Saturday, February 28, 2009

ஜானகிபுரம் ரயில்வே கேட்

சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் என்.எச்.45 வழியாக தென் மாவட்டங்களுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் செல்வோர் கண்டிப்பாகக் கடந்திருக்க வேண்டிய இடம் இந்த ஜானகிபுரம் ரயில்வே கேட். விழுப்புரம் தாண்டியதும் வரும் முதல் கேட் இது. விக்கிரவாண்டியிலிருந்து பண்ருட்டி வழியில் செல்பவர்கள் இந்த கேட்டிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.


சென்னை வரும் வாகனங்கள் பெரும்பாலான சமயம் இந்த கேட்டில் மாட்டிக் கொள்ளும். அரை மணி நேரம் முதல் அரை நாள் வரை ஜாம் ஆகிவிடும். இதற்குப் பிறகு உளுந்தூர்பேட்டை கேட் இருந்தாலும் இங்கே ஜாம் ஆகிறார்ப்போல் அங்கே ஆவதில்லை.


சில சமயம் பெரிய பெரிய வண்டிகள் கேட்டின் இரு புறமும் உள்ள தடுப்புகளில் மாட்டிக் கொண்டு வாகனங்களை மறைத்துவிடும்.


மொத்தத்தில் அனைத்து சாலை வாகனங்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்துவந்த இந்த கேட்டின் மேம்பாலப் பணிகள் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வந்து ஒருவழியாக இப்போது பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது.


இது மக்களுக்கு உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய விடுதலை என்பதில் சந்தேகமில்லை.


நான் அதிக பட்சமாக இரண்டு மணி நேரம் இந்த கேட்டில் மாட்டியிருக்கிறேன். உங்களுக்கு இந்த அனுபவம் ஏதாவது உண்டா?

Friday, February 27, 2009

என்னுள் மறைந்த நான் - சிறப்பு கவிதைக் கொத்து

என் கவிதை புனையும் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டும், கவுஜ எழுதுவது எப்படி என்று சுட்டிக்காட்டியதற்காகவும் இந்தக் கவிதைகளை (அல்லது கவுஜகளை) ஆசிப் அண்ணாச்சிக்கு டெடிகேட் செய்கிறேன். இது கவிதையா, கவுஜையா என்பதை அவரது முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.


எண்ணங்களை
இயம்பும்
வார்த்தைகள்
இல்லை.
என்ன சொல்ல ?



மனத்தோப்பின்
உள்ளே
நின்றது
தனிமரம்.
உண்மை.



மறந்து போவதும்
மறத்துப் போவதும்
மறைந்து போவதும்
நினைவுகள்.




பார்த்தேன்.
பார்க்கிறேன்.
பார்ப்பேன்.
பார்வை.



புதுமை சேர்ந்து
வந்தது
பழையது.
நவீனம்.



முகமறியா
இருட்டின்
முகவரி.
வெளிச்சம்.


உள்ளும்
வெளியும்
சமமாய்.
தேடல்.


கேட்காமல்
தேடாமல்
கிடைக்குமா.
எதிர்பார்ப்பு.



கண்கள்
மூடினாலும்
காட்சிகள்
விரியும்.
கனவு.


என்னைப் பற்றிய
எண்ணத்தில்
மறைந்து
போகிறேன்.
நான்.




அவ்வளவுதாங்க
நம்மளால
முடிஞ்சது.



எதுனா
சொல்லிட்டுப்
போங்க.


ரொம்ப
ஃபீலிங்கா
இருக்கும்...

சக்கர வியூகம் எட்டா(ம்) இடத்தை எட்டியது எப்படி?

என் இனிய வலையுலக மக்களே, தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்களாயினும் இன்று வலைப்பூவைத் திறந்திட்ட பிறகுதான் நான் இந்த நிகழ்வை அறிய நேர்ந்தது.

யார் யார் வென்றுள்ளார் என்று பார்த்ததில் நல்ல பதிவுகளும் பதிவர்களுமே வெற்றி பெற்றுள்ளனவென்றுணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ்மண நிர்வாகிகளுக்கு உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

மேலும், முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட தலைசிறந்த பத்து பதிவுகளின் பட்டியலில் "தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்" பிரிவில் என் சக்கர வியூகமும் இருக்கக் கண்டு வியப்புற்றேன். இந்தப்பிரிவில் எட்டாவதாகக் காலடி எடுத்து வைத்துள்ளது சக்கர வியூகம்.

வாக்குகள் வழங்கி சிறப்புச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதை முதற்கண் கடமையாகக் கருதுகிறேன்.

=====

இப்ப பாருங்க எட்டாவது இடத்தை எட்டிப் பிடிச்சிருக்கு சக்கர வியூகம். எப்படி? இப்படித்தான். இவங்கல்லாம் முந்திகிட்டாங்க.


1. பயணங்கள் - புருனோ Brunoதமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை

2. பல்சுவை! - SP.VR. SUBBIAHStar Posting செட்டிநாட்டு வீடுகள்

3. முத்துச்சரம் - ராமலக்ஷ்மி‘திண்ணை நினைவுகள்’-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்

4. காலம் - கோவி.கண்ணன்இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

5. விவசாயி - ILA(a)இளாஇந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?

6. இசை இன்பம் - ஜீவா (Jeeva Venkataraman)தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்

7. வாழ்க்கைப் பயணம் - VIKNESHWARANஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்



இவங்களுக்கப்புறமா நான் எட்டாவதா வந்திருக்கேன். எனக்கப்புறம் இவங்க வந்திருக்காங்க.


9. தமிழரங்கம் - தமிழரங்கம் பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

10 ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்! - ஜெய. சந்திரசேகரன்பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன

11. மறந்து போகாத சில - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்

12. பழமைபேசியின் பக்கம் - பழமைபேசி“தம்பிடி”, “வராகன்”ன்னா என்ன?

13. காலப்பெருங்களம் - ஆதித்தன்தடுமாறும் தமிழினம்!



மற்ற பிரிவுகளில் சேர்த்த பதிவுகள் என்னவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.


இப்பதிவினை இட வாய்ப்பளித்த தமிழ்மணம் மற்றும் ரசிகக் கண்மணிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொண்டு இப்போதைக்கு விடை பெறுவது உங்கள் 'இளைய பல்லவன்'

Wednesday, February 25, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் - முதல் பாகம்

முதல் பாகம் - திரும்பிப் பார்க்கிறோம்:

தமிழகத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்த தமிழரசர்களின் ஆட்சி, தமிழகம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பிடியில் வீழ்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் தமிழர்களால் ஆளப்படாத நிலை, இடையே தில்லி சுல்தானின் பிரதி நிதியான மாலிக் கஃபூரின் படையெடுப்பு, ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த சரித்திரத் தொடர். இது வரை வந்த பகுதிகளின் சுருக்கம் கீழே தரப் பட்டுள்ளது.

===

காஞ்சிக் கடிகையில் பயின்ற மாணாக்கர்கள் பாண்டிய இளவல் வீர பாண்டியன், திருவெள்ளரையைச் சேர்ந்த இளவழுதி, ஹொய்சள நாட்டு இளவரசன் வல்லாளன், காடவ வமிசத்து கோப்பெருஞ்சிங்கன் மற்றும் ஹரிஹர ராயன், புக்க ராயன் ஆகியோர். கடிகையின் ப்ரதானாசாரியார் பாஸ்கராசாரியார். மாதவன் என்பவன் அங்கு துணை ஆசானாக இருந்து வந்தான். இவர்களுடைய வித்யாப்பியாச முடிவில் சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்த ஆசாரியார் பாதியிலேயே நிறுத்திக் கொள்கிறார். குழம்பிய மாணாக்கர்களுக்கு தில்லையில் இதைப் பற்றி சொல்வதாகக் கூறுகிறான் மாதவன்.

