Showing posts with label தொழிற்சங்கம். Show all posts
Showing posts with label தொழிற்சங்கம். Show all posts

Sunday, November 16, 2008

ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?

தோழர் வினவு, ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற அவரது நட்சத்திரப் பதிவில், ஐ.டி.துறையில் தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவிற்குப் பின்னூட்டமிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த சிந்தனைகள் ஒரு முழுப் பதிவிற்குண்டான செய்திகளை அளித்ததால் இந்தப் பதிவு.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.

அவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும்?. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.

முதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?

தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.

இத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.

2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.

இது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.

4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.

ஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.

5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.

இது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.


கலெக்டிவ் பார்கெய்னிங்

மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.

ஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.

தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.


இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.


ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.

இந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.