Thursday, March 26, 2009

கவுஜ வலைஞர்களுக்கு பகிரங்க அறிவிப்பு

கவிதை கவுஜையானது எப்படி என்று தெரியாதவர்களும் கவுஜையை விமர்சிக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியையளித்தாலும், கவுஜை இவர்களிடம் லோல் படுவதைப் பார்க்கும் போது இந்தப் பதிவைப் போட்டு என் ஆற்றாமையை வெளிப்படுத்தியேயாகவேண்டுமென்றவெண்ணத்தைத்தடுத்திடவியலவில்லையாகவேவிவ்வாறுவெழுதப்போயிற்று (இது முழுவதும் ஒரே வார்த்தை என்பதை கவனத்தில் கொள்க).

நிற்க. (உட்கார்ந்து படித்தாலும், படுத்துக் கொண்டு படித்தாலும்).

இன்றைய நிலையில் கவுஜ எழுதும் கவுஜர்கள் அதிகமாகிவிட்டார்கள். இது கவுஜக்காலமா என்று எண்ணுமளவிற்கு இவர்களது கவுஜ தொந்திரவு தாங்கவில்லை. கவுஜ எழுதுவது சுலபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சில கவுஜகளைப் பார்த்தால் எப்படி கவுஜ எழுதுவது என்று ஐடியா கிடைக்கலாம்.

அதுதான் போகட்டும், இவர்களது கவுஜையில் கவுஜ இருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. இதில் என் கவிஜையை மொக்கை என்று அறிவித்திருக்கிறார் அன்பின் பதிவர் நான் ஆதவன்.

கவுஜ என்று போட்டால் கவுஜ வந்துவிடாது. ஆனால் கவுஜ என்று போடாவிட்டாலும் கவுஜ எழுதினால் கவுஜ வரும். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்போது கவுஜ எழுத சில எளிய டிப்ஸ்களைப் பார்ப்போம்.

1.2.3.4.5.
உங்களுக்காக டாப் 5 டிப்ஸ் மட்டுமே கொடுத்திருக்கிறேன். மேற்சொன்ன இந்த ஐந்து டிப்ஸ்களும் உண்மை கவுஜர்களுக்கு விவரமாகத் தெரியும். மற்றவர்களுக்கு எண்கள் மட்டுமே தெரியும்.

நீங்கள் உண்மை கவுஜர்கள் என்றால் டிப்ஸ் பற்றி கமெண்டுங்கள். உண்மை கவுஜர்களாக வேண்டுமென்றால் இவை தெரியவில்லை என்று பின்னூட்டமிட்டு கேட்டுக்கொள்ளுங்கள்.


கவுஜ என்று லேபிள் போட்டால் மட்டும் கவுஜ கிடையாது.
கவுஜ என்று லேபிள் போடாமல் விட்டும் கவுஜ கவுஜ தான்.


இது கவுஜைக்கு ஒரு இலக்கணம். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

மற்றொரு கவுஜை.

நேற்று
நாளை
இன்று
நேற்று..இதற்கு விளக்கம் கூறுவோரும் கவுஜராக அறிவிக்கப்படுவார்கள்.


பின் குறிப்பு:-

1. கவுஜ (ட்ரேட் மார்க் ரிஜிஸ்டர்ட் பை ஆசீப் அண்ணாச்சி)
2. கும்மிகள் வரவேற்கப் படுகின்றன

Wednesday, March 25, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3

அத்தியாயம் 3: நான் யார்?

ஒருவனது குண நலன்கள் அவனது தோற்றம், வளர்ச்சி, சூழல் ஆகியவற்றோடு அவனுக்கு ஏற்படும் அனுபவங்களாலும் மாறுபடுகிறது. சிலர் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவதில் வல்லவர்கள். சிலர் அவற்றைப் பற்றி கவலைப் படாது தான் கொண்ட வழியே சரியென்று செல்பவர்கள். வல்லாளன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன்.

தற்போதுதான் காஞ்சிக் கடிகையில் குருகுலவாசத்தை முடித்திருந்தாலும் அவன் பிராயம் சற்று அதிகம்தான். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் பிறந்திருந்தான். அவனது ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு நிம்மதியாக இருக்கவில்லை. சிறு பிராயத்திலேயே அவனது தந்தை மறைந்துவிட்டிருந்தார். ஆட்சிக் கட்டில் ஏற வேண்டிய அவசியமிருந்தாலும் அப்போதைக்கு அமாத்யர்களின் ஆலோசனையின் பேரில் அரசு நடந்து கொண்டிருந்தது.

அதனால்தான் ஹொய்சளர்களின் பகைவர்களான பாண்டியர்கள், காகதீயர்கள், தேவகிரியைச் சேர்ந்த செய்னர்கள், கம்பிலியர்கள் ஆகியோர்களை கவனிக்க முடியவில்லை. இவனது தந்தை காலத்தை விட ஹொய்சளர்களின் எல்லை வெகுவாகக் குறைந்துவிட்டிருந்தது. இவையெல்லாம் அவனை வெகுவாகப் பாதித்ததோடு அவன் மனதை கல்லாக்கி விட்டிருந்தது. அவனது குறிக்கோளெல்லாம் ஹொய்சளர்களின் கீர்த்தியை மீண்டும் நிலை நாட்டுவதுதான்.

அந்தர மண்டபத்திலிருந்து கிளம்பிய வல்லாளன் நேராக அந்தப் புரம் நோக்கிச் சென்றான். அங்கே காத்திருந்தாள் அவன் மனையாள் நீலதயாக்ஷியும் அவன் பத்துவயது மகன் சோமேஸ்வரனும். ஆசையாக நீலா என்று அழைப்பான் வல்லாளன். நீலதயாக்ஷியிடம் கன்னட தேசத்தின் செழுமை பரிபூரணமாக நிலவியது. அவளுக்காகவே அடிக்கடி கடிகையிலிருந்து வந்துவிடுவான் வல்லாளன். உன்னைப்பார்ப்பதும் என் தேசத்தைப் பார்ப்பதும் ஒன்றுதான் என்று அவளிடம் சொல்வான்.

அன்று நீலாவின் வதனம் வாடியே காணப்பட்டது. அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுறும் கண்கள் அப்போது அவனை சீண்டவுமில்லை. அமர்ந்திருந்தவள் அசையவுமில்லை. சோமேஸ்வரன் மட்டும் "வாருங்கள் அப்பா, விழா நன்றாக நடந்ததா?" என்று ஆசையோடு வினவினான்.

