Monday, August 31, 2009

காஞ்சித்தலைவனுக்கு வயது ஒன்று!


சரியாக கி.பி.2008, ஆகஸ்டு மாதம். சுக்கில பட்சத்து பவுர்ணமி நிலவு தன் கிரணங்களை வீசி இருட்டைப் போக்கும் முயற்சியில் வெற்றிபெற துடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த முயற்சியைத் தடுக்கும் விதமாக ஓங்கி அடர்ந்த மரங்கள் தங்கள் கரிய நிழலை படரவிட்டுக்கொண்டிருந்த ஓர் சோலையின் மூலையில் அமர்ந்திருந்தான் ஒருவன். அவன் சிந்தனையில் உதித்த எண்ணங்களின் வண்ணங்கள் அவன் முகத்தில் அந்தக் கும்மிருட்டிலும் தெளிவாகத் தெரிந்தன. முடிவு செய்துவிட்டான்.

எல்லோரும் குதித்து விட்டார்கள், நாம் குதிக்க யோசித்தால் எப்படி?? குதித்துவிட வேண்டியதுதான்...

மற்றொரு சுபயோக சுப நாளில் (யாருக்கு என்று கேட்டால், யாருக்கோ என்றுதான் பதில் வரும்!!) பிளாக்கர் வழங்கும் இலவச சேவையில் தன் பதிவைப்போட்டு. ஒரே பதிவை மூன்று முறை எழுதி தமிழ்மணத்தின் தேவையையும் பூர்த்தி செய்து தன் திறமையைக் காட்டினான்.

வந்தாரை வாழவைக்கும் வலைப்பூக்களம் இவனை வஞ்சிக்கவில்லை. பின்னூட்டங்களை வாரி வழங்காவிடினும், வயிற்றுக்குக் குறைவில்லாமல் தந்துகொண்டிருந்தது. நட்சத்திரம் என்று இடையில் மின்னி, பணிச்சுமையில் காணாமல் போய், தட்டுத்தடுமாறி, திக்கித் திணறி ஒர் ஆண்டை வெற்றிகரமாகக் கடந்துவிட்டான்.

ஆம் காஞ்சித்தலைவனுக்கு ஒரு வயது நிரம்பிவிட்டது.

இது நல்லதோ, கெட்டதோ, எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான்!!.

ஒரு வேளை அதிக பின்னூட்டங்கள் வந்தால் "ஆஹா, இவ்வளவு புகழறாங்களே, இவங்களுக்காக நெறய எழுதணும்"னு எழுதுவான்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் வரவில்லையென்றால் "ஆஹா, நாம எழுதறது இவங்களுக்குப் பிடிக்கலையோ? மாத்தி எழுதணும்"னு எழுதுவான்.

உங்களோடு மேலும் வளர உங்கள் நல் ஆதரவை என்று நாடும்,
உங்கள்
காஞ்சித்தலைவனாகிய
இளையபல்லவன்..பி.கு:- இந்தப் பதிவு போடக் காரணமாக இருந்த நான் ஆதவனுக்கு நன்றிகள் பல!!

Sunday, August 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? - கந்தசாமி - காம்ப்ரமைஸ்? .. 6

ஒரு படம் எப்படியிருக்கும் என்ற சஸ்பென்ஸ் அதை முதலில் பார்க்கும் போதே உடைந்துவிடும். அல்லது அதைப்பற்றிய விமர்சனத்தைப்படிக்கும் போது கட்டுடைக்கப்பட்டு விடும். இதையும் மீறி அந்தத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுவது எது? அதுதான் திரைக்கதை..

ஜென்டில்மேன் சங்கரின் முதல் படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். மலைக்கள்ளன் புரட்சித்தலைவரின் அதிரடிப்படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். இவை தவிர நிறைய ராபின் ஹூட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சில வெற்றிகள். பல பிளாப்கள்.

வெற்றித் திரைக்கதை அமைப்பதற்கான சில அடிப்படை அமைப்புகளைப்பார்ப்போம். இது இன்க்விசிஷன் செஷன் என்று சொல்லலாம்.

1. நான் இந்தப்படத்தை ரசிகனாகப்பார்க்க நேர்ந்தால் என்ன செய்வேன்?
2. பணம் கொடுத்து சினிமாவிற்கு வரும் ரசிகனுக்கு நான் கொடுக்கும் 'வேல்யூ' என்ன?
3. இந்தப் படம் மூலம் நான் எந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறேன்.
4. மெசேஜ் இருந்தால் அதன் 'டோசேஜ்' எவ்வளவு? மற்ற மசாலாக்களில் அது நீர்த்துப் போகுமா?
5. தயாரிப்பாளர், நடிகர்கள் முதலிய 'ஸ்டேக் ஹோல்டர்'களை என் திரைக்கதை பாதிக்கிறதா?

இந்தக் கேள்விகளை ஒரு திரைக்கதை ஸ்கெட்ச் அமைக்கும் போது கேட்டுக்கொள்ள வேண்டும். 100% சரியென்று வந்தால் அந்தப்படம் வெற்றியடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் இல்லை.

இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்துத்தான் நம் அடுத்த பாடங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

அதற்கு முன்னர் இப்போது பரபரப்பாக அடிபடும் கந்தசாமியைப் பற்றி பார்ப்போம்.

செலவைப் பற்றி கவலையே படாத தயாரிப்பாளர் - கலைப்புலி தாணு
வித்தியாசமான படங்களைத் தந்த இயக்குனர் - சுசி கணேசன்
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே நடித்துவிட்ட நாயகி - ஸ்ரேயா
அடுத்த சூப்பர் ஸ்டாராக அடியெடுத்துக் கொண்டிருக்கும் - விக்ரம்
புதுமை ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம்
சமீபகாலமாக கலக்கிவரும் இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீப்ரசாத்
மற்றும் வடிவேலு, பிரபு, ஆஷீஷ் வித்யார்த்தி, எக்ஸ், ஒய், இசட்...
வெரைட்டி லொக்கேஷன்கள்இப்படி ஒரு மெகா கூட்டணியிருந்தும் மக்களுக்கு திருப்தியில்லாமல் போனது ஏன்?


பிரம்மாண்டத்தில் காணாமல் போன லாஜிக். அதனாலேயே அன்னியப்பட்டுவிட்ட காட்சியமைப்புகள்.

சிவாஜிக்கு அளிக்கப்பட்டதை விட கூடுதலாகக் கொடுத்து விட்டதால் ஸ்ரேயா கூடுதலாக குறைக்க வேண்டிய நிலை. அதனாலேயே முகத்தைச் சுளிக்கும் மக்கள்.

சம்பிரதாயத்திற்கு தலை காட்டுவது போல் வடிவேலு.

வலுவில்லாத வில்லன் ஆசீஷ் வித்யார்த்தி.

இத்தனைக்கும் படம் ஒடுவது மூன்று மணி நேரத்திற்கும் மேல்.

=====


என்னைப் பொறுத்தவரை இயக்குனர் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

கலைஞனுக்கு சுதந்திரம் முக்கியம். அவனது கிரியேட்டிவிட்டியில் மற்றவர்கள் கைவைத்தால் அவ்வளவுதான். அன்ஃபார்ச்சுனேட்லி, இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் நிலை இதுதான்.====

சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?

Sunday, August 23, 2009

காசி வினாயகா மெஸ்

சாப்பிட டோக்கன் வாங்குவதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கியூவில் நிற்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

அப்படி கூட்டம் வந்தாலும் இருக்கும் 40 சீட்களுக்கு மேல் கூட்ட மாட்டேன் என்று சொல்லும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?

