Thursday, January 15, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 14

அத்தியாயம் 14 - காலச் சக்கரம்

முன் குறிப்பு:-
சக்கரவியூகம் தொடங்கி நூறு நாள் முடிவடைந்துள்ளது. இதை சுட்டிக் காட்டிய அன்பு நண்பர் சுரேஷுக்கும், தொடர்ந்து படித்து கருத்துகளை வழங்கிவரும் அனைவருக்கும் நன்றிகள் பல.

===

காலைக் கதிரவன் தன் செந்நிறம் நீக்கி பொன்னிறம் கூட்டி உச்சி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். கொல்லி மலையின் அந்தப் பாசறையின் மைதானத்தில் அனைவரும் வட்ட வடிவமாய்க் கூடியிருக்க, நடுவே அரங்கம் போன்ற அமைப்பு நிறுவப் பட்டிருந்தது. அதன் அருகே மூன்று ஆசனங்களில் முறையே மாராயர், இளவழுதி மற்றும் தேன் மொழி அமர்ந்திருந்தனர்.

அந்த அரங்கில் அங்கு பயின்று வந்தோரின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. இவையனைத்தும் இளவழுதிக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தன. இறுதியில் மாராயர், ' நீங்கள் அனைவரும் இங்கு பயின்றதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தற்போது இளவழுதி தான் காஞ்சியில் பயின்ற பல்வேறு வித்தைகளை நமக்கு செய்து காட்டுவான்' என்றதும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

சட்டென மாராயர் இவ்வாறு கூறிவிட்டதால் செய்வதறியாது திகைத்த இளவழுதி, 'தந்தையே, என்னுடன் மோத யாரை அழைப்பது?' என்று வினவினான்.

'கவலைப் படாதே இளவழுதி, இருக்கவே இருக்கிறாள் தேன்மொழி. என் போதனை சிறந்ததா, காஞ்சிக் கடிகையின் போதனை சிறந்ததா என்று பார்த்து விடலாம். தேன் மொழி, நடக்கட்டும் வாள், வில் வித்தைகள்' என்றார்.

முதலில் தேன் மொழியுடன் மோதுவதா என்று நினைத்தாலும் தந்தையின் சொல்லைத் தட்ட முடியாத காரணத்தால் முதலில் மெதுவாக வாளை சுழற்றினான். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறென்று சற்று நேரத்திலேயே தெரிந்து விட்டது. அதற்குப் பிறகு அவன் தற்காப்பிலேயே கவனம் செலுத்த நேரிட்டது. அவனால் அவள் வாளைத் தடுத்து நிறுத்துவதே பெரும் பாடாக இருந்தது. இறுதியில் அவன் வாளும் அவன் கையை விட்டகன்றது. புன்முறுவலுடன் நின்றாள் தேன்மொழி. கரகோஷம் விண்ணைப் பிளந்தது.


(நம் கதை நடக்கும் காலகட்டத்தில் பெண்கள் அரசியலில் மட்டுமல்லாது போர்முனையிலும் சாதித்திருக்கிறார்கள் என்பதை நமக்குக் கிடைத்த ஒரு சில ஆதாரங்களின் மூலம் தெளியலாம். காகதீய ராணி ருத்ராம்பாள் என்பவர் இந்தக் கதை நடப்பதற்கு சில காலம் முன்புவரை வாரங்கல்லைத் தலை நகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தினார். பற்பல போர்களும் புரிந்துள்ளார். சோழர் நிர்வாகத்தில் பெண்கள் 'அதிகாரிச்சிகள்' என்ற பெயருடன் இருந்ததாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனவே பெண்களின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்துள்ளதை ஐயம்திரிபுற அறிந்து கொள்ளலாம். இதனடிப்படையிலேயே, தேன்மொழியின் படை நடத்தும் பாங்கும், வாள் வீச்சின் மகிமையும் விவரிக்கப் பட்டுள்ளன)


