Wednesday, July 29, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 11

அத்தியாயம் 11: திட்டம்


மாலிக் கஃபூர் என்ற பெயர், காஞ்சிக் கடிகையின் சிறந்த மாணாக்கர்களையே கவலையும் சந்தேகமும் கொள்ளச் செய்ததென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மாலிக் கஃபூரின் அட்டூழியங்களை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். தக்காணமும் அங்கிருந்து அபகரிக்க நினைத்த அதன் அபரிமிதமான செல்வமும் அவனை மேலும் கொடூரமானவனாக்கியிருந்தது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் தென் தமிழகம் வரை வரமாட்டான் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சுந்தர பாண்டியன் அவனை தாம்பூலம் வைத்து அழைக்காத குறையாக அவனை வரச்செய்தது அவர்களை சற்று கலக்கமுறச் செய்தது.

"இன்று நாம் கூடிப் பேசுவது போல் இனியும் சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது சந்தேகம் தான். ஆகவே அனைவரும் கவனமுடன் கேளுங்கள். இப்போதைய தக்ஷிண பாரத நிலையைத் தெளிவாகச் சொல்கிறேன். மாலிக் கஃபூருக்கு ஆந்திரத்தில் பெரிதாக ஒன்றும் சிக்காது. அவனது கவனம் முழுவதும், ஹொய்சளத்திலும், பாண்டிய தேசத்திலும்தான் இருக்கிறது. அவனது முதல் திட்டம், ஹொய்சளர்களைத் தாக்கி அங்கே நிலை பெற்றுப் பின் தமிழகத்தைத் தாக்குவதென்பது.

ஆனால் சுந்தரன் வலுவற்ற தமிழகத்தைக் காட்டி அவனை முதலில் இங்கே இழுக்கிறான். மாலிக் கஃபூரும் இன்றைய நிலையை நன்கு அறிந்திருப்பதால் அதற்குச் சம்மதம் தெரிவித்து இங்கு வருகிறான். வருபவனுக்கு நாட்டைப் பிடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. அவனது முதல் திட்டம் இங்கிருக்கும் கோவில்களின் சொத்துக்களை அபகரிப்பதுதான். அத்தகைய செல்வங்களை நாம் சற்றும் விட்டுத்தரக்கூடாது. அதற்கான மாற்றுத் திட்டத்தைத்தான் இங்கே வரைந்திருக்கிறேன். சற்று கவனமாகப் பாருங்கள்.
(இது அன்றைய தென்னிந்தியாவின் வரைபடம். 1 என்ற இடத்தில் மாலிக் கஃபூர் இருக்கிறான். 2 ஹொய்சளர்களின் தலை நகரம். 3 திருவரங்கம். 4 மதுரை. தென் இந்தியாவின் நடுவே இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை. சற்றுப் பிரிந்து கிழக்கே செல்வது கிழக்குத் தொடர்ச்சி மலை.)

மாலிக் இருக்கும் இடத்திலிருந்து தமிழகத்திற்கு மேற்கு மலைத் தொடரின் கிழக்குப்பகுதி வழியாக நேரே வந்துவிடலாம். அங்கே அவனுக்கு ஹொய்சளர்களின் எதிர்ப்பிருக்காது. நேராக அவன் இறங்குமிடம் கொல்லிமலைப் பகுதிதான். அங்கிருந்து மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையை அவன் அடைவான். அங்கே இருப்பது திருவெள்ளரையும், திருவரங்கமும். திருவரங்கத்தில் இல்லாத செல்வங்கள் இல்லையல்லவா? அதைக் கவர்வது அவன் நோக்கம். அதற்குப் பிறகு நேராகக் கீழே இறங்கி மதுரையைக் கைப்பற்றி பிறகு வடக்கே திரும்பி ஹொய்சளர்களைத் தாக்கிவிட்டு வடதேசம் திரும்புவதுதான் அவன் உத்தேசம். இந்த வகையில் அவன் மேற்குத் தொடர்ச்சி மலையை ப்ரதக்ஷிணமாக வருவான்" என்று அவன் போகும் பாதையை வரைபடமிட்டுக் காட்டினார்.

"உங்களுக்கு மாலிக் கஃபூரின் திட்டம் இவருக்கு இவ்வளவு தெளிவாகத் தெரியவந்தது எப்படி?" இளவழுதி வினவினான் சந்தேகத்தோடு.

"எனக்கு அவன் திட்டம் இதுதான் என்பது தெரியாது. அவன் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் செய்வேன். ஏனென்றால் அருகிலிருக்கும் வலுவான எதிரியை விட தூரத்திலிருக்கும் வலுவில்லாத எதிரியை அழிப்பது சுலபம். அந்த வெற்றி தரும் போதையும் உற்சாகமும் வலுவான எதிரியை நன்றாக எதிர் கொள்ளத் தயார் படுத்தும் மேலும் இந்த வெற்றி வலுவான எதிரியிடம் சற்று பயத்தையும் ஏற்படுத்தும்" என்று விவரித்தார் விக்ரமர். அவரது வாதம் ஏற்கத்தக்கதாக இருந்தது.

"சரி இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். விரைவிலேயே நாம் மதுரையை அடைய வேண்டியதிருக்கும். வழியில் உங்கள் கொல்லிமலைப் படையையும் அழைத்துக் கொள்வோம். மதுரை நம் வசம் வந்துவிட்டால் மாலிக் கஃபூரை எளிதில் திருப்பி விடலாம்." என்று விவரிக்கத் தொடங்கினார்.

"மதுரையை நாம் தாக்குவது நாம் சுந்தரனுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது" என்று சுட்டிக்காட்டினான் வீரபாண்டியன்.

"உண்மைதான் வீரா. ஆனால் ஒப்பந்தத்தை முதலில் முறித்தவன் அவன்தான். மாலிக் கஃபூரை வரவழைத்ததன் மூலம் நமக்கும் ஆபத்தைத் தேடித்தந்திருக்கிறான். ஆகவே நம் மீது தவறொன்றுமில்லை. இத்துடன் நாம் கலைகிறோம். மாராயரே நீங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் இங்கிருக்கும் படைகளைத் தயார் படுத்த வேண்டும். இளவழுதியும் தேன்மொழியும் கொல்லி மலைக்குச் சென்று அங்கிருக்கும் படைகளுடன் திருவரங்கத்தில் தங்கியிருக்க வேண்டும். வீரபாண்டியனும் நானும் படைகளுடன் கிளம்பியதும் நீங்களும் கயல்விழியும் இங்கே தங்கியிருந்து அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளலாம்" விக்ரம பாண்டியனின் வியூகம் மளமளவென வெளிவந்தது.

அவ்வளவு பரபரப்பான விஷயங்களைப் பேசிய போதும் வாயே திறக்காத மாராயர் இறுதியாக "இந்தப் படையெடுப்பின் நோக்கம் மதுரையைக் கைப்பற்றுவதாகத் தெரியவில்லை. தமிழகத்தை பலவீனப்படுத்துவது போல் இருக்கிறது. இதன் மூலம் மாலிக் கஃபூருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பையும் நாம் அகற்றி விடுகிறோம்." என்று தெளிவாகப் பேசினார். விக்ரமனின் முகத்தில் மந்தகாசம் பூத்தது.

"மாராயரே, இப்போது நடக்கப் போவது தர்மயுத்தமல்லை. ஏன் எப்போதுமே யுத்தம், தர்மமல்லை. யுத்ததர்மமென்பதும் எதுவுமில்லை. இதன் தாக்கத்தை நான் சொல்வதை விட நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்வது நலம். இப்போது இதற்கு மறுப்புத் தெரிவிக்காது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்." இப்படி விக்ரமர் சொல்லும் போதே இளவழுதிக்கு சக்கர வியூகம் நினைவிற்கு வந்தது. அவன் கண்கள் மின்னின. அதை கவனிக்கத் தவறாத விக்ரமர் அவனைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

"அவ்வாறே ஆகட்டும். மேற்கொண்டு காரியங்களைப் பார்ப்போம்" என்று மாராயர் முடிக்க அவை மீண்டும் கலைந்தது.

அன்று முதல் வீரதவளப்பட்டணத்தில் போர் ஆயத்தங்கள் அதிகமாயின. அரசு நிறுவி சில திங்களுக்குள்ளாகவே போர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எங்கே செல்லப் போகிறோம் என்பது எந்த போர் வீரனுக்கும் தெரியாது. ஏன் தளபதிக்கே தெரியாது...


(தொடரும்)

Monday, July 27, 2009

இலவசம்..இலவசம்...சினிமா கதை இலவசம்..

சினிமாவிற்குக் கதை எழுத வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே உண்டு. ஆனால் காசு கொடுத்து யார் நம் கதையைக் கேட்பார்கள்:((?

ஆகவே சினிமா எடுக்கத் தேவையான கதைகளை இலவசமாகக் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கான காபிரைட் ஒன்றும் செய்யவில்லை. எக்கச்சக்க வெரைட்டியான கதைகள் உள்ளன. இதை யார் வேண்டுமானாலும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு எந்த மாதிரி கதை வேண்டுமோ சொல்லுங்கள். விரைவில் பதிவேற்றப்படும்.


கீழ்கண்ட விவரங்களை மட்டும் தாருங்கள். உடனடியாகக் கதை ரெடி...

1. கதை டைப் (சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர், ராஜாராணி, பக்தி...)
2. பட்ஜெட்
3. ஹீரோ, ஹீரோயின் (ஆப்ஷனல்)
4. லொக்கேஷன்
5. ஸ்டோரி லைன்

திரைக்கதை வேண்டுவோர் ஸ்பெஷலாகச் சொல்லலாம்...


வாங்க வாங்க வந்து அள்ளிக்கிட்டு போங்க..


பொன்னான வாய்ப்பைத் தவற விடாதீர்கள்...

பின் குறிப்பு:- இதில் வரும் கதைகள் இதற்கு முன்னரோ, பின்னரோ, தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுகு, ஒரியா, துளு, போன்ற இந்திய மொழிகளிலோ, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அன்டார்டிகா, அலாஸ்கா, அஸ்கா, டாங்கோ, காங்கோ, மாங்கோ, ஜப்பான், ஆகிய உலக மொழிகளிலோ வந்திருந்தால் நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல.

பின் குறிப்பிற்கு பின் குறிப்பு:- இது காமெடி அறிவிப்பு அல்ல

பி.கு.பி.கு.பி.கு:- ஆனால் அறிவிப்பு காமெடி ஸ்டைலில் செய்யப்படுகிறது.

(பி.கு.)பவர் 4:- கதை எழுதும் உரிமை ஆசிரியருக்கே.

(பி.கு.)பவர் 5:- இந்த ஆஃபர் குறுகிய காலத்திற்கு மட்டுமே.

(பி.கு.)பவர் 6:- இத்துடன் பி.கு. நிறுத்தப்படுகிறது

Saturday, July 25, 2009

ஃபைனல் இன்டர்வியூ

கடந்த ஆறு மாதமாக முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. இந்த முறைதான் ஃபைனல் இன்டர்வியூ வரை வந்திருக்கிறது. இப்போதும் முழுமையான திருப்தி இல்லைதான் என்றாலும் இது வரை வந்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்லக்கூடியவாறு இருப்பதுதான் ஹை லைட். சம்பள விவகாரம்தான் இழுத்தடிக்கிறது.

'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.

தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.

அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.

விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.

அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.

அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.

'குட் மார்னிங்க்' என்றேன்.

'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.

சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,

'சொல்லுங்க.. ' என்றார்.

'நீங்கதான் சொல்லணும்' - நான்.

'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,

'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.

மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்.

'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'

'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.

'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.

ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.

மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.

சிறுகதை, ரிப்பீட்டு

வானவில் 26.07.2009

அன்பு நெஞ்சங்களே! மீண்டும் ஒரு வானவில் பதிவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

====

1. மேட்டூர் விரைவாக நிரம்புகிறது என்பது மகிழ்ச்சிதரும் செய்தி. கே.பி.ஆரும், கபினியும் எஃப். ஆர். எல்.ஐ தாண்டிவிட்டதால், பெரியமனது பண்ணி தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள்.
இந்தத் தண்ணீர் வருவதைக் கருத்தில் கொண்டு மேட்டூரைத் திறந்து விட்டால், ஆடியிலேயே சம்பா சாகுபடியாவது டெல்டாவில் முழுமையாக நடக்கும் என்று நம்பலாம். இன்றைய செய்தித்தாளில் ஆடிப்பெருக்கைக் கருத்தில் கொண்டு மேட்டூர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இல்லையேல் சம்பாவும் சம்போதான்.

=====

2. கடந்த வாரம் மும்பை சென்றிருந்த போது அங்கு நல்ல மழை பெய்தாலும் அங்கிருந்தவர்கள் இந்த முறை மழை குறைவுதான் என்றார்கள். பி.எம்.சி. மராமத்துப்பணிகளை நன்றாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் அங்கே வெள்ளம் தேங்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, டிராஃபிக் ஜாம் ஆகி, லோக்கல் டிரெயின்கள் நின்றால்தான் நல்ல மழையாம்! அப்படி ஆனால் உடனே பி.எம்.சியைப் பிடித்து ஏறி விடுவார்கள்.

முன்னால் போனால் முட்டும், பின்னால் வந்தால் உதைக்கும்!!

====

3. போரூர் சந்திப்பு மிகக் குறுகலான ஒன்று. அதனாலேயே பெரும்பாலான சமயங்களில் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். கத்திப்பாராவிலிருந்து போரூர் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து போரூர் வரையிலும், நான்கு வழிச் சாலை ஆகிவிட்டாலும், போரூர் ஜங்க்ஷன் சிறியதாகையால் ஜாம் தொடர்கதையாகிவிடுகிறது. இதைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்றும் ஆனால் வேலைதான் துவங்கவில்லை என்றும் சொன்னார்கள். நேற்று அந்தப் பகுதி கவுன்சிலர் பெண்மணி ஒருவர் ஒலிபெருக்கி மூலம் அனைவரையும் கையெழுத்து இயக்கத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலானோர் தன்னார்வத்துடன் கையெழுத்திட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

நல்லது செய்து நல்லது நடந்தால் நல்லதுதானே!!

====

4. இன்றுள்ள நிலைமையில் சென்னையைத் தாண்டி சிங்கப்பெருமாள் கோவில், மரக்காணம், ஸ்ரீபெரும்புதூர் என்று மெகா ஹவுசிங் பிராஜக்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டிடத்தின் வரைபடங்களும் பிரமிப்பூட்டுகின்றன. ஆனால் எந்த அளவுக்கு இவை வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதில் இன்வெஸ்ட் செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் உண்மையிலேயே ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் மதிப்பு உயரலாம். எப்போது என்பது கேள்வி...

