Thursday, April 23, 2009

நல்ல வேளை இந்த கூத்தெல்லாம் அவர்களுக்குத் தெரியாது

காலை தினசரியைப் பார்த்ததுமே என்னமோ செய்தது. இத்தனைக்கும் ரத்தமில்லை, வன்முறையில்லை. மக்களின் படங்கள்தான்.

கும்பல் கும்பலாக மக்கள் கூட்டமும் அவர்களின் நிலையும், உணவுக்காக நிற்பதும், சொந்த நாட்டிலேயே அகதிகளாய் இருப்பதும்.... காலத்தின் கட்டாயம்?.

அவற்றையெல்லாம் மீறி எனக்குத் தெரிந்தது அவர்களுடைய நம்பிக்கைதான். இந்தத் துன்பமும் கடந்து போகும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

Tough Times never last. But tough people do.

இவர்கள் நிச்சயமாக இந்தத் துன்பத்தைக் கடந்து வருவார்கள். வருங்காலத்தில் நிச்சயமாக நன்றாக இருப்பார்கள்.

தமிழகமும் தமிழகத் தலைவர்களும் ஏதாவது செய்வார்கள் என்று நம்பியிருப்பார்களேயானால் அது ஒன்றுதான் அவர்களுடைய தவறாக இருக்க முடியும்.

====

இது இவ்வாறிருக்க, தமிழக திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகளும் உணவகங்களும் மூடியுள்ளன. பேருந்துகள் சென்னையில் இயங்கவில்லை. மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை.

அரசியல் தலைவர்கள் வழக்கம் போல் அறிக்கைப் போர்களில் இறங்கியுள்ளனர். கலைஞரின் அறிக்கைகளை இப்போது படிக்கும் போது அது அவர் எழுதுவதுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இன்று சோனியா தெரிவித்த கருத்துகள் ஆறுதலளிப்பதாக(?!) எழுதியுள்ளார். சன் டிவியும், கலைஞர் டிவியும் சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன.

வாழ்க வளமுடன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

====

நல்ல வேளையாக இந்த கூத்துகள் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதைத் தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு வேளை தெரிய வரும்போது ?

Tuesday, April 21, 2009

தேர்தல் - 'திரு'விளையாடல்

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!

இனிமையான இந்தியத் திருநாட்டின் எழுச்சிப் பாதையை வகுத்திட வேண்டி மக்களுக்காக மக்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டத்திலே நாம் இருக்கிறோம். இன்றைய ஓட்டு நாளைய நோட்டு. ஆம். இன்று போடும் ஓட்டு தான் நாளை நாம் பெறுவது மூன்று சைபர் நோட்டா, இரண்டு சைபர் நோட்டா, ஒரு சைபர் நோட்டா என்பதை முடிவு செய்யும்.

ஆகவே தவறாகப் போடும் நம் ஓட்டு நாம் நமக்கே வைத்துக் கொள்ளும் வேட்டு (ஆஹா, ஓட்டு, நோட்டு, வேட்டு.. அப்படியே தமிழ் கொஞ்சி விளையாடுதேப்பா....)

சரி விஷயத்திற்கு வருவோம். தேர்தல் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். சோழர்கள் காலத்தின் குடவோலை முறையைப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டுகள் செப்புகின்றன [என்ன செய்வது. வரலாறு கலக்காமல் எழுத முடிவதில்லை:(( ]. தேர்தல்களில் இப்போது 'திரு'வின் விளையாட்டு அதிகமாகிவிட்டதால் இந்தப் பதிவுக்கு 'தேர்தல் திருவிளையாடல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பல்வேறு உத்தரவுகளால் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை என் கணிப்பில் மீண்டும் தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்களைப் பெறும். அதற்கான மூன்று காரணங்கள்.

1. எக்கச்சக்க தி.மு.க எதிர்ப்பு அலை:- ஆனால் இந்த எதிர்ப்பு அலையின் பலன் அதிமுக கூட்டணிக்குச் செல்லாமல் தடுத்து விடுவதில் தேமுதிக முதலிடத்திலும் மற்ற கட்சியினர் அடுத்துள்ள இடங்களிலும் இருக்கிறார்கள். ஆகவே எதிர்ப்பு வோட்டுகள் பலமாகப் பிரிந்து தி.மு.க. கூட்டணிக்குப் பலனளிக்கிறது. அடிப்படை ஓட்டுக்களுடன் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்பது என் கணிப்பு.

