Thursday, March 12, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 2

அத்தியாயம் 2: முடிவு ஆரம்பம்

அவையோரின் ஆரவாரம் புதிய அரசனை அகம் குளிர வைத்தது. அந்த மகிழ்ச்சியோடு மேலும் தொடர்ந்தான்.

"ஹொய்சள தேசம் பல இன்னல்களைச் சந்தித்திருந்தாலும், இது வரை ஒரு உறுதியான நாடாகவே இருந்து வந்துள்ளது. இனி அதை மிக உன்னதமான நாடாக மாற்றவேண்டியது என் கடமை. எப்போதும் நம் துணையிருக்கும் ஹொய்சளேஸ்வரரும் சந்தளேஸ்வரரும் இப்போதும் நம்முடனிருப்பார்கள். வெற்றி நமதே. ஜெய ஜெய" என்று ஆர்ப்பரித்தான்.

புதிய மன்னனின் பேச்சு சிறிதாக இருந்தாலும் அதன் வீச்சு மிக வீரியமானது என்பதை அவன் ப்ரதானிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கவனிக்கத் தவறவில்லை. அவையை அப்போதைக்குக் கலைத்துவிட்டு, இவர்களை மட்டும் அந்தர மண்டபத்திற்கு வரப் பணித்தான் வல்லாளன்.

பஞ்சப் ப்ரதானிகள் (ஐம்பெருங்குழு) என்று அழைக்கப் பட்ட முக்கிய அமைச்சர்களில் முதன்மையானவர், மஹாமாத்யர் (முக்கிய மந்திரி), இவர்களைத் தவிர சந்திவிக்ரஹி என்றழைக்கப் பட்ட வெளியுறவுத்துறை அமைச்சரும், மஹாபண்டாரி என்றழைக்கப் பட்ட நிதியமைச்சரும் உண்டு. தண்ட நாயகர்கள் என்றழைக்கப் பட்ட படைத் தலைவர்களும், தர்மாதிகாரி என்றழைக்கப் பட்ட தலைமை நீதிபதியும் அங்கே குழுமியிருந்தது, ஹொய்சளர்களின் சீரிய நிர்வாக அமைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது. இந்த அமைப்புதான் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தில் துவங்கி, பிரிட்டிஷ் காலம் வரை நீண்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அங்கே வந்த முக்கியஸ்தர்களை அமரச் சொன்னவன் தான் மட்டும் அவ்வறையின் தென் திசைச் சாளரத்தையே நோக்கியவாறு நின்று கொண்டிருந்தான். அரசர்கள் வடக்கு நோக்கி அமர்வது முறையாகையால் தெற்கு நோக்கி மற்றவர்களுக்குத் தன் முதுகைக் காட்டிக் கொண்டிருந்தான். ஆகவே அவன் என்ன அனுமானிக்கிறான் என்பதை மற்றவர்களால் உணர முடியவில்லை. சற்று நேரம் கழித்தே அவர்கள் பக்கல் திரும்பிய வல்லாளன், ஒரு பெருமூச்சுடன் ஆசனத்தில் அமர்ந்தவன் மஹாமாத்யரை நோக்கி,

"மஹாமாத்யரே, இன்று நான் முடி சூடிக்கொண்டேன். ஆனால் எப்போதிருந்து ஆட்சி செய்து வருகிறேன்?"

இந்தக் கேள்விக்கு விடை அங்கிருந்தவர் அனைவருக்குமே தெரிந்திருந்தாலும், ஏதோ காரணம் பற்றியே அவன் இவ்வாறு கேட்டிருக்கவேண்டும் என்ற எண்ணம் அனைவரின் சித்தத்திலும் உதித்தது.

"கடந்த பதினெட்டு ஆண்டுகளாக"

"பிறகு ஏன் இன்று பட்டாபிஷேகம்?"

அனைவரின் இதயத்திலும் ஒரு சிறிய கலக்கம். அரசன் என்ன கூற வருகிறான்?

"தாங்கள் சரியான பருவம் எய்தும் வரையில் தங்கள் பட்டாபிஷேகம் தள்ளிவைக்கப் பட்டது."

"முடிசூடிக்கொள்ள பருவம் போதுமா? என் திறமையை நான் வெளிப் படுத்தவில்லையே. உண்மையில் என் தந்தை விட்டுச் சென்ற ராஜ்ஜியத்தில் பல பகுதிகள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனவே."

அரசனின் மனவோட்டம் புரிபடத் துவங்கியது அங்குள்ளவர்களுக்கு.

"உண்மைதான் அரசே. இது வரை நாங்கள் பரிபாலித்து வந்த தேசம் அங்கங்கே பாகப் பட்டிருக்கிறது. ஆயினும் இனி குறைவென்ன. தாங்கள் வந்துவிட்டீர்கள். ஹொய்சளர்களின் மகோன்னதம் குறைந்துதான் போய்விட்டது. ஹொய்சளர்களின் சிறந்த அரசர் உங்கள் முப்பாட்டனார் வல்லாளர். அவர் பெயர் தான் உங்களுக்கும் வைக்கப் பட்டது. அவரைப் போலவே ஹொய்சள சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி பலப்படுத்துவீர்கள் என்ற கருத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை. உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். "

"ஆம் ஆம் நாங்கள் இருக்கிறோம்" என்று உணர்ச்சிப் பெருக்கில் தலையசைத்தனர் மற்றவர்கள். அவர்களது கருத்தை நன்றாக அறிந்திருந்தாலும் உடனடியாக எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை வல்லாளன். ஒரு சிறு புன்னகையும் தலை தாழ்த்தலுமே பதிலாக வந்தது அவனிடமிருந்து. மீண்டும் நிலவியது ஒரு சிறு மௌனம்.