வருவது வரும் போவது போகும். வருவது போகாது. போவது வராது!!

===

5. நங்க நல்லூர் பகுதியில் புதிததாக உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. நங்க நல்லூர் பேருந்து நிலையத்திற்குள் செயல்படுகிறது. பெரும்பாலும் மகளிர் சுய உதவிக் குழுவினர்தான் இதில் கடை வைத்துள்ளனர். மற்ற உள்ளூர் கடைகளை விட மிக மலிவான விலையில் கிடைக்கிறது. உண்மையிலேயே நல்ல முயற்சி. ஒரே குறை. சிறியதாக இருப்பது.

சிறுகக்கட்டி பெருக வாழ வேண்டும்!

===

6. ஆடித்தள்ளுபடி அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதிய விஷயமாக ஒரு பிராண்டட் சர்ட் வாங்கினால் இரண்டு இலவசம் என்ற அதிரடித் திட்டத்தை முதலில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் துவக்கியது. அவர்கள் சியாராம் பிராண்டு சர்டுகளை அளித்தனர். இப்போது சரவணா செல்வரத்தினத்தில் பீட்டர் இங்க்லாண்ட், லூயி பிலிப் கூட இந்தத் திட்டத்தில் அளிக்கிறார்கள். அப்போது இது வரை எம்.ஆர்.பி.யில் வாங்கியவர்கள் எல்லாம் கே...களா??

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் உண்டு.

====

7. சிறப்புக் கவிதை எழுதாவிட்டால் அது இந்த மாதிரிப் பதிவுகளின் இலக்கணத்தை மீறிய செயலாகும். அதை நான் விரும்பாததால் ஒரு கவிதை.

காலை முதல் மாலை வரையிலும்
மாலை முதல் காலை வரையிலும்
எப்போது பார்த்தாலும்
எங்கு பார்த்தாலும்
நீ
புதிதாகவே இருக்கிறாய்...

====

மீண்டும் மற்றுமொரு வானவில்லில் சந்திப்போம்.

வானவில்

Wednesday, July 22, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 10

வீரதவளப்பட்டிணத்தின் அரண்மனையில் நடைபெற்ற விருந்திற்குப் பிறகு மேல்மாடத்தில் நடைபெற்ற பிரத்யேக சந்திப்பில் சில வித்தியாச நிகழ்வுகளை இளவழுதி எதிர்பார்த்தான் என்றாலும், பேச்சு துவங்கிய உடனேயே தன் தங்கையை பெண் கேட்பார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. வீர பாண்டியனுக்கும் கயல்விழிக்கும் இருந்த நெருக்கம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. துடிப்பான பெண்ணானதால் கயல்விழியிடம் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. தந்தையின் பதிலுக்காகக் காத்திருந்தான். இத்துணைக்கும் வீர பாண்டியனும், கயலவிழியும் ஒருவரையொருவர் பார்ப்பதைத் தவிர்க்க பிரம்மப்பிரயத்தனப்பட்டனர்.

மாராயர் உடனடியாக சுதாரித்துக் கொண்டவராய், "நாங்கள் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அரச குலத்தைச் சேராதவர்கள் அரியணை ஏறுவது மரபும் அல்ல" என்றார்.

"மரபுகள் காலத்தின் பாற்பட்டவை. நேற்று சரியான ஒன்று இன்று தவறாகிறது. நேற்று தவறான ஒன்று இன்று சரியாகிறது. அரச குலத்தோர்தான் ஆள வேண்டுமென்றால் புதிய அரசுகள் என்றும் ஏற்பட்டிருக்காது. காலத்தோடு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே உங்கள் நிலை இன்றைய நிலையில் ஏற்கத்தக்கதல்ல. இதைத் தவிர வேறு ஆட்சேபணை ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறேன்." என்று மாராயரது சம்மதத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்ட விக்ரமர், "நீ என்ன சொல்கிறாய் கயல்விழி?" என்று கயல்விழியை இழுத்தார்.

இயல்பிலேயே மிகவும் துணிச்சல்காரியான கயல்விழி, திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் பெண்ணிற்குரிய நாணம் மேலோங்கிவிட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாலும் விரைவிலேயே சுதாரித்துக் கொண்டாள். "அய்யா, நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது. நீங்களும் தந்தையும் எங்கள் நன்மையை முன்னிட்டே எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை பரிபூரணமாக என்னிடம் இருக்கிறது." என்றாள். அவளது சொற்கள் அனைவரையும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்தன.

"மாராயரே, கேட்டீர்களா உமது புதல்வியின் பதிலை. எவ்வளவு தந்திரத்துடன் பாரத்தை நம் மீது சுமத்திவிட்டாள். இவளைத் தவிர இந்த அரண்மனையின் தலைவியாக இருக்க யாருக்கு அருகதை இருக்கிறது. இனியும் தாமதிப்பது தவறு என்றே நினைக்கிறேன்." என்றார் விக்ரமர்.

"உண்மைதான் விக்ரமரே, தாமதிப்பது தவறுதான். நடப்பவை யாவும் நன்மைக்கே. விரைவிலேயே திருமணம் முடித்துவிடலாம். திருவெள்ளரை புண்டரிகாக்ஷனும், மதுரை மீனாக்ஷியும் அருள் புரிந்துவிட்ட பிறகு அதைத் தடுக்க நாம் யார்?" எனச் சொல்லியவாறே, "கயல்விழி, உன் நம்பிக்கை வீண் போகவில்லையல்லவா?" புன்னகையுடன் வினவினார்.

கயல்விழியும் சளைக்காமல்,"என் நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லையப்பா" என்றாள். திருமணப் பேச்சு முடிந்த விதம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேன் மொழி, கயல்விழியை வெளிப்படையாகப் பாராட்டவும் செய்தாள்.

"நல்லது. அறவியலில் நல்ல முடிவு கண்டோம். இனி மறவியலைப் பற்றி பார்ப்போம், குறிப்பாக தமிழக நிலவரம், ஹொய்சளர்கள், முகமதியர்கள், மாலிக் கஃபூர்.." எல்லாரது கவனமும் விக்ரம பாண்டியரின் பேச்சை நோக்கித் திரும்பியது. அவர் ஒவ்வொன்றாக விவரிக்க நிலை அவ்வளவு நன்றாக இல்லை என்பது அனைவருக்கும் புலனாயிற்று. "ஆக எனக்கு வந்த தகவல்களின் படி சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூரை மதுரைக்கு அழைத்துள்ளான்.."

"இனி நம் பணி என்ன?" வினவினான் இளவழுதி.

"சுந்தர பாண்டியன் தரம் தாழ்ந்து விட்டான். மதுரையைக் கைப்பற்றுவோம். அதற்கான பணிகள் உடனே துவங்க வேண்டும். நாலை பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நாம் சந்திப்போம் அப்போது இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என் திட்டத்தையும் சொல்கிறேன். இப்போதே இரவு நீண்டுவிட்டது. இனி நாம் உறங்கச் செல்ல வேண்டியதுதான்"

அன்றைய பல்வேறு நிகழ்வுகள் அனைவரையும் சற்று அதிக ஆயாசப்படுத்தியிருந்தன. மறுப்பேதும் சொல்லாமல் அனைவரும் தங்கள் படுக்கையறை திரும்பினர். ஆனால் ஒருவரும் உறங்கவில்லை.

=====

மறு நாள், பகலுணவுக்குப் பின் மீண்டும் அந்த மேல் மாடத்தில் அனைவரும் கூடிய போது அவர்களிடத்தில் சற்று தெளிவு பிறந்திருந்தது. வீர பாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர், தேன் மொழி, கயல்விழி, இளவழுதி என்ற வரிசையில் சக்கர வட்டமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் ஒரு சீலையில் வரைபடம் அமைக்கப் பட்டிருந்தது. அது தென் தேசத்து வரைபடம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அதில் மதுரை, ஸ்ரீரங்கம், வீரதவளப்பட்டணம், காஞ்சீபுரம், ஹொய்சளர்களின் தலை நகரமான தொர சமுத்திரம் முதலிய இடங்கள் குறிக்கப்பெற்றிருந்தன. அவற்றை இணைக்கும் ராஜ பாட்டைகளும், முக்கிய மலைப் பகுதிகளும் ஆறுகளும் வரையப்பட்டிருந்தன. தொர சமுத்திரத்திற்கு வடகிழக்கில் ஒரு பகுதியில் பிறைவடிவக் குறி அமைக்கப்பட்டிருந்தது. அனைவரது கவனமும் அந்தச் சீலையின் மீதே இருந்தது.

ஒரு முறை மெதுவாகக் கனைத்துக் கொண்ட விக்ரமர், " இந்தச் சீலையில் இருப்பது தக்ஷிண பாரதத்தைக் குறிக்கும் படம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது முக்கியமாக மதுரை குறிவைக்கப்பட்டுள்ளது. ஆதி காலம் தொட்டு தமிழகத்தில் எத்தனையோ அரசுகள் இருந்தாலும், தலை நகரங்கள் இருந்தாலும், மதுரை மட்டும் என்றும் அழியாமல் இன்று வரை இருந்து வருகிறது. அந்த மதுரைக்குத் தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இன்றைய நிலையில் தென் தேசத்தில் ஆந்திரம், ஹொய்சளம், கேரளம், தமிழகம் என்று அரசியல் பிளவுபட்டிருக்கிறது. இதில் ஆந்திரத்தில் காகதீயர்கள் நிலை பெற்றுவிட்டார்கள். அவர்கள் வம்புச் சண்டைக்கும் செல்வதில்லை, வந்த சண்டையையும் விடுவதில்லை. அவர்களால் இப்போது நமக்குப் பிரச்சனையில்லை. கேரளத்தில் வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மனை ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் வீழ்த்திய பிறகு அங்கிருந்தும் தொல்லை ஏதுமில்லை. ஆனால் ஹொய்சளர்கள் அப்படியில்லை. அவர்கள் ஒரு பெரும் சக்தியாக உருவாகப் பார்க்கிறார்கள். காகதீயர்களை வெற்றி கொள்ள முடியாததால், தமிழகத்தை நோக்கித் திரும்ப நினைக்கிறார்கள். தற்போது மிக பலவீனமாக இருக்கும் தமிழகத்தைத் தாக்கினால் சேதம் அதிகமின்றி அதைக் கைப்பற்றி விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆகவே நமது எதிரி நமக்கு நேர் வடக்கே இருக்கிறான். அவன்தான் வல்லாளன்" என்று தொர சமுத்திரத்தை நோக்கி தனது குறுவாளைக் காட்டினார் விக்ரமர். "இவனின்றி இன்னொருவனும் அவனருகே இருக்கிறான். அவன் இங்கே இருக்கிறான்" என்று பிறையிட்ட இடத்தைக் காட்டவும் செய்தார்.

"அது.."

"மாலிக் கஃபூர்"

"நினைத்தேன்" ஒரு சேரச் சொன்னார்கள் வீர பாண்டியனும், இளவழுதியும்.

"அவனை நிறுத்தி திசைதிருப்புவதுதான் நமது நோக்கம்" விக்ரமர் சொன்னது நடக்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்தது.

(தொடரும்)

Monday, July 20, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . ௫

திரைக்கதை எழுதுவது என்பது வெறும் கதையை சொல்லும் விதத்தை வரையறுப்பது மட்டுமன்று. அதனோடு, காட்சியமைப்பு, அதன் பின்னணி, அதன் பிற தேவைகள் ஆகியவற்றையும் பட்டியலிடுவதாகும். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் எனினும், நாம் மெதுவாகவும், முழுமையாகவும் அந்தத் தூரத்தைக் கடப்போம்.

திரைக்கதை அமைப்பதன் அடிப்படை முறைகளைப் பற்றி பார்த்து வருகிறோம். இதுவரை, த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் முறையையும், கதா நாயகன் பயண முறையைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். புதிதாக வருபவர்கள் திரைக்கதை என்ற பிரிவில் கோர்க்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இனி, சீக்வென்சிங் தியரியைப் பற்றி பார்ப்போம்.

இந்த முறையை ஃப்ராங்க் டேனியல் என்ற அமெரிக்க திரைக்கதை வல்லுனர் கண்டுபிடித்தார். எட்டு பிரிவுகளாகக் கதையைப் பிரித்து அலசும் முறையை சீக்வென்சிங்க் என்று அறிமுகப் படுத்தினார்.

இதுவரை கூறப்பட்டு வந்த கதா நாயகன் சார்ந்த திரைக்கதை அமைப்பிலிருந்து மாறுபட்டு கதா நாயகனுடன், இரண்டாவது முக்கிய கேரக்டரைச் சுற்றி கதையை அமைக்கும் முறைதான் இந்த சீக்வென்சிங் தியரி. இரண்டாவது கேரக்டரை அவர் "பாண்டிங் கேரக்டர்" (பிணைக்கும் பாத்திரம்) என்று அழைக்கிறார். அது கதா நாயகியாகவும் இருக்கலாம், வில்லனாகவும் இருக்கலாம். அவர்கள் பார்வையிலிருந்தும் கதையைக் கொண்டு செல்லும் போது அதன் விறுவிறுப்பு கூடும் என்பது அவர் கருத்து.

இனி இதன் பிரிவுகளைப் பார்ப்போம். இது மேலே சொன்னது போல் எட்டு பிரிவுகளாக உள்ளது. அமெரிக்க திரைக்கதையாசிரியர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ரீல் (10 முதல் 15 நிமிடங்கள்) ஒதுக்குவார்கள். அவர்களது படம் அதிக பட்சம் 100 நிமிடங்களைத் தாண்டாது. எனவே இந்த ஃபார்முலா அவர்களுக்கு ஒத்து வரும். நமது படங்கள் குறைந்த பட்சம் 150 நிமிடங்களாவது ஓடவேண்டும். அப்போதுதான் படம் பார்த்த திருப்தி ரசிகனுக்கு இருக்கும்!

