Thursday, January 29, 2009

ஒருவன், இருத்திகள் (?!)

ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். மிக அழகானவன். அவன் சுற்றத்தார் அவனுக்கும் அவனைப் போலவே அழகான இன்னொருத்திக்கும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களது திருமண வாழ்வு மிக இனிமையானதாக இருந்தது. அவர்களைப் போல் அன்னியோன்னிய தம்பதிகள் இவ்வுலகத்தில் இல்லை என்பது போல் நடந்து கொண்டார்கள்.

யார் கண் பட்டதோ, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது. ஆம் ஒரு பூவே அவர்கள் வாழ்க்கையில் புயலானது. ஒரு விழாவிற்கு அவர்கள் சென்ற போது அங்கே ஒரு ஆரணங்கு ஆடினாள். அவள் ஆட்டம் இவர்கள் ஆனந்த வாழ்வுக்கு ஆபத்தாய் அமைந்தது. அவன் தன் மனைவியைப் பிரிந்து ஆரணங்கின் மேல் மையல் கொண்டான்.

அவளோ அனவரதமும் அவனையே நினைத்திருந்தாள். விரலாபரணம் இடையாபரணமானது. உள்ளங்கவர் கள்வன் இவள் உள்ளத்தை உணரவில்லை. காலம் கனியும் என்று காத்திருந்தாள் காதற்பேதை. அவள் உறுதி காலத்தின் கோலத்தை மாற்றியது.

ஆடலரசியின் அழகில் மயங்கிய ஆண்மகன் விழித்தெழுந்தான் ஓர் நாள். அந்தோ பரிதாபம். அவன் விழித்தபோது இழப்பதற்கு ஒன்றுமில்லை அவனிடம். மீண்டு(ம்) வந்தான் அவளிடம். அவளோ அவன் செய்த தவற்றை நினைக்கக் கூட இல்லை. மணாளன் வந்ததால் மனம் மகிழ்ந்தாள். அவனைப் போற்றிப் புகழ்ந்தாள். ஆகா, இன்னா செய்தவன் நாணுமாறு நன்னயம் செய்து, ஒறுத்து விட்டாள் நங்கை. வள்ளுவன் வாக்குக்கு வாழ்வளித்த வனிதை.

ஊரார் தூற்றலைத் தாங்காத தலைவன் வெளியூர் செல்வோம் செல்வம் தேடி என்றான். மன்னவனின் சொல்லை மறந்தறியாப் பாவையுடன் சென்றான் மாநகர் நோக்கி.

சென்றவனின் கையில் செல்வமில்லை. கலங்கினான் காதலன். கால் கொலுசைக் கொடுத்துக் கை கொடுத்தாள் காரிகை. அதை விற்றுப் பணமாக்கச் சென்றான். ஆனால் பாவம், வந்தான் பிணமாக, திருடன் என்ற பழியோடு. அழுதாள், அரண்டாள் மங்கை நல்லாள். ஆயினும் என்ன மாண்டவர் மீள்வரோ.

அழுகை நீக்கினாள். ஆவேசம் கூட்டினாள். புகுந்தாள் மாநகர் வேந்தர் மாளிகையில் பொங்கு கடலென. ஆர்ப்பரித்தாள் ஆண்டவனைப் பார்த்து. நீதான் நீதிமானா? வள நாட்டின் காவலன் வழி மாறலாமா? காரிகையின் வாழ்வில் காலனாய் மாறலாமா? என்றாள். ஆண்டவன் ஆடிப் போனான். அய்யகோ என்றவன் அடங்கினான் அவனுள். அவன் அடிபற்றித் தொடர்ந்தாள் ஆண்டவன் தலைவி. அதோடு நின்றாளில்லை ஆரணங்கு. அழித்தாள் மாநகரை உருத்தெரியாமல். சென்றாள் மேற்கு நோக்கி. இருந்தாள் வடக்கு நோக்கி.
ஆங்கே ஆடலரசியோ இவர்கள் நிலை கேட்டு வெதும்பினாள். துறந்தாள் அனைத்தையும். தழுவினாள் தர்மத்தின் தாளை.

ஒருவன் ஒருத்தி என்பது மரபு. ஒருவன் இருத்தி என்பது மரபை மீறிய செயல். இதுதான் ஒருவன், இரு மகளிரின் காதை.

இதைத்தான் சற்றொப்ப 2000 வருடங்களுக்கு முன்பே காப்பியடித்து விட்டார் இளங்கோவடிகள் என்பவர். அதற்கு 'சிலப்பதிகாரம்' என்றும் பெயரிட்டு விட்டார். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்??:(((

Wednesday, January 28, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 16

அத்தியாயம் 16 - எது சக்கர வியூகம்?

சக்கர வியூகத்தின் அமைப்பு இதுதான்.
அமைப்பைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் வியூகத்தைப் ப்ரயோகிக்கும் முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தார்கள். மாதவனும் தொடர்ந்தான்.

'நண்பர்களே, இப்போது வியூகத்தைப் ப்ரயோகிக்கும் முறையை கவனமாகக் கேளுங்கள். இது இரு வகைப் படும். ஒன்று அகண்ட சக்கர வியூகம். மற்றொன்று "த்விசக்கர" வியூகம்."

" முதலாவது அகண்ட சக்கரவியூகம், அதாவது பெரிய சக்கரம் போன்றது. எதிரி படை நடத்த ஆரம்பித்தவுடன், உள் ஆரம் ஒரு பக்கம் ஒதுங்கி எதிரியைச் சுற்றி வளைத்து மீண்டும் வெளி ஆரத்தோடு சேர வேண்டும். இப்படி செய்யும் போது எதிரியின் ஒரு பக்கத்தோடு மோத வேண்டியிருக்கும். இவ்வகை ப்ரயோகம், நாம் மேடான பகுதியிலும் எதிரி கீழான பகுதியிலும் அணிவகுத்து நிற்கும் போது செய்யப்படலாம்.

இவ்வாறு ஒரு பெரிய வட்டத்திற்குள் அதாவது சக்கரத்திற்குள் எதிரியின் படை சிக்கிக் கொள்ளும் போது அனைத்துத் திசைகளிலிருந்தும் தாக்கப்படுவான். எந்த இடத்தில் வியூகத்தை உடைக்கவேண்டும் என்று எதிரி நினைத்தாலும் அதற்கு அருகிலிருக்கும் படைகள் அதன் விலாவைத் தாக்கும் போது எதிரி செயலிழந்து விடுவான்.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் வியூகத்தை நடத்துவதுதான். எதிரியை சுற்றிக் கொண்டு வரும் வரை அவனை திசை திருப்ப வெளி ஆரத்திலிருந்து படைகள் தாக்க வேண்டும். அகண்ட சக்கரவியூகத்தின் ப்ரயோகம் கீழ்கண்டவாறு இருக்கும்."
"அடுத்தது , த்விசக்கர வியூகம். த்வி என்றால் இரண்டு. இரண்டு சக்கரங்களாக வியூகத்தை அமைப்பதுதான் த்வி சக்கர வியூகம். எதிரி மிகவும் வல்லவனாக இருந்து வலுவானவனாக இல்லாவிட்டால் இந்த வியூகம் மிகுந்த பயனைத் தரும்.

முதலில் எதிரியை நம் வட்டத்திற்குள் புகவிட்டு அவனைச் சுற்றி இரு ஆரங்களையும் இணைக்க வேண்டும். அப்போது எதிரியைச் சுற்றி இரு வளையங்கள் இருக்கும். உள் வளையத்தையும் வெளி வளையத்தையும் எதிரெதிர் திசையில் சுழல விட்டு எதிரியைத் தாக்க வேண்டும். ஒரே இடத்திலிருந்து இரு விதமான தாக்குதல்கள் எதிரியை நசுக்கி விடும். த்விசக்கர வியூகத்தின் ப்ரயோகம் கீழ்கண்டவாறு இருக்கும்."
"இவைதான் சக்கரவியூகமும் அவற்றின் ப்ரயோகங்களும். உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருப்பின் கேளுங்கள். அதை நீக்க முயல்கிறேன்" என்று நிறுத்தினான் மாதவன்.

மாதவன் சொல்லச் சொல்ல வல்லாளன், வீர பாண்டியன், கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரின் கண்கள் விரிவடைந்தன. அடடா இது முன்னமே தெரிந்திருந்தால் இப்போது ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவியிருக்கலாமே என்று எண்ணினார்கள். அவர்களின் அகக் குறிப்பை முகம் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியது. இளவழுதியின் முகத்தில் மட்டும் குழப்ப ரேகைகள். மாதவனை நோக்கி ஏதோ கேட்க வாயெடுத்தவனை சைகையாலேயே அடக்கினான் மாதவன். அவன் குறிப்பை அறிந்து கொண்ட இளவழுதியும் அமைதியானான்.

வல்லாளன்தான் தன் எண்ணவோட்டத்தை அப்பட்டமாக இயம்பினான், "அய்யா, இத்தகையதொரு வியூகம் மட்டும் முதலிலேயே தெரிந்திருந்தால், இந்த தேசத்தையே வென்றிருப்பேனே." என்றான் உணர்ச்சி பொங்க.

'மிக பயங்கரமான வியூகம். எதிரிக்கு அழிவு நிச்சயம்' இது கோப்பெருஞ்சிங்கன்.

"இதை ப்ரயோகித்தவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?" வினவினான் வீரபாண்டியன்.

'அமைதி கொள் வல்லாளா, அதற்குத்தான் இந்த வியூகத்தைப் பற்றி சொல்லத் துவங்கும் போதே நன்மைக்குத் தான் பயன்படுத்தவேண்டும் என்று உறுதி வாங்கிக் கொண்டேன். தேசத்தையே வெல்வது நன்மை ஆகாது. ஆகவே இதைத் தவறாகப் பயன் படுத்த எண்ணாதே, உன்னைத் தாக்க வருபவர்களுக்கு எதிராகப் ப்ரயோகம் செய்' என்று கண்டிப்புடன் கூறிய மாதவன், "வீர பாண்டியா நான் முன்பே சொன்னது போல் பாரதப் போரில் தான் இது ப்ரயோகம் செய்யப் பட்டது. அதற்குப் பிறகு வழி வழியாக சொல்லப் படுகிறதே தவிர பயன் படுத்தப் பட்டதில்லை. பாரதப்போரில் சக்கரவியூகத்தால் ஏற்பட்ட அழிவை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?" என்று நிறுத்தினான்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. இளவழுதி எதுவும் கேட்காமலேயே இருந்தான். "நல்லது வேறு கேள்விகள் ஏதும் இல்லாத பட்சத்தில் நாம் நமது வழிகளை நோக்கிச் செல்ல வேண்டியதாகிறது. நன்மைக்காகவே இதைப் பயன்படுத்துவோம் என்ற உங்கள் சத்தியத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன். வெற்றி உங்களுடையதாகட்டும்." என்று முடித்தான் மாதவன்.

"நிச்சயமாக அய்யா. என் மனதில் தோன்றியதைக் கூறியதால் நான் தவறாகப் பயன் படுத்துவேன் என்று எண்ண வேண்டாம். நான் துவார சமுத்திரம் செல்ல வேண்டியுள்ளது. வடக்கிலிருந்து பகைவர்களின் தொல்லை அதிகமாகிவிட்டது" என்று விடை பெற்றான் வல்லாளன். அவ்வாறே கோப்பெருஞ்சிங்கனும் வெளியேறினான்.

வீர பாண்டியன், இளவழுதி மற்றும் மாதவன் மட்டுமே இருந்தனர். "நன்றி அய்யா. நான் மதுரை செல்கிறேன். இளவழுதி என்னுடன் வருகிறாயா?" என்று வினவினான்.

இளவழுதிக்கு உண்மையிலேயே திருவெண்காட்டில் ஒரு வேலையிருந்தது. இடையில் மாதவனின் சைகை வேறு அவனை நிறுத்திவிட்டது "இல்லை வீரா, என் தந்தை திருவெண்காட்டிற்குச் செல்ல பணித்துள்ளார். ஆகவே அங்கு சென்று வர வேண்டும். நீ புறப்படு. நான் பிறகு மதுரைக்கு வந்து விடுகிறேன்." என்றான். வீர பாண்டியனும் தலையாட்டிவிட்டு கிளம்பினான். இளவழுதியும், மாதவனும் தனித்து விடப்பட்டனர்.

"இளவழுதி, இப்போது கேள் உன் சந்தேகத்தை" என்றான் மாதவன்.

"அய்யா, சக்கர வியூகத்தைப் பற்றி ப்ரதானாசாரியார் கூறும் போது மதங்களைப் பற்றி கூறினார். நீங்களும் போர் நிலை, பொது நிலை என்று இரண்டு வியூகங்களைப் பற்றி முதலில் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் சொன்னது போர் நிலை மட்டும்தான். பொது நிலையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே."

"இளவழுதி நானும் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், இந்த சந்தேகம் மற்றவர்களுக்குத் தோன்றாதது ஏன்?" என்று கேட்டான் புன்னகைத்தவாறே. இளவழுதிக்கு குழப்பம்தான் அதிகரித்தது. அதைப் புரிந்து கொண்ட மாதவன்.

"இளவழுதி, இதில் குழப்பத்திற்கு இடமில்லை. ஆசாரியார் எவ்வளவு தீர்க்க தரிசி. நான் உங்களுக்கு இதைப் பற்றி சொல்லப் போவதாக அவரிடம் தெரிவித்தேன். அவரது உபாயம்தான் இது. என்னை முதலில் போர் முறை பற்றி சொல்லி நிறுத்திவிடும் படியும், மேலும் தொடர்ந்து கேட்பவர்களுக்கு மட்டும் முழுமையாகச் சொல்லும் படியும் அதுவும் தனியாகக் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் படியே ஆயிற்று.

போர் முறையைப் பற்றி தெரிந்து கொண்டதும் அவர்கள் போர்க்களத்திலேயே மூழ்கிவிட்டார்கள். ஆகவே நான் சொல்லவந்ததும் மறந்து விட்டது. ஆசாரியார் சொல்லாமல் விட்டதும் மறந்து விட்டது. நீ மட்டும் தான் முழுமையாகக் கவனித்தாய். எனவே மிகுதியையும் தெரிந்து கொள்வதற்கு நீ மட்டும்தான் தகுதியானவன் ஆகிறாய். நீ அங்கேயே உன் சந்தேகத்தை எழுப்பியிருந்தால் மற்றவர்களும் சுதாரித்துக் கொண்டிருப்பார்கள். எனவே உன்னை எச்சரிக்கை செய்தேன். " என்று நிறுத்தினான் மாதவன்.

"அய்யா. அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் மறந்து போயிருக்கலாம் அல்லவா?"

"உணர்ச்சிகளுக்கு இடம் கொடாதவனாலேயே இந்த வியூகத்தை சிறப்பாக அமைத்து செயல்படுத்த முடியும். ஆகவே அவர்கள் இந்தத் தேர்வில் தவறிவிட்டார்கள். சக்கரவியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் தகுதியையும் இழந்து விட்டார்கள். சரி. உனக்கு முழுமையாகச் சொல்லி விடுகிறேன். பொது நிலை வியூகம் என்பது மக்களிடையில் ஏற்படுத்துவது..." என்று துவங்கிய மாதவன் சற்றொப்ப மூன்று நாழிகைகளுக்கும் மேலாக விளக்கினான். இடையிடையே இளவழுதி கேட்ட கேள்விகளுக்கும் விடையிறுத்தான்.