ஞாயிறு இரவு, தீபாவளி / பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஒரு வாரம் என்று கடையை மூடும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?

ஒரே சாப்பாட்டையே பல விதமான காம்பினேஷன்களில் கொடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா?

இப்படிப்பட்ட 'இருக்கிறதா'க்களுக்கு ஒரு (ஒரே?) பதில்தான் 'காசி வினாயகா மெஸ்'. சென்னையில் பேச்சுலராக இருந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரு மெஸ். பேச்சுலர்ஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் அக்பர் தெருவில் இருக்கிறது இந்த மெஸ்.

எனக்கு சற்றேறக்குறைய 15 ஆண்டுகளாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான சுவை, அளவு மற்றும் அமைப்புதான் அந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி.

அந்த மெஸ்ஸைப் பற்றி ஒரு அறிமுகம்.

அக்பர் தெரு ஒரு சிறிய சந்து. அதில் ஒரு வீடு மாதிரியான இடத்தில்தான் இந்த மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு மட்டும்தான். டிஃபன் காபி போன்றவை இல்லை. மதியமென்றால் 1 மணி முதல் கியூ சேர்ந்து விடும். இரவென்றால் 8 மணி முதல் கியூ இருக்கும்.

மொத்தம் 40 சீட்கள். நான்கு வரிசையாக இருக்கும். முதல் இரண்டு வரிசை ஒரு பேட்ச் ஆகவும் அடுத்த இரண்டு வரிசை மற்றொரு பேட்ச் ஆகவும் பரிமாறுவார்கள். முதல் வரிசை 'யெல்லோ டோக்கன்' என்று சொல்வார்கள். அடுத்த வரிசை, 'ஒயிட் டோக்கன்'.

முதலில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டும். 20 பேருக்குத்தான் டோக்கன். அவர்கள் சாப்பிட்டு முடித்தஉடன் அடுத்த 20 பேருக்கு சாப்பாடு. இப்படித்தான் போகும்.

அளவு சாப்பாட்டிலேயே இரண்டு வகை உண்டு. சாதா, லிமிட்(!). சாதாவில் ரெகுலர் 'பட்டை'யும் லிமிட்டில் சிறிய பட்டையும் இருக்கும். அதற்கு ஒரு டோக்கன் உண்டு!.

தயிர் வேண்டுமென்றால் அதற்கு ஒரு டோக்கன்.

மதியம் பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல் உண்டு. இது வேண்டாம் என்பவர்களுக்கு 2 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.

அதே போல் அப்பளம் வேண்டாம் என்பவர்களுக்கு 1 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.

இவை வேண்டாம் என்றால் சர்வரிடம் சொல்ல வேண்டும். அவர் ஒரு டோக்கன் தருவார். அதை கல்லாவில் கொடுத்தால் அங்கே பணம் ரிட்டர்ன் கிடைக்கும்.

வேகமாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த செட் வந்து விடும். பரிமாறல்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள். பொரியலும், கூட்டும் இரண்டாவது முறை உண்டு.

உணவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததுதான் இந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி. வேறு சில மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் சாதத்தில் சுண்ணாம்பு போடுவார்கள். அது அசிடிட்டியை உருவாக்கும். இங்கே அப்படியில்லை.

இந்த மெஸ்சுக்கு பல 'வருடக்கணக்கான' வாடிக்கையாளர்கள் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.

ஆனாலும் வீட்டில் எப்போதாவது ஊருக்குப் போனால் திருவல்லிக்கேணிக்கு இங்கு சாப்பிடுவதற்காகவே செல்வேன்.

தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்...

Thursday, August 20, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 14

அத்தியாயம் 14: குவலாலா. . கோட்டைத்தலைவன்..

ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.

அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.

====

அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )

[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"

கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.

=====

குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.

குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.

திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.

அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.

"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.

"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,

"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.

"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"

"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"

"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.

அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.

"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.

(தொடரும்)

Thursday, August 13, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 13

அத்தியாயம் 13: ஹொய்சள சாம்ராஜ்யம்

காலைக் கிரணங்களை வீசி மெல்ல எழுந்தான் கதிரவன். அவனோடு எழுந்தன உலக உயிர்களெலாம். உறங்குவது போலும் சாக்காடு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த சாக்காட்டிலிருந்து உலகத்தை மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க வந்த உதய சூரியன் மாலைப் பொழுதைப் போலன்றி தன் செந்நிற கிரணங்களின் வண்ணத்தை உடனே பொன்னிறத்துக்கு மாற்றினான். அவனது சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஹொய்சள தலை நகர மக்களுக்கும் வந்து விட்டது போலும். அந்தக் காலை வேளை வழக்கம் போலவே கலகலப்பாக இருந்தது.

இரவில், நீலாவுடனான அந்தரங்க தர்க்கம் மூன்றாம் ஜாமத்தைத் தாண்டி நீண்டாலும் சூரியன் உதிக்குமுன்னரே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, தலை நகரத்தின் தலைமைக் கோவிலான ஹொய்சளேஸ்வரர் கோவிலுக்குச் சென்றான். கூடவே நீலாவும். ஒரு மன்னவனாகச் செல்லாமல் பக்தனாகச் சென்ற மன்னவனை மக்கள் வணங்கவும் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் நேரே கோவிலுக்குள் சென்றான் வல்லாளன். நாமும் அவனைத் தொடர்வோம். அப்போதுதான் அந்தக் கோவிலை நன்றாகப் பார்க்க முடியும்.

ஹொய்சளேஸ்வராலயம், தமிழகக் கோவில்களைப் போலன்றி முற்றிலும் வேறு விதமாக இருந்தது. அங்கே ராஜ கோபுரம் இல்லை. கோவிலைச் சுற்றியும் மதிள்கள் இருந்தன. உள்ளே நுழைய தோரண வாயில் மட்டுமே உண்டு. உள்ளே நுழந்ததும் விசாலமான பிரகாரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. வாயிற்தோரணத்திலிருந்து சற்றேறக்குறைய நூறு அடிகள் தொலைவில் முக்கியக் கோவில் அமையப்பெற்றிருந்தது. ஜகதி என்ற மேடை அமைப்பின் மேல் அமையப்பெற்றிருந்த கோவிலின் தூண்களும், பக்கச்சுவர்களும் பல்வேறு நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவில் தமிழ் நாட்டுக் கோவில்களைப் போல் கருங்கற்களால் அமைக்கப்படாமல், கெட்டியான சுண்ணாம்புக்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவ்வளவு நுணுக்கமான, உயிரோட்டமுள்ள, தத்ரூபமான சிற்பங்களைச் செதுக்க முடிந்தது. ஆஹா. இவற்றைக் காணக் கண் கோடி இருந்தாலும் போதாதல்லவா?