2. அமைப்பு ரீதியான 'சப்போர்ட்':- திமுக வார்டு முதல் வட்டம் மாவட்டம் வரை அமைப்பு ரீதியாக செம்மையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முதலிலேயே துவங்கி விட்டது. மற்ற கட்சிகளைப் பார்க்கும் போது தி.மு.க. வெகுவாக முன்னேறியிருப்பது கண்கூடு. ஆனால் ஆமை முயல் கதையாகாமல் தி.மு.க.வினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. மாநில அரசின் வாழ்வாதாரப் பிரச்சினை:- தி.மு.க. மாநிலத்தில் காங்கிரசைச் சார்ந்தே உள்ளது. ஆகவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உதவினால்தான் மாநில அரசு நிலைக்கும் என்ற காங்கிரசைக் கை கழுவ முடியாத சூழல். ஆகவே காங்கிரசில் எவ்வளவு குழப்பமேற்பட்டாலும் தி.மு.க அவற்றையெல்லாம் சரிகட்ட வேண்டிய நிலை.

இன்றைய நிலையில் குறைந்த பட்சம் 35 தொகுதிகளாவது திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம். எல்லாம் மே 16 அன்று தெரிந்து விடுகிறது.

Thursday, April 16, 2009

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

காங்கிரசுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பதினாறு தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இந்த பதினாறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. அதன் பேரில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது.


இதனிடையில் நாளை பதினேழாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் பதினெட்டாம் தேதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இருபத்து நான்காம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.


என் கவலையெல்லாம் இருபத்து நான்காம் தேதிக்குள் வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டுமே என்பதுதான்:((

Wednesday, April 15, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 5

அத்தியாயம் 5 : அரசாளும் ஆசை

கலை நயம் கொஞ்சும் ஹொய்சள அரண்மனையின் அந்தரங்க மண்டபத்தின் தூண்களில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக பதுமைகளைச் செதுக்கி வைத்திருந்தனர். புதிதாக அங்கு வருபவர்கள் அவை உண்மையான மகளிர் என்றே எண்ணுவர். அத்துணை உயிரோட்டமுள்ளவை அந்தப் பதுமைகள். அன்று மன்னன் பகன்ற மொழிகளைக் கேட்ட அவையோர் பதுமைகளாகச் சமைந்து நின்றனர் சில நேரம். மாலிக் கஃபூரை தக்ஷிணபாரதமே தடுத்து நிறுத்த முயற்சிக்கும் வேளையில் அவனை எதிர்க்கப் போவதில்லை என்று அரசன் கூறுவது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இவனை நம்பி இன்னும் இந்த தேசத்தில் இருப்பது தவறோ என்று கூட சிலர் எண்ணத் துவங்கினர்.

மன்னனின் முடிவை மற்றையோர் எதிர் பார்க்கவில்லையானாலும், அவன் குணத்தை உணர்ந்திருந்த மகாமாத்யருக்கு மட்டும் அதிர்ச்சியளிக்கவில்லை. அவன் தொடர்வதை எதிர்ப்பார்த்திருந்தார்.

"உங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மகாமாத்யர் இதை எதிர்பார்த்தார் என்பதை அவர் முகமே எடுத்துக்காட்டுகிறது. நண்பர்களே, மாலிக் கஃபூரை எதிர்க்கப் போவதில்லை என்று சொன்னேனே தவிர அவனை அழிக்கப் போவதில்லை என்று சொல்லவில்லையல்லவா?" என்று நிறுத்தினான்.

குழப்பத்திலாழ்ந்திருந்தவர்களுக்கு மன்னனின் தெளிவுரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் அதை உணரும் நிலையிலேயே யாரும் இல்லை. மாலிக் கஃபூரை எதிர்க்கப் போவதில்லை என்பது சிங்கத்தின் வாய்க்குள் தானாகவே தலையைத் தருவது போன்றது என்பதை அவர்கள் உணர்ந்தேயிருந்தனர். எதிர்ப்பதற்கும் அழிப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை கண்டறியும் திறனற்றவர்களாயிருந்தார்கள். மகாமாத்யரும் மன்னரே தொடர்வது நல்லது என்று மௌனவிரதம் கடை பிடிக்கத் துவங்கினார்.

