ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். மிக அழகானவன். அவன் சுற்றத்தார் அவனுக்கும் அவனைப் போலவே அழகான இன்னொருத்திக்கும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களது திருமண வாழ்வு மிக இனிமையானதாக இருந்தது. அவர்களைப் போல் அன்னியோன்னிய தம்பதிகள் இவ்வுலகத்தில் இல்லை என்பது போல் நடந்து கொண்டார்கள்.
யார் கண் பட்டதோ, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது. ஆம் ஒரு பூவே அவர்கள் வாழ்க்கையில் புயலானது. ஒரு விழாவிற்கு அவர்கள் சென்ற போது அங்கே ஒரு ஆரணங்கு ஆடினாள். அவள் ஆட்டம் இவர்கள் ஆனந்த வாழ்வுக்கு ஆபத்தாய் அமைந்தது. அவன் தன் மனைவியைப் பிரிந்து ஆரணங்கின் மேல் மையல் கொண்டான்.
அவளோ அனவரதமும் அவனையே நினைத்திருந்தாள். விரலாபரணம் இடையாபரணமானது. உள்ளங்கவர் கள்வன் இவள் உள்ளத்தை உணரவில்லை. காலம் கனியும் என்று காத்திருந்தாள் காதற்பேதை. அவள் உறுதி காலத்தின் கோலத்தை மாற்றியது.
ஆடலரசியின் அழகில் மயங்கிய ஆண்மகன் விழித்தெழுந்தான் ஓர் நாள். அந்தோ பரிதாபம். அவன் விழித்தபோது இழப்பதற்கு ஒன்றுமில்லை அவனிடம். மீண்டு(ம்) வந்தான் அவளிடம். அவளோ அவன் செய்த தவற்றை நினைக்கக் கூட இல்லை. மணாளன் வந்ததால் மனம் மகிழ்ந்தாள். அவனைப் போற்றிப் புகழ்ந்தாள். ஆகா, இன்னா செய்தவன் நாணுமாறு நன்னயம் செய்து, ஒறுத்து விட்டாள் நங்கை. வள்ளுவன் வாக்குக்கு வாழ்வளித்த வனிதை.
ஊரார் தூற்றலைத் தாங்காத தலைவன் வெளியூர் செல்வோம் செல்வம் தேடி என்றான். மன்னவனின் சொல்லை மறந்தறியாப் பாவையுடன் சென்றான் மாநகர் நோக்கி.
சென்றவனின் கையில் செல்வமில்லை. கலங்கினான் காதலன். கால் கொலுசைக் கொடுத்துக் கை கொடுத்தாள் காரிகை. அதை விற்றுப் பணமாக்கச் சென்றான். ஆனால் பாவம், வந்தான் பிணமாக, திருடன் என்ற பழியோடு. அழுதாள், அரண்டாள் மங்கை நல்லாள். ஆயினும் என்ன மாண்டவர் மீள்வரோ.
அழுகை நீக்கினாள். ஆவேசம் கூட்டினாள். புகுந்தாள் மாநகர் வேந்தர் மாளிகையில் பொங்கு கடலென. ஆர்ப்பரித்தாள் ஆண்டவனைப் பார்த்து. நீதான் நீதிமானா? வள நாட்டின் காவலன் வழி மாறலாமா? காரிகையின் வாழ்வில் காலனாய் மாறலாமா? என்றாள். ஆண்டவன் ஆடிப் போனான். அய்யகோ என்றவன் அடங்கினான் அவனுள். அவன் அடிபற்றித் தொடர்ந்தாள் ஆண்டவன் தலைவி. அதோடு நின்றாளில்லை ஆரணங்கு. அழித்தாள் மாநகரை உருத்தெரியாமல். சென்றாள் மேற்கு நோக்கி. இருந்தாள் வடக்கு நோக்கி.
ஆங்கே ஆடலரசியோ இவர்கள் நிலை கேட்டு வெதும்பினாள். துறந்தாள் அனைத்தையும். தழுவினாள் தர்மத்தின் தாளை.
ஒருவன் ஒருத்தி என்பது மரபு. ஒருவன் இருத்தி என்பது மரபை மீறிய செயல். இதுதான் ஒருவன், இரு மகளிரின் காதை.
இதைத்தான் சற்றொப்ப 2000 வருடங்களுக்கு முன்பே காப்பியடித்து விட்டார் இளங்கோவடிகள் என்பவர். அதற்கு 'சிலப்பதிகாரம்' என்றும் பெயரிட்டு விட்டார். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்??:(((
12 comments:
//அதற்கு 'சிலப்பதிகாரம்' என்றும் பெயரிட்டு விட்டார். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்??//
பதிவுத் திருட்டு என்பது போல், காப்பியத் திருட்டு என ஒரு பதிவு இடுங்களேன்!