"ஆம் சோமா, மிக நன்றாக நடந்தது"

"ஏன் நன்றாக நடக்காது? நீயும் நானும் செல்லவில்லையல்லவா? ஒருவேளை நாம் இந்த தேசத்திலேயே இல்லாதிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று திருவாய் மலர்ந்தாள் நீலா. அவள் கோபப்படுவதில் உள்ள நியாயத்தை அறிந்ததால் சற்று மனமிளகிய வல்லாளன்,

"நீலா, உன் கோபம் எனக்குப் புரிகிறது. பட்டமேற்கும் விழாவில் வேண்டுமென்றா உன்னையும் சோமனையும் விட்டு விட்டு சென்றேன்? இதன் காரணத்தை எத்துணை முறை உனக்குச் சொல்லியிருப்பேன். சம்மதம் சொன்னவளே நீதானே. இப்போது இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது?"

"அம்மாவை விடுங்கள் அப்பா. எப்போதோ விழா முடிந்துவிட்டதாகக் கூறினார்கள். தாங்கள் வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?"

"விழா முடிந்ததும் அமாத்யர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது சோமா. அதனால்தான் நேரமாகிவிட்டது. நீலா, இனி இவ்வாறான ஆலோசனைகளுக்கு சோமனையும் அழைத்துச் செல்லலாமென்றிருக்கிறேன். நீயென்ன சொல்கிறாய்.

"இவ்வளவு சிறு பாலகனை எதற்கு துன்புறுத்துகிறீர்கள்."

"இல்லை நீலா. நான் செய்த தவறை எனக்கு நிகழ்ந்த கொடுமையை என் மகனுக்கு நான் அளிக்க விரும்பவில்லை. அவன் தற்போதிலிருந்தே இவற்றில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் எப்போதும் அவன் என்னுடன் இருக்கப் போவதில்லையே. முக்கிய ஆலோசனைகளுக்குத்தான் அவனும் வர வேண்டும். என்ன சொல்கிறாய் சோமா?"

"அப்படியே ஆகட்டும் அப்பா. அடுத்த ஆலோசனை எப்போது?"

"அப்படிச்சொல்லடா என் சிங்கக்குட்டி. நாளை நடக்கும் ஆலோசனைக்கு நீயும் வரவேண்டும். இப்போது சென்று விளையாடு" என்றவுடன் சோமேஸ்வரன் விளையாட ஓடிவிட்டான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர் நீலாவும் வல்லாளனும். சற்று நேர மௌனம் அவர்களின் எண்ண ஓட்டத்தை வெவ்வேறு திக்குகளில் பயணிக்கச் செய்தது. மௌனம் கலைந்த போது இருவரும் அணைப்பில் இருந்தனர்.

"நீலா"

"உம்"

"என் மேல் கோபம் போய்விட்டதா?"

"கோபப்பட்டு பயனென்ன"

"அப்படியல்ல நீலா"

"எப்படியல்ல. நீண்ட நாட்கள் கழித்து வந்தீர்கள். வந்தவுடன் முடிசூட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இறங்கினீர்கள். இப்போது முடிசூட்டிக்கொண்டவுடன் இங்கு கூட வராமல் ஆலோசனைக்குச் சென்றுவிட்டீர்கள். மேலும் பட்டமேற்க எனக்கும் அழைப்பில்லை. நம் குமாரனும் வரவில்லை. இதில் எதற்காகக் கோபப்படுவது."

சில நேரம் அனைத்தும் தெரிந்திருந்தும் நாம் நம் இயலாமையைக் கண்டு கோபப்படுவோமல்லவா அத்தகைய கோபம்தான் நீலாவுடையது. அவளையும் சோமனையும் பட்டமேற்கும் விழாவிற்கு அழைத்துச் செல்லாததற்கான காரணம் அவளுக்குத் தெரிந்தேயிருந்தது, அவளது சம்மதமுமிருந்தது. பட்டமகிஷியிருக்கும் போது அவளுடன் சேர்ந்து அரியணையேறுவதுதானே மரபு. அந்த மரபு மீறல் குறித்த அவளது இயலாமையால் விளைந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இரு முத்துக்கள் தோன்றின.

வல்லாளன் மற்றவர்களிடத்தில் எவ்வளவு கடினமாக நடந்து கொண்டாலும் நீலாவிடம் வரும்போது மட்டும் வேறு மனிதனாக முற்றிலும் மாறிவிடுவான். அன்றும் அப்படித்தான். அவள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது சாந்தமும் அதிகப் பட்டது.

சற்று இறுக்கி அணைத்து மெல்லிய முத்தம் ஒன்றை அவளது நெற்றியில் பதித்தான். மெல்ல அவளது முகத்தை உயர்த்தியவன் கண்ணோடு கண் நோக்கினான். கண்களின் ஊடே பற்பல செய்திகள் பரிமாறப்பட்டன. "நீலா" மீண்டும் அழைத்தான் வல்லாளன்.

இம்முறை அவள் பதிலிறுக்கவில்லை. அவளது அதரங்கள் அவனது அதரச் சிறையில் சிக்குண்டுவிட்டன. தொடர்ந்து நிகழ்ந்த போரின் முடிவில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை நிச்சயிக்க முடியவில்லை. வேறொருவனாக மாறிவிட்டிருந்த வல்லாளன் தன் நிலையை எண்ணி தான் யார் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

(தொடரும்)

Monday, March 23, 2009

கண்டேன் கண்மணிகளை !!!

ஒரு வழியாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஃபாலோயர்களை பதிவில் மீண்டும் கொண்டு வந்தாகிவிட்டது.


இதற்கு வழி செய்த வேத்தியன் அவர்களின் இந்தப் பதிவின் மூலம் பலரும் பயனடைந்திருப்பது பாராட்டுக்குறியது என்றாலும் அதை சரியாகப் பாராட்டுவது என்பது மிகக் கடினமான செயல்.

ஆனாலும் என் பணி சிறக்க அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டக் கவிதையை இங்கே மறுபிரசுரம் செய்கிறேன்.

* * * *

ரொம்ப நன்றின்னு சொல்றது

ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்

ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!

ரொம்ப நன்றி!!!* * * *

கவிதையைப் பாராட்டியும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனீங்கன்னா,

இது மாதிரி சமூகப் பணி அதிகமா செய்யிறதுக்கு வாய்ப்பா அமையும்.

Friday, March 20, 2009

முத்தான பத்து

ஒன்றுஇரண்டுமூன்றுநான்குஐந்துஆறுஏழுஎட்டுஒன்பதுமுத்து....
வணக்கம்.

Friday, March 13, 2009

எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்

வழக்கம் போல சுற்றிக் கொண்டிராமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். இதைப் படித்தபின் இதுதானா விஷயம் என்று ஆச்சரியக் குறியும், ஸ்மைலியும் போடலாமே ஒழிய, இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். (ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி!!!)

சரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். மற்ற ப்ரொஃபஷனல் கோர்ஸ்களைப் போலல்லாமல், சி.ஏ.வை ஆடிட்டரிடம் வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். இப்படி வேலை செய்யாமல் சில பேர் பேப்பரில் மட்டும் சர்டிஃபிகேட் வாங்கி விடுவார்கள்.இவர்களை 'டம்மி ஆர்டிகிள்ஸ்' என்று அழைப்போம். இவர்கள் படித்துக் கொண்டேஏஏஏஏஏ இருப்பார்கள். ஏன் இங்கே இழுக்கிறேன் என்றால், சி.ஏ. தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள் ப்ராக்டிகலான விஷயங்கள் சம்பந்தப் பட்டவை. ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. அதுதான் ஆபரேஷனல் ரிசர்ச். ஆபரேஷனை ரிசர்ச் செய்து என்ன கிழிக்கப் போகிறோம் என்று தெரியாத நிலையில் அந்த சப்ஜக்ட் வந்து மாட்டியது. இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது. விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. எப்படியாவது முடித்துவிடவேண்டும். இப்படிப்பட்ட ஆபரேஷன் ரிசர்ச் புத்தகத்தை ஸ்கேன் செய்து கொண்டிருந்தால் அதில் ஒரு பகுதி பெர்ட் & சி.பி.எம். என்னடா இது ஆஸ்திரேலிய நகரும், அரசியல் கட்சி பெயரும் போல் இருக்கிறதே என்று பார்த்தால் அது ப்ரோக்ராம் எவால்யூவேஷன் அண்ட் ரிவ்யூ டெக்னிக் மற்றும் க்ரிடிகல் பாத் மெத்தட் என்று சொன்னார்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். பெயரைத் தெரிந்து கொள்வதற்கே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியாகிவிட்டது. மற்றதை எங்கே வாங்குவது? இதை வேறு, சாய்சில் விடமுடியாத படி கேட்கிறார்கள். பயங்கர குழப்பமாக இருந்தது. அப்போதுதான் ஆபத்பாந்தவனாக சீனியர் ஒருவன் கை கொடுத்தான். அதுதான் இந்தத் தலைப்பு. அவன் சொன்னதை உங்களுக்குக் கீழே வசனமாகக் கொடுத்துள்ளேன்.

நான்: டேய் (இவன் கொஞ்சம் ஜூனியர் சீனியர். எனவே 'டேய்'), இத எப்படிறா படிச்சு பாஸ் பண்ண? இது இருக்குன்னு மொதல்லயே தெரிஞ்சிருந்துதுன்னா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்.

சீனியர்: இதெல்லாம் ஜுஜுபிடா.

நான்: மொதல்லயே பாஸ் பண்ணிட்ட. நீ ஏன் சொல்லமாட்ட?

சீனியர்: அதான் எங்கிட்ட வந்துட்ட இல்ல. நான் கிளியர் பண்றேன். இப்ப நீ எங்க இருக்க.

நான்: இங்க தான் இருக்கேன்.

சீனியர்: டேய். ஒழுங்கா பதில் சொன்னா சரியா கத்து தருவேன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ணா, டரியலாயிடுவ.

நான்: இல்லண்ணா. இனிமே சரியா பதில் சொல்றேன். வேப்பேரில இருக்கேன்.

சீனியர்: அது. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு. நான் எங்க இருக்கேன்.

நான்: (இது கூட தெரியாம இருக்க. உங்கிட்ட வந்து கேக்க வேண்டியிருக்கு). நீயும் வேப்பேரிலதான் இருக்க.

சீனியர்: குட். இப்ப சி.ஏ. கிளாஸ் எங்க நடக்குது.

நான்: (அது எங்க நடக்குது. ஓடுதுல்ல. நம்மளால அதுங்கூட ஓட முடியாமத்தானே உன்னத் தேடி வந்தது) ராயப்பேட்டைல.

சீனியர்: இங்கேருந்து ராயப்பேட்டைக்கு எப்படி போலாம்.

நான்: (ஒழுங்கா போய்ச் சேரணும்னா, டிரஸ் போட்டுட்டு தான் போகணும். இல்லைன்னா கீழ்பாக்கத்துக்கு டைவர்ட் பண்ணிருவாங்களே) நெறய வழி இருக்கு.

சீனியர்: ஒரு ரெண்டு வழி சொல்லு.

நான்: எக்மோர் போயி உட்லன்ட்ஸ்,பைலட் வழியா ராயப்பேட்டை போலாம். சேத்பட் போயி நுங்கம்பாக்கம் ஹை ரோட் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாவும் போலாம்.

சீனியர்: இதுவரைக்கும் கரைக்டா சொல்லியிருக்கே. இப்ப ஈசியான கேள்விகேக்கறேன். இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.

நான்: (எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்) லேடீஸ் காலேஜா, அப்படின்னா?

சீனியர்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

நான்: சரிண்ணே.. சாரிண்ணே.. எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.

சீனியர்: அது. இன்னோருவாட்டி இப்படி பண்ணே, அங்கயே கட் பண்ணிருவேன். அப்புறம் பாதி சக்கர வியூகம் கேட்ட அபிமன்யு கதையாயிடும்.

நான்: (சக்கரவியூகம்.. பேர் நல்லாயிருக்கே. தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்). டேய். சீனியராச்சேன்னு மதிச்சு வந்து கேட்டா ஓவரா போற. நீ சொல்ல மாட்டேன்னா சொல்லு, நமக்கு சேச்சிங்க நெறைய இருக்காங்க. நான் அங்க போய்க்கிறேன்.

சீனியர்: கண்ணா இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமாடா. சரி சரி சொல்லித்தர்றேன். ட்ராக்க மாத்தாத. இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.

நான்: (இதென்ன விஷ்ணு சகஸ்ர நாமமா?) எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.

சீனியர்: எந்த ரூட்ல எந்த எந்த காலேஜ் இருக்கு.

நான்: (எங்க வர்றான் இவன்? ஒரு வேள நம்மள வார்றானோ). எக்மோர் ரூட்ல எத்திராஜ், காயிதே மில்லத். சேத்பட் ரூட்ல டபள்யூ.சி.சி, டி.ஜி.வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ் இருக்கு.

சீனியர்: குட். நல்லா வருவேடா. இப்ப நான் சேத்பட் ரூட்ல போறேன். நீ எக்மோர் ரூட்ல போற.

நான்: ஒத்துக்க மாட்டேன். நீ எக்மோர் ரூட்ல போ. (எனக்கு காயிதே மில்லத். உனக்கு ஸ்டெல்லா மேரீஸா)

சீனியர்: ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா. சரி அப்படியே வச்சுக்குவோம். இப்ப ரெண்டு பேரும் ஸ்டெல்லா மேரீஸ் கிட்ட மீட் பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும்.