"உங்கள் வார்த்தைகள் எனக்கு வலிமையைத் தருகின்றன. வலியை மறைக்கவில்லை. ஆனால் என் வலி எனக்குத் தான் தெரியும். ஒரு பொருள் நம் வசம் ஒப்படைக்கப் படும் போது அதன் பாதுகாப்பிற்கும், வளத்திற்கும், ஜீவனுக்கும் நாம் பொறுப்பாகிறோம். அப்படிப்பட்ட பொறுப்பை இதுவரை நான் சரியாக நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. அந்த வலி என் நெஞ்சில் நீங்காததாகவே இருந்து வருகிறது. எப்போது என் ராஜ்ஜியம் மீண்டும் தன் பழைய நிலையை அடைகிறதோ அப்போதுதான் அந்த வலி நீங்கும்.

இனி நீங்கள் அனைவரும் எதிர் பார்க்க வேண்டியது ஒன்றுதான். போர். ப்ரதானிகளே, பண்டாரியாரே, போருக்கு ஆயத்தம் செய்யுங்கள். பண்டங்கள், தளவாடங்கள் மற்றும் செல்வம் திரட்டப் படவேண்டும். இனி நாம் தினமும் இரு வேளைகளும் இங்கு கூடுவோம். அடுத்த இரு மாதங்களுக்குள் நான்கு திசைகளிலும் நாம் நம் தாக்குதலைத் தொடங்க வேண்டும். முதலில் . . ." என்று நிறுத்தினான்.

"செய்னர்களைத் தாக்கி தேவகிரியைக் கைப்பற்ற வேண்டும்" என்றார் ஒரு தண்ட நாயகர்

"கம்பிலியின் வளர்ச்சி நமக்கு தொல்லை. அவர்களை அடக்க வேண்டும்" மற்றொருவர்

"காகதீயர்கள் எப்போதுமே நமக்கு அச்சுறுத்தல்தான். அவர்களை தடுக்க வேண்டும்" இப்படி பல குரல்கள்.

"வடக்கிலிருந்து துவங்குவோம். சுல்தானியர்களின் வரவை எதிர் கொள்ள வேண்டும். வடக்குத் திக்கை நோக்கி துவக்கும் எந்த காரியமும் வெற்றி பெறும்" என்றார் மஹாமாத்யர்.

"இல்லை மஹாமாத்யரே. தற்போது நமக்கு வடக்கிலிருந்து சுல்தானியர்களின் தொல்லை இருக்கலாம். ஆனால் அதைத் தடுக்க ராஜரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அவர்களைப் பற்றி இப்போது கவலையில்லை. நான் துவங்கப் போவது தெற்கு நோக்கி." என்றான் வல்லாளன்.

"தெற்கு?. எதற்கு?" வினவினார் மஹாமாத்யர்.

"அரசவையில் கூறியது மறந்து விட்டதா. என் முதல் குறி பாண்டியர்கள். தமிழகம். பிறகு காடவர்கள். இவர்களை முடித்துவிட்டுத் தான் மற்றவர்கள். என் முடிவு உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆயத்தமாகுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம்" என்று கிளம்பினான் வல்லாளன்.

"ஆரம்பமே முடிவாக இருக்கிறதே. ஹும். ஹொய்சளேஸ்வரா.." என்று நினைத்துக் கொண்டார் மஹாமாத்யர்

(தொடரும்)

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"கடந்த பதினெட்டு ஆண்டுகளாக"

"பிறகு ஏன் இன்று பட்டாபிஷேகம்?"
//



//வடக்கிலிருந்து துவங்குவோம். சுல்தானியர்களின் வரவை எதிர் கொள்ள வேண்டும். வடக்குத் திக்கை நோக்கி துவக்கும் எந்த காரியமும் வெற்றி பெறும்" என்றார் மஹாமாத்யர்.//


//என் முதல் குறி பாண்டியர்கள். தமிழகம். பிறகு காடவர்கள். இவர்களை முடித்துவிட்டுத் தான் மற்றவர்கள்//



இப்படியெல்லாம் பிரச்சனை வரும்ன்னுதான் நாங்கல்லாம் அந்த காலத்தில் பிறக்கவேயில்லை.

CA Venkatesh Krishnan said...

என்ன சொல்றீங்க சுரேஷ்,

நீங்கதான் வல்லாளன் தி க்ரேட்!

மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்!!

☀நான் ஆதவன்☀ said...

ங்கொய்யால...டேய் யாருகிட்ட மோதுற..ஏரியாவுல கால வச்சிருவையா நீயி...இல்ல வச்சுட்டு உசுரோட போயிருவையா @#^&%*(.