Monday, July 20, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . ௫

திரைக்கதை எழுதுவது என்பது வெறும் கதையை சொல்லும் விதத்தை வரையறுப்பது மட்டுமன்று. அதனோடு, காட்சியமைப்பு, அதன் பின்னணி, அதன் பிற தேவைகள் ஆகியவற்றையும் பட்டியலிடுவதாகும். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் எனினும், நாம் மெதுவாகவும், முழுமையாகவும் அந்தத் தூரத்தைக் கடப்போம்.

திரைக்கதை அமைப்பதன் அடிப்படை முறைகளைப் பற்றி பார்த்து வருகிறோம். இதுவரை, த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் முறையையும், கதா நாயகன் பயண முறையைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். புதிதாக வருபவர்கள் திரைக்கதை என்ற பிரிவில் கோர்க்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இனி, சீக்வென்சிங் தியரியைப் பற்றி பார்ப்போம்.

இந்த முறையை ஃப்ராங்க் டேனியல் என்ற அமெரிக்க திரைக்கதை வல்லுனர் கண்டுபிடித்தார். எட்டு பிரிவுகளாகக் கதையைப் பிரித்து அலசும் முறையை சீக்வென்சிங்க் என்று அறிமுகப் படுத்தினார்.

இதுவரை கூறப்பட்டு வந்த கதா நாயகன் சார்ந்த திரைக்கதை அமைப்பிலிருந்து மாறுபட்டு கதா நாயகனுடன், இரண்டாவது முக்கிய கேரக்டரைச் சுற்றி கதையை அமைக்கும் முறைதான் இந்த சீக்வென்சிங் தியரி. இரண்டாவது கேரக்டரை அவர் "பாண்டிங் கேரக்டர்" (பிணைக்கும் பாத்திரம்) என்று அழைக்கிறார். அது கதா நாயகியாகவும் இருக்கலாம், வில்லனாகவும் இருக்கலாம். அவர்கள் பார்வையிலிருந்தும் கதையைக் கொண்டு செல்லும் போது அதன் விறுவிறுப்பு கூடும் என்பது அவர் கருத்து.

இனி இதன் பிரிவுகளைப் பார்ப்போம். இது மேலே சொன்னது போல் எட்டு பிரிவுகளாக உள்ளது. அமெரிக்க திரைக்கதையாசிரியர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ரீல் (10 முதல் 15 நிமிடங்கள்) ஒதுக்குவார்கள். அவர்களது படம் அதிக பட்சம் 100 நிமிடங்களைத் தாண்டாது. எனவே இந்த ஃபார்முலா அவர்களுக்கு ஒத்து வரும். நமது படங்கள் குறைந்த பட்சம் 150 நிமிடங்களாவது ஓடவேண்டும். அப்போதுதான் படம் பார்த்த திருப்தி ரசிகனுக்கு இருக்கும்!

1. செட் அப் (களப்படுத்துதல்):- த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் முதல் பகுதியான செட்டிங் பகுதி என்று இதைக் கொள்ளலாம். களத்தைத் தெளிவாக விளக்குவது ஒரு படத்தை நன்கு புரிந்து கொண்டு அதில் ஈடுபட உதவுகிறது. கேரக்டர்களை அறிமுகப்படுத்துவது முதலானது இங்கு நிகழ்கிறது. உதாரணமாக, துடிக்கும் கரங்கள் படத்தில், ஜெய்சங்கரின் பிறந்த நாள் விழாவைக் காட்டுவார்கள். அவர் மேலே இருந்து பணத்தை அள்ளி வீச அதைப் பொறுக்க வரும் மக்கள் கூட்டத்தில் சிக்கி ஒரு சிறுவன் மரணமடைவதாக வரும். ஆனால் ஜெய்சங்கர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ரஜினியோ கொதித்துப் போய்விடுவார். ஆக இந்த ஒரு காட்சியில் வில்லனையும் ஹீரோவையும் களப்படுத்தி அதன் தாக்கத்தைப் படம் பார்ப்போர் மனதில் விதைத்து விடுகிறார், திரைக்கதை ஆசிரியர்.

