Sunday, November 30, 2008

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

திரு. சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்ததை அடுத்து திரு.ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் சற்று முன்னர்தான் கிடைத்தது. திரு. மன்மோகன் சிங் நிதித் துறையை கவனித்துக் கொள்வார் என்பது கூடுதல் செய்தி.

இந்தத் தகவல் கிடைத்த போது எனக்குத் தோன்றியது தான் தலைப்பாக வைக்கப் பட்டுள்ளது.

திரு. சிவராஜ் பாட்டீல் உள்துறையில் செய்த குளறுபடிகள் அல்லது செய்யாத நல்ல விஷயங்கள் எவ்வளவோ அதை விட மிக மிக அதிகம் திரு.ப.சிதம்பரம் அவர்கள் நிதித் துறையில் செய்த குளறுபடிகள்.

அவரது கடந்த நான்காண்டு நிதித் துறை நிர்வாகத்தில் நாட்டின் நிதித்துறை மிக மோசமாக மாறியது என்பதை மறுப்பதற்கில்லை. சந்தையோ, பணவீக்கமோ, அன்னியச் செலாவணி கையிருப்போ, எண்ணை விலையோ, இன்னும் எதுவெல்லாமோ மிக அதிக அளவில் ஏற்ற இறக்கங்கள் கண்ட போதெல்லாம் வெறும் கமெண்டுகளுடன் தன் வேலை முடிந்ததென்று நினைத்துக் கொண்டு கருத்து கந்தசாமியாகத் திகழ்ந்தவர்.

ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையும் மேலுக்குத் தேன் தடவினாற்போல் இருந்தாலும் உண்மையில் ஒரு பொருளாதார மேதையின் திறத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத வகையில் அமைந்திருந்ததை அனைவரும் அறிவர்.

இந்த நிலையில் திரு. சிவராஜ் பாட்டீலுக்கு மாற்றாக அவர் உள்துறையில் நியமிக்கப் பட்டிருப்பது, நிதித் துறையை ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் பலரது நிம்மதிப் பெருமூச்சிற்கு வழி வகுத்திருக்கும்.

இனி இந்திய அரசின் உள்துறை மட்டுமல்ல, நிதித் துறையும் சீரடையும் என்று நம்புவோம். இந்த முடிவிற்கு சந்தையின் ரியாக்ஷன் என்ன என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

திரு. ப. சிதம்பரம் அவர்களின் புதிய பொறுப்பிற்கு நல் வாழ்த்துக்கள்.

தி வொயிட் பலூன் (பெர்சியன்) - திரை விமர்சனம்
தி வொயிட் பலூனைப் பார்க்கும் வரையில் வெளி நாட்டுத் திரைப்படங்களில் அத்துணை நாட்டம் இருந்ததில்லை. ஆங்கிலப் படங்களும் குறிப்பாக குங்க்ஃபூ, ரஷ் அவர் மாதிரியான படங்களே, என் வெளி நாட்டுப் படப் பட்டியலில் இருந்து வந்தன. இந்தத் திரைப் படத்தைப் பார்த்த பிறகுதான் அயல் நாட்டுப் படங்களின் ஆழ்ந்த கருத்துகளும், வாழ்வியல் சிந்தனைகளும் மனிதகுலம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளின் கோர முகங்களும் வெளிப்பட்டு நம்மை அந்த சூழ் நிலைக்கு எடுத்துச் செல்கின்றன என்பது புரிந்தது. அந்த விதத்தில் தி வொயிட் பலூனுக்கு மிக்க நன்றி.

சில படங்களில் கதை மிக அழுத்தமாக இருக்கும். சில படங்களில் கதையே இருக்காது. ஆனாலும் வெற்றி பெறும். அதற்குக் காரணம் முகத்தில் அறைவதைப் போன்ற நிதர்சனத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுதான். இந்த ஈரானியப் படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். கதை என்றால் ஒரு போஸ்ட் கார்டில் கால் பங்கு கூட எழுத முடியாத அளவுக்குச் சிறியது. ஆனால் ஈரானின் உண்மை முகத்தைக் காட்டும் அதன் காட்சி அமைப்புகளும், கதை மாந்தர்களும் நம்மை ஈரானுக்கே அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இப்போது கதையும் விமர்சனமும்.

கதை

ஈரானியப் புத்தாண்டு நாள். அதற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க ஒரு சிறு பெண், தனக்கு நல்ல 'கோல்டன் ஃபிஷ்' தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். புத்தாண்டில் தங்க மீன் இருந்தால் நல்லதாம். இத்தனைக்கும் அவள் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் நிறைய தங்க மீன்கள் இருக்கின்றன. அருகிலுள்ள அனைவரும் இங்கிருந்து தான் தங்கமீனை எடுத்துச் செல்கின்றனர். அவள் சகோதரனும் அவர்கள் தாயிடம் போராடி அவளிடம் இருக்கும் கடைசி 500 ஈரானிய ரூபாய் நோட்டை வாங்கிக் கொடுக்கிறான். சந்தோஷமாகக் கடைக்குச் செல்லும் அந்தச் சிறுமி வழியில் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறாள், எப்படிப் பணத்தைத் தொலைக்கிறாள். கடைசியில் அந்தப் பணம் அவளுக்குக் கிடைத்ததா, தங்க மீன் வாங்கினாளா? என்பது தான் கதை.

திரைக் கதை

ஒரு கீழ் நடுத்தர அல்லது மத்திய நடுத்தர ஈரானியக் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது இந்தக் கதை. குடும்பத் தலைவி வீட்டு வேலைகளுடன் வெளியே சென்று பொருட்கள் வாங்கி வருவது வரை அனைத்தையும் நிர்வகிக்கிறார். குடும்பத் தலைவன் என்று ஒருவனின் குரல் இடை இடையே கேட்கிறது. அதற்கு எல்லோரும் பயப் படுகிறார்கள் அல்லது வெறுப்படைகிறார்கள். இது ஈரானில் நிலவும் ஆணாதிக்கத்தையும் பெண்களின் நிலையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும் அந்த சிறுமி தன் தாயோடு சந்தைக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் போது, பாம்பாட்டியின் வித்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப் பார்ப்பதற்காக சற்று நிற்கும் போது அவள் தாய், 'பெண்கள் இங்கெல்லாம் நிற்கக் கூடாது, அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல' என்று அறிவுரை கூறி இழுத்துக் கொண்டு செல்கிறாள். மீண்டும் அந்தச் சிறுமி காசு கிடைத்தவுடன் தங்க மீன் வாங்கச் செல்லும் போது பாம்பாட்டியிடம் தன் பணத்தை இழக்கிறாள். பிறகு பாம்பாட்டி அந்தச் சிறுமியிடம் பரிதாபப் பட்டு அந்தப் பணத்தைத் திருப்பி அளித்து விடுகிறார். அந்த வழியே செல்லும் ஒரு பாட்டி, இவளிடம் நடந்தவற்றைக் கேட்டுவிட்டு, 'பெண்கள் இங்கு வரக்கூடாது என்று உன் தாய் கூறவில்லையா?' என்று கேட்கிறார்.

அதற்கு அந்தச் சிறுமி 'என் அம்மா சொன்னார்கள். ஆனாலும் பெண்களுக்கு எது நல்லதல்ல என்று தெரிந்து கொள்வதற்காக வந்தேன்' என்று கூறுவாள். இந்த பதில் தான் இந்தப் படத்தின் பன்ச் டயலாக்.

இப்படிக் கிடைத்த பணம் மீண்டும் வழியில் ஒரு சாக்கடையில் விழுந்து விடுகிறது. அதன் மேல் இரும்பு மூடி இருக்கிறது. அதைத் திறக்க அந்தக் கடைக்காரன் வர வேண்டும். ஆனால் அவன் புத்தாண்டைக் கொண்டாட தன் இல்லத்திற்குச் சென்று விட்டான். அருகில் ஒரு தையற்காரன் கடை. அங்கு வரும் பல்வேறு மனிதர்களின் உரையாடல்களும் சுவையானவை.

அந்தக் கடைக்காரனுக்காகக் காத்திருக்கும் போது, சிறுமியிடம் ஒரு படை வீரன் பேச்சுக் கொடுக்கிறான். அயலாருடன் பேசக் கூடாதென்று தன் தாயார் கூறியிருப்பதாக அந்தச் சிறுமி கூறுகிறாள். அந்தப் படை வீரன் தனக்கும் அவளைப்போல சகோதரிகள் இருப்பதாகக் கூறுகிறான். பிறகு அவனும் சென்று விடுகிறான்.

அந்தச் சிறுமியும் அவள் சகோதரனும் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பணத்தை எடுக்க முடிய வில்லை. அப்போது ஒரு ஆஃப்கன் சிறுவன் பலூன் விற்றுக் கொண்டு வருகிறான். அவனிடம் ஒரு கம்பு. அதில் பல நிறங்களில் பலூன்கள் இருக்கின்றன. அவன் சிறிது நேரம் கழித்து அதே பகுதிக்கு வருகிறான். அவனிடம் அப்போது ஒரு வெள்ளை பலூன் மட்டுமே இருக்கிறது. அவனும் அந்தப் பணம் இருப்பதைப் பார்க்கிறான்.

அந்தச் சிறுமியின் அண்ணன், ஆஃப்கனிடம் கம்பை வாங்கி அதன் அடியில் பபிள் கம்மை ஒட்டி அந்தப் பணத்தை வெளியே எடுத்து விடுகின்றான். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் இருவரும் அவனுக்கு நன்றி கூட கூறாமல் ஓடி விடுகின்றனர். பின்னணியில் புத்தாண்டு வந்துவிட்டதற்கான இசை கேட்கிறது. கடைசி காட்சியில் அந்த ஆஃப்கன் சிறுவனும் அவன் வெள்ளை பலூன் கம்பு மட்டுமே தனித்திருக்கின்றன. இத்துடன் படம் நிறைவடைகிறது.