மதுரையில் குலசேகரப் பாண்டியரின் மகன்களான வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் அரியணைப் போட்டி இருந்து வருகிறது. அங்கு செல்ல விருப்பமில்லாத வீர பாண்டியன் இளவழுதியுடன் திருவெள்ளரை செல்கிறான். அங்கு இளவழுதியின் தந்தை மாராயர் மூலமாக சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூருடன் இணைந்து மதுரையைக் கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததைத் தெரிந்து கொள்கிறான். இடையில் இளவழுதியின் தங்கை கயல்விழியுடன் காதல் அரும்புகிறது. வீர பாண்டியனும் கயல்விழியும் மதுரை செல்கின்றனர். இளவழுதியும் தன் மாமன் மகள் தேன்மொழியின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான். தேன்மொழியின் மூலம்தான் சுந்தர பாண்டியன் மற்றும் மாலிக் கஃபூரின் சதி அம்பலமாகிறது.

மாராயர் இளவழுதியை திருவரங்கத்திற்கு அனுப்பி வல்லாளனைச் சந்திக்கும்படியும் அவனது உதவியை வீரபாண்டியனுக்காகக் கேட்கும் படியும் சொல்கிறார். அங்கு வேதாந்த தேசிகரது மடத்தில் , வல்லாளன் வீர பாண்டியனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். ஆனால் வல்லாளனை நம்ப வேண்டாமென்று தேசிகர் கூறுகிறார். இளவழுதியைக்கு மிக முக்கியமான பணி இருப்பதாகத் தெரிவிக்கிறார் தேசிகர்.

மாராயர் கொல்லிமலையில் ஒரு ரகசியப் படையைத் திரட்டி பயிற்சியளித்து வருகிறார். அந்தப் படைக்கு பயிற்சியளிப்பது தேன்மொழிதான் என்ற உண்மை இளவழுதிக்குத் தெரியவருகிறது. அங்கு சென்ற இளவழுதி படைக்கு மேலும் பயிற்சியளிப்பதுடன் தேன்மொழியுடனும் உல்லாசமாக இருக்கிறான்.

மதுரை சென்ற வீர பாண்டியன், குலசேகர பாண்டியரைச் சந்திக்கிறான். அவனது சகோதரன் சுந்தர பாண்டியன் மற்றும் மாமன் விக்ரம பாண்டியன் ஆகியோரோடு தற்காலிக சமரசம் ஏற்படுகிறது. மதுரைக்கு வந்த மாலிக் கஃபூரைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிடுகிறான் சுந்தர பாண்டியன்.

மார்கழித் திருவாதிரை அன்று வீர பாண்டியன் இளவழுதி, கோப்பெருஞ்சிங்கன் மற்றும் வல்லாளன் ஆகியோர் தில்லையில் மாதவனைச் சந்திக்கின்றனர். மாதவன் போர் முறைச் சக்கர வியூகம் குறித்து மிக விளக்கமாகத் தெரிவிக்கிறான்.

அதைக் கேட்டு வீர பாண்டியன், வல்லாளன் மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் மிக்க மகிழ்ச்சியடைந்து அவ்விடத்தை விட்டு அகல்கின்றனர். இளவழுதிக்கு மட்டும் ஆசாரியார் சொன்ன சக்கர வியூகம் அதுவல்ல என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதைத் தெரிந்து கொண்ட மாதவன் இளவழுதிக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக விளக்குகிறான்.


மதுரையில் குலசேகரப் பாண்டியருடைய உடல் நிலை திடீரென மோசமாகிறது. வீர பாண்டியன், சுந்தர பாண்டியன் மற்றும் விக்ரம பாண்டியன் ஆகியோரை அழைத்து அடுத்து வீர பாண்டியனே அரசாள வேண்டும் என்று கூறி உயிர் துறக்கிறார் குலசேகர பாண்டியர். ஆனால் சுந்தர பாண்டியன் மற்றவர்களை சரிக்கட்டி அவனே அடுத்த வாரிசு என்று எல்லோரையும் கூறும்படி செய்து விடுகிறான். ஒன்றும் செய்யவியலாத வீர பாண்டியனும், விக்ரம பாண்டியனும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

=====

இத்துடன் சக்கர வியூகத்தின் முதல் பாகம் நிறைவுறுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து.... மாலிக் கஃபூரின் அதிரடிகளுடன்

=====

இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் என்று உறுதியளிக்கிறேன்.

=====

Monday, February 23, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே + நான் கடவுள் = ?!?!

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு மனதுடனும், இறைவன் வேறு நாம் வேறு இல்லை என்ற தெளிவுடனும், எந்தப் பணியைச் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இரு ஆஸ்கார் பரிசுகளால் தெள்ளத் தெளிவாகிறது.

ஆக இறைவனுக்குச் சேரும் புகழ் நம்மையே சேர்கிறது. நமக்குள்ளிருந்து நம்மை வழி நடத்திச் செல்லும் இறைவன் நன்மையே செய்வான் என்பது உண்மையாக்கப் பட்டிருக்கிறது

பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறியிருந்தாலும், பரிசுகள் கிடைத்திருந்தாலும் ஆஸ்கார் கனவு மிக நெடியதாக இருந்து வந்துள்ளது. அந்த நீண்ட காத்திருப்பின் முடிவில் நமக்குக் கிடைத்தது மூன்று பரிசுகள். ரஹ்மானுக்கு இரண்டு, பூக்குட்டிக்கு ஒன்று.

வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்கக் கூடியவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முன்னோடியாகத் தெரிகிறார். அவர் அலட்டிக் கொண்டு நான் பார்த்ததில்லை. எளிமையும் தன்னடக்கமும் என்றும் ஏற்றத்தைத் தரும் என்ற அரிய கருத்தின் வெளிப்பாடாக இருக்கிறார். அவர் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். இவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

வாழ்க ! வளர்க ! !

Friday, February 20, 2009

பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..

தொற்று வியாதி மற்ற இடங்களில் பரவுகிறதோ இல்லையோ, வலையுலகில், பதிவுலகில் அதிவேகமாகப் பரவி விடுகிறது. பத்து கேள்விகள் போடாவிட்டால் நாம் நம் இமாலயக் கடமையிலிருந்து தவறிவிடுகிறோமோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. ஆகவே நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவை இந்தக் கேள்விக்கணைகள்.


கேள்வி கேட்பது என்று முடிவு செய்தவுடந்தான் இந்த கஷ்டம் தெரிந்தது யாரிடம் கேட்பது. எல்லோரும் எல்லாரிடமும் கேட்டுவிட்டார்களே. அடடடடடா.. தலையைப் பிய்த்துக் கொண்டு நான் கடவுள் ஆர்யா போசில் யோசித்ததில் உதயமானதுதான் கேள்வி கேட்பவரிடமே கேள்வி கேட்பது என்ற ஐடியா..


இப்போ ஸ்ட்ரெயிட்டா கேள்விக்கு போகலாம்


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?



நான் கேள்வியோட நிக்க மாட்டேன்.

பதில் எதிர்பார்ப்பேன்.

தயவு செய்து பதில் சொல்லுங்க.

பதில் சொல்லுங்க.

பதில் சொல்லுங்க.