அந்த ஜகதி எனப்படும் மேடையில் ஏறினால் நமக்கு முதலில் தெரிவது ஒரு மண்டபம். தூண்கள் உருளை வடிவில் இருந்தன. வெளிப்புறத் தூண்களைப் போலன்றி இவற்றில் சிற்பங்கள் அமையாமல் வட்டமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி கருவறை எனப்படும் கர்ப்பக்கிரஹத்துக்குச் சென்றால் அங்கே, ஹொய்சளேஸ்வரர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே சந்தளேஸ்வரரும் அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். வல்லாளனின் கொள்ளுப்பாட்டனான விஷ்ணுவர்தனனின் ஆட்சியில் அவன் நினைவாகவும் அவன் மனைவி சந்தளாதேவியின் நினைவாகவும் அவனது படைத்தலைவன் கேதுமல்லன் கட்டிய கோவில் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாட்டைக் குறிக்கும் வகையிலும், ஆளும் பரம்பரையைக் குறிக்கும் வகையிலும் ஹொய்சளேஸ்வரா எனப் பெயர் பெற்று தலை நகரத்திலேயே அமையப்பெற்ற கோவிலில் எப்போதும் சிறப்புடன் பூஜைகள் நடப்பது வழக்கம். அதுவும் இன்று அரசனும் அரசியும் விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதால் பூஜையின் சிறப்பு அதிகமாயிற்று. பூஜையில் மிக கவனத்துடன் கலந்து கொண்ட வல்லாளன் தன் புதிய முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தான்.

விஸ்தாரமான பூஜைகளின் முடிவில் முதல் மரியாதையை ஏற்றுக்கொண்டு பிராசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தப் பிரசாதத்தட்டு தவறி கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த முதியவரான அர்ச்சகர் தன்னை மன்னித்தருளுமாறு மன்னவனிடம் மன்றாடினார். அந்த நிகழ்வு தன் மனதைச் சிறிது வாட்டவே, அர்ச்சகரை அமைதி கொள்ளுமாறு பணித்துவிட்டு கோவிலை விட்டகன்ற வல்லாளன், நேரடியாகத் தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.

====

மீண்டுமொருமுறை அந்த மண்டபத்திற்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்முறை ஏற்கனவே இருந்தவர்களை விட சிலர் கூடுதலாக இருந்தனர். அவர்கள் முறையே வடதிசை தண்ட நாயகம் மற்றும் தென் திசை தண்ட நாயகம். (தண்ட நாயகம் என்பது அந்த திசையில் அமைந்த படைக்குத் தளபதியைக் குறிக்கும்.) அரசன் வரவை நோக்கிக்காத்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அரசன் வரும் தகவல் வந்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.

(இங்கே சிலவற்றை நாம் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் சில நிகழ்வுகள் அனைத்து புதினங்களிலும் இருப்பதைக் காணலாம். அவற்றுள் ஒன்று அந்தரங்க ஆலோசனை. இவை புதினங்களில் முக்கிய இடம் பெறுகின்றன, திருப்பு முனையாக இருக்கும் இடங்களில் இவை கட்டாயம் இடம் பெறும். இந்த ஆலோசனைகள் உண்மையாகவே நடந்திருக்குமா அல்லது புனைவா என்று நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால், பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் போது, மன்னன் சர்வாதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், அமைச்சர் குழுவினருடனும், மற்ற அரச அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுத்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு அரசவையிலும் அமைச்சர் குழு முக்கிய அங்கம் வகித்து வந்தது. அவர்களது முக்கியப்பணி அரசு இயந்திரத்தைத் திறம்பட நடத்துவது. அரசனுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவது.

இன்றைய அரசு முறையின் முன்னோடி, ஹொய்சள அரசு முறைதான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆகவே, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போதெல்லாம் அமைச்சரவையைக் கூட்டுவது இன்றியமையாததாகிறது!! மேலும் 'ப்ரோடோகால்' மிகக் கடுமையாகக் கடை பிடிக்கப்பட்டு வந்ததும், மன்னன் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு 'ஐகானிக் ஸ்டேச்சர்' அளிக்கப்பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியப்படுகின்றன. ஆகவே அவ்வாறு ஆலோசனைகள் வருவதும் மன்னனுடனான பேச்சுக்களும் இயல்பை ஒட்டியே இருக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்வீர்களாக!)

கையசைவினாலேயே அவர்களை அமரச்சொன்ன வல்லாளன் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.

"நமது அரசில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்களது ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்படுகின்றன. அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். அந்தக் கடமையை இதுவரையிலும் சரியாகவே நிறைவேற்றி வந்துள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஹொய்சளேஸ்வரரைத் தரிசித்து விட்டு நேராக இங்கு வந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இங்கே நாம் கூடியிருந்த போது படையெடுப்பைப்பற்றி முடிவு செய்தோம். அந்தப் படையெடுப்புக்கு இப்போது நேரம் வந்து விட்டது. தளபதியாரே, நமது தற்போதைய படை நிலவரம் என்ன என்பதை அனைவருக்கும் விளக்குங்கள்"

"உத்தரவு மன்னா. நம்மிடையே மூன்று படைப்பிரிவுகள் இருக்கின்றன. அவை முறையே குத்தி (ஆந்திர மாநிலம் குண்டக்கல் அருகே இருக்கிறது. பிற்காலத்தில் இது விஜய நகரப் பேரரசின் முதல் தலை நகராக விளங்கியது.), குவலாலா (இன்றைய கோலார்) மற்றும் தலை நகரான த்வார சமுத்திரத்தல் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன் வரை குறைந்த படை வீரர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற படை வீரர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லுமாறும் தங்கள் குடும்பத் தொழிலைக் கவனித்து வரவும் பணிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் இங்கு நடை பெற்ற ஆலோசனையின் பேரில் அனைவரும் படையில் சேருமாறு அழைக்கப்பட்டனர். இப்போது நம்மிடையே மொத்தமாக 48000 படை வீரர்களும், 4800 குதிரைகளும், 2400 யானைகளும் 400 ரதங்களும் இருக்கின்றன (1:5:10:100 என்ற அமைப்பில் படைகள் அமைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதையே பயன் படுத்தியிருக்கிறேன்."

"இந்தப்படைகளை ஒன்று சேர்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?"

"மன்னா, வடக்கிலோ தெற்கிலோ சேர்க்க வேண்டுமென்றால் ஒரு பட்சத்திற்குள் (பதினைந்து நாட்கள்) சேர்த்து விடலாம்."

"அப்படி சேர்ப்பது வெளிப்படையாகத் தெரியுமா?"

"ஆம் மன்னா, ராஜபாட்டைகளையும், சகடப்பெருவழிகளையும் உபயோகித்தால் மட்டுமே படைகள் விரைவில் சேர முடியும். அப்படிச் செய்யும் போது அனைவருக்கும் தெரிய வருவதில் வியப்பில்லையே"

"நமது படைகள் ரகசியமாகக் கலக்க வேண்டுமென்று விரும்புகிறேன்"

"அப்படியென்றால் அவர்களைக் காட்டு வழியாகத்தான் அழைத்து வர வேண்டியிருக்கும். அதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் அவகாசம் தேவைப்படும். எங்கே என்பதையும் மன்னர் தெரிவிக்க வில்லை. வடக்கிலா, தெற்கிலா?"