இறுதியில் தேன்மொழியின் திறமையே அதிகம் என்பதை இளவழுதி ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. தனியாக அவர்களை அழைத்த மாராயர் இளவழுதி, நீ கற்றுக்கொண்டது ஏட்டளவிலேயே இருந்திருக்கிறது. அவள் என்னிடம் நேரடியாகப் பயின்றதுடன் மற்றவர்களுக்கும் பயிற்சியளித்துள்ளாள். ஆகவே அவளிடம் கூடுதல் திறமையிருப்பது இயற்கையே. ஆகவே இதற்காக வருந்தாமல் இங்கு இருந்து அவளிடம் கற்றுக் கொள்வதுடன் உனக்குத் தெரிந்தவற்றையும் அவளுக்குக் கற்றுத்தா. நான் இன்று புறப்படுகிறேன். உங்களுக்கு விரைவில் தகவல் அனுப்புகிறேன்'. என்று கூறினார் மாராயர்.

இளவழுதியும் தேன்மொழியும் அவரை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

====


மதுரையை ஒட்டி அமைந்திருந்த ஒரு மாளிகையின் அறையில் அமர்ந்திருந்தார்கள் சுந்தர பாண்டியனும், மாலிக் கஃபூரும். மாலிக் கஃபூரின் முகத்தில் கோபத்தின் சாயை பரிபூர்ணமாகப் படிந்திருந்ததையும், சுந்தர பாண்டியன் சங்கடத்திலிருந்ததையும் காண முடிந்தது. சற்று நேரம் நீடித்த அமைதியை உடைத்தான் மாலிக் கஃபூர்.

'என்னைப் போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இருக்கமுடியாது சுந்தரா. உன்னை நம்பி இவ்வளவு தூரம் வந்ததற்கு நான் சுல்தானிடம் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. பாண்டிய அரசின் மணிமுடியை கைப்பற்ற என் துணையை நாடினாய். இப்போது திடீரென்று வேண்டாமென்றும் அரச பதிவியில் நாட்டமில்லையென்றும் கூறுகிறாய். இதே வேறொருவறாக இருந்திருந்தால் இப்போது இறைவனடி சேர்ந்திருப்பார்கள். நீயாக இருப்பதால் நிதானிக்கிறேன். இப்போது முடிவாக என்ன கூறுகிறாய்?'

'உன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாதே மாலிக். நானும் உன்னை போலத்தான். உன்னை அழைத்தது உனக்கு மட்டுமல்ல, எனக்கும் சங்கடத்தை விளைவித்திருக்கிறது. நீயாக இருப்பதால் உன் பேச்சுகளைப் பொறுத்துக் கொண்டிருக்கிறேன். வேறொருவன் இவ்வாறு பேசியிருந்தால் அவன் பேச்சு முடிந்திருக்காது, அதற்கு முன் அவன் மூச்சு முடிந்திருக்கும். வார்த்தையை அளந்து பேசுவது நல்லது.'

அப்போது ஏதோ சொல்லப் போன மாலிக் கஃபூரை மடக்கி 'சற்றுப் பொறு மாலிக். நான் முடித்து விடுகிறேன். உன்னை அழைத்த போது இருந்த நிலை வேறு, தெளிவு வேறு. தற்போது அவ்வாறல்ல. சூழ் நிலையைப் பொறுத்து நம் வியூகங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. தற்போது பாண்டிய தேசத்தில் நான் எந்த கலகத்தையும் விளைவிக்க விரும்பவில்லை. உன்னை சிரமப்படுத்தியதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். நீயும் எனக்கு உதவுவதற்காக மட்டும் வரவில்லை. உன் ஆதாயம் கணக்கிட்டுத்தான் வந்தாய் என்பதையும் நினைவில் கொள்'. என்று நிறுத்தினான்.

மாலிக் கஃபூர் பொதுவாகவே அதிகம் பேசாதவன். மேலும் கோபப்படும் காலங்களில் அவன் வாயே திறக்க மாட்டான். ஆகவே பேச வந்ததைக் கூட நிறுத்திவிட்டான். நெடிய பெருமூச்சொன்று கிளம்பியது அவன் நாசியிலிருந்து. அவன் ஏதோ முடிவெடுத்தவன் போல் காணப்பட்டான்.