ஆஃப்கன் சிறுவன் ஈரானில் ஒரு அகதி. மற்றவர்கள் புத்தாண்டு கொண்டாடும் போது அவன் மட்டும் தனித்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடித்த சிறுமி 'அயிடா மொஹம்மத்கனி' மிகச் சிறப்பாக நடித்திருந்தாள் என்று சொல்வதை விட அந்தச் சிறுமியாகவே வாழ்ந்திருந்தாள் என்று கூறுவதுதான் பொருத்தம்.

இந்தப் படத்தின் கதையை எழுதியது, ஈரானின் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் 'அப்பாஸ் கியரோஸ்தமி'. இவர் ஒரு புரட்சிகர இயக்குனர்.

இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1995. கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது.

கண்டிப்பாக இந்தப் படத்தை வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

Friday, November 28, 2008

தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்

குண்டு வெடிப்புகளும் தீவிரவாதத் தாக்குதல்களும் தொடர்கதையாகிவிட்ட இன்றைய நிலை மிக மிக கவலைக்கிடமானது. இது எந்த விதத்திலும் நம்மைப் போன்ற வளரும் நாட்டிற்கு அதுவும் சீனா போன்ற மிகப் பெரிய சக்தியோடு போட்டியிடும் நாட்டிற்கு நல்லதல்ல.

கடந்த வாரம் தான் அமெரிக்காவின் உளவுத் துறை 2030ல் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப் பெரிய சக்திகளாக உருவெடுக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இத்தகைய தீவிரவாதத் தாக்குதல் பல்வேறு ஊகங்களுக்கு இடம் கொடுக்கிறது.

தாக்கப்பட்ட இடம் பொது மக்கள் கூடும் இடம் அல்ல. வெளி நாட்டினரும், உயர் வர்க்கத்தினரும் உலாவும் இடம்.

மும்பையின் முக்கியச் சின்னங்களாகத் திகழ்கின்ற இடங்கள். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமாபாத்தில் ஒரு ஹோட்டல் தகர்க்கப் பட்டது நினைவிருக்கலாம்.

இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் 'பாரதம் தன்னையே காத்துக் கொள்ளத் தெரியவில்லை' என்ற அவப் பெயர் ஏற்படக் காரணமாகிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர தரம் வாய்ந்த வல்லுனர்கள் இருந்தால் மட்டும் போதாது. மலிவான விலை இருந்தால் மட்டும் போதாது. பாதுகாப்பும் நிம்மதியும் வேண்டும்.


இது தான் இன்றைய முக்கியமான தேவை. இதற்கு எத்தகைய ஏற்பாடுகளையும், செக்யூரிடி செக் முதலிய சிறு சிறு சிரமங்களையும் ஏற்றுக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் அருமையாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மும்பை காவல்துறையினருக்கும், கமாண்டோக்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுகளும் உரித்தாகும்.

ஆகவே, இந்தியர் அனைவருக்கும் தேவையானது - 'பாதுகாப்பான பாரதம் - வலிமையான பாரதம்'

ஜெய் ஹிந்த்.

Wednesday, November 26, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...7

அத்தியாயம் 7 - திட்டம்

மாலிக் கஃபூர் என்ற பெயரைக் கேட்டதும் இளவழுதியும், வீரபாண்டியனும் வாயைப் பிளக்கக் காரணமிருந்தது. அந்தக் காலத்தில் தில்லி சுல்தானின் படைத்தளபதியான மாலிக் கஃபூர் ஏற்கனவே ஒரு முறை தேவகிரி யாதவர்களைச் சிறை பிடித்துச் சென்றவன். ஆகவே அனைத்துத் தென்னிந்திய அரசுகளுக்கும் அவனிடம் ஒரு வித வெறுப்பும் எதிர்ப்பும் நிறைந்திருந்தன. அத்தகைய வேண்டா விருந்தாளி ஏன் இங்கு வரவேண்டும்? அதுவும் சுந்தர பாண்டியனுடன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி இருவர் மனதிலும் எழுந்தது.

மேலும் தொடர்ந்த மாராயர், 'அவர்கள் இருவரும் இந்தப் பக்கம் வந்ததோடல்லாமல் எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்' என்று அன்று நடந்த நிகழ்ச்சியை அசை போடலானார்.

=====

அங்கு அழைத்து வரப்பட்ட இருவரிடம் தென்பட்ட களைப்பும், அவர்களின் கிழிந்த உடையும் பல நாட்கள் சரியான உணவு உட்கொள்ளாமலும், வேறு உடை தரிக்காமலும் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியது.

மாலிக் கஃபூர் நல்ல தேகக்கட்டுடன் இருந்தாலும் அவனது உயரம் அவனை ஒல்லியாகக் காட்டியது. முகத்தில் கடுமையைத் தேக்கி நின்றாலும் பெண்மையின் நளினம் அவன் முகத்தில் அவ்வப் போது தாண்டவமாடியது. (மாலிக் கஃபூர் ஒரு திரு நங்கை). அவன் பிறப்பால் இந்து. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாகச் சேர்ந்து அவரது நேசத்தைப் பெற்று இஸ்லாத்தைத் தழுவியவன். மாலிக் கஃபூரின் திறமையைக் கண்ட அலாவுதீன் கில்ஜி அவனை படைத் தளபதியாக நியமித்து தக்காணத்தைப் பிடிக்க ஆணையிட்டார். அதைச் சிரமேற்கொண்டு தேவகிரியை அப்போதுதான் பிடித்திருந்தான் மாலிக் கஃபூர்.

சரியான உயரமும் அருமையான தேகக் கட்டும் படைத்த சுந்தர பாண்டியன் பெயருக்கேற்றார் போல் நன்றாகவே இருந்தான். மேலுக்குப் புன்முறுவலோடு அமைந்திருந்த அவன் முகத்தில் ஒருவித அமைதியின்மையும், குரோதமும் தாண்டவமாடியதைக் கவனிக்கத் தவறவில்லை மாராயர். கொல்லிமலை எல்லையில் வழி தெரியாமல் இருந்த இவர்களை இங்கு அழைத்து வந்தனர் மலை மக்கள். அவர்களுக்கு மாராயர் என்றால் நல்ல மரியாதை. ஆனால் இவர்கள் தான் மாலிக் கஃபூர் மற்றும் சுந்தர பாண்டியன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

'தங்களைப் பார்த்தால் வடதேசத்தவர் போல் தெரிகிறதே' என்று வினவினார் மாராயர்.

'ஆம் நான் வட தேசத்தவன் தான்' என்றான் மாலிக் சுத்தத்தமிழில்.

'நான் வட தேச யாத்திரை செய்து விட்டு வரும் வழியில் இவரை சந்தித்தேன். இவர் தென் தேச யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். நாங்கள் இருவரும் சில காலம் பழகியதில் என் மொழி அவருக்கும் அவர் மொழி எனக்கும் பழகி விட்டது. நாங்கள் மதுரை செல்ல எண்ணியிருந்தோம். நானும் இவரும் கொல்லிமலை வழியாக வரும் பொழுது வழி தவறி விட்டோம். ஒரு நாள் எங்கள் குதிரைகளும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டன. ஒரு வாரமாக மலையில் திரிந்த பின் இந்த மலை மக்கள் உங்களிடம் எங்களைச் சேர்த்தனர். தற்போது மிக அவசரமாக நாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டும். எங்களுக்கு மாற்று உடைகளும் குதிரைகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பணத்தைப் பற்றிக் கவலையில்லை' என்றான் சுந்தர பாண்டியன் அதிகார தோரணையோடு.

கேட்பது உதவியாயினும் இப்படி அதிகாரமாகக் கேட்டது மாராயருக்குப் பிடிக்கவில்லை. மனதிற்குள் கருவிக்கொண்டே, 'அதனாலென்ன. அப்படியே செய்து விடலாம். இருவரும் மிகவும் களைத்திருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டு செல்லலாமே.' என்றார்.

அனைவரும் அவ்வாறு கூறவே, பாண்டிய இளவலுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அவ்வூரின் முக்கியச் சத்திரத்தில் ஸ்நானபானங்களை முடித்துக் கொண்டு குதிரைக்காகக் காத்திருந்தனர் இருவரும். அவர்களுக்கு வேறு ஏதாவது தேவையிருக்குமா என்று அறிந்துவர தேன்மொழியை அனுப்பினார் மாராயர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த தேன்மொழி, உள்ளிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் மாலிக், மதுரை, சுந்தரன் என்ற பெயர் அடிபடவே சற்று நிதானித்தாள். அவர்கள் பேசுவதைக் கேட்கக் கேட்க அடக் கடவுளே, இது என்ன சோதனை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் பேசியது இது தான்.

'சுந்தரா, இப்போது கிளம்பினால் மதுரையை எப்போது அடையலாம்?'

'எங்கும் நிறுத்தாமல் சென்றால், ஐந்து ஜாமத்திற்குள் சேர்ந்து விடலாம்'

'மதுரையில் அதிக காலம் தங்க முடியாது சுந்தரா. இங்கு கொல்லி மலையில் சுற்றியதில் நமது திட்டத்தையெல்லாம் மாற்றவேண்டும் போலிருக்கிறதே.'

