Wednesday, March 25, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 3

அத்தியாயம் 3: நான் யார்?

ஒருவனது குண நலன்கள் அவனது தோற்றம், வளர்ச்சி, சூழல் ஆகியவற்றோடு அவனுக்கு ஏற்படும் அனுபவங்களாலும் மாறுபடுகிறது. சிலர் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவதில் வல்லவர்கள். சிலர் அவற்றைப் பற்றி கவலைப் படாது தான் கொண்ட வழியே சரியென்று செல்பவர்கள். வல்லாளன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன்.

தற்போதுதான் காஞ்சிக் கடிகையில் குருகுலவாசத்தை முடித்திருந்தாலும் அவன் பிராயம் சற்று அதிகம்தான். அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும் பிறந்திருந்தான். அவனது ஆரம்பகால வாழ்க்கை அவ்வளவு நிம்மதியாக இருக்கவில்லை. சிறு பிராயத்திலேயே அவனது தந்தை மறைந்துவிட்டிருந்தார். ஆட்சிக் கட்டில் ஏற வேண்டிய அவசியமிருந்தாலும் அப்போதைக்கு அமாத்யர்களின் ஆலோசனையின் பேரில் அரசு நடந்து கொண்டிருந்தது.

அதனால்தான் ஹொய்சளர்களின் பகைவர்களான பாண்டியர்கள், காகதீயர்கள், தேவகிரியைச் சேர்ந்த செய்னர்கள், கம்பிலியர்கள் ஆகியோர்களை கவனிக்க முடியவில்லை. இவனது தந்தை காலத்தை விட ஹொய்சளர்களின் எல்லை வெகுவாகக் குறைந்துவிட்டிருந்தது. இவையெல்லாம் அவனை வெகுவாகப் பாதித்ததோடு அவன் மனதை கல்லாக்கி விட்டிருந்தது. அவனது குறிக்கோளெல்லாம் ஹொய்சளர்களின் கீர்த்தியை மீண்டும் நிலை நாட்டுவதுதான்.

அந்தர மண்டபத்திலிருந்து கிளம்பிய வல்லாளன் நேராக அந்தப் புரம் நோக்கிச் சென்றான். அங்கே காத்திருந்தாள் அவன் மனையாள் நீலதயாக்ஷியும் அவன் பத்துவயது மகன் சோமேஸ்வரனும். ஆசையாக நீலா என்று அழைப்பான் வல்லாளன். நீலதயாக்ஷியிடம் கன்னட தேசத்தின் செழுமை பரிபூரணமாக நிலவியது. அவளுக்காகவே அடிக்கடி கடிகையிலிருந்து வந்துவிடுவான் வல்லாளன். உன்னைப்பார்ப்பதும் என் தேசத்தைப் பார்ப்பதும் ஒன்றுதான் என்று அவளிடம் சொல்வான்.

அன்று நீலாவின் வதனம் வாடியே காணப்பட்டது. அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுறும் கண்கள் அப்போது அவனை சீண்டவுமில்லை. அமர்ந்திருந்தவள் அசையவுமில்லை. சோமேஸ்வரன் மட்டும் "வாருங்கள் அப்பா, விழா நன்றாக நடந்ததா?" என்று ஆசையோடு வினவினான்.

"ஆம் சோமா, மிக நன்றாக நடந்தது"

"ஏன் நன்றாக நடக்காது? நீயும் நானும் செல்லவில்லையல்லவா? ஒருவேளை நாம் இந்த தேசத்திலேயே இல்லாதிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று திருவாய் மலர்ந்தாள் நீலா. அவள் கோபப்படுவதில் உள்ள நியாயத்தை அறிந்ததால் சற்று மனமிளகிய வல்லாளன்,

"நீலா, உன் கோபம் எனக்குப் புரிகிறது. பட்டமேற்கும் விழாவில் வேண்டுமென்றா உன்னையும் சோமனையும் விட்டு விட்டு சென்றேன்? இதன் காரணத்தை எத்துணை முறை உனக்குச் சொல்லியிருப்பேன். சம்மதம் சொன்னவளே நீதானே. இப்போது இப்படி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது?"

"அம்மாவை விடுங்கள் அப்பா. எப்போதோ விழா முடிந்துவிட்டதாகக் கூறினார்கள். தாங்கள் வருவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?"

"விழா முடிந்ததும் அமாத்யர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது சோமா. அதனால்தான் நேரமாகிவிட்டது. நீலா, இனி இவ்வாறான ஆலோசனைகளுக்கு சோமனையும் அழைத்துச் செல்லலாமென்றிருக்கிறேன். நீயென்ன சொல்கிறாய்.

"இவ்வளவு சிறு பாலகனை எதற்கு துன்புறுத்துகிறீர்கள்."

"இல்லை நீலா. நான் செய்த தவறை எனக்கு நிகழ்ந்த கொடுமையை என் மகனுக்கு நான் அளிக்க விரும்பவில்லை. அவன் தற்போதிலிருந்தே இவற்றில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் எப்போதும் அவன் என்னுடன் இருக்கப் போவதில்லையே. முக்கிய ஆலோசனைகளுக்குத்தான் அவனும் வர வேண்டும். என்ன சொல்கிறாய் சோமா?"

