Tuesday, July 7, 2009

ரூ.10,00,00,00,00,00,000 (அ) மட்ட்ட்டமான பட்ஜெட்

காங்கிரஸ் அரசின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டின் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டதைத் தவிர அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பட்ஜெட்டைக் கொடுத்து ப.சிதம்பரம் ரொம்ப நல்லவர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டார் பிரணாப் முகர்ஜி. ஆக அமைச்சர்கள் மாறுவதால் பட்ஜெட்டில் மாற்றம் ஒன்றும் இல்லை.

முன்பெல்லாம் பெட்ரோல் விலையை பட்ஜெட் அன்றுதான் உயர்த்துவார்கள். ஆனால் இப்போது சரியாக ஒரு வாரத்திற்கு முன் ஏற்றிவிட்டார்கள். இல்லையென்றால் அதனுடைய தாக்கமும் சேர்ந்திருக்கும்.

உலகப் பொருளாதாரச் சிக்கலில் இந்தியா மாட்டிக்கொள்ளவில்லை என்று பெருமையாகச் சொல்லியிருப்பவர், ரூ.1,86,000 கோடி ரூபாய்களை இந்தச் சிக்கலில் மாட்டியிருப்பவர்களுக்கு வங்கிகள் கடனாக அளிக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் வளர்ச்சியை மேம்படுத்த ஏற்பட்டுள்ள நடவடிக்கைகள் மூலம்தான் பட்ஜெட்டின் பற்றாக்குறை 3.5% அதிகரித்துள்ளது என்று சொல்கிறார். சென்ற வருடம் 6.2%ஆக இருந்த பற்றாக்குறை இந்த முறை 6.8% இருக்கும் என்று சொல்கிறார். 9% வளர்ச்சி இலக்கு. பற்றாக்குறை 6.8%. ஆக நிகர வளர்ச்சி 2.2%தான். இது இந்த பட்ஜெட் மூலம் சாத்தியப் படாது என்பதால் இந்த வருடமும் மந்த நிலை நீடிக்கும்.

விவசாயமும் தொழிலும் நாட்டின் முதுகெலும்பாகும். அதனால்தான் பாரதி உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறினார்.

ஆனால் விவசாயத்திற்கு என ஒன்றுமே செய்யவில்லை இந்த பட்ஜெட்டில். உர மானியம் மாற்றியமைக்கப்படும் என்ற அறிவிப்பு நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப் பட்டதேயன்றி, விவசாயிகளுக்காக அல்ல. விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்தினால் 1% கூடுதல் இன்சென்டிவ் என்ற அறிவிப்பினால் உண்மையான விவசாயிகளுக்கு என்ன பயன்? கடனைச் செலுத்தும் திறன் இருந்தால் ஏன் விவசாயி கடனை வைத்துக் கொண்டு திண்டாடப் போகிறான்? விவசாயக் கட்டமைப்புக்கான திட்டங்கள் என்ன?

சரி. உள் நாட்டுத் தொழில்துறையின் தேவை என்ன? தடையில்லா மின்சாரம், தேவையான கடன் வசதி, தொந்தரவில்லா அரசு இயந்திரம். இவற்றுக்கான அறிவுப்புகள் என்ன? தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஏற்றியவர், இந்திய சிறுதொழில்களை நசுக்கும் இறக்குமதிகளைக் கண்டுகொள்ளாதது ஏன்?

மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு என்ன சலுகை? ரூ.10000 ஏற்றியிருப்பது ஊழியனுக்கும் பொருந்தும். வியாபாரிகளுக்கும் பொருந்தும். வியாபாரிகளுக்கு வருமான வரியில் பல்வேறு சலுகைகள் உள்ளன. ஊழியர்களுக்கு ஒன்றுமேயில்லை.

ஃப்ரிஞ்ச் பெனிஃபிட் டாக்ஸ் என்ற ஒன்றை நீக்கியிருப்பதால் பெரும்பாலானோர் சந்தோஷமடைந்திருக்கிறார்கள். உண்மையில் அந்த டாக்ஸ் இப்போது மீண்டும் ஊழியர்கள் தலையில்தான் விழும் என்ற உணமையை உணரத் தவறி விட்டார்கள்.

