Thursday, August 13, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 13

அத்தியாயம் 13: ஹொய்சள சாம்ராஜ்யம்

காலைக் கிரணங்களை வீசி மெல்ல எழுந்தான் கதிரவன். அவனோடு எழுந்தன உலக உயிர்களெலாம். உறங்குவது போலும் சாக்காடு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த சாக்காட்டிலிருந்து உலகத்தை மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க வந்த உதய சூரியன் மாலைப் பொழுதைப் போலன்றி தன் செந்நிற கிரணங்களின் வண்ணத்தை உடனே பொன்னிறத்துக்கு மாற்றினான். அவனது சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஹொய்சள தலை நகர மக்களுக்கும் வந்து விட்டது போலும். அந்தக் காலை வேளை வழக்கம் போலவே கலகலப்பாக இருந்தது.

இரவில், நீலாவுடனான அந்தரங்க தர்க்கம் மூன்றாம் ஜாமத்தைத் தாண்டி நீண்டாலும் சூரியன் உதிக்குமுன்னரே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, தலை நகரத்தின் தலைமைக் கோவிலான ஹொய்சளேஸ்வரர் கோவிலுக்குச் சென்றான். கூடவே நீலாவும். ஒரு மன்னவனாகச் செல்லாமல் பக்தனாகச் சென்ற மன்னவனை மக்கள் வணங்கவும் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் நேரே கோவிலுக்குள் சென்றான் வல்லாளன். நாமும் அவனைத் தொடர்வோம். அப்போதுதான் அந்தக் கோவிலை நன்றாகப் பார்க்க முடியும்.

ஹொய்சளேஸ்வராலயம், தமிழகக் கோவில்களைப் போலன்றி முற்றிலும் வேறு விதமாக இருந்தது. அங்கே ராஜ கோபுரம் இல்லை. கோவிலைச் சுற்றியும் மதிள்கள் இருந்தன. உள்ளே நுழைய தோரண வாயில் மட்டுமே உண்டு. உள்ளே நுழந்ததும் விசாலமான பிரகாரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. வாயிற்தோரணத்திலிருந்து சற்றேறக்குறைய நூறு அடிகள் தொலைவில் முக்கியக் கோவில் அமையப்பெற்றிருந்தது. ஜகதி என்ற மேடை அமைப்பின் மேல் அமையப்பெற்றிருந்த கோவிலின் தூண்களும், பக்கச்சுவர்களும் பல்வேறு நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவில் தமிழ் நாட்டுக் கோவில்களைப் போல் கருங்கற்களால் அமைக்கப்படாமல், கெட்டியான சுண்ணாம்புக்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவ்வளவு நுணுக்கமான, உயிரோட்டமுள்ள, தத்ரூபமான சிற்பங்களைச் செதுக்க முடிந்தது. ஆஹா. இவற்றைக் காணக் கண் கோடி இருந்தாலும் போதாதல்லவா?

அந்த ஜகதி எனப்படும் மேடையில் ஏறினால் நமக்கு முதலில் தெரிவது ஒரு மண்டபம். தூண்கள் உருளை வடிவில் இருந்தன. வெளிப்புறத் தூண்களைப் போலன்றி இவற்றில் சிற்பங்கள் அமையாமல் வட்டமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி கருவறை எனப்படும் கர்ப்பக்கிரஹத்துக்குச் சென்றால் அங்கே, ஹொய்சளேஸ்வரர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே சந்தளேஸ்வரரும் அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். வல்லாளனின் கொள்ளுப்பாட்டனான விஷ்ணுவர்தனனின் ஆட்சியில் அவன் நினைவாகவும் அவன் மனைவி சந்தளாதேவியின் நினைவாகவும் அவனது படைத்தலைவன் கேதுமல்லன் கட்டிய கோவில் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாட்டைக் குறிக்கும் வகையிலும், ஆளும் பரம்பரையைக் குறிக்கும் வகையிலும் ஹொய்சளேஸ்வரா எனப் பெயர் பெற்று தலை நகரத்திலேயே அமையப்பெற்ற கோவிலில் எப்போதும் சிறப்புடன் பூஜைகள் நடப்பது வழக்கம். அதுவும் இன்று அரசனும் அரசியும் விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதால் பூஜையின் சிறப்பு அதிகமாயிற்று. பூஜையில் மிக கவனத்துடன் கலந்து கொண்ட வல்லாளன் தன் புதிய முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தான்.

