Friday, September 26, 2008

நீங்க நல்லவரா கெட்டவரா ?


வலையுலகில் சர்ச்சை அலை ஓயாது போலிருக்கிறது. சிறிது காலம் கும்மியும், மொக்கையுமாகப் போய்க்கொண்டிருந்த பதிவுலகில் சர்ச்சையானது தனிமனித்தாக்குதலாகப் பரிணாமித்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? உளறலா?


எது உண்மை,

எது பொய்,

எது உளறல்.

உளறல் தான் உண்மையா?

உண்மை உளறலா?

இரண்டுமே பொய்யா?

பொய்யென்பதுதான் நிஜமா?

இது அடுத்த நிலையை எப்போது எப்படி எடுக்கும்.

என்னைப் போன்ற புதிய பதிவர்களாகிய அர்ஜுனர்களுக்கு, பீஷ்ம பிதாமகர்களும், கிருஷ்ண பரமாத்மாக்களும் கூறும் அறிவுரைகள் என்ன?.

கொஞ்சம் வந்து வெவரமா வெளக்கிட்டு போனீங்கன்னா, நாங்களும் இந்த ஜோதியில ஐக்கியமாகறதுக்கு வசதியா இருக்கும் ! ! !

Thursday, September 25, 2008

ஃபைனல் இன்டர்வியூ

கடந்த ஆறு மாதமாக முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. இந்த முறைதான் ஃபைனல் இன்டர்வியூ வரை வந்திருக்கிறது. இப்போதும் முழுமையான திருப்தி இல்லைதான் என்றாலும் இது வரை வந்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்லக்கூடியவாறு இருப்பதுதான் ஹை லைட். சம்பள விவகாரம்தான் இழுத்தடிக்கிறது.

'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.

தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.

அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.

விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.

அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.

அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.

'குட் மார்னிங்க்' என்றேன்.

'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.

சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,

'சொல்லுங்க.. ' என்றார்.

'நீங்கதான் சொல்லணும்' - நான்.

'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,

'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.

'மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்'.

'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'

'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.

'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.

ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.

மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.

Wednesday, September 24, 2008

ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு . .(உனக்கு 24, எனக்கு 21)

சி. ஏ. முடிக்க வேண்டும் என்றால், ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டே தேர்வையும் எழுத வேண்டும். இந்தப் பயிற்சிக்குப் பெயர்தான் ஆர்டிகிள்ஸ் ஷிப். சுருக்கமாக ஆர்டிகிள்ஸ்.

இந்தக் கதைக்கான காலம் 90களின் பிற்பகுதியின் முற்பகுதி ! ! !

அப்போது +2 முடித்து விட்டு நேரடியாக சி.ஏ. சேரலாம் (ஃபவுன்டேஷன் என்று பெயர்)என்றிருந்தாலும் பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத்தான் சி.ஏ. வில் சேர்வார்கள். சேரும் போது 20 - 21 வயது என்றால், ஆர்டிகிள்ஸ் முடிக்கும் போது 23-24 வயது இருக்கும். சி.ஏ. முடிப்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

சி.ஏ. படிக்க சிறந்த பயிற்சிப் பள்ளிகள் தென்னிந்தியாவில் சென்னையில்தான் உள்ளன. இங்கு பயிற்சி எடுக்க தங்கத்தமிழ் மகன்கள் மட்டுமின்றி, மனவாடுலு, சேட்டன்கள், கன்னடர்களோடு (இவர்களை எப்படி அன்புடன் விளிப்பது?), ஒரிசாவில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

அதே போல, தமிழ் நாட்டுத் தேவதைகள், சுந்தரத் தெலுங்குக் குயில்கள், சேர நன்னாட்டிளம் பெண்கள் மற்றும் கன்னடத்துப் பைங்கிளிகளும் உலா வருவார்கள். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தினால் கொஞ்ச நஞ்ச சி.ஏ. பாஸும் ஃபணால் தான் என்பதால் மக்களும் சைடு கேப்பில் ஒரு லுக் விட்டு விட்டு பாடத்தைத் தொடர்வார்கள்.

எங்களது குழுவில் ஒருவன் (நான் அல்ல) அப்படிப்பட்ட பயிற்சிப் பள்ளியில் நாங்கள் படிக்கும் போது, ஒரு சேச்சியை மானசீகமாகக் காதலித்தான். அவன் அந்த வருடம் தான் காலேஜ் பாஸ் அவுட். இத்தனைக்கும் போகும் போதும் வரும் போதும் ஒரு புன்னகை ஃப்ரம் சேச்சி. அவ்வளவே.

'டேய் மச்சான், இன்னிக்கி எப்படியாவது டாபிக்கை ஓப்பன் பண்ணிரனும்டா' - நன்பண் (ந)

'இது வரைக்கும் ஒரு ஹலோவாவது சொல்லியிருக்கியா? இப்படி நேரடியா ஓப்பன் பண்ணா, இமேஜ் என்னடா ஆகும்?' - நண்பனின் நண்பர்கள் (ந ந).

'அப்போ ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேண்டா' - ந

'மொதல்ல போய் இன்ட்ரொடியூஸ் ஆயிக்க. அப்பறமா பில்டப் பண்ணு.' - ந. ந.