1. செட் அப் (களப்படுத்துதல்):- த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் முதல் பகுதியான செட்டிங் பகுதி என்று இதைக் கொள்ளலாம். களத்தைத் தெளிவாக விளக்குவது ஒரு படத்தை நன்கு புரிந்து கொண்டு அதில் ஈடுபட உதவுகிறது. கேரக்டர்களை அறிமுகப்படுத்துவது முதலானது இங்கு நிகழ்கிறது. உதாரணமாக, துடிக்கும் கரங்கள் படத்தில், ஜெய்சங்கரின் பிறந்த நாள் விழாவைக் காட்டுவார்கள். அவர் மேலே இருந்து பணத்தை அள்ளி வீச அதைப் பொறுக்க வரும் மக்கள் கூட்டத்தில் சிக்கி ஒரு சிறுவன் மரணமடைவதாக வரும். ஆனால் ஜெய்சங்கர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ரஜினியோ கொதித்துப் போய்விடுவார். ஆக இந்த ஒரு காட்சியில் வில்லனையும் ஹீரோவையும் களப்படுத்தி அதன் தாக்கத்தைப் படம் பார்ப்போர் மனதில் விதைத்து விடுகிறார், திரைக்கதை ஆசிரியர்.

2. பிணைக்கும் நிகழ்வு (பாண்டிங் இவண்ட்):- கதையின் போக்குக்கு அடிப்படையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் இருத்தல் வேண்டும். இந்த நிகழ்வு இல்லையெனில் கதை இல்லை. ராமன் வனவாசம் புறப்பட்டது அந்தக் கதையின் துவக்க நிகழ்வு. மஹாபாரதத்தில் அஸ்தினாபுரம் கட்டப்பட்டு அங்கு துரியோதனன் அவமானப்படுத்தப்பட்டது பிணைக்கும் நிகழ்வு. ஆக பிணைக்கும் நிகழ்வுகள், ஒரு கதையின் அடித்தளமாக இருக்கின்றன. அந்த நிகழ்வுகளை எந்த அளவுக்குத் தனிமைப்படுத்தி ஸ்பெஷலாகக் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு திரைக்கதை சிறப்பாக அமையும்.

3. எதிர் வினை:- கதா நாயகனின் இமேஜ் உயர வேண்டுமென்றால், வில்லனின் திறமையும் அதிகமாக இருக்க வேண்டும் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். ஆக எதிர்வினை (அட்டாக்கிங் ஃபோர்ஸ்) பற்றிய பகுதி மிகத் தரமாகச் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். பயங்கரமாக உருவகப் படுத்திக் காட்டுவதோ, கொலை, டார்ச்சர் போன்றவற்றைக் காட்டுவதோ அருவருப்பை ஏற்படுத்தலாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வில்லனை கேரக்டரைஸ் செய்யலாம். ஒவ்வொரு படத்தின் கதைக்கேற்ப இதன் அளவை நிர்ணயிக்க வேண்டும்

4. மோதல் நிகழ்வு (லாக்கிங் இவண்ட் ):- மோதல் என்பது ஹீரோவுக்கும் இரண்டாம் கேரக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலாகக் கொள்ள வேண்டும். இங்குதான் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அதுவரை அமைதியாகச் சென்று கொண்டிருந்த படம் இங்கே வேகமெடுக்கிறது. உதாரணமாக, வில்லனுடன் ஏற்படும் சவாலான நிகழ்வை சுட்டலாம்.

5. உச்ச நிகழ்வு (எஸ்கலேடிங் இவண்ட்):- பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை வரவைக்கக் கூடியதான நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்க வேண்டும். ஹீரோ கேரக்டரைசேஷன், அவன் எதையும் தாங்குபவனாகவும், தனக்குக் கெடுதல் செய்பவரையும் மன்னித்தருள்பவனாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும். அத்தகைய அமைதிப்பூங்காவே, எரிமலையாகக் குமுற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்ட வேண்டும். இப்படியாக வரும் போது திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது. உதாரணமாக, ராமாயணத்தில் சீதையை ராவணன் கவரவில்லை என்றால் அங்கே கதையில்லை. மஹாபாரதத்தில், சூதாடி வனவாசம் செய்த பின்பும் நிலம் திருப்பித்தராத நிகழ்வு இல்லையென்றால் மஹாபாரதப் போர் இல்லை.

6. போராட்டம்:- இது இறுதிப் போர். இதில் கதா நாயகன் முயற்சிகளும் அதைத் தடுக்கும் வில்லனின் செயல்களும் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். முதல் முயற்சியில் கதா நாயகன் தோற்பது போலவும், வில்லன் ஜெயிப்பது போலவும், அதன் பிறகு சுய பரிசோதனை செய்யும் கதா நாயகன் தன்னிடத்தில் இருக்கும் குறைக்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்து மீண்டும் மோதுவது போலவும், இறுதியில் வெற்றி பெறுவது போலவும் அமைப்பது சாலச் சிறந்தது.

7. வெற்றி:- போராட்டத்தில் வெற்றி முக்கியமானது. எல்லோருக்கும் ஹீரோதான் ஜெயிப்பான் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் படம் பார்க்க வருகிறார்கள்? அவன் மற்ற படங்களை விட இங்கே எப்படி வித்தியாசமாக வெற்றி பெறுகிறான் என்பதைப் பார்க்க வருகிறார்கள். அந்த வெற்றி பெறும் நிகழ்வை வித்தியாசமாகக் காட்டுவது அந்தப் படத்தின் வெற்றியையே நிர்ணயிக்கும் என்றால் மிகையல்ல.

8. பரிசு:- வெற்றி பெறுவதுடன் படம் முடிந்துவிட்டால் நன்றாக இருக்காது. அதன் பிறகு அவனுக்குக் கிடைக்கும் பரிசும் அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இருத்தல் வேண்டும். அந்த வெற்றிக்கு ஈடான பரிசே ரசிகனின் நெஞ்சில் நிலைத்திருக்கும். வில்லனைத் தோற்கடித்த பிறகு அவனது மகளை மணந்து கொள்ளுதல். அவனிடமிருந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அவர்களது அன்புக்குப் பாத்திரமாதல், புதிய பதவி, அங்கீகாரம் ஆகியவை பரிசுகளாக இருக்கலாம்.

இப்படியாக கதையைத் துருவித் துருவி அலசி ஆராய்ந்து அக்கு வேறாகப் பிரித்து அமைக்கும் போது அது வெற்றிப்படத்துக்கான திரைக்கதை ஆகிறது.

இந்தப் பகுதி சற்றே தொழில் நுட்பம் சார்ந்தது. நாம் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவது. ஆகவே, இதை நன்றாக நெஞ்சில் நிறுத்துங்கள். உங்கள் சந்தேகங்கள், கருத்துகள் ஆகியவற்றை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, July 18, 2009

பதிவுலகில் பரிணாமம்

அடிப்படைப் பொருட்களின் மாற்றமே பரிணாமம் எனப்படுகிறது. பரிணாமம், வளர்ச்சி என்ற பொருளில் அறியப்பட்டாலும், எல்லாப் பரிணாமங்களும் வளர்ச்சியல்ல. பரிணாமத்தின் அடிப்படை - சர்வைவல் ஆகும். நாம் வாழ்வதற்காக நம்மை மாற்றிக்கொள்வது பரிணாமம். மாற்றம் என்பது வலியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வு.

இப்போதும் பதிவுலகில் ஒரு பரிணாமம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இது வலியைத் தரத்தக்கதாக இருக்கிறது. வேண்டாதவற்றை நீக்கியும், தேவையானதை நோக்கியும் ஒரு பயணம் நடக்கிறது.

ஒரு பக்கம் விருது கொடுத்து அதைப் பலருக்கும் கொடுக்கச் செய்து, அன்புச் சங்கிலி வலுவாக்கப்படுகிறது. மறு பக்கம், வினை, எதிர்வினை, செய்வினை என்ற வகையில் அந்தச் சங்கிலியை வலுவிழக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இடையில் அனானிகள் புகுந்து செய்யும் அட்டகாசம் எறியும் நெருப்பில் எண்ணையை வார்ப்பது போன்று இருக்கிறது.

தினமும் பார்த்து பழகி ஆண்டாண்டு காலமாக ஒன்றாக இருப்பவர்களிடமே கோபமும், சந்தேககமும் இருப்பது இயற்கை. ஆனால் முன்பின் அறியாது எழுத்துக்களால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ள ஒரு சமூகம் இதையெல்லாம் அறவே நீக்கி எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பை மீறிய எதிர்பார்ப்பு. அனைத்து விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே நம் இயல்பு.

இவ்வாறாக இயல்பை மீறி இருக்கவேண்டிய சூழல்தான் நாம் பரிணாமம் பெற்று அடுத்த நிலைக்குச் செல்லும் மாற்றம். இந்த மாற்றம், மேலே சொன்னது போன்று இயல்பை மீறியதாகவும் வலியுள்ளதாகவும் அமைகிறது.

பரிணாமம் பெற்றவர்கள் அதாவது வலியைத்தாங்கியவர்கள்தான் தொடர்ந்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் மறைகிறார்கள்.

பரிணாம வட்டத்தின் ஆரம்ப ஆரப்புள்ளியிலிருந்து மேல் நோக்கி நகரும் கோடாக இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவை தொடரும். தொடர்வோரும் தொடரலாம்.

இறுதியில் நாம் மீண்டும் அடையும் இடம் ஆரம்பமாகவே இருக்கும். அப்போது யார் இறுதிவரை வந்து ஆரம்பத்தைத் தொடுவார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஆக,

பரிணாமத்திற்கு நீங்கள் தயாரா?
பரிணாமத்தை உணர்கிறீர்களா?

ஆமெனில் இவையும் கடந்து வாழ்வீர்கள். இல்லையெனில் . . .

Thursday, July 16, 2009

சுவாரசியமானவ(ன்)ர்கள்..

தொடர் பதிவுகள் ஒரு விதத்தில் வலைப்பூக்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுவாரசியமான பதிவுகள் விருது ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. எனக்கு சுவாரசியம் என்று பட்டது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும். இதைப் போன்ற விருதுகள் மூலம் பதிவுகள் வெளியே தெரிய வரும்.
எனக்கு இந்த விருதை அளித்திட்ட நான் ஆதவனுக்கு என் நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதுவும் விருது என்றவுடன் நான்தான் முதலில் ஞாபகத்திற்கு வந்தேன் என ஆதவன் சொன்னது மகிழ்ச்சியை அளிக்கிறது. எப்போதுமே ஆதவன் என்னை ஊக்கப்படுத்தியவர்களில் ஒருவர். சக பதிவராக அவரிடம்தான் பேசியிருக்கிறேன். நல்லவர். வல்லவர். எதிலும் முன்னவர். எப்போதும் நம்மவர். ( நீங்க சொன்னா மாதிரி ஒரு ரெண்டு பிட்டு எக்ஸ்ட்ராவாவே போட்டுட்டேன். போதுமா ஆதவன்!!)

இதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் இருக்கிறது. கொடுக்கும் போது கிடைக்கும் சுகமே தனி. ஆகவே அந்த ஆனந்தத்தில் கீழ்கண்டவர்களுடைய பதிவை சுவாரசியமான பதிவாகத் தேர்ந்தெடுக்கிறேன். அதனால் மற்றவை சுவாரசியமானதாக இல்லை என்று ஆகிவிடாது. நமக்குத் தெரிந்தவர்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் இது போன்ற தொடர் பதிவுகளின் நோக்கம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

1. சுரேஷ் (பழனியிலிருந்து):- ஆதவனுக்கு முதலில் என் ஞாபகம் வந்தது போல எனக்கு இவரது ஞாபகம் முதலில் வருகிறது. இவரது 'கனவுகளே' பதிவு கலக்கலான பதிவு. எக்கச்சக்க ஸ்டோரிலைன் வைத்திருக்கிறார். விதவிதமாக எந்திரன், அசல், வேட்டைக்காரன் ஆகிய படங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார். வித்தியாசமான கல்லூரித் தொடர் எழுதி அது உண்மையா இல்லை கற்பனையா என்று நம்மை குழப்புபவர். மருத்துவர் என்பது கூடுதல் தகவல். இவர் உறுப்பினராக உள்ள மருத்துவர்கள் பற்றிய பதிவில் அருமையான தகவல்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள் சுரேஷ் (பழனியிலிருந்து)!


2. இராகவன் நைஜீரியா - லேட்டாக வந்து லேட்டஸ்டாகக் கலக்குபவர். கும்மி இவரது ஸ்பெஷாலிட்டி. சரியான செட்டு சேர்ந்துவிட்டால் போதும். பின்னிப் பெடலெடுத்துவிடுபவர். நண்பர்களைப்பற்றிய பதிவும், தந்தையைப் பற்றிய பதிவும் என்றும் நினைவில் நிற்பவை. என்னைப் போன்ற கணக்கியல்துறையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். வாழ்த்துக்கள் இராகவன் சார்!.


3. குடுகுடுப்பை - இவர் ஆரம்பத்தில் சூப்பராகக் கலக்கிக்கொண்டிருந்தார். ஆணி அதிகம் போலிருக்கிறது. மறுபதிப்புகளாகச் செய்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதைப்பற்றி சிறப்புப் பகுதி அவர் சார்ந்த 'வருங்கால முதல்வர்' பதிவில் படிக்கலாம். அவரது அனுபவங்களும், படைப்புகளும் சுவாரசியமானவை. வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாரே!

4. கோவி.கண்ணன் - பெயர் ஒன்றே போதும். தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பரத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது இவருக்குப் பொருந்தும் என்றால் மிகையல்ல. எதையும் நடு நிலையோடு அணுகுகிறார் என்பது என் எண்ணம். அதுவும் அவரது பதிவுல் உள்ள பெரியார் வள்ளலார் ஓவர்லேப்ட் இமேஜ் தெளிவுற விளக்கும். வாழ்த்துக்கள் கோவியார்!


5. வாத்தியார்:- திரு சுப்பையா அவர்கள் ஜோதிடப்பாடத்தை மிக மிக அழகாக எளிதாக விளக்கி வருகிறார். நடைமுறை சார்ந்த உதாரணங்கள் பாடத்தை மேலும் சுவாரசியமாக்குகின்றன. வாழ்த்துக்கள் அய்யா!

6. என். கணேசன்:- ஒவ்வொரு பதிவும் தத்துவார்த்தமான சிந்தனைகளுடன் கூடியது. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும். நிறைய பாசிட்டிவ்வாக எழுதுபவர். வங்கித் துறையில் பணிபுரிந்துவரும் 'ரெகக்னைஸ்ட்' ரைட்டர்!. வாழ்த்துக்கள் கணேசன்!

சிறந்தவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பது, ஒரு மிகக்க(கொ)டுமையான பணி. முடிந்த வரை செய்திருக்கிறேன்.

மிக்க நன்றி!


