண்டாள். மீண்டும் ஒரு நெடிய பெருமூச்சுடன் அரண்மனை திரும்பத்துவங்கினாள்.

அங்கிருந்த பல்வேறு மலர்ச்செடிகளும், மாலை நேரத்தில் மொட்டவிழ்த்து மணம் பரப்பத் துவங்கியிருந்தன. அதன்பால் தன் கவனத்தைத் திருப்பியவள், அந்த மணத்தை ரசித்தவாறு தன் நிலை மறந்து மெல்லக் கைவீசி நடந்து கொண்டிருந்த போது, அவளது கரங்களைப் பற்றினான் அவள் காதலன். ஆயினும் அவன் கண் தன் கடைக்கண் பார்வையையும் செலுத்தவில்லை. என்ன விந்தை. அவன் வருவானா என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவளுக்கு அவன் முன்னால் நின்றாலும் அவனை நோக்க மனமில்லை. தன் மனப்போக்கை எண்ணி சற்று நகைக்கவும் செய்தாள். அது புன்முறுவலாக வெளிப்பட்டது. அதை அவளது சம்மதமாக எண்ணி தன் பக்கம் இழுத்தான் இளவழுதி. அதை எதிர்ப்பாராத தேன்மொழி, அவன் மீது விழுந்தாள்.

ஒரு நாழிகை நேரம் காதலர் இருவரும் வேருலகம் சென்று வந்தனர். அவர்கள் செய்கையைப் பார்ப்பது அநாகரீகமான செயல் என்பதால் நாம் சற்று நேரம் அவ்வனத்தில் உலாவிவிட்டு மீண்டும் அங்கே வந்து அவர்களைப் பார்த்தால் வழக்கம் போல் அவர்கள் உடல் இங்கே இருந்தாலும், உள்ளம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிகிறது. எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒரு சிறு தென்றல் காற்று அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தழுவிச் சென்றபோது சிலிர்த்த அந்த மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள் அவர்களை இவ்வுலகிற்கு மீட்டன.

எப்போதும் சுதாரிப்பது பெண்ணினம்தான். அந்த வகையில் தேன்மொழியும் தன் நிலை உணர்ந்தாள். ஆனால் அவனிடமிருந்து விலக மனம் மறுத்தது. காலம் காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட கற்பு நெறி பற்றிய தெளிவு அவனிடமிருந்து பிரிந்து செல்ல அறிவுறுத்தியது. வேண்டாவெறுப்பாக சற்று விலக முயன்றாள். அந்த முயற்சியும் இளவழுதிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவளது இயற்கை அழகுடன் இயைந்து உறவாடும் நிலையைப் பெற்றான். கண்ணோடு கண் நோக்கிவிட்டால் வாய்ச்சொற்களுக்குப் பயன் என்ன? ஆனால் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லையே. ஏதாவது பேசினால்தானே நாம் கேட்க முடியும். ஹூம் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?

ஒருவழியாக இளவழுதி தனது தொண்டையைக் கனைத்தான். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தேன்மொழியிடமிருந்து ஒரு ஹும். அடடா. என்ன இது. இன்று போய் நாளைதான் வரவேண்டும் போலிருக்கிறதே. இதோ இளவழுதி பேசிவிட்டான்.

"தேன்மொழி, கோபமா?"

"நல்ல கேள்வி, இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்துவிட்டு.."

"ஏதாவது பேசவேண்டுமல்லவா?"

"எல்லாம் பேசுவீர்கள், ஒன்றைத் தவிர"

"எந்த ஒன்று?"

"நான் அதையும் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமா? சரி சொல்லித் தொலைக்கிறேன். மாமா என்னிடம் பலமுறை கேட்டுவிட்டார் என் திருமணத்தைப் பற்றி. உங்கள் எண்ணம் என்னவென்று தெரியாமல் நான் என்ன சொல்ல"

"என் எண்ணம் தெரியாதா உனக்கு"

"எல்லாம் தெரிகிறது. ஆனால் திருமணம் பற்றி ஒன்றுமே பேசமாட்டேன் என்கிறீர்களே"

இதற்குப் பதிலாக, இளவழுதியிடமிருந்து ஒரு பெருமூச்சுதான் வெளிவந்தது. அதுவரை இருந்த குதூகலம் சட்டென்று மாறி முகத்தில் ஒரு வித குழப்பம் குடிகொண்டது. "தேன்மொழி, உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் ரகசியத்தைக் கூறியதில்லை. நானே சொல்ல வேண்டுமென்றிருந்தேன். நீயும் கேட்டுவிட்டாய். என் வாழ்வில் ஒரு பெண் என்றால் அது நீதான். என் மனையாளும் நீதான். ஆனால் நம் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் ஒரு சில நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்."

