Tuesday, June 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . 2

சென்ற பகுதியில் தமிழ் சினிமாவின் ஒரு அறிமுகத்தையும், திரைக்கதையின் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். ஒரு கதையைக் கொடுத்து அதற்கான திரைக்கதையை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். நண்பர் சுரேஷ், உடனடியாக ஒரு திரைக்கதையை எழுதி அசத்திவிட்டார். அதை இங்கே பார்க்கலாம்.

இப்போது திரைக்கதையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.


திரைக்கதை என்றால் என்ன?

ஒரு கதையை திரைப்படமாக எடுப்பதற்காக மாற்றப்படுவது திரைக்கதை எனப்படுகிறது. கதை என்பது நாம் படித்துத் தெரிந்து கொள்வது. அதில் படிப்பவரின் கற்பனைக்குத்தான் முதலிடம். ஆனால் திரைப்படம் அப்படியல்ல. பார்ப்பவரை நம் பார்வைக்குத் திருப்ப வேண்டும். அப்படி திருப்பும் முயற்சிதான் திரைக்கதை. இது சரியாக இருக்கும் போது படம் வெற்றியடைகிறது. இல்லாவிட்டால் தோல்வி.


கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம் ?

கதையில் வர்ணனைகளும் காட்சியமைப்பும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். திரைக்கதையில் அதை விஷுவலாகக் காட்ட முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு கிராமத்தைப் பற்றி விளக்க கதையில் இரண்டு பக்கங்களில் விவரிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு காட்சியில் அத்தனையையும் பார்ப்பவருக்கு விளக்கிவிடலாம். கூட ஒரு பின்னணி இசை சேரும்போது அதன் எஃபெக்ட் உச்சமாகும்.

ஆனால் கதையில் கிராமத்து வர்ணனையை நான் படிக்கும் போது நான் பார்த்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வேன். நீங்கள் படிக்கும் போது உங்களுக்குத் தெரிந்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வீர்கள்.

ஆனால் திரையில் தோன்றுவது ஒரு கிராமம்!. நம் அனைவரையும் அதையே உருவகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தும். அதை நாம் விரும்புவதும் விரும்பாததும் படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். திரைக்கதை என்பது ஒரு நேர்த்தியான மாஸ்டர் ப்ளான் போல இருக்க வேண்டும். டெக்னிகலான மேட்டர்களைப் பிறகு பார்ப்போம்.

திரைக்கதையால் என்ன பயன்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், ஒருவன் அல்லது ஒருத்தி எதற்காகத் திரைப்படம் பார்க்க வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்? நான் எதற்காக திரைப்படம் பார்க்கச் செல்கிறேன்?

1. எனக்கு ஒரு என்டெர்டெய்ன்மென்ட் தேவைப்படுகிறது.
2. எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது
3. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு கிடைக்க வேண்டும். (வேல்யூ ஃபார் மனி)
4. என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டது என்று நான் எண்ணக்கூடாது.

இந்த எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எந்தத் திரைக்கதையும் வெற்றித் திரைக்கதைதான்!!


சரி இனி முக்கிய மேட்டருக்குச் செல்வோம்...

நீங்கள் நிறைய திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றின் ஒற்றுமையை சற்று அலசுவோமா?

1. முதலில் இனிமையாகத் துவங்கும். கதாபாத்திரங்கள் (நாயகன், நாயகி, வில்லன் போன்றோர்), கதைக்களம் ஆகியவற்றின் அறிமுகம்

2. பிரச்சனை உருவாதல். போராட்டம்.

3. முடிவு.

99.99% படங்களின் அமைப்பு இவ்வாறு இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இதைத்தான் த்ரீ-ஆக்ட்-ஸ்ட்ரக்சர் என்று சொல்வார்கள். புராண இதிகாசங்கள் முதல் புதுப்படங்கள் வரை இந்த ஸ்ட்ரக்சர் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இப்படிச் சொல்வது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமைத்துப் பரிமாறுவதுதான் சமையல் கலை என்று சொல்வதற்கு ஒப்பாகும். அல்லது, புத்தகத்தில் கணக்கெழுதி, வருடத்திற்கு ஒருமுறை ஆடிட் செய்து டாக்ஸ் கட்டுவதுதான் கணக்குப் பதிவியல் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மையல்ல....


மேற்கொண்டு தொடர்வோம்...

எக்சர்சைஸ் 2: இந்த த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் அடிப்படையில் முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைத்துத்தாருங்கள்.