"இளவழுதி, இப்போது சக்கர வியூகம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டாய். உன்னால் இந்தத் திரு நாட்டிற்குப் பெரும் நன்மை நிகழப் போகிறது என்பது மட்டும் உறுதி. என் கணிப்பில் இறைவன் திருவுளப்படி இதன் ப்ரயோகத்தை விரைவிலேயே தொடங்க வேண்டும். உனக்குக் குறிப்பு வரும். நான் வட தேச யாத்திரை செல்கிறேன். மீண்டும் காஞ்சிக்குத் திரும்புவது கடினம்தான். ஆயினும் உன்னை தக்க சமயத்தில் சந்திக்க வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறேன். வெற்றி உனக்கே. ஜய விஜயீ பவ" என்று வாழ்த்தி சற்றும் தாமதிக்காமல் கிளம்பிச் சென்றான் மாதவன்.

முடிவில் இளவழுதியால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு பூதம் தன் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புகுந்துவிட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. அசையாமல் அமர்ந்திருந்தான் மாதவன் சென்ற திசை நோக்கி.

(தொடரும்)

Monday, January 26, 2009

குடியரசு தினமும் சுதந்திர தினமும்

இந்தியாவில் மூன்று தேசிய விடுமுறை நாட்கள்!!!. காந்தியடிகள் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம். சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றி, மிட்டாய் வினியோகித்து, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, டிவியில் சிறப்புப் பட்டிமன்றம், திரைப்படங்கள் பார்த்து கொண்டாடி மகிழ்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் வரை இவ்விரண்டு தினங்களிலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவ்வாறு இல்லை.

சரி குடியரசு தினத்தின் வரலாற்றை சற்று சுவையாகப் பார்ப்போமா?

முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் தொடங்கி இந்திய சுதந்திரப் போரின் கடைசி கட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரை அனைவரும் இன்றைய இந்தியக் குடியரசுக்கு வித்திட்டவர்கள் எனக் கூறலாம்.


ஆரம்பத்தில் கம்பெனி மூலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார், 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு, கம்பெனியால் இவ்வளவு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியாது என்று முடிவு செய்து, 1858ல் இந்திய அரசுச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார்கள். அன்று முதல் இந்தியா பிரிட்டிஷ் அரசின் பகுதியானது. லண்டனில் ஒரு 'செகரட்டிரி ஆஃப் ஸ்டேட்' பொறுப்பு வகிக்க இந்தியாவில் 'கவர்னர் ஜெனரல்' ஆட்சி செய்தார்.

இதற்குப் பிறகு இடையில் சிற்சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மின்டோ - மார்லி, மாண்டேகு-செம்ச்ஃபோர்டு ஆகியவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம் 'ட்ராகோனியன் லா' அதாவது அடக்குமுறை அம்சங்கள் நிறைந்திருந்தது. மக்களுக்கான ஆட்சிமுறையாக இல்லாமல் மன்னருக்கான ஆட்சிமுறையாகவே இருந்து வந்தது.

பிறகு 1935ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் சற்று தளர்த்தப்பட்ட அம்சங்களோடு வெளிவந்தது. இதுதான் நமது அரசியல் சட்டத்திற்குத் தந்தை என்று கூறலாம். இதற்கு முன் 1932ல் வந்த 'கம்யூனல் அவார்ட்' என்ற ஒரு சட்டம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி வாக்குரிமை என்ற நிலையை ஏற்படுத்தி பிரிவினைக்கு நிரந்தர வழி வகுத்தது.

இடையில் வலுத்த சுதந்திரப் போரும், பிரிவினைப் போரும், இரண்டாம் உலகப் போரும் இது வேலைக்காகாது என்ற எண்ணத்தை ப்ரிட்டிஷாருக்கு ஏற்படுத்தி நமக்கு சுதந்திரம் வழங்கும் முடிவுக்குத் தள்ளின.


1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள், இந்தியா 'ப்ரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்தும் அதன் தலைமையிலிருந்தும் முழுமையாக விடுதலையடைகிறது' என்றும் 'பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிலுள்ள பழங்குடிப் பகுதிகளினுடனான உறவும் ரத்தாகிறது' என்றும் பறைசாற்றியது, இந்திய விடுதலைச் சட்டம் 1947.

ஆக இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து 1947ல் விடுதலையடைந்தாலும் அவர்களது சட்டம் (இந்திய அரசுச் சட்டம் 1935 மற்றும் இந்திய விடுதலைச் சட்டம் 1947) ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்தியா ஆட்சி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால் நமக்கு நாமே வழங்கிக் கொள்ள வேண்டிய அரசியல் சட்டம் தேவை என்ற கருத்து அதற்கு முன்னரே உருவாகியிருந்தது. 1922ல் மகாத்மா காந்தியவர்கள் 'இந்தியாவின் அரசியல் நிலையை நிர்ணயம் செய்ய இந்தியர்களுக்குத்தான் உரிமையிருக்கிறது' என்று கூறினார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரையில் 'அரசியலமைப்புச் சட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அறைகூவல், சத்தியம், உறுதிப்பாடு' என்றார்.

இதுவரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் கையில் இருந்த 'ரிலே' இப்போது அரசியல் சட்ட வல்லுனர்களின் கைக்கு மாறியது.

இதனடிப்படையில் அமைந்திட்ட இந்திய அரசியல் சட்டசபை டாக்டர் அம்பேத்கார் தலைமையில் சீரும் சிறப்புமாக ஒரு சிறந்த அரசியல் சட்ட முன் வடிவைக் கொண்டு வந்தது. 1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது இந்திய அரசியல் சட்டம். இதன் வரலாறும் மிகப் பெரியதும் சுவையானதும் கூட. ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டதற்கான காரணம், ஸ்லம்டாக் மில்லியனரில் அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அனுபவம் போன்றது.

இவ்வாறு ஏற்பட்ட அரசியல் சட்டம் 26 நவம்பர் 1949ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து அதாவது 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டது.


ஆக ஜனவரி 26 1950 முதல் நாம் ஆட்சி செய்வது இந்த இந்திய அரசியல் சட்டப் படிதான். இந்த இந்திய அரசியல் சட்டம் "மக்களுக்காக மக்களால்" இயற்றப்பட்டது. ஆகவே முழுமையான சுதந்திர மக்களாட்சி மலர்ந்தது ஜனவரி 26 1950ல்தான்.


ஜனவரி 26ல் இந்தியா என்னும் அரசியல் பிரிவில் குடியரசு மலர்ந்த நாள். ஆகஸ்டு 15ல் நாம் சுதந்திரம் பெற்றோம். யார் அரசாள்பவர் என்பதில் குழப்பம் நீடித்தது. அந்தக் குழப்பமெல்லாம் மறைந்து, அரசியல் சட்டமியற்றப்பட்டு அது ஏற்கப்பட்ட நாள் இது. இந்திய மக்கள் சுதந்திரமடைந்தது மட்டுமன்றி சுயமாக அரசாளத் தொடங்கினர். எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற நிலை ஏற்பட்டது. இதன் மூலம் இந்திய சுதந்திரப் போருக்கான முழுமையான முடிவு ஏற்பட்டது.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். இந்தக் குடியரசின் பலன் முழுமையாகப் பெற முயல்வோம்.

Wednesday, January 21, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 15

அத்தியாயம் 15 - மாதவன் சொன்ன சக்கரவியூகம்

ப்ரதானாசாரியாரின் முக்கிய சீடனான மாதவன் பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை செய்துவிட்டு ஸ்ரீரங்கத்தை அடைந்தான். அங்கு ரங்க நாதனை சேவித்துவிட்டு வேதாந்த தேசிகரின் மடத்திற்குச் சென்றான். அப்போது தேசிகர் அருகிலுள்ள திருப்பதிகளுக்குச் சென்றிருந்தாராதலால் உடனே தரிசிக்க முடியவில்லை. அவர் வருவதற்கு சில நாட்களாகலாம் என்ற தகவல் அவனை சிந்தனைக்குள்ளாக்கியது. மார்கழித் திருவாதிரை நெருங்கிக் கொண்டிருந்தது. தில்லையில் மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி சொல்வதாக வாக்களித்திருந்தான். ப்ரதானாசாரியாரோ அதற்குமுன் தேசிகரை சந்தித்து அவரது கருத்தையும் கேட்கச்சொல்லியிருந்தார்.

சிறிய குழப்பமிருந்தாலும், தேசிகருக்காகக் காத்திராமல் தில்லைக்குச் செல்வது என்று முடிவெடுத்தான். ஒரு ஓலையில் தான் வந்த நோக்கத்தை எழுதி அவரது சேவகர்களிடம் சேர்த்துவிட்டு தில்லை நோக்கிப் புறப்பட்டான் மாதவன். அவன் சென்ற சில நாழிகைக்கெல்லாம் வந்து சேர்ந்தார் தேசிகர். சில காரணங்களால் அவரது திருப்பதிகளுக்கான யாத்திரையை பாதியிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மாதவனின் ஓலையைக் கண்டவர் 'சற்று தாமதித்திருக்கலாமே. ஹும் இறைவனின் திருவுளம் இவ்வாறிருந்தால் யார்தான் என்ன செய்யமுடியும். நடப்பவை நாரணன் செயல்' என்றெண்ணியவாறே மற்ற அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார்.====

தில்லை. சைவர்களின் மூலக்கோவில். தமிழக சைவர்களின் ஆதி மதமாகிய சைவம் வேறு. ஆதிசங்கரர் நியமித்த ஷண்மதங்கள் எனப்படும் ஆறு மதங்களில் (சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், ஷௌர்யம்) இருக்கும் சைவம் வேறு. இவற்றுக்கிடையில் இருக்கும் வித்தியாசங்களை விட்டுவிட்டு, ப்ரபஞ்சத்தின் மூலாதாரமாக விளங்கும் தில்லையம்பலத்திற்குள் நுழைவோம்.

'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று முதலடியாகவும் 'நின்றது எங்கும் நிலவி உலகெலாம்' என்று ஈற்றடியாகவும் கொண்ட பெரிய புராணம் அரங்கேறியது இத்தில்லையில்தான். சேக்கிழார் உலகெலாம் என்று துவக்கி உலகெலாம் என்று முடித்தது உலகெங்கும் நிறைந்தவன் இறைவன் என்ற அரும்பொருளை அழகாக எடுத்தியம்பியது போல் தோன்றுகிறதல்லவா?

அரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயில் மண்ணு என்பது பழமொழி. ஆனால் அது எவ்வளவு பழைய மொழி என்பது தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தீவைப் போலவே தில்லையிலும் அரியும் சிவனும் ஒன்றாகவே இருக்கின்றார்கள். அங்கே தனித்தனி கோவில் கொண்டவர்கள் இங்கே ஒரே கோவிலுக்குள் சேர்ந்து இருக்கின்றார்கள். பிரித்தாள்வது என்பது அயல் நாட்டினர் நமக்குச் சொல்லித்தந்ததாகக் கூறுவர் சிலர். ஆனால் நாம் தான் அதைக் கண்டுபிடித்தோம் என்பதை ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை பலருக்கு. சிவனாரும் அரனாரும் ஒன்றாக இருக்க அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் ஒற்றுமை என்ற வார்த்தை வார்த்தையாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒற்றுமையைக் குலைத்ததால், இடையில் கோவிந்தராஜர் தில்லைத் திருச்சித்திரகூடத்தை (தில்லை வைணவத்திருப்பதி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது) நீங்கியிருக்க வேண்டியதாயிற்று. இந்தக் கதை நடக்கும் காலத்தில் அவர் மீண்டும் தில்லையில் குடிகொண்டுவிட்டார்.


கோவில் செவ்வக வடிவிலிருந்தது. அரசர்கள் தொடர்ந்து திருப்பணி செய்தும் பொன் வேய்ந்தும் அந்தக் கோவிலின் புதுமை மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சிற்சபை, பொற்சபை, இராசசபை, தேவசபை, நிருத்தசபை என்று ஐந்து சபைகளுடன் ஆதியந்தமில்லாத ஆனந்த நடனம் புரிபவராக சிவனார் இருக்க, அவர் நடனத்தை ரசித்தவாறு ஆனந்தசயனத்தில் ஈடுபட்டிருந்தார் அரியான கோவிந்தராஜர்.


ஆதிரை நட்சத்திரம் சிவனாருக்குகந்தது. ஆகவே அது திருவாதிரை ஆயிற்று. அதுவும் கடவுளர்க்குகந்த மார்கழித் திருவாதிரை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப் பட்டு வந்துள்ளது. நடராஜத் திருமேனி அன்று ஊர்வலம் வரும் நாள். அம்பலத்துள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும் எம்மான் அன்று வீதியிலும் ஆடும் நாள். அன்று தில்லை அல்லோலகல்லோலப்பட்டது என்றால் மிகையாகாது.

அத்தகைய தில்லையின் பெருமையை சொல்லவேண்டிய'தில்லை'. ஆகவே நமது நண்பர்களின் நடவடிக்கைகளைப் பார்ப்போம்.

====

அந்தப் பெருமை வாய்ந்த தில்லை நகரிலே பல்வேறு வகையான சத்திரங்களிருந்தன. அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை அனைவரும் வந்து செல்லவும் வருவோர் வயிறார உண்ணவும், உடலாற உறங்கவும் பற்பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்தகைய ஒரு சத்திரத்தின் விதானத்திலமைந்த ஒரு விசாலமான அறையில் குழுமியிருந்தனர் நமது நண்பர்கள். முறையே மாதவன், வீர பாண்டியன், இளவழுதி, வல்லாளன், கோப்பெருஞ்சிங்கன். அரிஹரனும் அவன் தம்பியும் வரவில்லை. மாதவன் நடுவில் வீற்றிருக்க அவனைச் சுற்றி அரைவட்டமாக அமர்ந்திருந்தனர் மற்றையோர்.

அவர்களுக்கு நடுவில் ஒரு வெள்ளைச் சீலை விரிக்கப் பட்டிருந்தது. அருகில் சில வண்ண மைக்கூடுகளும், தூரிகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஏதோ தியானத்தில் அமர்ந்திருப்பவன் போல் இருந்தான் மாதவன். உண்மையில் தன் குருவை மானசீகமாக துதித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்துக் கண் விழிக்க மற்றையோர் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு புன்முறுவலொன்றைப் பூத்தவாறே, 'நண்பர்களே, சொன்னவண்ணம் நாம் இங்கே குழுமிவிட்டோம். ஹரிஹரனும் அவன் சகோதரனும் வரவில்லை. இருந்தாலும் நாம் தொடர்வோம். நீங்களனைவரும் தில்லைத் தெய்வங்களைத் தொழுதுவிட்டீர்களா?'