(நம்ம சோலி முடிஞ்சுது. எங்கப்பா கோலி சோடா? (இது கேள்வில வராது. ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு போட்டது)

Thursday, February 19, 2009

புத்தகங்கள் நாட்டுடைமையாவதால் பயன் என்ன? தமிழ் செம்மொழியானதால் பயன் என்ன?

தமிழ் வளர வேண்டும் என்பதை விட வாழ வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். வாழ வேண்டுமெனில் தமிழின் செம்மையையும் பண்டைய தமிழறிஞர்களின் படைப்புகளையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டுடைமையாக்கப் படுவதால் காபி ரைட் பிரச்சனைகள் தீர்கின்றன. யார் வேண்டுமானாலும் எந்த மீடியத்திலும் இவர்களின் படைப்புகளை வெளியிடலாம்.

இதனால் ரீச் அதிகமாகிறது. கல்கியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப் படாத வரை வானதி பதிப்பகம் மட்டும்தான் பொ.செ. மற்றும் அவரது மற்ற முக்கிய படைப்புகளை வெளியிட்டு வந்தது. அப்போது பொ.செ. ஐந்து பாகங்களும் சேர்த்து ரு.800க்கும் மேல். ஆனால் நாட்டுடைமையாக்கப் பட்ட பிறகு அதிகமான மலிவு விலைப் பதிப்பு ரூ.135க்கே கிடைத்தது. இதனால் பெரும்பாலோர் கல்கியின் எழுத்துக்களைப் படிக்க முடிந்தது. இன்று இதன் மின் பதிப்புகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. மற்ற எழுத்தாளர்களின் எழுத்துகளும் அப்படித்தான்.

இப்போது சாண்டில்யன், கண்ணதாசன் ஆகியோரின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப் படுவதால் இதை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். மின் பதிப்புகளும் செய்யலாம். அனைவரும் படித்து மகிழலாம். எழுத்தாளர்களின் சந்ததியினருக்கும் தக்க சன்மானம் கிடைத்து விடுகிறது.


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, பற்பல பல்கலைக் கழகங்களில் ஒரு தனி துறையை ஏற்படுத்த உதவும். இதுவரை சமற்கிருதம் மட்டுமே செம்மொழியாக இருந்து வந்துள்ளது. அது வாழும் மொழியல்ல. அதற்கிணையான அல்லது ஒரு படி மேலான நிலையில் உள்ள தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்காதது தமிழுக்கு ஏற்பட்ட இழுக்காக இருந்து வந்தது. தற்போது அது களையப்பட்டுள்ளது. இவை தவிர்த்து மற்றைய உபயோகங்கள் தெரியவில்லை.


இன்றைய நிலையில் தமிழில் சிலப்பதிகாரம், திருக்குறள், தேவாரம், திவ்யப்ரபந்தம் போன்ற இலக்கியங்களோ / காப்பியங்களோ இல்லாத நிலை நிலவுகிறது. இவற்றைக் கொள்வாரில்லை ஆகவே கொடுப்பாரில்லை. இந்த நிலை மாற வேண்டும். நாம் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அடிப்படையில் தமிழால் நாம் இணைந்துள்ளோம். அந்தத் தமிழுக்கு நாம் செய்யும் கைம்மாறு அதன் சுவையை உணர்வதேயாகும்.


பாரதத்தாயைப் பற்றி பாரதியார் கீழ்கண்டவாறு பாடினாலும் இம்முதல் வரிகள் தமிழின் தொன்மையையும், இளமையையும் போற்றும்:-

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும்
இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள்தாய்.
யாரும் வகுத்தற்கரிய பிராயத்தள் ஆயினுமே எங்கள்தாய்
இந்தப் பாரில் என்னாளும் ஓர் கன்னிகை எனத் திகழ்ந்திடுவாள் எங்கள்தாய்.

இந்தப் பதிவை எழுதத் தூண்டிய "தலைவர்" நான் ஆதவனுக்கு நன்றிகள் பல.

Wednesday, February 18, 2009

தமிழக அரசுக்கு நன்றி ! ! !

நேற்று (17.02.2009) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அன்பழகன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் வாசிக்கப்பட்ட அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களும், அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.


இவையனைத்தும் ஒரு புறம் இருக்க என்னைப் போன்ற தமிழார்வலர்களுக்கும், வரலாற்றார்வலர்களுக்கும் இனிப்பான செய்தி ஒன்றுண்டு. அதுதான் சாண்டில்யன், கண்ணதாசன் மற்றும் பலரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப் படுவது.


தி.மு.க. அரசில்தான் பல்வேறு அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன. இது தமிழகத்தில் தமிழையும், இலக்கியத்தையும் வளர்க்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.


ஒரு இலக்கிய வரலாற்று ஆர்வலனாக இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


நன்றி !


நன்றி !!


நன்றி !!!

Tuesday, February 17, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 18

அத்தியாயம் 18 - வாரிசுரிமைப் போர்

பாண்டியர் அரண்மனையின் மாறவர்மர் குலசேகரப் பாண்டியரின் அறையில் குழுமியிருந்தோரின் முகத்தில் தேங்கி நின்ற கவலை, அந்தச் சூழலைத் தெள்ளென எடுத்தியம்பியது. நன்றாகத் தேறி வந்த மாறவர்மரின் உடல் நிலை சட்டென மாறுமென்றோ, அவர் நிலை இவ்வளவு கவலைக்கிடமாகுமென்றோ யாரும் எதிர்ப்பார்க்க வில்லைதான். வாடிய பயிரைப் போலிருந்தாலும் நினைவு தப்பவில்லை. கண்ணை மூடியே கிடந்தாலும் விழிகளின் அசைவுகள் நன்றாகத் தெரிந்தன.

மாறவர்மரின் பட்டத்தரசியார் (சுந்தர பாண்டியனின் தாய்), சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், அவர்களின் மாமா விக்ரம பாண்டியன், இளவழுதி, கயல்விழி, முதன்மை அமைச்சர்கள், தளபதிகள் ஆகியோருடன் மருத்துவர்களும் அங்கே இருந்தனர்.

சிறிது நேரத்திற்குப்பின் கண் விழித்த மாறவர்மர், மூவரைத் தவிர அனைவரையும் வெளியேறப் பணித்தார். அனைவரும் வேறு வழியின்றி வெளியேற அந்த அறையில் இருந்தது மாறவர்மர், விக்ரம பாண்டியன், வீர பாண்டியன், சுந்தர பாண்டியன். யாரும் பேசாமல் போகவே மாறவர்மரே, தீனமான குரலில் பேசினார்,

"சில மாதங்களுக்கு முன் நாம் இதே அறையில் சந்தித்தோம். இவ்வளவு விரைவில் மீண்டும் இங்கே சந்திப்போம் என்று நான் எண்ணவில்லை. தற்போதைய என் உடல் நிலையில் இன்னும் எவ்வளவு நாழிகை என்பது தெரியவில்லை." இடையே விக்ரமபாண்டியர் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, "வேண்டாம் விக்ரமா, என்னைப் பேச விடு. நான் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்."