'நல்லது சுந்தரா. இதை இத்துடன் விட்டு விடுவது நல்லது என்பது எனக்கும் புரிகிறது. சரி நான் கிளம்ப வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வாய் என்று நம்புகிறேன்.'

'நிச்சயமாக மாலிக். நம் நட்பு தொடரும் என்று நானும் நம்புகிறேன்.'

இருவரும் ஆரத்தழுவிக் கொண்டாலும் உள்ளூர எழுந்த அவர்களின் எண்ணங்கள் வேறு விதமாக இருந்தன.

====


காலம் அனைவருக்கும் ஒன்றே போல் இயங்குவதில்லை. சிலருக்கு ஒரு நொடி ஒரு யுகமாகவும், சிலருக்கு ஒரு யுகம் ஒரு நொடியாகவும் தோன்றக்கூடும். ஒருவருக்கே ஒரு சமயத்தில் காலம் மெதுவாகச் செல்வது போலவும், பிறிதொரு சமயத்தில் மிக வேகமாகச் செல்வதாகவும் தோன்றலாம். காலம் தன் போக்கில் ஒரே சீறாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. நம் மனம்தான் அப்படி நினைக்கத் தோன்றுகிறது. இதனிடையில் நாம் செய்தனவும் செய்யாமல் விட்டனவும் பின்னர் நம்மை பல்வேறு விதங்களில் எதிர்கொள்கின்றன.

வீரனுக்கும் கயல்விழிக்கும் காலம் மிக வேகமாகச் செல்வது போல் தோன்றியதில் வியப்பில்லையல்லவா? அவர்கள்தான் பாண்டியதேசத்திற்குள்ளேயே காதல் தேசத்தை நிறுவி விட்டார்களே. காதல் வயப்பட்டவர்களின் உலகமே வேறாயிற்றே.

அங்கே இளவழுதியும், தேன்மொழியும் கூட சற்றொப்ப இதே நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் தேன்மொழி மாராயரிடம் பாடம் பயின்றதால் அவளால் நிதானிக்க முடிந்தது.

இடையில் விக்ரம பாண்டியன் இரு சகோதரர்களிடமும் பேசி அவர்களுக்குள் ஒரு சமாதானத்தை நிறுவியிருந்தான். அவர்களின் பாட்டனார் இந்த சாம்ராஜ்யத்தை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளும் பட்ட கஷ்டங்களும் அவர்களுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் அப்போது மீண்டும் கேட்டது அவர்களின் மனதை மாற்றியது. தற்போது குலசேகர பாண்டியர் உடல் நலம் தேறி வரும் நிலையில் வாரிசுரிமைப் போருக்கு எந்தவொரு தேவையுமில்லை என்று முடிவானது இருவரிடமும். சுந்தர பாண்டியன் ஒரு நிலையில் வீர பாண்டியனுக்கு பட்டத்தை விட்டுத்தரக் கூட முன் வந்தான். இவ்வாறாக ஒரு தற்காலிக சுமூக நிலை நிலவியது பாண்டிய தேசத்தில்.

இப்படிப்பட்ட சூழலில்தான் மாலிக் கஃபூரை திருப்பியனுப்பினான் சுந்தர பாண்டியன். வீரனும் கயலும் அவர்கள் காதல் தேசத்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். இவ்வாறே இருந்திருந்தால், இந்தத் தொடரே எழுத வேண்டியிருக்காது.

ஆனால் மாலிக் வேறு விதமாக அல்லவா சிந்தித்துக் கொண்டிருந்தான். தக்காணத்தில் சுல்தானின் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் முயற்சியில் சற்றே பின்னடைவு ஏற்பட்டாலும், தமிழகக் கோவில்களின் பொக்கிஷங்கள் தப்பவில்லை அவன் கண்களிலிருந்து. கஜினி முகமதுவின் சோம நாதபுர படையெடுப்புகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அவன் அதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த எண்ணம் கொண்டான்.