'ஆம். நல்ல தரிசனம்.' என்றான் இளவழுதி. மற்றையோரும் அவனைப் போலவே சிலாகித்துப் பேசினர்.

'நண்பர்களே, நீங்களாக வாய்திறந்து கேட்கவில்லையாயினும் சக்கரவியூகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்கள் முகங்களில் தெரிகிறது. அந்த ஆவலைப் பூர்த்தி செய்யவே இங்கு வந்துள்ளேன். சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளும் போது பூர்வ பீடிகை மிக மிக அவசியமாகிறது. சக்கரவியூகமும் அதைப் போன்றதே. இது மிக மிக அபாயகரமானது அதே நேரத்தில் உபயோககரமானதும் கூட. இதைப் பயன்படுத்தும் விதத்தில் இருக்கிறது.

உதாரணத்திற்கு தீயை எடுத்துக் கொள்ளுங்கள். சமைக்கவும் பயன்படுத்தலாம். எரிக்கவும் பயன்படுத்தலாமல்லவா? ஆகவே ஒரு விஷயத்தின் மதிப்பு அதைப் பயன் படுத்தும் முறையில் உள்ளதே தவிர அந்த விஷயத்திலில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த சக்கரவியூகத்தை நல்ல வகையில்தான் பயன் படுத்துவோம் என்று முதலில் நீங்கள் அனைவரும் சர்வ சாட்சியாக உங்களது தர்மப்படி சத்தியம் செய்யுங்கள்.' என்று நிறுத்தினான்.

உடனே ஒவ்வொருவராக முன்வந்து 'முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, பஞ்ச பூதங்கள் சாட்சியாக, தில்லை நாயகர்கள் சாட்சியாக இந்த சக்கரவியூகத்தை நன்மைக்காகவே பயன் படுத்துவேன். சத்தியத்தின் பக்கலில் எப்போதுமிருப்பேன்.' என்று கூறி வாளால் தன் கையில் கீறி ஒரு துளி ரத்தத்தை சிந்தினார்கள்.

'தற்போது நீங்கள் உங்கள் சத்தியத்தால் கட்டுப்பட்டிருக்கிறீர்கள். நானும் உங்கள் சத்தியங்களை நம்புகிறேன். உங்கள் வாக்கு மறைந்துவிட வில்லை. உங்களைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும். சத்தியம் செய்தவனை, முழுமையாகக் காப்பவனை சத்தியமே காக்கும். அதைத் தவறினால் சத்தியமே அவனை அழிக்கும். இதையும் நினைவில் கொள்ளுங்கள். நல்லது. சக்கரவியூகத்தை நீங்கள் அறிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இப்போது இந்த சீலையில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.' என்று கூறிய மாதவன் அந்த சீலையில் அரை நாழிகைப் பொழுதுக்கு எதையோ வரைந்தவண்ணம் இருந்தான். முடிந்தபின்,

'நண்பர்களே. சக்கரவியூகம் என்பது ஒரு படை அமைப்பு. இதை விளங்கிக் கொள்ள சில கேள்விகளைக் கேட்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பதிலைச் சொல்லுங்கள். வியூகம் ஏன் அமைக்க வேண்டும்'

உடனே கோப்பெருஞ்சிங்கன் 'வியூகமென்பது நீங்கள் சொன்னது போல் போர்க்களத்தில் படைகளை நிறுத்திடும் முறை. இதனால் நம் படைகளுக்கு சேதம் குறைவாகவும் எதிரிப்படைகளுக்கு சேதம் அதிகமாகவும் இருக்கும். நல்ல வியூகத்தில் வெற்றி எளிதாகும்'

'நன்று நன்று. அதே எண்ணம் எதிரிக்கும் இருக்குமல்லவா? நம்மைப் போன்றே சிறந்த வியூகத்தை எதிரி அமைத்தால் என்ன செய்வீர்கள்?'

போர் பற்றி ஏட்டறிவு மட்டுமே இருந்த கோப்பெருஞ்சிங்கனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. வல்லாளன் தொடர்ந்தான். 'நம் திறமையின் அளவு எதிரியின் திறமையைப் பொறுத்தே அமைகிறது. திறமையான எதிரி நிச்சயம் நல்ல வியூகம் அமைப்பான். ஆனால் வியூகத்தை அமைப்பதை விட முக்கியமானது அந்த வியூகத்தை முறியடிப்பது. ஆகவே நமது வியூகத்தை எதிரியின் வியூகம் முறியடிக்கப்படும் விதத்தில் அமைத்திடல் வேண்டும்.'

'அருமையாகச் சொன்னாய் வல்லாளா. உன் பாட்டனாரும் தந்தையும் அதிகமான போர்களில் ஈடுபட்ட காரணத்தால் உனக்கு இந்தத் தெளிவு இருந்திருக்க வேண்டும். ஆக வியூகம் அமைப்பதை விட முக்கியமானது அதை முறியடிக்கும் திறமை. அப்படி முறியடிக்கும் எண்ணம் எதிரிக்கும் இருக்குமல்லவா? அதற்கு என்ன செய்யவேண்டும்?'

வல்லாளனும் யோசிக்க ஆரம்பித்தான். இளவழுதிக்கு தேன்மொழி சொன்னது நினைவிற்கு வந்தது. 'முறியடிக்கப்படக் கூடியது என்று மேலுக்குத் தோன்றும் வகையில் ஒரு வியூகத்தை அமைத்து எதிரி நம் வியூகத்தை அழிக்க வரும்போது சட்டென்று மாறக்கூடிய வகையில் வியூகம் அமைத்திட வேண்டும். இந்த விதமான வியூக மாற்றம் தளபதிக்கும், வியூகத்தின் கேந்திரங்களில் தலைமையேற்கும் சில உபதளபதிகளுக்கும் மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும். அதற்கான சமிக்ஞைகள் எப்படி இருக்கும் என்பதை இவர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டும். இப்படி செய்யும் போது திறமையான எதிரியையும் வீழ்த்திவிடலாம்'

இளவழுதியின் இந்த விளக்கம் குழுமியிருந்தோரிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புரிந்து கொண்டதற்கு அடையாளமாக பலமாகத் தலையசைத்தனர்.

'அற்புதம். இளவழுதி. இதை நீ இடையில் யாரிடமோ கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இது நம் குருகுலத்தில் யாருக்கும் கற்றுத்தரப்படுவதில்லை. சற்றேறக்குறைய சக்கரவியூகத்தின் முதல் பகுதியை நீ சொல்லிவிட்டாய். சரி. இதெல்லாம் நாம் எதிரியை விட சற்று திறமையானவர்கள் என்ற எண்ணத்தில் கூறப்பட்டவை. எதிரி நம்மை விட வலுவானவன். அனைத்து வியூக அமைப்புகளையும் அறிந்தவன். சட்டென்று வியூகங்களை மாற்ற வல்லவன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வெற்றிபெற என்ன செய்யவேண்டும்?'

ஒருவருக்கும் விடை தெரியவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், மொத்தமாக மாதவனை நோக்கினார்கள். அவனும் புன்னகைத்தவாறே

'நல்லவேளை. இதற்கு யாரும் விடையளிக்கவில்லை. அளித்திருந்தால் என் விளக்கம் மேலும் தேவைப்பட்டிராது. நண்பர்களே, இந்த கேள்விதான் சக்கரவியூகத்தின் அடிப்படை. சரியான சக்கரவியூகத்தின் மூலம் எத்தகைய எதிரியையும் அழித்துவிடலாம். ஒருவேளை இரு தரப்பும் சக்கரவியூகம் அமைத்திட்டால் அனைவருக்கும் அழிவுதான். ஆகவேதான் சக்கரவியூகத்தைப் பற்றி ஆசாரியார் முழுமையாகச் சொல்லவில்லை. இதற்கான குறிப்புகள் எந்த சாத்திரத்திலும் இல்லை. செவிவழியாகவே அறியப்பட்டு வந்துள்ளது. பாரதப் போருக்குப் பிறகு சக்கரவியூகத்தை யாரும் பயன் படுத்தவில்லை. ஆனால் இப்போது முதல் பயன்படுத்த நேரிடலாம்.' என்று நீர் அருந்துவதற்காக சிறிது நிறுத்தினான். அதையே யாராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

'முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, சக்கர வியூகம் போர்க்களத்தில் மட்டும் வைக்கப்படும் வியூகமன்று. அதைப் போர்க்களத்தில் பிரயோகிக்க வேண்டுமென்றால் அதற்கான ஆரம்பம் வெகு காலத்திற்கு முன்னமே இருக்க வேண்டும். எவ்வளவு காலத்திற்கு முன் துவங்குகிறதோ அவ்வளவு வீச்சு அந்த வியூகத்தில் இருக்கும். போர் நிலை சக்கரவியூகம், பொது நிலை சக்கர வியூகம் என இரண்டு வியூகங்கள் இருக்கின்றன. இரண்டும் இயைந்தவாறு ப்ரயோகம் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது அமைத்தவருக்கெதிராகத் திரும்பிவிடும் அபாயமுள்ளது. முதலில் போர் நிலை சக்கர வியூகத்தைப் பார்ப்போம். இந்த சீலையைப் பாருங்கள்' என்று சொன்னதும் அனைவரும் அந்தச் சீலையின் ஓவியத்தில் கவனத்தைச் செலுத்தினர்.

பிறைச்சந்திர வடிவத்தில் இருந்தது அந்த ஓவியம். இரு பக்கத்தில் இரண்டு புள்ளிகள் இருக்க அவற்றை இரு கோடுகள் பிறை நிலா போல் இணைத்தன. ஆங்காங்கே சிற்சில வடிவங்களும், குறிகளும் இருந்தன.

'நண்பர்களே, இதுதான் சக்கர வியூக அமைப்பு. அடிப்படை அமைப்பு. ஆனால் கருட வியூகம் போலவும், படுத்திருக்கும் சர்ப்ப வியூகம் போலவும் முதலில் அமைத்து எதிரிகளைப் புகவிட்டு சக்கர வியூகமாக மாற்றிக்கொள்ளலாம். இங்கே பாருங்கள். பிறையின் இரு முனைகள் இருக்கின்றன. அதிலிருந்து இரண்டு வரிசைகள் அடுத்த புள்ளியை நோக்கி நகர்கின்றன. ஒன்று வெளி ஆரமாகவும், மற்றொன்று உள் ஆரமாகவும் இருக்கிறது. வெளி ஆரத்தின் நடுவில் படைத்தலைவன் இருக்க வேண்டும். அவன் முன் இருக்கும் உள் ஆரம் சற்று தளர்ந்து இருக்க வேண்டும். ஆரம் நடுவில் வலுவாகவும் விளிம்புகளில் இலகுவாகவும் இருக்கவேண்டும். அதாவது நடுவில் யானைகளை நிறுத்தி ஓரங்களில் குதிரைகளை நிறுத்த வேண்டும். இடையில் காலாட்படை இருக்க வேண்டும். ஏதாவது சந்தேகங்களிருந்தால் கேளுங்கள்.'

மாதவன் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் 'நீங்கள் முழுமையாக முடித்து விடுங்கள். பிறகு சந்தேகங்கள் இருந்தால் கேட்கிறோம்' என்றான் வீர பாண்டியன். மற்றவர்களும் ஆமோதித்தார்கள்.

' அவ்வாறே ஆகட்டும். இதுவரை நீங்கள் தெரிந்து கொண்டது வியூகம் அமைக்கும் முறை. அடுத்து வியூகம் நடத்தும் முறையைப் பார்ப்போம்.'

(தொடரும்)

Tuesday, January 20, 2009

சரிங்க...

'அட்சம்பேட்ட (அடிசன்பேட்டை) யாராவது கீறீங்களாபா?' என்ற கண்டெக்டரின் கத்தல் அவன் காதுக்கருகில் ஒலித்து தூக்கத்தைக் கலைத்தது. என்ன செய்வது சீட் கிடைக்காமல் பின்படிக்கெட்டுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்திருந்தான் அப்படியும் களைப்பில் தூங்கிவிட்டான். வெகு நாட்களுக்குப் பிறகு அதாவது ஏழு வருடங்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் வருகிறான்.

எத்தனை காலமானாலும் உலகமே தலைகீழானாலும் காஞ்சிபுரம் மட்டும் மாறப்போவதில்லை. அதே பஸ் ஸ்டாண்டு. கொஞ்சம் விரிவாக்கம் செய்திருந்தாலும் அந்த பழைய நாற்றம் போகவில்லை. சக்தி கபேயின் நசுங்கிய டம்ளர்கள், சுற்றியுள்ள இனிப்பகங்கள், பழக்கடைகள்...

வெளியே வந்தால் ராஜவீதிகளை ஒன் வே செய்திருக்கிறார்கள். அட, சிக்னல் கூட போட்டிருக்கிறார்கள். அப்படியே கங்கனாமண்டபம் (கங்கை கொண்டான் மண்டபம்) வழியாக ஏகாம்பர நாதர் கோவிலுக்கு அருகில் உள்ள அவன் வீட்டிற்குச் சென்றான்.

அய்யப்ப பக்தர்களின் கூட்டமும், வடமாநில மக்களின் கூட்டமும் சேர்ந்து அந்தப் பகுதியே கசகச என்றிருந்தது. படிக்கும் காலங்களில் மதியான நேரத்தில் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டால் போதும். படிக்கும் மூட் இருந்தால் படிப்பு சூப்பராக வரும். தூங்கும் மூட் இருந்தால் அதுவும் தானாக வரும். பெரும்பாலும் இரண்டாவது மூட் தான்.

வீட்டிற்கு வந்து சம்பிரதாயமாகப் பேசிவிட்டு குளியல் டிபன் முடித்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். இவன் ஒட்டுறவே இல்லாமல் இருந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்ததன் காரணம் அவன் வீட்டில் தெரிந்தே இருந்தது.

நேராக வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டான். அவன் வழக்கமாக எடுக்கும் கடைதான். இவன் வருகைக்காகவே நல்ல சைக்கிள் வைத்திருப்பார் அந்த கடைக்காரர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இவனை மறக்க வில்லை என்பதை அவர் பேச்சு காட்டியது. 'இன்னாபா, இத்தன்நாளா எங்க பூட்ட. ஆளயே காணமே. நல்லாக்கிறயா' கடைக்காரர் கேட்டது தான் இன்னும் அயல்மனிதனாகவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது.

'நல்லா இருக்கறங்க. வேல ஜாஸ்தியா இருந்துட்டதால வரமுடில. நீங்க நல்லாயிருக்கீங்களா'.

'ஆமாம்பா, ஏதோ ஓடிகினு கெடக்குது. இந்த வண்டி பூட்டி ஒரு மாசந்தான் ஆவுது. நீ எட்துனு போ'

நன்றாகவே இருந்தது சைக்கிள். கைலாச நாதர் கோவில் நோக்கி வண்டியை செலுத்தினான். கைலாச நாதரை பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் தொந்தரவு செய்வார்கள். சிவராத்திரியின் போது அங்கு கூடும் கூட்டம் சொல்லி மாளாது. மற்ற காலங்களில் தினமும் வரும் டூரிஸ்டுகள்தான் அவரது விசிட்டர்கள். பெரும்பாலும் வெளி நாட்டினராதலால் உள்ளே வருவதும் குறைவு.