(ஏன் இந்தப் பதிவு ஃபார்மல்-ஆக வந்திருக்கிறது என்று தெரியவில்லை!)

Wednesday, July 15, 2009

காமராஜர்

இன்று ஜூலை 15, கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள்.

ஆனால் ஒரு அதிசயம். இன்று அவரது பிறந்த நாளைப்பற்றிய ஒரு பதிவும் வரவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒன்றோ இரண்டோ வந்திருக்கிறது. இந்தப்பதிவு இதைப் பற்றியதல்ல.

எந்த ஒரு பின்புலமுமின்றி தன் முயற்சியால் பெருந்தலைவராக விளங்கி அந்தப் பட்டப்பெயரை (மட்டுமே) உடைமையாக்கிக்கொண்ட பிழைக்கத் தெரியாத அரசியல் வாதி.

இன்று நல்ல நிலையில் இருக்கும் அல்லது படித்த பலரும் அவரது மதிய உணவுத் திட்டத்தாலும், கட்டாயக் கல்வி திட்டத்தாலுமே இந்த நிலைக்கு வந்திருப்பார்கள். ஒரு 'ஜெனரேஷனுக்கே' கல்விக் கண் திறந்தவர்.

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பவர்கள், எம்ஜியார் ஆட்சி அமைப்போம் என்பவர்கள், அந்தத் தலைவர்களைப் போன்று ஏதாவது செய்தோமா என்று யோசிப்பது உண்மையிலேயே நன்மை பயக்கும்.

அத்தகைய கர்மவீரரைப் போன்றவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
.....

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 9

அத்தியாயம் 9 - விருந்து தந்த வியப்பு


புதிய தலை நகரான வீரதவளப்பட்டணத்திற்கு சோபை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த அரச மாளிகையின் முன் முன்றிலில் அன்று இரவு ஒரே களேபரமாக இருந்தது. புதிய விருந்தினர்களை வரவேற்பதற்காக அரசரும், விக்ரம பாண்டியரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புது அரசனான வீர பாண்டியனின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்து கொண்ட விக்ரமர், கயல்விழியின் வருகை பயனளிக்கத் தொடங்கிவிட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

அந்த நகருக்கு வந்த பின் இத்தனை கோலாகலத்துடன் அரண்மனை என்றுமே இருந்ததில்லையாகையால் பணிமக்களும் பேருவகையுடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலை மயங்கியதும் பந்தவிளக்குகள் ஏற்றப்பட்டு தூரத்தே வைக்கப்பட்டன. அவை காற்றால் அணையாதிருக்க அவற்றைச் சுற்றி தகடு அமைக்கப்பட்டிருந்ததால் வெளிச்சம் நேராகப் பாய்ந்தது. அப்படி நேராகப் பாய்ந்தாலும் அருகருகே அவ்வாறான விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் மற்ற இடங்களில் இருட்டு இல்லை. இவ்வாறு தொலைவில் வெளிச்சம் வந்து கொண்டிருக்க அரசரும் அவரது விருந்தினர்களும் அமரும் இடத்தில் அமைக்கப் பெற்றிருந்த இரத்தினக் கம்பளங்களை ஒட்டி நொந்தா விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மூலைக்கொன்றாக நிறுத்தப்பட்டிருந்த பாவை விளக்குகளும் அவற்றின் இரு மருங்கிலும் விதானத்திலிருந்து தொங்க விடப்பட்டிருந்த நொந்தா விளக்குகளும் அந்த முன்றிலை தெளிவுறக்காட்டின. அப்படித் தெளிவாகக் காட்டினாலும், நறுமணம் கருதி போடப்பட்டிருந்த அகிற்புகையானது தன் பணியான நறுமணத்தைப் பரப்பியதோடல்லாமல், அந்த வெளிச்சத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியே அடைந்தது. ஒரு மருங்கில் இசைக் கலைஞர்கள் இன்ப நாதத்தை மீட்டிக்கொண்டிருக்க அவர்களோடு தோற்கருவிக்கலைஞர்களும் மெல்லிய ஒலியெழுப்பிக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் காணவேண்டுமென்ற அவா இருந்தும் பகலவன் தன் பணியை முடித்துக் கொண்ட காரணத்தால் மலைவாயிலில் விழுந்து மறைந்துவிடவே, மறுபுறத்திலிருந்து வான்மதி மெல்ல எட்டிப்பார்த்தது. பகலவன் இல்லாது போகவே அவனைத் தேடிக்கொண்டு மேற்கு நோக்கி நகரத்தொடங்கியதால் ஏற்பட்ட இயற்கை வெளிச்சம் அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கியது. ஆடி மாதமானாலும், தென்றலின் மெல்லிய காற்று குறையாமல் வீசி தன் பங்கைத் தவறாமல் ஆற்றியது.அனைவரும் தரையிலேயே அமர்ந்து உணவுண்ணும் வகையில் சுற்றிலும் வெண்பஞ்சு மெத்தைகளும், திண்டுகளும் அமைக்கப்பெற்றிருந்த விதம் வடக்கே புதிதாக வந்திருந்த சுல்தானியர்களின் விருந்தோம்பல் முறையை ஒத்திருந்ததை அதை அறிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அன்று விருந்தினர்களோடு, முக்கியத் தளபதிகளுக்கும் அமைச்சர்களுக்குமாக சேர்த்தே விருந்து நடைபெறவிருந்தது. ஒவ்வொருவராக வரத்தொடங்கிய முக்கியஸ்தர்களும், விருந்தினர்களும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சென்று அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறு அரசனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்ட நிலையில் விருந்தினர்களும் வந்து அமர்ந்திருக்க, அரண்மனையின் உட்புற ஆலாட்சி மணி மெல்லிய ஒலியெழுப்பி அரசனின் வருகையை அறிவித்தது. விருந்தானாலும், அரசனின் வருகையைக் கருதி கட்டியங்கூறுவோன் பாண்டியர்களது மெய்கீர்த்தியை வாசிக்க புதிய பாண்டிய மண்டலாதிபதியான வீர பாண்டியத் தேவர் எழுந்தருளினார்.

அது அரசவையில்லாததால் மகுடம் தரிக்காமல் தலைக் குழலை தோளின் இருமருங்கிலும் அலைபாய விட்டு, மேலுக்கு ஒரு உத்தரீயத்தை அணிந்து அதன் மேல் இரத்தினங்களால் ஆன இரு ஹாரங்களைத் தரித்தும் நின்ற வீர பாண்டியன், தன் வாளையும் இடையில் கட்டி எடுத்துவந்தது சிலரை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி வியப்பில் ஆழ்த்திய நிகழ்வை நன்றாகக் கவனித்தாலும் கவனிக்காதது போலக் காட்டிக்கொண்ட வீர பாண்டியன், அனைவரையும் அமருமாறு பணித்துத் தானும் அமர்ந்தான். அவனது உத்தரவை எதிர்ப்பார்த்து நின்றிருந்த விக்ரம பாண்டியரை நோக்கி நிகழ்ச்சியைத் துவக்குமாறும் சைகை செய்தான். இவ்வளவிலும், பெண்கள் யாரும் தென்படாததைக் கவனிக்கத் தவறவில்லை. விக்ரம பாண்டியர் பேச ஆரம்பித்ததுமே இசைக்கலைஞர்கள் தங்கள் திறமையைச் சற்று நிறுத்தி வைத்தனர்.

அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்த விக்ரம பாண்டியர், "அன்பர்களே, இந்த இனிய மாலைப் பொழுதினிலே, இங்கு கூடியிருக்கும் உங்களுடன் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. பாண்டிய தேசத்துப்புகழ் தென் தமிழகத்திலேயே தங்கிவிடாமல், வட தமிழகம் வரை வந்திருப்பது அது மேலும் விருத்தியடைவதற்கான ஹேதுவாகவே நாம் கருத வேண்டும். இனிய இந்த நேரத்தை அரசியல் பேசிக் கழிக்க விரும்பவில்லை. இந்த அரசு அமைந்ததற்குப் பிறகு நடத்தப் பெறும் இந்தப் பெரிய விருந்தோம்பலை நீங்கள் அனைவரும் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இனி நர்த்தனமும் அதைத் தொடர்ந்து பாரதக் கூத்தும் நடைபெறும். அனைவரும் உண்டும் கண்டும் களிக்க வேண்டுமென்பது அரசரின் அவா. இனி நிகழ்ச்சிகள் துவங்கும்." என்று கூறி முடிக்க அந்த முன்றிலின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி திடீரென வெளிச்சப்பந்தங்கள் தோன்றின. அதுவரை காணாமல் இருந்த அந்த மேடை சட்டெனத் தோன்றவே அங்கு குழுமியிருந்தோரின் ஆஹாகாரம் முன்றிலின் விதானத்தை முட்டியது.

இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தவாறிருக்க, விருந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதுபானம் செய்வோரும், மாமிசம் உண்ணுவோரும் தங்கள் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து கொண்டிருந்து பணியாட்களின் வேகத்தைச் சோதித்துக் கொண்டிருந்தனர். பணியாட்களும் அசராது அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.

அனைவரையும் அவர்களருகே சென்று நலம் விசாரித்த பாண்டிய மன்னனை அனைவரும் போற்றிப்புகழ்ந்தனர். இறுதியாக முக்கிய விருந்தினராக வந்திருந்த மாராயரையும், இளவழுதியையும் தன்னருகே அமரச் செய்த மன்னன் அவர்களிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் எண்ணம் அங்கில்லை என்பதை உணர இருவருக்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை. "விருந்து முடிந்தவுடன் மேல்மாடத்தில் நாம் முக்கியமாகப் பேச வேண்டும். அப்போது கயல்விழியும், தேன்மொழியும் உடனிருந்தால் நல்லது" என்று சொன்னான் அரசன். "அவ்வாறே ஆகட்டும். இங்கு விருந்து நடப்பதால் சபை நாகரீகம் கருதி அவர்களை அழைத்து வரவில்லை. அங்கே அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்" என்றார் மாராயர்.

ஏழு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த அந்த விருந்து ஒரு வழியாக முடிவிற்கு வந்த போது வான்மதி நடுவானைத் தாண்டியிருந்தாள். அனைவரும் அவர்கள் இல்லம் திரும்ப அரசனும் மாராயர், விக்ரமர் மற்றும் இளவழுதியும் மேல்மாடம் நோக்கிச் சென்றனர். அரசனின் வேகத்தைக் கவனித்த விக்ரமன் உள்ளூரப் புன்னகைத்துக் கொண்டு "வீரா உன்னைக் கட்டிப்போடும் கயிற்றைக் கண்டு கொண்டேன். இனி உன் செயல் சீரிய முறையில் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டார்.

மேல் மாடத்தில் அனைவரும் அமர்வதற்கான ஆசனங்கள் வட்டவடிவில் போடப்பட்டிருந்தன. பெண்கள் முன் கூட்டியே வந்திருந்தாலும், நாகரீகம் கருதி, ஒரு மூலையில் நின்றிருந்தனர். அரசன் முதலானோர் வரவும், தங்களை சற்றே அசைத்துக் கொண்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டனர்.

"இங்கே வா கயல்விழி, வா தேன்மொழி. இவ்வளவு நேரம் கழித்து சந்திப்பதில் சங்கடம் ஏதுமில்லையே" என்று கூறினார் விக்ரமர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை." என்று சொல்லியவாறே கயல்விழியுடன் வந்தமர்ந்தாள் தேன்மொழி.

"நல்லது இனி நாம் பேசத்தடையில்லை. மாராயரே. உங்களிடம் சில முக்கியச் செய்திகளைப்பற்றி பேச வேண்டியதிருக்கிறது." விக்ரமர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

"விக்ரமரே தாராளமாகச் சொல்லுங்கள்."

"நன்றி மாராயரே. வீர பாண்டியன் இப்போது ஒரு தேசத்திற்கு அரசனாகி விட்டான். ஆனாலும் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அரசனுக்கு அரசி இருப்பதுதான் மரபு. ஆகவே, வீர பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடத்திவிட வேண்டும் என்ற அவா என் எண்ணத்தில் சில் நாட்களாகவே மேலோங்கியிருக்கிறது"

அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த் மாராயர், இப்படி திருமணம் பற்றி பேச்சு வரவே ஒன்றும் சொல்வதறியாது திகைத்தார். தன் மகளுக்கும், வீர பாண்டியனுக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தாரானாலும், இப்போது என்ன சொல்வது என்ற எண்ணத்தில் பதிலிறுக்க மறந்து விட்டார். அவரது எண்ண ஓட்டத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட விக்ரமர்,

"மாராயரே, அரசியலும் பேசுவோம். அதற்கு முதற்படி இந்த அறவியல். அதாவது இல்லறவியல். இங்கிருப்போருக்குத் தெரியாததை நான் சொல்லப்போவதில்லை. ஆனாலும் தெரிவித்து விடுகிறேன். கயல்விழி தேவியார் பாண்டிய சிம்மாசனத்தை அலங்கரிக்கும் நாளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஒரே போடாகப் போட்டர்.

சுற்றியிருந்தோர் வாயடைத்து நின்ற விதத்தைப் பார்த்து அங்கிருந்த பாவை விளக்குகள் சிரித்ததைப் போன்றிருந்தது. வான்மதியாளும் சிரிப்பதற்கு வசதியாக மேகமுந்தானையால் தன் முகத்தை மூடினாள்.

(தொடரும்)

Tuesday, July 14, 2009

வானவில் 14-07-2009

அன்பும் பண்பும் நிறைந்த என் இனிய வலை வா(சி)(சகர்)களே.. நீண்ட காலத்திற்குப் பிறகு வானவில்லைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திய எனக்கு நானே நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வானவில்லைப் பார்ப்போம்.

====

முன்பெல்லாம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு தமிழ்மணம் இருந்தது. கூடவே தேன் கூடும் இருந்தது. இப்போ எல்லாரும் ஒரு திரட்டி வச்சிக்க ஆரம்ப்பிச்சிட்டாங்க. எல்லாப்பதிவுலயும் திரட்டியில சேக்கச்சொல்லி கமெண்டு வரும்.

இதுனால யாருக்கு லாபமோ நட்டமோ தெரியாது. ஆனா என்ன மாதிரி உள்ளவங்களுக்கு நிச்சயமா லாபம்தான். ஏன்னா ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் வந்து பொட்டிய ரொப்புதே! வாழ்க புதுத் திரட்டியாளர்கள்.