"எவ்வளவு முறை சொன்னாலும் சலிக்காதது, எத்துணை முறை கேட்டாலும் தெவிட்டாதது இந்தத் தொல் பழங்குடியான பாண்டிய வமிசத்தின் வரலாறு. சங்க காலம் முதல் எவ்வளவோ இடர்ப்பாடுகள் வந்தாலும், இம்மதுரையையும், தமிழையும் எப்போதும் காத்துவந்தவர்கள் நாம். இடையிடையே சூரியனை மேகங்கள் மறைப்பது போல் நம் குலம் தாழ்ந்து கிடந்தது. தாழ்ந்தோமே தவிர வீழ்ந்து விடவில்லை. இதோ மீண்டும் ஒரு பாண்டியப் பேரரசு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது. இதற்கான முயற்சிகள் எவ்வளவு என்று உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை"

"அப்படிப்பட்ட நிலையில் இந்தப் பேரரசு இருக்கும் போது பெரும் வினாவாக எழுந்துள்ளது வாரிசுரிமைப் போராட்டம். இவ்வளவு நாள் தள்ளிப் போய்விட்டது. கடைசியாக இப்போது, எனக்குப் பின் யார் என்பதை நான் முடிவு செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறேன். சுந்தரனும், வீரனும் என் பேச்சைத் தட்டமாட்டார்கள் என்று நீ கூறினாய். ஆனால் இவர்கள் நடத்தையில் எவ்வித முன்னேற்றமும் தெரியவில்லை. ஆகவே இன்று ஒரு முடிவுடன் தான் உங்களைப் பேச அழைத்திருக்கிறேன்" என்று சற்று நிதானித்தார்.

ஒவ்வொருவரின் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள். ஆயினும் யாரும் எதையும் வெளிப்படுத்தவில்லை. அவரது அடுத்த சொல்லுக்காகக் காத்துக் கிடந்தனர்.

"விக்ரமா. என் இறுதியான முடிவு இதுதான். பட்டத்திற்கு அடுத்து வர வேண்டியது வீர பாண்டியன்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய். சுந்தரா, உன் அண்ணனுக்கு உதவுவதுதான் உன் முதல் கடமை என்பதை நினைவில் கொள். உனக்குத் தேவையான அதிகாரங்களை அவன் தருவான். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் தவறான முடிவு செய்து பாண்டியப் பழங்குடிக்கு ஆபத்தை விளைவித்துவிடாதே. இதை என் ஆணையாகக் கொள்ளலாம். அல்லது வேண்டுகோளாகவும் ஏற்கலாம். சரி இப்போது செல்லுங்கள். இறைவன் அருள் இருந்தால் நாளை சந்திப்போம்." என்றவர் அவர்களது பதிலுக்குக் காத்திராமல் அருகிலிருந்த மணியை அடித்து ஓசை எழுப்பினார். அவ்வோசை கேட்டதும் வெளியே சென்ற மற்றவர்கள் உள்ளே வந்தனர்.

அதற்குப் பிறகு மாறவர்மர் எதுவும் பேசவில்லை. எப்போதும் பேசவில்லை. அவர் கூறியதைப் போல் இறைவன் அருள் கிடைக்காததால் மறு நாள் அவர்கள் சந்திக்க முடியவில்லை. காலனின் பின் தொடர்ந்தார் மதுரைக் காவலர்.

====

மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு சுந்தர பாண்டியனுக்கும், வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டதை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு சுந்தர பாண்டியனே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு முடிவெடுக்க என்ன ஆதாரம் இருந்தது என்பது தெரியவில்லை. ஆயினும் முதல் மகன் என்ற முறையில் வீர பாண்டியனுக்கு அதிக உரிமை இருக்கலாம் என்ற எண்ணத்தில் அனைவரும் அவன் சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வாரிசுரிமைப் போரே, தமிழகத்தின் இறுதி தமிழ்ப் பேரரசின் முடிவுக்குக் காரணமாகவும் அமைந்தது.

====

அனைவர்க்கும் ஒரு நீதியென்றால் அரசர்க்கு ஒரு நீதி என்பது மரபு. அதன்படி மாறவர்மர் மறைந்த துக்கம் நீங்குமுன்னமே அடுத்த அரசர் யார் என்பதைத் தெளிவுபடுத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடியிருந்தனர். பிரதான அமைச்சரே பேச்சைத் துவக்கினார்.

"மேன்மை தங்கிய மாறவர்மர் மறைந்து சில தினங்களுக்குள்ளாகவே நாம் இவ்வாறு கூட வேண்டிய நிலை மிகவும் துர்ப்பாக்கியவசமானது. மன்னர் தனக்குப் பின் ஆட்சிசெய்யவேண்டியவரைத் தெரிவு செய்து பட்டத்திளவரசாக அறிவிப்பது மரபு. ஆயினும் மாறவர்மர் அவ்வாறு செய்யவியலாமற் போனதன் காரணம் நமக்கெல்லாம் தெரிந்ததே. இன்றைய அரசியல் சூழலில் பாண்டிய நாடு வலுவுடனிருந்தாலும், எதிரிகளின் பலமும் அதற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. ஜடாவர்மசுந்தர பாண்டியரால் விரிவு படுத்தப்பட்டு மாறவர்ம குலசேகரரால் பரிபாலனம் செய்யப்பட்டு வந்த இந்தப் பேரரசின் பெரும்பொறுப்பை ஏற்கவேண்டியது யார் என்பதை முடிவு செய்ய வேண்டியதே நம் கடமை. இனி நீங்கள் அனைவரும் உங்கள் கருத்துக்களைக் கூறலாம்"

இவ்விதமாக ப்ரதானி கூறியவுடன், அனைவரும் சுந்தர பாண்டியனே பட்டத்திற்குறியவன் என்று கூறினர். இது விக்ரமனையும், வீர பாண்டியனையும் வியப்பிலாழ்த்தியது. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். கண்கள் பேசின. விக்ரமனின் செய்தியை முழுமையாகப் புரிந்து கொண்டான் வீர பாண்டியன். இளவழுதியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

"விக்ரம பாண்டியரே உங்கள் கருத்து என்ன?"

"அய்யா, நீங்கள் அனைவரும் சுந்தரனே அடுத்த அரசன் என்று முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதில் என் கருத்து என்ன இருக்கிறது. மறைந்த மன்னரின் கருத்து ஒன்று உண்டு. ஆனால் இன்றைய நிலையில் அது பொருள் தராது. ஆகவே உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். நாங்கள் வருகிறோம். வா வீர பாண்டியா" என்று வேகமாக வெளியேறினான் விக்ரம பாண்டியன்.

அனைவரையும் ஒரு முறை நோக்கிய வீர பாண்டியன் சுந்தரபாண்டியனை தீர்க்கமாகப் பார்த்தான். அவன் பார்வையின் தீக்ஷண்யம் சுந்தரனைத் தலை குனியச் செய்தது. ஒரு முடிவுடன் கிளம்பினான் வீர பாண்டியன். உடன் புறப்பட்டான் இளவழுதி. அங்கே துவங்கியது ஒரு வரலாற்றுத் திருப்பம்.

(தொடரும்)

பிப்ரவரி மாதத்து டிசம்பர்ப் பூக்கள்..

இயற்கை

இயற்கையாக இருப்பதால்
மட்டுமல்ல
இயற்கையாக இல்லாமல்
இருப்பதால்தான்
அது இயற்கை


வாழ்க்கை

விடியலின் பனித்துளியை
இழுத்தது சூரியன் ஒளி
மீண்டும் மறு நாள்
வந்தது பனித்துளி
தொடர்ந்தது சூரியன் ஒளி


பயணம்

பயணிகள்
புறப்படும் இடம்
சேரும் இடம்
எல்லாம் மாறும்
மாறாதது
பயணம் மட்டுமே


நினைவுகள்

நிஜத்தில்
நிழலாய்த்
தொடரும்
நிஜத்தின்
நிழல்...

டிசம்பர்ப் பூக்கள்

டிசம்பர்ப்பூக்கள்
டிசம்பர் மாதத்து
மலரல்ல
அது . . .
பிப்ரவரியிலும்
பூக்கும் . . .

Saturday, February 14, 2009

பிப்.14, இன்று மட்டும் காதல் செய்யாதீர்...