அன்றும் வந்து செல்லவேண்டிய பேருந்துகள் போய்விட்டன. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தன. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். ஒவ்வொரு இடமாக செல்லும் போதும் பழைய நினைவுகள் அவனை ஆட்கொண்டன. பள்ளிக்காலத்தில் ஆண்டர்சனிலிருந்து அவன் வீட்டுக்கு நேரடியாகச் செல்லலாம். ஆனால் கைலாச நாதரை விசிட் செய்வது வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். தனிமை தந்த சுகம் அது. அருகிலேயே பள்ளி விளையாட்டு மைதானம் இருந்ததும் ஒரு காரணம்.

அப்படித்தான் ஒரு முறை ஹோம் ஒர்க் செய்யவில்லை. மதியானம் சாப்பிட்டவுடன் சரவணனுடன் கோவிலுக்கு வந்துவிட்டான். மாலை வழக்கம் போல் வீடு. சில காலத்திற்கு இது வழக்கமானது. பிறகு வீட்டிலும் பள்ளியிலும் தெரிந்த போது நல்ல உதை. இப்போது அவன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு. நண்பர்களின் தொடர்பும் அற்றுப் போய் விட்டது. அமெரிக்காவிலிருந்து அய்யம்பேட்டை வரை பிரிந்திருந்தனர் நண்பர்கள். டாக்டர், இஞ்சினியர், சார்டர்ட் அக்கவுன்டன்ட், க்ளெர்க், கடை முதலாளி, தொழிலாளி, பட்டு நெசவாளி என பல வண்ணங்கள்.

கோவில் ப்ரகாரத்தில் ஓடி விழுந்த குழந்தையின் அழுகை அவனை இன்றைக்கு இழுத்துக் கொண்டு வந்தது.

வெளியே வந்தவன் பிள்ளையார் பாளையத்திற்குச் சென்றான். அங்குதான் அவன் நண்பன் சரவணனின் வீடு இருக்கிறது. அவனொருவன்தான் பள்ளிப்பருவ நினைவுகளின் நிஜம். அதுவும் இப்போது இல்லை என்ற நினைப்பே ஆயாசத்தைத் தந்தது.அவன் வீடு இருக்கிறது. அவன் இல்லை இப்போது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது எல்லாம் முடிந்து.

அந்தத் தகவல் கேட்டுதான் வந்திருக்கிறான் இவன். சரவணனின் வீட்டில் இயல்பு நிலை திரும்பியது போல் காணப்பட்டது. நடு நடுத்தரக் குடும்பம்தான். பட்டு நெசவுடன் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் விவசாயமும் நடந்து வந்தது. அவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அனைவரும் இருக்கிறார்கள். தந்தையும் தாயும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று கூறியிருக்கிறான்.

'வாப்பா. அவன் இப்பிடி பண்ட்டு போவான்னு யாருமே நெனக்கிலியே. சொல்லாம பூட்டானே.' என்று கூறினார்கள் அவன் தாய். அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டிருக்கும் போல. அவன் சகோதரி 'காப்பித்தண்ணி சாப்புடுண்ணா' என்று கொடுத்தாள். ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் கல்யாணமாகி இப்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

'என்ன ஆச்சி' சம்பிரதாயமாகக் கேட்டான்.

'மலைக்கு போய்ட்டு வந்தாம்பா. நல்லாதான் இருந்தான். சக்தியோட கோவிலுக்கு(கைலாச நாதர் கோவில்)ப் போய்ட்டு வரேன். நல்லா சமச்சி வைய்யின்னு சொல்ட்டு போனான். கோவில்லயே நெஞ்சுவலி வந்துட்ச்சி போல. சக்தி அங்கருந்து ஆட்டோல பெரியாஸ்பத்திரிக்கி தூக்கினு போச்சி. அங்கருந்துதான் பெரியவனுக்கு தகவல் வந்துச்சி. அங்க போறதுக்குள்ள அல்லாம் முட்ஞ்சிரிச்சி. மொதல்லயே நெஞ்சுல கோளாறு போல. ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டாம்பா. இல்லன்னா இப்படி வுட்ருப்போமா? ' என்று சொல்லி முடித்தார்கள். எத்தனையாவது முறையாக சொல்லியிருப்பார்களோ.

'உடும்மா. அண்ணன் என் வயத்தல வந்து பொறக்கும். அப்ப மறுபடியும் வளத்துக்கோ.' அவள் அம்மாவை தேற்றியவள் 'ஆமாண்ணா, ஏன் ஊரு பக்கமே வர்றதில்ல. என்னாச்சி? நீ இருந்திருந்தின்னா அண்ணன் இப்பிடி போயிருக்காதோ என்னமோ. அதுக்கு இன்னான்னு உங்கிட்டயாவது சொல்லியிருக்கும்'

'இல்லமா. வரக்கூடாதுண்ட்டுல்லாம் இல்ல. வேல அப்பிடி. இப்ப கூட சரவணனுக்கோசரந்தான் வந்தேன். ஃபோன்ல பேசறப்பகூட எதுவுமே சொல்லலயே. உன் கல்யாணம். விவசாயம் பத்தில்லாம் பேசுனான். இதப்பத்தி வாயே தெறக்கல. அவனுக்கே தெரீல போல. கவலப்படாதீங்க. மனசத் தேத்திக்கிங்க. வேறென்ன சொல்றது.'

'பரவால்லபா. இதுக்கோசரம் இம்மாந்தூரம் வந்தியே. நீயாவது ஒடம்ப பாத்துக்க. ஏதாவதுன்னா ஒடனே டாக்டர் கிட்ட காட்டிடு.' என்றார்கள் சரவணின் தாய்

'சரிங்க. நீங்களும் உங்க ஒடம்ப பாத்துக்குங்க. எனக்கு அப்பப்ப ஃபோன் பண்ணுங்க.'

அவர்கள் சொன்ன அடுத்த வார்த்தைகள் அவனை சிலையாக்கின.

'சரிப்பா. ஆனா ஒண்ணு. அன்னிக்கி யாருமே ஒரு நெலமைல இல்ல. அப்பறந்தான் தோணிச்சி, அதுங்கண்ணுங்களையாவது குட்துருக்கலாமேன்னு.'

Saturday, January 17, 2009

எந்திரன் - தி ரோபோ - கதை

தலைவர் ஒரு ரோபோடிக் விஞ்ஞானி. ரொம்ப கஷ்டப்பட்டு தெருவிளக்குல எல்லாம் படிச்சு, நாசாவில வேல செய்யறார். கூடவே தனியா ஒரு ஆராய்ச்சியும் செய்யறார். அதாவது காலச்சக்கரம் மாதிரி கால இயந்திரனை உருவாக்கி, அப்படியே பின்னாடி (அதாவது பழங்காலத்துக்குப் போய்) அப்போ நடக்குற குளறுபடிகளை மாத்தி வரலாற்றைத் திருத்தப்பார்க்குறார். இந்த கால இயந்திரனுக்குள்ள சிக்ஸ்த் சென்ஸ புகுத்திடறார். ஆனா அத இயக்குற பாஸ்வேர்ட் தலைவர் மட்டுமே ஞாபகம் வச்சிக்கிறார்.

இந்த மேட்டர் எப்படியோ லீக் ஆகி வில்லன் க்ரூப்புக்கு தெரிஞ்சிபோயிடுது. அவங்க இந்த ரோபோவை வச்சி அந்த காலத்துக்கு போய் புதையல்லாம் எங்க வச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சி இப்ப எடுத்துரலாம்னு ப்ளான் பண்றாங்க.

ரோபோவ தன்ன மாதிரியே வடிவமைச்சிடறார் தலைவர். ஒரு கட்டத்துல சிக்ஸ்த் சென்ஸ் ஆக்டிவேட் பண்ணிடறார் தலைவர். எது ரோபோ, எது தலைவர்னு தெரியாம போயிடுது. இங்கதான் இடைவேளை.

ஐஸ்வரியா ராய் வரலயேன்னுதானே கேக்கறீங்க. படம் ரொம்ப விறுவிறுப்பா போணும்கறதுக்காக முக்கா மணி நேரத்திலேயே இன்டர்வல் விட்டுர்றோம். பாக்கறவங்களும் அதுக்குள்ள இன்டர்வல் வந்துருச்சே, கத சூப்பர் போலன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க.

இடைவேளைக்கப்பறம் ரோபோவையும், தலைவரையும் வில்லன் பிடிச்சிகிட்டு முதல்ல ராஜராஜன் காலத்துக்கு போவாங்க. அங்க பாத்தீங்கன்னா ராஜராஜனோட பொண்ணா இருப்பாங்க ஐஸ். அங்க இருக்குற ரகசியங்களைத் தெரிஞ்சிக்கிட்டு மலேயாவுல இருக்குற ஒரு குட்டித் தீவுல பெரிய புதையல் இருக்குன்னு கண்டுபிடிப்பாங்க.

மறுபடியும் இங்க வந்து அந்த தீவுக்கு போவாங்க. அப்ப ரோபோ வில்லனோட சேந்துகிட்டு தலைவர கடல்ல தள்ளிவிட்டுடும். தலைவர் நீந்தி நீந்தியே மலேயாதீவுக்குப் போய் சேந்துடறார். அங்கே தலைவர காப்பாத்தறாங்க ஒரு பொண்ணு. கரெக்ட் அவங்கதான் ஐஸ்.

அந்த ஐஸோட அப்பாவைப்பாத்தா அப்படியே ராஜராஜன் மாதிரியே இருக்கு. அவங்கதான் ஒரு கோவில பாத்துக்குறாங்க. அங்கதான் அந்தப் புதையல் இருக்கு. அதத் தேடி வில்லனும் ரோபோவும் வர்றாங்க. இந்தப்பக்கம் தலைவரும் ஐசும் ராஜராஜனும்.

ரோபோ சிக்ஸ்த் சென்ஸ் எஃபெக்டால வில்லனா மாறி, ஐஸ லவ் பண்றாரு. தலைவர் ஒரு வழியா ரோபோவோட சிஸ்டத்துல டகால்டி வேல செஞ்சி ரோபோவ நல்லவனா மாத்திடறாரு.

புதையல கண்டுபிடிச்சாங்களா? யாருக்குக் கெடச்சதுன்றது கதை.

கடைசி ட்விஸ்டா. ரோபோவுக்கு ஒரு ஐஸ் ரோபோவை பரிசா குடுக்குறாரு தலைவர். அந்த தீவிலேயே ரெண்டு ரோபோக்களையும் விட்டுட்டு நாட்டுக்கு திரும்புறாங்க தலைவரும் ஐசும்.

நடுவுல பாட்டு, ஃபைட்டு, சென்டிமென்டுன்னு நெறய ஐட்டங்கள் இருக்கு. காமெடிக்கு விவேக், வடிவேலு, கவுண்டமணி கூட்டணி, சென்டிமென்டுக்கு விஜயகுமார், சுஜாதா கூட்டணி. வில்லனா அறிமுகமாறார் ஒரு வேற்றுமொழி பிரபல கதா நாயகர்.இதாங்க ரோபோ கதை. படிச்சிட்டு ஒரு கருத்தையும் சொல்லிட்டு போங்க.

Thursday, January 15, 2009

வரலாற்று கேள்விபதில்கள் - 15-01-2009

இந்தவாரம் டாக்டர் ப்ரூனோவின் கேள்விக்கணைகளுக்கான பதில்கள்!

1. பார்த்திபன் கனவு கதைக்கு ஆதாரம் வரலாற்றில் இருக்கிறதா ??

பார்த்திபன் கனவில் பல்லவ அரசர் முதலாம் நரசிம்மவர்மர் பார்த்திப சோழனை வெற்றி கொள்வதாகவும் அவன் மகன் விக்ரம சோழனுக்கு தன் மகள் குந்தவையை மணம் செய்து கொடுத்து அயல் நாட்டிற்கு மன்னனாக அனுப்புவதாகக் கதை.
நரசிம்ம வர்மருக்கு குந்தவை என்ற மகள் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் சோழ வம்சம் விஜயாலய சோழனுக்கு முன் எங்கே இருந்தார்கள் என்பதற்கான ஆதாரமும் இல்லை. ஆகவே இந்த நிகழ்வு கற்பனையாகப் படுகிறது.


2. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த மன்னர்கள் பற்றி குறிப்புகள் ஏதாவது இருந்தால் கூறவும்..

வீர பாண்டிய கட்டபொம்ம நாயகலு உட்பட பலர் பாளையக் காரர்கள். முதலில் மதுரை நாயக்கர்களின் 'ஏரியா ரெப்ரெசென்டேடிவ்'ஆக இருந்த இவர்கள் ஆற்காட்டு நவாபின் ஆட்சிக்குப் பின் அவர்கள் பிரதி நிதிகளாக அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வரி வசூலித்து அதில் ஒரு பகுதியை நவாபுக்கு கிஸ்தியாக செலுத்தி வந்தனர்.

சற்று பின்னோக்கிப் பார்த்தால், நவாப் பதவிக்கு சந்தா சாகிப்பிற்கும், முகம்மது அலிக்கும் போட்டி. சந்தா சாகிப் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியையும், முகம்மது அலி ஆங்கிலேயர்களின் உதவியையும் நாடினர். இவர்களின் பெயரால் ஆங்கிலேயர்களும், ஃப்ரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தில் 'கர்னாடிக் வார்ஸ்' என்றழைக்கப்படும் ஆங்கிலேய-ஃப்ரெஞ்சு போர்களில் ஈடுபட்டனர். முடிவில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெறவே, ஆங்கிலேயர்களின் தரப்பில் இருந்த முகம்மது அலி ஆற்காட்டு நவாப்பாக பதவியேற்றார்.

அவர் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு சம்பளமாக தமிழகத்தின் திவானி உரிமையை விட்டுக்கொடுத்தார். அதாவது இதற்குப் பிறகு பாளையக்காரர்கள் முதலானோர் நவாப்பிற்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்கு (ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு) கிஸ்தி செலுத்தவேண்டும்.

இதை ஆங்கிலேயர்கள் கேட்கவும், கட்டபொம்மு மறுக்கவும் நிகழ்ந்ததுதான் பாஞ்சாலங்குறிச்சிப் போர். இறுதியில் கட்டபொம்முவிற்குத் தூக்கு. இந்தப் பகுதியை நேரடியாக நிர்வாகம் செய்தது கம்பெனி (பழந்தமிழில் கும்பினி). இப்படித்தான் ஆரம்பித்தது, ஆங்கிலேயர்களின் ஆட்சி.

ஆகவே இதை ஒரு வகையில் கட்டபொம்மு 'சுதந்திர பாளையம்' அமைக்க மேற்கொண்ட முயற்சி என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் முயற்சி இதுவாகத்தான் இருக்கும்.


3. கிரேக்க இஸ்லாமிய படையெடுப்புகள் தமிழகம் வரை வராததன் காரணம் என்ன (என்னென்ன)?