நான்: நீ சீக்கிரம் போயிடுவ. எனக்கு லேட்டாகும்.

சீனியர்: ஏன் லேட்டாகும்.

நான்: ஜெமினி சிக்னல் க்ராஸ் பண்ணனுமே.

சீனியர்: நான் சீக்கிரம் போயிட்டாலும் நீ வர்ற வரைக்கும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது இல்லயா. அதனால நீ வர்ற ரூட்தான் க்ரிடிகல். இதுதான் க்ரிடிகல் பாத். இதையே கொஞ்சம் டெவலப் பண்ணா பெர்ட். அவ்வளவுதான். புரிஞ்சுதா.

நான்: (அதுசரி. நீ தனியா என்னைக்கு பண்ணியிருக்க. கும்பல்ல கோவிந்தாதானே) சரிடா. இது கத்து குடுத்ததுக்காக இனிமே உன்ன டா போட்டு பேச மாட்டேன். சரியா.

சீனியர்: டேய் அப்படில்லாம் பண்ணி என்னைய பிரிச்சிராதடா.

=====

இப்படித்தான் நான் பெர்ட் சி.பி.எம் கற்றுக்கொண்டேன். இதுதான் எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் உடனான என் அனுபவம்.ப்ராக்கெட்டுக்குள் இருப்பதெல்லாம் நான் மனதில் நினைத்துக் கொண்டவை என்பதை குறிப்பிடவேண்டிய அவசியமில்லையல்லவா?

=====

இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.

நன்றி.

Thursday, March 12, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2

அத்தியாயம் 2: முடிவு ஆரம்பம்

அவையோரின் ஆரவாரம் புதிய அரசனை அகம் குளிர வைத்தது. அந்த மகிழ்ச்சியோடு மேலும் தொடர்ந்தான்.

"ஹொய்சள தேசம் பல இன்னல்களைச் சந்தித்திருந்தாலும், இது வரை ஒரு உறுதியான நாடாகவே இருந்து வந்துள்ளது. இனி அதை மிக உன்னதமான நாடாக மாற்றவேண்டியது என் கடமை. எப்போதும் நம் துணையிருக்கும் ஹொய்சளேஸ்வரரும் சந்தளேஸ்வரரும் இப்போதும் நம்முடனிருப்பார்கள். வெற்றி நமதே. ஜெய ஜெய" என்று ஆர்ப்பரித்தான்.

புதிய மன்னனின் பேச்சு சிறிதாக இருந்தாலும் அதன் வீச்சு மிக வீரியமானது என்பதை அவன் ப்ரதானிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கவனிக்கத் தவறவில்லை. அவையை அப்போதைக்குக் கலைத்துவிட்டு, இவர்களை மட்டும் அந்தர மண்டபத்திற்கு வரப் பணித்தான் வல்லாளன்.

பஞ்சப் ப்ரதானிகள் (ஐம்பெருங்குழு) என்று அழைக்கப் பட்ட முக்கிய அமைச்சர்களில் முதன்மையானவர், மஹாமாத்யர் (முக்கிய மந்திரி), இவர்களைத் தவிர சந்திவிக்ரஹி என்றழைக்கப் பட்ட வெளியுறவுத்துறை அமைச்சரும், மஹாபண்டாரி என்றழைக்கப் பட்ட நிதியமைச்சரும் உண்டு. தண்ட நாயகர்கள் என்றழைக்கப் பட்ட படைத் தலைவர்களும், தர்மாதிகாரி என்றழைக்கப் பட்ட தலைமை நீதிபதியும் அங்கே குழுமியிருந்தது, ஹொய்சளர்களின் சீரிய நிர்வாக அமைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது. இந்த அமைப்புதான் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தில் துவங்கி, பிரிட்டிஷ் காலம் வரை நீண்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கே வந்த முக்கியஸ்தர்களை அமரச் சொன்னவன் தான் மட்டும் அவ்வறையின் தென் திசைச் சாளரத்தையே நோக்கியவாறு நின்று கொண்டிருந்தான். அரசர்கள் வடக்கு நோக்கி அமர்வது முறையாகையால் தெற்கு நோக்கி மற்றவர்களுக்குத் தன் முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். ஆகவே அவன் என்ன அனுமானிக்கிறான் என்பதை மற்றவர்களால் உணர முடியவில்லை. சற்று நேரம் கழித்தே அவர்கள் பக்கல் திரும்பிய வல்லாளன், ஒரு பெருமூச்சுடன் ஆசனத்தில் அமர்ந்தவன் மஹாமாத்யரை நோக்கி,

"மஹாமாத்யரே, இன்று நான் முடி சூடிக்கொண்டேன். ஆனால் எப்போதிருந்து ஆட்சி செய்து வருகிறேன்?"

இந்தக் கேள்விக்கு விடை அங்கிருந்தவர் அனைவருக்குமே தெரிந்திருந்தாலும், ஏதோ காரணம் பற்றியே அவன் இவ்வாறு கேட்டிருக்கவேண்டும் என்ற எண்ணம் அனைவரின் சித்தத்திலும் உதித்தது.

"கடந்த பதினெட்டு ஆண்டுகளாக"

"பிறகு ஏன் இன்று பட்டாபிஷேகம்?"

அனைவரின் இதயத்திலும் ஒரு சிறிய கலக்கம். அரசன் என்ன கூற வருகிறான்?

"தாங்கள் சரியான பருவம் எய்தும் வரையில் தங்கள் பட்டாபிஷேகம் தள்ளிவைக்கப் பட்டது."

"முடிசூடிக்கொள்ள பருவம் போதுமா? என் திறமையை நான் வெளிப் படுத்தவில்லையே. உண்மையில் என் தந்தை விட்டுச் சென்ற ராஜ்ஜியத்தில் பல பகுதிகள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனவே."

அரசனின் மனவோட்டம் புரிபடத் துவங்கியது அங்குள்ளவர்களுக்கு.

"உண்மைதான் அரசே. இது வரை நாங்கள் பரிபாலித்து வந்த தேசம் அங்கங்கே பாகப் பட்டிருக்கிறது. ஆயினும் இனி குறைவென்ன. தாங்கள் வந்துவிட்டீர்கள். ஹொய்சளர்களின் மகோன்னதம் குறைந்துதான் போய்விட்டது. ஹொய்சளர்களின் சிறந்த அரசர் உங்கள் முப்பாட்டனார் வல்லாளர். அவர் பெயர் தான் உங்களுக்கும் வைக்கப் பட்டது. அவரைப் போலவே ஹொய்சள சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி பலப்படுத்துவீர்கள் என்ற கருத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை. உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். "

"ஆம் ஆம் நாங்கள் இருக்கிறோம்" என்று உணர்ச்சிப் பெருக்கில் தலையசைத்தனர் மற்றவர்கள். அவர்களது கருத்தை நன்றாக அறிந்திருந்தாலும் உடனடியாக எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை வல்லாளன். ஒரு சிறு புன்னகையும் தலை தாழ்த்தலுமே பதிலாக வந்தது அவனிடமிருந்து. மீண்டும் நிலவியது ஒரு சிறு மௌனம்.