(தொடரும்)..

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டுப்போடுவது, இந்தப்பதிவு பலரையும் சென்றடைய உதவி செய்வதாக இருக்கும்.

Sunday, June 28, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . . 1

ஸ்கிரீன் ப்ளே என்பதன் நேரடித்தமிழாக்கம்தான் திரைக்கதை என்றாலும், காட்சியாக்கம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். ஒரு திரைப்படம் வெற்றிபெற இன்னின்ன காரணிகள்தான் வேண்டும் என்ற ஃபார்முலா, அதாவது சக்சஸ் ஃபார்முலா எதுவும் இல்லை.

அப்படி இருந்திருந்தால் தோல்விப்படங்களே இருக்காது. ஆனால் எது இருக்கிறதோ இல்லையோ திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் அந்தப் படம் நிச்சயம் ஓடாது. பாடல்கள் தனியே ஹிட்டாகலாம், காமெடி ஹிட்டாகலாம் ஆனால் வலுவான திரைக்கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற இயக்குனர்கள் திரைக்கதையில் மிக்க கவனம் கொண்டிருந்தனர். ஆனாலும், பிற்காலத்தில் அவர்கள் படம் வெற்றி பெறவில்லை. இதற்கான காரணத்தைப் பின்னர் ஆராய்வோம்.

பதிவின் உள்ளே செல்லும் முன் ஒன்றை தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். திரைப்படம் பார்ப்பதைத் தவிர திரைத்துறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனினும் ஒரு ரசிகனின் பார்வையில் அல்லது ஒரு வருங்கால இயக்குனரின் (?!) பார்வையில் திரைக்கதை எழுதுவதைப் பற்றிய கருத்துதான் இது.


திரைக்கதைக்கு அடித்தளம்

திரைக்கதைக்கு அடித்தளம் கதைதான். 99.99% கதைகள் நல்லவர்கள் முதலில் கஷ்டப்படுவதும் தீயவர்கள் அதிக சக்தியுடன் இருப்பதும், இறுதியில் நன்மையே வெல்வதும் என்ற பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆக அடிப்படையில் நன்மையே வெல்லும் என்ற 'மெசேஜ்' அனைத்துக் கதைகளிலும் இருக்கிறது. ஆனால் சில வெற்றி பெறுகின்றன. மற்றவை தோல்வியடைகின்றன.

ஆக நல்ல கதை, சுமாரான கதை என்றெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் நல்ல கதை. தோல்வியடைந்தால் கதை நன்றாக இருந்தாலும் 'ப்ச்'தான். எதுவாயினும் ஒரு கதை வேண்டும்.

மற்ற காரணிகள்.


1. மக்கள் ரசனை


சினிமா துவங்கப்பட்டது முதல் 1950கள் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள். 2000க்குப் பிறகு புராணப் படங்கள் அரிதாகி விட்டது. புராணப் படங்களே இல்லை எனலாம்.

60களில் பிழியப்பிழிய அழ வைக்கும் சென்டிமென்ட் படங்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது வரும் படங்களில் உள்ள ஒன்றிரண்டு சென்டிமென்ட் சீன்களில் கூட விசில் பறப்பதைப் பார்த்திருக்கலாம்.

70களில் புரட்சிகரமான கருத்துக்களுடன் படங்கள் வெளிவந்தன. ருத்ரய்யா, பாலச்சந்தர் போன்றோர் சமூகக்கட்டமைப்பை உடைத்தெறியும் முயற்சியில் பெரிதும் வெற்றி பெற்றனர். இப்போது அத்தகைய படங்கள் (உதாரணம்: தனம்) வரவேற்கப் படுவதில்லை.

80களில் காதலை மையமாக வைத்துப் படங்கள் பெருவெற்றி பெற்றன. இன்னிசை படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இப்போதும் காதல் படங்கள் வந்தாலும் அந்த அளவுக்கு வெற்றி பெறுவது குறைவுதான்.

90களில் கிராமத்தை மையமாகக் கொண்ட படங்கள் பெரிதும் வெற்றி பெற்றன. இப்போது ராஜ்கிரண், , ராமராஜன் போன்றோரின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

புதிய நூற்றாண்டில் இப்படி எந்த ஒரு லாஜிக்கும் இல்லை.

ஏன்?? மக்கள் ரசனை மாறுகிறதா?

இல்லை என்பதே என் பதில். இதற்கான காரணம் பின்னர்...