தரை வழியாக வட இந்தியாவில் படையெடுப்புத்தவர்கள் கிரேக்கர்கள், மங்கோலியர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலர். இவர்கள் அனைவருக்கும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெரும்பாலும் கொள்ளை. அல்லது விஜய யாத்திரை.

இவர்கள் தென்னாடு வரை வர விந்தியாசலம் என்னும் விந்திய மலைகளைக் கடக்கவேண்டும். அந்த விந்தியாசலத்தில் இமய மலையைப் போல நல்ல கணவாய்கள் இல்லை. இதற்குமுன் வந்த சமுத்திர குப்தர் கலிங்கம் வழியாகவே தமிழகம் வந்துள்ளார். ஆகவே விந்தியாசலத்தைத் தாண்டும் இவர்கள் முயற்சிக்கு இயற்கை முதல் முட்டுக்கட்டை போட்டது.

பண்டைய புராண இதிகாசங்களில் விந்தியாசலம் தான் பாரதத்தின் தென் பகுதி என்று கருதப்பட்டு வந்தது. எனவே சிலர் அதற்கு மேல் வேறொரு தேசம் என்று நினைத்திருக்கலாம். இது வரலாறு போட்ட முட்டுக்கட்டை.

இமயமலை முதல் விந்தியம் வரை பல்வேறு அரசுகளின் தடுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் பலம் குன்றியிருக்கவேண்டும். கிடைத்தவரை லாபம் என்று திரும்பியிருக்கவேண்டும். இது வட இந்திய அரசுகள் போட்ட முட்டுக்கட்டை.

இவ்வாறாக பல்வேறு முட்டுக்கட்டைகள் இந்தப் படையெடுப்புகளை விந்தியம் தாண்டி வரவிடாமல் செய்தன.


4. கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு பிறகு ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு அரசர்கள் / நாயக்கர்கள் (கட்டபொம்மன் உட்பட) ஆட்சியில் தமிழ் தப்பி பிழைத்தது எப்படி. அந்த நேரம் வேறு குறுநில தமிழ் மன்னர்கள் இருந்தார்களா?

உங்கள் கேள்விக்கு டாக்டர் மு.வரதராசனார், அவரது 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் ஒரு அத்தியாயமே வழங்கியிருக்கிறார். அவரது வார்த்தைகளில் சொன்னால்,


'அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் தொடர்ந்து பெற்று வந்த வளர்ச்சியுடன் நன்கு வேரூன்றித் தழைத்திருந்த காரணத்தால், அந்தச் சில நூற்றாண்டுகளின் அரசியல் குழப்பம் அந்த இலக்கியச் சோலையைப் பெரிதும் தாக்கவில்லை. வழக்கம் போல் பூத்துக் குலிங்கிக் காய்த்துப் பெரும் பயன் தராவிட்டாலும், கோலையின் பசுமை அடியோடு மாறிப்போகவில்லை; புதி தளிர்கள் விட்டன. இலைகள் தழைத்தன; அரும்புகள் அரும்பின; சிற்சில பூக்களேனும் பூத்தன; சிறுசிறு அளவிலேனும் காய்களும் கனிகளும் காணப்பட்டன'.

மிக அழகாக எடுத்தியம்பியிருக்கிறார் மு.வ.!!

அருண்கிரி நாதர், வில்லிபுத்தூரார் (வில்லிபாரதம் இயற்றியவர்), காளமேகப் புலவர், குமர குருபரர் போன்ற பலர் இந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

ஆகவே தமிழ் தன் இயல்பால் வாழ்ந்து கொண்டிருந்தது.

விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர்களும், அவர்களுக்குப் பின் வந்த மராட்டியர்களும் தங்கள் மொழிகளோடு தமிழையும் வளர்த்தார்கள். என்ன வித்தியாசமென்றால், தமிழில் இந்தக் காலகட்டத்தில் சமயம் சார்ந்ததும் தனிமனிதப்புகழ் சார்ந்ததுமான நூல்கள் விரவிக்கிடப்பதைக் காணலாம்.

புதுக்கோட்டை, ராம நாதபுரம் தவிர்த்து தமிழைப் பின்புலமாகக் கொண்ட மன்னர்கள் / குறு நில மன்னர்கள் யாரும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.


5. சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்களின் மொழி எது

இருவருக்குமே கன்னடம்தான் மொழி. தமிழிலிருந்து முதலில் பிரிந்து தனி மொழியாக மாறியது கன்னடம். அதனின்றும் பிரிந்தது தெலுங்கு. தமிழிலிருந்து பிற்காலத்தில் பிரிந்தது மலையாளம். ஆகவே தமிழின் முதல் தங்கை கன்னடம்தான்!.


====


இது தவிர நண்பர் வெங்கட்ராமன் இந்திய சுதந்திரம் பற்றியும், காந்தியின் பங்கு பற்றியும், மற்ற தலைவர்களின் செயல்கள் மறைக்கப்பட்டது பற்றியும் கேட்டுள்ளார். இது குறித்து தனிப் பதிவு எழுத எண்ணியுள்ளேன்.

உங்கள் கேள்விகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

நன்றிகள் பல.

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 14

அத்தியாயம் 14 - காலச் சக்கரம்

முன் குறிப்பு:-
சக்கரவியூகம் தொடங்கி நூறு நாள் முடிவடைந்துள்ளது. இதை சுட்டிக் காட்டிய அன்பு நண்பர் சுரேஷுக்கும், தொடர்ந்து படித்து கருத்துகளை வழங்கிவரும் அனைவருக்கும் நன்றிகள் பல.

===

காலைக் கதிரவன் தன் செந்நிறம் நீக்கி பொன்னிறம் கூட்டி உச்சி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். கொல்லி மலையின் அந்தப் பாசறையின் மைதானத்தில் அனைவரும் வட்ட வடிவமாய்க் கூடியிருக்க, நடுவே அரங்கம் போன்ற அமைப்பு நிறுவப் பட்டிருந்தது. அதன் அருகே மூன்று ஆசனங்களில் முறையே மாராயர், இளவழுதி மற்றும் தேன் மொழி அமர்ந்திருந்தனர்.

அந்த அரங்கில் அங்கு பயின்று வந்தோரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவையனைத்தும் இளவழுதிக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தன. இறுதியில் மாராயர், ' நீங்கள் அனைவரும் இங்கு பயின்றதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தற்போது இளவழுதி தான் காஞ்சியில் பயின்ற பல்வேறு வித்தைகளை நமக்கு செய்து காட்டுவான்' என்றதும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

சட்டென மாராயர் இவ்வாறு கூறிவிட்டதால் செய்வதறியாது திகைத்த இளவழுதி, 'தந்தையே, என்னுடன் மோத யாரை அழைப்பது?' என்று வினவினான்.

'கவலைப் படாதே இளவழுதி, இருக்கவே இருக்கிறாள் தேன்மொழி. என் போதனை சிறந்ததா, காஞ்சிக் கடிகையின் போதனை சிறந்ததா என்று பார்த்து விடலாம். தேன் மொழி, நடக்கட்டும் வாள், வில் வித்தைகள்' என்றார்.

முதலில் தேன் மொழியுடன் மோதுவதா என்று நினைத்தாலும் தந்தையின் சொல்லைத் தட்ட முடியாத காரணத்தால் முதலில் மெதுவாக வாளை சுழற்றினான். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறென்று சற்று நேரத்திலேயே தெரிந்து விட்டது. அதற்குப் பிறகு அவன் தற்காப்பிலேயே கவனம் செலுத்த நேரிட்டது. அவனால் அவள் வாளைத் தடுத்து நிறுத்துவதே பெரும் பாடாக இருந்தது. இறுதியில் அவன் வாளும் அவன் கையை விட்டகன்றது. புன்முறுவலுடன் நின்றாள் தேன்மொழி. கரகோஷம் விண்ணைப் பிளந்தது.


(நம் கதை நடக்கும் காலகட்டத்தில் பெண்கள் அரசியலில் மட்டுமல்லாது போர்முனையிலும் சாதித்திருக்கிறார்கள் என்பதை நமக்குக் கிடைத்த ஒரு சில ஆதாரங்களின் மூலம் தெளியலாம். காகதீய ராணி ருத்ராம்பாள் என்பவர் இந்தக் கதை நடப்பதற்கு சில காலம் முன்புவரை வாரங்கல்லைத் தலை நகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தினார். பற்பல போர்களும் புரிந்துள்ளார். சோழர் நிர்வாகத்தில் பெண்கள் 'அதிகாரிச்சிகள்' என்ற பெயருடன் இருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனவே பெண்களின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்துள்ளதை ஐயம்திரிபுற அறிந்து கொள்ளலாம். இதனடிப்படையிலேயே, தேன்மொழியின் படை நடத்தும் பாங்கும், வாள் வீச்சின் மகிமையும் விவரிக்கப் பட்டுள்ளன)


இறுதியில் தேன்மொழியின் திறமையே அதிகம் என்பதை இளவழுதி ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. தனியாக அவர்களை அழைத்த மாராயர் இளவழுதி, நீ கற்றுக்கொண்டது ஏட்டளவிலேயே இருந்திருக்கிறது. அவள் என்னிடம் நேரடியாகப் பயின்றதுடன் மற்றவர்களுக்கும் பயிற்சியளித்துள்ளாள். ஆகவே அவளிடம் கூடுதல் திறமையிருப்பது இயற்கையே. ஆகவே இதற்காக வருந்தாமல் இங்கு இருந்து அவளிடம் கற்றுக் கொள்வதுடன் உனக்குத் தெரிந்தவற்றையும் அவளுக்குக் கற்றுத்தா. நான் இன்று புறப்படுகிறேன். உங்களுக்கு விரைவில் தகவல் அனுப்புகிறேன்'. என்று கூறினார் மாராயர்.

இளவழுதியும் தேன்மொழியும் அவரை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

====


மதுரையை ஒட்டி அமைந்திருந்த ஒரு மாளிகையின் அறையில் அமர்ந்திருந்தார்கள் சுந்தர பாண்டியனும், மாலிக் கஃபூரும். மாலிக் கஃபூரின் முகத்தில் கோபத்தின் சாயை பரிபூர்ணமாகப் படிந்திருந்ததையும், சுந்தர பாண்டியன் சங்கடத்திலிருந்ததையும் காண முடிந்தது. சற்று நேரம் நீடித்த அமைதியை உடைத்தான் மாலிக் கஃபூர்.

'என்னைப் போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இருக்கமுடியாது சுந்தரா. உன்னை நம்பி இவ்வளவு தூரம் வந்ததற்கு நான் சுல்தானிடம் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. பாண்டிய அரசின் மணிமுடியை கைப்பற்ற என் துணையை நாடினாய். இப்போது திடீரென்று வேண்டாமென்றும் அரச பதிவியில் நாட்டமில்லையென்றும் கூறுகிறாய். இதே வேறொருவறாக இருந்திருந்தால் இப்போது இறைவனடி சேர்ந்திருப்பார்கள். நீயாக இருப்பதால் நிதானிக்கிறேன். இப்போது முடிவாக என்ன கூறுகிறாய்?'

'உன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாதே மாலிக். நானும் உன்னை போலத்தான். உன்னை அழைத்தது உனக்கு மட்டுமல்ல, எனக்கும் சங்கடத்தை விளைவித்திருக்கிறது. நீயாக இருப்பதால் உன் பேச்சுகளைப் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். வேறொருவன் இவ்வாறு பேசியிருந்தால் அவன் பேச்சு முடிந்திருக்காது, அதற்கு முன் அவன் மூச்சு முடிந்திருக்கும். வார்த்தையை அளந்து பேசுவது நல்லது.'

அப்போது ஏதோ சொல்லப் போன மாலிக் கஃபூரை மடக்கி 'சற்றுப் பொறு மாலிக். நான் முடித்து விடுகிறேன். உன்னை அழைத்த போது இருந்த நிலை வேறு, தெளிவு வேறு. தற்போது அவ்வாறல்ல. சூழ் நிலையைப் பொறுத்து நம் வியூகங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. தற்போது பாண்டிய தேசத்தில் நான் எந்த கலகத்தையும் விளைவிக்க விரும்பவில்லை. உன்னை சிரமப்படுத்தியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். நீயும் எனக்கு உதவுவதற்காக மட்டும் வரவில்லை. உன் ஆதாயம் கணக்கிட்டுத்தான் வந்தாய் என்பதையும் நினைவில் கொள்'. என்று நிறுத்தினான்.

மாலிக் கஃபூர் பொதுவாகவே அதிகம் பேசாதவன். மேலும் கோபப்படும் காலங்களில் அவன் வாயே திறக்க மாட்டான். ஆகவே பேச வந்ததைக் கூட நிறுத்திவிட்டான். நெடிய பெருமூச்சொன்று கிளம்பியது அவன் நாசியிலிருந்து. அவன் ஏதோ முடிவெடுத்தவன் போல் காணப்பட்டான்.

'நல்லது சுந்தரா. இதை இத்துடன் விட்டு விடுவது நல்லது என்பது எனக்கும் புரிகிறது. சரி நான் கிளம்ப வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வாய் என்று நம்புகிறேன்.'

'நிச்சயமாக மாலிக். நம் நட்பு தொடரும் என்று நானும் நம்புகிறேன்.'

இருவரும் ஆரத்தழுவிக் கொண்டாலும் உள்ளூர எழுந்த அவர்களின் எண்ணங்கள் வேறு விதமாக இருந்தன.

====


காலம் அனைவருக்கும் ஒன்றே போல் இயங்குவதில்லை. சிலருக்கு ஒரு நொடி ஒரு யுகமாகவும், சிலருக்கு ஒரு யுகம் ஒரு நொடியாகவும் தோன்றக்கூடும். ஒருவருக்கே ஒரு சமயத்தில் காலம் மெதுவாகச் செல்வது போலவும், பிறிதொரு சமயத்தில் மிக வேகமாகச் செல்வதாகவும் தோன்றலாம். காலம் தன் போக்கில் ஒரே சீறாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. நம் மனம்தான் அப்படி நினைக்கத் தோன்றுகிறது. இதனிடையில் நாம் செய்தனவும் செய்யாமல் விட்டனவும் பின்னர் நம்மை பல்வேறு விதங்களில் எதிர்கொள்கின்றன.

வீரனுக்கும் கயல்விழிக்கும் காலம் மிக வேகமாகச் செல்வது போல் தோன்றியதில் வியப்பில்லையல்லவா? அவர்கள்தான் பாண்டியதேசத்திற்குள்ளேயே காதல் தேசத்தை நிறுவி விட்டார்களே. காதல் வயப்பட்டவர்களின் உலகமே வேறாயிற்றே.

அங்கே இளவழுதியும், தேன்மொழியும் கூட சற்றொப்ப இதே நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் தேன்மொழி மாராயரிடம் பாடம் பயின்றதால் அவளால் நிதானிக்க முடிந்தது.