"சமயம் வரும் போது தெரிவிக்கிறேன். ஒரு மாதம் என்பது சரியாகத்தான் இருக்கும். படைகளை ஒரே வழியிலன்றி பல வழிகளிலும் பயணம் செய்யுமாறு உத்தரவிடுங்கள். அனைவரும் ஒரே நாளில் புறப்படாமல், ஒவ்வொரு நாளும் சிலரை அனுப்பினால் படை நகர்வது வெளியில் தெரியாமல் இருக்கும். மேலும் படைகளை மொத்தமாகக் கலக்க விடாமல், பாதி படைகளை சற்றுத் தூரத்தில் நிறுத்துங்கள். முதலில் இருக்கும் படை நகர்ந்ததும் இந்தப் படை அர்த்த சந்திர வடிவத்தில் பரவி முன்னர் செல்லும் படைக்கு அரணாகச் செல்ல வேண்டும். முன்னே செல்லும் படையில் யானைகளை அதிகப் படுத்துங்கள். அவை அரணாகச் செயல் படும். பின்னால் இருக்கும் படையில் குதிரைப்படையை நடுவில் நிறுத்துங்கள். அவை இரு பக்கமும் பாயும் நிலையில் இருக்க வேண்டும். படை வீரர்களிடத்தில் வேலும் வில்லும் அதிக அளவில் இருக்கட்டும். வாள் சிலரிடம் மட்டும் இருந்தால் போதுமானது. முன்னர் செல்லும் படைக்கு வடதிசை தண்ட நாயகமும் பின்னால் நிற்குப் படைக்கு தென் திசை தண்ட நாயகமும் தலைமையேற்பார்கள். போர் முகத்தில் நானும் இருப்பேன். என்னுடன் தளபதி இருந்து படைகளின் நடவடிக்கையை மாற்றத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார். தேவைக்கேற்ப நானும் யுத்தத்தில் பங்கெடுப்பேன். இம்முறை நமது வெற்றியில்தான் ஹொய்சளர்களின் தலை விதி நிர்ணயிக்கப்படும். தலை நகரில் அமாத்யர்கள் இருப்பார்கள். இந்தப் போர் சற்றேறக்குறைய ஒரு பட்சத்தில் முடிந்து விடும். வரும் விஜயதசமியன்று படை வடிவம் நகர வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா" என்று அடைமழை அருவி போல் திட்டத்தை விளக்கிவிட்டு தன் ஆசனத்தில் சற்று சாய்ந்து கொண்டு அனைவரையும் பார்த்தான் வல்லாளன். திட்டத்தை புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. அதன் பிறகும் அதன் லாப நஷ்டங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் முதலில் சுதாரித்தவர் மகாமாத்யர்தான்.

"மன்னர் அனைத்துப் படைகளையும் ஒரு பகுதியில் கலக்கத் திட்டமிட்டிருப்பது புரிகிறது. அது எந்தப்பகுதி என்பதும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் மற்ற பகுதி திறந்து விடப்பட்ட கதவு போல் ஆகிவிடுமே என்று அஞ்சுகிறேன்"

"மகாமாத்யரே, நன்று சொன்னீர். அவ்வாறே ஆக வேண்டும். ஏனென்றால் நான் திறந்து விடப்போகும் கதவின் பக்கம் யாரும் வரப்போவதில்லை"

"அது எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?"

"சொல்கிறேன். வேறு விளக்கங்கள். சந்தேகங்கள்?"

"திசையைத் தவிர வேறொன்றுமில்லை மன்னா?"

"நல்லது. சொல்கிறேன் கேளுங்கள். நமது படைகள் அனைத்தையும் குவலாலத்தில் சேர்க்க வேண்டும். நமது நோக்கம் பாண்டியரைத் தாக்கி தமிழகத்தை ஹொய்சள தேசத்துடன் இணைப்பது. மகாமாத்யரே, தெற்கில் தான் நமக்குப் பகை அதிகம். வடக்கில் நமக்குக் கவலையில்லை. புரிந்ததா?"

மன்னன் எண்ணம் பாண்டியர்களைத் தாக்குவதில் ஸ்திரப்பட்டுவிட்டதை அறிந்து கொண்ட மகாமாத்யர், "மன்னா தாங்கள், மாலிக் கஃபூரை மறந்து விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்"

"இல்லை மகாமாத்யரே, இல்லை. அவனால் இங்கே ஆபத்து வராது"

"அதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்'

"அவனை மதுரைக்கு வருமாறு சுந்தர பாண்டியன் ஏற்கனவே அழைப்பு விடுத்து விட்டான். அத்துடன் அவனுக்கு வழியும் போட்டுக்கொடுத்துவிட்டான். அந்த வழி முதலில் வீரதவளப்பட்டணம், பிறகு மதுரை, பிறகு த்வார சமுத்திரம். த்வாரசமுத்திரத்திற்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு வரப்போகிறான் மாலிக் கஃபூர். அவனையும் பாண்டியர்களையும் ஒரு சேர தமிழகத்தில் அழிப்பேன்" என்று முடித்த போது ஆவேசம் நிறைந்திருந்தது அவன் குரலில். அவன் அளித்த தகவல் அங்கு கூடியிருந்தோருக்குப் புதுமையாக இருந்தது. மன்னன் சொல்வது போல் நடந்தால் ஹொய்சள தேசம், ஹொய்சள சாம்ராஜ்யமாகிவிடுமென்பதையும், அதற்காக மன்னம் மிகப்பெரிய ஆபத்தான திட்டத்தில் இறங்கியிருக்கிறானென்பதையும் அங்கிருந்தோர் ஐயமற அறிந்து கொண்டனர்.

(தொடரும்)

Friday, August 7, 2009

விகடன் வரவேற்பறையில் இளையபல்லவன்!

எனக்கே முதலில் தெரியாது. ஏதாவது காமெடி, சினிமா பதிவு போட்டால் 100-200 பேரும், சக்கர வியூகம் போட்டால் 40-50 பேரும் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவார்கள். பதிவே இல்லாத நாட்களில் 10-20 பேராவது வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.

அப்படிப்பட்ட புகழ்பெற்ற எனது வலைப்பூவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 ஹிட்டுகள்!. என்ன ஆயிற்று என்று லைவ் ட்ராஃபிக் ஃபீடில் தேடினால் பெரும்பாலானவர்கள், விகடன்.காமிலிருந்து வந்திருந்தார்கள். அதில் இந்த வார ஆனந்த விகடன் லிங்க் இருந்தது. இது தெரிந்தது நேற்று இரவு 11.45 மணிக்கு.

சரியென்று இன்று காலை விகடன் புத்தகத்தை வாங்கிப்பார்த்ததும் விஷயம் உறுதியானது.

"நீங்க எழுதி எழுதி என்னத்த கிழிச்சீங்க? பேப்பர்ல எழுதியிருந்தா அதையாவது கிழிச்சியிருக்கலாம்! லொட்டு லொட்டுன்னு பொட்டிய தட்டிக்கிட்டிருக்கீங்க." என்ற கேள்வியோ, கருத்துரையோ தங்கமணியிடமிருந்து இனி எழ வாய்ப்பில்லை. (இது வரையிலும் இந்தக் கேள்வி எழவில்லை என்பது கூடுதல் தகவல்!.

ஏன் இனி எழாது என்பதற்கான விடைதான் தலைப்பு. இந்த வார ஆனந்த விகடனில், "விகடன் வரவேற்பறை" என்ற பகுதியில், காஞ்சித்தலைவன் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு முறை எனது புரட்சிகரப் பதிவான "ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி" என்பது யூத்ஃபுல் விகடன்.காமின் ப்ளாக்ஸ் கார்னர் துவங்கப்பட்ட சமயத்தில் இணைக்கப்பட்டது.

இப்போது பிரின்ட் எடிஷனிலேயே வந்திருப்பதும், வலைப்பூ ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே விகடனின் பார்வை இங்கு விழுந்திருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

சக்கர வியூகத்தை அறிமுகப்படுத்தாமல், திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பதிவுத்தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்!.


இதை சாத்தியமாக்கிய உங்கள் ஆதரவை எப்போதும் போல் என்றும் நாடும்,

உங்கள்
இளைய பல்லவன்

Thursday, August 6, 2009

திரைக் கலைஞன் (கதையல்ல, நிஜம்!)