அன்பு நண்பர்களே, வேலண்டைன்ஸ் டே என்பது என் நினைவிற்குத் தெரிந்த வரையில் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் கொண்டாடப் பட்டு வருகிறது.

காதலர்களுக்காக உயிர் துறந்த செயிண்ட்.வேலண்டைன் என்பவரின் நினைவாகத்தான் இந்த நாள் கொண்டாடப் பட்டு வருகிறது.

ஆனால் தொடர் வணிகமயமாக்கலினால் காதலர் தினம் மட்டுமல்லாது மகளிர், அன்னையர், தந்தை, முதலிய அனைத்து தினங்களும் விழாவைப் போலவும், அன்று கொண்டாட வேண்டுமென்பதைப் போலவும் வழக்கப் படுத்திவிட்டனர். இது வியாபார நோக்கம்தான் என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.

காதலர் தினத்தில் என்ன செய்யவேண்டும். இன்று காதலைச் சொல்ல நல்ல நாளா? இன்று மட்டும் நாம் காதலர் என்று உறுதி செய்து கொள்ள வேண்டுமா? இன்று காதலர்கள் சேர்ந்து ஊர் சுற்ற வேண்டுமா? பப், ஹோட்டல், டிஸ்கொதே போன்ற இடங்களில் டான்ஸ் ஆட வேண்டுமா? இதுதான் காதலர் தினத்தை கொண்டாடும் முறையா?

காதலர் தினம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் காதலர்கள்தான். இன்று ஒரு நாள் மட்டும் காதலித்துவிட்டு காதலுக்கு இழுக்கைத் தேடித்தராதீர்கள். காதல் உணர்வு பூர்வமானது. அது வருடத்திற்கு ஒரு நாள் வந்து போகும் நினைவல்ல.

செயிண்ட் வேலண்டைனுக்கு வணக்கம் செலுத்தும் வேளையிலே உலகெங்கிலும் வெறுப்பு மறைந்து காதல் மலர உறுதி பூணுவோம்.

Friday, February 13, 2009

மன சாட்சியும் அதன் ஒரே சாட்சியும்

உலகத்திலேயே.. ஏன்.. இந்த பிரபஞ்சத்திலேயே (நமக்குத் தெரிந்தவரை) உண்மை மட்டுமே பேசும் ஒரே சாட்சி அவரவர் மனசாட்சிதான். ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த மன சாட்சி பேசும் குரல் வெளியே கேட்காது. ஆகவே இந்த மனசாட்சிக்கு ஒரே சாட்சி நாம் தான். நாம் அந்த மனசாட்சியின் குரல் படி கேட்டு நடந்து கொண்டால் உண்மை மட்டுமல்லவா பேசிக் கொண்டிருப்போம். அப்படி நிகழ்ந்துவிட்டால் இந்த உலகமே அழிந்துவிடுமே!!!. இந்த உலகத்தைக் காக்கும் உயரிய எண்ணத்தில்தான் மனிதர்கள் மனசாட்சியின் குரலை புறந்தள்ளிவிட்டு தாங்கள் நினைப்பதை பேசுகிறார்கள்.

சரி.. விஷயத்திற்கு வருகிறேன்... (இனிமேல்தானா என்று நீங்கள் கேட்க மாட்டீர்கள். ஏனென்றால் என்னைப் பற்றிதான் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்குமே!). என் மன சாட்சிக்கும் அதன் ஒரே சாட்சியான எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

மனசாட்சி: இன்னைக்கு என்ன கிழமை?

நான்: ஏன். இது கூட தெரியாம இவ்வளவு நாளா என்னோட வளந்திருக்க. ஹையோ. ஹையோ. இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

ம.சா.: நேத்து?

நான்: இன்னைக்கு வெள்ளின்னா நேத்து வியாழன் தான்.

ம.சா.: இரு மவனே. ரொம்ப துள்ளாத. முந்தா நேத்து.

நான்: ஹெ.. ஹெ.. புதன் கெழம. சரி நெக்ஸ்ட் கொஸ்டின்.

ம.சா: தெளிவாத்தான் இருக்கே. ஒவ்வொரு புதனும் என்னா பண்ணுவ?

நான்: வழக்கம் போலதான் இருப்பேன். இதுல என்ன கேள்வி (அவ்வ்வ்வ் மாட்டிக்கிட்டோம்டா)

ம.சா: இந்தவாரம் என்னாச்சு.

நான்: எதுக்கு?

ம.சா: இந்த வடிவேலு வேலையெல்லாம் ஆவாது மவனே. சொல்லு என்னாச்சு.

நான்: அது வந்து.. ஆமாம். மிஸ் ஆகிருச்சு.

ம.சா: அதான் தெரியுதே. புதன் விட்டா வியாழனாவது வருமே. ஏன் மிஸ் ஆச்சு.

நான்: ஆணிபுடுங்கவே நேரம் பத்தல.

ம.சா:அது எப்பவும் இருக்குறதுதானே. இப்ப என்ன புதுசா/

நான்:பெரிய பெரிய ஆணியெல்லாம் புடுங்க சொல்லிட்டாங்க. அதான்.

ம.சா: சரி ஜனங்களுக்கு என்ன சொல்லப்போற

நான்: இதான் சொல்லணும்.

ம.சா: பாத்து. இன்னொரு தடவ விட்டேன்னு வெச்சிக்க சரக்கு தீந்துருச்சு போலன்னு ஆயிரும். ஆமா.

நான்: சேச்சே.. அப்படில்லாம் ஆகாது. நம்மாளுங்களப் பத்தி எனக்குத் தெரியாதா?

ம.சா: இப்ப என்ன பண்ணப் போற.

நான்: வழக்கம் போல இதையும் ஒரு பதிவா போட்டு ஒப்பேத்திற வேண்டியதுதான்.

ம.சா: அடங்க மாட்டியா நீ. வேற ஏதாவது இடைக்கால நிவாரணம்.

நான்: ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்ல வேண்டியதுதான்.

ம.சா: சிம்ரனைப் பத்திதான் சொல்லிட்டியே.

நான்: அது வேற. இது வேற.

ம.சா: சரி. இன்னொரு முறை இது மாதிரி பண்ணாதே. வலையுலக அய்யாக்களே / அம்மாக்களே, இவருக்கு சமாளிப்புத் திலகம்னு ஒரு பட்டம் வேணும்னா கொடுத்துடுங்க. சும்மா உட்ராதீங்க.

நான்: ஓக்கே. ஓக்கே. தாங்க்ஸ்.
=====

இது தாங்க பேசினது. உண்மையாகவே மிக மிக அழுத்தும் பணிச்சுமையால் இந்த வாரம் 'சக்கர வியூகம்' எழுத முடியவில்லை. மன்னிச்சுக்குங்க. இடைக்கால நிவாரணமாக இந்த கதை.

=====

பண்டாசிங் அப்படிங்கறவர் எப்படியோ கஷடப்பட்டு கரீம்பாயோட கள்ளத்தோணி மூலமா நியூ யார்க் போயிடறார். அவருக்கு பஞ்சாபிதான் தெரியும். இங்கிலீஷ் ல யெஸ் நோ அப்படி இப்படின்னு ஒண்ணு ரெண்டு தெரியும். அங்க போய் எப்படியோ ஓடி ஒளிஞ்சு ஊருக்குள்ள போய் அப்பாடின்னு ஒக்காந்துக்குறார்.

அப்ப அந்த பக்கமா வர்ற நம்ம பழமைபேசியார் 'ஆர் யூ ரிலாக்சிங்க்?' அப்படின்னு கேக்குறார்.