இடையில் விக்ரம பாண்டியன் இரு சகோதரர்களிடமும் பேசி அவர்களுக்குள் ஒரு சமாதானத்தை நிறுவியிருந்தான். அவர்களின் பாட்டனார் இந்த சாம்ராஜ்யத்தை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளும் பட்ட கஷ்டங்களும் அவர்களுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் அப்போது மீண்டும் கேட்டது அவர்களின் மனதை மாற்றியது. தற்போது குலசேகர பாண்டியர் உடல் நலம் தேறி வரும் நிலையில் வாரிசுரிமைப் போருக்கு எந்தவொரு தேவையுமில்லை என்று முடிவானது இருவரிடமும். சுந்தர பாண்டியன் ஒரு நிலையில் வீர பாண்டியனுக்கு பட்டத்தை விட்டுத்தரக் கூட முன் வந்தான். இவ்வாறாக ஒரு தற்காலிக சுமூக நிலை நிலவியது பாண்டிய தேசத்தில்.

இப்படிப்பட்ட சூழலில்தான் மாலிக் கஃபூரை திருப்பியனுப்பினான் சுந்தர பாண்டியன். வீரனும் கயலும் அவர்கள் காதல் தேசத்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். இவ்வாறே இருந்திருந்தால், இந்தத் தொடரே எழுத வேண்டியிருக்காது.

ஆனால் மாலிக் வேறு விதமாக அல்லவா சிந்தித்துக் கொண்டிருந்தான். தக்காணத்தில் சுல்தானின் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் முயற்சியில் சற்றே பின்னடைவு ஏற்பட்டாலும், தமிழகக் கோவில்களின் பொக்கிஷங்கள் தப்பவில்லை அவன் கண்களிலிருந்து. கஜினி முகமதுவின் சோம நாதபுர படையெடுப்புகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அவன் அதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த எண்ணம் கொண்டான்.

அதுவும் ஜடாவர்ம சுந்தர பாண்டியரால் பொன் வேயப்பட்டு ஸ்ருங்காரமாய் விரிந்திருந்த ஸ்ரீரங்கம் அவனை வெகுவாகக் கவர்ந்தது.

பழுத்தபழம் தானே அதிக கல்லடி படும்?

(தொடரும்)

Saturday, January 10, 2009

காதலில் விழுந்து மாட்டிக்கொள்வது எப்படி?

இது ஒரு சீரியஸ் பதிவு. எதிர் பதிவு, காமெடி, மொக்கைன்னு எதிர்பார்த்து வந்திருந்தீங்கன்னா, முனியாண்டி விலாஸ்ல ரவா தோசை கேட்ட கதையாயிடும். காதலில் விழுவது தப்பா? அப்படி விழுந்தால் அது மாட்டிக்கொள்வதாகுமா? ரெண்டுமே சரிதான். அதாவது காதலில் விழுவதும் சரிதான். விழுந்து மாட்டிக்கொள்வதும் சரிதான்.

காதலில் விழுந்து மாட்டிக் கொள்வது எப்படின்னு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியப்படுத்தும் பதிவுத்தொண்டுதான் இது. இது ஸ்டிரிக்டா 21 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான். சின்ன பசங்களுக்கெல்லாம் இல்ல. ஆகவே 21வயசுக்குக் கீழ இருக்கறவங்க எல்லாம் அபீட்டாயிக்குங்க. அதே மாதிரி, கடல, டைம்பாஸ், டெம்பரரி மாதிரியெல்லாம்கூட எஸ் ஆகிருங்க.முதல்ல காதலோட சிறப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கணும்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கின்னு ஒருத்தர் தேவாரம் பாடியிருக்காரே. காதலில் விழுந்தேன்ன்னு ஒரு படமே வந்திருக்கே. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று ஒரு கவிஞர் எழுதியிருந்தாரே. இவங்கல்லாம் காதல் காதல்னு அடிச்சிக்கும் போது காதல் செய்யாம இருக்கலாமா? இல்லன்னா காதல்ல விழாம தப்பிச்சுக்கலாமா? ஆகவே கலியுகத்துக்கு ஏத்தது காதல் கல்யாணம்தான் !

காதல்னா என்ன?

கண்டதும் வந்தா அது காதல் இல்ல. கண்டதைப் பாத்ததும் வந்தா அதுவும் காதல் இல்ல. அடிச்சா வர்றது காதல் இல்ல. உடனே வர்றதுக்கு காதல் இன்ஸ்டன்ட் காபியும் இல்ல. ஆகவே இதெல்லாம் இன்ஃபாச்சுவேஷன்னு தெரிஞ்சுக்குங்க மக்களே.

காதலும் நட்பும் வளர்பிறை நிலவு போல இருக்கணும். அதாவது மொதல்ல ஒண்ணுமில்லாம ஸ்டார்ட் பண்ணி கடைசில எதுவுமே மிச்சமில்லாம முடியணும். ஸ்டார்டிங்கிலயே வெளிச்சமா இருந்துச்சின்னா அப்பறம் சீக்கிறத்திலேயே ஃப்யூஸ் தான்.
காதலுக்கு பேசிக் குவாலிஃபிகேஷன் என்ன?

நீங்க சொந்தக்கால்ல நிக்கறவங்களா இருக்கணும் (நான் வாடகைக்கால்ல நிக்கலன்னு யாரும் பின்னூட்டம் போட்றாதீங்க!). அதாவது ஃபினான்ஷியல்லி இன்டிபெண்டன்டா இருக்கணும். கமிட்மென்ட்ஸ் இருக்கலாம். ஆனா அத சமாளிப்பதற்கான விஷன் இருக்கணும்.

முக்கியமா கட்டிலைத்தாண்டி யோசிக்கறவங்களா இருக்கணும்.காதல எப்படி ஸ்டார்ட் பண்றது?

நீங்க யாரையாவது பாக்கறீங்க. உடனே பிடிச்சிடுதா. அப்படியே பாராட்டிட்டு உட்டுடுங்க. அப்படியில்லாம ஒரு அபிப்ராயமேயில்லாம இருக்கா. ஆனா தொடர்ந்து ரெண்டு மூணு தடவ மீட் பண்றாமாதிரியாயிடுதா? அப்ப கை கொடுங்க. இதுதான் உங்க பார்ட்டி. அப்படியே ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க. ஆனா ரொம்ப தள்ளி போயிடாதீங்க. ஞாபகம் வெச்சுக்குங்க காதல் இன்ஸ்டன்ட் காபி இல்ல, ஸ்ட்ராங் ஃபில்டர் காபி!

ஸ்டெப் பை ஸ்டெப் விவரம் தெரிஞ்சுக்குங்க. தெரியப் படுத்துங்க. மொதல்ல பாயின்ட் ஆஃப் டிஃபரன்ஸஸ் அதாவது வேற்றுமைக் காரணிகளைக் கண்டுபிடிங்க. எவ்வளக்கெவ்வளவு ஒத்துப் போகாத பாயிண்ட் இருக்கோ அவ்வளக்கவ்வளவு காதல் ஸ்ட்ராங்கா இருக்கும். எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கின்றனங்கறத ஞாபகம் வச்சுக்குங்க.


காதல எப்படி டெவலப் பண்றது?

பார்க்கு பீச்சுன்னு மட்டும் சுத்தாதீங்க. கோவில் சர்ச்சுன்னும் போங்க. தனியான எடத்துக்கு போகாதீங்க. ஆனா கூட்டமில்லாத எடத்துக்கு போங்க. உங்க மீட்டிங்ல அப்பப்ப ஃப்ரெண்ட்ஸ இன்வால்வ் பண்ணுங்க. ஆனா அதிகமாவோ, கம்மியாவோ இல்லாம மீடியமா இருக்கணும்.

டிஃபரன்ஸஸ் கொறைக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க. அதுக்காக உங்க தனித்தன்மைய விட்டுத்தராதீங்க. நீங்க நீங்களா இருக்கறதாலதான் அடுத்தவங்க உங்கள விரும்பறாங்கன்னு தெரிஞ்சுக்குங்க.


காதல எப்ப எப்படி ப்ரபோஸ் பண்றது?

காதல் ப்ரபோஸ் பண்றதுக்கு ஒரு மாசம் ரெண்டு மாசம்னு டைம் இல்ல. ஆனா மினிமம் அண்டர்ஸ்டாண்டிங்க் வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க. இதுவரைக்கும் நீங்களும் உங்க வருங்காலமும் ஒரு வேவ் லெங்துக்கு வந்திருப்பீங்க. ஆகவே ஒரு நல்ல நாளா பாத்து சொல்லிடுங்க. லெட்டர், மெயில், தூது எல்லாம் வேலைக்காவாது. ஸ்ட்ரெயிட் அப்ப்ரோச்தான் ஒர்க் அவுட் ஆகும். எக்ஸ்பெக்டேஷன் கொறச்சலா இருந்தா பெட்டர். ஆனா, நிச்சயமா ஆப்போசிட் பார்ட்டி அக்செப்ட் பண்ணிடுவாங்க.

அப்பப்ப ட்ரெயிலர் பார்த்துக்கலாம். ஃபுல் மூவியெல்லாம் லைசென்சுக்கு அப்புறம்தான்!


காதல ஃபேமலிக்கு எப்படி தெரியப்படுத்தறது?

இது ஒரு முக்கியமான விஷயம். ஒரு ஜெனரேஷனுக்கு முன்ன இருக்கிறவங்க எந்த அளவுக்கு காதல ஏத்துக்குவாங்கங்கறது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனா உங்களால ஃபேமலிக்கு எந்த ப்ரச்சனையும் வரக்கூடாதுன்ற மாதிரி இருக்கணும். அப்பப்ப சக்சஸ் லவ்வர்ஸ் பத்தி வீட்டுல பேசுங்க. கொஞ்சம் கொஞ்சம் லவ்னு பீலா வுட்டு ரியாக்ஷன் டெஸ்ட் பண்ணுங்க.

ஆனா மசியலன்னு வச்சிக்குங்க, நீங்கதான் டிசிஷன் எடுக்கணும். 99.99% காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க ஒரு வாரிசு உருவானதுக்கு அப்பறமா ஃபேமிலியோட சேந்துற்ராங்க. அதுவரைக்கும் ஸ்ட்ராங்கா இருக்க முடியுமான்னு யோசிச்சுக்குங்க.


காதல் கல்யாணம் எப்படி பண்றது?

வீட்ல ஒத்துக்கிட்டாங்கன்னா ப்ரச்சனை இல்ல. ஆனாலும் கோவில்ல தாலி, ஹோட்டல்ல விருந்துதான் பெட்டர்.

வீட்ல ஒத்துக்கலன்னா, கோவில் கல்யாணம்தான். ரெண்டிலயும் ரெஜிஸ்டர் மேரேஜ் மிக மிக மிக மிக முக்கியம். இது கல்யாணம் செஞ்சிக்கிறவங்களுக்காக மட்டுமில்ல அவங்கள சுத்தியிருக்கிறவங்களுக்காகவும்தான்.


கல்யாணத்துக்கப்புறம்?

க.முல எப்படி இருந்தீங்களோ, க.பி.லயும் அப்படியே இருக்கணும். கிவ் ரெஸ்பெக்ட் அண்டு டேக் ரெஸ்பெக்ட். கண்டிப்பா டெய்லி ஒரு தடவ சண்ட போடுங்க!. ஊடுதல்..... இன்பம்!!.


மொத்தத்துல காதல்ங்கறது ஒரு லாங் டெர்ம் ஸ்ட்ராடஜி. இங்க சொல்லியிருக்கறதெல்லாம் சக்சஸ்ஃபுல் லவ்வர்ஸ் அதாவது கல்யாணம் ஆகி நல்லா செட்டிலானவங்களோட ஃபார்முலா.


ஆ த லி னா ல் கா த ல் செ ய் வீ ர் உ ல க த் தீ ரே ! ! !

Wednesday, January 7, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர். . . 13

அத்தியாயம் 13 - கொல்லிப் பாவை

கிழக்குத் தொடர்ச்சி மலை பெயருக்கேற்றார்ப்போல் தொடர்ச்சியாக இல்லாமல் அங்கங்கே விட்டு இருக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை அவ்வாறின்றி தொடர்ந்தும் அடர்ந்தும் காணப்படும். பற்பல நதிகள் இந்த கிழக்குத் தொடர்ச்சி மலையை ஊடறுத்து ஓடுவதால் தொடர்ச்சியாக இருக்க முடிவதில்லை போலும்.

அத்தகைய கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் கொல்லி மலை.கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்கியது கொல்லி மலை. அழகில் தான் ஆபத்து இருக்குமோ. ஆம் கொல்லிப் பாவையைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முனிவர்கள் தவம் செய்ய இங்கு வந்த போது, அவர்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் அங்கு வந்த தீய சக்திகளைத் தன் புன்னகையாலே கொன்றவளாம் கொல்லிப் பாவை. அவள்தான் இந்த கொல்லி மலையின் காவல் தெய்வம். இன்றும் அவளுக்கு அங்கே இருக்கும் கோயிலைக் காணலாம்.

கொல்லி மலை கடையெழு வள்ளல்களில் ஒருவனான 'வல் வில்' ஒரியின் இருப்பிடம் கூட. ஒரே அம்பில் சிங்கம், புலி, மான் மற்றும் கரடிகளைத் தொளைத்தெடுத்ததால் வல்வில் ஓரி என்று புகழப்பட்டான். கொல்லிமலையைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புற நானூறு, அக நானூறு போன்றவை செப்புகின்றன.

உயர்ந்த மலைகள் இல்லை. ஆனால் அடர்ந்த காடுகள் உண்டு. பனி பொழியும் சிகரங்கள் இல்லை. இனிமை சேர்க்கும் எழில்கள் உண்டு. அத்தகைய கொல்லி மலையின் மேற்கு நுழைவாயிலில் நாம் இருக்கிறோம். நாம் மட்டும் தனியாக வந்திருந்தால் அங்கே நிறைந்திருக்கும் பற்பல பொறிகளில் சிக்கிக் கொண்டிருப்போம். ஆனால் அங்கே இருவர் செல்கின்றார்களே. அவர்களுக்காக அத்துணை பொறிகளும் செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன. அவர்கள் கடந்தவுடன் அவை மீண்டும் செயல் படத்துவங்கும்.

முன்னால் ஒரு வயதானவர் செல்கிறார். அவரைத் தொடர்ந்து தட்டுத் தடுமாறி ஒரு இளைஞன் செல்கிறான். அவர்கள் செல்லும் பாங்கைப் பார்க்கும் போது அந்தப் பெரியவருக்குஅந்தப்பாதை புதிதல்லவென்று புரிகிறது. இளைஞன் புதிதாக வருகிறான் போலிருக்கிறது.

அடர்ந்த கானகத்தினூடே மலையை ஏறியதும் தோன்றிய எழில் கொஞ்சும் காட்சி அந்த இளைஞனை சற்று தேக்கியது. ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள். நடுவே மிகப் பெரிய சமவெளி. ஒரு பக்கத்திலிருந்து வெண்பஞ்சாய்ப் பொழியும் அருவி. கரும்பச்சைப் பட்டாடை அணிந்த இயற்கை மங்கை தன் வனப்புகளை மறைக்க சற்று சிரமப்பட்டாள். சில்லென வீசிய சிறுகாற்றும் அதில் கலந்திருந்த மெல்லிய மலர்களின் நறுமணமும் மனதை கொள்ளை கொண்டன. வனப்பறவைகளின் வகைவகையான ஓசைகள் அமைதியான சூழலுக்கு ஆதார சுருதி சேர்த்தன. அகண்டு விரிந்த இயற்கை அழகை அள்ளிப் பருக கண்கள் இரண்டு போதவில்லை கட்டிளங்காளைக்கு.