சினிமா என்ற அதீதமான பொருள் அனைவரையும் ஈர்க்க வல்லது. அதன் கனபரிமாணங்கள் அளவிட முடியாதவை. சினிமா மின்சாரம் என்றால் மிகையல்ல. சிலருக்கு "பவர்". சிலருக்கு "ஷாக்". சிலருக்கு "நோ சப்ளை!". ஆனாலும் அதை நாடி, ஓடி நிதம் தேடி வருவோருக்குப் பஞ்சமில்லை.

எண்பதுகளின் இறுதிவரை சினிமா என்பது ஒரு மாயையாகவே இருந்து வந்தது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் அதன் மாயை சற்று விலக, கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் வருகை அதை மேலும் விலக்கியது. ஆயினும் என்ன பயன்? அதன் தாக்கம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. எல்லோருக்கும் சினிமா என்ற மோகம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஒரு சிலர் தன் இயல்பு வாழ்க்கையை ஏற்கும் பொருட்டு சினிமா பற்றிய எண்ணங்களைத் தள்ளி வைக்கின்றனர். சிலரது அந்தராத்மா அதை அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு திரைத்துறையை விட்டு விலகி இருப்பது, இயல்பை மீறிய செயலாக இருக்கிறது. ஒரு மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதைப் போன்றது கலைஞர்களுக்குச் சினிமா. அது உப்புத் தண்ணீரோ, நல்ல தண்ணீரோ, கூவம் நீரோ. அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் அதற்குள்ளேதான் இருந்தாகவேண்டுமென்ற அவா. ஒரு உந்துதல். இந்த நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோரை நாம் காணலாம். அனைவரின் தேடலும் ஒன்றுதான். அங்கீகாரம். அது கிடைத்துவிட்டால் மற்றதெல்லாம் தேடிவரும்.

அத்தகைய விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பலரில் எனக்கு அறிமுகமான ஒருவரை இங்கே அறிமுகம் செய்கிறேன். இந்த அறிமுகம் அத்தகையோரது உள்ளக் கிடக்கையை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இங்கே நான் செய்ய இருப்பது, ஃப்ளாஷ்லைட்டை எதிர் பார்ப்பவருக்கு மெழுகுவத்தி வெளிச்சத்தைக் காண்பிப்பது போன்றது.

திரு. கார்த்திக் ராஜா. மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானவர். எங்கள் நிறுவனத்தின் ஊழியர் தினத்தை முன்னிட்டு ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதில் எங்கள் ஊழியர்களே (என்னையும் சேர்த்து!) பாடவேண்டும் என்பது ஏற்பாடு. கார்த்திக் ராஜாவின் இன்னிசைக்குழுவை நாங்கள் புக் செய்திருந்தோம். எங்களுக்குப் பாட்டு சொல்லித்தரும் வேலையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாக எங்களைத் தேற்றி பாடவும் வைத்துவிட்டார். எங்களுக்கே ஆச்சரியம். நாங்களும் பாட முடியும் என்ற எண்ணம் வந்த உடன், மேலும் ஒரு நிழச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போதுதான் அவருடனான பழக்கம் அதிகமானது.

ஒரு நாள் ஒரு டி.வி.டி.யைக் கொண்டுவந்து என்னைப் பார்க்கச் சொன்னார். ஒரு குறும்படம். அவரது திரைக்கதை, வசனம் இயக்கத்தில். அப்போதுதான் அவரது திரைத்துறைப் பின்னணி குறித்து அறிந்து கொண்டேன்.


இசைப் பட்டதாரியான அவருக்கு இளையராஜா என்றால் உயிர் அல்லது அதைவிட மேல். மதுரையை அடுத்த மேலூரிலிருந்து இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு சென்னை வந்தவரை வழக்கம் போல் திரையுலகம் திருப்பியனுப்பியது. ஆனாலும் அயராமல், துவளாமல் மதுரை இசைக்கல்லூரியில் சேர்ந்து இசைப் பட்டம் பெற்று மீண்டும் சென்னை வந்தார். நோக்கம் ஒன்றுதான், இளையராஜாவைச் சந்திக்க வேண்டுமென்பது.

வழக்கம் போலவே அனைத்து விதமான இடர்களைச் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை. இடையில் ஈரோடு சவுந்தருடன் ஏற்பட்ட நெருக்கம், இயக்கம் நோக்கி அவரைத் திருப்பியது. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக ஏழு படங்களில் பணியாற்றிய அனுபவமும், கருத்துக் குவியல்களும் பின்புலமாக இருக்க இயக்குனருக்கான அங்கீகாரத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தக் குறும்படம், தன் நண்பருக்காக இயக்கியிருக்கிறார். புகைப்பழக்கத்தைப் பற்றி மிக மிக மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார். அந்தக் குறும்படத்தைப் பற்றிய விமர்சனமும் அவருடனான என் கலந்துரையாடலின் தொகுப்பும் அடுத்த பதிவில்.


அவருடனான கலந்துரையாடலில் சினிமாக்காரர்களைப் பற்றிய எனது புரிதல்கள் தெளிவுபட்டன. இது வரை சினிமாத் துறைக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது என்ற என் நிலையில் ஒரு மாற்றம்! ஒரு வருங்கால இயக்குனர், இசையமைப்பாளருடனான பழக்கம் என்பது சினிமா என்ற ஊடகத்தை நோக்கிய எனது பார்வையை 'ஜூம்' செய்திருக்கிறது!.

இசையின் பயணம் இசையோடு இயக்கத்தை நோக்கி என்பதைப் புரிந்து கொண்டேன்.

(திரு கார்த்திக் ராஜாவுக்கு, தமிழ்ஸ்டூடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் குறித்துத் தெரிவித்திருந்தேன். அவர் 8.8.9 அன்று நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.)

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 12

அத்தியாயம் 12: குறில் நெடில்

தொரசமுத்திரம் என்று கொச்சையாக அந்நாளில் அழைக்கப்பட்டதும் ஹளபேடு என்று இன்னாளில் அறியப்படுவதுமாகிய ஹொய்சளர்களின் தலை நகரமாகிய த்வார சமுத்திரத்திற்கு மீண்டும் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக வல்லாளனைத் தனியாக விட்டுவிட்டு வந்து விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும். ஏனெனில், இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்யத் துவங்கியிருந்தது.

அது ஒரு கார்கால நாளின் மாலைப் பொழுது. காலை முதல் பெய்திருந்த மழை சற்று ஒய்ந்து லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. நடுவானில் மேகங்கள் திரண்டிருந்தாலும், மேற்கே மேகங்கள் இல்லாததால் சூரியனின் செந்நிற கிரணங்கள் பூமியை எட்டிப்பார்த்தன. நன்றாகப் பெய்த மழையில் கரும்பச்சை வர்ணத்தைப் பெற்றிருந்த மரங்கள் மேலைச் சூரியனின் கிரணங்களால் மெருகூட்டப்பட்டு மேலும் தகதகத்தன. சூரியனின் ஒளி லேசாக அடித்துக் கொண்டிருந்த சாரலில் பட்டுத் தெரித்ததால் கீழ்வானில் தோன்றிய வானவில், வானுலகின் தோரணவாயிலோ என்றெண்ணும் வகையில் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சமுத்திரம் என்ற பெயருக்கேற்றார்ப்போல் நீண்டு பரந்து விரிந்திருந்த த்வாரசமுத்திர ஏரியானது மழையால் நிரம்பி காற்றால் தளும்பிக் கொண்டிருந்தது. ஏரியிலிருந்து வந்த குளிர்காற்றும், மழைச்சாரலும், ஒரு இன்பானுபவத்தை அளித்துக் கொண்டிருந்தன.