'கொல்லிமலை விஜயம் ஒருவிதத்தில் நன்மை என்றுதான் சொல்லவேண்டும் மாலிக். இது போன்ற ஒரு இடம் நமக்கு கடவுளாக அமைத்துக் கொடுத்தது. ஒரு வேளை நமது திட்டம் பாழ்பட்டால், நாம் வர வேண்டிய இடம் இதுதான்'

'உன் சகோதரன் எப்போது மதுரை வருகிறான்? அதற்குமுன் நம் காரியம் முடிய வேண்டும்'

'அவன் விஜயதசமிக்குப் பின்னர்தான் வருவான். அதற்குத்தான் இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே. ஏன் வீணில் அவசரப் படுகிறாய்?'

'இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'

'நீ வீணில் கற்பனை செய்கிறாய் மாலிக். இங்கிருப்பவர்கள் வட நாட்டவர் போல் அல்ல. இங்கு எண்ணித் துணிக கருமம் என்பதில் எண்ணுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள். நான் தான் சற்று வேறு பட்டவன்'

'சரி, மொத்தத்தில் நமது திட்டத்தை மீண்டும் ஒருமுறை விவாதிப்போம். எனக்கு தக்காணத்தில் அமைந்துள்ள ஹொய்சளர்களையும், காகதீயர்களையும் அடக்கி, சுல்தானிய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கட்டளை. இதில் காகதீயர்களை ஓரளவு அடக்கி விடலாம். ஹொய்சளர்கள் இரு அரசுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களில் உன் சகோதரனுடன் பயிலும் வீர வல்லாளனுக்கு தமிழகத்தின் மேல் எப்போதும் ஒரு கண். உன் பாட்டனார் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், ஹொய்சளத்திற்கே சென்று ஆட்சி புரிந்தாரல்லவா?


எனவே, மதுரையில் உன் ஆட்சியைத் துவக்கு. மதுரை பலவீனமடைந்தது போல மேலுக்குத் தோற்றத்தை ஏற்படுத்து. இதுதான் தருணமென்று வல்லாளன் இங்கு படையெடுத்து வருவான். அவனது வடக்கு எல்லை பலவீனப்படும். அது போதும் எனக்கு. அவனது பங்காளி அரசை அழித்து விட்டு, தக்காணத்தில் சுல்தானிய அரசை நிறுவி விடுவேன். அது மட்டுமல்லாமல் அவன் பின்னாலேயே தொடர்ந்து வந்து நசுக்கி விடுகிறேன். '

'மொத்தத்தில் மதுரை எனக்கு, தக்காணம் உனக்கு' - என்று எள்ளலாகச் சொல்லிச் சிரித்தான் சுந்தர பாண்டியன்.

அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டான் மாலிக் கஃபூர்.

(தொடரும்)

Tuesday, November 25, 2008

பண வீக்கம் - பணத்தின் மதிப்பு, சேமிப்பு, முதலீடு

பணவீக்கம் என்பது விலையேற்றத்தில் ஏற்படும் மாற்றம் என்று முன்னர் பார்த்தோம். இதன் இன்னொரு பரிமாணம் பணத்தின் மதிப்பு வீழ்வது.

உங்களிடம் ரூ.100 உள்ளது. அதை வைத்து ரூ.100 மதிப்புள்ள பொருட்கள் வாங்கலாம். அடுத்த வருடம் 8% பணவீக்கம் காரணமாக அதே பொருட்களை வாங்க உங்களுக்கு ரூ.108 தேவைப்படும். அல்லது உங்களிடம் இருக்கும் ரூ.100க்கு குறைந்த பொருட்களே வாங்க முடியும். ஆக ஒரு வருடத்தில் உங்கள் ரூ.100-ன் மதிப்பு ரூ.92 ஆகக் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் பணவீக்கம் தான்.

ஒரு வேளை நீங்க்ள் இந்த ரூ.100-ஐ வங்கியில் 10%க்கு வைப்புத்தொகையாக வைத்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு ரூ.110 கிடைக்கும். இதில் பணவீக்கத்தின் தாக்கம் ரூ.8 போக மீதி ரூ.2 தான் உண்மையான வருமானம். இதை Inflation Adjusted Rate of Return என்பார்கள்.

உண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் தொகைக்கு இப்போது வட்டி 8 .5% வழங்கப் படுகிறது. இன்றைய பணவீக்க நிலையில் நிகர ஐ.ஏ.ஆர்.ஆர். பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். முன்பு 12% வட்டி வழங்கப் பட்டு வந்த போது பணவீக்கத்தின் தாக்கம் அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது.

அடுத்த முறை நீங்கள் ஏதாவது முதலீடோ சேமிப்போ செய்யும் போது இந்த ஐ.ஏ.ஆர்.ஆர்.-ஐ நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

===

சேமிப்பும் முதலீடும்

நிறைய பேருக்கு சேமிப்புக்கும் முதலீட்டிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. அடுத்து வரும் மூன்று அடிப்படைத் தன்மைகளின் அளவைப் பொறுத்து அது சேமிப்பா, முதலீடா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1. Liquidity - உடனடியாக அதே அளவு பணமாக மாற்றக் கூடிய தன்மை.
2. Safety - முதலுக்கே மோசமில்லாத நிலை.
3. Return - திரும்ப வரும் லாபம்.

பணமாக நீங்கள் உங்கள் வீட்டிலோ, லாக்கரிலோ வைத்திருந்தால் அதிக பட்ச லிக்விடிடி, சேஃப்டியும் ரிடர்னும் கிடையாது.

வங்கி வைப்புத் தொகையாக வைத்திருந்தால் - தேவையான போது மாற்றிக் கொள்ளலாம். நல்ல வங்கியாக இருந்தால் சேஃப்டி உண்டு. ரிடர்ன் குறைவுதான்.

ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், லிக்விடிடியும் சேஃப்டியும் மிகக் குறைவு. ரிடர்ன் அதிகம். ரிஸ்கும் அதிகம். இதைத்தான் Risk Return Trade Off (Higher the Risk Higher the Return) என்று கூறுவார்கள்.

நிலமாக முதலீடு செய்தால் லிக்விடிடி மிகக் குறைவு. சேஃப்டி அதிகம். ரிடர்ன் உடனடியாகக் கிடைக்காது.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மட்டுமல்லாமல் அரசாங்கங்களும் விரும்பி முதலீடு செய்யும் பொருள் 'தங்கம்'. தங்கத்தைப் போல ஒன்று முதலீட்டிற்கும் சேமிக்கவும் ஏற்ற பொருள் இதுவரை ஏற்படவே இல்லை என்று கூறலாம்.

அடிப்படையாக நமக்கு லிக்விட் கேஷ் தேவைப்படும். அதற்கு, தங்கமாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ ஒரு பகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். இது நம்முடைய 6 மாத பணத்தேவையின் அளவில் இருப்பது நல்லது.

அடுத்து முதலீடு. நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம் அல்லது நிலமாக வாங்கிப் போடலாம். ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் நுழைய உங்களுக்கு அடிப்படைத் தேவை, முதலீடு முடிவுகளை நீங்களாக எடுப்பது. ஒரு கேள்வி பதில் ஃபோரத்தில் ஒரு ருசிகரமான கேள்வி பதில் கீழே.

கேள்வி: நான் ரிலையன்ஸ் இன்ஃபோவை ரூ.860க்கு வாங்கினேன். இப்போது ரூ.450ல் இருக்கிறது. இப்போது விற்கலாமா?

பதில்: நீங்கள் ரூ.860ல் ஏன் வாங்கினீர்கள்? இப்போது ரூ.450க்கு ஏன் விற்கப் பார்க்கிறீர்கள். இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை தெரியாவிட்டால் நீங்கள் ஷேர் மார்க்கெட் பக்கம் வழி தவறி வந்து விட்டீர்கள்.


இன்னும் தொடர்வோம்.

Wednesday, November 19, 2008

சக்கர வியூகம் - ஒர் அறிவிப்பு

சக்கரவியூகம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வாரம் அழுத்தும் பணிச்சுமைகளால், இன்று வெளிவர வேண்டிய சக்கர வியூகத்தின் அடுத்த அத்தியாயம் வெளியிட முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.

அடுத்த வாரம் இரு அத்தியாயங்களாக வரும்.

நன்றி.

Tuesday, November 18, 2008

2605/06 பல்லவன் சூப்பர் பாஸஞ்சர்

பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்பது பெயர். திருச்சிக் காரர்களுக்கு பல்லவன் என்றாலே ஒரு கெத்து. ஆரம்பிக்கும் போது நாலே நிறுத்தங்கள். படிப்படியாக உயர்ந்து இப்போது வெற்றிகரமாக 10 நிறுத்தங்களைக் கொண்டு மெதுவாக / லேட்டாகச் செல்கிறது பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ்


தற்போது இந்தவண்டி நின்று செல்லும் நிறுத்தங்கள்.

1.தாம்பரம்
2. செங்கல்பட்டு
3. மேல்மருவத்தூர்
4.விழுப்புரம்
5.விருத்தாசலம்
6.அரியலூர்
7.லால்குடி
8.ஸ்ரீரங்கம்
9.கோல்டன் ராக் (சென்னையிலிருந்து வரும்போது), மாம்பலம் (திருச்சியிலிருந்து செல்லும்ப் போது)
10. திருச்சி சந்திப்பு.

தின்டிவனம் கூடிய விரைவில் சேர்ந்துவிடக்கூடும். பெண்ணாடம், கல்லக்குடி பழங்காநத்தம் (டால்மியாபுரம்) ஆகியவையும் காலப் போக்கில் சேரலாம்.இவை இல்லாமல் ஒருவழிப் பாதை என்பதால் க்ராசிங்கிற்காக பல இடங்களிலும் நிறுத்தப்படுகிறது.