"அப்படியே ஆகட்டும் அப்பா. அடுத்த ஆலோசனை எப்போது?"

"அப்படிச்சொல்லடா என் சிங்கக்குட்டி. நாளை நடக்கும் ஆலோசனைக்கு நீயும் வரவேண்டும். இப்போது சென்று விளையாடு" என்றவுடன் சோமேஸ்வரன் விளையாட ஓடிவிட்டான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தனர் நீலாவும் வல்லாளனும். சற்று நேர மௌனம் அவர்களின் எண்ண ஓட்டத்தை வெவ்வேறு திக்குகளில் பயணிக்கச் செய்தது. மௌனம் கலைந்த போது இருவரும் அணைப்பில் இருந்தனர்.

"நீலா"

"உம்"

"என் மேல் கோபம் போய்விட்டதா?"

"கோபப்பட்டு பயனென்ன"

"அப்படியல்ல நீலா"

"எப்படியல்ல. நீண்ட நாட்கள் கழித்து வந்தீர்கள். வந்தவுடன் முடிசூட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இறங்கினீர்கள். இப்போது முடிசூட்டிக்கொண்டவுடன் இங்கு கூட வராமல் ஆலோசனைக்குச் சென்றுவிட்டீர்கள். மேலும் பட்டமேற்க எனக்கும் அழைப்பில்லை. நம் குமாரனும் வரவில்லை. இதில் எதற்காகக் கோபப்படுவது."

சில நேரம் அனைத்தும் தெரிந்திருந்தும் நாம் நம் இயலாமையைக் கண்டு கோபப்படுவோமல்லவா அத்தகைய கோபம்தான் நீலாவுடையது. அவளையும் சோமனையும் பட்டமேற்கும் விழாவிற்கு அழைத்துச் செல்லாததற்கான காரணம் அவளுக்குத் தெரிந்தேயிருந்தது, அவளது சம்மதமுமிருந்தது. பட்டமகிஷியிருக்கும் போது அவளுடன் சேர்ந்து அரியணையேறுவதுதானே மரபு. அந்த மரபு மீறல் குறித்த அவளது இயலாமையால் விளைந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் இரு முத்துக்கள் தோன்றின.

வல்லாளன் மற்றவர்களிடத்தில் எவ்வளவு கடினமாக நடந்து கொண்டாலும் நீலாவிடம் வரும்போது மட்டும் வேறு மனிதனாக முற்றிலும் மாறிவிடுவான். அன்றும் அப்படித்தான். அவள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது சாந்தமும் அதிகப் பட்டது.

சற்று இறுக்கி அணைத்து மெல்லிய முத்தம் ஒன்றை அவளது நெற்றியில் பதித்தான். மெல்ல அவளது முகத்தை உயர்த்தியவன் கண்ணோடு கண் நோக்கினான். கண்களின் ஊடே பற்பல செய்திகள் பரிமாறப்பட்டன. "நீலா" மீண்டும் அழைத்தான் வல்லாளன்.

இம்முறை அவள் பதிலிறுக்கவில்லை. அவளது அதரங்கள் அவனது அதரச் சிறையில் சிக்குண்டுவிட்டன. தொடர்ந்து நிகழ்ந்த போரின் முடிவில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதை நிச்சயிக்க முடியவில்லை. வேறொருவனாக மாறிவிட்டிருந்த வல்லாளன் தன் நிலையை எண்ணி தான் யார் என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

(தொடரும்)

8 comments:

நான் ஆதவன் said...

பர்ஸ்டு....இருங்க படிச்சிட்டு வரேன்

நான் ஆதவன் said...

என்ன தலைவரே நைட்டு இந்த பதிவ வெளியிடும் போதே ஒரு டவுட்டு...செம மூடு போல..ம்ம்ம்

நான் ஆதவன் said...

//கண்களின் ஊடே பற்பல செய்திகள் பரிமாறப்பட்டன. //

ப்ளூ டூத் போல "ப்ளூ ஐஸ்"ஆ இருக்குமோ?????

நான் ஆதவன் said...

//அவளது அதரங்கள் அவனது அதரச் சிறையில் சிக்குண்டுவிட்டன//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கல்யாணமாகாதவர்கள் படிக்க வேண்டாம்ன்னு மேல ஒரு டிஸ்கி போடிருக்கலாம்....

நான் ஆதவன் said...

ஹலோ யாரும் இல்லையா???? தனியா கும்மியடிக்க வேண்டாம். இது வரலாற்று பதிவு. சோ கும்மியை அடுத்த பதிவில் பார்க்கலாம்

இளைய பல்லவன் said...

ஆதவரே,

இவற்றையெல்லாம் பதிவு செய்யவேண்டியது வரலாற்றாசிரியனின் கட்டாயமய்யா

ttpian said...

என்னால் முடியும் வரை கங்கிரசை அழிப்பேன்!
அப்போதுதான் எனது எரிச்சல் தீரும்

SUREஷ் said...

//தற்போதுதான் காஞ்சிக் கடிகையில் குருகுலவாசத்தை முடித்திருந்தாலும் அவன் பிராயம் சற்று அதிகம்தான்//

சில மேற்படிப்புகள் அப்படித்தான்