இவர்களின் நிலை தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது வல்லாளனுக்கு. அதன் காரணம் பற்றி சிறு புன்னகை பூத்தவனின் உத்தரவுகள் தெளிவாக இருந்தன. "நண்பர்களே, இனி எதுவும் நான் சொல்வதற்கில்லை. செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே எண்ணுகிறேன். சேனாபதியாரே வட எல்லை தண்ட நாயகனை அவன் படைகளுடன் வடமேற்கில் நிற்கச் சொல்லுங்கள். வட எல்லையில் மேலுக்கு சில வீரர்களை நிறுத்துங்கள். யாராவது வரும் போது அவர்களை தடுப்பது போல் தடுத்து நாட்டுக்குள்ளே வரச் செய்யுங்கள். இப்போதைய முக்கியத் தேவை வட எல்லையிலிருந்தும் இங்கிருந்தும் உடனடி தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும். ஆகவே குதிரை வீரர்களை வழி நெடுகிலும் நிறுத்திவையுங்கள். வட எல்லை தாக்கப் பட்டதும் நம் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கும். இனி அனைவரும் செல்லலாம். மகாமாத்யரே தங்களை மீண்டும் மாலையில் சந்திக்கிறேன். " என்று கூறி எழுந்தான்.

மகாமாத்யர் மட்டும் "மன்னன் சக்கர வியூகம் அமைக்கப்போகிறான். ஆனால் முழுமையாகப் பயிலவில்லை போல் இருக்கிறது. மாலை சந்திப்பில் தெளிவு படுத்திவிட வேண்டும்" என்று எண்ணியவாறு சென்றார்.

=====

ஹொய்சள தேசத்திற்கு வந்து சில காலம் இங்கேயே தங்கிவிட்டதால் பாண்டிய நாட்டின் நிகழ்வுகளை கவனிக்கத் தவறிவிட்டோம். ஆனாலும் பாதகமில்லை. இப்போதே பாண்டிய நாட்டின் நிலையை அறிய மதுரைக்குப் பயணிப்போம்.

மண் மணம் மாறா மதுரையம்பதி மன்னர் மாற்றத்தால் மாறிவிடப் போகிறதா என்ன? குலசேகரப் பாண்டியர் இறந்துபட்ட பிறகு நடந்த அரியணைப் போர் மக்கள் மத்தியில் இல்லாமல் அரண்மனைக்குள்ளேயே நடந்து விட்டதால் வெளியில் விஷயம் அவ்வளவாகக் கசியவில்லை. சுந்தர பாண்டியன்தான் அரியணை ஏற வேண்டுமென்று அமைச்சர் குழு முடிவெடுக்க, வீர பாண்டியனும் அவன் மாமன் விக்ரம பாண்டியனும் அவையை விட்டு உடனே வெளியேறி விட்டாலும் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட வில்லை.

மீண்டும் அவையைக் கூட்ட வேண்டும் என்று வீர பாண்டியனும் விக்ரம பாண்டியனும் வற்புறுத்தவே சில தினங்களுக்குப் பிறகு அவை கூடியது. அப்போது நடந்த ஆலோசனையில் வீர பாண்டியனுடைய உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் யார் அடுத்த அரசர் என்ற கேள்விக்கு பதிலில்லை. சுந்தரன் பிடிவாதமாக இருந்தான். வீரன் அமைதியாக இருந்தாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று நின்று கொண்டிருந்தான். எந்தப் பக்கமும் முன்னேற்றமில்லாமல் ஸ்தம்பித்தது சபை.

அன்று இரவு விக்ரம பாண்டியன் சுந்தரனையும், வீரனையும் தனிமையில் சந்தித்தான். சுந்தரனிடம் நிலைமையை விளக்கினான். எல்லாம் தெரிந்தவன் ஒன்றும் பேசாமல் நின்றான். வீரனின் பொறுமை எல்லை மீறியது. ஏதோ சொல்ல வந்தவனை அடக்கினான் விக்ரம பாண்டியன்.

