அத்தியாயம் 6: இருவர்
கோவிலில் இருந்து திரும்பிய இளவழுதியின் மனதில் நிரம்பி நின்ற சொல்லவொண்ணாத் துயரத்தையும், கவலையையும் கட்டுப்படுத்த மிகவும் சிரமப் பட்டான். தேன் மொழியின் வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப அசைபோட்டும், முழுமையான நிலையை அவனால் கணிக்க முடியவில்லை. இனி யோசிப்பதில் பலனில்லை. தந்தையைக் கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவிற்கு வந்தவன் சரியான தருணத்தை எதிர் நோக்கி இருந்தான். அது தானாகவே வந்து விழும் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை.
இரவு போஜனத்திற்குப் பின் பெண்கள் தங்கள் அறைகளுக்குச் சென்றுவிட சோழமாராயர், இளவழுதி, வீர பாண்டியன் ஆகியோர் அவன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பௌர்ணமிக்கு இன்னும் ஒரு நாளே இருந்ததால் வானில் புரட்டாசி நிலவு தகதக வென மின்னியது. ஆகவே அவர்கள் எந்தவொரு விளக்கையும் பயன் படுத்தாமல் அமர்ந்திருந்தனர். மற்றவருடைய முகம் தெரிந்தாலும் அவர்களது உணர்ச்சிகளின் பாவம் தெரியாத வகையில் நிலவின் ஒளி அமைந்திருந்தது.
மாராயர் தான் முதலில் ஆரம்பித்தார்.
'இந்தப் பவுர்ணமி நிலவுதான் எவ்வளவு வெளிச்சத்தைத் தருகிறது? ஆனாலும் பொருட்கள் மங்கலாகத் தான் தெரிகின்றன. இதற்குத்தான் பெறுவதை நேராகப் பெற வேண்டுமென்றார்கள் பெரியோர்கள். சூரிய வெளிச்சம் இவ்வாறு குறைவாக இருக்குமா?'
'எப்போதும் ஒன்றே போல் இருந்தாலும் நன்றாக இருக்காதல்லவா? நிலவின் குளுமையும் தேவை. சூரியனின் வெளிச்சமும் தேவையென்றால் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தால் தான் உண்டு' என்றான் வீரபாண்டியன்
'எத்தனையோ கண்டுபிடித்தவர்கள் இதையும் கண்டுபிடிக்காமலா போய்விடப் போகிறார்கள்? எப்போது என்பதுதான் கேள்வி?' என்ற மாராயர் 'ஆமாம் உங்களிடத்தில் சரியாகவே பேச முடியவில்லை. கடிகையில் என்னென்ன கற்றுக் கொண்டீர்கள்.?' என்று வினவினார்.
இதற்கு இளவழுதி பதில் கூறாமல் போகவே, வீர பாண்டியன், 'முதலில் அனைவருக்கும் இலக்கியம், இலக்கணம், அர்த்த சாஸ்திரம், ஜோதிஷம், வான சாஸ்திரம், கீதை, ராமாயண மகாபாரதங்கள், தர்க்க சாஸ்திரம் ஆகியவை பயிற்றுவிக்கப் பட்டன. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கு பயின்றோம். பிராகிருதம், பாலி முதலிய மொழிகளின் வரி வடிவங்களைத் தெரிந்து கொண்டோம். பெர்சிய மொழியின் அடிப்படைகளை முதல் முறையாக எங்களுக்குப் பயிற்றுவித்தனர். ஓவியம், இசை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றோம்.
பிறகு, அரச வாரிசுகள் மற்றும் அரசியலில் ஆர்வமும் தகுதியும் உடையவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து, பாரத கண்டத்தின் அரசுகள், ராஜ தந்திர விவகாரங்கள், போர் முறையில் கையாள வேண்டிய தந்திரங்கள், படைகளை நடத்த வேண்டிய முறைகள், வியூகங்களின் அமைப்புகள், புரவி சாஸ்திரம் முதலியவைகளைப் பயிற்றுவித்தனர். இவற்றோடு, தினமும் காலையில் உடற்பயிற்சியுடன் யோகாசனமும், தியானமும் கற்றுத் தரப்பட்டன. மாலையில் வாள், வேல் பயிற்சி, மல்யுத்தம் ஆகியவைகளுடன் மலை நாட்டு பட்டதிரிகள் மூலம் களரியும், வர்மமும் பயின்றோம்.