அய்யாமார்களே, அம்மாமார்களே.. தொடர்ந்து புது திரட்டிகளை ஆரம்பித்து உங்கள் விளம்பரத்தை பின்னூட்டம் மூலம் செய்து என்னைப் போன்றோரை வாழவையுங்கள்.

====

சென்னையில் இருப்பவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். மேகமூட்டமான வானம் என்பதுதான் அது. இப்போது ரமணன் வந்து சொல்கிறாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் டி.வி.பார்த்தே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. மழை வரும் அறிகுறியே தெரியவில்லை. இது எல் நினோவா, லா நினாவா என்று யாராவது யோசித்தீர்களா??

====

இந்த முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு யாருமே கண்டனம் தெரிவிக்காதது ஆச்சரியமூட்டுகிறது. இது இப்படித்தான் என்று விட்டுவிட்டார்கள் போல. கடைசியில் முழிபிதுங்குவதென்னவோ நாம் தான். இந்த ரெஸ்பான்ஸ் கொடுத்த தெம்பால் அடுத்த உயர்வை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் இன்டியன்ஸ்.

====

சட்டசபை நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடை பெறுவது பாராட்டத்தக்கது. தினமும் செய்தித்தாள்களில் வரும் சட்டமன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு நிறைவைத் தருகிறது. பாராளுமன்றம் போலன்றி நல்ல விவாதங்கள் நடைபெறுகின்றன. சுவாரசியமாகவும், நகைச்சுவையாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஆரோக்கியமான சூழல் தொடர வேண்டும்.

====

கமலா திரையரங்கில் லுங்கி அணிந்து வரத்தடை என்ற செய்தியைப் பார்த்தேன். லுங்கி அணிந்து வருபவர்கள் பாட்டிலுடன் வந்து கலாட்டா செய்கிறார்களாம். அடடடடடா.. புல்லரித்துவிட்டது. ஏன். பாண்டுக்குள் மறைத்து எடுத்து வர மாட்டார்களா? உள்ளே வரும் போதே செக் செய்யலாமே. என்னவோ... ஹூம்.

====

சென்னைக்கு வந்து பல மாதங்களாகியும் ஒரு பதிவர் சந்திப்பில் கூட கலந்து கொள்ளாதது வருத்தத்தையே அளிக்கிறது. என்ன செய்வது. வீட்டில் குழந்தைகள் முழித்திருக்கும் போது சந்திப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே. ஆனாலும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்.


====

எவ்வளவுதான் திரட்டிகள் வந்தாலும், எப்போதும் தமிழ்மணத்தைத்தான் திறக்கத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தானா? எல்லோருக்குமா?

===

மீண்டும் ஒரு வானவில்லில் சந்திப்போம்.

Monday, July 13, 2009

ஹாய் . . .

ஹாய்.. என்ற மென்மையான குரல் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் அந்தக் குரல் கூப்பிட்டது அவனையல்ல. இருந்தாலும் குரலுக்குச் சொந்தக்காரியை ஒருதடவை பார்த்ததில் குயிலின் குறல் கொண்ட குமரியின் அழகு அவனைக் கவர்ந்தது. இவன் பார்த்ததால் அவளும் பார்த்தாள். சாரி என்பதைப் போல் புன்னகை பூத்தாள்.

இட்ஸ் ஓக்கே.. என்ற பதில் பார்வையுடன் திரும்பி நடந்தான். நடந்தவனின் நினைவுகள் கடந்தகாலத்தை அசை போட்டன. ஹாய்.. இந்த ஒரு வார்த்தைதானே....

====

ஹாய்... கல்லூரியின் முதல் நாளில் தோழமையுடன் கேட்ட ஒலி அவனுக்குக் கல்லூரியைப் பற்றிய அறிவுறுத்தல்களிலிருந்து மாறுபட்டிருந்ததை எண்ணி வியந்தவாறே திரும்பிப்பார்த்தான், அந்தப் பார்வை அவன் வாழ்க்கையையே திருப்பிப்போடும் என்பதை அறியாமல்.

ஹாய்.. என் பேர் மதன். நைஸ் டு மீட் யூ. உன் பேரத்தெரிஞ்சுக்கலாமா.

ஹாய். ஐ ஆம் ராம். நைஸ் டு மீட் யூ டூ. நான் இ.சி.இ. நீ?

மி டூ.

ரொம்ப நல்லதாப்போச்சு. இங்க ராக்கிங் அதிகம்னாங்களே..

இல்ல.இல்ல. இது ஸ்கூல் மாதிரி போகப் போகத் தெரிஞ்சிப்ப.

இப்படியாகத் துவங்கியது, ஹாஸ்டலில் ஒரே ரூம் கிடைத்து, ஒரே பைக்கில் திரிந்து,.. எல்லாம் ஒரே ஒரே...

"ஒரே"வில் இருவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்றும் ஒரேவாக வந்த போது...

====

மூன்றாமாண்டு இறுதியில்...

ஹாய் ராம்... இன்னிக்கு என்ன ஆச்சி தெரியுமா.- மதன் ஆர்வமுடன்

பெத்தாச்சியா, படையாச்சியா? - ராம்.

நக்கலா.. கேள்டா. ப்ரிடிஷ் கவுன்சில்லருந்து வெளிய வந்தேனா. அப்ப ஒரு ஃபிகர்டா. நான் கனவுல என்ன நெனச்சிக்கிட்டிருந்தேனோ அப்படியே.. வந்து ஹாய்னு சொல்லி என்கிட்ட டைம் கேக்கறா..

அவ டைம் பேட்னு இதுலேருந்தே தெரியுதே..

அடிங்.. கேள்றா. அப்படியே டெவலப் ஆகி.. ஒரு இதுவாயிருச்சிடா. நீ என்ன சொல்ற. அதுவாயிருந்தா கன்டினு பண்ணலாங்கிறியா..

டேய்.. நீ சென்னைக்குப் புதுசுடா.. இதெல்லாம் டைம் பாஸ் வேல. நீ ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு..

பொறாமடா ஒனக்கு. ஒண்ணு ஒனக்கும் மாட்டும் போது வெச்சிக்கறண்டா..

மாட்டியது அவனுக்கு. அதுதான் ஒரே..

===

நான்காமாண்டு.. மத்தியில்...

ஹாய் மதன், இன்னிக்கி எம்.ஜி.எம்.முக்கு போலாம்னு சொல்லியிருக்கா. நீயும் வந்து ஒன்னோட ஒப்பினியன சொல்றா.

டேய். படிக்கத உட்டுட்டு எம்.ஜி.எம்னு சுத்தற? சரி வர்றேன். எனக்குதான் ஒண்ணுமில்லன்னு ஆகிப்போச்சு. உனக்காவது ஒண்ணு மாட்டுதான்னு பாப்பம்.

தேங்க்ஸ்டா. நீ மொதல்லயே போயிடு.

சரி சரி ஒழுங்கா வந்து சேரு. அங்க இங்கன்னு நடுவுலயே கழண்டுக்காதே. சொல்லிட்டேன்.

ராம் எம்.ஜி.எம்.மில் காத்திருந்தான்.

===


ஹாய் ராம். திஸ் இஸ் ராதா. - மதன்.

ஹாய்... - ராதா.

ராதா? திக்கென்றது ராமுக்கு. திரும்பிப்பார்த்தால்.. ப்ரிடிஷ் கவுன்சில் கன்ஃபர்ம் ஆனது.

ஹாய்... - ராம்.

ராதா ஒன்றும் இல்லாதது போல் இருந்தாள். ஏனென்றால் அவளுக்கு அப்போது ஒன்றும் இல்லையே.. ராமுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.

====

ஹாய்... பழக்கமான இந்தக் குரல் அவனை மீண்டும் இங்கே அழைத்து வந்தது.

ஹாய் மதன்... ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் ராதா?

வீ ஆல் ஆர் டூயிங் வெல். வா வா. ஏண்டா. அமெரிக்கா போனா தமிழ்ல பேச மாட்டியா.

அட நீ வேற. அங்க தடுக்கி விழுந்தா தமிழனுங்கதான். தமிழ்ல பேசிப்பேசி இங்கிலீஷ் மறந்துடுச்சுன்னுதான் இங்க இப்படி பேசறேன். சரி வீட்டுக்குப் போலாமா?

ஷ்யூர்.

====

ஹாய் ராதா .. ஹவ் ஆர் யூ மை டார்லிங்.. என்றவாறே ராதாவைத்தூக்கி அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்தான்.

நைஸ் அங்கிள்.. தேங்க்யூ.. ராதா எப்படியிருக்கா- என்றாள் மழலை கலந்த மொழியில் ராதா. மதனின் மகள்.

ம். ரொம்ப நல்லாயிருக்கா. இப்ப ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா. பேசறயா. என்று சொல்லி செல்லினான் ராம். மறுமுனையில் அவன் மகள் ராதா.

ஹாய்... ராதா. நான் ராதா பேசறேன்..

மறுமுனையிலும் ஹாய் கேட்டிருக்க வேண்டும்..

இங்கேயும் "ஒரே"

பதிவர்கள் அடித்துக்கொ(ல்)ள்வது ஏன்? அல்லது பதிவர்களுக்கு அட்வைஸ்

கடந்த ஒரு வாரமாக ஏதோ பதிவு, எதிர் பதிவு, எதிர் எதிர் பதிவு, அதன் சார் பதிவு, அதன் எதிர் பதிவு என்று தமிழ்மணம் களைகட்டியதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்த வரை அதுபோல் ஒன்றும் தென்படவில்லை! (ஒரு வேளை எனக்குப் பார்வைக் கோளாறோ?!)

பதிவர்கள் அடித்துக் கொள்(ல்)வது ஒன்றும் புதிதல்ல. புதிதாக வருபவர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் புதியவர்கள். பிறகு பழகிவிடும் அவர்களும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்கள்.

ஆனால் இந்த முறை, எனக்கென்னவோ, சண்டையைவிட சண்டையை நிறுத்துங்கள் என்ற சவுண்ட்தான் அதிகமாகக் கேட்டது.

நக்கீரர் (பத்திரிக்கை அல்ல) சொன்னது போல், அடித்துக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் பதிவுலகத்தாரின் ஏகபோக உரிமை. இதில் சமாதானம் பேச எந்த செண்பகப் பாண்டியனுக்கும் உரிமையில்லை என்று எடுத்துச் சொல்லவேண்டியது என் உரிமை.

ஆக பதிவுலகத் தோழர்களே! உங்களுக்கெல்லாம் உங்கள் தகுதியின் அடிப்படையில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் பழைய பிரபல பதிவரனால்:- அடித்துக் கொள்வது உங்கள் கடமை. ஆகவே நிறுத்தாதீர்கள். நீங்கள் எல்லாம் இப்படி அடித்துக் கொள்ளாவிட்டால் எங்களுக்குத் தீனி ஏது??

நீங்கள் பழைய பிரபலமில்லாத பதிவரானால் (என்னைப்போல்):- இது உங்களுக்கெல்லாம் பழகிவிட்ட விஷயம். திரட்டியைத் திறந்ததுமே இது போன்ற விஷயங்களைத்தான் எதிர்ப்பார்ப்பீர்கள். சென்ற முறைக்கும், இந்த முறைக்கும் உள்ள வீரிய வித்தியாசங்களை சீரிய முறையில் சிந்திப்பீர்கள். அதுதான் நல்லது.

நீங்கள் சற்று புதிய பதிவரானால்:- இதுவரை ஒன்றிரண்டு சண்டைகளைக் காண நேரிட்டிருக்கலாம். அதன் அதிர்ச்சி நீங்காமல் எதிர் வினைப் பதிவுகள், அதாவது, தயவுசெய்து நிறுத்துங்கள், புதியவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அட்வைஸ் அல்லது டிப்ஸ் பதிவுகள் இடலாம். உங்களுக்கு இது பழகிவிட்டால் பிரச்சனையில்லை. பழகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பிரச்சனைதான். இன்னும் ஒன்றிரண்டு சண்டைகளைப் பார்த்துவிட்டால் நீங்கள் மேலே சொன்ன கேட்டகிரிக்கு ப்ரமோஷன் வாங்கி விடுவீர்கள்.

நீங்கள் புது புதுப்பதிவரானால்:- இந்தச் சண்டை உங்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கக்கூடும். அதையெல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, பதிவுலகம் திருந்துமா என்று காத்திருங்கள். அதற்குள் இரண்டு மூன்று சண்டைகள் ஏற்பட்டு விடும். நீங்கள் டபுள் பிரமோஷனில் மேலே போய்விடலாம்.

ஆக மொத்தம். நாங்கள் திருந்த மாட்டோம். நீங்கள்தான் மாற வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. இதை ஏற்றுக்கொள்பவர்கள் இங்கே இருக்கலாம். இல்லையேல், இருக்கவே இருக்கிறது, இந்த மடம் இல்லையேல் சந்தை மடம்!

(அப்பாடா.. என் இமாலயக் கடமையை முடித்துவிட்ட திருப்தியை அடிக்கடி வழங்கிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!!)

Saturday, July 11, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .4

நண்பர்களே! சென்ற பதிவுகளில் திரைக்கதையைப் பற்றி ஓரளவு அறிமுகப்படுத்திக் கொண்டோம். இனி தொடர்ந்து பார்ப்போம்.

சென்ற பதிவில் காமெடி, டிராஜெடி என்று இரு பிரிவுகளைப்பற்றி பார்த்தோம். காமெடி என்றால் சினிமா வழக்கில் நாம் நினைக்கும் காமெடி அல்ல. பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட மேம்பட்ட நிலையில் கதா நாயகன் இருந்தால் அது காமெடி படம்!

படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட கீழான நிலையில் அதாவது அவல நிலையில் படத்தின் முடிவில் இருந்தால் அது டிராஜெடி!

=====

சரி, சென்ற முறை த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் திரைக்கதை அமைப்பைப் பற்றி பார்த்தோம். இப்போது மற்ற முறைகளையும் பார்ப்போம்.

திரைக்கதை ஒரு ஹீரோவை மையமாக வைத்துத்தான் எழுதப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிவோமல்லவா? அந்த அடிப்படையில் கீழ்கண்ட திரைக்கதை அமைக்கும் முறைகள் உள்ளன.

1. கதா நாயகனின் பயணம்
2. சீக்வென்சிங்
3. ஸிட் ஃபீல்ட் மாடல்

இவையனைத்திற்கும் த்ரீ ஸ்ட்ரக்சர் தான் அடிப்படை. இனி இந்த திரைக்கதை அமைப்பு முறைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

=====

1. கதா நாயகன் பயணம்.