அவன் பதில் அவளையும் குழப்பியது. "ஒன்றும் புரியவில்லையே, என்ன நிகழவேண்டும்".

"தேன்மொழி" என்று அழைத்தவன் சற்று நிறுத்தினான் அவளது கண்ணோடு கண் நோக்கி. "நான் சென்ற வருடம் தில்லையம்பலம் சென்றிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்திருக்கிறேன். அது இன்னும் ஓரிரு திங்களில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அதன் பின் நம் திருமணம்தான்".

"என்னவென்பதை எனக்கு விளக்கிச் சொல்லுங்களேன்" விடுவதாக இல்லை தேன்மொழி.

"உனக்கும் தெரியவேண்டியதுதான். இங்கே உட்கார். தில்லையில் எனக்கு ஒரு சூத்திரம் கற்றுத்தரப்பட்டது. அதன் பெயர் சக்கர வியூகம். அதை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சிக்குப் பின் நம் திருமணம் சாத்தியமாகிவிடும்".

"சக்கரவியூகமா? அதை நாம் பாரதக்கதையிலல்லவா படித்திருக்கிறோம்."

"இது வேறு. நிச்சயமாக உனக்கு இதைப்பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு என்னையும் என் வார்த்தைகளையும் நம்பு".

"இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள் தேன்மொழி ஏக்கத்துடன். அனிச்சையாக எழுந்த அவள் கரங்களைத் தன் கரங்களுள் ஏந்தினான் இளவழுதி. இணைந்த அந்தக் கரங்கள் சக்கர வியூகத்திற்கு ஒரு புது சூத்திரம் அமைத்தன.

(தொடரும்)

Sunday, December 13, 2009

சாலையோர மரங்களை வெட்டுவது சரியா?

நேற்று நங்கநல்லூர் சிவன் கோவில் அருகே இருந்த ஒரு பெரிய மரம் வெட்டப்பட்ட காட்சியைக் கண்டதும் மனம் மிகுந்த வேதனையடைந்தது. அடடா? எவ்வளவு பெரிய மரம். அந்த மரம் காரணமாக அங்கே போக்குவரத்து நெரிசல் இருந்ததென்னமோ உண்மைதான். ஆனால் அதற்காக மரத்தை வெட்டிவிடுவதா? இப்படி மரத்தை வெட்டிவிட்டால் அதனால் கிடைக்கும் ஆக்சிஜன் என்னாவது? என்ற கோபமான கேள்வி எழாமல் இல்லை. ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் கீழ்கண்ட சிந்தனைகள் எழுந்தன.

அங்கிருப்பதோ ஒரு மரம். அதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கி கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடுகின்றன. ஒரு மரம் தன் வாழ் நாளில் ஒரு டன் கார்பன் டை ஆக்சைடை உட்கொள்வதாக ஒரு இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயு அதைவிட அதிகமல்லவா? ஆகவே அந்த மரம் அங்கிருப்பதால், கிடைக்கும் நன்மையை விட தீமை அதிகமல்லவா?

அஃபாரஸ்டேஷன் (காடுமயமாக்கல்) என்பது வேறு, சாலையோரம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை நீக்குவது என்பது வேறு என்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

Wednesday, December 9, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 15 !

இதுவரை:-

சக்கரவியூகம் இதுவரை சற்றேறக்குறைய 45 பகுதிகளாக வெளி வந்திருக்கிறது. இதுவரை நடந்த கதையின் ஓட்டத்தை அது நடந்த ஊர்களின் பெயர்களில் பார்ப்போம்.

காஞ்சி:-
காஞ்சியின் கடிகையில் பயின்ற மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை. ஆனால் ஆசாரியர் தெளிவாக விளக்க வில்லை. துணை ஆசாரியன் மாதவன் அதை விளக்குவதாகக் கூறுகிறான். மாணாக்கர்கள், வீர பாண்டியன் (மதுரை), வல்லாளன் (துவாரசமுத்திரம், ஹொய்சளம்), இளவழுதி (திருவெள்ளரை), கோப்பெருஞ்சிங்கன் (காஞ்சிபுரம்), ஹரிஹர ராயன், புக்கராயன் (காஞ்சி). இவர்கள் அனைவருமே முக்கியப் பாத்திரங்கள்.