இவை ஒன்றும் அந்தப் பெரியவரை பாதித்ததாகத் தெரியவில்லை. இவன் இங்கேயே நின்றுவிட அவர் சற்றுதூரம் சென்றதும்தான் அவனைத் திரும்பிப் பார்த்தார். இப்போது இவர்கள் யாரென்பதை நீங்கள் ஒருவழியாக ஊகித்திருக்கலாம். ஆம் சரிதான். அவர்கள் முறையே, மாராயர் மற்றும் இளவழுதி.

'கடமை அழைக்கும் போது கண்களின் கவனம் கலையக்கூடாது' என்று சற்று கடினமாக வந்த மாராயரின் வார்த்தைகள் இளவழுதியின் ஆகாய சஞ்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தாய்ப்பசுவின் மடியிலிருந்து பால் குடித்துக் கொண்டிருக்கும் போது இழுக்கப்பட்ட கன்றைப்போல் நின்றான்.

'இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. இருட்டிவிட்டால் இங்கிருந்து செல்வது மிகக்கடினம். இவை எங்கும் போய்விடாது. பிறகு பார்த்து ரசித்துக் கொள். இப்போது வா வேகமாக' என்று மாராயர் கூறியதற்குப் பிறகு எதுவும் பேசாமல் அவரவர் சிந்தனையில் மனதைத் தேக்கி, விழிகளை வழியில் நிறுத்தி இலக்கை நோக்கிச் சென்றனர் இருவரும். நேரம் செல்லச் செல்ல காடும் அடர்ந்து கொண்டு வந்தது. சற்று நேரம் கழித்து மெல்லிய ஓசை கேட்டது இளவழுதிக்கு. வர வர ஓசை பெரிதாகிக் கொண்டே வந்தது. அது மனிதர்கள் எழுப்பும் 'ஹா' 'ஹோ' 'ஹூ' முதலிய சப்தங்கள். ஒரு வேளை மலை மக்கள் விழாவோ . ஆனால் உடுக்கை, பறை, கொம்பு முதலிய வாத்தியங்களின் ஓசை கேட்கவில்லையே. எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்து விடுகிறது என்று எண்ணினான். நடை தொடர்ந்தது.

அடர்ந்த கானகத்திலிருந்து சட்டென்று அகன்றது ஒரு பெரிய மைதானம். சுற்றிலும் சிறு குடில்கள். சற்றுத் தொலைவில் ஒரு கல் வீடு. மாராயரைப் பார்த்ததும் ஒரு சிறு கொம்போசை கேட்டது. பிறகு ஒரு பேரிகை முழக்கம். சற்றேறக்குறைய ஐநூறு பேர் அங்கே வரிசையாக நின்று மாராயருக்கு வணக்கம் செலுத்தினர். அனைவரின் கையிலும் வில். அங்கே தலைவன் போலிருந்த ஒருவன் முகக்கவசமணிந்து நின்றிருந்தான். மாராயருக்கு தனியாக வணக்கம் செலுத்தினான்.

அனைவருக்கும் ஆசி கூறி மீண்டும் காலையில் சந்திப்பதாகத் தெரிவித்து அவரவர் குடில்கள் திரும்பப் பணித்த மாராயர் தலைவனைத் தம்முடன் வருமாறு கூறினார். அவர்கள் சென்றதும், அங்கிருந்த கல்வீட்டிற்கு சென்றனர் மூவரும். இளவழுதி தன் வாழ்க்கையில் ஆச்சரியப் பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய காலம் போலும் என்று எண்ணிக்கொண்டான்.

'இளவழுதி, இவர்கள் யாரென்று உனக்குச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாலேயே உன்னை இங்கு அழைத்து வந்தேன். இவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டுகளாக இவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறேன், என்றேனும் சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவலாம் என்ற ஆசையில். தற்போது சோழகுலம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லையாயினும் இந்தப் பாசறையை அமைத்து இவர்களைப் போஷித்து வருகிறேன். இவர்கள் அனைவரும் வல்வில் ஓரியின் வழி வந்தவர்கள். வில்லவர்கள். மற்ற போர்முறைகளிலும் வல்லவர்கள். அவர்களது திறமை மறைந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். இப்போது அவர்கள் திறமைக்கு ஒரு சவால் வந்திருக்கிறது.

அதை ஆமோதிப்பது போல், அது வரை கவசத்தைக் கழட்டாத படைத் தலைவர் அப்போது தலைக் கவசத்தைக் கழட்டினார். இளவழுதி யூகித்திருந்தது சரியாகப் போய்விட்டது ஒரு வழியாக . அது அவன் மாமன் மகள் தேன்மொழிதான். அவர்களின் விழிகள் சந்தித்தன ஒரு கணம். மீண்டும் மாராயரைப் பார்த்தான் இளவழுதி.

'தந்தையே, தேன்மொழி வீட்டில் இல்லாத போதே நான் யூகித்தேன் இது போல் ஏதாவது இருக்குமென்று. இனி விவரமாக நீங்களே கூறிவிடுங்கள்'

'இளவழுதி, நீ வந்ததும் வீரபாண்டியனும், கயல்விழியும் மதுரைக்கு சென்று விட்டனர். ஆனால் தேசிகர் சொன்ன செய்தி என் மனதை சற்று பாதித்து விட்டது. ஆகவே, முதலில் நாம் செயல் பட வேண்டியது திருவரங்கத்தில்தான் என்று முடிவு செய்துவிட்டேன். ஆகவே கடந்த இரு வார காலமாக நாம் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று அவ்வூர்த்தலைவர்களிடம் எச்சரிக்கை செய்யவேண்டியதாயிற்று. இதற்கிடையில் நீ இவளைப் பற்றி கேட்ட போது அவளை நம் உறவினர் இல்லத்திற்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தேன். உன்னை திருவரங்கத்திற்கு அனுப்பியவுடன் இவளை இங்கு அனுப்பிவிட்டேன். இவள் மூலமாக இங்கிருப்பவர்களுக்குப் பயிற்சியளிக்கிறேன். பெரும்பாலும் இவள் இங்குதான் இருப்பாள். இவளது செல்லப்பெயர் கொல்லிப் பாவை ஆயிற்றே. நாளையே நான் மீண்டும் திருவெள்ளரைக்குப் புறப்படுகிறேன். நீங்கள் மேலும் சில காலம் இங்கிருந்து இந்தப் படையைப் பழக்குங்கள். என் குறிப்பு கிடைத்ததும் நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம். தேன்மொழி, இளவழுதியின் திறமையை சற்று சோதனை செய். அவன் படித்தது நமக்கு உதவுமா என்று பார். இல்லையேல் நம் படையில் சேர்த்து அவனுக்கும் பயிற்சி கொடு. நான் சற்று கொல்லிப் பாவை கோவில் வரை சென்று வருகிறேன்'

===

தனித்து விடப்பட்ட தேன்மொழியும் இளவழுதியும் சிறிது நேரம் வரை பேசவில்லை. உண்மையில் இளவழுதிக்கு தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் மாராயர் பேசியது குறித்தும் சற்று கோபமாகத்தானிருந்தது. தேன்மொழியும் அவன் பேசட்டும் என்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். இறுதியில் மவுனம் கலைத்தது தேன்மொழிதான்.

'வீரரே'

'சொல்லுங்கள் படைத்தலைவரே'

'மாராயர் சொன்னது புரிந்ததல்லவா?'

'தமிழ் எனக்குத் தெரியும்'

'நேராகப் பதில் சொன்னால் நலமாக இருக்கும்'

'உத்தரவு படைத்தலைவரே'

'சொல்லுங்கள்'

'என்ன'

'கேட்டதற்குப் பதில் சொல்லுங்கள்'

'என்ன கேட்டீர்கள்'

'இப்படி இருக்கிறீர்களே. ஹூம். மாராயர் சொன்னது புரிந்ததல்லவா?'

'அவர் நிறைய சொன்னார். நீங்கள் எதைப் பற்றி கேட்கிறீர்கள்'

'வீரரே'

'சொல்லுங்கள் படைத்தலைவரே'

இதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை. 'அத்தான் விளையாடாதீர்கள்.'

'நான் எங்கே விளையாடுகிறேன். நீயும் என் தந்தையும் அல்லவா என்னை குழப்பி விட்டு விளையாடுகிறீர்கள். நான் என்ன சிறு பிள்ளையா? என்னிடம் இவற்றை மறைப்பதால் என்ன பயன்? எதுவும் முழுமையாகத் தெரியாமல் எப்படி செயலில் இறங்குவது? விளையாட்டாம் விளையாட்டு' என்றான் சொல்லவொண்ணா கோபத்தோடு.

உண்மையான அவன் வார்த்தைகள் அவளை அசைத்தன. சிறு புன்னகையுடன் எழுந்து அவனருகே வந்து அவன் தோளைப் பற்றியவாறே, 'அத்தான் உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. நீங்களோ நெடு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் உங்களுக்கு இந்தத் தலைவலிகளெல்லாம் எதற்கு என்றுதான் மாமா விட்டிருப்பார். அவர் சொல்லாமல் நான் எப்படி சொல்வது? ஒன்றையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன்' என்றாள் தேன்மொழி மென்மையாக.

அவள் சொல்லும் செயலும் இளவழுதியை இளக்கிவிட்டிருந்தது. பழைய காதல் மன்னனாக ஆகிவிட்டிருந்தான் இளவழுதி.

'தேன்மொழி, மன்னிப்பெல்லாம் எதற்கு. நீ சொல்வதில் உண்மைதான். கோபம்தான் என் கண்ணை மறைத்து விட்டது.'

'சரி போகட்டும். மற்றவற்றைப் பார்ப்போம்.' என்றாள் தேன்மொழி.

'ஆமாம் ஆமாம். திருவெள்ளரையில் பார்க்கவேண்டியதே இன்னும் பார்க்க முடியவில்லை. அவற்றையும் சேர்த்துப் பார்த்துவிட வேண்டியதுதான்' என்றான் கண் சிமிட்டியவாறே. நன்றாகக் குழைந்திருந்த தேன்மொழி, மீண்டுமொருமுறை மந்தகாசப் புன்னகை பூத்தாள்.

'இப்படித்தான் சிரிப்பாளாம் கொல்லிமலைப் பாவை' என்று அவளைத் தன்னருகில் இழுத்தான் இளவழுதி.

(தொடரும்)

Monday, January 5, 2009

கார்பன் க்ரெடிட் - ஏதாவது செய்யணும் பாஸ்

ஜூன் 5ஐ உலக சுற்றுச்சூழல் தினமாக அனைவரும் கடைப்பிடித்து வருகிறோம். அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் போஸ்டர் காம்படீஷன், ஸ்லோகன் காம்படீஷன், கட்டுரை, ட்ராயிங், இன்னும் சில இடத்தில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளுதல் என்று சுற்றுச்சூழலுக்கு திதி கொடுப்பது போல் முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அதைப்பற்றி நினைவு வருவது அடுத்த வருடம் தான்.

இதன்னியில், கொஞ்சம் லேட்டாக விழித்துக் கொண்ட உலக நாடுகள், சுற்றுச்சூழல் மேம்பட மேற்கொண்ட நடவடிக்கைதான் க்யோடோ ப்ரோடோகால். அதன் ஆஃப்ஷூட் தான் கார்பன் க்ரெடிட்.

காற்று மாசுபடுதலும் ஓசோன் ஓட்டையும்

க்ரீன் ஹவுஸ் கேஸஸ் எனப்படும் கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஹைட் ரோஃப்ளூரோ கார்பன்ஸ் ஆகியவை வெளியேறுவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. இதனால் அகச்சிவப்புக் கதிர்கள் நேரடியாக வளிமண்டலத்திற்குள் வந்து வெப்ப நிலை அதிகமாவதுடன் கடல்மட்டம் உயர்தல், வெள்ளம், பனிப்பாறை நொறுங்குதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தடுக்கவேண்டும் என்று முதலில் 'ரியோ'வில் எர்த் சம்மிட் நடத்தினார்கள். பிறகு க்யோடோ வில் நடந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது அதுதான் க்யோடோ ப்ரோடோகால். இதன் படி அனைத்து உலக நாடுகளும் 2011 முதல் தங்கள் க்ரீன் கேஸ் எமிஷன் அளவை 1990ஆம் ஆண்டின் அளவுக்கு படிப்படியாகக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத நாடுகள் பெனால்டி கட்டவேண்டும். மேலும் இது வளரும் நாடுகளுக்கு எதிராக இருப்பதால் அவர்களுக்குச் சில சலுகைகள் உண்டு.

இந்த நாடுகள் டார்கெட் அசீவ் செய்ய முடியாத பட்சத்தில், அவர்கள் மற்ற நாடுகளிலிருந்தோ, நிறுவனங்களிலிருந்தோ கார்பன் க்ரெடிட் பெறலாம்.

கார்பன் க்ரெடிட் என்றால் என்ன?

ஒரு கார்பன் க்ரெடிட்டிற்கு ஒரு டன் கார்பன் டைஆக்சைட் வாயு தேவைப் படுகிறது. ஒரு நிறுவனம் அல்லது நாடு ஒரு லட்சம் டன் கார்பன்டையாக்சைட் எமிஷன் அதிகமாக இருந்தால் அதற்கு ஒரு லட்சம் கார்பன் க்ரெடிட் தேவைப் படுகிறது.

இதை விற்கும் நிறுவனங்கள், அவர்கள் சாதாரணமாக வெளியேற்ற வேண்டிய சி.ஓ.2 அளவை விட குறைவாக வெளியேற்றியிருந்தால் அதற்கு அவர்களுக்குக் க்ரெடிட் கிடைக்கும். இது இப்போது ஒரு பெரிய பிசினசாக ஆகிக் கொண்டிருக்கிறது. இதை நிர்ணயிக்க நிறுவனங்களெல்லாம் இருக்கின்றன.

நாம் எங்கே இதில் வருகிறோம்?

நாமும் கார்பன் க்ரெடிட் பெறலாம். எப்படி? நாம் வெளியேற்றும் சி.ஓ.2 மற்றும் க்ரீன் ஹவுஸ் கேஸஸை குறைப்பதன் மூலம்.

ஏ.சி. ஃப்ரிட்ஜ் ஆகியவற்றின் பயன் பாட்டை முடிந்த வரை குறைக்கலாம். கார் எடுப்பதைத் தவிர்க்கலாம். டூவீலருக்கு பதில் சைக்கிள் அல்லது நடராஜா சர்வீஸ் பயன் படுத்தலாம்.

எங்கெல்லாம் அனாவசியமாக லைட் எரிகிறதோ அது நம் வீடோ, அலுவலகமோ, பொது இடமோ அணைத்துவிடலாம்.

இதனால் எரிபொருள் / மின்சாரம் சேமிப்பது மட்டுமல்லாது க்ரீன் கேஸஸ் எமிஷனும் குறைகிறது.