"உங்கள் வார்த்தைகள் எனக்கு வலிமையைத் தருகின்றன. வலியை மறைக்கவில்லை. ஆனால் என் வலி எனக்குத் தான் தெரியும். ஒரு பொருள் நம் வசம் ஒப்படைக்கப் படும் போது அதன் பாதுகாப்பிற்கும், வளத்திற்கும், ஜீவனுக்கும் நாம் பொறுப்பாகிறோம். அப்படிப்பட்ட பொறுப்பை இதுவரை நான் சரியாக நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. அந்த வலி என் நெஞ்சில் நீங்காததாகவே இருந்து வருகிறது. எப்போது என் ராஜ்ஜியம் மீண்டும் தன் பழைய நிலையை அடைகிறதோ அப்போதுதான் அந்த வலி நீங்கும்.

இனி நீங்கள் அனைவரும் எதிர் பார்க்க வேண்டியது ஒன்றுதான். போர். ப்ரதானிகளே, பண்டாரியாரே, போருக்கு ஆயத்தம் செய்யுங்கள். பண்டங்கள், தளவாடங்கள் மற்றும் செல்வம் திரட்டப் படவேண்டும். இனி நாம் தினமும் இரு வேளைகளும் இங்கு கூடுவோம். அடுத்த இரு மாதங்களுக்குள் நான்கு திசைகளிலும் நாம் நம் தாக்குதலைத் தொடங்க வேண்டும். முதலில் . . ." என்று நிறுத்தினான்.

"செய்னர்களைத் தாக்கி தேவகிரியைக் கைப்பற்ற வேண்டும்" என்றார் ஒரு தண்ட நாயகர்

"கம்பிலியின் வளர்ச்சி நமக்கு தொல்லை. அவர்களை அடக்க வேண்டும்" மற்றொருவர்

"காகதீயர்கள் எப்போதுமே நமக்கு அச்சுறுத்தல்தான். அவர்களை தடுக்க வேண்டும்" இப்படி பல குரல்கள்.

"வடக்கிலிருந்து துவங்குவோம். சுல்தானியர்களின் வரவை எதிர் கொள்ள வேண்டும். வடக்குத் திக்கை நோக்கி துவக்கும் எந்த காரியமும் வெற்றி பெறும்" என்றார் மஹாமாத்யர்.

"இல்லை மஹாமாத்யரே. தற்போது நமக்கு வடக்கிலிருந்து சுல்தானியர்களின் தொல்லை இருக்கலாம். ஆனால் அதைத் தடுக்க ராஜரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அவர்களைப் பற்றி இப்போது கவலையில்லை. நான் துவங்கப் போவது தெற்கு நோக்கி." என்றான் வல்லாளன்.

"தெற்கு?. எதற்கு?" வினவினார் மஹாமாத்யர்.

"அரசவையில் கூறியது மறந்து விட்டதா. என் முதல் குறி பாண்டியர்கள். தமிழகம். பிறகு காடவர்கள். இவர்களை முடித்துவிட்டுத் தான் மற்றவர்கள். என் முடிவு உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆயத்தமாகுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்" என்று கிளம்பினான் வல்லாளன்.

"ஆரம்பமே முடிவாக இருக்கிறதே. ஹும். ஹொய்சளேஸ்வரா.." என்று நினைத்துக் கொண்டார் மஹாமாத்யர்

(தொடரும்)

Saturday, March 7, 2009

பெண்கள் மென்மையானவர்களா?

கடவுள் படைப்பில் பெண்களை 'மாஸ்டர் பீஸ்' என்றும் ஆண்களை 'டிராஃப்ட்' என்றும் கூறுவர். ஏனெனில் முதலில் ஆணைப் படைத்ததாகவும் அதில் உள்ள குறைகளை நீக்கி முழுமையான படைப்பாக பெண்ணைப் படைத்தான் இறைவன் என்பது இதன் சாரம்.

சரி மென்மையானது முழுமையானதா. பெண்களை பூவிற்கும் தென்றலிற்கும் ஒப்பிடுவது கவிஞர்களின், காதலர்களின் வழக்கம். இது ஆணீயத்தின் வெளிப்பாடே ஒழிய பெண்களை ஏற்றிப் போற்றும் செயலல்ல.

உண்மையில் மென்மை என்பது உளவியல் சார்புடையதன்றி, உடலியல் சார்ந்ததன்று.

பெரும்பாலான ஆண்களுக்கு வரும் மாரடைப்பு பெண்களுக்கு ஏன் வருவதில்லை?. ஆண்கள் இளவயதிலேயே மூப்பெய்த பெண்கள் வயதான பின்பும் திடமாக இருப்பது எதனால்? இந்தியக் குடும்பச் சூழலோ அயல் நாட்டுக் குடும்பச் சூழலோ பெண்கள் ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலும் இருக்கிறார்கள். ஆயினும் கணவன் மறைவிற்குப் பின் பெண்கள் தனியாக குடும்பத்தைப் பேணுவதைப் போல் மனைவியின் மறைவிற்குப் பிறகு ஆண்களால் முடிவதில்லையே ஏன்?

ஆக மென்மை என்பது அவர்கள் உலகியலை நோக்கும் பாங்கிலும் அதை எதிர்கொள்ளும் வகையிலும் இருக்கிறது. ஆண்கள் அனைத்தையும் ஒருவித உறுதியுடன் அதாவது செய்து முடித்துவிட வேண்டும், இது தன்மானம் சார்ந்த செயல் என்ற நினைப்பில் செய்யும் போது 'டென்ஷனும்' 'வெறியும்' சேர்ந்து கொள்கிறது. ஆகவே, மனம் கல்லாகி விடுகிறது. அதாவது மென்மைத் தன்மையை இழந்து விடுகிறது.

பெண்கள் அவ்வாறல்ல. செயல்களை ஒரு வித கடமையாகச் செய்கிறார்கள். ஒரு செயலை அணுகும் முறையும் வேறுபட்டு இருக்கிறது. ஆகவே அவர்கள் மென்மையானவர்களாக இருக்கிறார்கள்.