விஸ்தாரமான பூஜைகளின் முடிவில் முதல் மரியாதையை ஏற்றுக்கொண்டு பிராசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தப் பிரசாதத்தட்டு தவறி கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த முதியவரான அர்ச்சகர் தன்னை மன்னித்தருளுமாறு மன்னவனிடம் மன்றாடினார். அந்த நிகழ்வு தன் மனதைச் சிறிது வாட்டவே, அர்ச்சகரை அமைதி கொள்ளுமாறு பணித்துவிட்டு கோவிலை விட்டகன்ற வல்லாளன், நேரடியாகத் தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.

====

மீண்டுமொருமுறை அந்த மண்டபத்திற்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்முறை ஏற்கனவே இருந்தவர்களை விட சிலர் கூடுதலாக இருந்தனர். அவர்கள் முறையே வடதிசை தண்ட நாயகம் மற்றும் தென் திசை தண்ட நாயகம். (தண்ட நாயகம் என்பது அந்த திசையில் அமைந்த படைக்குத் தளபதியைக் குறிக்கும்.) அரசன் வரவை நோக்கிக்காத்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அரசன் வரும் தகவல் வந்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.

(இங்கே சிலவற்றை நாம் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் சில நிகழ்வுகள் அனைத்து புதினங்களிலும் இருப்பதைக் காணலாம். அவற்றுள் ஒன்று அந்தரங்க ஆலோசனை. இவை புதினங்களில் முக்கிய இடம் பெறுகின்றன, திருப்பு முனையாக இருக்கும் இடங்களில் இவை கட்டாயம் இடம் பெறும். இந்த ஆலோசனைகள் உண்மையாகவே நடந்திருக்குமா அல்லது புனைவா என்று நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால், பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் போது, மன்னன் சர்வாதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், அமைச்சர் குழுவினருடனும், மற்ற அரச அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுத்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு அரசவையிலும் அமைச்சர் குழு முக்கிய அங்கம் வகித்து வந்தது. அவர்களது முக்கியப்பணி அரசு இயந்திரத்தைத் திறம்பட நடத்துவது. அரசனுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவது.

இன்றைய அரசு முறையின் முன்னோடி, ஹொய்சள அரசு முறைதான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆகவே, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போதெல்லாம் அமைச்சரவையைக் கூட்டுவது இன்றியமையாததாகிறது!! மேலும் 'ப்ரோடோகால்' மிகக் கடுமையாகக் கடை பிடிக்கப்பட்டு வந்ததும், மன்னன் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு 'ஐகானிக் ஸ்டேச்சர்' அளிக்கப்பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியப்படுகின்றன. ஆகவே அவ்வாறு ஆலோசனைகள் வருவதும் மன்னனுடனான பேச்சுக்களும் இயல்பை ஒட்டியே இருக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்வீர்களாக!)

கையசைவினாலேயே அவர்களை அமரச்சொன்ன வல்லாளன் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.

"நமது அரசில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்களது ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்படுகின்றன. அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். அந்தக் கடமையை இதுவரையிலும் சரியாகவே நிறைவேற்றி வந்துள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஹொய்சளேஸ்வரரைத் தரிசித்து விட்டு நேராக இங்கு வந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இங்கே நாம் கூடியிருந்த போது படையெடுப்பைப்பற்றி முடிவு செய்தோம். அந்தப் படையெடுப்புக்கு இப்போது நேரம் வந்து விட்டது. தளபதியாரே, நமது தற்போதைய படை நிலவரம் என்ன என்பதை அனைவருக்கும் விளக்குங்கள்"