ஏற்றுமதி மற்றும் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கொடுத்த வரிச் சலுகைகளால் அவர்கள் லாபம் காட்டினாலும், வரிகட்ட வேண்டிய சூழல் இல்லாமல் இருந்தது. இதை நீக்க மாட் (மினிமம் ஆல்டர்னேடிவ் டாக்ஸ்) என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. முதலில் 7.5% ஆக இருந்தது 10% ஆக மாறியது. இப்போது 1998-99 முதல் பின் தேதியிட்டு 15% ஆக உயர்த்தியிருப்பது ஒரு சலுகையைக் கொடுத்து மீண்டும் பறிப்பது போல் ஆகுமல்லவா?

இது வரை இரயிலில் சரக்கு அனுப்பினால் சேவை வரி கட்டத் தேவையில்லை. இப்போது அதற்கும் சேவை வரி கட்ட வேண்டும். இது இறுதியில் யார் கட்ட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரியும். ஆனால் நிதியமைச்சருக்கோ, நிதித்துறை நிர்வாகிகளுக்கோ தெரியுமா தெரியாதா என்பது எனக்குத் தெரியாது.

இதைத் தவிர மூன்று ரூபாய் அரிசி, பல்வேறு 'யோஜனா'க்கள் ஆகியவற்றால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியும், எனக்கும் தெரியும். ஆனால் ... (முன் பாராவையே படித்துக் கொள்ளலாமே).

இறுதியாக, திட்டச் செலவினங்கள், திட்டம் சாரா செலவினங்கள் என்று பட்ஜெட்டில் உண்டு. திட்டச் செலவினங்களால் கட்டுமானம் பெருகி வேலைவாய்ப்பு உண்டாகி, மக்களுக்கு நன்மை பயக்கும். திட்டம் சாரா செலவினங்களால் ஒரு பைசாவிற்கும் பிரயோஜனமில்லை. இந்த பட்ஜெட்டில் திட்டம் சாரா செலவினம் 6.95 லட்சம் கோடி. திட்டச் செலவினம் 3.25 லட்சம் கோடி. அதாவது 1 ரூபாயில், 65 காசு வீணாகச் செலவழிக்கவும் 35 காசு ஏதாவது நல்ல காரியம் என்ற பெயரிலும் செலவழிக்கப் படுகிறது.

இப்போது சொல்லுங்கள். இந்த பட்ஜெட் நான் தலைப்பில் சொன்ன மாதிரியா அல்லது. . .

4 comments:

☀நான் ஆதவன்☀ said...

தலைவா இதுக்கு தான் உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவன் வேணும்ங்கறது...

மேலோட்டமா இல்லாம சரியா அலசியிருக்கீங்க.

ஆனா நம்ம என்ன செய்ய முடியும். உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட கேட்டு தானே எல்லா விசயமும் செய்யுறாங்க

☀நான் ஆதவன்☀ said...

அடுத்த தேர்த்ல்ல தென் சென்னை வேட்பாளர் நீங்க தான் பல்லவன். நான் இணையத்தில ஆதரவு திரட்ட இப்பவே ஆரம்பிக்கிறேன்..ஓக்கே

இளைய பல்லவன் said...

/
☀நான் ஆதவன்☀ said...
அடுத்த தேர்த்ல்ல தென் சென்னை வேட்பாளர் நீங்க தான் பல்லவன். நான் இணையத்தில ஆதரவு திரட்ட இப்பவே ஆரம்பிக்கிறேன்..ஓக்கே
//
ஆஹா.. அப்படி வர்றீங்களா...!!

சுபா said...

சுபா கூறியது,
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
இது மாதிரி நிறைய மனிதர்கள் அலசுகிறாகள்,எழுதுகிறாகள்.
ஆனால் இந்த matter எல்லாம் சரி செய்வது எப்படி என்றூதான் தெரியவில்லை.