நமது பதிவுலகையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணைப் பெண் பதிவர்கள் 'கான்ட்ரவர்சியலாக' எழுதுகிறார்கள். இங்கு 'கான்ட்ரவர்சியலாக' என்பது விவகாரமான, காரசாரமான, முரண்பட்ட போன்ற பதிவுகள் எனலாம். அவர்களது பதிவுகளில் வாழ்க்கையின் இனிமையான நிகழ்வுகளும் நகைச்சுவையும் இழையக் காணலாம்.

இவற்றை எல்லாம் எழுதக் கூடாது என்பதோ, எழுதுவது தவறு என்பதோ அல்ல என்னுடைய கருத்து.

வாழ்க்கை என்பது எப்போதுமே 'ஹால்ஃப் ஃபில்ட் க்ளாஸ்' தான். பாதி நிரம்பிய கிண்ணம். அதில் எந்தப் பாதியைப் பார்க்கிறோம் என்பதில் தான் நாம் மென்மையானவர்களா, வன்மையானவர்களா என்பது அடங்கி உள்ளது.

ஆகவே, பெண்கள் மென்மையானவர்கள். ஆனால் உறுதியானவர்கள்.எஃகைப் போன்றவர்கள். They are like STEEL. Which is Flexible but Strong.

டிஸ்கி (அ) பின் குறிப்பு:- இன்று காலை வெளியே செல்லும்போது, பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவன் அல்லது தன்னுடன் வரும் ஆணின் கையைப் பிடித்தவாறு செல்வதைப் பார்க்க நேர்ந்தது. அப்போது தோன்றிய கேள்விதான் தலைப்பு. அதற்கு என் மனம் பகன்ற பதில்தான் இந்தப் பதிவு.

டிஸ்கி 2: இது ஒரு மீள்பதிவு. லேடிஸ் டே ஸ்பெஷல்.

Friday, March 6, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1

அத்தியாயம் 1 - த்வார சமுத்திரம்

நாம் சற்று தமிழகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. ஹொய்சள நாட்டின் தலை நகருக்கு நாம் நுழைவதை யாரும் தடுத்துவிட முடியாது. துவார சமுத்திரம் என்றும் தொர சமுத்திரம் என்றும் அழைக்கப் பட்ட இந்த இடம் இன்று ஹளபேடு என்று அறியப்படுகிறது.

தற்போது கன்னட நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது சற்று அவசியமாகிறது. நமக்கு அறிமுகமான முதல் கன்னட பரம்பரை கடம்பர்கள் ஆவார்கள். இவர்களது தலை நகரம் வைஜயந்திபட்டணம் எனப்படும் பனவாசி ஆகும். மயூரசன்மன் என்பவனால் நான்காம் நூற்றாண்டில் தோன்றிய இந்த ராஜ்ஜியம்தான் முதல் கன்னட ராஜ்ஜியம் ஆகும். இவர்களுக்குப் பிறகு, வாதாபியைத் தலை நகராகக் கொண்டு சாளுக்கியர்கள் ஆறாம் நூற்றாண்டில் தோன்றினார்கள்.

இந்தப் பரம்பரையின் இரண்டாம் புலிகேசி பல்லவ மகேந்திர வர்மரை வீழ்த்தி, ஹர்ஷவர்த்தனரை நர்மதைக்கு அப்பால் தடுத்து நிறுத்தியவன். பிறகு நரசிம்ம வர்ம பல்லவனால் தோற்கடிக்கப் பட்டு வாதாபி அழிக்கப் பட்டது நமக்கு நன்கு தெரிந்த வரலாறு. இவன் காலத்தில் சாளுக்கியர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர்.

ஆந்திர தேசத்தைச் சேர்ந்த பகுதிகளை கீழைச் சாளுக்கியர்கள் வேங்கி என்ற நகரைத் தலை நகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். பிறகு இவர்கள் சோழர்களுடன் திருமண உறவு பூண்டு அவர்களுக்கு உற்ற தோழர்களாக விளங்கினர். இவர்கள் வமிசத்தில் வந்த இரண்டாம் ராஜேந்திரன்தான் குலோத்துங்க சோழன் என்ற புகழ்பெற்ற அரசன்.

சாளுக்கியர்கள் மீண்டும் வலுப்பெற்று எட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் ராஷ்டிரகூடர்கள். இவர்கள் மாண்யகேதம் (மன்கேட்) என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்துவந்தனர். இவர்களால் தங்களுடைய தென் கன்னடப் பகுதிகளை சோழர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இவர்களுக்குப் பிறகு வந்த கல்யாணியைத் தலை நகரமாகக் கொண்ட மேலைச் சாளுக்கியர்களுக்கும் தென் கன்னடம் கானல் நீராகவே இருந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தென் கன்னடத்தில் புதிய பரம்பரை உருவெடுத்தது. இவர்கள்தான் ஹொய்சளர்கள்.

ஆக ஹொய்சளர்கள் காலம் வரை கன்னட தேசம் ஒரே அரசின் கீழ்தான் ஆளப் பட்டு வந்தது. ஹொய்சளர்களுக்குப் பின் தென் கன்னடம், வட கன்னடம் என்ற பிரிவு ஏற்பட்டு வலுவடைந்தது.

அவர்களது எண்ணம் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதே. சோழர்கள் வலுவிழந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும், பாண்டியர்களின் ஏற்றம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவ்ன் கொண்டு போன கதையாக, சோழர்களை அழித்து அவர்கள் நாட்டை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தின் முதல் பகுதிதான் நடந்தது. இவர்களுக்கு முன்னமே பாண்டியர்கள் முந்திக் கொண்டனர். இவ்வாறாக, பாண்டியர்கள் மீது ஏற்கனவே தீர்த்துக் கொள்ள வேண்டிய பழி ஒன்று ஹொய்சளர்களுக்கு இருந்தது.

இந்த நிலையில் நாம் ஹொய்சளத் தலை நகருக்குள் நுழைகிறோம். அடடா என்ன விசேஷம் என்றே தெரியவில்லையே. எங்கு பார்த்தாலும் அலங்காரங்களுடன் நகரமே விழக்கோலம் பூண்டிருக்கிறதே. இப்போது ஒன்றும் ஸ்ரீ ராம நவமியோ, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியோ இல்லையே.

பிறகு ஏன் இவ்வளவு ஏற்பாடுகள்? சிறிது நேரம் கவனித்த பின்னரே நமக்கு விளங்குகிறது. ஆம் அன்று வல்லாளன் ஹொய்சள மன்னனாகப் பதவியேற்கிறான். அதுதான் இவ்வளவு அமர்க்களம் எல்லாம். இருக்க வேண்டியதுதானே. அரசனாயிற்றே !.