சிறிது நேர அமைதியைப் பிளந்து கொண்டு வந்தது விக்ரமனின் யோசனை. அது பிளந்தது பாண்டிய தேசத்தை. வேண்டாமென்று சொல்ல மற்ற இருவருக்குமே மனமில்லை. அரசாளும் ஆசை விடவில்லை அவர்களை.

(தொடரும்)

Tuesday, April 14, 2009

ஹலோ.... நல்லாயிருக்கீங்களா?.....

லோ

.

.

.

.ல்

லா

யி

ரு

க்

கீ

ங்ளா

?

.

.

.

.

.


டிஸ்கி:- அப்பப்ப வருவேன்னு சொன்னேனில்லையா. அதனால ஒரு ஹலோ பதிவு. எல்லாருக்கும் வாழ்த்துக்கள் (என்ன தினம்னு கேக்கறீங்களா? அவங்கவங்களுக்குத் தேவையான மாதிரி தினத்தை சேத்துக்கோங்க!!)

டிஸ்கி 2:- மீண்டும் அப்பப்ப வருவேன்.

Friday, April 10, 2009

'எப்படி' பதிவுகள் எழுதுவது எப்படி?

எப்படி என்ற வார்த்தையை காபிரைட் செய்ய முடிந்தால் அது திரு.தமிழ்வாணனுக்கே கிடைக்க வேண்டும். அவ்வளவு எப்படி புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இப்ப அவருடைய பதிவுலக வாரிசாக குசும்பனார் எப்படின்னு பதிவுகளா எழுதி தள்ளிக்கிட்டே இருக்கார்.

சரி மேட்டருக்கு (விஷயம்னு சொன்னா அடிக்க வருவாங்களே!) வர்றேன். தமிழ்வாணன் அவர்களிடம் இப்ப கேட்க முடியாது. குசும்பன் இந்த மேட்டரை நமக்கு சொல்லிட்டா அவர் வேற மேட்டருக்கு அலைய வேண்டியிருக்கும். அதனால நாமதான் இதை கண்டுபிடிக்கணும்னு பல காலமா கஷ்டப்பட்டு ராத்திரி பகல்னு பாக்காம தூங்காம தூங்கி, சாப்பிடாம சாப்டு எல்லாம் பண்ணப்புறம் இந்த மேட்டர் தெரிஞ்சுது. நாம பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாதுன்ற ஒரு நல்லெண்ணத்துல இந்த பதிவைப் போடறேன்.

எல்லாரும் படித்துப் பயன் பெறுங்கள்.

1. எப்படி என்றால் என்ன?

எப்படி என்பதற்கு ஆங்கிலத்தில் 'ஹவ்' என்று சொல்வார்கள். இந்தியில் 'கெய்சே' என்றும், தெலுங்கில் 'எலா' என்றும் மற்ற மொழிகளில் அந்தந்த மொழியிலும் எப்படியை சொல்வார்கள். எல்லா மொழியிலும் உள்ள வார்த்தை. ஆனால் வார்த்தை வேறு அர்த்தம் ஒன்று. இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'எப்படி என்றால்' என்று கேட்கிறோமல்லவா? அப்படித்தான்.

புரிந்தவர்கள் மேலே (கிழே) தொடருங்கள். புரியாதவர்கள் மேலே தொடருங்கள்.

2. ஏன் எப்படி பதிவு போடவேண்டும்?

எப்படி என்று போட்டால் எல்லாருக்கும் ஒரு ஆவல் வரும். எல்லாரையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரு மேட்டரைப் பற்றி தெரிந்தவர்கள், தெரியாதவர்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இரு வகையினருமே படிக்க வருவார்கள்.

தெரிந்தவர்கள் நமக்குத் தெரிந்தது சரியா என்று படிக்க வருவார்கள். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வருவார்கள். ஆகவே 'எப்படி' பதிவைப் போட்டால் ஹிட் உறுதி.

புரிந்தவர்கள் மேலே (கிழே) தொடருங்கள். புரியாதவர்கள் மேலே தொடருங்கள்.


3. எப்படி பதிவுகளால் என்ன பயன்?