திருவெள்ளரை:-

இளவழுதியின் சொந்த ஊர். அவன் தந்தை மாராயரும் சகோதரி கயல்விழியும், மாமன் மகள் தேன்மொழியும் அந்த ஊரில் வசிக்கிறார்கள். வீரபாண்டியனும் இளவழுதியும் இங்கே வர, முறையே கயல்விழியிடமும், தேன் மொழியிடமும் காதல் கொள்கிறார்கள். தேன்மொழிக்கு மாலிக் கஃபூரின் திட்டம் தற்செயலாகத் தெரிய வருகிறது.

ஸ்ரீரங்கம்:-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, வல்லாளனை தமிழகத்தின் பக்கம் இருத்த முயற்சிக்கிறார். ஆனால் வல்லாளன் பிடி கொடுத்துப் பேசவில்லை. அதே நேரத்தில் அவரிடம் வந்த இளவழுதியை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

சிதம்பரம்:-

திருவாதிரைத் திரு நாளில், சிதம்பரத்தில் அனைவருக்கும் சக்கரவியூகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறான் மாதவன். ஆனால் இளவழுதிக்கு மட்டும் உண்மையான சக்கரவியூகத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறான்.

மதுரை:-

சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போட்டி வெளிப்படையாக நடக்கிறது. கயல்விழி மாறுவேடத்தில் வீரபாண்டியனின் மாமன் விக்ரம பாண்டியன் வீட்டில் தங்குகிறாள். வீரபாண்டியனின் தந்தை குலசேகர பாண்டியர் மரணமடைகிறார். சுந்தரன் தந்திரமாக அரசுக்கட்டில் ஏறுகிறான். (இத்துடன் முதல் பாகம் முடிவடைந்தது)

துவார சமுத்திரம் (ஹளபேடு) :-

இரண்டாம் பாகத்தில், வல்லாளன் அரசனாக தனது அவையைக் கூட்டி தமிழகத்தின் மீது போர் தொடுக்க வேண்டியதன் தேவையைத் தெரிவிக்கிறான். மாலிக் கஃபூர் பற்றிய அச்சம் தேவை இல்லை என்றும் தெரிவிக்கிறான். இவனுக்கு நீலா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

வீரதவளப்பட்டணம் (வந்தவாசி):-

விக்ரம பாண்டியன் செய்த ஒரு உடன்படிக்கை மூலம், வீரதவளப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வீர பாண்டியன் ஒரு அரசை நிறுவுகிறான். அங்கே மாராயர், இளவழுதி, கயல்விழி, தேன்மொழி ஆகியோர் வருகிறார்கள். அங்கே மாலிக் கஃபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் திட்டத்தை விளக்குகிறார் விக்ரம பாண்டியர்.

ஆந்திராவின் காடு:-

மாலிக் கஃபூர் தன் படைகளுடன் தங்கியிருக்கிறான். அவனைச் சந்திக்க சுந்தர பாண்டியன் வருகிறான். அவன் மதுரையைத் தாக்க வருமாறு அழைக்கிறான். மாலிக் கஃபூர் மேலும் ஒரு திட்டத்தை வகுக்கிறான்.

குவலாலா (கோலார்):-

ஹொய்சளர்களின் முக்கிய நகரமான குவலாலாவில் ஹொய்சளப் படைகள் ஒன்று சேர்கின்றன. அங்கே அரசரை எதிர்பார்த்து மாதண்ட நாயகமும், குவலாலாவின் கோட்டைத்தலைவன் ஆதவனும் காத்திருக்கிறார்கள்.

= = =

இனி. . .



ஹொய்சள தேசத்தின் முக்கிய நகரமான குவலாலாவையும், அதன் தலை நகரான துவார சமுத்திரத்தையும் இணைக்கும் முக்கியப் பெருவழி எப்போதும் மிகுந்த ஆரவாரத்துடனும் ஜனத்திரளுடனும் இருக்குமென்றாலும், அன்று அந்த வழியில் அதுவரை ஒரு ஈ, காக்கை கூட வர வில்லை. அந்தப் பெருவழியில் அன்று பொதுவானவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கியப் பிரமுகரின் வருகைக்காக நீண்ட நேரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போது, கோட்டைக் காவலன் ஆதவனுக்கும், மாதண்ட நாயகத்திற்கும் தெரிந்தது ஒரு சிறு புழுதிப்படலம் மட்டுமே. சற்று நேரம் கழித்து அங்கே ஏறக்குறைய நூறு குதிரைகளில் வீரர்கள் வருவது புலப்பட்டது. அக்கூட்டத்தின் முன்னே ஹொய்சளர்களின் ராஜ முத்திரையிட்ட பதாகையைத் தாங்கியவாறு வந்த ஒரு குதிரையால் அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