அட்டவணைப்படி ஐந்தரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றுவிடும் என்று போடப்படுகிறது. பெரும்பாலும் 6 முதல் ஆறரை மணி நேரம் ஆகி விடுகிறது.

எனவே, இரயில்வே துறைக்கு இப்படி ஒரு லெட்டர் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.

அன்புள்ள இரயில்வேத்துறைக்கு,

இப்பவும் பல்லவன் எக்ஸ்ப்ரசின் நிறுத்தங்கள் அதிகரித்துள்ளது தாங்கள் அறிந்ததே:(. இது பயணியர் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவாக இருக்கலாம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் இதை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்று கூறிக்கொண்டு கூடுதலாக சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் வசூலிப்பது சரியில்லை.

தயவு செய்து பல்லவன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரசை சாதா எக்ஸ்ப்ரசாக மாற்றி, சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் (ரூ 10 ஐ) எங்களுக்குத் திருப்பிக் கொடுத்தால், உங்கள் பெயரைச் சொல்லி ஒரு பொண்டா டி (BONDA & TEA) ஐ.ஆர்.சி.டி.சி. கேன்டீனிலேயே சாப்பிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் கொடுத்து
பல்லவன் பாசஞ்சரில் பயணிப்போர் சங்கம்:(((

இதில் ஏதாவது சேர்க்க வேண்டுமா, நீக்க வேண்டுமா? சொன்னா பண்ணிடலாம்.;-)

Sunday, November 16, 2008

ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?

தோழர் வினவு, ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற அவரது நட்சத்திரப் பதிவில், ஐ.டி.துறையில் தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவிற்குப் பின்னூட்டமிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த சிந்தனைகள் ஒரு முழுப் பதிவிற்குண்டான செய்திகளை அளித்ததால் இந்தப் பதிவு.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.

அவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும்?. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.

முதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?

தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.

இத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.

2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.

இது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.

4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.

ஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.

5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.

இது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.


கலெக்டிவ் பார்கெய்னிங்

மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.

ஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.

தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.


இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.


ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.

இந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Friday, November 14, 2008

பணவீக்கம் - ஒரு அறிமுகப் பதிவு

பணவீக்கம் (Inflation) 8.98% ஆகக் குறைந்தது. இது செய்தி. ஆனால் விலைவாசி எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லையே. இதற்குப் பணவீக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கம் என்பது கன்ஸ்யூமர் ப்ரைஸ் இன்டெக்ஸ்(CPI)-ல் ஏற்படும் மாற்றத்தின் அளவாகும். உதாரணமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் வெய்ட்டேஜ் சேர்ந்து ஜனவரி 2007ல் 100 என்று வைத்துக் கொள்வோம். ஜனவரி 2008ல் அது 105 ஆக உயர்ந்தால், பணவீக்கம் 5% என்று அர்த்தம். (105-100/100). இதுவே, ஜனவரி 2009ல் 108 ஆக உயர்ந்தால் பணவீக்கம் 2.87% (108-105/105) என்று அர்த்தம்.


மொத்தத்தில், பண வீக்கம் 5 சதவீதத்திலிருந்து, 2.87 சதவீதமாகக் குறைந்துள்ளது. நியாயமாகப் பணவீக்க விகிதம் குறைந்துள்ளதற்கு சந்தோஷப் படவேண்டும். ஆனால் சி.பி.ஐ 105 லிருந்து 108ஆக உயர்ந்துள்ளதைக் கவனிக்க வேண்டும். அதாவது, விலை கூடியுள்ளது, பணவீக்கம் குறைந்துள்ளது.

ஏதாவது ஒரு சில பொருட்களின் விலை குறையலாம். உதாரணமாக தற்போது, கச்சா எண்ணை மற்றும் உருக்கின் (ஸ்டீல்) விலை கணிசமாகக் குறைந்துள்ளன. ஆனாலும் மற்ற மக்கள் நேரடியாக உபயோகப் படுத்தும் பொருட்களின் விலை அதிகமாக ஏறி பணவீக்கத்தை ஒரு அளவில் வைத்துள்ளது.

உண்மையில் பணவீக்கம் குறைவதால் விலைகள் குறைவதில்லை. விலையேற்றத்தின் வேகம் தான் குறைகிறது. உதாரணமாக நீங்கள் வண்டியில் 60 கி.மீ. வேகத்தில் செல்கிறீர்கள். திடீரென்று வேகத்தை 40 கி.மீ.க்குக் குறைக்கிறீர்கள். இதனால் வண்டியின் வேகம் குறைகிறதே ஒழிய, வண்டி பின்னோக்கிச் செல்லவில்லை அல்லவா. இது போலத்தான் பண வீக்கமும், விகிதம் குறையும் போது விலையேற்றத்தின் வேகம் குறைகிறதே தவிர விலை குறைவதில்லை. விலையேற்றத்தின் வேகம் ஏறும் போது, பணவீக்கமும் அதிகரிக்கிறது.

பணவீக்கம் எதனால் வருகிறது?

பண வீக்கம் கீழ்கண்டவாறு வரலாம்.

1. தேவை - தட்டுப்பாடு:- இது ஒரு முக்கியக் காரணி. ஒரு குறிப்பிட்ட பொருளுக்குத் தேவை அதிகரிக்கும் போதோ, தட்டுப்பாடு ஏற்படும் போதோ, விலையேற்றம் தவிர்க்க முடியாதது. இது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. கட்டுப் படுத்தப் பட்ட பொருளாதாரத்தில் இதன் தாக்கத்தை உணர முடியாது. பதுக்கல், கள்ளச் சந்தை ஆகிய வற்றால் தட்டுப் பாட்டை உருவாக்க முடியும்.

2. மூலப் பொருட்களின் விலையேற்றம்:- ஒரு பொருள் தயாரிக்கத் தேவைப் படும் மூலப் பொருட்களின் விலை ஏறும் போது, அந்த விலையேற்றத்தை அப்படியே நுகர்வோருக்கு மாற்றுவதுதான் உற்பத்தியாளர்களின் வாடிக்கை. இதன் மூலமாக விலை ஏறி பணவீக்கம் அதிகரிக்கும்.

3. அடிப்படை விலையேற்றம்:- காலப் போக்கில் சாதாரணமாக ஒரு பொருளுக்கு வருடாவருடம் எது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் விலையேற்றுவது என்பது ஒரு வாடிக்கையாக இருக்கும். இது தொழிலாளர் ஊதிய உயர்வு, நிர்வாகச் செலவு, லாப விகித அதிகரிப்பு ஆகிய காரணங்களுக்காக செய்யப்படுவது. இதுவும் விலையேற்றத்திற்கு அடிகோலுகிறது.

4. பணப் புழக்கம் அதிகரிப்பு:- இது மற்றுமொரு முக்கியக் காரணமாகும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும் போது, வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. இதைப் பயன் படுத்தி விற்பவர்கள் அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். அல்லது விற்பவர்கள் அதிக விலை உள்ள பொருட்களையே சந்தையில் வைக்கின்றனர். உதாரணமாக, சென்னையில் இருந்து, திருச்சிக்கு அரசுப் பேருந்தில் சாதாரண கட்டணம் 105 ரூபாய். சொகுசுப் பேருந்தில் 175 ரூபாய். குளிர்சாதனப் பேருந்தில் 275 ரூபாய். இவை அனைத்தும் அரசுப் பேருந்து கட்டணங்கள். இப்போது பார்த்தீர்களானால், சொகுசுப் பேருந்துகள் தான் அதிகமாக இயக்கப் படுகின்றன. சாதாரணப் பேருந்துகளின் பராமரிப்பு சரியாக இல்லாத காரணத்தால் அவற்றில் மக்கள் பயணிப்பதும் குறைவாக இருக்கிறது. சொகுசுப் பேருந்தில் பயணிப்பதற்குப் பெரும்பாலோர் தயங்குவதில்லை. இதனால் ரூ.105 ஆக இருந்த போக்குவரத்துச் செலவு, ரூ.175 ஆக அதிகரித்து விட்டது.

மற்றொன்று, ஆட்டோ கட்டணம். முன்பு ஒரு விவாதம் வந்தது போல், ஐ.டி. துறையில் பணியாற்றும் நண்பர்கள், எவ்வளவு கட்டணம் கேட்டாலும் கொடுத்துவிடத் தயாராக இருந்தார்கள். (இப்போது எப்படி என்று தெரியவில்லை). ஏனெனில் அவர்களிடத்தில் இருக்கும் பணப் புழக்கம் காரணமாக, 50 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கும் பெரிய வித்தியாசத்தை அவர்களால் காணமுடிவதில்லை. இது மறை முகமாக விலையேற்றத்திற்கு அடிகோலுகிறது. இதை மற்ற விஷயங்களான, காய்கறிகள், வீட்டு வாடகை முதலியவற்றிற்கும் சுட்டிக் காட்டலாம். பெரும்பாலும், கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் போது (ஐ.டி, ஃபைனான்ஸ், கன்சல்டிங் முதலான துறைகளில்), செலவு செய்வதைப் பற்றி கவலையே படுவதில்லை. பேரமும் பேசுவதில்லை. இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

5. கள்ளப் பணம் / கருப்புப் பணம்:- பணப் புழக்கத்தைக் கட்டுப் படுத்த பாரத ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். வங்கிகளின் மூலமாகத்தான் பணம் மக்களிடத்தில் நடமாடுகிறது என்பதால், வங்கிகளின் சி.ஆர்.ஆர். போன்றவற்றை அதிகப் படுத்தி, பணப் புழக்கத்தைக் குறைக்கும். ஆனால், கள்ளப் பணம் உலாவுவதால், பணப் புழக்கம் அதிகமாக இருப்பது போன்ற நிலை ஏற்படுகிறது. இதே போலத்தான் கணக்கில் வராத கருப்புப் பணமும். ரிசர்வ் வங்கியின் வட்டத்திற்குள் வராத இவ்விரண்டு வகைகளும் விலையேற்றத்திற்குக் காரணிகளாக அமைந்து விடுகின்றன.