2. பிணைக்கும் நிகழ்வு (பாண்டிங் இவண்ட்):- கதையின் போக்குக்கு அடிப்படையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் இருத்தல் வேண்டும். இந்த நிகழ்வு இல்லையெனில் கதை இல்லை. ராமன் வனவாசம் புறப்பட்டது அந்தக் கதையின் துவக்க நிகழ்வு. மஹாபாரதத்தில் அஸ்தினாபுரம் கட்டப்பட்டு அங்கு துரியோதனன் அவமானப்படுத்தப்பட்டது பிணைக்கும் நிகழ்வு. ஆக பிணைக்கும் நிகழ்வுகள், ஒரு கதையின் அடித்தளமாக இருக்கின்றன. அந்த நிகழ்வுகளை எந்த அளவுக்குத் தனிமைப்படுத்தி ஸ்பெஷலாகக் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு திரைக்கதை சிறப்பாக அமையும்.

3. எதிர் வினை:- கதா நாயகனின் இமேஜ் உயர வேண்டுமென்றால், வில்லனின் திறமையும் அதிகமாக இருக்க வேண்டும் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். ஆக எதிர்வினை (அட்டாக்கிங் ஃபோர்ஸ்) பற்றிய பகுதி மிகத் தரமாகச் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். பயங்கரமாக உருவகப் படுத்திக் காட்டுவதோ, கொலை, டார்ச்சர் போன்றவற்றைக் காட்டுவதோ அருவருப்பை ஏற்படுத்தலாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வில்லனை கேரக்டரைஸ் செய்யலாம். ஒவ்வொரு படத்தின் கதைக்கேற்ப இதன் அளவை நிர்ணயிக்க வேண்டும்

4. மோதல் நிகழ்வு (லாக்கிங் இவண்ட் ):- மோதல் என்பது ஹீரோவுக்கும் இரண்டாம் கேரக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலாகக் கொள்ள வேண்டும். இங்குதான் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அதுவரை அமைதியாகச் சென்று கொண்டிருந்த படம் இங்கே வேகமெடுக்கிறது. உதாரணமாக, வில்லனுடன் ஏற்படும் சவாலான நிகழ்வை சுட்டலாம்.

5. உச்ச நிகழ்வு (எஸ்கலேடிங் இவண்ட்):- பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை வரவைக்கக் கூடியதான நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்க வேண்டும். ஹீரோ கேரக்டரைசேஷன், அவன் எதையும் தாங்குபவனாகவும், தனக்குக் கெடுதல் செய்பவரையும் மன்னித்தருள்பவனாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும். அத்தகைய அமைதிப்பூங்காவே, எரிமலையாகக் குமுற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்ட வேண்டும். இப்படியாக வரும் போது திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது. உதாரணமாக, ராமாயணத்தில் சீதையை ராவணன் கவரவில்லை என்றால் அங்கே கதையில்லை. மஹாபாரதத்தில், சூதாடி வனவாசம் செய்த பின்பும் நிலம் திருப்பித்தராத நிகழ்வு இல்லையென்றால் மஹாபாரதப் போர் இல்லை.

6. போராட்டம்:- இது இறுதிப் போர். இதில் கதா நாயகன் முயற்சிகளும் அதைத் தடுக்கும் வில்லனின் செயல்களும் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். முதல் முயற்சியில் கதா நாயகன் தோற்பது போலவும், வில்லன் ஜெயிப்பது போலவும், அதன் பிறகு சுய பரிசோதனை செய்யும் கதா நாயகன் தன்னிடத்தில் இருக்கும் குறைக்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்து மீண்டும் மோதுவது போலவும், இறுதியில் வெற்றி பெறுவது போலவும் அமைப்பது சாலச் சிறந்தது.

