சாப்பிட டோக்கன் வாங்குவதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கியூவில் நிற்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
அப்படி கூட்டம் வந்தாலும் இருக்கும் 40 சீட்களுக்கு மேல் கூட்ட மாட்டேன் என்று சொல்லும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஞாயிறு இரவு, தீபாவளி / பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஒரு வாரம் என்று கடையை மூடும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஒரே சாப்பாட்டையே பல விதமான காம்பினேஷன்களில் கொடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா?
இப்படிப்பட்ட 'இருக்கிறதா'க்களுக்கு ஒரு (ஒரே?) பதில்தான் 'காசி வினாயகா மெஸ்'. சென்னையில் பேச்சுலராக இருந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரு மெஸ். பேச்சுலர்ஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் அக்பர் தெருவில் இருக்கிறது இந்த மெஸ்.
எனக்கு சற்றேறக்குறைய 15 ஆண்டுகளாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான சுவை, அளவு மற்றும் அமைப்புதான் அந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி.
அந்த மெஸ்ஸைப் பற்றி ஒரு அறிமுகம்.
அக்பர் தெரு ஒரு சிறிய சந்து. அதில் ஒரு வீடு மாதிரியான இடத்தில்தான் இந்த மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு மட்டும்தான். டிஃபன் காபி போன்றவை இல்லை. மதியமென்றால் 1 மணி முதல் கியூ சேர்ந்து விடும். இரவென்றால் 8 மணி முதல் கியூ இருக்கும்.
மொத்தம் 40 சீட்கள். நான்கு வரிசையாக இருக்கும். முதல் இரண்டு வரிசை ஒரு பேட்ச் ஆகவும் அடுத்த இரண்டு வரிசை மற்றொரு பேட்ச் ஆகவும் பரிமாறுவார்கள். முதல் வரிசை 'யெல்லோ டோக்கன்' என்று சொல்வார்கள். அடுத்த வரிசை, 'ஒயிட் டோக்கன்'.
முதலில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டும். 20 பேருக்குத்தான் டோக்கன். அவர்கள் சாப்பிட்டு முடித்தஉடன் அடுத்த 20 பேருக்கு சாப்பாடு. இப்படித்தான் போகும்.
அளவு சாப்பாட்டிலேயே இரண்டு வகை உண்டு. சாதா, லிமிட்(!). சாதாவில் ரெகுலர் 'பட்டை'யும் லிமிட்டில் சிறிய பட்டையும் இருக்கும். அதற்கு ஒரு டோக்கன் உண்டு!.
தயிர் வேண்டுமென்றால் அதற்கு ஒரு டோக்கன்.
மதியம் பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல் உண்டு. இது வேண்டாம் என்பவர்களுக்கு 2 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
அதே போல் அப்பளம் வேண்டாம் என்பவர்களுக்கு 1 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
இவை வேண்டாம் என்றால் சர்வரிடம் சொல்ல வேண்டும். அவர் ஒரு டோக்கன் தருவார். அதை கல்லாவில் கொடுத்தால் அங்கே பணம் ரிட்டர்ன் கிடைக்கும்.
வேகமாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த செட் வந்து விடும். பரிமாறல்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள். பொரியலும், கூட்டும் இரண்டாவது முறை உண்டு.
உணவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததுதான் இந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி. வேறு சில மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் சாதத்தில் சுண்ணாம்பு போடுவார்கள். அது அசிடிட்டியை உருவாக்கும். இங்கே அப்படியில்லை.
இந்த மெஸ்சுக்கு பல 'வருடக்கணக்கான' வாடிக்கையாளர்கள் உண்டு.
திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.
ஆனாலும் வீட்டில் எப்போதாவது ஊருக்குப் போனால் திருவல்லிக்கேணிக்கு இங்கு சாப்பிடுவதற்காகவே செல்வேன்.
தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்...