அந்த ஏரியின் கரையில் அமைந்திருந்த மண்டபத்தின் மேல் உப்பரிகையில் அமர்ந்து ஏரியை நோக்கிக்கொண்டிருந்தான் வல்லாளன். இத்தகைய ரம்மியமான சூழல் இருந்தும் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் அவனது இருப்பு இங்கில்லை என்பதை தெளிவாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.


ஒவ்வொரு அரசகுலமும் ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பான நிலையை அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ஹொய்சளர்களில் வல்லாளனின் கொள்ளுத்தாத்தாவாகிய இரண்டாம் வல்லாளன் காலத்தில் ஹொய்சளர்களின் கீர்த்தி சிறப்பான நிலையை எட்டியிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். அதற்குப் பிறகு அவரது மகன் சோமேஸ்வரன் ஒரு விதமாக நாட்டைப் பரிபாலனம் செய்தான், இறுதியில் அவனால் கட்டிக்காக்க முடியாமல் போகவே தனது இரு மகன்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டான். நரசிம்மன் என்ற மகனை த்வாரசமுத்திரத்திற்கும், ராமனாதன் என்ற மகனை தமிழகப் பகுதிக்கும் தலைவனாக நியமித்தான். ஆனால் ஜடாவர்ம சுந்தர பாண்டியரின் பராக்ரமத்தால் ராமனாதன் முறியடிக்கப்பட்டதோடு, அவனது உதவிக்கு வந்த நரசிம்மனும் குடகு வரை விரட்டப்பட்டான். இந்தத் தோல்வி நரசிம்மனை வெகுவாக பாதித்தது. அதைவிட அவனது மகனாகிய வல்லாளனை மிகவும் கொதிப்படைய வைத்தது. சமயம் பார்த்து பாண்டியர்களை வஞ்சம் தீர்க்க திட்டமிட்டிருந்தான். இந்தப் பின்னணியில்தான் மாலிக் கஃபூர் படையெடுப்புக்கான ஏற்பாடுகளும், சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியனுக்கிடையேயான அரசப் பிளவும் ஏற்பட்டிருந்தன.

மேற்கண்ட நிகழ்வுகளின் காரணம் பற்றி பாண்டியர்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகக் கருதினான் வல்லாளன். அதற்கான ஆதாரம் இருக்கவே செய்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இருந்தது பாண்டிய தேசம். சுற்றியுள்ள பகைவர்கள் யாரும் அந்த அளவுக்கு வலுவில்லாததே காரணம். அதனால் பாண்டிய வீரர்களுக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாண்டிய தேசம் இரண்டாகப் பிரிந்தது மேலும் பலவீனத்தைக் கூட்டியது. பாண்டியனைப் பழி தீர்க்க இதுதான் சமயமென்று கருதினான் வல்லாளன். ஆனால் மாலிக் கஃபூர் பற்றிய சிந்தனை அவன் மனதை விட்டகலவில்லை.

இவ்வாறாக பற்பல யோசனைகளில் இருந்ததால், இயற்கையில் கலா ரசிகனான வல்லாளன் அந்தச் சூழலிலிருந்து அன்னியப்பட்டுப்போனான். சூரியன் மலை வாயிலில் விழுந்து இருள் கவியத் தொடங்கி பந்தங்கள் ஏற்றப்பட்ட போதுதான் அவனது நினைவு இவ்வுலகிற்குத் திரும்பியது. நெடிய பெருமூச்சுடன் ஆசனத்தை விட்டெழுந்து கீழே இறங்கி மாளிகை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

=====

அரச மாளிகையானது கோட்டையின் மேற்குப் பகுதியை ஒட்டினார்ப்போல் அமைக்கப் பட்டிருந்தது. அதை ஒட்டி த்வாரசமுத்திரமென்னும் ஏரி இருந்ததால் அது இயற்கை அரணாக மட்டுமின்றி, சுகமான காற்றுக்கும் வழி செய்தது. ஏரியிலிருந்து வெட்டிவிடப்பட்ட கால்வாய் அந்தப்புரத்திலுள்ள நந்தவனத்திற்கு நீரைச் சேர்த்ததோடு அங்கே உள்ளே அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திற்கும் நீரைப் பாய்ச்சியது. அந்தப்புர வாசிகள் அங்கே நீராடுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குளமும் அதைச் சுற்றியுள்ள நந்தவனமும் வல்லாளனின் இல்லாளான நீலாவின் கைவண்ணத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.

இத்தகைய எழில் கொஞ்சும் சூழல் எதிலும் மனதைச் செலுத்தமுடியாமல் அந்தப்புரம் வந்த வல்லாளன் நேராக உள்மாளிகையை அடைந்து ஆகாரமும் அருந்தாமல் படுக்கையறைக்குச் சென்றான். உடை கூட மாற்றாமல் மஞ்சத்தில் அமர்ந்து தனது சிந்தையிலிருந்த சிந்தனைக் குதிரையை மீண்டும் விரட்டினான்.

அரசன் உள்ளே வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதுமே நீலா தனது பணிகளை முடித்துக் கொண்டு மகனை உறங்கச் செய்துவிட்டு, படுக்கையறைக்கு விரைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி புதிதாக இல்லை. கடந்த சில நாட்களாகவே வல்லாளனின் நிலை இதுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், ஒரு நெடிய மூச்சின் காரணமாக அவள் அவயவங்கள் எழும்பித் தாழ்ந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு மஞ்சம் நோக்கிச் சென்றவள், ஏதும் பேசாமல் அவனருகில் அமர்ந்தாள்.

பொதுவாகவே கலா ரசிகனும், இன்பப்பிரியனுமான வல்லாளன், நீலாவிடத்தில் அளவிடற்கரிய அன்பை வைத்திருந்தான். அவளருகாம அவனை எப்போதுமே இன்பத்தில் ஆழ்த்தும் திறமை படைத்தது. அப்படியிருந்தவனையும் மாற்றக்கூடிய பெருங்கவலை என்னவென்பதை அவளிடத்தில் தெரிவிக்காமலேயே இருந்தான் வல்லாளன். ஆனால் சிறந்த மதியூகியான நீலா அவன் மனதில் ஓடிய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். ஆயினும் அவனே சொல்லட்டுமென்று வாளாவிருந்துவிட்டாள். இப்போது அவனது நிலை மோசமாகிவிடவே இனி அப்படியே விடுவதில் ஒரு பயனுமில்லை என்ற முடிவிற்கு வந்தவளாய், அவனை சற்றே உலுக்கினாள்.

அவளது அருகாமையின் வாசம் அவனது நாசியைத் தொளைத்து அவனை இவ்வுலகிற்கு இழுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அந்த உலுக்கல் அவனை உடனே டுக்கையறையில் இறக்கியது. அவளை நோக்கித் திரும்பியவன், "நீலா" என்றான். புன்முறுவல் செய்ய முயன்று தோல்வியும் கண்டான்.