நமது கதைகள் பெரும்பாலும் கதா நாயகன் சார்ந்துதான் அமையப்பெற்றிருக்கும். அவனது சாதனைகளும் சோதனைகளும்தான் கதையை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் இந்தத் திரைக்கதை அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த மாதிரி திரைக்கதையை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அ. கதா நாயகனை எதிர் கொள்ளும் சவால்: இந்த சவால் அவனாகவே ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கலாம். அல்லது அவன் மீது திணிக்கப் படலாம். எது எப்படி இருந்தாலும், அமைதியான வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வை மையப்படுத்தும் பகுதி இது.


ஆ. அந்த சவாலை சமாளிக்கும் போது ஏதிர்படும் சங்கடங்கள்: சவாலை வென்றாக வேண்டிய சூழ்நிலையில் கதாநாயகன் என்னென்ன சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இந்தப் பகுதியில் தெரிவிக்கப் படும். சங்கடங்களின் தாக்கம் அதிகமாகும் போது ஹீரோ அதிக அளவில் மதிக்கப் பெறுகிறான்.


இ. இந்தப் பாதையில் கதா நாயகனுக்குக் கிடைக்கும் புதிய சக்தி அல்லது யுக்தி: சங்கடங்களை எதிர்கொள்ளத் தேவையான சக்தி சமயத்தில் கிடைக்கும் போது ஹீரோவின் பயணம் சற்று சுலபமாகிறது. இந்தப் பகுதி மிகஆழமாக அலசப்படும் போது ஹீரோவின் இமேஜ் அதிகரிக்கிறது. இந்தப் பகுதிதான் படம் பார்க்கும் மக்கள் தங்களை அந்தப் படத்துடன் ஒப்பிட்டுக்கொள்ள (ரிலேடிங் ஒன்செல்ஃப் டு தி மூவி) உதவுகிறது. எந்த அளவு ஒரு ரசிகன் தன்னைப் படத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறானோ அந்த அளவு அவன் அந்தக் கதையுடன் ஒன்றி விடுகிறான். ரசிகர்கள் கதையுடன் ஒன்றும் போது திரைப்படம் இயல்பாகவே வெற்றியடைகிறது!!


ஈ. புதிய சக்தி கொண்டு சவாலை முறியடித்தல் அல்லது வெற்றி பெறுதல்: இது க்ளைமாக்ஸ் எனப்படுகிறது. தனது அடிப்படைத் திறமை, சவால் காரணமாக தான் அனுபவித்த துன்பங்கள், புதிய சக்தி கொடுத்த நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், அவனது திறமை வெளிப்பட்டு சவாலை முறியடித்து வெற்றி பெறும் பகுதி இது. இதன் மூலம் கதா நாயகனின் பயணம் நிறைவு பெறுகிறது. அத்துடன் கதையும் முடிவடைகிறது.

இதுதான் கதா நாயகன் பயணம் என்ற முறையில் அமைக்கப் படும் திரைக்கதைகளின் அமைப்பு. இந்த வகையிலும் படம் பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? ஆனால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள் தான் நம் நெஞ்சில் நினைவாடும்!!!

===

இது த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது??

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில், சூழ் நிலையைப் புரியவைப்பது ஒரு பெரும் பகுதி.

ஆனால், அப்படித் தேவையில்லை. கதையுடனான போக்கிலேயே சூழலைப் புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் கதா நாயகனின் பயணம் என்ற முறை ஏற்பட்டது. சூழலை அதன் போக்கிலேயே காட்டி, மெல்ல மெல்ல நம்மை திரைக்கதைக்குள் இழுக்கும் முயற்சி இது.

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் ஹீரோ சவாலை நேரடியாக வெல்வதாகக் காட்டும் முயற்சி நடைபெறும். இங்கு அப்படியல்ல. ஹீரோ சாமானியமானவன். ஆனால் அவன் எதிர் கொள்ளும் சவாலைச் சமாளிக்க அவனுக்கு ஒரு புதிய சக்தி தேவைப் படுகிறது. அந்த புதிய சக்தி எப்படி அவனுக்குக் கிடைக்கிறது. அதை அவன் எப்படி பயன் படுத்துகிறான் என்பது போன்ற நிக்ழச்சிகள் விரிவாக அலசப்படும் போது அந்தத் திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது.

இதுதான் த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சருக்கும் ஹீரோ ஜர்னிக்கும் உள்ள வேறு பாடு. இந்த மாதிரி திரைக்கதைகளில் லாஜிக் அதிகமாக இருக்க வேண்டும். இது சூப்பர் ஸ்டார்களுக்கும் சூப்பர் ஸ்டாராக நினைப்பவர்களுக்கும் ஒத்துவராத மாடல். அதனால்தான் இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழில் வருவதில்லை.

===

இப்போது நாம் முதலில் பார்த்த கதையை இந்த முறையில் திரைக்கதையாக அமைத்துப்பார்த்தால்,

1. சவால் பகுதி: நேரடியாகவே கதா நாயகன் ஏமாற்றப்படும் காட்சிகளைக் காட்டிவிடலாம். அதன் ஊடாக களனை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் போது முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழும்.

2. சங்கடங்கள் பகுதி: அந்த சவால் காரணமாக அவன் நகரம் நோக்கி வந்த காரியம் நிறைவேறாமல் போகிறது. அல்லது அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது.

3. புதிய சக்தி: அந்த எதிரிகளை எதிர் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது. (அவர்கள் தொழிலில் போட்டியாக வருவது போன்றவை). மேலே சொன்னது போல் இங்கே லாஜிக் இடித்தால் அது த்ரீ ஆக்ட் ஆகிவிடும். இது எந்த அளவுக்கு மக்களைக் கவர்கிறதோ அந்த அளவுக்குத் திரைக்கததை வெற்றி பெறும்.

4. சவாலை முறியடித்தல் வெற்றி பெறுதல்: இது இறுதியான தீர்வாக அமைந்து, கதா நாயகனின் வாழ்க்கைப்பயணத்தில் அமைந்த தடைக்கற்கள் தகர்த்தெறியப்பட்டு அவன் வெற்றியுடன் மேலும் முன்னேறுகிறான் என்று நிறைவு செய்யும் பகுதி. இதை க்ரிஸ்ப் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். வசனங்களால் இழுக்காமல், காட்சியமைப்புகளால் மெசேஜ் சொல்லும் போது ரீச் அதிகமாக இருக்கும்.

இப்படியாக ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் ஒரு ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வருவதோடு மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்கவும் செய்வான்.

===

சரி நண்பர்களே, அடுத்த பகுதியில் மற்ற திரைக்கதை முறைகளையும் அலசுவோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவதன் மூலம் இந்தப் பதிவுத் தொடரை அனைவரும் படித்துப் பயனடையுமாறு செய்யலாம்.

நன்றி...

(தொடரும்...)

Wednesday, July 8, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 8

அத்தியாயம் 8: வீர தவளப் பட்டிணம்


கடந்த அத்தியாயங்களில் பல்வேறு நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். கதையின் ஓட்டத்திற்கு அது தேவையாக இருக்கிறது. பெரும்பாலும் உண்மையும் அதுதான். மனித மனம் என்றுமே ஒன்றே போல் சிந்தித்ததில்லை. மனம் சொன்னதை செய்யும் உடலும் ஒன்றே போல் செய்ததில்லை. நாம் ஒவ்வொரு இடத்திலும் அதற்குத் தகுந்தாற்போல் நம் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மாற்றியமைத்துக் கொள்கிறோம். இதுதான் வாழ்வாதாரக் கோட்பாட்டின் அடிப்படை. (We align ourselves to the requirement of the situtation. This is the fundamental concept of survival theory. Those who does this evovle. Others perish).

இந்த வகையில்தான் ஒவ்வொரு சூழலிலும் நம் கதாபாத்திரங்கள் அந்தந்த சூழலுக்கேற்றாற்போல் தங்கள் செயல்களை மாற்றியமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வல்லாளனும், சுந்தர பாண்டியனும் இப்படி மாற்றிப் பேசி வருவது அவர்கள் செயல்களை ஒட்டியே உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

===

சுந்தர பாண்டியன் தன் ராஜ்ஜியத்தைத் தாக்க வருமாறு வலிய அழைப்பு விடுத்தது மாலிக் கஃபூருக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லையாயினும் ஆச்சரியத்தைத் தூண்டியது. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற பழமொழி அவனுக்கு அப்போது தெரியாவிட்டாலும் அந்த அளவுக்கு சுந்தர பாண்டியன் தாம்பாளத்தில் வைத்து தமிழகத்தைத் தருவது போல் இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. உள்ளுக்குள் சந்தோஷம் கொப்பளித்தாலும் மேலுக்கு வழக்கம் போலவே அமைதியாக இருந்து சுந்தர பாண்டியன் மேற்கொண்டு சொல்லப்போவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

"மாலிக். சுருக்கமாகக் கூறி விடுகிறேன். நீ ஹொய்சளர்களை வடக்கிலிருந்து தாக்கும் போது நான் அவர்களைத் தெற்கிலிருந்து தாக்கி ஹொய்சள தேசத்தைக் கைப்பற்றி பாண்டிய அரசுடன் சேர்த்து விடுவேன். நீ உனக்கு வேண்டிய செல்வங்களுடன் டில்லி திரும்பலாம். அதன் மூலம் என் வீரம் வெளிப்பட்டு பாண்டிய அரசுக்கு நான் நிரந்தர வாரிசாகி விடுவேன். இதுதான் நம் முதல் திட்டம். ஆனால் இப்போது நான் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருப்பதாலும், என் சகோதரனும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதாலும் அவனைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே திட்டத்தில் மாறுதல் செய்துள்ளேன். நீ ஹொய்சளர்களைத் தாக்காமல் நேரடியாக தமிழகத்திற்குள் வந்து விடு. மதுரையைச் சுற்றி வளைக்கும் போது உன்னைப் பின்புறமாக வீர பாண்டியன் தாக்குவான். அப்போது அவனை நீ கவனித்துக் கொண்டால் போதும். இதற்குப் பிரதியாக உன் ஹொய்சளப் படையெடுப்பிற்கு நான் உதவுகிறேன். அத்துடன் உனக்குத் தேவையான பல அரிய பொக்கிஷங்களும் தருகிறேன். நீ ஹொய்சளர்களின் மீதான வெற்றியுடனும் எங்களது பொக்கிஷங்களுடனும் டில்லி திரும்பலாம். என்ன சொல்கிறாய்?"

மாலிக் கஃபூர் இப்போது திகைத்துத்தான் போனான். அதன் காரணம் பற்றியும் அவனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. அவன் முகத்திலிருந்த புன் முறுவல் தற்போது மேலும் விரிவடைந்தது. "மாலிக் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்தான்" என்று தன்னைத்தானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டான்.

"நண்பா. நல்லது. அவ்வாறே செய்யலாம். இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் மதுரையில் சந்திப்போம், இறைவன் கருணையினால். நீ மற்ற ஏற்பாடுகளைச் செய்ய உடனே புறப்படுவது நல்லது. எதையும் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் அல்லவா?"

"உண்மைதான் மாலிக். நான் உடனே புறப்படுகிறேன். சொன்னது ஞாபகமிருக்கட்டும். இனி உன்னைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினம்தான். ஆயினும் முயற்சிக்கிறேன்." என்றவாறே கிளம்பினான் சுந்தர பாண்டியன். அவன் புரவி மறையும் வரை காத்திருந்த மாலிக் அவசர அவசரமாகத் தனது தளபதிகளை வரச்சொன்னான். மாலையில் நடந்த அந்த சந்திப்பு தக்காணம் என்று அறியப்படும் தென்னிந்தியாவிற்குத் தெரிந்திராத பல நிகழ்வுகளுக்கும், வரலாற்றின் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. மாலிக் கஃபூரின் மனக்கணக்கு அவனது தளபதிகளுக்குப் புரியவில்லை.

ஒவ்வொருவரும் போடும் கணக்கு ஒவ்வொரு விதம். ஆனால் ஆண்டவன் கணக்கு அலாதியானது. இறுதியானது. சிலருக்குக் கூடுதல், சிலருக்குக் குறைவு. யாருக்கும் கேட்டது, கேட்டது போல் கிடைப்பதில்லை!.

===

பாண்டிய தேசம் இரு தலை நகரங்களிலிருந்து ஆட்சி செய்யப்பட்டு வந்தது. புதுத் தலை நகரம் வீர தவளப் பட்டினம். (காஞ்சிக்கருகில் இருந்ததாக வரலாற்றாய்வர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் சரியான இடம் இது என்று அறுதியிட்டுக் கூறவியலவில்லை. வந்தவாசியாக இருக்கலாம் என்பது என் எண்ணம். வீரதவளப்பட்டணம், வந்து வசித்த இடம் ஆகியவ மருவி வந்தவாசி ஆகியிருக்கலாம். வந்தவாசி, பின்னர் ஆற்காட்டு நவாப்களின் முக்கியக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கி, ஆற்காடு - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த நகரம். இங்கு நடைபெற்ற ஆங்கில ப்ரெஞ்சு யுத்தம், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடிகோலியது. நம் கதைக்கு வந்தவாசியை வீரதவளப்பட்டினமாக அமைத்துக் கொள்வது தவறாகாது என்பதால் அதையே பயன் படுத்துகிறேன்.)

காஞ்சிக்குத் தென் மேற்கில், மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையில் அமைந்திருந்தது இந்தக் கோட்டை நகரம். அங்கு ஏற்கனவே இருந்த சிறு கோட்டையையும், மாளிகையையும் புதுப்பித்து தலை நகருக்கேற்றார்ப்போல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. படை கலன்களும், படைவீடுகளும் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டன. புதிய மந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினர். மதுரைக்கும் வீர தவளப்பட்டணத்திற்கும் இருந்த ராஜபாட்டையானது செம்மைப் படுத்தப்பட்டது. அருகிலிருந்த சிறு குன்று அந்நகருக்கு அழகு சேர்த்தது.


இவையனைத்தும் விக்ரம பாண்டியரது தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் நடைபெற்று வந்தன. புதிய அரசனான வீர பாண்டியனோ இவை எதிலும் பட்டும் படாமல் விலகியே நின்றான். அவன் உள்ளத்தில் இந்த ஏற்பாட்டின் தாக்கம் ஓயாது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. விக்ரம பாண்டியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே ஓர் உபாயம் செய்தார். இருவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் வந்ததோ நால்வர். அவர்கள் இளவழுதி, அவனது தந்தை மாராயர், சகோதரி கயல்விழி மற்றும் அவனது மாமன் மகள் தேன்மொழி.