கோட்டை வாயிலை அந்த வீரர் கூட்டம் நெருங்குவதற்கும், ஆதவனும், மாதண்ட நாயகமும் அங்கே செல்வதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் தேடிய முக்கியப் பிரமுகர் இல்லை.

"ஆதவா, படையின் முன்னே பதாகை. ஆனால் படையிலோ தலைவர் இல்லை. ஒரே குழப்பமாக இருக்கிறதே" என்றார் மாதண்ட நாயகம்.

"எனக்கும் அதே சந்தேகம்தான். எதற்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போம். நாமாக ஒன்றும் கூற வேண்டாம்." ஆதவன் சொன்னது சரியாகவே பட்டது மாதண்ட நாயகத்திற்கு. (இனி இவரை நாயகம் என்றே அழைப்போம்.)

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட குதிரை வீரர்கள், ஒரு ஒழுங்கான வரிசையில் தங்கள் குதிரைகளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களில் தலைவன் போல் காணப்பட்ட ஒருவன், தனது கொம்பை எடுத்து பலமாக ஊதினான். பிறகு "கோட்டைத் தலைவரிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்ல வேண்டும். மன்னரின் ஆணை. உடனே கதவைத் திறவுங்கள்" என்றான் சத்தமாக. அதைக் கேட்டு வாயிலின் முகப்பிற்கு வந்த நாயகம், "யார் நீ, முதலில் அதைத் தெளிவாகச் சொல். பிறகு உள்ளே வருவதைப் பற்றி பேசலாம்" என்றார் கோபமாக.

"நான் யாரென்பது தேவையில்லாத விஷயம். இதோ மன்னரின் பதாகை இருக்கிறது. அவரது முத்திரை பதித்த ஓலை இருக்கிறது. முக்கியமான தகவல் என்று அவரே என்னிடம் கூறினார். அதோடு அவரது இலச்சினையையும் கொடுத்திருக்கிறார்" என்று ஹொய்சள ராஜ முத்திரையைக் காட்ட முற்பட்டான். இந்தப் பதிலால் திருப்தியடைந்த நாயகம், "சரி, நீ மட்டும் உள்ளே வா. மற்றவர்கள் அங்கேயே இருக்கட்டும்" என்று கூறி ஒருவன் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு வழியை ஏற்படுத்துமாறு கோட்டைக் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.

உள்ளே வந்த வீரன் மாதண்ட நாயகத்திடம் ஓலையை அளித்துவிட்டு, "நான் வந்த வேலை முடிந்தது. உத்தரவு கொடுங்கள். நாங்கள் உடனே புறப்பட வேண்டும்." என்றான்.

"எங்கே" ஓலையைப் பிரித்துக் கொண்டே நாயகம் வினவினார்.

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"நான் நாயகம்"

"நான் அரசரின் தூதுவன்"

அதற்குள் ஓலையைப் பிரித்துவிட்ட நாயகம் அதன் மீது தன் கண்களை ஓட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்தத் தூதுவனைப் பார்த்த நாயகம், "இதை மன்னர் தான் அளித்தாரா?" என்றார்.

"ஆம்"

"எங்கே"

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"இந்த ஓலையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை"

"அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை"

"சரி உன் பெயர் என்ன?"

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"ம். என் பொறுமையைச் சோதிக்கிறாய். உன்னை இப்போதே சிறை செய்ய முடியும்"

"அரசரின் உத்தரவு அவ்வாறு இல்லை"

எதற்கும் அசராத அந்த வீரனின் நிலையைப் பார்த்து சற்று அசந்துதான் போனார் நாயகம். சிறிய சிந்தனைக்குப் பின் "சரி, நீ செல்லலாம்" என்று உத்தரவு பிறப்பித்தார். அவனும் அவரை வணங்கிவிட்டு, கோட்டைவாயிலை விட்டகன்றான். உடனே சில வீரர்களை அழைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்று கண்காணிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, ஆதவனைத் தேடிச் சென்றார்.