இறுதி நாளன்று, எங்களுக்கு ப்ரதானாசாரியாரான பாஸ்கராசாரியார்...'
'நல்வாழ்த்துகளைத் தெரிவித்து எங்கள் பயிற்சியை சாஸ்த்ரோக்தமாக முடித்து வைத்தார்' என்று மறித்தான் இளவழுதி.
சக்கர வியூகம் பற்றி சொல்ல வந்த வீரபாண்டியனைத் தடுத்ததோடல்லாமல் எதுவும் சொல்லவேண்டாமென்று அவனைத் தொட்டு சைகை மூலம் உணர்த்திய இளவழுதி, 'அதனால்தான் எல்லா தேசத்திலிருந்தும் காஞ்சிக் கடிகைக்கு மாணவர்கள் படிக்க வருகிறார்கள்' என்று பேச்சையும் மாற்றினான்.
'ஆமாம். மிக விரிவாகத் தான் இருக்கிறது உங்கள் கல்வி.' என்று நிறுத்திய மாராயர், 'வீரா, நீ மதுரையிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னான் இளவழுதி. இப்போதைய மதுரை நிலவரமென்ன? நான் கேள்விப்படுவதெல்லாம் உண்மைதானா? குலசேகரரைப் பற்றியும், சுந்தர பாண்டியனை பற்றியும் ஏதேதோ சொல்கிறார்களே. உங்களோடு படித்த வீரபாண்டியன் என்ன செய்கிறான்? ஹும்... எங்கள் காலத்தில், ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் எங்களையெல்லாம் அடக்கி ஆண்டார். மதுரையை மீண்டும் வளம் பெறச் செய்தார். அவர் காலத்திற்குப் பிறகு அவர் ஏற்றி வைத்த ஜோதி தொடர்ந்து வெளிச்சம் தரும் என்று நினைத்தோம். ஆனால் தற்கால நிலைமை மிகவும் சொல்லத்தரமற்றதாக இருக்கிறதாமே. பதவிச் சண்டையில் வீர பாண்டியனும், சுந்தர பாண்டியனும் இறங்கப் போவதாக வதந்தி நிலவுகிறதாமே? உனக்குத் தெரிந்ததைச் சொல்லேன்?' என்று வீர பாண்டியனை மடக்கினார்.
இவ்வளவு கேள்விகளுக்குப் பிறகு தான் வீர பாண்டியன் அல்ல என்று சொல்வதற்கு அவனால் முடியவில்லை.'ஐயா, என்னை மன்னியுங்கள். நான் தான் குலசேகரரின் மகன் வீரபாண்டியன். சிலபல காரணங்களுக்காக என்னை வெளிப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனவேதான் வேறு விதமாக அறிமுகப் படுத்திக் கொள்ள நேரிட்டது. எனினும் தங்களின் பார்வைக்குத் தப்ப முடியவில்லை.' என்றான்.
'வீரா, இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை. உன்னைப் பார்க்கும் போது உன் பாட்டனாரின் சாயல் அப்படியே தெரிகிறதே. அதனால்தான் என்னால் கணிக்க முடிந்தது. மேலும், வேற்று மனிதனாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான ஒப்பனைகளைச் செய்து கொள்ள வேண்டும். எதைச் செய்தாலும் திருந்தச் செய்ய வேண்டும் என்ற பாடத்தைக் கற்க வில்லையா? பரவாயில்லை. அடுத்த முறை இதை கவனத்தில் கொள்வாய் என்று நம்புகிறேன்' என்றார் சிரித்த வாறே.
'எல்லாம் அவளால் வந்தது' என்று தேன்மொழியை நினைத்து இளவழுதி சொன்ன போது, 'அப்படியானால் என்னைக் குறைத்து மதிப்பிடுகிறாயா வழுதி? இப்போதே இப்படியென்றால், திருமணத்திற்குப் பின் என்ன சொல்வாய்?' என்றார்.