சரி அப்படியே அரண்மனைக்குள் சென்றால், முன் மண்டபத்தில் அனைவரும் பயபக்தியுடன் புதிய மன்னரின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. உள்பகுதியிலிருந்து வல்லாளன் பூரண அரச உடையணிந்து நனந்து வர, அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள். நல்ல நேரத்தில், வேத கோஷம் முழங்க, ஹொய்சள அரசனாக பதவியேற்றுக்கொண்டான் வல்லாளன்.

புதிய அரசனுக்கு வாழ்த்துக்களும், வாழ்த்து பொருட்களும் வந்த வண்ணமிருந்தன. ஒரு வழியாக இந்த வைபவம் முடிந்தபின் அவையோரை நோக்கி பேசத் துவங்கினார் ஹொய்சள அரசர் வல்லாள தேவர்.

"ஹரிஹி..எனதருமை மக்களே, இன்று என் வயதையும் பாராமல் இந்த ராஜ்ய பாரத்தை என் மேல் ஏற்றிவிட்டீர்கள். எனினும் அதற்காக கவலைப் படாமல் நல்லாட்சி தரவேண்டும் என்ற அடிப்படையில் மகுடம் சிரம் ஏற அனுமதித்தேன். இந்த அரசு அமைவதற்கு நம் முன்னோர்கள் எவ்வாறு கடஷ்டப்பட்ட்டிருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததோடு நின்று விடக்கூடாது."

"என் முன்னோர்களின் தீராத ஆசை ஒன்று உள்ளது. அதைத் தீர்த்து வைப்பதே என் ராஜ்யபாரத்தின் முதற்பணியாக இருக்கும். அப்போதுதான் அந்த வீரர்களின் ஆசிகள் இந்த தேசத்திற்கு பரி பூரணமாகக் கிடைக்கும்."

"அது என்ன என்பது உங்களுக்கு விரிவாக்ச் சொல்ல வேண்டுமென்பதில்லை. ஆயினும் சொல்ல வேண்டியது என் கடமையாகிறது." என்று நிறுத்தி அனைவரையும் ஒரு முறை நன்றாகப் பார்த்தான்.

"இந்த தேசத்தின் நலனையே விரும்புகின்ற நல்லவர்களே, கேளுங்கள். நம் தேசம், பல ஆண்டுகாலம் தமிழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. நாம் நினைத்தும் பல முயற்சிகள் எடுத்தும் அங்கே நம் அரசை நிலை நாட்ட முடியவில்லை என்பது வருந்தத் தக்கதுதான்"

"இப்போது சொல்கிறேன். என் ஆட்சி துவங்கியதின் பலன் தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் பாண்டியர்களை ஒழிப்பதுதான். இப்போது அவர்களுக்குள் சகோதரச் சண்டை மூண்டுள்ளது. இதை தக்க சமயத்தில் உபயோகப் படுத்திக் கொண்டு நம் அரசை தமிழகத்தில் விரிவு படுத்துவதே நம் நோக்கம். இதற்காக நம் உடல் பொருள் ஆவி ஆகியவற்றை செலவிட வேண்டும். செய்வீர்களா?" என்று கேட்டான்.

"ஆம்" என்ற பேராராவாரம் எழுந்தது அந்த மண்டபத்திலிருந்து.

(தொடரும்)

Wednesday, March 4, 2009

நான் "யூத்" என்று சர்டிஃபை செய்த விகடன்

என் புராடக்ட் குவாலிடியானது என்பது என் ப்ளாக்கை சாதாரணமாக ஸ்கேன் செய்தாலே கன்ஃபர்ம் ஆகிவிடும். ஏனென்றால் குவாலிட்டி அப்படி கொட்டிக் கிடக்கிறது. இப்படி இருந்தாலும் குவாலிட்டியை சர்டிஃபை செய்யும் பி.வி.க்யு.ஐ போன்ற தர்ட் பார்டி ஏஜென்சிகள் சர்டிஃபை செய்யும் போது இமேஜ் இன்னும் டெவலப் ஆகிறது அல்லவா?

அதே மாதிரி, நான் யூத் என்பது என் பெயரை பார்த்த மாத்திரத்தேலேயே தெரிந்திருக்கும். இருந்தாலும் நம்மை நாமே யூத் என்று சொல்வதை விட வேற யாராவது சொன்னா? அதுவும் யூத்துக்கே அட்ரஸ் மாதிரியான 'யூத்ஃபுல் விகடன்' சொன்னா அப்பீல் இருக்காது இல்லையா? பொதுவான நாமளே நம்மள யூத்துன்னு சொல்லிக்கிறத விட, இது மாதிரி ஐடென்டிஃபை பண்ணும் போது இம்பேக்ட் டபுளா இருக்கும்.

சரி மேட்டர் என்னன்னா, நம்மள யூத்துன்னு விகடன் ஐடென்டிஃபை எப்பவோ செஞ்சுடுச்சு. அட நாம யூத்துன்றது உலகத்துக்கே தெரியுமே இத வேற எதுக்கு பப்ளிசைஸ் பண்ணனும்னு விட்டுட்டேன்.

இப்ப பாத்தீங்கன்னா எல்லாரும் இத ஒரு பெரிய விஷயமா சொல்லிட்டு வர்றாங்க. அது அவங்கள பொறுத்த வரைக்கும் கரெக்டா இருக்கலாம் ஏன்னா யூத் இல்லாதவங்கள யூத்துன்னு சொல்றது பெரிய விஷயம்தானே. ஆனா, என்னைய மொத 'லாட்'லயே ஐடென்டிஃபை பண்ணிட்டாங்க.

அதாவது சி.ஏ. டெர்ம்ஸ்ல சொல்லணும்னா 'பாஸ் இன் ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் வித் ஆல் இன்டியா ராங்க்'. அப்படியிருக்கும் போது இத வெளிய சொல்லணுமான்னு இன்னர் சோல் கேட்டதை என்னுடைய கான்ஷியஸ் மைன்ட் அப்ஜெக்ட் பண்னலை. அதனால அப்ப டிஸ்க்ளோஸ் பண்னலை.

சரி இப்ப ஏன் சொல்ற அப்படின்னு நீங்க க்ராஸ் கொஸ்டின் பண்ண உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு. அதுக்கு ரிப்ளை பண்ண வேண்டிய ரெஸ்பான்சிபிலிடி என்னுது.

அதாவதுங்க, என்னுடைய 'ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி' ன்ற உலக மகா இம்பார்டன்ஸ் வாய்ந்த பதிவு யூத்ஃபுல் விகடன்ல 'குட் ப்ளாக்' ஸ்டார்ட் பண்ண போதே ஐடென்டிஃபை பண்ணி போட்டிருக்காங்க. இது அவங்களே ஐடென்டிஃபை பண்ணனுது. நானா ப்ரெசண்ட் பண்ணதில்லை.