எப்படி பதிவுகளால் பலருக்கு பல மேட்டர் தெரிய வருகிறது. நாம் செய்யும் வேலைகளை சிறப்பாகச் செய்யலாம். நமக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுக்கலாம். எப்படி என்று எழுதிவிட்டாலே போதும். அது பயனுள்ள பதிவுதான்.

புரிந்தவர்கள் மேலே (கிழே) தொடருங்கள். புரியாதவர்கள் மேலே தொடருங்கள்.


4. எப்படி பதிவுகள் போடுவது எப்படி?

இதுதான் மெயின் மேட்டர். முதலில் எதைப் பற்றி வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ளுங்கள்.


உதாரணமாக பெர்சனல் வாழ்வில் காலையில் எழுந்திருப்பது எப்படி, பல் துலக்குவது எப்படி, காபி குடிப்பது எப்படி, குளிப்பது எப்படி, துடைத்துக் கொள்வது எப்படி, டிரஸ் மாட்டிக்கொள்வது எப்படி, டிபன் சாப்பிடுவது எப்படி, ஷூ போட்டுக்கொள்வது எப்படி, பேக்கை எடுப்பது எப்படி, எதையும் மறக்காமல் இருப்பது எப்படி, என்று ஆரம்பித்து அன்லிமிடடான மேட்டர்கள் இருக்கின்றன.

ஆபீஸ் வாழ்வில், கார்ட் ஸ்வைப் செய்வது எப்படி, ஆபீசில் அனைவருக்கும் குட் மார்னிங் சொல்வது எப்படி, சீட்டிற்குப் போய் உட்காருவது எப்படி, கம்பியூட்டரை ஆன் செய்வது எப்படி, மெய்ல் பாக்சைத் திறப்பது எப்படி, ஃபார்வார்டு செய்வது எப்படி, ரிப்ளை செய்வது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

பொதுவாழ்வில் என்று எடுத்துக் கொண்டால், கட்சியில் சேர்வது எப்படி, எந்த கட்சியில் சேர்வது என்று முடிவு செய்வது எப்படி, பொறுப்பை செலக்ட் செய்வது எப்படி, கவுன்சிலர் ஆவது எப்படி, எம்.எல்.ஏ. ஆவது எப்படி, எம்.பி. ஆவது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

சினிமா பார்ப்பது என்று எடுத்துக் கொண்டால், தியேட்டரை செலக்ட் செய்வது எப்படி, ஷோ செலக்ட் செய்வது எப்படி, வகுப்பை செலக்ட் செய்வது எப்படி, டிக்கெட் வாங்குவது எப்படி, பார்க்கிங் செய்வது எப்படி, உள்ளே நுழைவது எப்படி, சீட்டில் உட்காருவது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

சினிமா எடுப்பது என்று எடுத்துக் கொண்டால் கதை எழுதுவது எப்படி, கதையை காப்பியடிப்பது எப்படி, கதையை மிக்ஸ் செய்வது எப்படி என்று ஆரம்பித்து அன்லிமிடெட்டான மேட்டர்கள் உள்ளன.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் 'எப்படி' அன்லிமிடெட் தான்.

ஒரு வழியாக இப்படி யோசித்துக் கொண்டவுடன் அந்த மேட்டரை நீங்கள் எப்படி செய்வீர்கள் என்று யோசிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் செய்வது சரி என்றால் அதை எழுதலாம். நீங்கள் செய்வது சரியில்லை என்றால் எது சரியோ அதை எழுதலாம். எழுதுவதிலும் ஒரு முறை இருக்கிறது.

உதாரணமாக பல் துலக்குவது எப்படி என்று பதிவு போட்டால்,

முதலில் பல்லைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த கவிதையோ, சினிமா பாட்டோ எழுதுங்கள்.

பல்லின் முக்கியத்துவத்தை விளக்குங்கள். (பல்லை விளக்குவது அப்புறம்). பிறகு ஸ்டெப்ஸ் எழுதுங்கள்.

1. படுக்கையிலிருந்து எழுந்து கண்ணாடி அருகே செல்ல வேண்டும்.

2. கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்து பல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

3. பிரெஷ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

4. டூத் பிரெஷ்தானா என்று பார்க்க வேண்டும்.