அதுக்கு பண்டாசிங் ' நோ நோ. ஐ ஆம் பண்டா சிங்" அப்படின்றார்.

பழமை பேசி "அடங்கொண்ணியா.. !@#$%^&*()" ந்னு சொல்லிட்டு போயிடறார்.

அடுத்து ஆன்மீகச் செம்மல் கேயாரெஸ் வருகிறார். அவரும். 'ஆர் யூ ரிலாக்சிங்க்?' அப்படின்னு கேக்குறார்.

பண்டாசிங்கும் சளைக்காம ' நோ நோ. ஐ ஆம் பண்டா சிங்" அப்படின்றார்.

ஆன்மீகச்செம்மலுக்கு அளவிடமுடியாத கோபம். அவரும் "!@#$%^&*()" அப்படின்னுட்டு போயிடறார்.

அடுத்ததா வர்றார் குடுகுடுப்பையார். அவரும். 'ஆர் யூ ரிலாக்சிங்க்?' அப்படின்னு கேக்குறார்.

பண்டாசிங்கும் சளைக்காம ' நோ நோ. ஐ ஆம் பண்டா சிங்" அப்படின்றார்.

பழமைபேசி, கேயாரெஸ் சொன்னதையே ரிப்பீட்டுறார் குடுகுடுப்பையார். பண்டாசிங்குக்கு ஒரே குழப்பம். அடப்பாவி. எவனோ ரிலாக்சிங்குன்னுட்டு ஒருத்தன் நம்மள மாதிரியே இருப்பான் போல. இவங்கல்லாம் அவனுக்கு கடன் கொடுத்திருப்பாங்க போல. அதான் நம்மள தொறத்தறாங்க. இங்கேருந்து ஓடிருவோம்னு கெளம்பிட்டான்.

வழியில இன்னொரு சிங்கு உக்காந்திருக்கார். அவர் நல்லா படிச்சிருப்பார் போல. அவரைப் பாத்தவுடனே பண்டாசிங்க்,"ஆர் யு ரிலாக்சிங்" அப்படின்னு கேக்குறான்.

அந்த சிங்கும் "யெஸ்" அப்படின்றார்.

உடனே பண்டா சிங்க் "யோவ். உன்னைத் தேடித்தான்யா மூணு பேர் எங்கிட்ட வந்தாய்ங்க. அவங்களுக்கு பதில் சொல்லி என்னால முடியல. நீ இங்க உக்காந்திருக்கன்னு அவங்களுக்கு சொல்லக்கூடாது" அப்படின்றான்.

அதுக்கு அந்த சிங், நம்ம பதிவர்கள் சொன்னதையே ரிப்பீட்டிட்டு போயிடறார். அவ்வளவுதாங்க.

Wednesday, February 11, 2009

சிம்ரனும் நானும்

இது சினிமா நட்சத்திரம் சிம்ரனைப் பற்றியது அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்களேயானால் உங்கள் ஊகம் மிகச் சரியானதே.
===
ஒரு நாள் வழக்கம்போல் காலையில் வந்து உள்பெட்டி(இன்பாக்ஸ்)யைத் திறந்து அலசிக்கொண்டிருக்கும் போது இந்த மெயில் வந்தது

டியர் .... (என் பெயர்)

ஹோப் யு ஆர் டூயிங் ஃபைன். ஐ ஆம் சிம்ரன் ஜாய்ன்ட் ஆஸ் மார்கெடிங் எக்சிகுடிவ் இன் ஜலந்தர். ஐ நீட் ஃபாலோவிங் இன்ஃபோ.

. .......

(இப்படியெல்லாம் எழுதிவிட்டு கடைசியில்)

வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
சிம்ரன்

====

அவ்வளவுதாங்க மெயில். உடனே சிம்ரன் கேட்ட இன்ஃபர்மேஷனை கஷ்டப்பட்டு கலெக்ட் செய்துவிட்டு பதில் அனுப்ப டைப் செய்யும் போதுதான் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி டைப் செய்துவிட்டேன்.

டியர் சிம்ரன்,

தேங்க்ஸ் ஃபார் யுவர் மெயில். வெல்கம் டு ..... (எங்க கம்பேனி பேர்) ஃபேமிலி. தி இன்ஃபோ இஸ் அட்டாச்டு ஹியர்வித்.

ப்ளீஸ் கீப் இன் டச் ஃபார் ஃபர்தர் இன்ஃபோ.

(எப்படி முடிப்பது? சரி சிம்ரனைப் போலவே முடித்து விடலாம் என்று)

வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
(என் பெயர்)

====

இப்படி ஆரம்பித்த மெயில் போக்குவரத்து ரொம்ப நாள் தொடர்ந்தது. கடைசியில் ஒரு நாள் ஆடிட்டுக்காக ஜலந்தர் போகவேண்டியிருந்தது. அங்கு வருவதாகத் தகவல் சொல்லிவிட்டு சென்றேன். சிம்ரன் சில தகவல்களைக் கேட்க அதையும் நேரில் கொண்டு வருவதாக மெயில் அனுப்பினேன்.

====

முதல் நாள் ப்ராஞ்சுக்குப் போனால் சிம்ரன் லீவாம். அது சரி நாம் தான் 10 நாள் இங்கே இருப்போமே. வேலை நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள்.

====

அலுவலகம் வந்து ஆடிட் ரூமில் ஆடிட் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிங்கர் (சிங் - பஞ்சாபி) வந்தார். ஆஜானுபாகுவான என்று சொல்வது சற்று குறைத்து மதிப்பிடுவதைப் போல் இருந்தார்.

"குடு மார்ணிங்க் சாஆஆஅர்." என்று பஞ்சாபியில் சொல்லி பலமாகக் கையைப் பிடித்து ஆட்டினார். ஒரு வழியாகக் கையை விடுவித்துக் கொண்டு "குட் மார்னிங்." என்றேன் வலியை மறைத்துக் கொண்டு.

"ஹவ் யூ ப்ராட் த இன்ஃபர்மேஷன்ஸ் சார்" என்று தொடர்ந்தார் பஞ்சாபியில்.

"வாட் இன்ஃபர்மேஷன்ஸ்?"

"த ஒன் ஐ ஆஸ்க்டு இன் தட் மெயில்"

"மெயில்? யூ ஆர்...." (ஆஹா... சின்ன பொறி தட்டியது மனதுக்குள்)

"சாரி சார். ஐ ஃபர்காட் டு இன்ட்ரொடியூஸ் மைசெல்ஃப். ஐ ஆம் சிம்ரன். சிம்ரஞ்சித்சிங் மான்" என்று மீண்டும் கையை நீட்டினார் ஆவலோடு.

நான் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் என் கைகளைக் காக்கவும் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தேன்.

====

டிஸ்கி:- 1. இது சிறுகதை என்று வகைப் படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.

2. இதன் மூலம் தெரிய வரும் கருத்து, சிங் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பெயர்தான். கடைசியில் கவுர் என்று வந்தால் அது பெண். இல்லையென்றால் ஆண். உதாரணம் சிம்ரஞ்சித்சிங்க் கவுர் என்றால் பெண். சிம்ரஞ்சித்சிங்க் மான் என்றால் ஆண்.

