Thursday, August 6, 2009

திரைக் கலைஞன் (கதையல்ல, நிஜம்!)

சினிமா என்ற அதீதமான பொருள் அனைவரையும் ஈர்க்க வல்லது. அதன் கனபரிமாணங்கள் அளவிட முடியாதவை. சினிமா மின்சாரம் என்றால் மிகையல்ல. சிலருக்கு "பவர்". சிலருக்கு "ஷாக்". சிலருக்கு "நோ சப்ளை!". ஆனாலும் அதை நாடி, ஓடி நிதம் தேடி வருவோருக்குப் பஞ்சமில்லை.

எண்பதுகளின் இறுதிவரை சினிமா என்பது ஒரு மாயையாகவே இருந்து வந்தது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் அதன் மாயை சற்று விலக, கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் வருகை அதை மேலும் விலக்கியது. ஆயினும் என்ன பயன்? அதன் தாக்கம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. எல்லோருக்கும் சினிமா என்ற மோகம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஒரு சிலர் தன் இயல்பு வாழ்க்கையை ஏற்கும் பொருட்டு சினிமா பற்றிய எண்ணங்களைத் தள்ளி வைக்கின்றனர். சிலரது அந்தராத்மா அதை அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு திரைத்துறையை விட்டு விலகி இருப்பது, இயல்பை மீறிய செயலாக இருக்கிறது. ஒரு மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதைப் போன்றது கலைஞர்களுக்குச் சினிமா. அது உப்புத் தண்ணீரோ, நல்ல தண்ணீரோ, கூவம் நீரோ. அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் அதற்குள்ளேதான் இருந்தாகவேண்டுமென்ற அவா. ஒரு உந்துதல். இந்த நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோரை நாம் காணலாம். அனைவரின் தேடலும் ஒன்றுதான். அங்கீகாரம். அது கிடைத்துவிட்டால் மற்றதெல்லாம் தேடிவரும்.

அத்தகைய விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பலரில் எனக்கு அறிமுகமான ஒருவரை இங்கே அறிமுகம் செய்கிறேன். இந்த அறிமுகம் அத்தகையோரது உள்ளக் கிடக்கையை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இங்கே நான் செய்ய இருப்பது, ஃப்ளாஷ்லைட்டை எதிர் பார்ப்பவருக்கு மெழுகுவத்தி வெளிச்சத்தைக் காண்பிப்பது போன்றது.

திரு. கார்த்திக் ராஜா. மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானவர். எங்கள் நிறுவனத்தின் ஊழியர் தினத்தை முன்னிட்டு ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதில் எங்கள் ஊழியர்களே (என்னையும் சேர்த்து!) பாடவேண்டும் என்பது ஏற்பாடு. கார்த்திக் ராஜாவின் இன்னிசைக்குழுவை நாங்கள் புக் செய்திருந்தோம். எங்களுக்குப் பாட்டு சொல்லித்தரும் வேலையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாக எங்களைத் தேற்றி பாடவும் வைத்துவிட்டார். எங்களுக்கே ஆச்சரியம். நாங்களும் பாட முடியும் என்ற எண்ணம் வந்த உடன், மேலும் ஒரு நிழச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போதுதான் அவருடனான பழக்கம் அதிகமானது.

ஒரு நாள் ஒரு டி.வி.டி.யைக் கொண்டுவந்து என்னைப் பார்க்கச் சொன்னார். ஒரு குறும்படம். அவரது திரைக்கதை, வசனம் இயக்கத்தில். அப்போதுதான் அவரது திரைத்துறைப் பின்னணி குறித்து அறிந்து கொண்டேன்.


இசைப் பட்டதாரியான அவருக்கு இளையராஜா என்றால் உயிர் அல்லது அதைவிட மேல். மதுரையை அடுத்த மேலூரிலிருந்து இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு சென்னை வந்தவரை வழக்கம் போல் திரையுலகம் திருப்பியனுப்பியது. ஆனாலும் அயராமல், துவளாமல் மதுரை இசைக்கல்லூரியில் சேர்ந்து இசைப் பட்டம் பெற்று மீண்டும் சென்னை வந்தார். நோக்கம் ஒன்றுதான், இளையராஜாவைச் சந்திக்க வேண்டுமென்பது.

வழக்கம் போலவே அனைத்து விதமான இடர்களைச் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை. இடையில் ஈரோடு சவுந்தருடன் ஏற்பட்ட நெருக்கம், இயக்கம் நோக்கி அவரைத் திருப்பியது. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக ஏழு படங்களில் பணியாற்றிய அனுபவமும், கருத்துக் குவியல்களும் பின்புலமாக இருக்க இயக்குனருக்கான அங்கீகாரத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தக் குறும்படம், தன் நண்பருக்காக இயக்கியிருக்கிறார். புகைப்பழக்கத்தைப் பற்றி மிக மிக மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார். அந்தக் குறும்படத்தைப் பற்றிய விமர்சனமும் அவருடனான என் கலந்துரையாடலின் தொகுப்பும் அடுத்த பதிவில்.


அவருடனான கலந்துரையாடலில் சினிமாக்காரர்களைப் பற்றிய எனது புரிதல்கள் தெளிவுபட்டன. இது வரை சினிமாத் துறைக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது என்ற என் நிலையில் ஒரு மாற்றம்! ஒரு வருங்கால இயக்குனர், இசையமைப்பாளருடனான பழக்கம் என்பது சினிமா என்ற ஊடகத்தை நோக்கிய எனது பார்வையை 'ஜூம்' செய்திருக்கிறது!.

இசையின் பயணம் இசையோடு இயக்கத்தை நோக்கி என்பதைப் புரிந்து கொண்டேன்.

(திரு கார்த்திக் ராஜாவுக்கு, தமிழ்ஸ்டூடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் குறித்துத் தெரிவித்திருந்தேன். அவர் 8.8.9 அன்று நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.)

3 comments:

☀நான் ஆதவன்☀ said...

பதிவுலகத்தை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் பல்லவன். வருங்காலத்தில் திரைஇயக்குனராகப் போகும் அவருக்கு வலையுலகம் ஒரு வடிகாலாக இருக்கும்

இளைய பல்லவன் said...

உண்மைதான் ஆதவன். அந்த முயற்சியின் ஒரு கட்டம்தான் இந்தப் பதிவு.

இந்தப் பதிவு யூத்ஃபுல் விகடன்.காமில் இணைக்கப்பட்டிருக்கிறது!

அதன் சுட்டி.
http://youthful.vikatan.com/youth/index.asp

☀நான் ஆதவன்☀ said...

கண்டிப்பா ட்ரீட் கொடுத்தே ஆகனும் பல்லவன். தொடர்ந்து கலக்குறீங்க :)