யார் மேல இவ்ளோ கோபம்..
//ஒருவன் இருத்தி என்பது மரபை மீறிய செயல். // இன்றைய சட்டத்துக்குப் புறம்பானதும் கூட. அஃதாவது சாதாரணர்களின் மேல் எடுக்கப்படும் சட்டத்துக்குப் புறம்பானது.
கட்சிவண்ணங்களில் முச்சக்கரத் தானியங்கிகள் வந்து விடக்கூடும் அய்யா!
சிரிப்பான் இதோ:-)
அவரை சும்மா விடக்கூடாது பல்லவன். வூட்டுக்கு ஆட்டோ அனுப்பலாமா???? இல்ல வூடு கட்டியே அடிக்கலாமா??
நீங்க மட்டும் ஒரு அறுபது வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்திருந்தீங்க.... கலைஞர்ன்னு ஒரு முதல்வர் இப்ப இருந்திருக்க மாட்டார்
//
பழமைபேசி கூறியது...
பதிவுத் திருட்டு என்பது போல், காப்பியத் திருட்டு என ஒரு பதிவு இடுங்களேன்!
//
நன்றி பழமைபேசியாரே.
ஒரு விளக்கம். 'காப்பியமாக அடித்துவிட்டார்' என்பது 'காப்பியடித்துவிட்டார்' என்று குறுகிவிட்டது ! ! !
//
SUREஷ் கூறியது...
யார் மேல இவ்ளோ கோபம்..
//
என் மேலேயேதான். இது மாதிரி எப்ப எழுதப்போறோம்னு :(((
//
கெக்கே பிக்குணி கூறியது...
//ஒருவன் இருத்தி என்பது மரபை மீறிய செயல். // இன்றைய சட்டத்துக்குப் புறம்பானதும் கூட. அஃதாவது சாதாரணர்களின் மேல் எடுக்கப்படும் சட்டத்துக்குப் புறம்பானது.
கட்சிவண்ணங்களில் முச்சக்கரத் தானியங்கிகள் வந்து விடக்கூடும் அய்யா!
சிரிப்பான் இதோ:-)
//
நான் ஏதோ சாதாரணமா எழுதியிருக்கேன். நீங்க வண்ணமெல்லாம் பூசி 'தானி'யெல்லாம் இயக்கறீங்க.!!!
//
நான் ஆதவன் கூறியது...
அவரை சும்மா விடக்கூடாது பல்லவன். வூட்டுக்கு ஆட்டோ அனுப்பலாமா???? இல்ல வூடு கட்டியே அடிக்கலாமா??
//
வாங்க ஆதவன். இதப் பொதுக்குழு கூடி முடிவெடுக்கட்டும்.!! இப்போதைக்கு பொறுமை காப்போம்.!!! பிறகு பொங்கி எழலாம்!!!
//
நீங்க மட்டும் ஒரு அறுபது வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்திருந்தீங்க.... கலைஞர்ன்னு ஒரு முதல்வர் இப்ப இருந்திருக்க மாட்டார்
//
அடடடடடா... இங்க வம்புல இழுத்துவிடாம போறதில்லன்னு சில பேர் கங்கணம் கட்டிக்கிட்டு வந்தாமாதிரி தெரியுது... இந்த ஆட்டத்துக்கு நான் வரலங்க. நான் 'ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' இல்லைங்க ! ! !
சீரியஸா, கலைஞரோடு ஒப்பிடுவதே தவறு. இது மலைக்கும் மடுவுக்குமானது மட்டுமல்ல. மலைக்கும் மண் துகளுக்குமுள்ள வித்தியாசத்தை விட அதிகம்.
:)
இதைத்தான் சற்றொப்ப 2000 வருடங்களுக்கு முன்பே காப்பியடித்து விட்டார் இளங்கோவடிகள் என்பவர். அதற்கு 'சிலப்பதிகாரம்' என்றும் பெயரிட்டு விட்டார். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்??:((( ///
இந்தப்பதிவு
உங்களுடையதுதானா?
தேவா..
இளைய பல்லவன்!!
விடமாட்டோம் இதை!!
வாங்க நியு யார்க்கையே எரிப்போம்!!
thevanmayam கூறியது...
//இந்தப்பதிவு
உங்களுடையதுதானா?
//
என்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க...
//
இளைய பல்லவன்!!
விடமாட்டோம் இதை!!
வாங்க நியு யார்க்கையே எரிப்போம்!!
//
இதப் பொதுக்குழு கூடி முடிவெடுக்கட்டும்.!! இப்போதைக்கு பொறுமை காப்போம்.!!! பிறகு பொங்கி எழலாம்!!!
Post a Comment