Thursday, February 5, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 17

அத்தியாயம் 17 - மதுரையில் காதல் வியூகம்

மீண்டும் மதுரை நம்மை அழைக்கிறது. சென்ற முறை சரியாக மதுரையை நம்மால் பார்க்க இயலவில்லை. இப்போது நல்ல வெளிச்சத்தில் பட்டப்பகலில் வந்திருக்கிறோமல்லவா? ஆஹா... பல்லவர்களின் தலை நகரம் காஞ்சி இடையில் தோன்றியது. சேரர்களின் தலை நகரங்கள் வஞ்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை மாறிக் கொண்டே இருக்கின்றன. சோழர்களோ உறையூர் முதல் கங்கை கொண்ட சோழபுரம் வரை தங்கள் தலை நகரை மாற்றிக் கொண்டே இருந்தனர். ஆனால் என்றும் மாறாத தலை நகர் மதுரை மட்டும் தானே!

எவ்வளவுதான் மதுராந்தகன் என்றும் மதுராந்தகி என்றும் சோழர்கள் மாற்றி மாற்றி பெயர்களை வைத்துக் கொண்டாலும் அவர்களால் மதுரையை அழித்துவிடமுடியவில்லையே. நீறு பூத்த நெருப்பாக இருந்த பாண்டியர்கள் ஜடாவர்ம சுந்தர பாண்டியர் காலத்தில் அக்கினிக்குழம்பாகப் புறப்பட்டு சோழர்களை அழித்ததையும் ஹொய்சளர்களை விரட்டியதையும் சேரர்களை ஒடுக்கியதையும் யார்தான் மறக்க முடியும்? அத்தகைய சிறப்புகளுக்கெல்லாம் மௌன சாட்சியாக விளங்கும் மதுரையும், மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயமும், வைகையும் பேச முடிந்திட்டால் இவற்றின் கதைகளை நாளெல்லாம் சொல்லுமே..

இந்த மாநகர் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. கோட்டையும் அதை சார்ந்த நகரும் ஒரு பிரிவாகவும், ஏனைய சிறு கிராமங்களின் கூட்டம் ஒரு பிரிவாகவும் உள்ளது. தலைநகரங்களை ஆற்றுக்கருகில் அமைப்பது மரபு. ஆற்றுப் படுகைகள் நகருக்கான நீர் ஆதாரமாக மட்டுமின்றி அரண் போலவும் செயல்படுகின்றன. ஆகவே ஆற்றங்கரையோரம் அதுவும் ஆறுகள் வளைந்து குதிரைக் குளம்பைப் போல் அமையும் இடத்தில் தலை நகரை அமைத்தால் மூன்று பக்கமும் இயற்கை அரண் அமைந்து விடுகிறது. ஆனால் மதுரையும் வைகையும் அப்படியன்று. வைகை ஒரு நேர்க்கோடாக செல்கிறது. ஆகவே மற்ற நகரங்களைப் போல் மதுரைக்கு இயற்கை அரணில்லை. ஆயினும் என்ன, இயற்கைக் குறைபாடுள்ளவர்களுக்கு வேறு வகையில் தற்காப்பு அமைந்து விடுகிறதல்லவா? அதைப் போன்றே மதுரை மண்ணின் மைந்தர்களுக்கு போராடும் குணமும், தோல்வியைக் கண்டு துவளாத மனமும் இயற்கையாக அமைந்துவிட்டன. இதுவே பிற்காலப் பாண்டியர்களின் வளர்ச்சிக்குக் காரணம் என கூறலாம். மிகப் பழமையான நகராதலால் திட்டமிட்ட வளர்ச்சியைக் காண முடியாத நிலை இருந்தாலும் நகருக்குண்டான மிடுக்கை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

அக்காலத்தில் பெரும் நகரங்களை இணைக்கும் வழிகள் மூன்று இருந்தன. அவை முறையே ராஜ பாட்டை, பொதுப்பாட்டை மற்றும் சகடப்பெருவழி என்பதாகும். ராஜபாட்டை சீருடனும் பாதுகாப்புடனும் விளங்கிவந்தன. அவற்றில் பெரும்பாலும் அரச குடும்பத்தினர், அமைச்சர்கள், அதிகாரிகள், படைத்தலைவர்கள், படைகள் பயணித்தன. பொதுமக்கள் இவற்றைப் பயன் படுத்தத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அவர்கள் பொதுப்பாட்டை என்னும் வழியில் செல்ல வேண்டும். அதில் மக்கள் நடந்தும், சிறு கூடு வண்டிகளில் சென்றும் பயணம் செய்தனர். அக்காலத்தில் வெளியூர்ப் பயணம் என்பது அவ்வளவு சவுகரியமானதன்று, ஆபத்தானதும் கூட. ஆகவே மக்கள் அவ்வளவாகப் பிரயாணப்பட மாட்டார்கள். சகடப் பெருவழியானது துறைமுக நகரங்களான கொற்கை, நாகை, புகார், மல்லை ஆகியவற்றிலிருந்து தலை நகரங்களுக்கும் மற்ற பெரு நகரங்களுக்கும் சென்றன. இவற்றில் பெரும் பொதி சுமந்த வண்டிகள் செல்லும். சகடம் என்றால் சக்கரம். ஆகவே பெரும் சக்கரங்களுடைய வண்டிகள் செல்வதால் இவை சகடப் பெருவழியாயிற்று. இவற்றைத் தவிர மற்ற ஊர்களை இணைப்பது ஒற்றையடிப்பாதைகளும், காட்டுப் பாதைகளும்தான்.

மதுரை தமிழகத்தின் இதயத்தில் இருந்ததால், ராஜபாட்டைகளும், பொதுப்பாட்டைகளும், சகடப்பெருவழிகளும் இங்கு சங்கமித்தன. இவை நகரை நேராகச் சென்று அடையாத வண்ணம் தொலைவிலேயே சாவடிகள் அமைத்து தடுக்கப் பட்டிருந்தன. ஒரு பாட்டைக்கும் மற்றொரு பாட்டைக்கும் இணைப்புப் பாட்டைகளும் அமைக்கப் பட்டிருந்தன.

=====

தில்லையிலிருந்து வந்த வீர பாண்டியன் தஞ்சை வழியாக வந்த ராஜ பாட்டையிலேயே பயணம் செய்து வந்ததால் விரைவில் மதுரை சேர்ந்தான். வழியில் அவனுக்கு மாற்று குதிரைகளும் கிடைத்தன. ஆகவே எங்கும் தங்கவில்லை. சக்கர வியூகத்தைப் பற்றி கயல்விழியிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் மிகுதியில் விரைந்தான் தன் மாமன் அரண்மனை நோக்கி.

கயல்விழியும் இவன் வருகைக்காகக் காத்திருந்தாள். அவனிடம் சொல்ல நிறைய தகவல்கள் இருந்தன. இடைப்பட்ட காலத்தில் மதுரை அவளுக்குப் பழகிவிட்டது. அழகர் மலை வரை தனியாகவே பயணம் செய்துவிட்டாள். மதுரையில் சாதாரண உடையில் திரிந்ததில் பலப்பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக மாலிக் கஃபூரின் மாயவலையின் முளைகள் மதுரையில் பலமாக அடிக்கப்பட்டு விட்டதை அவள் கவனிக்கத் தவறவில்லை.

=====

முதலில் அரண்மனையில் தந்தையின் நலனைத் தெரிந்து கொண்டு தன் மாளிகை நோக்கி சென்றான். பயணத்தில் ஏற்பட்ட அலுப்பைப் போக்க நன்றாக நீராடி, உணவுண்ட பின் ஒரு சிறு தூக்கம் அவனைத் தழுவியது. மாலையில் விழித்தவனின் சிந்தையில் கயல்விழி என்ன சொல்வாளோ என்ற எண்ணமே மேலோங்கியது. துரிதமாகக் கிளம்பினான் மாமன் மாளிகை நோக்கி, மயிலைத் தேடி.