'சரி பாக்கலாம். குருவாயூரப்பா, காப்பாத்தப்பா' - ந.

நண்பன் ஒரு வழியாக சேச்சியிடம் சென்று கனெக்ஷன் செட் செய்து விட்டான்.

சேச்சிக்கு எர்ணாகுளம். என்பது முதல் தகவல்.

அடுத்த நாள் நண்பன் அவசரமாக ஊருக்குச் சென்று விட்டு, ஒரு வாரம் கழித்து தான் வந்தான்.

'மச்சான், என் ஆளு கிட்ட நோட்ஸ் வாங்கப் போறேன்டா' - ந.

'டேய். அவள விட நான் நல்ல நோட்ஸ் வச்சிருக்கண்டா' - நான்.

'இதெல்லாம் ஒரு பில்டப் டெக்னிக்குடா' - ந.

'ஓ கே, ஓ கே, கேரி ஆன்' - ந.ந.

சேச்சி வந்ததும்,

'ஹாய். குட் மார்னிங்க்' - ந.

'ஹாய். குட் மார்னிங்க்' - சே.

'க்ளாசெல்லாம் நல்லா போயிட்டிருக்கில்ல. ஒரு அர்ஜன்ட் வேலையா ஊருக்குப் போயிட்டதனால க்ளாசுக்கு வரமுடியல. உங்க நோட்ஸ தர்ரீங்களா? காபி பண்ணிட்டு குடுத்துர்றேன்?'. - ந.

'ஓ கே. இன்னிக்கு க்ளாஸ் முடிஞ்சதும் வாங்கிக்கங்க' - சே.

'ரெம்ப தேங்க்ஸ். நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க. ஃபவுன்டேஷனா? ஆர்டிகிள்ஸ் சேர்ந்துட்டீங்களா?' - ந.

'நோ நோ. ஞான் எம்.காம் - ஆணு. எனக்கு ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு' - சே
மீ த எஸ்கேஏஏஏஏப்ப்ப்ப்ப் (மனசுக்குள் நண்பன்)

'ஓ. ..ஓ... ஓ...' - ந.

'ஓ. . . ஹோ. . .' - ந.ந.

தமிழ் நாட்டு கிராமங்களில் கூட மின்வெட்டு இல்லை

இது நையாண்டியோ, மொக்கையோ இல்லை. 2005 ல் இந்தக் கருத்தை சொன்னது நான் தான்.

2005-ல் பணி நிமித்தமாக ஆக்ராவில் இருக்க வேண்டி இருந்தது. அப்போது உ.பி. யில் கடுமையான மின்வெட்டு. லக்னோ, ஆக்ரா தவிர பிற இடங்களில் மின்சாரம் எப்போது வரும் என்பதே தெரியாத நிலை. இருப்புப் பாதைகள் மின் மயமாக்கப் பட்டிருந்தாலும், தொடர் வண்டிகள் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீசலில் இயங்கி வந்தன.

அங்குதான் 'இன்வர்டர்' என்ற ஒரு பொருள் பற்றி அறிந்து கொண்டேன். வாங்கிப் பயன் படுத்தவும் தொடங்கினேன்.

ஆக்ராவில் மின்சாரம் அதிக பட்சமாக 4 - 5 மணி நேரம் தொடர்ந்து தடைபடும். இதுதான் உ.பி.யில் குறைந்த பட்ச மின்வெட்டு. அதை சமாளிக்க அனைவரும் இந்த இன்வர்டரை பயன் படுத்தினார்கள். 15 வாட் பல்புகள் பயன் படுத்தினால் கூடுதலான நேரத்திற்கு இன்வர்டர் பயன்பாடு இருக்கும்.

இந்தத் தொல்லையினால் தான் தமிழ் நாட்டிற்கு வேறு வேலை தேடி வந்தேன். தமிழ் நாட்டில் அப்போது (2005ல்), நான் சொன்ன நிலைமை தான் நிதர்சனமான உண்மை. என் கிராமத்தில் (காஞ்சிபுரம் அருகே) காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் ஃபேஸ் மாற்றுவதற்காக மட்டும் ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துவார்கள். சென்னை முதலிய பெரு நகரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அங்கிருந்து அனைத்துப் பொருட்களையும் பார்சல் செய்யும் போது, இந்த இன்வர்டரை கொண்டு செல்வதால் தமிழ் நாட்டில் ஏதேனும் நன்மை உண்டா என யோசித்தோம். அதை அங்கேயே விற்றுவிட முடிவு செய்தோம்.
தெரிந்த நண்பரிடம் இதைப் பற்றி கூறினேன்.

'என்னங்க, இன்வர்டர் அங்கயும் உபயோகமா இருக்குமே. கையோட எடுத்துட்டு போயிடுங்க. சாமானோட சாமானா போயிடப்போகுது. மறுபடியும் வாங்கற செலவு மிச்சம் தானே' என்று அறிவுறுத்தினார்.

'சார், எங்க தமிழ் நாட்டிலே கிராமத்தில் கூட மின்வெட்டு இல்லை. இதை அங்கே கொண்டு சென்றால் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும்' என்றேன்.

அவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். 'ரெம்ப ஓவரா பில்டப் கொடுக்குரானே! ஒரு வேள நெசமா இருக்குமோ?' என்று யோசித்ததாகத் தோன்றியது.

ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. 'பரவாயில்ல சார் எடுத்துட்டு போங்க.' என்று வற்புறுத்தினார்.

சரியென்று நானும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். இங்கு வந்து எலக்ட்ரிஷியனிடம், இன்வர்டர் வயரிங்க் செய்யணும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்.

அவர் ' அப்படின்னா என்னா சார்?' என்று கேட்டார். நானும் அதை அப்படியே போட்டுவிட்டேன். ஆக்ராவில் விற்றிருந்தாலாவது கொஞ்சம் பணம் தேறியிருக்கும்.

இது நடந்தது 2005 -ல்.

இன்று நிலமை தலை கீழ்.
இன்வர்டர் என்பது தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான ஒன்றாகி விட்டது.

இதுவும் ஹெல்மெட் மாதிரி ஏதாவது வியாபார யுக்தியாய் இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

Tuesday, September 23, 2008

காலையில் 100 மாலையில் 200

இது 'மில்லி' மேட்டர் இல்லிங்கோ.

நான் ஒரு புதிய பதிவன். ஹிட் கவுண்டர், ஆன் லைன் யூசர்ஸ் முதலிய கோடுகளை எப்படி சேர்ப்பது என்பது கூட தெரியாமல் இருந்தது.

என்னுடைய மற்றொரு பதிவான 'கணக்கு வழக்கில்' இதற்கான உதவியைக் கேட்டிருந்தேன்.

சக பதிவர் 'பாரிஸ் திவா' வழி சொல்லிக் கொடுத்தார்.

போன வாரம் ஒரு கதை இரண்டு பகுதிகளாக எழுதினேன்.

இன்னிக்குதான் ஒரு நல்ல 'மொக்கை' பதிவு முதல் முதலாக போட்டேன்.
பாருங்க, ஹிட்டு ஒரே நாளில் 100 ஐ தாண்டி விட்டது ! ! !

ஒரு மாதத்தில் 100 ஹிட்டுகள்தான் கிடைத்தது.

காலையில் 111 ஆக இருந்தது, இப்பொழுது 200 ஐ தாண்டி விட்டது.

இந்த சந்தோஷமான சமாசாரத்தை பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு . . .

டிஸ்கி:-
இதில் உட்டாலக்கடி வேலையெல்லாம் இல்லிங்கோ.
(அட நம்புங்க ! ! !)

F5 .. உட்டாலக்கடி கிரி கிரி ! ! .... வடை கறி ! !

அருமை அண்ணன் லக்கியாரின் பதிவில் ஒருவர் (லாரி க்ளீனர்?) F5 பற்றி அருமையான உதவிக் குறிப்பு கொடுத்திருந்தார்.

நானும் முயற்சி செய்து பார்த்தேன்.

என்ன ஆச்சரியம் ! ! ! !

என்னுடைய ஹிட் கவுண்டரும் ஏறுகிறது.

உட்டாலக்கடி கிரி கிரி ! ! ! .................... வடை கறி ! ! ! !

(புள்ளியிட்ட இடத்தில் இது எந்த ஊர் வடை கறி என்பதை பின்னூட்டவும்)
க்ளூ: சைதாப்பேட்டை அல்ல

நான் பாறாங்கல்லுக்கு ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து விட்டேன் !

அலெக்ஸாவில் விரைவில் என்னுடைய பதிவை முதலாவதாக எதிர்பாருங்கள் !!!.


டிஸ்கி :-

௧. லக்கியாரின் பெயர் தற்செயலாகப் பயன் படுத்தப்பட்டது. சூடான பதிவுக்கான நோக்கமல்ல.

௨. அனைவரும் இந்த டெக்னிக்கை உபயோகிக்கலாம்

௩. தமிழ் எண்கள் தெரிவது ப்ளாக்கர் உபயத்தினால்

௪. சரியான பின்னூட்டத்திற்கு அந்த ஊருக்கு செல்ல மங்களூர் சிவாவின் ட்ரை சைக்கிள் இலவச வாடகைக்கு எடுத்துத் தரப்படும்.

௫. நான் புதிய பதிவர் என்பதால் அதர் ஆப்ஷனை திறந்து வைத்துள்ளேன்

Friday, September 19, 2008

டேய் ! ! ! (நிஜமல்ல கதை) (2)

இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள்.

அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.

எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.

விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.

'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.

'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.

'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.

'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'

அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.

'தாங்க்ஸ் சார்.' என்றாள்.

மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.

முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.

பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.

அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.

'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,

'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,

கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.

நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.

அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,

அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.

டேய்ய்ய்....

டேய் ! ! ! (நிஜமல்ல கதை) ... ... (1)

எழும்பூர்... மதியம் 3.25.

அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.

இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.

அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,

'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.

'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...

பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.

'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.

'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.

வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....

'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.

அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.

'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.

பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...


(தொடரும்)