'தந்தையே, ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள். அவள் உங்களிடத்தில் பயின்றவளாயிற்றே. உங்கள் திறமையில் பாதியாவது இருக்காதா?'
'வழுதி. உண்மையில் என்னையும், உன்னையும் ஏன் இந்த வீர பாண்டியனையும் விட அவள் கெட்டிக்காரி. உன்னிடத்தில் அன்று நடந்ததைச் சொல்லிவிட்டதாக என்னிடம் தெரிவித்து விட்டாள். அன்று அவள் சமயோசிதமாக நடந்து கொண்ட விதத்தினால் தான் இன்று நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.' என்றார் மாராயர்.
'இருவர் வந்ததாகச் சொன்னாளே ஒழிய யார் யார் என்று சொல்லாமல் விட்டுவிட்டாள்' என்றான் இளவழுதி.
இந்த விவரம் ஒன்றும் தெரியாத வீர பாண்டியன், 'என்ன நடந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா? அதில் தவறில்லை என்றால்' என்று வினவினான் குழப்பத்துடன்.
'நீதான் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். இதை எப்படி உன்னிடம் கூறுவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக நம் சம்பாஷனை இதில் இழுத்துக் கொண்டு வந்து விட்டது. கேள், வீர பாண்டியா. மதுரை சிம்மாசனத்தில் தற்போது அமர்ந்திருக்கும் உன் தந்தை தற்போது உடல் நலக் குறைவினால் அவதியுறுகிறார்' என்றார் மாராயர். இதைக் கேட்டதும் அதிர்ந்த வீர பாண்டியன், 'ஒருக்காலும் இருக்க முடியாது. கடந்த சித்திரைத் திருநாளன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னின்று நடத்தியதுடன் அழகர் மலையிலிருந்து, மதுரை வரை நடந்தே வந்தாரே. எங்களை விட வலிமையாக இருப்பதாக அனைவரும் கூறினார்களே. இது எப்படி சாத்தியம்' என்று புலம்பினான்.
'வீரா, அமைதியாகக் கேள். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படவில்லை. ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் உன் சகோதரன் சுந்தர பாண்டியன் தான். நீ மதுரை திரும்புவதற்குள், முடிசூடிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான். பட்டத்து இளவரசனாகவாவது அறிவித்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கிறான்' என்றார் மாராயர்.
'என்ன. மகனே தந்தைக்குத் தீங்கிழைப்பதா? நாமறியாத ஒன்றாக இருக்கிறதே' என்று வினவினான் இளவழுதி.
'சேராத இடந்தன்னில் சேர்ந்திட்டால் இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும். உன் தம்பியின் மற்ற ப்ரதாபங்களையும் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வா. நீயும் என் மகன் போலத்தான். நான் சோழர்களின் ஊழியனாக இருந்தவன். அந்த ஊழியத்தில் என் கையையும் இழந்தேன். ஆனால் இப்போது, சோழகுலம் இல்லை. ஆகவே, நான் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறேன். அன்றைய சம்பவங்கள் என்னை மீண்டும் அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வந்து விட்டன.
'கேளுங்கள் பிள்ளைகளே, இப்போது நம் கண்ணுக்குத் தெரிவது குலசேகரப் பாண்டியருக்கு ஏற்பட்டிருக்கும் நோய். இதன் பின்னணியில் இருப்பது வீர பாண்டியனுக்கு உள்ள ஆபத்து. மேலும் சுந்தர பாண்டியன் வலுவில் அழைத்துக் கொண்டு வந்திருப்பது தமிழகத்திற்கே ஏற்படப் போகும் பெரும் ஆபத்து.'
'ஆபத்து ஆபத்து என்கிறீர்களே ஒழிய முழுமையாகக் கூறவில்லையே' என்று ஆதங்கப் பட்டான் இளவழுதி.
'சொல்கிறேன் கேள் இள வழுதி. அன்று இங்கு வந்தவர்கள் இங்கு வரவேண்டும் என்று வர வில்லை. கொல்லி மலைக்கு வந்தவர்கள் வழி தவறி இங்கு வர நேரிட்டது. அல்லது புண்டரிகாக்ஷப் பெருமாள்தான் அவர்களை இங்கு வரச் செய்திருக்க வேண்டும். அவர்கள் யார் தெரியுமா? சுந்தர பாண்டியன் மற்றும் மாலிக் கஃபூர்.'