நமக்கென்ன லாபம் என்கிறீர்களா? எப்போதோ படித்த ஒரு வாசகம்தான் ஞாபகம் வருகிறது.

I have not bequeathed this Nature from my Parents. I have Borrowed it from my Children.

நமக்குக் கிடைத்த சூழலை நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அது மட்டுமில்லாமல், நமக்கு இயற்கை அளித்த பல நல்ல விஷயங்களுக்கான பிரதியுபகாரமாக இயற்கைக்கே இந்த க்ரெடிட்டை அளித்துவிடலாமே.

சிந்தித்து செயல்படுவோம்.

இதை எழுதத்தூண்டிய 'நர்சிம்' அவர்களுக்கு நன்றி.

Friday, January 2, 2009

டேய்ய்ய்....

எழும்பூர்... மதியம் 3.25.

அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.

இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.

அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,

'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.

'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...

பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.

'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.

'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.

வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....

'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.

அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.

'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.

பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...

இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள். அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.

எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.

விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.

'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.

'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.

'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.

'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'

அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.

'தாங்க்ஸ் சார்.' என்றாள்.

மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.

முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.

பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.

அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.

'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,

'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,
கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.

நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.

அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,

அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.

டேய்ய்ய்....

Thursday, January 1, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர். . . 12

அத்தியாயம் 12 - யாரைத்தான் நம்புவதோ

வல்லாளனையும் இளவழுதியையும் தேசிகரிடத்தில் விட்டுவிட்டு மதுரைக்கு வந்துவிட்டோமல்லவா? அங்கே மேற்கொண்டு என்ன நடந்ததென்று பார்ப்போம்.

வல்லாளனின் பதிலைக் கேட்டு இளவழுதி அதிர்ச்சியுற்றாலும், தேசிகர் சிறு புன்முறுவலை மட்டும் வெளிக்காட்டினார்.

'வல்லாளா? நாமெல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள். நமக்குள் சண்டை இருக்கலாம். ஆனால் அடுத்தவன் வரும்போது நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இல்லாத போது எவ்வளவு பலமிருந்தாலும் அதனால் பயனிராது. பாஸ்கராசாரியார் சக்கரவியூகத்தைப் பற்றி விசேஷமாகக் கூறியிருப்பாரே.'

'இல்லை சுவாமி. அவர் கோடிட்டுக் காட்டியதுடன் நிறுத்திவிட்டார். மேற்கொண்டு ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் மாதவனைக் கேட்டுக் கொள்ளும் படி கூறிவிட்டார்' என்றான் வல்லாளன்.

'நாராயண. நீங்கள் இன்னும் பக்குவப் படவில்லை என்று நினைத்திருக்கலாம். அவர் மாதவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொன்னதால் அவனே சொல்வது நலம். எப்போது அவனைச் சந்திக்கப் போகிறீர்கள்'

'வரும் மார்கழித் திருவாதிரை அன்று தில்லையம்பலத்தில் சந்திப்பதாக நிர்ணயித்திருக்கிறோம். ஆனால் இதில் இவ்வளவு மர்மமென்ன என்று தான் புரியவில்லை.' இடையில் புகுந்தான் இளவழுதி

'இதில் மர்மமொன்றுமில்லை இளவழுதி. அனைத்தும் நாம் அறிந்ததுதான். ஆனால் அவற்றை முறையாக நோக்கும் போது நமக்குத் தெளிவு பிறக்கிறது. ஒன்று மட்டும் சொல்கிறேன். சக்கரவியூகம் என்பது போர் முறை மட்டுமல்ல. அதற்கும் மேற்பட்டது. சில சமயம் நாம் சில விஷயங்களை அரையும் குறையுமாகத் தெரிந்து கொண்டு சிக்கிக் கொள்கிறோம். ஆனால் வெளியே வருவது முடியாததாக இருக்கிறது. உங்களுக்கு இவை நன்கு தெரிந்திருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கியமானதாகிறது. ஆகவே மாதவனிடம் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற தேசிகர், அரசியலைப் பற்றி பேசிய போது இளவழுதியின் முகம் ஒருவாறு சென்றதை கவனிக்கத் தவறவில்லை.

'இளவழுதி, தெய்வத் தொண்டாற்றுபவனுக்கு அரசியல் ஏன் என்று நீ நினைக்கலாம். அந்த நினைப்பில் பொதுவாகத் தவறில்லை. ஆனால் இதற்குப் பதிலிறுத்தல் அவ்வளவு சுலபமன்று.

அரசியலும் மதமும் ஒன்றை ஒன்று நீங்காத அளவுக்குப் பின்னிப் பிணைந்து விட்டன. அரசுகள்தான் எந்தக் கோவில் வேண்டும், எந்தத் தெய்வம் வேண்டும் என்று நிர்ணயிக்கின்றன. ஒரு அரசன் சிவ வழிபாடுதான் வேண்டுமென்று தில்லையில் கோவிந்த ராஜனை கடலில் எறிந்தான். மற்றொரு அரசன் ராமானுசரை நாடு கடத்தி அவர் சீடனைக் குருடனாக்கினான். இவற்றுக்கெல்லாம் முன்னர் பல்லவ மகேந்திர வர்மன் ஜைனத்திலிருந்து சைவத்திற்கு மாறியவுடன் ஜைன மதக் கோவில்களை அப்புறப்படுத்தினான்.

இவ்வாறாக அரசுகளுக்கு பிடித்த மதம், மதத்தையே ஆட்டுவிக்கிறது.

இவ்வாறு அடித்துக் கொண்ட அரசுகள் கோவிலுக்குத்தான் அதிக நிவந்தங்களை அளித்துள்ளன. கோவில்களில்தான் நமது பண்டைய கலைச் செல்வங்கள் நிறைந்துள்ளன. கோவில்கள்தான் கலைகளைப் போஷிக்கின்றன. கோவில்கள்தான் ஆபத்துக் காலத்தில் மக்கள் கூடும் இடமாக உள்ளன. இவை அனைத்தும் ஏன் கோவில்களை மையமாக வைத்து இயங்கவேண்டும்?. மனிதன் பயப்படுவது கடவுளுக்குத் தான். ஆகவே கடவுள் உறையும் கோவில்கள்தான் இவற்றைப் பாதுகாக்கச் சிறந்த இடம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

வீர பாண்டியனின் பாட்டனார் ஜடாவர்ம சுந்தர பாண்டியர் தஞ்சையையும் கங்கை கொண்ட சோழ புரத்தையும் அழித்தாரே ஒழிய அதன் கோவில்களைத் தொடவில்லை. அவ்வளவு ஏன். இந்தத் திருவரங்கத்தில் குலோத்துங்கன் செய்த திருப்பணிகளோடு அவரும் அல்லவா சேர்த்துப் பொன் வேய்ந்தார். இவ்வாறாக, அரசனடி ஒற்றி ஆலயம் தொழுவது தொன்றுதொட்டு நிகழ்வதாக உள்ளது.

இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பது எங்களது கடமையாகிறது. ஆகவே அரசுகளுக்கு மதம் பிடிக்காமல் மக்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் பேசவேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு பகவத் காரியம்தான். ஆகவே, இதில் தவறில்லை என்பதை விட வேறு வழியில்லை என்று தான் கொள்ளவேண்டும்' என்று நிறுத்தனார்.

'சுவாமி. அபசாரமாக நினைத்திருந்தால் மன்னிக்க வேண்டும். என் தந்தை தங்களின் ஆலோசனையைக் கேட்க என்னை அனுப்பியதிலிருந்தே தெரிந்து விட்டதே, ஆயினும் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவலால் அவ்வாறு எண்ணலாயிற்று.' என்றான் இளவழுதி.

'ஒன்றும் பாதகமில்லை. நீ வல்லாளனை வழியனுப்பிவிட்டு வா. உன் தந்தைக்கு பதில் ஓலை தருகிறேன். இன்று இரவு இங்கே தங்கிவிட்டு நாளைக் காலை செல்லலாம். உன் இல்லம் அருகில் தானே இருக்கிறது' என்று இளவழுதியிடம் கூறியவர்,

'வல்லாளா, இன்று சொன்னதை மறக்கமாட்டாய் என்று எண்ணுகிறேன். அரங்கன் அருள் எப்போதும் உண்டு. சென்று வா' என்று வழியனுப்பினார்.

====

வல்லாளனை அனுப்பிவிட்டு இரவு போஜனத்தை மடத்திலேயே முடித்துக் கொண்ட இளவழுதி, இரண்டாம் ஜாம முடிவில் தேசிகர் அழைப்பதாகத் தகவல் வரவே, அவர் அறைக்குள் பிரவேசித்தான்.

'இளவழுதி, உன் தந்தை வல்லாளன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் எண்ணம் மற்றவரைப் பற்றி சரியாக இருக்கலாம். ஆனால் வல்லாளன் வேறு விதமானவன். அவனை நம்ப வேண்டாம் என்று சொல்'

'சுவாமி, உங்கள் முன்னிலையில்தானே அவன் ஒப்புக் கொண்டான்?'

'அவன் மேலுக்குச் சொன்னது அது. ஆகவே அதை பொருட்படுத்துதல் முறையன்று. உங்கள் உதவிக்கு வருவான். ஆனால் முழுமையாக உதவமாட்டான். இதை உன் தந்தையிடம் தெரிவி. தற்போது எந்த ஒரு ஆபத்தும் இல்லையென்றாலும் ஒரு ஆறு மாதங்களுக்குள் நிலை மாற வாய்ப்பிருக்கிறது. அப்போது அவர் உதவி மதுரையை விட திருவரங்கத்திற்கு அதிகம் தேவைப் படுமென்று கூறு. அதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே மேற்கொள்ளவேண்டுமென்று நான் ஆசைப் படுவதாகச் சொல். இதில் உன் பங்கு முக்கியமென்பதை நினைவில் கொள். மற்றவை எல்லாம் அல்லும் பகலும் அனந்தசயனத்திலிருக்கும் அரங்கன் பார்த்துக் கொள்வான். காலை எனக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. விடிந்தவுடன் புறப்பட்டுவிடலாம். நாராயண' என்று முடித்தார் தேசிகர்.

பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் அவனைத் தாக்கியதில் நிலை குலைந்திருந்த இளவழுதிக்கு அவர் விடை கொடுத்ததை உணர சற்று அவகாசம் தேவைப்பட்டது. தான் சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டோமோ என்று கூட எண்ணினான்.

====

மதுரையில் விக்ரம பாண்டியன் அரண்மனையில் இருந்த கயல்விழிக்கு இருப்பே கொள்ளவில்லை. எவ்வளவு நேரம் தான் உள்ளேயே சுற்றிச் சுற்றி வருவது. அனைவரிடமும் பேசியாயிற்று. காலையில் விட்டுச் சென்ற வீர பாண்டியன் மாலை வரை வரவில்லை. மதியம் வந்த விக்ரமபாண்டியரும் 'சாப்பிட்டாயா, ஒரு குறைவும் இல்லையல்லவா? என்று வினவினாரே ஒழிய வீரனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சே இவனை நம்பி வந்து விட்டோமே என்று ஒரு கணம் எண்ணியவள் அவனையும் தன்னையும் மனதிலேயே வைது கொண்டாள். மாலையில் இல்லத்தின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தான் வீர பாண்டியன்.

'கயல்விழி, மதுரை நன்றாக இருக்கிறதா? என்று வினவினான் ஆவலாக.

'ஓ. உங்கள் மாமன் வீடு தான் மதுரையோ. அதைத்தான் காலையிலிருந்து சுற்றிச்சுற்றி வந்து விட்டேனே. மிக மிக நன்றாயிருக்கிறது. இதைப் பிடிப்பதற்குத்தான் அண்ணன் தம்பிகளுக்குள் போட்டியா? நன்றாயிருக்கிறது. ஹூம்' என்று பழிப்புக் காட்டினாள்.

கோபத்தில் சிவந்திருந்த முகமும், துடிக்கும் அதரங்களும், அலைபாயும் கண்களும், ஏறித்தழையும் அவயங்களும் அவன் ஆசையை மேலும் தூண்டியது.

'சற்று சாந்தப் படு கயல்விழி. உன்னைப் பார்த்தால் கனல்விழியைப் போலல்லவா இருக்கிறது. மற்றொரு கண்ணகியை இந்த மதுரை தாங்காதம்மா' என்றவாறே அவள் தோள்களைத் தொடமுயன்ற வீர பாண்டியனுக்குத் தோல்வியே கிட்டியது. விழி மட்டும் கயலல்ல நானும்தான் என்று சொல்லாமல் சொல்லி நழுவினாள் கயல்விழி.

ஊடல் நாடகம் தொடரத் தொடர ஆசைச் சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள், ஊடல் முடிந்த போது காதல் சிகரம் தொட்டனர். ஊடலால் வரும் காதலின் இறுக்கம் அளவிட முடியாததல்லவா? அவள் அடித்தது வலித்தாலும் தேனாய் இனித்தது வீர பாண்டியனுக்கு.

'கயல் நீ வந்ததால் என் எண்ணம் ஈடேறாமலே போய்விடுமோ என்று தோன்றுகிறது. உன்னைப் பார்த்தால் காதல் வயப் பட்டுவிடுகிறேனேயொழிய மூளை வேலை செய்ய மாட்டேனென்கிறது'

'உங்களுக்கு அத்தகைய அவயம் ஒன்று இருக்கிறதா என்ன' என்று சிரித்தவாறே கேட்டாலும், 'அய்யா, தாங்கள் சென்ற காரியம் என்னவாயிற்று. அதைக் கூறுங்கள் முதலில். பிறகு என்ன செய்வதென்று யோசிப்போம்.'

அரண்மனையில் நடந்தவற்றை விளக்கிய வீர பாண்டியன், சுந்தரனின் நடத்தையில் தெரிந்த மாற்றத்தைப் பற்றி சந்தேகத்தை எழுப்பினான்.

'அவர் உண்மையிலேயே மனம் மாறியிருக்கலாம். எனினும் இன்னும் சமரசம் முடியாத நிலையில் நாம் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது. உங்கள் தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நிம்மதியை அளிக்கிறது. உங்கள் மாமா எப்போது உங்களிருவரிடமும் பேசப் போகிறார்?'

'தெரியவில்லை கயல்விழி. மதியத்திற்கு மேல் அவரைக் காணவில்லை. சுந்தரனும் அவன் அரண்மனைக்குச் சென்றுவிட்டான். நான் என்ன செய்வதென்று தெரியாமல் உன்னிடம் வந்தேன்.'

'அழகுதான். ஒன்றும் செய்யாமலிருக்கும் போதுதான் என் நினைவு வருகிறார்ப்போலிருக்கிறது. இப்போதே இப்படியென்றால்...'

'ஏன் இழுக்கிறாய். சொல் கயல் சொல். இப்போதே இப்படியென்றால்..'

'உங்களை நம்புவதற்கில்லை. இனி எப்போதும் உங்களுடன்தான்' என்று முடித்தாள் புன்னகையோடு.

(தொடரும்)