7. வெற்றி:- போராட்டத்தில் வெற்றி முக்கியமானது. எல்லோருக்கும் ஹீரோதான் ஜெயிப்பான் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் படம் பார்க்க வருகிறார்கள்? அவன் மற்ற படங்களை விட இங்கே எப்படி வித்தியாசமாக வெற்றி பெறுகிறான் என்பதைப் பார்க்க வருகிறார்கள். அந்த வெற்றி பெறும் நிகழ்வை வித்தியாசமாகக் காட்டுவது அந்தப் படத்தின் வெற்றியையே நிர்ணயிக்கும் என்றால் மிகையல்ல.

8. பரிசு:- வெற்றி பெறுவதுடன் படம் முடிந்துவிட்டால் நன்றாக இருக்காது. அதன் பிறகு அவனுக்குக் கிடைக்கும் பரிசும் அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இருத்தல் வேண்டும். அந்த வெற்றிக்கு ஈடான பரிசே ரசிகனின் நெஞ்சில் நிலைத்திருக்கும். வில்லனைத் தோற்கடித்த பிறகு அவனது மகளை மணந்து கொள்ளுதல். அவனிடமிருந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அவர்களது அன்புக்குப் பாத்திரமாதல், புதிய பதவி, அங்கீகாரம் ஆகியவை பரிசுகளாக இருக்கலாம்.

இப்படியாக கதையைத் துருவித் துருவி அலசி ஆராய்ந்து அக்கு வேறாகப் பிரித்து அமைக்கும் போது அது வெற்றிப்படத்துக்கான திரைக்கதை ஆகிறது.

இந்தப் பகுதி சற்றே தொழில் நுட்பம் சார்ந்தது. நாம் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவது. ஆகவே, இதை நன்றாக நெஞ்சில் நிறுத்துங்கள். உங்கள் சந்தேகங்கள், கருத்துகள் ஆகியவற்றை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

6 comments:

இளைய பல்லவன் said...

தமிழிஷில் 14 ஓட்டுகள். ஆனால் ஒரு கமெண்ட் கூட இல்லை!

☀நான் ஆதவன்☀ said...

//இளைய பல்லவன் said...
தமிழிஷில் 14 ஓட்டுகள். ஆனால் ஒரு கமெண்ட் கூட இல்லை//

கிர்ர்ர்ர்ர் நான் அப்பவே படிச்சுட்டு டைம் இல்லாததால ஓட்டு மட்டும் போட்டுட்டு போயிட்டேன். அதுக்குள்ள டென்சன் ஆனா எப்படி?

இளைய பல்லவன் said...

டென்சன் எல்லாம் இல்லை ஆதவன். இது ஒரு ஸ்டேடிஸ்டிகல் பாயின்ட். அவ்வளவுதான். அதாவது தமிழ்மண ரசிகர்களை விட தமிழிஷ் ரசிகர்கள் தங்களுடைய கருத்தை நல்லா வெளிப்படுத்துறாங்க.

முரளி said...

அருமை!! அபாரம்!!! ஒரு முறை ரஹ்மான் சொன்னார் “இளையராஜா இசையை கேட்டால் சாயா கடையில் டீ போடுபவர் கூட இசையமைப்பது எப்படி என்று புரிந்துகொள்வார்” என்று. அதுபோல் அவ்வளவு எளிமையாகவும் அதே சமயம் முழுமையாகவும் உள்ளது உங்கள் திரைக்கதை பதிவு.

நீங்கள் கமல் நடத்திய பயிலரங்கத்திற்கு சென்றீர்களா? திரை எழுத்தாளர், வசனகர்த்தா கமல் பற்றி உங்கள் கருத்து என்ன?

இளைய பல்லவன் said...

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி முரளி!

///
நீங்கள் கமல் நடத்திய பயிலரங்கத்திற்கு சென்றீர்களா? திரை எழுத்தாளர், வசனகர்த்தா கமல் பற்றி உங்கள் கருத்து என்ன?
///

இது என்னுடைய சுய முயற்சி!

எந்தப்பட்டறையிலும் பயிலரங்கத்திலும் சேரவில்லை!.

கமல் பற்றிய என் கருத்து தற்போதைக்கு எதுவும் இல்லை!

aathavan said...

ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்தது.......