'மாலிக் கஃபூரா' ஒரே சமயத்தில் வாயைப் பிளந்தனர் இருவரும்.
(தொடரும்)
பின் குறிப்பு:- அத்தியாயங்கள் பெரிதாக இருப்பதாக எனக்குப் படுகிறது. வரலாற்று நாவல்களில் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. உங்கள் எண்ணத்தைப் பின்னூட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி.
13 comments:
நண்பரே அத்தியாயம் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை.
எழுத்து நடையும், காட்சி அமைப்பும் அருமையாக உள்ளது.
தொடருங்கள். . .
மீ த பார்ஸ்டு & பர்ஸ்ட்டு
அன்பரே, எனக்கும் இவ்வத்தியாயம் நீண்டுவிட்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குவதற்கு முன்போ அல்லது அத்தியாயம் முடிவிலோ சில இயற்கை காட்சி வர்ணனைகள் இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது வெறும் பரிந்துரையே..
வாழ்த்துகள்..
சுபா ,
நன்றாக உள்ளது.ஆனால் இரண்டு அத்தியாயம் படிப்பது மாதிரி உள்ளது
.
இல்லை பல்லவன்..அத்தியாயம் ஒன்றும் பெரிதாக இல்லை..கதை அத்தியாயம் ஆரம்பத்தில் சிறிதாகவும், பின்பு கதை மெல்ல மெல்ல சுவாரஸியம் கூடும் போது நீள்வதும் தவிர்க்க முடியாததே...
சதீஷ் குமார் சொல்வது போல் இயற்கை காட்சி வர்ணனை அல்லது ஆண், பெண் வர்ணனைகளை கூட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.
//
வெங்கட்ராமன் கூறியது...
நண்பரே அத்தியாயம் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை.
எழுத்து நடையும், காட்சி அமைப்பும் அருமையாக உள்ளது.
தொடருங்கள். . .
//
நன்றி வெங்கடராமன்.
//
வெங்கட்ராமன் கூறியது...
மீ த பார்ஸ்டு & பர்ஸ்ட்டு
//
Me the Fast & First?
Thanks a lot.
//
சதீசு குமார் கூறியது...
அன்பரே, எனக்கும் இவ்வத்தியாயம் நீண்டுவிட்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு அத்தியாயமும் தொடங்குவதற்கு முன்போ அல்லது அத்தியாயம் முடிவிலோ சில இயற்கை காட்சி வர்ணனைகள் இடம்பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். இது வெறும் பரிந்துரையே..
வாழ்த்துகள்
//
உங்கள் கருத்துக்கு நன்றி, சதீசுகுமார் அவர்களே,
வர்ணனைகளை இணைக்க முயற்சிக்கிறேன்.
// சுபா கூறியது...
சுபா ,
நன்றாக உள்ளது.ஆனால் இரண்டு அத்தியாயம் படிப்பது மாதிரி உள்ளது
.
//
நன்றி சுபா,
நீங்கதான் நான் நினைப்பது போல் சொல்கிறீர்கள். மற்றவர்கள் சரியாக இருப்பதாகக் கூறுகிறார்களே.
//
நான் ஆதவன் கூறியது...
இல்லை பல்லவன்..அத்தியாயம் ஒன்றும் பெரிதாக இல்லை..கதை அத்தியாயம் ஆரம்பத்தில் சிறிதாகவும், பின்பு கதை மெல்ல மெல்ல சுவாரஸியம் கூடும் போது நீள்வதும் தவிர்க்க முடியாததே...
சதீஷ் குமார் சொல்வது போல் இயற்கை காட்சி வர்ணனை அல்லது ஆண், பெண் வர்ணனைகளை கூட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்.
//
நன்றி ஆதவன். முயற்சிக்கிறேன்.
Good as usual.
Thanks venkatesh
முன்னமேயே சொன்னது போல் பிரிண்ட் எடுத்து படித்துவிட்டு, விமர்சனம் செய்கிறேன். இப்போதைக்கு வருகைப்பதிவு.
Post a Comment