அரசு ஊழியர்களுக்கு விலையேற்றத்திற்கு ஏற்ற வாறு அகவிலைப் படி (டி.ஏ.) உயர்த்தி அளிக்கப் படுகிறது. தற்போது கூட 7% உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.

பணவீக்கம் நல்லதா கெட்டதா? பணவீக்கத்தின் போது பணத்தின் மதிப்பு என்ன? முதலீடும் குறைந்து, பண வீக்கமும் அதிகரிக்கும் போது நமது சேமிப்பின் கதி என்ன?

இவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில்.

முடி(அறி)வுரை:- உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

Wednesday, November 12, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...6அத்தியாயம் 6: இருவர்


கோவிலில் இருந்து திரும்பிய இளவழுதியின் மனதில் நிரம்பி நின்ற சொல்லவொண்ணாத் துயரத்தையும், கவலையையும் கட்டுப்படுத்த மிகவும் சிரமப் பட்டான். தேன் மொழியின் வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப அசைபோட்டும், முழுமையான நிலையை அவனால் கணிக்க முடியவில்லை. இனி யோசிப்பதில் பலனில்லை. தந்தையைக் கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவிற்கு வந்தவன் சரியான தருணத்தை எதிர் நோக்கி இருந்தான். அது தானாகவே வந்து விழும் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை.


இரவு போஜனத்திற்குப் பின் பெண்கள் தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட சோழமாராயர், இளவழுதி, வீர பாண்டியன் ஆகியோர் அவன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பௌர்ணமிக்கு இன்னும் ஒரு நாளே இருந்ததால் வானில் புரட்டாசி நிலவு தகதக வென மின்னியது. ஆகவே அவர்கள் எந்தவொரு விளக்கையும் பயன் படுத்தாமல் அமர்ந்திருந்தனர். மற்றவருடைய முகம் தெரிந்தாலும் அவர்களது உணர்ச்சிகளின் பாவம் தெரியாத வகையில் நிலவின் ஒளி அமைந்திருந்தது.


மாராயர் தான் முதலில் ஆரம்பித்தார்.

'இந்தப் பவுர்ணமி நிலவுதான் எவ்வளவு வெளிச்சத்தைத் தருகிறது? ஆனாலும் பொருட்கள் மங்கலாகத் தான் தெரிகின்றன. இதற்குத்தான் பெறுவதை நேராகப் பெற வேண்டுமென்றார்கள் பெரியோர்கள். சூரிய வெளிச்சம் இவ்வாறு குறைவாக இருக்குமா?'

'எப்போதும் ஒன்றே போல் இருந்தாலும் நன்றாக இருக்காதல்லவா? நிலவின் குளுமையும் தேவை. சூரியனின் வெளிச்சமும் தேவையென்றால் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தால் தான் உண்டு' என்றான் வீரபாண்டியன்

'எத்தனையோ கண்டுபிடித்தவர்கள் இதையும் கண்டுபிடிக்காமலா போய்விடப் போகிறார்கள்? எப்போது என்பதுதான் கேள்வி?' என்ற மாராயர் 'ஆமாம் உங்களிடத்தில் சரியாகவே பேச முடியவில்லை. கடிகையில் என்னென்ன கற்றுக் கொண்டீர்கள்.?' என்று வினவினார்.

இதற்கு இளவழுதி பதில் கூறாமல் போகவே, வீர பாண்டியன், 'முதலில் அனைவருக்கும் இலக்கியம், இலக்கணம், அர்த்த சாஸ்திரம், ஜோதிஷம், வான சாஸ்திரம், கீதை, ராமாயண மகாபாரதங்கள், தர்க்க சாஸ்திரம் ஆகியவை பயிற்றுவிக்கப் பட்டன. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கு பயின்றோம். பிராகிருதம், பாலி முதலிய மொழிகளின் வரி வடிவங்களைத் தெரிந்து கொண்டோம். பெர்சிய மொழியின் அடிப்படைகளை முதல் முறையாக எங்களுக்குப் பயிற்றுவித்தனர். ஓவியம், இசை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றோம்.

பிறகு, அரச வாரிசுகள் மற்றும் அரசியலில் ஆர்வமும் தகுதியும் உடையவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து, பாரத கண்டத்தின் அரசுகள், ராஜ தந்திர விவகாரங்கள், போர் முறையில் கையாள வேண்டிய தந்திரங்கள், படைகளை நடத்த வேண்டிய முறைகள், வியூகங்களின் அமைப்புகள், புரவி சாஸ்திரம் முதலியவைகளைப் பயிற்றுவித்தனர். இவற்றோடு, தினமும் காலையில் உடற்பயிற்சியுடன் யோகாசனமும், தியானமும் கற்றுத் தரப்பட்டன. மாலையில் வாள், வேல் பயிற்சி, மல்யுத்தம் ஆகியவைகளுடன் மலை நாட்டு பட்டதிரிகள் மூலம் களரியும், வர்மமும் பயின்றோம்.
இறுதி நாளன்று, எங்களுக்கு ப்ரதானாசாரியாரான பாஸ்கராசாரியார்...'

'நல்வாழ்த்துகளைத் தெரிவித்து எங்கள் பயிற்சியை சாஸ்த்ரோக்தமாக முடித்து வைத்தார்' என்று மறித்தான் இளவழுதி.

சக்கர வியூகம் பற்றி சொல்ல வந்த வீரபாண்டியனைத் தடுத்ததோடல்லாமல் எதுவும் சொல்லவேண்டாமென்று அவனைத் தொட்டு சைகை மூலம் உணர்த்திய இளவழுதி, 'அதனால்தான் எல்லா தேசத்திலிருந்தும் காஞ்சிக் கடிகைக்கு மாணவர்கள் படிக்க வருகிறார்கள்' என்று பேச்சையும் மாற்றினான்.

'ஆமாம். மிக விரிவாகத் தான் இருக்கிறது உங்கள் கல்வி.' என்று நிறுத்திய மாராயர், 'வீரா, நீ மதுரையிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான் இளவழுதி. இப்போதைய மதுரை நிலவரமென்ன? நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மைதானா? குலசேகரரைப் பற்றியும், சுந்தர பாண்டியனை பற்றியும் ஏதேதோ சொல்கிறார்களே. உங்களோடு படித்த வீரபாண்டியன் என்ன செய்கிறான்? ஹும்... எங்கள் காலத்தில், ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் எங்களையெல்லாம் அடக்கி ஆண்டார். மதுரையை மீண்டும் வளம் பெறச் செய்தார். அவர் காலத்திற்குப் பிறகு அவர் ஏற்றி வைத்த ஜோதி தொடர்ந்து வெளிச்சம் தரும் என்று நினைத்தோம். ஆனால் தற்கால நிலைமை மிகவும் சொல்லத்தரமற்றதாக இருக்கிறதாமே. பதவிச் சண்டையில் வீர பாண்டியனும், சுந்தர பாண்டியனும் இறங்கப் போவதாக வதந்தி நிலவுகிறதாமே? உனக்குத் தெரிந்ததைச் சொல்லேன்?' என்று வீர பாண்டியனை மடக்கினார்.

இவ்வளவு கேள்விகளுக்குப் பிறகு தான் வீர பாண்டியன் அல்ல என்று சொல்வதற்கு அவனால் முடியவில்லை.'ஐயா, என்னை மன்னியுங்கள். நான் தான் குலசேகரரின் மகன் வீரபாண்டியன். சிலபல காரணங்களுக்காக என்னை வெளிப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனவேதான் வேறு விதமாக அறிமுகப் படுத்திக் கொள்ள நேரிட்டது. எனினும் தங்களின் பார்வைக்குத் தப்ப முடியவில்லை.' என்றான்.

'வீரா, இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. உன்னைப் பார்க்கும் போது உன் பாட்டனாரின் சாயல் அப்படியே தெரிகிறதே. அதனால்தான் என்னால் கணிக்க முடிந்தது. மேலும், வேற்று மனிதனாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான ஒப்பனைகளைச் செய்து கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் திருந்தச் செய்ய வேண்டும் என்ற பாடத்தைக் கற்க வில்லையா? பரவாயில்லை. அடுத்த முறை இதை கவனத்தில் கொள்வாய் என்று நம்புகிறேன்' என்றார் சிரித்த வாறே.

'எல்லாம் அவளால் வந்தது' என்று தேன்மொழியை நினைத்து இளவழுதி சொன்ன போது, 'அப்படியானால் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறாயா வழுதி? இப்போதே இப்படியென்றால், திருமணத்திற்குப் பின் என்ன சொல்வாய்?' என்றார்.

'தந்தையே, ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள். அவள் உங்களிடத்தில் பயின்றவளாயிற்றே. உங்கள் திறமையில் பாதியாவது இருக்காதா?'

'வழுதி. உண்மையில் என்னையும், உன்னையும் ஏன் இந்த வீர பாண்டியனையும் விட அவள் கெட்டிக்காரி. உன்னிடத்தில் அன்று நடந்ததைச் சொல்லிவிட்டதாக என்னிடம் தெரிவித்து விட்டாள். அன்று அவள் சமயோசிதமாக நடந்து கொண்ட விதத்தினால் தான் இன்று நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.' என்றார் மாராயர்.