"உத்தரவு மன்னா. நம்மிடையே மூன்று படைப்பிரிவுகள் இருக்கின்றன. அவை முறையே குத்தி (ஆந்திர மாநிலம் குண்டக்கல் அருகே இருக்கிறது. பிற்காலத்தில் இது விஜய நகரப் பேரரசின் முதல் தலை நகராக விளங்கியது.), குவலாலா (இன்றைய கோலார்) மற்றும் தலை நகரான த்வார சமுத்திரத்தல் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன் வரை குறைந்த படை வீரர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற படை வீரர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லுமாறும் தங்கள் குடும்பத் தொழிலைக் கவனித்து வரவும் பணிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் இங்கு நடை பெற்ற ஆலோசனையின் பேரில் அனைவரும் படையில் சேருமாறு அழைக்கப்பட்டனர். இப்போது நம்மிடையே மொத்தமாக 48000 படை வீரர்களும், 4800 குதிரைகளும், 2400 யானைகளும் 400 ரதங்களும் இருக்கின்றன (1:5:10:100 என்ற அமைப்பில் படைகள் அமைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதையே பயன் படுத்தியிருக்கிறேன்."

"இந்தப்படைகளை ஒன்று சேர்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?"

"மன்னா, வடக்கிலோ தெற்கிலோ சேர்க்க வேண்டுமென்றால் ஒரு பட்சத்திற்குள் (பதினைந்து நாட்கள்) சேர்த்து விடலாம்."

"அப்படி சேர்ப்பது வெளிப்படையாகத் தெரியுமா?"

"ஆம் மன்னா, ராஜபாட்டைகளையும், சகடப்பெருவழிகளையும் உபயோகித்தால் மட்டுமே படைகள் விரைவில் சேர முடியும். அப்படிச் செய்யும் போது அனைவருக்கும் தெரிய வருவதில் வியப்பில்லையே"

"நமது படைகள் ரகசியமாகக் கலக்க வேண்டுமென்று விரும்புகிறேன்"

"அப்படியென்றால் அவர்களைக் காட்டு வழியாகத்தான் அழைத்து வர வேண்டியிருக்கும். அதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் அவகாசம் தேவைப்படும். எங்கே என்பதையும் மன்னர் தெரிவிக்க வில்லை. வடக்கிலா, தெற்கிலா?"

"சமயம் வரும் போது தெரிவிக்கிறேன். ஒரு மாதம் என்பது சரியாகத்தான் இருக்கும். படைகளை ஒரே வழியிலன்றி பல வழிகளிலும் பயணம் செய்யுமாறு உத்தரவிடுங்கள். அனைவரும் ஒரே நாளில் புறப்படாமல், ஒவ்வொரு நாளும் சிலரை அனுப்பினால் படை நகர்வது வெளியில் தெரியாமல் இருக்கும். மேலும் படைகளை மொத்தமாகக் கலக்க விடாமல், பாதி படைகளை சற்றுத் தூரத்தில் நிறுத்துங்கள். முதலில் இருக்கும் படை நகர்ந்ததும் இந்தப் படை அர்த்த சந்திர வடிவத்தில் பரவி முன்னர் செல்லும் படைக்கு அரணாகச் செல்ல வேண்டும். முன்னே செல்லும் படையில் யானைகளை அதிகப் படுத்துங்கள். அவை அரணாகச் செயல் படும். பின்னால் இருக்கும் படையில் குதிரைப்படையை நடுவில் நிறுத்துங்கள். அவை இரு பக்கமும் பாயும் நிலையில் இருக்க வேண்டும். படை வீரர்களிடத்தில் வேலும் வில்லும் அதிக அளவில் இருக்கட்டும். வாள் சிலரிடம் மட்டும் இருந்தால் போதுமானது. முன்னர் செல்லும் படைக்கு வடதிசை தண்ட நாயகமும் பின்னால் நிற்குப் படைக்கு தென் திசை தண்ட நாயகமும் தலைமையேற்பார்கள். போர் முகத்தில் நானும் இருப்பேன். என்னுடன் தளபதி இருந்து படைகளின் நடவடிக்கையை மாற்றத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார். தேவைக்கேற்ப நானும் யுத்தத்தில் பங்கெடுப்பேன். இம்முறை நமது வெற்றியில்தான் ஹொய்சளர்களின் தலை விதி நிர்ணயிக்கப்படும். தலை நகரில் அமாத்யர்கள் இருப்பார்கள். இந்தப் போர் சற்றேறக்குறைய ஒரு பட்சத்தில் முடிந்து விடும். வரும் விஜயதசமியன்று படை வடிவம் நகர வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா" என்று அடைமழை அருவி போல் திட்டத்தை விளக்கிவிட்டு தன் ஆசனத்தில் சற்று சாய்ந்து கொண்டு அனைவரையும் பார்த்தான் வல்லாளன். திட்டத்தை புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. அதன் பிறகும் அதன் லாப நஷ்டங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் முதலில் சுதாரித்தவர் மகாமாத்யர்தான்.