கயல்விழியையும் தேன்மொழியையும் பார்க்கும் போது அவர்கள் இன்னும் மணமாகமல் இருக்கக் காண்கிறோம். முன்பு பார்க்கும் போது இருந்த குழந்தைத் தனம் குறைந்து பக்குவப்பட்டிருந்தாள் கயல்விழி. அந்தப் பக்குவம் அவள் அழகுக்கு மெருகூட்டியது. தான் இங்குதான் வாழப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை விழியென்னும் ஏரிக்குள் தத்தளிக்கும் மீன்களாகத் திரியும் அவளது கண்ணின் மணிகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவளது பருவம், கனிந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களைப்போல் விளைந்து நின்றதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

தேன்மொழியோ அடியோடு மாறிப்போய்விட்டாள். கொல்லிமலைப் படையை இளவழுதியின் கட்டுப்பாட்டில் விட்டதோடல்லாமல், இவளும் அவனிடம் கட்டுண்டுவிட்டாள். இளவழுதியின் கண்கள் தாவும் இடங்களிலெல்லாம் இவளும் நோக்குவதை நாம் பார்க்கத்தவறவில்லை. கயல்விழியுடன் அடிக்கொருதரம் பேசியபடியும், குறுஞ்சிரிப்பு செய்தபடியும் வந்து கொண்டிருந்தது, இளவழுதியின் கவனத்தைச் சிதறடித்தது. அவனால் இவர்கள் புறம் திரும்பாமல் இருக்க முடியவில்லை. அப்படித் திரும்பும் போதெல்லாம் அதிகமாகிய அவர்களது சிரிப்பு, அவன் கோபத்தைக் கிளறியது. முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டான்.

மாராயரோ இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் புதிய தலை நகரை நோட்டம் விட்டார். அத்தலை நகரில் உள்ள பாதுகாப்புக் குறைவையும் கவனத்தில் கொண்டார். வீரபாண்டியன் நல்ல பிள்ளை. ஏன் இந்த முடிவெடுத்தான் என்ற கேள்வியை அவனிடமே கேட்டுவிடுவது என்ற முடிவில்தான் அங்கு வந்திருந்தார்.

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருந்தாலும் அவர்களுக்குள்ளே மேலோட்டமாக பேச்சு இருந்து கொண்டேதான் இருந்தது. நால்வரும் தனித்தனி குதிரைகளில் வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலை அடைந்தபோது விக்ரமபாண்டியர் வரவே, அவர்கள் அங்கேயே குதிரையிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று.

"ஆகா. வந்துவிட்டீர்களா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கயல்விழி, நலமா?" என்று குறிப்பாக விசாரித்தவர், பதிலுக்குக் காத்திராமல், "நாம் விரைந்து மாளிகைக்குச் செல்வது நலம். வீர பாண்டியன் செய்கை சற்றும் விரும்பத்தகாததாக இருக்கிறது. அதற்காகத்தான் உங்களை அழைக்க வேண்டியிருந்தது. வாருங்கள் சென்று கொண்டே பேசுவோம்".என்று அவசரப்படுத்தினார்.

"என்ன செய்துவிட்டான் வீரபாண்டியன்?" வினவினார் மாராயர்.

"ஒன்றும் செய்யவில்லை. புதிய அரசன் என்ற முறையில் எதுவுமே செய்வதில்லை. அனைத்தையும் நான்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அன்று ஒப்புக் கொண்டவன் இன்று பின் வாங்குகிறான். இப்போது இந்தக் கோட்டையை நீங்கள் கவனித்ததை நானும் பார்த்தேன். இதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் எனக்கும் தெரியும். ஆயினும் நான் ஒருவன் என்ன செய்வது? அவன் திருந்தினால் ஒழிய ஒன்றும் நடக்கப் போவதில்லை. நீங்கள் தான் வந்து சொல்லவேண்டும்" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.

"நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் வந்துவிட்டோமல்லவா. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. பிறகு எல்லாம் திருவெள்ளரை புண்டரிகாக்ஷன் செயல்" என்று குறிப்பிட்டார் மாராயர்.

இவர்கள் இருவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் அரண்மனை மாளிகை நோக்கிப் பயணித்தனர். அவர் சொன்னது சரிதான் என்பது போல் வீரபாண்டியனின் நடவடிக்கைகளில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. உற்சாகம் எங்கும் தொற்றிக்கொண்டது.

(தொடரும்)

Tuesday, July 7, 2009

ரூ.10,00,00,00,00,00,000 (அ) மட்ட்ட்டமான பட்ஜெட்

காங்கிரஸ் அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டதைத் தவிர அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பட்ஜெட்டைக் கொடுத்து ப.சிதம்பரம் ரொம்ப நல்லவர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டார் பிரணாப் முகர்ஜி. ஆக அமைச்சர்கள் மாறுவதால் பட்ஜெட்டில் மாற்றம் ஒன்றும் இல்லை.

முன்பெல்லாம் பெட்ரோல் விலையை பட்ஜெட் அன்றுதான் உயர்த்துவார்கள். ஆனால் இப்போது சரியாக ஒரு வாரத்திற்கு முன் ஏற்றிவிட்டார்கள். இல்லையென்றால் அதனுடைய தாக்கமும் சேர்ந்திருக்கும்.

உலகப் பொருளாதாரச் சிக்கலில் இந்தியா மாட்டிக்கொள்ளவில்லை என்று பெருமையாகச் சொல்லியிருப்பவர், ரூ.1,86,000 கோடி ரூபாய்களை இந்தச் சிக்கலில் மாட்டியிருப்பவர்களுக்கு வங்கிகள் கடனாக அளிக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் வளர்ச்சியை மேம்படுத்த ஏற்பட்டுள்ள நடவடிக்கைகள் மூலம்தான் பட்ஜெட்டின் பற்றாக்குறை 3.5% அதிகரித்துள்ளது என்று சொல்கிறார். சென்ற வருடம் 6.2%ஆக இருந்த பற்றாக்குறை இந்த முறை 6.8% இருக்கும் என்று சொல்கிறார். 9% வளர்ச்சி இலக்கு. பற்றாக்குறை 6.8%. ஆக நிகர வளர்ச்சி 2.2%தான். இது இந்த பட்ஜெட் மூலம் சாத்தியப் படாது என்பதால் இந்த வருடமும் மந்த நிலை நீடிக்கும்.

விவசாயமும் தொழிலும் நாட்டின் முதுகெலும்பாகும். அதனால்தான் பாரதி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறினார்.

ஆனால் விவசாயத்திற்கு என ஒன்றுமே செய்யவில்லை இந்த பட்ஜெட்டில். உர மானியம் மாற்றியமைக்கப்படும் என்ற அறிவிப்பு நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப் பட்டதேயன்றி, விவசாயிகளுக்காக அல்ல. விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தினால் 1% கூடுதல் இன்சென்டிவ் என்ற அறிவிப்பினால் உண்மையான விவசாயிகளுக்கு என்ன பயன்? கடனைச் செலுத்தும் திறன் இருந்தால் ஏன் விவசாயி கடனை வைத்துக் கொண்டு திண்டாடப் போகிறான்? விவசாயக் கட்டமைப்புக்கான திட்டங்கள் என்ன?

சரி. உள் நாட்டுத் தொழில்துறையின் தேவை என்ன? தடையில்லா மின்சாரம், தேவையான கடன் வசதி, தொந்தரவில்லா அரசு இயந்திரம். இவற்றுக்கான அறிவுப்புகள் என்ன? தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஏற்றியவர், இந்திய சிறுதொழில்களை நசுக்கும் இறக்குமதிகளைக் கண்டுகொள்ளாதது ஏன்?

மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு என்ன சலுகை? ரூ.10000 ஏற்றியிருப்பது ஊழியனுக்கும் பொருந்தும். வியாபாரிகளுக்கும் பொருந்தும். வியாபாரிகளுக்கு வருமான வரியில் பல்வேறு சலுகைகள் உள்ளன. ஊழியர்களுக்கு ஒன்றுமேயில்லை.

ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் டாக்ஸ் என்ற ஒன்றை நீக்கியிருப்பதால் பெரும்பாலானோர் சந்தோஷமடைந்திருக்கிறார்கள். உண்மையில் அந்த டாக்ஸ் இப்போது மீண்டும் ஊழியர்கள் தலையில்தான் விழும் என்ற உணமையை உணரத் தவறி விட்டார்கள்.

ஏற்றுமதி மற்றும் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கொடுத்த வரிச் சலுகைகளால் அவர்கள் லாபம் காட்டினாலும், வரிகட்ட வேண்டிய சூழல் இல்லாமல் இருந்தது. இதை நீக்க மாட் (மினிமம் ஆல்டர்னேடிவ் டாக்ஸ்) என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. முதலில் 7.5% ஆக இருந்தது 10% ஆக மாறியது. இப்போது 1998-99 முதல் பின் தேதியிட்டு 15% ஆக உயர்த்தியிருப்பது ஒரு சலுகையைக் கொடுத்து மீண்டும் பறிப்பது போல் ஆகுமல்லவா?

இது வரை இரயிலில் சரக்கு அனுப்பினால் சேவை வரி கட்டத் தேவையில்லை. இப்போது அதற்கும் சேவை வரி கட்ட வேண்டும். இது இறுதியில் யார் கட்ட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரியும். ஆனால் நிதியமைச்சருக்கோ, நிதித்துறை நிர்வாகிகளுக்கோ தெரியுமா தெரியாதா என்பது எனக்குத் தெரியாது.

இதைத் தவிர மூன்று ரூபாய் அரிசி, பல்வேறு 'யோஜனா'க்கள் ஆகியவற்றால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியும், எனக்கும் தெரியும். ஆனால் ... (முன் பாராவையே படித்துக் கொள்ளலாமே).

இறுதியாக, திட்டச் செலவினங்கள், திட்டம் சாரா செலவினங்கள் என்று பட்ஜெட்டில் உண்டு. திட்டச் செலவினங்களால் கட்டுமானம் பெருகி வேலைவாய்ப்பு உண்டாகி, மக்களுக்கு நன்மை பயக்கும். திட்டம் சாரா செலவினங்களால் ஒரு பைசாவிற்கும் பிரயோஜனமில்லை. இந்த பட்ஜெட்டில் திட்டம் சாரா செலவினம் 6.95 லட்சம் கோடி. திட்டச் செலவினம் 3.25 லட்சம் கோடி. அதாவது 1 ரூபாயில், 65 காசு வீணாகச் செலவழிக்கவும் 35 காசு ஏதாவது நல்ல காரியம் என்ற பெயரிலும் செலவழிக்கப் படுகிறது.

இப்போது சொல்லுங்கள். இந்த பட்ஜெட் நான் தலைப்பில் சொன்ன மாதிரியா அல்லது. . .

Saturday, July 4, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .3

சென்ற பதிவில், த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் பற்றி தெரிந்து கொண்டோம். முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைக்குமாறும் கேட்டிருந்தேன். இப்போது த்ரீ ஆக்ட் திரைக்கதை (அவுட்லைன்) எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.


கதை:

ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


இதற்கான த்ரீ - ஆக்ட் ஸ்ட்ரக்சர்.

1. செட்டிங் (சூழல்)

கிராமத்து இளைஞன், கிராமம், நகரம், நகர மாந்தர் இயல்பு இவை அடிப்படை சூழல்கள்

2. பிரச்சனை, போராட்டம் (சிக்கல்)

ஏமாற்றப்படுதல், தெளிவு பெறுதல், முன்னேறுதல்

3. தீர்வு

ஏமாற்றியவர்களைக் காப்பாற்றுவது, திருந்தச் செய்வது, வெற்றி பெறுவது.

இப்படி பார்ட் பார்ட் ஆக எடுத்துக் கொள்ளலாம். இதையே திரைக்கதை அவுட்லைன் ஆக சொல்லும் போது இப்படிச் சொல்லலாம்.

1. கிராமத்து சூழலையும், கள்ளம் கபடமற்ற மக்களையும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, நம்பி வாழ்வதையும் இத்தகைய சூழலில் வளரும் இளைஞன் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாவதையும் சொல்ல (காட்ட) வேண்டும்.

2. அத்தகைய இளைஞன் தவிர்க்க முடியாத சூழலில் நகரத்திற்கு வருவதைக் காட்ட வேண்டும்.

3. நகரத்து சூழலையும், இளைஞனை ஏமாற்றப் போகும் மனிதர்களின் இயற்கை அராஜக நிகழ்வுகளையும், நகரில் இதெல்லாம் சாதாரணம் என்பதான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காட்சிகளையும் காட்ட வேண்டும்.

இது செட்டிங் (சூழல்) பார்ட். ஸ்டார்டர் மாதிரி. இப்படிப்பட்ட சூழலில் நகருக்கு வரும் இளைஞன் என்ன பாடு படப்போகிறானோ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் இந்தப் பகுதியின் அப்ஜெக்டிவ்.4. நகரத்தில் மனிதர்களை நம்புவதையும், அதனால் ஏமாற்றப்பட்டு இருக்கும் உடைமைகளை இழப்பதையும் காட்ட வேண்டும். (இங்கே, கிராமத்து நிகழ்வையும், அதே போன்று நகரத்தில் மாறுபட்ட நிகழ்வையும் காட்டலாம்)

5. மேலும் திரைக்கதைக்கு வலு சேர்க்க, இரண்டாவது முறையும் ஏமாற்றப்படுவதாகக் காட்டலாம். ஆனால் ஓவர்டோஸ் ஆகிவிடாமல் இருக்க வேண்டும்.

6. இதிலிருந்து பாடம் கற்பதாகவும், உழைக்கும் வழி கிடைப்பதாகவும் காட்டவேண்டும்.

7. அந்த உழைப்பிலிருந்து முன்னேறும் நிகழ்வுகள் படிப்படியாகக் காட்டப்பட வேண்டும். (இங்கேதான் லாஜிக் முக்கியம். பெரும்பாலான படங்களில் ஒரு பாட்டில் நாயகன் உயரத்திற்குச் சென்றுவிடுவான்.)

8. அப்படி வளரும் இளைஞன் ஏமாற்றியவர்களுக்கு சிறு சிறு இடைஞ்சல்கள் தருவதாகக் காட்டுவது இளைஞன் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வதாகக் காட்டும்.


இது சிக்கல் பகுதி. மெயின் கோர்ஸ். விஸ்தாரமாகவும், காரசாரமாகவும் இருக்கவேண்டும். பாசிடிவ் திங்கிங் இருந்தால் எப்படி ஒருவன் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை விதைக்கக்கூடிய அளவுக்கு இருத்தல் அவசியம்.