'இருவர் வந்ததாகச் சொன்னாளே ஒழிய யார் யார் என்று சொல்லாமல் விட்டுவிட்டாள்' என்றான் இளவழுதி.

இந்த விவரம் ஒன்றும் தெரியாத வீர பாண்டியன், 'என்ன நடந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா? அதில் தவறில்லை என்றால்' என்று வினவினான் குழப்பத்துடன்.

'நீதான் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். இதை எப்படி உன்னிடம் கூறுவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக நம் சம்பாஷனை இதில் இழுத்துக் கொண்டு வந்து விட்டது. கேள், வீர பாண்டியா. மதுரை சிம்மாசனத்தில் தற்போது அமர்ந்திருக்கும் உன் தந்தை தற்போது உடல் நலக் குறைவினால் அவதியுறுகிறார்' என்றார் மாராயர். இதைக் கேட்டதும் அதிர்ந்த வீர பாண்டியன், 'ஒருக்காலும் இருக்க முடியாது. கடந்த சித்திரைத் திருநாளன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னின்று நடத்தியதுடன் அழகர் மலையிலிருந்து, மதுரை வரை நடந்தே வந்தாரே. எங்களை விட வலிமையாக இருப்பதாக அனைவரும் கூறினார்களே. இது எப்படி சாத்தியம்' என்று புலம்பினான்.

'வீரா, அமைதியாகக் கேள். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படவில்லை. ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் உன் சகோதரன் சுந்தர பாண்டியன் தான். நீ மதுரை திரும்புவதற்குள், முடிசூடிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான். பட்டத்து இளவரசனாகவாவது அறிவித்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறான்' என்றார் மாராயர்.

'என்ன. மகனே தந்தைக்குத் தீங்கிழைப்பதா? நாமறியாத ஒன்றாக இருக்கிறதே' என்று வினவினான் இளவழுதி.

'சேராத இடந்தன்னில் சேர்ந்திட்டால் இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும். உன் தம்பியின் மற்ற ப்ரதாபங்களையும் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வா. நீயும் என் மகன் போலத்தான். நான் சோழர்களின் ஊழியனாக இருந்தவன். அந்த ஊழியத்தில் என் கையையும் இழந்தேன். ஆனால் இப்போது, சோழகுலம் இல்லை. ஆகவே, நான் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறேன். அன்றைய சம்பவங்கள் என்னை மீண்டும் அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வந்து விட்டன.

'கேளுங்கள் பிள்ளைகளே, இப்போது நம் கண்ணுக்குத் தெரிவது குலசேகரப் பாண்டியருக்கு ஏற்பட்டிருக்கும் நோய். இதன் பின்னணியில் இருப்பது வீர பாண்டியனுக்கு உள்ள ஆபத்து. மேலும் சுந்தர பாண்டியன் வலுவில் அழைத்துக் கொண்டு வந்திருப்பது தமிழகத்திற்கே ஏற்படப் போகும் பெரும் ஆபத்து.'

'ஆபத்து ஆபத்து என்கிறீர்களே ஒழிய முழுமையாகக் கூறவில்லையே' என்று ஆதங்கப் பட்டான் இளவழுதி.

'சொல்கிறேன் கேள் இள வழுதி. அன்று இங்கு வந்தவர்கள் இங்கு வரவேண்டும் என்று வர வில்லை. கொல்லி மலைக்கு வந்தவர்கள் வழி தவறி இங்கு வர நேரிட்டது. அல்லது புண்டரிகாக்ஷப் பெருமாள்தான் அவர்களை இங்கு வரச் செய்திருக்க வேண்டும். அவர்கள் யார் தெரியுமா? சுந்தர பாண்டியன் மற்றும் மாலிக் கஃபூர்.'

'மாலிக் கஃபூரா' ஒரே சமயத்தில் வாயைப் பிளந்தனர் இருவரும்.

(தொடரும்)


பின் குறிப்பு:- அத்தியாயங்கள் பெரிதாக இருப்பதாக எனக்குப் படுகிறது. வரலாற்று நாவல்களில் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. உங்கள் எண்ணத்தைப் பின்னூட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.

Monday, November 10, 2008

பணம்

அப்போதுதான் சி.ஏ.வில் சேர்ந்திருந்தேன். கோச்சிங்க் கிளாசில் காஸ்டிங்க் வகுப்பில் ஆசிரியர் எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்டார். மனிதனின் முக்கியமான கண்டுபிடிப்பு எது? What is the most significant invention of Man Kind?

நாம்தான் பொது அறிவுக் களஞ்சியம் ஆயிற்றே. உடனே, சக்கரம் என்று பதில் சொன்னேன். ஒரு லுக் விட்ட அவர், 'நாம் படிப்பது இஞ்சினியரிங் இல்லை, சி.ஏ. எனவே சம்பந்தா சம்பந்தமில்லாமல் யோசிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு விடையையும் கூறினார்.

'மனித இனத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு 'பணம்'. Money.'

நான் மனதிற்குள் 'இரண்டும் வட்டவடிவமானதுதானே. இரண்டிற்கும் ஒற்றுமை உண்டல்லவா? என்று நினைத்துக் கொண்டேன்.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்ச்சி பசுமரத்தாணி போல் பதிந்திருப்பதற்குக் காரணம் பணம் தான்.

பணம் வட்ட வடிவில் இருப்பதால் தான் 'ஓரிடந்தனிலே, நிலையில்லாதுலகினிலே, உருண்டோடிடும் பணம் காசென்னும் பொருத்தமான பொருளே' என்று ஒரு பழைய சினிமா பாடல் உண்டு.

முத்துவில் கூட தலைவர் ' கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு முதலாளி, கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு முதலாளி' என்று பாடியிருப்பார்.

அந்தப் பணத்தைப் பற்றியும் அதன் பல்வேறு அவதாரங்களான வெள்ளை, கருப்பு, ஹவாலா, வெளி நாடு முதலியவற்றையும், அதன் குணாதிசயங்களைப் பற்றியும் விரிவாக அலசும் முயற்சிதான் இந்தத் தொடர்.

பணம் எப்போது தோன்றியது?
பண்டமாற்று முறையில் இருந்த முறைகேடுகளைக் களையும் பொருட்டு தோன்றியதுதான் இந்தப் பணம். பணத்தைப் பற்றி சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆயினும் பணப் புழக்கம் மக்களிடத்தில் அதிகரித்தது பிரிட்டிஷார் வந்த பிறகுதான்.

பணத்தைப் பற்றி விரிவாக அலசுவோம் இனி வரும் நாட்களில். அதற்கு முன் கருப்புப் பணம் பற்றிய ஒரு 'டிட் பிட்'

அமெரிக்காவில் வீட்டுக் கடன் வாங்கியோர் திருப்பிச் செலுத்தாமல் வீட்டை விட்டு காலி செய்து விட்டு காரில் வாழ்கின்றனர் என்பது செய்தி. இது போல் இந்தியாவில் ஏன் நடைபெறுவதில்லை?

உதாரணமாக அமெரிக்காவில் ஒரு ஃப்ளாட்டின் விலை 2 லட்சம் டாலர் என்று வைத்துக் கொள்வோம். அங்கு எல்லாமே வெள்ளைதான். அவருக்கு வங்கி 85 முதல் 90 % வரை வீட்டுக் கடன் அளிக்கிறது. மீதமுள்ள 10 முதல் 15% விலைக்கும் பெர்சனல் லோன் முதலியவற்றை வாங்கி ஒருவர் மொத்தமாகக் கடனிலேயே வீட்டை வாங்கி விடுகிறார். கடன் தவணை கட்டமுடியாமல் போனால் வீட்டையே காலி செய்து விட்டு வெளியேறி விடுகிறார். இதுவரை கட்டிய தவணையை வாடகையாக நினைத்துக் கொள்கிறார். சொந்தப் பணம் அதில் ஒன்றுமில்லையே. இருந்தால் வீடு. இல்லாவிட்டால் ரோடு. இதுதான் அமெரிக்காவில் நடப்பது.

இப்போது இந்தியாவிற்கு வருவோம். ஒரு ஃப்ளாட்டின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் பத்திரத்தில் பதியும் விலை ரூ35 லட்சம் வரை இருக்கும். மீதி நெ.2ஆகத் தான் தரவேண்டுமென்பார்கள். வங்கிகள் இவற்றில் அதிக பட்சமாக 85% வரை கடன் அளிக்கின்றன. இதை 30 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். பெர்சனல் லோன் வகையில் மேலும் 3-4 லட்சம் வாங்கினாலும், ரூ.16 லட்சம் வரை தன் சொந்தக் காசை முதலீடு செய்கிறார் ஒருவர். ஆகவே ஒரு முறை கட்ட முடியாவிட்டாலும் எப்படியாவது சமாளித்துக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இங்கு இருக்கும். ஏனென்றால் சொந்தப் பணம் 33% சதம் வரை அதில் இருக்கிறதே. மேலும் மானப் பிரச்சனை வேறு. இதனால் தான் இந்தியாவில் வீட்டுக்கடன் 'டிஃபால்ட்' மிகவும் குறைவு. இதற்கு இந்தக் கருப்புப் பணமும் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.

நீங்க என்ன சொல்றீங்க?

மீண்டும் சந்திப்போம்.

Sunday, November 9, 2008

எதை எழுதுவது ?