ஆகவே நான் யூத் என்பது 'பியான்ட் தி க்வெஸ்டின் ஆஃப் ரீசனபிள் டவுட்'ஆக எப்போதோ கன்ஃபர்ம் செய்யப்பட்டு விட்ட ஹிஸ்டாரிகல் இவன்டை இப்போது இங்கே ரெஜிஸ்டர் செய்யாவிட்டால் என் சோல் என்னை மன்னிக்காது மட்டுமில்ல, இந்த மேட்டர் நம்ம ஃப்ரென்ட்ஸ் அன்ட் வெல் விஷர்ஸோட நாலெட்ஜுக்குக் கூட வராம போயிடக் கூடிய டேஞ்சர் இருக்கு.

ஸோ, தி ஸம் அண்ட் ஸப்ஸ்டன்ஸ் ஆஃப் திஸ் பதிவு இஸ், ஐ ஹாவ் பீன் ஐடென்டிஃபைட் ஏஸ் யூத் பை 'யூத்ஃபுல் விகடன்' லாங்க் லாங்க் அகோ. திஸ் இஸ் ஜஸ்ட் டு ரெகார்ட் அண்ட் மேக் பப்ளிக்லி நோன் திஸ் இவென்ட் ஆஃப் பாராமவுன்ட் இம்பார்டென்ஸ்.

தேங்க்ஸ் அண்ட் பெஸ்ட் ரிகார்ட்ஸ்,

ஆல்வேஸ் யூத்ஃபுல்லி யுவர்ஸ்,

இளைய பல்லவன்.


=====

Monday, March 2, 2009

காணவில்லை - தொடர்வோர்

திடீரென்று என் பதிவுப்பட்டையிலிருந்து தொடர்வோர் பட்டியல் காணாமல் போய்விட்டது.


எங்கே எப்படி திரும்ப எடுத்து வருவது?


தகவல் கொடுப்பவர்களுக்கு நன்றி சொல்லப்படும்.

Sunday, March 1, 2009

நட்புக் கோட்டை - நூறாவது பதிவு

இணையத்துடனான பரிச்சயம் ஏற்பட்டது சற்றேறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு. முதலில் மின்னஞ்சல் கணக்கைத் துவக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்வதற்கே பல மாதங்களானது. ஒரு வலையகத்தில் (நெட் கஃபே) இந்தக் கணக்கைத் துவக்கினேன்.

என் மின்னஞ்சல்களைப் பார்க்க அந்த வலையகத்திற்குத்தான் செல்வேன். அதுவும் எந்த கணினியில் கணக்கைத் துவக்கினேனோ அந்தக் கணினிதான் வேண்டுமென்று கேட்பேன். என் புரிதல் மின்னஞ்சல் அந்தக் கணினியில்தான் வந்து சேருமென்பதாகவும் அதில் தான் சேமிக்கப் பட்டிருக்குமென்பதுமாகவும் இருந்தது.

பிறகு வலையின் அடிப்படை புரிபட அதன் பயன் பாடு அதிகரித்தது. ஆயினும் தொடர்ந்து ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது. வலையில் தமிழைப் பார்க்க முடியவில்லையே என்பதுதான் அது. ஒரு சுபயோக சுப நாளில் கூகுளாண்டவரிடம் தமிழ் என்று கேட்க கோவி.கண்ணன் சுட்டிக்காட்டிய சுட்டிகளோடு தமிழ்மணம் என்ற சுட்டியையும் கொடுத்தார்.

அங்கு சென்றால் ஜாம்பவான்களெல்லாம் சிம்மாசனமிட்டுக் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் டுபுக்குவைப் படிப்பதற்காகவே திரும்பத்திரும்ப சென்று கொண்டிருந்தேன். விடாது கருப்பு, விட்டுது சிகப்பு, மாயவரத்தான், டோன்டு என்று ஒரு கலவரமாகத்தான் இருந்தது தமிழ்மணம். ஒரு நாள் என் அருகில் அமர்ந்திருந்த என் 'பாஸ்' ஒரே வாசனை வீசுதே என்று கேட்டார். புரியாமல் விழிக்க, எப்பவும் தமிழ் மணமே பாத்துக்கிட்டிருக்கீங்களே என்று கேட்டார். அந்த அளவிற்கு தமிழ்மணம் என்னை ஆக்கிரமித்திருந்தது.


அன்று பிடித்த இந்தப் பைத்தியம், ஒவ்வொரு வலைப் பூவாக மேய்ந்து, சண்டைகளை வேடிக்கை பார்த்து, காமெடிகளை ரசித்து, கவிதைகளை ருசித்து வளர்பிறை நிலவைப் போல் வளர்ந்தது. பரிணாம விதிப்படி (உங்களின் விதிப்படி?)மீண்டும் ஒரு சுப யோக சுப நாளில் (யாருக்கு என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. யாருக்கோ என்று நான் பதில் சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்), இளையபல்லவன் என்ற பெயருடன் நானும் இந்தக் கோட்டைக்குள் புகுந்து விட்டேன்.

ஆம், வலையுலகம் அதுவும் தமிழ்ப் பதிவுலகம் 'காதல் கோட்டை' போல் ஒரு 'நட்புக் கோட்டை'தானே. முகமறியா முன்பின் பழகியிராத ஆயிரக் கணக்கான நண்பர்கள் உலாவும் இடமல்லவா? எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராது (கும்மியடிப்போர் வேறு) நம் படைப்புகளைப் பற்றிய நேரிய கருத்துகளைச் சொல்லி நம்மை ஊக்கப் படுத்தி, செம்மை செய்வோர் நண்பரல்லாது வேறு யாராக இருக்க முடியும்.

'முக நக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அக நக நட்பது நட்பு' என்றார் வள்ளுவப் பெருந்தகை. நேரில் பார்க்கும் போது மட்டும் சிரித்துப் பேசி நட்பு பாராட்டாமல், உள்ளத்தால் பிணைவதே நட்பாகும். அவ்வாறு உள்ளத்தால் நாம் எல்லோரும் நட்புடன் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.

அத்தகைய நட்புக் கோட்டையாக விளங்கி என்னை நூறு பதிவுகள் போட வைத்து மேலும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை(வெறியை?)த்தூண்டும் இந்தப் பதிவுலகிற்கு நன்றி செலுத்தி இந்த நூறாவது பதிவைக் காணிக்கையாக்குவதில் பெருமைப் படுகிறேன்.

சட்ட பூர்வ எச்சரிக்கை: உங்கள் மேலான ஆதரவோடு இவ்வாறான காணிக்கைகள் மேலும் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.