"மன்னர் அனைத்துப் படைகளையும் ஒரு பகுதியில் கலக்கத் திட்டமிட்டிருப்பது புரிகிறது. அது எந்தப்பகுதி என்பதும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் மற்ற பகுதி திறந்து விடப்பட்ட கதவு போல் ஆகிவிடுமே என்று அஞ்சுகிறேன்"

"மகாமாத்யரே, நன்று சொன்னீர். அவ்வாறே ஆக வேண்டும். ஏனென்றால் நான் திறந்து விடப்போகும் கதவின் பக்கம் யாரும் வரப்போவதில்லை"

"அது எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?"

"சொல்கிறேன். வேறு விளக்கங்கள். சந்தேகங்கள்?"

"திசையைத் தவிர வேறொன்றுமில்லை மன்னா?"

"நல்லது. சொல்கிறேன் கேளுங்கள். நமது படைகள் அனைத்தையும் குவலாலத்தில் சேர்க்க வேண்டும். நமது நோக்கம் பாண்டியரைத் தாக்கி தமிழகத்தை ஹொய்சள தேசத்துடன் இணைப்பது. மகாமாத்யரே, தெற்கில் தான் நமக்குப் பகை அதிகம். வடக்கில் நமக்குக் கவலையில்லை. புரிந்ததா?"

மன்னன் எண்ணம் பாண்டியர்களைத் தாக்குவதில் ஸ்திரப்பட்டுவிட்டதை அறிந்து கொண்ட மகாமாத்யர், "மன்னா தாங்கள், மாலிக் கஃபூரை மறந்து விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்"

"இல்லை மகாமாத்யரே, இல்லை. அவனால் இங்கே ஆபத்து வராது"

"அதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்'

"அவனை மதுரைக்கு வருமாறு சுந்தர பாண்டியன் ஏற்கனவே அழைப்பு விடுத்து விட்டான். அத்துடன் அவனுக்கு வழியும் போட்டுக்கொடுத்துவிட்டான். அந்த வழி முதலில் வீரதவளப்பட்டணம், பிறகு மதுரை, பிறகு த்வார சமுத்திரம். த்வாரசமுத்திரத்திற்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு வரப்போகிறான் மாலிக் கஃபூர். அவனையும் பாண்டியர்களையும் ஒரு சேர தமிழகத்தில் அழிப்பேன்" என்று முடித்த போது ஆவேசம் நிறைந்திருந்தது அவன் குரலில். அவன் அளித்த தகவல் அங்கு கூடியிருந்தோருக்குப் புதுமையாக இருந்தது. மன்னன் சொல்வது போல் நடந்தால் ஹொய்சள தேசம், ஹொய்சள சாம்ராஜ்யமாகிவிடுமென்பதையும், அதற்காக மன்னம் மிகப்பெரிய ஆபத்தான திட்டத்தில் இறங்கியிருக்கிறானென்பதையும் அங்கிருந்தோர் ஐயமற அறிந்து கொண்டனர்.

(தொடரும்)

3 comments:

☀நான் ஆதவன்☀ said...

அருமை பல்லவன். கோயில்கள் பற்றிய வர்ணனை நீங்கள் நேரில் கண்டு எழுதியது போல் உள்ளது.

சுவாரஸியம் கூடிக்கொண்டே போகிறது.

இரவோடு இரவாக புதன்கிழமை வெளியிட்டமைக்கு நன்றிகள் :)

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்!

இந்தக் கோவிலுக்கு இனிமேல்தான் செல்ல வேண்டும்!

எப்படியாவது மிஸ் ஆகக்கூடாது என்ற எண்ணம்தான்

Anonymous said...

நல்லா இருக்கு ... விருவிருப்பா இருக்கு ... ஆன நீங்க எழுதுறது Slow வா இருக்கு :(

ஒரே நாள்ல 13 பாகமும் படிச்சாச்சி :) அடுத்த பாகம் எப்ப வெளியிடுவேங்க ...

All the Best பல்லவன் :)

/K