அதுவும் ஜடாவர்ம சுந்தர பாண்டியரால் பொன் வேயப்பட்டு ஸ்ருங்காரமாய் விரிந்திருந்த ஸ்ரீரங்கம் அவனை வெகுவாகக் கவர்ந்தது.

பழுத்தபழம் தானே அதிக கல்லடி படும்?

(தொடரும்)

11 comments:

SUREஷ் said...

//' நீங்கள் அனைவரும் இங்கு பயின்றதை வெளிப்படுத்தியுள்ளீர்கள். தற்போது இளவழுதி தான் காஞ்சியில் பயின்ற பல்வேறு வித்தைகளை நமக்கு செய்து காட்டுவான்' என்றதும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
////
இவரை இனிமேல் இளைய பல்லவன் என்று அழைக்கலாமா....

நான் ஆதவன் said...

//கஜினி முகமதுவின் சோம நாதபுர படையெடுப்புகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அவன் அதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த எண்ணம் கொண்டான்.//

கடவுளே!!! இவ்வாறு நடக்காதது தமிழகம் செய்த புண்ணியம் :)

நான் ஆதவன் said...
This comment has been removed by the author.
நான் ஆதவன் said...

//
இவரை இனிமேல் இளைய பல்லவன் என்று அழைக்கலாமா....//

ரிப்பீட்டேய்.......

நான் ஆதவன் said...

//
இவரை இனிமேல் இளைய பல்லவன் என்று அழைக்கலாமா....//

ரிப்பீட்டேய்.......

நான் ஆதவன் said...

என்னங்க இது ஒரு தடவை கமெண்ட் போட்டா இரண்டு இரண்டா வருது. எப்படிங்க இந்த ட்ரிக்???? சொல்லி கொடுங்க பல்லவன் :)

நசரேயன் said...

பாகத்திற்கு பாகம் வேகம் அதிகமா இருக்கு.. ம்ம் அப்புறம்?

இளைய பல்லவன் said...

//
SUREஷ் கூறியது...

இவரை இனிமேல் இளைய பல்லவன் என்று அழைக்கலாமா....
//

வாங்க சுரேஷ்,

அப்ப மத்தவங்கல்லாம் சண்டைக்கு வருவாங்களே!

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...

கடவுளே!!! இவ்வாறு நடக்காதது தமிழகம் செய்த புண்ணியம் :)
//

ஆதவன்,

பொறுத்திருந்து பாருங்கள். தமிழகம் அவ்வளவு புண்ணியம் செய்யவில்லை:((

மாலிக் கஃபூருக்கு கஜினியளவுக்குத் திறமையில்லையா அல்லது தமிழகத்தில் நிறைய எதிர்ப்பிருந்ததா என்று . . . (அடடே! உளர்றேன் போல இருக்கே. இத்தோட நிறுத்திக்கிறேன் கொஞ்சம் சுவாரசியத்துக்காக. மற்றவை தொடரில்!.)

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
என்னங்க இது ஒரு தடவை கமெண்ட் போட்டா இரண்டு இரண்டா வருது. எப்படிங்க இந்த ட்ரிக்???? சொல்லி கொடுங்க பல்லவன் :)
//

அப்படியா! ஆச்சரியமா இருக்கே. ஒருவேளை ஆதவன் ஒருமுறை சொன்னா ரெண்டு முறை சொன்ன மாதிரியா?!

ஆனா இந்த கமெண்ட் ஒருதடவைதான் வந்திருக்கு :))

இளைய பல்லவன் said...

//
நசரேயன் கூறியது...
பாகத்திற்கு பாகம் வேகம் அதிகமா இருக்கு.. ம்ம் அப்புறம்?
//

வாங்க நசரேயன், எனக்கு ரொம்ப நிதானமா போறா மாதிரி இருக்கே..:((