Monday, April 6, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 4

அத்தியாயம் 4 : என் வழி தனி வழி

முடிசூட்டு விழாவிற்குப் பிறகு நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டமும் அதைத் தொடர்ந்த அந்தரங்கப் போட்டியும் வல்லாளனை பெரிதும் அமைதிப்படுத்தின என்றே சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சொல்லவொணா மகிழ்ச்சியில் திளைத்தவன் அதற்கடுத்து வந்த நாட்களைப் பெரும்பாலும் அந்தப்புரத்திலேயே கழித்தான். நீலாவின் அன்புக்கணைகளும் சோமேஸ்வரனின் கேள்விக்கணைகளும் அவனை திக்குமுக்காடச் செய்தன. சோமேஸ்வரனின் திறத்தைக் கண்டு இருவரும் அளவிலா ஆனந்தம் எய்தினர். நாட்கள் மாதங்களாக மாதங்கள் காலங்களாக மாறின. காலங்கள் மாறும் போது காட்சிகள் மாறுவதும் இயல்பே. வல்லாளனின் அரங்கத்தில் மாறிய காட்சிகள் சுவையானதாக இல்லை.

மனித மனம் விசித்திரமான ஒன்று. மகிழ்ச்சியாக இருக்கும் போது அது பறந்து விரிந்திருக்கும். வேதனையோ துன்பமோ வருங்கால் சுருங்கிவிடும். உண்மையில் சோதனைக்காலத்தில்தான் மனம் மிக விரிவடைய வேண்டும். முதல் வகை மனம் தோல்வியடைபவர்களுக்குச் சொந்தமானது. இரண்டாவது வகை கடினமானது வெற்றியாளர்கள் கைகொள்வது. வல்லாளன் மனம் தற்போது மிகவும் சுருங்கியிருந்தது.

அந்தர மண்டபத்தில் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. இம்முறை சோமேஸ்வரனும் இருந்தான். கூடியவர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல் இல்லை. நீண்ட நேரம் யாரும் பேசவும் இல்லை. இவர்களின் தற்போதைய நிலைக்குக் காரணமாக இருந்தது ஒரு பத்திரம் (ஓலை - துணியில் எழுதப்பட்டது).

"இப்படி மோனத்தவம் செய்வதற்காக உங்களை அழைக்கவில்லை என்று எண்ணுகிறேன்" வல்லாளனே ஆரம்பித்தான் எள்ளலுடன்.

"இது குறித்த தங்கள் எண்ணம் சரியே" என்றார் மகாமாத்யர் அதே எள்ளலுடன்.

"வேறெந்த எண்ணம் தவறாகிவிட்டது?" அவரது எள்ளல் புரிந்தும் புரியாதவாறு வினவினான்.

"நாம் இங்கே அமர்ந்திருப்பதன் காரணமும் பத்திரம் பகர்வதும் தங்களின் தவறான முடிவால்" மகாமாத்யர் வயதில் மூத்தவராதலால் அவன் தவற்றை தைரியமாக சுட்டிக்காட்ட முடிந்தது. அவன் பார்வை தாழ்ந்ததும் தொண்டையிலிருந்து எழுந்த சிறு ஹுங்காரமும் அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் அமைந்தது.

"மகாமாத்யரே, புரிகிறது. என்னுடைய முடிவு தான் இன்றைய நிலைக்குக் காரணம். சிறு தவறு செய்து விட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். .?" குரல் சற்று கம்மியிருந்தது.

"மன்னா, இது தவறுதான் ஆனால் குற்றமல்ல. முடிவெடுக்காதவர்கள்தான் தவறு செய்யாமல் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு முடிவெடுத்திருந்தீர்கள் அது இப்போது மாறியிருக்கிறது அவ்வளவுதான். இனி அதைப் பற்றி யோசிக்காமல் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பற்றி பேசுவோம். சேனாபதி சிக்கராயரே, இந்த பத்திரத்தைப் பற்றி தங்கள் கருத்தென்ன?" மகாமாத்யரே தொடர்ந்தார்.

சேனாபதி சிக்கராயனின் பிராயம் சுமார் நாற்பதுக்குள் இருக்கலாம். இதற்கு முன் சிங்கணன் என்பவர் சேனாபதியாக இருந்து செயல்பட்டு வந்தார். அவரது காலத்தில்தான் ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியருடனான போர் நடந்தது. சிங்கணனுக்குப் பின் சிறந்த சேனாபதி அமையாதிருந்தது ஹொய்சள நாட்டின் துரதிருஷ்டம்தான். சிக்கராயன் சிறந்த போர்வீரன்தான் என்றாலும் படை நடத்தும் திறன் குறைவுதான் என்பது தேசத்தின் எல்லை குறைந்து வந்ததிலிருந்தே தெரிந்து கொள்ளும்படியாக இருந்தது. அவன்தான் இப்போது தொடர்ந்தான்.