5. நம்முடைய பிரெஷ் தானா என்று பார்க்க வேண்டும்.

6. இப்போது பயன் படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

7. பேஸ்ட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

8. பல் துலக்கும் பேஸ்ட்தானா என்று பார்க்க வேண்டும்.

9. நமக்குப் பிடித்த பேஸ்ட் தானா என்று பார்க்க வேண்டும்.

10. குழாயில் தண்ணி வருகிறதா (அ) மக்கில் தண்ணி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

11. பிரஷை நனைக்க வேண்டும்.

இப்படியாக ஆரம்பித்து உங்கள் அபிமான எண் வரை இழுத்துக் கொண்டு போகலாம். பார்த்தீர்களா எவ்வளவு சுலபமான மேட்டர் எவ்வளவு கஷ்டப்படுத்துகிறது என்று.


இனிமேல் எப்படி பதிவுகள் போடுவதில் உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்காது இல்லையா?

(தொடரும்)

டிஸ்கி:- உங்களுக்கு வேண்டுமென்றால் தொடர்கிறேன். வேண்டாமென்றாலும் தொடர்கிறேன்!!

Tuesday, April 7, 2009

நான் ஏன் பட்டயக் கணக்கனானேன்?

பட்டயக் கணக்கன் என்றால் சார்டர்ட் அக்கவுண்டன்ட் என்று முதலிலேயே தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மிகக்கடுமையான / கொடுமையான படிப்பு என்றால் அது சி.ஏ.வாகத்தான் இருக்க முடியும். அப்படியும் நிறைய மாணவர்கள் இந்தப் படிப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர்.


முதலில் ஒரு ஆடிட்டரிடம் டிரையினிங் சேர வேண்டும். அங்கே நிறைய வேலை இருக்கும். அப்படியே படிப்புக்கும் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். நன்றாக எழுத வேண்டுமென்றால் கோச்சிங் கிளாஸ் போக வேண்டும். பகலிலெல்லாம் வேலை இருக்கும் என்பதால் கோச்சிங் கிளாஸ் காலை ஆறிலிருந்து எட்டு வரையும் மீண்டும் மாலை ஆறரையிலிருந்து ஒன்பது வரையிலும் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஆறு முதல் இரவு எட்டு வரை இருக்கும். (இது 6மாதங்களுக்குத்தான்!)


இதுபோல இன்டர், ஃபைனல் என்று இரண்டு நிலைகள். ஏதாவது ஒரு பேப்பரில் ஃபெயில் என்றால் எல்லாவற்றையும் மீண்டும் எழுத வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு பேப்பரில் அறுபதிற்கு மேல் எடுத்து ஃபெயிலான பேப்பரில் முப்பதிற்கு மேல் எடுத்திருந்தால் அறுபது எடுத்த பேப்பர் மீண்டும் எழுதத் தேவையில்லை.


அது போல பாஸ் மார்க் நாற்பது. அக்ரிகேட் என்று ஒன்று உண்டு. அதாவது ஒரு குரூப்பில் 3 அல்லது 4 பேப்பர் இருக்கும். 3 பேப்பர் ஆனால் மொத்தமாக 150க்கு மேலும் 4 பேப்பரானால் மொத்தமாக 200க்கு மேலும் எடுக்க வேண்டும். 3 பேப்பரிலும் 40,40,40 என்று எடுத்து பாஸ் செய்தாலும் மொத்தமாக ஃபெயில்தான்! மீண்டும் எல்லாம் எழுதவேண்டும்.


இப்படிப்பட்ட தடைகளையெல்லாம் தாண்டி இறைவன் அருளால் ஒரே அட்டெம்ப்டில் பாஸ் செய்து பட்டயக்கணக்கரானதற்கான காரணங்களை இப்போது ஆராய்ந்ததால் எனக்குக் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


1. நான் தூக்கத்தை வெறுக்கிறேன்.


2. என் வாழ்க்கையை நான் சிறுவனாக இருக்கும் போதே மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டேன்.


3. எனக்கு டென்ஷனில்லாமல் வாழப் பிடிக்காது.


4. எனக்கு அமைதியற்ற குடும்பச் சூழல்தான் வேண்டும்.