என்னாடா இது, 25 பதிவுகள் எழுதுவதற்குள்ளாகவே எனக்கு இந்தக் கேள்வி தோன்றி விட்டதே.

நானும் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாய் இந்தப் பதிவுலகம் பக்கம் வந்து போய்க் கொண்டிருக்கிறேன்.

சிலருடைய பதிவுகளில் இது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.
சிலர் என்ன எழுதுவது என்று பதிவு போட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் கூட பதிவு போட முடியுமா என்று நினைத்ததுண்டு.

ஆனால் என்னுடைய கேள்வி வேறு விதமானது.

எனக்கு வந்திருக்கும் ப்ராப்ளம் என்னவென்றால், என்னிடம் பதிவெழுதுவதற்கு நிறைய ஸ்கூப் களும், கான்செப்ட் களும் இருக்கின்றன.

தமிழ் சினிமாக்களைப் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

சமீப காலமாக பல்வேறு உலகத் திரைப் படங்களைப் பார்த்து வருகிறேன். அவற்றைப் பற்றி பதிவெழுதலாம்.

நம் துறை சார்ந்த பதிவுகளாக நடப்புப் பொருளாதார நிலையும் இந்தியப் பொருளாதாரமும் என்று நிறைய எழுதலாம்.

தினசரி நாம் சந்திக்கும் பல்வேறு நபர்களைப் பற்றி சிறுகதைகள் எழுதலாம்.

அரசியலரங்கின் நிகழ்வுகளைப் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் பதிவு செய்யலாம்.

ஏதாவது எதிர் பதிவு போடலாம்.

இது போல நிறைய யோசித்து வைத்திருக்கிறேன்.

இவற்றில் எதை முதலில் எழுதுவது என்பது தான் என்னுடைய குழப்பம்.

சே.. எதையாவது எழுதணும் என்று எண்ணிக்கொண்டே ஒரு சில நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய் விடுகிறது.

சக்கர வியூகம் மட்டும், ஒவ்வொரு புதன் கிழமையும் வெளி வர வேண்டுமென்பதால் அது மட்டும் முடிந்து விடுகிறது.

எழுத எழுதத்தான் எழுத்தும் எண்ணமும் மெருகேறும் என்று எங்கேயோ படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளனாக வர தொடர்ந்து எழுத வேண்டும் என்பது பால பாடம்.

தினமும் ஒரு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்ற உறுதியோடு இந்தப் பதிவை முடிவு செய்கிறேன்.

Wednesday, November 5, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...5

அத்தியாயம் 5 - தேன் மொழி

அன்று விடியலுக்கு முன்னரே புறப்பட்ட வீர பாண்டியனும், இள வழுதியும், மிக வேகமாக திருவெள்ளரை நோக்கி புரவிகளில் பயணித்தனர். கார் காலத்தின் துவக்கமாதலால் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாலும் இளவழுதியின் கவனம் பேச்சில் இல்லை என்பதை வெகு சீக்கிரத்திலேயே கண்டுகொண்டான் வீர பாண்டியன்.

'என்ன இளவழுதி, கவனம் இங்கில்லை போலிருக்கிறதே'

'ஆமாம் வீரா, ஊரில் அனைவரும் எனக்காகக் காத்திருப்பார்கள் அல்லவா? அதுதான்'

'எனக்கென்னவோ வேறு மாதிரி தோன்றுகிறது' என்றான் புன்முறுவலுடன்.

மேலும் ஏதேதோ பேசிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே, இறுதியில் 'சரியாகக் கணித்துவிட்டாயே வீரா. ஆமாம் என் மாமன் மகளைப் பார்க்கும் அவசரம்தான்' என்றான் வழிந்தவாறே.

'அதுதானே பார்த்தேன். சரி அவளைப் பற்றி சொல். போகும் வழியில் அலுப்பாவது தெரியாமல் இருக்கும்'

'என்ன கிண்டலா.. இப்பொழுது ஒன்றும் சொல்லமாட்டேன். நீயே நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள். அங்கு இன்னொரு முக்கியமான நபரும் உள்ளார். அவரிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். அவரைப் பற்றியும் அங்கே வந்து தெரிந்து கொள்'

'என்ன வழுதி ஒரே புதிராக இருக்கிறதே. சரி சரி உன்னிஷ்டம்.' என்று நிறுத்திய பாண்டியன்

'வழுதி, உன் வீட்டினருக்கு நான் தான் வீர பாண்டியன் என்பது தெரியுமா?'

'என்னுடன் வீர பாண்டியன் பயிலுகிறான் என்பது தெரியும். ஆனால் உன்னை யாரும் பார்த்ததில்லை.'

'நல்லது. சில பல காரணங்களுக்காக என்னை வீர பாண்டியனாக அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆகவே என்னை மதுரை வணிகன் சாத்தனின் மகன் வீரன் என்று கூறிவிடு.'

சற்று யோசித்த இளவழுதி 'வீரா, நீ மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாய் என்று எண்ணுகிறேன். சரி, இனிமேல் நீ மதுரை வணிகன் சாத்தனின் மகன் வீரன்'

அதற்குப் பிறகு நண்பர்களுக்கிடையில் அதிக பேச்சுவார்த்தையிருக்கவில்லை. இளவழுதி மாமன் மகளின் நினைவுடனும், வீரன் மதுரை நிலையைப் பற்றிய சிந்தனையுடனும் மிகுதிப் பயணத்தைக் கழித்தனர்.

சரியாக மூன்றாம் நாள் காலையில் அவர்கள் திருவெள்ளரையை அடைந்தனர்.

====

திருவெள்ளரை சேந்தன் நக்கன் மாராயன் அப்பகுதியின் மிகப் பெரிய வேளாளர். மூன்றாம் ராஜராஜ சோழனின் படையில் பணி புரிந்ததற்காக மாராயன் பட்டம் பெற்றவர். மூன்றாம் ராஜராஜனின் கடைசிப் போருக்கு முந்தய காடவ கோப்பெருஞ்சிங்கனுடனான போரில்அவரது ஒரு கரம் துண்டிக்கப் பட்டிருந்தது.

சோழப் படையில் இருந்ததாலும், மிகப் பெரிய நிலக்கிழாராக இருப்பதாலும், அப்பகுதியில் சேந்தன் நக்கனுக்கு மிக நல்ல பெயரும், மரியாதையும் நிலவியது. திருவெள்ளரைக் கிழார் என்றும், சோழ மாராயன் என்றும் அறியப் பட்டவர். இவரது ஒரே புதல்வன் தான் நக்கன் இளவழுதி.

அன்று ஊருக்கு வந்த இளவழுதியை நலம் விசாரிப்பதிலும், அவனது அனுபவங்களைக் கேட்பதிலுமாக இருந்ததால் முதலில் யாரும் வீர பாண்டியனைப் பார்க்கவில்லை. அவனுக்கு அது நல்லதாகவே பட்டது. அனைவரையும் கவனிக்க முடிந்தது. சுற்றி முற்றும் பார்க்க முடிந்தது. அப்படிப் பார்க்கும் போதுதான் ஒரு சாரளத்தின் பின்னால் இரண்டு ஜோடிக் கண்கள் இளவழுதியைப் பார்ப்பதை அறிய முடிந்தது.

அது இளவழுதியின் மாமன் மகள் தேன்மொழியும், தங்கை கயல் விழியும் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை வீர பாண்டியனுக்கு.

சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்ட இளவழுதி, அனைவருக்கும் வீரபாண்டியனை, மதுரை வணிகன் சாத்தன் மகன் வீரன் என்று அறிமுகப் படுத்தினான். அவன் தந்தையும், தேன்மொழியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திய பின், 'எங்கள் இல்லத்தின் முக்கியமான நபர் இவர்தான். பெயர் கயல்விழி. என் தங்கை. மற்றதெல்லாம் போகப் போகத் தெரிந்துகொள்வாய். இவளுக்குத் திருமணம் செய்துவிட்டால் எங்களுக்கு விடுதலை. இவளை மணப்பவன்தான் பாவம்.' என்றான் கிண்டலுடன்.

'அண்ணா, அவரைப் பார்த்தாலே நீ சொல்வதை நம்பாதவர் போல் தெரிகிறது. சற்று நிறுத்து' என்ற கயல்விழி, 'அய்யா, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்குத் தேவையானதை என்னிடம் கேட்டுப் பெறலாம்' என்றாள் பாண்டியனைப் பார்த்து.

'நிச்சயமாக தேவையானதைக் கேட்டுப் பெறுவேன்.' என்றான் பாண்டியன் அர்த்த புஷ்டியோடு.

மறுபுறம், தேன்மொழியோடு பேச எவ்வளவோ முயன்றும் இளவழுதிக்குத் தோல்வியே கிட்டியது. அவன் தங்கை கயல்விழியும் அவன் கேட்டதை சட்டையே செய்யவில்லை. அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை.

'அம்மா நான் கோவிலுக்குச் சென்று வருகிறேன். வீரா நீ இங்கேயே ஓய்வெடுத்துக்கொள். உன்னைப் பிறகு கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன். சாவகாசமாகப் பார்த்தால் நிறைய தெரிந்து கொள்ளலாம்.' என்றான் சத்தமாக. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும்.

====

திருவெள்ளரை புண்டரிகாக்ஷப் பெருமாள் கோவில் குளக் கரையில் காத்திருந்தது வீண் போகவில்லை.

'அத்தான், நலமா. நான் தான் தேன் மொழி. ஞாபகமிருக்கிறதா' என்றாள் அங்கு வந்த அந்த பருவப் பெண்.