"சுவாமி. உங்களிடம் இந்த மாறுதலை கடந்த சில வாரங்களாகவே பார்த்து வருகிறேன். உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். ஆயினும் நீங்களே சொல்லாமல் நான் கேட்பது அவ்வளவு நன்றாயிராது என்பதாலேயே வாளாவிருந்துவிட்டேன். ஆனால் இப்போது உங்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இனி தாமதிப்பதில் பயனில்லை. சொல்லுங்கள்." என்றாள் ஆறுதலாக அவனை வருடியவாறு. நீலாவின் பேச்சும் வருடலும் வல்லாளனை இளக்கிவிட்டன. இவ்வளவு புரிதலுள்ள மனைவி அமையப்பெற்றிருக்க தான் வீணே வருந்திக்கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவன், "நீலா, எது எப்படியாயினும் உன் அருகாமையில் நான் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். ஆனால் என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாதது ஒன்றுண்டு. அதுதான் பாண்டியர்களிடம் என் தந்தை அடைந்த தோல்வி. தன் சகோதரனைத் தாக்க வந்தவனைத் தடுக்க வந்தவனிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்து கொள்ளாமல் மிகவும் மோசமாக நடந்து கொண்டான் பாண்டியன். அது நம் பரம்பரைக்கே அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. அதைத் துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இத்தனை நாளும் வாளாவிருந்துவிட்டேன். இப்போது காலம் கனிந்து விட்டது. பாண்டியர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம். கணக்கை நேர் செய்யவேண்டிய தருணம். பாண்டியர்களை அடியோடு அழித்து தமிழகத்தை ஹொய்சள ராஜ்ஜியத்துடன் சேர்த்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை முடித்துவிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் வடக்கில் மாலிக் கஃபூர் தண்டு இறங்கியிருக்கிறான். அவனைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனைக் கவனிப்பதா, இல்லை பிளவு பட்டிருக்கும் பாண்டியர்களுடனான பகையைத் தீர்த்துக் கொள்வதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய் நீலா". என்று கடகடவென பள்ளி சென்று திரும்பிய குழந்தை அனைத்தையும் தாயிடத்தில் ஒப்பிப்பது போல் கொட்டிவிட்டான். இப்போது அவனும் குழந்தையாகப் படுத்துவிட்டான் அவள் மடியில்.

இவையனைத்தும் நீலா அறிந்ததேயென்றாலும், உடனடியாக ஒன்றும் சொல்லாமல், அவனது தலையைக் கோதியவாறே மந்தகாசப் பார்வையை அவனது விழிகளோடு கலக்க விட்டாள். அது பூரணமாக அவனை கவலையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. "சுவாமி, ஆந்திரத்தில் அமைந்துள்ள காகதீய அரசின் மகாராணியார் ருத்ராம்பா தேவியிடத்தில் சில காலம் பழக நேர்ந்தது. கலை மகளும், அலை மகளும், மலை மகளும் ஒருங்கே இருப்பது போன்ற வடிவில் இருந்தார்கள் அந்த தேவி. ஆயினும் ஒரு அன்னையைப் போல் ஆதுரத்துடன் எங்களிடத்தில் பழகுவார்கள். ஒரு முறை அவர்களது அரசவைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அவர்களது அரசாட்சித் திறனைக் கண்டு வியந்திருக்கிறேன். நாமும் இது போல் ஒரு நாள் சிறந்த ராஜதந்திரியாவோம் என்றும் எண்ணியதுண்டு. அதற்கேற்றார்ப்போல், தாங்களும் அவ்வப்போது என்னிடத்தில் யோசனைகள் கேட்டு வருகிறீர்கள். தாங்கள் காஞ்சிக் கடிகையில் பயிலச் சென்றிருந்தபோது, இந்த நாட்டை என் சக்திக்கேற்றார்ப்போல் நிர்வகித்தேன். ருத்ராம்பா தேவி இந்த நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணுகிற போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்". என்று சொல்லி நிறுத்தியவள், அவன் கண்ணோடு கண்ணை மீண்டும் கலந்தாள்.

"சுவாமி, ஸ்தான பலம் என்று ஒன்று உண்டு. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையாதீர்கள். நமக்கருகில் இருக்கும் மாலிக் கஃபூர் தற்போதைக்கு அசையாவிட்டாலும், நம் அசைவுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். நெடுங்காலம் அவனால் தாமதிக்க முடியாது. விரைவில் நகர ஆரம்பித்துவிடுவான். அவனது கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது த்வாரசமுத்திரம். இதை நீங்கள் இப்போது விட்டகன்றால் உடனே படையெடுத்து வந்து அழித்துவிடுவான். ஆகவே, தாங்கள் இங்கே தாமதித்து, அவனை எதிர்கொள்வதே நல்லது. பாண்டியர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.அருகில் ஒரு எதிரியை வைத்துக் கொண்டு நெடுந்தூரம் செல்லாதீர்கள். உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். " என்று கூறி முடிக்கும் போது இருவரும் மஞ்சத்தில் சாய்ந்திருந்தனர். அவளது கடைசி வரிகளைக் கேட்ட வல்லாளனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. நீலாவின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், வல்லாளனது கைகள் அவளது அங்கங்களை ஆராய்ந்து கொண்டிருந்தன. அவை ஒன்றும் புதிதல்லவென்றாலும், ஒவ்வொருமுறையும் புதிதாய்த் தோன்றியது வல்லாளனுக்கு. அவனது ஆராய்ச்சியில் வெகுவாக மயங்கிய நீலா தான் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லிவிட்டாள்.

அவனது புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் என்னவென்று கேட்டாள். உனது கடைசி வரிகளில் குறிலும் நெடிலும் விளையாடுவதை எண்ணினேன். புன்னகை மலர்ந்தது, என்று கூறி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் விளக்கவும் செய்தான். அதன் பலனை உடனடியாகவும் பெற்றுக்கொண்டான்.

அதற்குப் பிறகு வந்த உம் என்ற ஒற்றை ஒலியைத் தவிர அந்த அறையில் புரியும்படியான ஓசை எதுவும் கேட்கவில்லை.


(தொடரும்)

Sunday, August 2, 2009

புணர்ச்சி பழகுதல்... (150வது பதிவு)

நாம் தினமும் அலுவலகத்தில் சந்திக்கும் பழகும் பலரை விட, எங்கோ மூலையில் இருக்கும் மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ நம்மை தொடர்பு கொள்ளும் நம் நண்பனிடம் கொண்டுள்ள நட்பு பெரியதல்லவா? அந்த நட்பு தானே நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறது?

புணர்ச்சி என்பது சேர்க்கையைக் குறிக்கும். சேர்ந்தே இருப்பதெல்லாம் இயைந்திருப்பதாகக் கொள்ளலாகாது.


வார்த்தைகளை, இருப்பை, இயல்பை மீறிய உணர்வு நட்பு. நட்பு பெரும்பாலும் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை, நட்பைத் தவிர.

நான் எதிர் பார்ப்பதும் அதுதான் நட்பு மட்டுமே..

என்னுடைய நூறாவது பதிவும் நட்பைப் பற்றியதுதான் என்று எண்ணும் போது அதன் ஒற்றுமை சற்றே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. என் 150வது பதிவும் நட்பைப் பற்றியமைந்தது என் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

(அதிகாரம் நட்பு, குறள் 5)

நல்ல நட்பிற்கடிப்படை புணர்வதன்று (அதாவது சேர்ந்து இருப்பதன்று), உணர்வதுதான் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார் தெய்வப்புலவர்.

அந்த உணர்வு பூர்வமான உங்கள் நட்பை என்றும் நாடும்
உங்கள்
இளையபல்லவன்...

Saturday, August 1, 2009

சீரியல்களை எதிர்ப்போரே! சற்று சிந்திப்பீரா???