5. எனக்குப் பிடித்த பொன்மொழி 'கடமையைச் செய், பலனை எதிர்ப் பார்க்காதே'.


6. எனக்கு என் பெற்றோருடனோ, மனைவி, குழந்தைகளுடனோ, சுற்றத்தாருடனோ நேரம் செலவழிக்க விருப்பமில்லை.


7. எனக்கு என்னையே பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டு.


8. என் நண்பர்களிடமிருந்து பிரிந்து விட வேண்டுமென்று எனக்கு ஆவல்.


9. எனக்கு பொது வாழ்க்கையோ, மற்றவர்களோடு பழகுவதோ பிடிக்காது.


10. எனக்கு விடுமுறை நாட்களில் கூட வேலை செய்யவேண்டுமென்று விருப்பம்.


மேலே சொன்னவைதான் நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான சி.ஏ.க்களின் வாழ்க்கை இப்படித்தான் போகிறது. இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

11. எனக்கு பிளாக் எழுத ஆரம்பித்து நிறுத்திவிட வேண்டுமென்ற எண்ணம் உண்டு!!!.

(முதல் பத்தும் சி.ஏ. நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தியின் தமிழாக்கம்).

இதனால் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில் அடிக்கடி வலைப்பக்கத்திலிருந்து காணாமல் போய்விடுவேன்.

அப்பப்ப வருவேன் ஆனா எப்பெப்ப வருவேன்னு தெரியாது!!!

Monday, April 6, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 4

அத்தியாயம் 4 : என் வழி தனி வழி

முடிசூட்டு விழாவிற்குப் பிறகு நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டமும் அதைத் தொடர்ந்த அந்தரங்கப் போட்டியும் வல்லாளனை பெரிதும் அமைதிப்படுத்தின என்றே சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லவொணா மகிழ்ச்சியில் திளைத்தவன் அதற்கடுத்து வந்த நாட்களைப் பெரும்பாலும் அந்தப்புரத்திலேயே கழித்தான். நீலாவின் அன்புக்கணைகளும் சோமேஸ்வரனின் கேள்விக்கணைகளும் அவனை திக்குமுக்காடச் செய்தன. சோமேஸ்வரனின் திறத்தைக் கண்டு இருவரும் அளவிலா ஆனந்தம் எய்தினர். நாட்கள் மாதங்களாக மாதங்கள் காலங்களாக மாறின. காலங்கள் மாறும் போது காட்சிகள் மாறுவதும் இயல்பே. வல்லாளனின் அரங்கத்தில் மாறிய காட்சிகள் சுவையானதாக இல்லை.

மனித மனம் விசித்திரமான ஒன்று. மகிழ்ச்சியாக இருக்கும் போது அது பறந்து விரிந்திருக்கும். வேதனையோ துன்பமோ வருங்கால் சுருங்கிவிடும். உண்மையில் சோதனைக்காலத்தில்தான் மனம் மிக விரிவடைய வேண்டும். முதல் வகை மனம் தோல்வியடைபவர்களுக்குச் சொந்தமானது. இரண்டாவது வகை கடினமானது வெற்றியாளர்கள் கைகொள்வது. வல்லாளன் மனம் தற்போது மிகவும் சுருங்கியிருந்தது.

அந்தர மண்டபத்தில் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. இம்முறை சோமேஸ்வரனும் இருந்தான். கூடியவர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் இல்லை. நீண்ட நேரம் யாரும் பேசவும் இல்லை. இவர்களின் தற்போதைய நிலைக்குக் காரணமாக இருந்தது ஒரு பத்திரம் (ஓலை - துணியில் எழுதப்பட்டது).

"இப்படி மோனத்தவம் செய்வதற்காக உங்களை அழைக்கவில்லை என்று எண்ணுகிறேன்" வல்லாளனே ஆரம்பித்தான் எள்ளலுடன்.

"இது குறித்த தங்கள் எண்ணம் சரியே" என்றார் மகாமாத்யர் அதே எள்ளலுடன்.

"வேறெந்த எண்ணம் தவறாகிவிட்டது?" அவரது எள்ளல் புரிந்தும் புரியாதவாறு வினவினான்.

