Wednesday, September 24, 2008

தமிழ் நாட்டு கிராமங்களில் கூட மின்வெட்டு இல்லை

இது நையாண்டியோ, மொக்கையோ இல்லை. 2005 ல் இந்தக் கருத்தை சொன்னது நான் தான்.

2005-ல் பணி நிமித்தமாக ஆக்ராவில் இருக்க வேண்டி இருந்தது. அப்போது உ.பி. யில் கடுமையான மின்வெட்டு. லக்னோ, ஆக்ரா தவிர பிற இடங்களில் மின்சாரம் எப்போது வரும் என்பதே தெரியாத நிலை. இருப்புப் பாதைகள் மின் மயமாக்கப் பட்டிருந்தாலும், தொடர் வண்டிகள் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீசலில் இயங்கி வந்தன.

அங்குதான் 'இன்வர்டர்' என்ற ஒரு பொருள் பற்றி அறிந்து கொண்டேன். வாங்கிப் பயன் படுத்தவும் தொடங்கினேன்.

ஆக்ராவில் மின்சாரம் அதிக பட்சமாக 4 - 5 மணி நேரம் தொடர்ந்து தடைபடும். இதுதான் உ.பி.யில் குறைந்த பட்ச மின்வெட்டு. அதை சமாளிக்க அனைவரும் இந்த இன்வர்டரை பயன் படுத்தினார்கள். 15 வாட் பல்புகள் பயன் படுத்தினால் கூடுதலான நேரத்திற்கு இன்வர்டர் பயன்பாடு இருக்கும்.

இந்தத் தொல்லையினால் தான் தமிழ் நாட்டிற்கு வேறு வேலை தேடி வந்தேன். தமிழ் நாட்டில் அப்போது (2005ல்), நான் சொன்ன நிலைமை தான் நிதர்சனமான உண்மை. என் கிராமத்தில் (காஞ்சிபுரம் அருகே) காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் ஃபேஸ் மாற்றுவதற்காக மட்டும் ஒரு நிமிடம் மின்சாரத்தை நிறுத்துவார்கள். சென்னை முதலிய பெரு நகரங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அங்கிருந்து அனைத்துப் பொருட்களையும் பார்சல் செய்யும் போது, இந்த இன்வர்டரை கொண்டு செல்வதால் தமிழ் நாட்டில் ஏதேனும் நன்மை உண்டா என யோசித்தோம். அதை அங்கேயே விற்றுவிட முடிவு செய்தோம்.
தெரிந்த நண்பரிடம் இதைப் பற்றி கூறினேன்.

'என்னங்க, இன்வர்டர் அங்கயும் உபயோகமா இருக்குமே. கையோட எடுத்துட்டு போயிடுங்க. சாமானோட சாமானா போயிடப்போகுது. மறுபடியும் வாங்கற செலவு மிச்சம் தானே' என்று அறிவுறுத்தினார்.

'சார், எங்க தமிழ் நாட்டிலே கிராமத்தில் கூட மின்வெட்டு இல்லை. இதை அங்கே கொண்டு சென்றால் காட்சிப் பொருளாகத்தான் இருக்கும்' என்றேன்.

அவர் ஒரு மாதிரியாகப் பார்த்தார். 'ரெம்ப ஓவரா பில்டப் கொடுக்குரானே! ஒரு வேள நெசமா இருக்குமோ?' என்று யோசித்ததாகத் தோன்றியது.

ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. 'பரவாயில்ல சார் எடுத்துட்டு போங்க.' என்று வற்புறுத்தினார்.

சரியென்று நானும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். இங்கு வந்து எலக்ட்ரிஷியனிடம், இன்வர்டர் வயரிங்க் செய்யணும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன்.

அவர் ' அப்படின்னா என்னா சார்?' என்று கேட்டார். நானும் அதை அப்படியே போட்டுவிட்டேன். ஆக்ராவில் விற்றிருந்தாலாவது கொஞ்சம் பணம் தேறியிருக்கும்.

இது நடந்தது 2005 -ல்.

இன்று நிலமை தலை கீழ்.
இன்வர்டர் என்பது தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான ஒன்றாகி விட்டது.

இதுவும் ஹெல்மெட் மாதிரி ஏதாவது வியாபார யுக்தியாய் இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

7 comments:

இளைய பல்லவன் said...

test

யாத்ரீகன் said...

:-))) :-(

குடுகுடுப்பை said...

நீங்க சொன்ன்வுடன் கரண்ட் மரமே இல்லாட்டி எப்படி மின்வெட்டு வரும்னு யோசிச்சேன். ஆனா வேற மாதிரி இருக்கு.

இளைய பல்லவன் said...

//
யாத்ரீகன் கூறியது...
:-))) :-(
//


வாங்க யாத்ரீகன்

நன்றி

ரொம்ப சந்தோஷம், கொஞ்சம் கஷ்டமா.

சரி சரி :)

இளைய பல்லவன் said...

//

குடுகுடுப்பை கூறியது...
நீங்க சொன்ன்வுடன் கரண்ட் மரமே இல்லாட்டி எப்படி மின்வெட்டு வரும்னு யோசிச்சேன். ஆனா வேற மாதிரி இருக்கு.
//

ஆஹா..

இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா?

இதுதான் மாத்தி யோசிக்கிறதா?

நல்லா யோசிங்க.;-)

நான் ஆதவன் said...

லக்னோவும் இந்தியாவில தான இருக்கு, அங்கே ஒற்றுமைப்படுத்தி நாம சமாதானம் அடையிறதுல ஒன்னும் நல்ல விசயம் இல்ல பல்லவன்.
விஷயம் சோகமா இருந்தாலும் சொன்ன விதம் நல்லாயிருக்கு பல்லவன்.

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
//

வாங்க ஆதவன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்பதுதான் விஷயம்.

காலம் மாறும் என்பதுதான் என் நம்பிக்கை.