மார்கழி மாதத்து மாலை நேரம் குளிர் மிகுந்திருந்தாலும் இதமாகவே இருந்தது. உத்தியான வனத்திலே உலாவந்து கொண்டிருந்தாள் கயல்விழியாள். அவளை நோக்கி வந்த வீர பாண்டியனை நோக்கியவள் ஒன்றும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தாள். மாலை நேரமும், உத்தியான வனமும் காதற்கடவுளுக்குகந்த நேரமாயிற்றே. இருவர் மனதிலும் அவன் அதிகமாகவே அம்பெய்தியிருந்தான். அதோடு சேர்ந்த புன்முறுவல் அவனை மொத்தாமாக சாய்த்துவிட்டது. காதல் வியூகம் அமைத்துவிட்டாள் கட்டிளங்குமரி. விருப்பத்தோடு கட்டுண்டான் வீர பாண்டியன்.

"வாருங்கள். ப்ரயாணமெல்லாம் சௌகரியம்தானே"

"அதிலென்ன குறையிருக்க முடியும். இருந்தாலும் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ப்ரயாணமும் நன்றாக இருந்தது. சென்ற காரியமும் நன்றாக முடிந்தது. உன் அண்ணன் பிறகு வருவதாகக் கூறினான்"

"அவன் திருவெண்காட்டிற்குச் சென்றிருப்பான்"

"உனக்கெப்படித் தெரியும்"

"எங்கள் தந்தையின் உற்ற நண்பரொருவர் அங்கே வசிக்கிறார். அவர் வருவதும் நாங்கள் அவர் இல்லத்திற்குச் செல்வதும் எப்போதும் நடக்கும். மேலும் தில்லை சென்றால் திருவெண்காடு செல்லாமல் திரும்பமாட்டார் என் தந்தை. அதைத்தான் என் தந்தை இளவழுதிக்கும் சொல்லியிருப்பார். சரி சக்கரவியூகத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்களா?"

"அதைப் பற்றி சொல்லத்தானே ஓடி வந்தேன். அதை விளக்க வேண்டுமென்றால் இங்கே பேசுவது முறையல்ல. மேலும் இந்த சமயத்தில் போரைப் பற்றி பேச வேண்டாமென எண்ணுகிறேன்"

"வேறென்ன செய்வதாக உத்தேசம். திருப்பாவையைப் பற்றியும் திருவெம்பாவையைப் பற்றியும் விவாதிப்போமா?"

"அதற்கு அதிகாலை உகந்தது. இப்போது விவாதிக்க வேண்டியது இந்தப் பாவையைப் பற்றி" என்று அவளைச் சுட்டியவன் "ஆனால் இதற்கு நேரம் காலம் தேவையில்லை" என்று அவள் கரங்களைப் பற்றினான்.

சில்லென்ற காற்று, ரம்மியமான மாலை நேரம், சில நாட்களே பிரிந்திருந்தாலும் நீண்ட நாள் பிரிந்திருந்தது போன்ற நினைப்பு அவர்களின் வியூகத்தை வலுப்படுத்தின. வியூகம் வலுத்தது. மங்கை வலுவிழந்தாள். ஆனால் வெற்றி யாருக்கும் கிட்டவில்லை.

(தொடரும்)

Sunday, February 1, 2009

ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி?

ஃபிகர்களுடனான எனது தொடர்புகள், பட்டறிவு, படிப்பறிவு, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கீழ்கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் இதைப் படித்துப் பயன் பெறுவதாக.

ஃபிகரை கரெக்ட் செய்வது என்பது ஒரு கலை. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற சொலவடைக்கேற்றார்ப்போல் ஃபிகர் கரெக்ஷனும் பழக்கத்தின்பால் வருவதுதான்.

எவை எல்லாம் ஃபிகர்கள்?

எல்லாமே ஃபிகர்கள் தான். இதில் சின்ன ஃபிகர், பெரிய ஃபிகர், ஃபேன்சி ஃபிகர் என்றெல்லாம் பிரிவினை செய்யக்கூடாது. எல்லா ஃபிகரையும் கரெக்ட் செய்து வைத்துக் கொண்டால்தான் கடைசியில் உதவும்.

ஃபிகரை கரெக்ட் செய்ய வேண்டுமா? மடக்க வேண்டுமா?

ஃபிகரை நிச்சயமாக கரெக்ட் தான் செய்ய வேண்டும். மடக்க நினைக்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கரெக்ட் செய்துவிட்டால் தானாகவே நம் வழிக்கு வந்து விடும்.

சரி. இனிமேல் கரெக்ட் செய்யும் வழி முறைகளைப் பார்ப்போம்.

1. நீங்கள் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு ஃபிகர் மட்டும் உங்களை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்?

அந்த ஃபிகரை கரெக்ட் செய்வதிலேயே உங்கள் கவனத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருந்தால், சாரி, உங்கள் அணுகுமுறை தவறு.

அதை அப்படியே விட்டு விட்டு மற்றவற்றை சற்று நோக்குங்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு நல்ல 'லீட்' கிடைக்கலாம். இதன் மூலம் நாம் கரெக்ட் செய்ய நினைக்கும் ஃபிகர் தானாகவே சரியாகிவிடும்.


2. ஃபிகர்களை கரெக்ட் செய்வதில் சில குழப்ப நிலைகள்.

ஒரு சில ஃபிகர்கள் மேலுக்கு சரியானது போலவும், பிரச்சனை எதுவும் இல்லாதது போலவும் இருக்கும். ஆனால் சற்று கவனித்துப் பார்த்தால் நமக்குத் தேவையான ஃபிகருடனான பிரச்சனைக்கு இது போன்றவைதான் காரணம் என்று தெரிய வரும். ஆகவே இவைகளின் மீதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்தது ஃபேன்சி ஃபிகர்கள். பார்க்கும்போதே நன்றாக இருக்கும் இந்த வகை ஃபிகர்கள் நம் கவனத்தை திசை திருப்பி விடக் கூடும். ஆகவே இவற்றையும் சற்று கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.


ஃபிகர்களை மெய்ண்டெய்ன் செய்யும் முறைகள்.

இப்படியாக கஷ்டப்பட்டு ஃபிகர்களை கரெக்ட் செய்வதோடு முடிந்து விடுவதில்லை. அவற்றை சரியாக மெய்ண்டெய்ன் செய்யாவிட்டால் நாம் பட்ட கஷ்டங்களெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் வீணாகிவிடும்.

நம்மைத் தவிர நம்மைச் சுற்றியுள்ளவர்களும் ஃபிகர்களுடன் சம்பந்தப் படலாம். அப்போதெல்லாம் நாமும் சற்று கவனமுடன் அவர்களின் நடவடிக்கைகளை ஃபாலோ செய்தாலே போதும். இத்தகைய சங்கடங்களை நீக்கி விடலாம்.

மேலும் எல்லா ஃபிகர்களையும் அடிக்கடி ரிவியூ அதாவது திரும்பத்திரும்ப பார்த்துக் கொள்ளவேண்டும்.

மேலே சொன்னவைகளெல்லாம் அடிப்படைகள்தான். சொல்லித் தெரிவதில்லை சில கலைகள். ஆகவே, கோடிட்டுக் காட்டிவிட்டேன். ரோடு போடுவதோ, பாலம் கட்டுவதோ உங்கள் சாமர்த்தியம்.

மேலதிக தகவல்களுக்கும், விளக்கங்களுக்கும் பின்னூட்டமிடுங்கள். தவறாமல் தம்ஸ் அப்பில் குத்துங்கள். தமிழிஷில் ஓட்டு போடுங்கள்.
வாழ்க வளமுடன் ! ! !