"நாம் இங்கே அமர்ந்திருப்பதன் காரணமும் பத்திரம் பகர்வதும் தங்களின் தவறான முடிவால்" மகாமாத்யர் வயதில் மூத்தவராதலால் அவன் தவற்றை தைரியமாக சுட்டிக்காட்ட முடிந்தது. அவன் பார்வை தாழ்ந்ததும் தொண்டையிலிருந்து எழுந்த சிறு ஹுங்காரமும் அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் அமைந்தது.

"மகாமாத்யரே, புரிகிறது. என்னுடைய முடிவு தான் இன்றைய நிலைக்குக் காரணம். சிறு தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். .?" குரல் சற்று கம்மியிருந்தது.

"மன்னா, இது தவறுதான் ஆனால் குற்றமல்ல. முடிவெடுக்காதவர்கள்தான் தவறு செய்யாமல் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு முடிவெடுத்திருந்தீர்கள் அது இப்போது மாறியிருக்கிறது அவ்வளவுதான். இனி அதைப் பற்றி யோசிக்காமல் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பற்றி பேசுவோம். சேனாபதி சிக்கராயரே, இந்த பத்திரத்தைப் பற்றி தங்கள் கருத்தென்ன?" மகாமாத்யரே தொடர்ந்தார்.

சேனாபதி சிக்கராயனின் பிராயம் சுமார் நாற்பதுக்குள் இருக்கலாம். இதற்கு முன் சிங்கணன் என்பவர் சேனாபதியாக இருந்து செயல்பட்டு வந்தார். அவரது காலத்தில்தான் ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியருடனான போர் நடந்தது. சிங்கணனுக்குப் பின் சிறந்த சேனாபதி அமையாதிருந்தது ஹொய்சள நாட்டின் துரதிருஷ்டம்தான். சிக்கராயன் சிறந்த போர்வீரன்தான் என்றாலும் படை நடத்தும் திறன் குறைவுதான் என்பது தேசத்தின் எல்லை குறைந்து வந்ததிலிருந்தே தெரிந்து கொள்ளும்படியாக இருந்தது. அவன்தான் இப்போது தொடர்ந்தான்.

"நமஸ்காரம். இந்தப் பத்திரம் நமது வட எல்லையிலிருக்கும் தண்டநாயகன் எழுதியது. மாலிக் கஃபூர் படை திரட்டுவதாகவும் அது நம்மைத் தாக்கத்தான் வருகிறது என்பதும் இந்தப் பத்திரத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. சரியான உதவி கிடைக்காத பட்சத்தில் பின் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அதற்குள் தலை நகரத்தை பலப்படுத்த வேண்டுமென்றும் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வழிவகை செய்திட வேண்டுமென்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் முதல் எதிரி மாலிக் கஃபூர்தான் என்பதும் அவனை அழிப்பதுதான் இந்தப் பிராந்தியத்தில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள நாம் எடுக்க வேண்டிய முக்கிய முயற்சி என்பதும் என் தாழ்மையான கருத்து. ஆகவே பாண்டியப் படையெடுப்பிற்கான ஆயத்தங்களை அப்படியே மாலிக் கஃபூரை நோக்கித் திருப்ப வேண்டியது என்பதை மன்னரின் சமூகத்தில் சமர்ப்பித்துக் கொள்கிறேன்"

"இதைப் பற்றிய தங்கள் கருத்தென்ன?" மற்றவர்களை வினவினார் மகாமாத்யர். மற்றவர்களின் கருத்தும் சிக்கராயனது கருத்தோடு ஒத்துப் போனது. மகாமாத்யர் தொடர்ந்தார்.

"இன்றைய நிலையில் மாலிக் கஃபூரை அழிப்பதுதான் நம் முதல் வேலை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மன்னரும் இதற்கு உடன் படுவார் என்றே எண்ணுகிறேன். மன்னா தங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ளலாமா?"

உடனே பதிலிறுக்கவில்லை வல்லாளன். சிறிது நேரம் கழித்து வந்த பதில் மற்றவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

"மகாமாத்யரே, ப்ரதானிகளே, சேனாபதி, நீங்கள் மாலிக் கஃபூரை அழிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆகவே மாலிக் கஃபூரை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை" என்றான் திட்டவட்டமாக.

(தொடரும்)