9. இறுதியில் ஏமாற்றியவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்க, இளைஞன் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற வகையில் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும்.

10. ஏமாற்றியவர்கள் செய்வதறியாது நிற்க, இளைஞன் தானாகவே சென்று உதவி செய்து அவர்களை மீட்பது போலவும், அதற்கு அவர்கள் நன்றிக்கடன் பட்டு திருந்துவது போலவும் காட்சியமைப்பு வேண்டும்.

11. இறுதியில் உண்மையே வெல்லும் என்ற மெசேஜுடன் திரைப்படம் முடியவேண்டும்.

இது தீர்வுப்பகுதி. டெஸர்ட். சுவீட்டாகவும், ஹாட்டாகவும், கூலாகவும் இருக்க வேண்டும். குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் காம்பினேஷன் போல.

என்ன படித்து விட்டீர்களா??? படிக்கும் போதே பல்வேறு திரைப்படங்களின் காட்சிகள் கண்முன் நிழலாடியிருக்குமே!!!

இந்த அடிப்படையில்தானே பெரும்பாலான படங்கள் வருகின்றன? ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் வெற்றிபெறச் செய்வதில்தான் திரைக்கதை அமைப்பாளரின் கைவண்ணம் இருக்கிறது.


இது அடிப்படை திரைக்கதை அமைப்பு முறை. இதே முறையில் எந்தக் கதையையும் திரைக்கதையாக மாற்றி விடலாம்.

இவ்வளவுதானா?

இல்லை. இனிமேல்தான் எல்லாம்....

இப்படி அமைக்கப் பட்ட திரைக்கதை ப்ளெயின் ரைஸ் போன்றது. இதனுடன், காதல், டூயட், காமெடி, சென்டிமென்ட் போன்ற மசாலாக்களை சேர்த்து, நமக்கு பிரியாணியாக வழங்குகிறார்கள். ஒரே பிரியாணியை மீண்டும் மீண்டும் கொடுத்தால் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்பார்கள்.

உண்மையில் எல்லோரும் அரைத்த மாவைத்தான் அரைக்கிறார்கள். ஆனால் அது வெளியே தெரியாத அளவிற்கு அரைப்பதில்தான் இருக்கிறது திறமை.

====

இதுவரை அடிப்படை திரைக்கதை அமைக்கும் முறையைத் தெரிந்து கொண்டோம். மேலும் சில வகைகள், காமெடி, டிராஜெடி போன்றவற்றைத் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து வாருங்கள்...

எக்சர்சைஸ்: மேலே சொன்ன திரைக்கதையை மையமாகக் கொண்டு நீங்கள் பார்த்த வெற்றிப் படங்கள் என்னென்ன? தோல்விப்படங்கள் ஏதேனும் உண்டா?? பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

(தொடரும்)

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப்ப்போடுவது, இந்தப்பதிவைப் பலரும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

Friday, July 3, 2009

நானும் நானும்...

கவிதை எழுதி நீண்ட நாட்களாயிற்றென்றாலும் அந்த தாகமும் அதன் தாக்கமும் என்னை விட்டகன்றபாடில்லையாகையால்மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு.


1. முதலும் முடிவும்..

முதலில் முடியும்
முதலும்..
முடிவில் முதலாய் வரும்
முடிவும்...
முதலும் இல்லை
முடிவும் இல்லை என்கிறது
முத்தாய்ப்பாய் ...2. இல்லாமலிருத்தல்

எங்கே எதுவும்
இல்லாமல் இருக்கிறதோ
அங்கே
இல்லாமை
இருக்கிறது...3. எங்கே அழகு

உன்னிடம்
இருக்கும் அழகு..
நீ என்னோடு
இருப்பதால்
என்னிடம்
இருக்கிறது..4. குழந்தை

எதிர்ப்பார்ப்பின்றி
எதிர்பார்க்கும்...
ஏமாற்றினாலும்
ஏமாறாது
நம்மை ஏமாற்றும்


5. தொலைந்தது

தேடிக்கொண்டிருக்கிறேன்...
எதைத்
தொலைத்தேன்
என்பதை..6. ஏன்

கேட்டேன்..மறந்தேன்.
பார்த்தேன்..நினைத்தேன்..
செய்தேன்..உணர்ந்தேன்..
ஏன்?


7. நானும் நானும்

நானும் நானும்
வேறல்ல என்றாலும்
நானும் நானும்
ஒன்றானதால்
நானும் நானும்
நண்பர்கள்


8. ஒளி

இருளைப்
போக்குவதால் அல்ல
இருளற்றிருப்பதால்
அது
ஒளி..9. தத்துவம்

தவறானதெதுவும்
தத்துவமாகாததானாலும்
தத்துவம்
தவறாகலாம்..

10. கவிதை

எழுதாமல்
இருந்தாலும்
கவிதை
கவிதைதான்.


இதன் தாக்கத்தை சற்றே தெளிவுபடுத்திச் செல்வீர். என் கவிதைத் தாகத்தைத் தீர்ப்பீர். உங்கள் கருத்துக்களே என் கவிதைக்கு சுவாசக் காற்று.

Wednesday, July 1, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 7

அத்தியாயம் 7 : இணைந்த கைகள் இணையாத மனங்கள்

இயற்கை நம்மை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதற்குச் சிறந்த அடையாளம் மக்களின் நாகரீகம்தான். நாகரீகங்கள் ஆற்றுப்படுகைகளிலேயே உருவாயின. நீரைச் சார்ந்து விவசாயம். விவசாயம் சார்ந்து வாழ்க்கை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இவை கிடைத்தபின் மனிதர்கள் மற்ற தேவைகளைப் பற்றி சிந்திக்கிறார்கள். அப்படித் தோன்றியவைதான் இசை, இலக்கியம், நாட்டியம், ஓவியம் முதலியன. இவை மனிதர்களின் மனதைப் பண்படுத்தின. பண்பட்ட மனம் மற்றவர்களைப் புண்படுத்தாது.

இதைத்தான் நாகரீகம் என்கிறோம். நாகரீகமற்றவர்கள் இத்தகைய கலைகளில் ஈடுபாடற்றவர்கள் என்று சொல்வதை விட ஈடுபட வாய்ப்பில்லாதவர்கள் என்பதே சரி. அதனால்தான் மற்ற வறண்ட பிரதேசங்களில் மக்களின் மனது அந்தப் பிரதேசம் போலவே கடுமையாகவும், கொடுமையாகவும், ஈவு இரக்கம் என்ற வார்த்தைகளுக்கு இடமில்லாமலும் இருக்கின்றது. இவற்றுடன் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்களுள் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஈரத்தையும் அழித்து விடுகிறது. இப்படித்தான் கொடுங்கோலர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அப்படி உருவானவன்தான் மாலிக் கஃபூர்.

அது கி.பி.1309ம் வருடத்தின் கோடைக்காலம். தெலிங்கானா என இன்று அறியப்படும் பகுதியில் அவன் தங்கியிருந்தான். அது அவனது தலை நகரமான டெல்லிக்கும், கைப்பற்றத் துடிக்கும் தமிழகத்திற்கும் நடுவில் அமைந்திருந்தது. கிருஷ்ணா, கோதாவரி ஆகிய நதிகளும் அவற்றின் உப நதிகளும் அங்கு பாய்ந்தாலும், அங்கெல்லாம் தங்காமல், கல்லும், முள்ளும் கலந்த பாறைப் பிரதேசத்திலேயே தங்கியிருந்தான். வெயிலின் உக்கிரமும் உச்சத்திலிருந்த காலம் அது. அவனுக்கோ வெண்ணிலவின் தண்ணொளியைப் போன்ற மயக்கத்தைத் தந்தது. நீர் என்ற பொருள் தங்கத்தை விடவும் விலையுயர்ந்த பகுதி. அவனுக்கென்ன கவலை? அது மற்றையோர் பாடு.

அவனது கூடாரம் நடுவிலும், மற்ற சிறு பணியாளர்களின் கூடாரம் அருகிலும் சிறு காவல் படை சற்று தள்ளியும் அந்த பொட்டல் பிரதேசத்தில் அமைந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சமவெளியாகவே காட்சியளித்தது. மருந்துக்குக் கூட ஒரு மரம் இல்லை. அங்கிருந்து சுமார் பத்து மைல் அருகிலிருக்கும் ஊரிலிருந்துதான் தண்ணீர் முதலான பொருட்கள் வந்து கொண்டிருந்தன. அங்கு வருவதற்கு அது ஒன்று தான் வழி. மற்ற திசைகளில் சென்றால் அது காட்டுக்கும் மலைக்கும் சென்றடைந்து விடும்.


ஆறு மாதத்திற்கு முன் அவன் மதுரையிலிருந்து திரும்பி வந்த பின் வேறெங்கும் செல்லாமல் அங்கேயே தங்கியிருந்தான். தூதுவர்களை தகவல்களோடு அனுப்புவதிலும், ஒற்றர்களை ஏவுவதிலும், அவ்வப்போது தளபதிகளை வரவழைத்து ஆணையிடுவதிலும் காலம் கழித்தான். இப்போதும் மேலுக்கு அமைதியாக இருக்கும் மாலிக் கடந்த இரு வாரங்களாக பரபரப்புடனேயே காணப்பட்டான். யாரையோ எதிர் பார்ப்பது அனைவருக்கும் தெரிந்தது. யாரென்றுதான் தெரியவில்லை. மாலிக்கும் சொல்லவில்லை.

ஒரு வழியாக அவன் நினைத்த நபரும் வந்தார். முகங்கள் புன்முறுவல் பூத்தன. உடல்கள் ஆரத்தழுவி உறவாடின. கைகள் இணைந்தன. உள்ளங்கள் விலகியே நின்றன.

"வாருங்கள் நண்பரே, இப்போதாவது வழி தெரிந்ததா? ஓலை மேல் ஓலை அனுப்பியும் பயனில்லாமலிருக்கவே நீங்கள் எம்மை மறந்துவிட்டீர்கள் என்றே எண்ணினேன். நல்ல வேளை. இறைவன் கருணை செய்து தங்களை இங்கே தருவித்தான். இறைவனுக்கு நன்றி" மாலிக்கின் தேன் தடவிய வார்த்தைகள் வந்தவரை எறும்பாக மாற்றி அழைத்தன.

"முதலில் என்னை ஒருமையில் அழைத்தால்தான் நான் இங்கே இருப்பேன். இல்லையேல் இப்போதே கிளம்பிவிடுகிறேன்" என்று எழுந்தார் அங்கு வந்தவர்.

"சரி சரி. சற்று பரிகாசம் செய்யலாம் என்றால் விடமாட்டேன் என்கிறாயே. என்னை மறந்துவிட்டயா அதைச் சொல் முதலில்"

"ம். அப்படி வா வழிக்கு. உனக்குத் தான் நடப்பவை அனைத்தும் தெரியுமே. நான் அனுப்பிய தகவல்கள் வந்து சேரவில்லையா?"

"வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனாலும் அவற்றில் புதிய தகவல்கள் ஒன்றுமில்லை. எனவேதான் நம் திட்டம் என்ன ஆயிற்று என்ற கவலை என்னை வாட்டியது. இன்னும் ஒரு வாரம் நீ வராதிருப்பாயேயானால், நானே அங்கு வந்திருப்பேன்."

"மாலிக். நீ செயல் பட வேண்டிய நேரம் வந்து விட்டது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு வழியாக பதவியேற்றுக்கொண்டுவிட்டேன். ஆனாலும் தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. இதனிடையில் என்னை வீரனாக நிலை நிறுத்திக் கொள்ள உன் உதவி உடனே தேவையாயிருக்கிறது. அதனால்தான் தகவல் அனுப்பாமல் உன்னைத் தேடி நானே வந்திருக்கிறேன். நம் திட்டத்தை செயல் படுத்தும் நேரம் வந்துவிட்டது"

"கவலையை விடு நண்பா. நான் எப்போதோ செயலில் இறங்கிவிட்டேன். படைகள் தயாராக இருக்கின்றன. என் ஆணை ஒன்றுதான் தேவை. உன் எண்ணம் ஈடேறும் நாள் வெகு தொலைவில் இல்லை சுந்தரா." ஆம். சுந்தர பாண்டியன் தான் அந்த நபர். தற்போது மதுரை மாமன்னர்.

"என் சகோதரனும் பாண்டிய அரசனாக இருக்கிறான். ஆகவே, என் திட்டத்தில் சிறு மாறுதல்."

"நானும் கேள்விப்பட்டேன். உன் சகோதரன் ஒரு புது தலை நகரில் பாண்டிய மன்னனாக முடிசூடிக் கொண்டிருக்கிறானாமே? என்ன நடந்தது? சற்று விவரமாகச் சொல் சுந்தரா?"

"சொல்கிறேன். என் தந்தையின் மறைவிற்குப் பிறகு எங்களுக்குள் யார் பதவியேற்பது என்ற போட்டி ஏற்பட்டது. என் தந்தையின் விருப்பம் வீரபாண்டியன் அரசாள வேண்டுமென்பது. மந்திரி ப்ரதானிகளின் விருப்பம் நான் பதவியேற்க வேண்டுமென்பது. ஆகவே ஓர் உடன்பாடு எங்களுக்குள் ஏற்பட்டது. இருவரும் நாடாள்வது என்பதே அது. ஒரு தேசம் இரு அரசர்கள். உண்மையில் எனக்கு இதில் விருப்பமில்லை நண்பா. அதனால்தான் உன்னை அழைக்க வந்திருக்கிறேன். பாண்டியதேசம் முழுவதும் எனக்கு வேண்டும்."

"எனக்கும்தான்" என்றான் மாலிக் கஃபூர் மர்மப் புன்னகையுடன்.

"என்ன?"

"அதாவது, உனக்கு பாண்டியதேசம் முழுவதும் வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு என்றேன்." என்று சமாளித்த மாலிக், "சரி அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்"

"நான் சொன்னது போல் நமது திட்டத்தில் ஒரு மாறுதல். நீ முதலில் ஹொய்சளர்களைத் தாக்காதே, நேராக மதுரையைத் தாக்கு" மதுரை மன்னனிடமிருந்து வந்தது இந்த வார்த்தைகள். ஏமாற்றுவதிலும், குறுக்குத் திட்டங்களிலும் வல்லவனான மாலிக் கஃபூர் கூட இதை எதிர் பார்க்கவில்லை.

(தொடரும்)