பெண்மையின் அத்துணை அணிகலன்களும் அவளிடம் பரிபூர்ணமாய் வியாபித்திருந்தன. அடடா அந்தக் கண்கள் ஒரு வினாடி ஓரிடத்தில் நிற்காமல் அலை பாய்கிறதே. அந்தத் துடிக்கும் அதரங்கள் ஏதோ சொல்லத்தான் அப்படித் துடிக்கிறதோ. அவள் பேசியது காதில் தேன் வந்து பாய்ந்தது போலல்லவா இருக்கிறது. அதற்கு மேலும் (அல்ல கீழும்) உள்ளவற்றை கவனிப்பதா, கண்களால் சுவைப்பதா, வர்ணிப்பதா. இத்துணை ஆண்டுகாலம் பள்ளியில் கழித்துவிட்ட இளவழுதியின் மனமும், கண்களும் கட்டவிழ்த்துவிட்ட காளைகளாக அலைபாயத் தொடங்கின.

அது ஆலயம் என்பதாலும், பொதுமக்கள் வந்து செல்லும் இடம் என்பதாலும் ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டான். இங்கே வரச் சொன்னோமே என்று தன்னையே நொந்து கொள்ளவும் செய்தான். இவ்வளவிலும் அவள் கேள்விக்கு விடையளிக்கவும் தவறவில்லை.

'இது என்ன வார்த்தை தேன்மொழி. மறந்தால் தானே நினைப்பதற்கு.'

'ஆமாம் அனைவரும் கூறுவதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். புதுமையாக ஏதாவது சொல்லுங்கள்'

'நீ மட்டும்தான் புதுமை. எனவே உன்னைத்தவிர அனைத்தும் பழமைதான். நான் என்ன சொன்னாலும் அது பழையதாகத்தான் இருக்கும்.'

'சரி சரி. விட்டால் பேசிக்கொண்டே இருப்பீர்களே. காஞ்சியிலிருந்து எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்'

'என்ன அப்படிக் கேட்டுவிட்டாய் தேன் மொழி, உனக்காக என்னையே கொண்டு வந்திருக்கிறேனே. இது போதாதா'

'அய்யோ, வழிகிறதே. சற்றுத் துடைத்துக் கொள்ளுங்கள்'

'நீதான் துடைத்து விடேன். உன் மேலாடையால்'

'நன்றாயிருக்கிறது. இது கோயில், பகல் என்பதை உணர்ந்துதான் பேசுகிறீர்களா'

'அப்படியானால் வீட்டில் இரவில் வைத்துக் கொள்வோமா. அதுவரை இப்படியே இருந்து விடுகிறேன்' என்றவன் அவள் கையைப் பற்ற முயன்றான்.

சற்று விலகிய அவள், 'காஞ்சிக்கு சென்றதன் பலன் கைமேல் தெரிகிறது. இதுதான் உங்கள் கடிகையில் கற்றுக் கொடுத்தார்களோ. இதெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்களுடன் வந்திருப்பவர் யார்'

'பிறகு எப்போது. இன்றுதானே.'

'சரி. பார்க்கலாம். முதலில் என் கேள்விக்கென்ன பதில்'

'மிக்க நன்றி, தேன்மொழி. அவனைப் பற்றிதான் எல்லோருக்கும் சொன்னேனே.'

'அது அனைவருக்கும் சொன்னது. என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள்'

'உண்மையா.'

'ஆம். அவர் வணிகரின் மகனல்ல. ஒரு அரச குலத் தோன்றல் என்பது தெள்ளத் தெளிவாக எனக்கும், உங்கள் தந்தைக்கும் விளங்கிவிட்டது. இனி அவர் யார் என்பதை நீங்களாகச் சொல்கிறீர்களா, இல்லை அதையும் நாங்களே அறிந்து கொள்ளட்டுமா'

'அடிப்பாவி, என் தந்தைக்கு இதெல்லாம் தெரியாதே, நீதான் ஏதோ
சொல்லியிருக்க வேண்டும்.'

'ஆமாம். அவருக்கு சின்ன சந்தேகம்தான். நான் தான் ஊதிப் பெரிதாக்கினேன்.'

'ஏன் அவ்வாறு செய்தாய். அவன் இங்கு வந்ததே மன நிம்மதியைத் தேடி. அதற்கும் இங்கே இடமிருக்காது போலிருக்கிறதே.' என்று கடிந்து கொண்டான்.

'எவருடைய மன நிம்மதியும் போகக் கூடாதென்றால், சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும். நீங்கள் இங்கு இல்லாத போது நடந்தவை உங்களுக்குத் தெரியுமா.'

'என்ன ஆயிற்று'

'அது மிகப் பெரிய ஆபத்து. உங்கள் தந்தை அதை உங்களிடம் எக்காரணம் கொண்டும் சொல்லக் கூடாது என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடிய வில்லை. கேளுங்கள்.' ஒவ்வொன்றாகச் சொல்லத் துவங்கினாள்.

காதல் காட்சியை எதிர்ப் பார்த்து வந்த இளவழுதிக்கு அவள் சொன்ன செய்திகளின் மாட்சி கண் முன் விரிந்த போது, தெரிந்தது ஆபத்து, ஆபத்து. வீர பாண்டியனைச் சுற்றியும் அவன் தந்தை குலசேகரனைச் சுற்றியும் பின்னப் பட்டிருந்த கொடிய வலை. அது தமிழகத்தின் தலைவிதியை மாற்றியெழுதும் முயற்சியின் விதையாகப் பட்டது இளவழுதிக்கு. ஏனோ, ஆசாரியார் சொன்ன சக்கர வியூகம் நினைவிற்கு வந்ததை அவனால் தடுக்க முடியவில்லை.


(தொடரும்)

Saturday, November 1, 2008

3 மாதம் 25 பதிவுகள்.. இனி என் வழி என்ன

இது 26வது பதிவு. நண்பர் ஆதவன் தனது 25வது பதிவைப் பற்றி எழுதிய பிறகுதான் என் பதிவுக் கணக்கைப் பார்த்தேன். இதை எப்படிச் சொல்வது மூன்றே மாதத்தில் 25 பதிவுகள் என்றா?. மூன்று மாதத்தில் 25 பதிவுகள்தான் என்றா?

பதிவெழுதலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு ஒரு சுபயோக சுப நாளில், பதிவெழுதத் தொடங்கினேன். முதலில் இவ்வளவு எழுத வேண்டும் என்றெல்லாம் இல்லை. நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்றுதான் தொடங்கினேன். அதுவும் பற்பல பணிச்சுமைகளுக்கிடையே எழுத முடிந்ததென்றால் அதற்கு பதிவெழுதவேண்டுமென்ற ஈடுபாடும், உங்களது ஊக்கமுமே காரணம்.


சிலர் எந்தப் பதிவு போட்டாலும், குறைந்தது 100 பின்னூட்டங்களை அள்ளிவிடுகின்றனர். பின்னூட்டமென்பது ஒரு பதிவனுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து. நமக்கோ கடுமையான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை :((. பத்தைத் தாண்டுவதற்குள் நாக்கைத் தள்ளிவிடுகிறது. கோவியாரின் புதிய பதிவர்களுக்கான பதிவில் துளசி மேடம் பின்னூட்டத்தைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும் கவலைப் படாமல் இருக்க முடியவில்லையே.

நான் சிறுகதை எழுதினேன். இப்பொழுது சரித்திரத் தொடர்கதை எழுதிவருகிறேன். இது பற்பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப் படுகிறது. ஆனால் இதற்கான வரவேற்பைப் பார்த்தோமானால், குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர யாரும் வருவதாகத் தெரியவில்லை. எழுத்துலகில் உள்ள அனைவருக்கும் வரலாறும் சரித்திர நாவலும் பிடித்தமான ஒன்றுதான் என்றாலும், இதற்கான வரவேற்பு இல்லாதது ஒரு பின்னடைவையும் சோர்வையும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் இத்தொடருக்குத் தொடர்ந்து வரும் ஒரு சிலருக்காகவும் என்னுடைய திருப்திக்காகவும் நிச்சயமாகத் தொடர்வேன். அதற்கான கருவும் அடுத்த பல அத்தியாயங்களுக்கான அவுட்லைன்களும் தயாராக உள்ளன.

ஆனால் சினிமா பற்றிய தொடர் பதிவிற்கு கிடைத்த பின்னூட்டம் 40. இது என்னைப் பொறுத்த வரை மிகப் பெரிய பின்னூட்டம். ஆகவே, பதிவெழுதிப் பேர் (பின்னூட்டம்) வாங்க வேண்டுமென்றால் ஒன்று, சினிமாவைப் பற்றி எழுத வேண்டும் இல்லையென்றால் மொக்கை போட வேண்டும்.

ஆண்பாவம் படத்தில் வி.கே.ராமசாமி சொன்னதை இங்கு எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ' நான் குளம் வெட்டினேன். நீங்க யாரும் தண்ணி எடுக்க வரல. நான் கோயில் கட்டுனேன். நீங்க யாரும் சாமி கும்பிட வரல. நான் பள்ளிக்கூடம் கட்டுனேன். நீங்க யாரும் உங்க பசங்கள படிக்கறதுக்கு அனுப்பல. ஆனா இப்போ தியேட்டர் கட்டியிருக்கேன். நீங்கல்லாம் கும்பலா வந்திருக்கீங்க. இதப் பாக்கும் போது அடடா இத முன்னாலயே செஞ்சிருக்கலாமேன்னு தோணுது'

நீங்க சொல்லுங்க. நான் எப்படி போகணும், லெப்டா, ரைட்டா, நடுசென்டரா?