சே! என்ன உலகமடா இது. நல்லது செய்வோரை நாடாமல் நிந்திப்போரை என்ன செய்வது? தெய்வமே உனக்குக் கண் இல்லையா? இருந்தும் காட்சி தெரியவில்லையா? கலி முற்றிவிட்டதா? அல்லது கருணைதான் வற்றி விட்டதா? என்ன கொடுமை சரவணன் இது??

இப்படியெல்லாம் புலம்பத் தோன்றுகிறது சீரியல்களை எதிர்ப்போரைப் பார்த்து.

சீரியல் எடுப்பவர்களை சீரியல் கில்லர்ளாகப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று நேரடியாகவே கேட்கிறேன்.

முடிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்..

சீரியல் எடுப்பது சிம்பிளான வேலையா? சீரியல் என்பது எவ்வளவு சீரியஸ் மேட்டர் என்பதை உங்களுக்கெல்லாம் உறைப்பதைப் போல் எடுத்துரைக்கவே இந்தப் பதிவு!

முதலில் ஒரு ஸ்டேடிஸ்டிக்ஸ் (புரட்சிக் கலைஞர் ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் புரட்சி தளபதி ரேஞ்சுக்கு இருக்கும்!!)

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. அதாவது தொலைக்காட்சி விளம்பரங்களுக்குத் தணிக்கை வேண்டுமென்பதே அது. அந்த விவகாரம் ஒரு புறமிருக்க, ஒரு சுவையான தகவலை அமைச்சர் (பெண் அமைச்சரை எப்படி அழைப்பது?!) அம்பிகா சோனி அவர்கள் சொன்னார். இந்தியாவில் 480 அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் இருக்கின்றன என்பதுதான் அது.

480 சேனல்களில் 75 விழுக்காடு என்டெர்டெய்ன்மென்ட் சேனல்கள் என்றால் 360 சேனல்கள். அதில் ஒரு நாளைக்கு 10 சீரியல் என்றால் கூட ஒரு நாளைக்கு 3600 சீரியல்கள்!! இதில்லாமல் வார இறுதி சீரியல்கள் என்றெல்லாம் வைத்துக் கொண்டால் கூட 4000 முதல் 5000 சீரியல்கள் ஒரு வருடத்தில் டி.வி.யில் ஓடி(ஊர்ந்து)க்கொண்டிருக்கின்றன. இதற்கு எத்தனை நடிகர்கள், நடிகைகள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், இன்ன பிற தொழில் நுட்பக் கலைஞர்கள்???

(ஸ்டேடிஸ்டிக்ஸ் முடிவுற்றது..)

இப்போது தெரிந்து கொண்டீர்களா??

இன்னொரு ஸ்டேடிஸ்டிக்ஸ்

டிவியில் எத்தனை வகைகள் என்று தெரியுமா?? (பிளாக் அன்ட் வொயிட், கலர், எல்.சி.டி. இன்னுல்லாம் சொல்லக்கூடாது)

டி.டி., கேபிள், சி.ஏ.எஸ், டி.டி.எச் (இதுல சன், டாடா, ஜீ, பிக், ஏர்டெல் அப்படின்னு ரகங்கள்)

ஒவ்வொருத்தருடைய டீ.வி.லயும் 30முதல் 300-400 சேனல் வரை இருக்கு...

(இன்னொரு ஸ்டேடிஸ்டிக்ஸ் முடிந்தது)

இப்படி 480 சேனல்களும், டிஷ் டி.டி.எச் டிவிக்களும் சேர்ந்து கொண்டு போட்டி போட்டு மக்களுக்கு சேனல்களை அளிக்கின்றன.

போதாக்குறைக்கு ரிமோட் வேறு ஒவ்வொருத்தர் கையிலும் இருக்கிறது. ஒரு செகண்ட் தொய்வா இருந்தாலும், உடனே அடுத்த சேனல் மாறும் நம் முன்னோர்களின் குணம் மட்டும் மாறாமல் இருக்கிறது.

இத்தனை இருக்கும் போது மக்களைக் கட்டிப் போட தேவையான கயிறு ஒன்று வேண்டுமல்லவா??? அந்த மந்திரக் கயிறுதான் சீரியல்.......

மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் ஒண்ணுவிட்ட மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் ரெண்டுவிட்ட மாமியார், மருமகள், நாத்தனார், ஓரகத்தி, மச்சினர், கணவர், மாமனார், அக்கா, தங்கை, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, மற்றும் பல பெயர் தெரியாத உறவுகளுடன் கதையை நகர்த்திச் செல்வது எவ்வளவு கடினமான வேலை என்பது சீரியல் எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.

சீரியல் பார்ப்பதை விட எடுப்பது என்பது எவ்வளவு கொடுமையான செயல்???
ஒரு சீரியலில் ஒருவர் வில்லி அத்தையாக நடிப்பார். அடுத்த சீரியலில் அவரே நல்ல கஷ்டப்படும் அம்மாவாக இருப்பார். கன்டினுடியை எப்படி மெய்ன்டைன் செய்வது??

சரி கதைகளாவது அதிகம் இருக்கிறதா??? மாமனார் இல்லாமல் இருக்கலாம், கணவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மாமியார் மருமகள் ஆகிய கேரக்டர்கள் இல்லாத ஒரு சீரியலை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா? மாமியார் மருமகள் ஆகிய இரு கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு வெரைட்டி படைக்கிறார்களே இதைப் பார்த்துமா உங்களுக்குப் பரிதாபம் வரவில்லை???

கதை கிடக்கட்டும் க(ழு)தை. நடிகர் நடிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். திடீர் திடீரென அவர்கள் காணாமல் போகும் போது 'அவர் இவராகிவிட்டார்' என்று கேப்ஷன் போடும் போது அவர்கள் படும் பாடு உங்களுக்குத் தெரியுமா????

அதையும் விடுங்கள்... டைட்டில் சாங்க் என்று ஒன்று இருக்கிறதே... அதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. எத்தனை குருப் டேன்சர்கள் தேவைப் படுகிறார்கள். எத்தனை முறை சீரியல் டைட்டிலை ரிப்பீட்ட வேண்டியிருக்கிறது.. ஒவ்வொரு சீரியலுக்கும் டைட்டில் சாங்க் வெரைட்டி வைப்பது பெண்டை நிமிர்த்துகிற வேலை....

அட அதைக்கூட விட்டுவிடுங்கள்.. இந்த ஸ்லாட் என்று ஒன்று இருக்கிறதே.. இறைவன் எவ்வளவு கஞ்சமானவன். ப்ரைம் டைம் மூன்று மணி நேரம் மட்டும்தானாம். கடவுளே, அதுவே ஆறு அல்லது எட்டு மணி நேரம் என்று இருந்துவிட்டால் எத்தனை சீரியல்களை திணித்து விடலாம்.. இப்போது சீரியல் எடுப்பவர்கள் ப்ரைம் டைமுக்குள் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது....

ஹூம்... மகா ஜனங்களே... ஏதோ டிவி இருக்கிறதா, கேபிளோ, டிஷ்ஷோ வாங்கினோமா? டிவியைப் போட்டோமா, புரோகிராமைப் பார்த்தோமா, என்று இருக்காமல், அது சரியில்லை இது சரியில்லை, அதனால் இதுவாயிற்று, இதற்கு அது காரணம் என்று சீரியலைப் பற்றி சீரியல் கணக்காக குறை சொல்வதை நிறுத்துங்கள்.

நீங்களெல்லாம் சிந்தித்து செயல்பட்டாலே போதும்... துன்பங்கள் யாவும் தீரும்...