"ஆதவா, அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது"

"அரசரிடமிருந்தா?, அவரையல்லவா எதிர்ப்பார்த்தோம்." ஆதவன் வினவினான் ஆச்சரியத்துடன்.

"ம். ஆனால் ஓலை மீது எனக்கு என்னவோ நம்பிக்கை பிறக்கவில்லை. இதோ பார்" என்று ஓலையை அவனிடம் நீட்டினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது

"நாயகத்திற்கு... நாம் வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தற்போதைக்கு குவலாலா வருவதற்கில்லை. ஆகவே படைகளைத் திரட்டிக்கொண்டு, காவிரிக் கரை வழியாக, உறையூரில் தண்டு இறங்கவும். உங்களை அங்கே சந்திக்கிறேன். உடன் ஆதவனையும் அழைத்துச் செல்லவும்." இதன் பின் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.

அதை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, "இதைச் சந்தேகிக்க ஒரு முகாந்திரமும் இல்லையே" என்றான் ஆதவன்.

"இல்லை ஆதவா, ஓலை சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசரின் திட்டம் இதுவல்ல. என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நாயகம். அவரது முகத்தில் கவலையும், குழப்பமும் சேர்ந்து இருந்தன.

"நீங்கள் குழம்ப வேண்டாம். அரசரது உத்தரவுப் படியே நடப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்"

"ம். எதற்கும் ஓரிரு நாட்கள் பொறுப்போம். அந்த வீரனைப் பின் தொடர்ந்து செல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம். எதற்கும் நீ படை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளைத் துவக்கிவிடு" என்று ஆதவனைப் பணித்துவிட்டு மெதுவாக நடந்தார் நாயகம். அவரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ஆதவன்.

(தொடரும்)

'

Sunday, December 6, 2009

இளைய பல்லவன் ரிட்டர்ன்ஸ் ! ! !

இந்த இளைய பல்லவன் அவ்வப்போது காணாமல் போய்விடுவதில் கில்லாடி. இதில் அவனை மிஞ்ச யாரும் கிடையாது! ஆனால் ஒரு நல்ல குணம். தினமும் வலைப்பதிவைப் பார்க்கத் தவறமாட்டான்.

நண்பர்களே, இளையபல்லவன் இப்போது மீண்டும் வந்து பதிவுகள் தொடர்ந்து போடுவதாகக் கூறுகிறான். சக்கரவியூகம் இனி தொடர்ந்து வருவதற்கு உத்தரவாதம் என்றும் கூறுகிறான். இதைப் போல் பலமுறை இதற்கு முன் கூறியிருந்தாலும், இந்த முறை எனக்கு சிறிது நம்பிக்கை குறைவுதான். உங்களுக்கு?

சரி, இனி இதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை. செயலில் இறங்குகிறானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

"இளையபல்லவா !, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். இது உன் மானப் பிரச்சனை, தன்மானப் பிரச்சனை. இம்முறையும் நீ ஒழுங்காகப் பதிவுகள் போடாவிட்டால், முக்கியமாக சக்கரவியூகத்தைத் தொடராவிட்டால், உன்னை 'ரைட் ஆஃப்' செய்து விடுவார்கள். ஆகவே எச்சரிக்கையாக இரு," என்பதை மட்டும் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும் இளையபல்லவனிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி ஓவர் டு இளைய பல்லவன்:

========

"நண்பர்களே, உலகில் பல்வேறு கடுமையான பணிகள் இருக்கின்றன. அதில் மிகக் கடுமையான பணி அக்கவுண்டன்ட் பணி. அதில் கார்போரேட் அக்கவுண்டன்ட் என்று ஒரு பிரிவு உண்டு, அவர்களுக்கு வாழ்க்கையே டெட் லைன் தான். அப்படிப்பட்ட பிரிவில் நான் பணியாற்றுவதால், இம்முறை டெட்லைன்களில் சிக்கிக் கொண்டுவிட்டேன். சக்கர வியூகம் எப்படியாவது தொடர்ந்து வர வேண்டும் என்ற ஆவலும் எண்ணமும் என்னிடமும் உள்ளது. இம்முறை மேலே சொன்னது போல், எப்பாடு பட்டாவது தொடர்ந்து எழுதிவிடுவது என்று (‘N’th டைம் !!! ) முடிவெடுத்து விட்டேன்.

எப்போதும் போல் உங்கள் மேலான ஆதரவை நாடு்ம்"

உங்கள்
இளைய பல்லவன்