"நமஸ்காரம். இந்தப் பத்திரம் நமது வட எல்லையிலிருக்கும் தண்டநாயகன் எழுதியது. மாலிக் கஃபூர் படை திரட்டுவதாகவும் அது நம்மைத் தாக்கத்தான் வருகிறது என்பதும் இந்தப் பத்திரத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. சரியான உதவி கிடைக்காத பட்சத்தில் பின் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அதற்குள் தலை நகரத்தை பலப்படுத்த வேண்டுமென்றும் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வழிவகை செய்திட வேண்டுமென்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் முதல் எதிரி மாலிக் கஃபூர்தான் என்பதும் அவனை அழிப்பதுதான் இந்தப் பிராந்தியத்தில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள நாம் எடுக்க வேண்டிய முக்கிய முயற்சி என்பதும் என் தாழ்மையான கருத்து. ஆகவே பாண்டியப் படையெடுப்பிற்கான ஆயத்தங்களை அப்படியே மாலிக் கஃபூரை நோக்கித் திருப்ப வேண்டியது என்பதை மன்னரின் சமூகத்தில் சமர்ப்பித்துக் கொள்கிறேன்"

"இதைப் பற்றிய தங்கள் கருத்தென்ன?" மற்றவர்களை வினவினார் மகாமாத்யர். மற்றவர்களின் கருத்தும் சிக்கராயனது கருத்தோடு ஒத்துப் போனது. மகாமாத்யர் தொடர்ந்தார்.

"இன்றைய நிலையில் மாலிக் கஃபூரை அழிப்பதுதான் நம் முதல் வேலை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மன்னரும் இதற்கு உடன் படுவார் என்றே எண்ணுகிறேன். மன்னா தங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ளலாமா?"

உடனே பதிலிறுக்கவில்லை வல்லாளன். சிறிது நேரம் கழித்து வந்த பதில் மற்றவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

"மகாமாத்யரே, ப்ரதானிகளே, சேனாபதி, நீங்கள் மாலிக் கஃபூரை அழிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆகவே மாலிக் கஃபூரை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை" என்றான் திட்டவட்டமாக.

(தொடரும்)

12 comments:

சதீசு குமார் said...

தொடர் சுவாரசியமாக இருப்பினும் சற்று நீளம் குறைவு என எண்ணுகிறேன். இன்னும் தொடர்ந்திருக்கலாம்...

SUREஷ் said...

மார்ச் மாதம் பயங்கர பிஸி போல...

SUREஷ் said...

எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது சார். அடிக்கடி வாங்க

SUREஷ் said...

//"மன்னா, இது தவறுதான் ஆனால் குற்றமல்ல. முடிவெடுக்காதவர்கள்தான் தவறு செய்யாமல் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு முடிவெடுத்திருந்தீர்கள் அது இப்போது மாறியிருக்கிறது அவ்வளவுதான்.//


நன்றாக இருக்கிறது தல. கதாபாத்திரம் அவரவர் தகுதிக்கேற்றார்போல பேசுவதும் சரித்திரம் வாயிலாக தனது சிந்தனைகளைப் பதிவு செய்வதும் எழுத்தாளரின் கடமை. கதாபாத்திரத்தின் கருத்தா அல்லது கதாசிரியரின் கருத்தா என்பது வெளிதெரியா வண்ணம் எழுதும்போது ஆசிரியரின் வெற்றியாகிறது.

நீங்கள் வெற்றியாளராய் இருக்குறீர்கள்..

SUREஷ் said...

// சதீசு குமார் said...

தொடர் சுவாரசியமாக இருப்பினும் சற்று நீளம் குறைவு என எண்ணுகிறேன். இன்னும் தொடர்ந்திருக்கலாம்...//


சரித்திரக் கதைக்கு இது நீளம் குறைவுதான். ஆனால் வலைபூவுக்கு..?

புதிதாய் வரும் வலைப்பூ வரும் வாசகருக்கு...? மலைப்பு எழுத்தில் வரும் முன் நீளத்தில் வந்துவிடக்கூடாது தல..

இளைய பல்லவன் said...

//
சதீசு குமார் said...
தொடர் சுவாரசியமாக இருப்பினும் சற்று நீளம் குறைவு என எண்ணுகிறேன். இன்னும் தொடர்ந்திருக்கலாம்...
//

வாங்க சதீசுகுமார்,

சுரேஷின் கருத்துதான் என் கருத்தும். இருந்தாலும் அலுப்பு தெரியாத நீளத்தை அதிகரிக்க முயற்சிக்கிறேன்.

இளைய பல்லவன் said...

//
SUREஷ் said...
மார்ச் மாதம் பயங்கர பிஸி போல...
//

ஆமாம் சுரேஷ்,

இது ஆகஸ்ட் வரை தொடரும்.:((

இளைய பல்லவன் said...

//
SUREஷ் said...
எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது சார். அடிக்கடி வாங்க
//

ஆமாம்.

இனிமே இவ்வளவு கேப் இருக்காது என்று நினைக்கிறேன்.

ரொம்ப தேங்க்ஸ்.

இளைய பல்லவன் said...

//
SUREஷ் said...
நீங்கள் வெற்றியாளராய் இருக்குறீர்கள்..
//

இதற்கு உங்களைப் போன்றோரின் ஊக்கம்தான் காரணம் என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது!

நான் ஆதவன் said...

வழக்கம் போல் சுவாரஸியமான அத்தியாயம்.

இதையாவது தொடர்ந்து விடாம எழுதுங்க...சரியா?

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் said...
இதையாவது தொடர்ந்து விடாம எழுதுங்க...சரியா?
//

அப்படியே ஆகட்டும் ஆதவனாரே!

Anonymous said...

12