2. தொழில் நுட்பம்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், கலர், சினிமாஸ்கோப், 70 எம்.எம்., டி.டி.எஸ்., டிஜிடல் சினிமா என்று தொழில் நுட்பத்தில் பரிணாமித்திருக்கிறது சினிமா. எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், கிராஃபிக்ஸ் என்று மற்ற துறைகளிலும் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது.

இந்தத் தொழில் நுட்பங்கள் ஒரு பண்டத்தை எவ்வளவு நன்றாக ப்ரெசன்ட் செய்ய வேண்டிய அளவுக்குப் பயன் படுத்த வேண்டும். இவை நன்றாக இருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டும்.


3. நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு ரஜினி கமல் படங்கள் அபவ் ஆவரேஜ் வெற்றியைத் தந்தன. அதே போன்று விஜய் அஜித் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இவர்கள் படம் கூட வெற்றி பெறாமல் போய்விடுகிறது. புது முகங்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று விடுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த கதா நாயகிகள் அருகிக் கொண்டே வருகின்றனர். மொத்தமும் இறக்குமதிதான். மற்ற கலைஞர்களின் பங்களிப்பு ஓரளவுக்கு இருக்கும்.

ஆக கலைஞர்கள் தேர்வு முக்கியமானதல்ல.


4. இசை

இசையைப் பொறுத்தவரை மிக அடிப்படையான வாதம் இதுதான். வெற்றி பெற்ற படங்களின் இசை தானாக வெற்றி பெற்று விடும். இசை மிகப் பிரமாதமாக இருந்தாலும் படம் தோல்விடையலாம். ஆகவே இசை என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனாலும் படம் வெற்றி பெற கூடுதல் உந்து சக்தி அளிக்கும்.

மற்றவற்றை அவ்வப்போது பார்ப்போம்.


இப்போது ரசனையைப் பற்றிய எனது கருத்து:

மக்கள் ரசனை மாறிவிட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவியலாது. Human beings are emotionally charged animals. காலங்கள் மாறினாலும், நமது அடிப்படை என்றுமே மாறாது. பிறகு ஏன் புராண, சென்டிமென்ட், கிராமப் படங்கள் இப்போது வெற்றி பெறுவதில்லை? ஏனென்றால் நம்மிடையே இவை ஏற்கனவே இருக்கின்றன.

சென்டிமென்டிற்கு ஒரு பாசமலர் ஏற்கனவே இருக்கும் போது மீண்டும் எதற்கு ஒரு சென்டிமென்ட் படத்தைப் பார்க்க வேண்டும்? சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், போன்ற படங்கள் இருக்க ஏன் மீண்டும் நான் ஒரு புது புராண படத்தைப் பார்க்க வேண்டும்? கரகாட்டக்காரனும், சேரன் பாண்டியனும் இருக்க நான் ஏன் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையைப் பார்க்க வேண்டும்?

இவை அனைத்தும் நம்மிடையே ஆர்கைவ் ஆக இருக்கின்றன. ஆகவே இப்போது தேவைப் படுவது வேறு. இதே காரணம் தான் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் பிறகு என்ன ஆனார்கள்?. பாக்யராஜ், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரின் நிலைமை என்ன? இவர்களின் படங்கள் பிற்காலத்தில் ஏன் தோல்வியடைந்தன? ஆனால் இவர்களது பழைய படங்களை மக்கள் இன்னும் ரசித்துப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

எம்.எஸ்.விஸ்வனாதனுக்கு என்னவாயிற்று? இளையராஜாவால் இப்போது மக்களை மயக்கமுடியவில்லையே? ஆனால் இவர்களது பழையபாடல்களை விரும்பாதார் யார்?

இப்போது புரிகிறதா?. . . தொடர்வோமா??

எக்சர்சைஸ்:
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


பின்குறிப்பு:- தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டைப் போடுங்கள். அது இந்தப் பதிவுத்தொடரைப் பலரிடமும் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

Saturday, June 27, 2009

ஸ்பெஷல் மட்டும் என்ன ஸ்பெஷல்?!

ஆதியும் அந்தமும் இல்லா அண்டசராசரம் இருக்கிறதே, அதில் ஒரு குட்டித்துணுக்காக இருக்கிறது பால்வெளி மண்டலம் என்னும் நமது கேலக்சி. அதில் ஒரு மூலையில் இருக்கிறது சூரியக் குடும்பம். அந்தச் சூரியக் குடும்பத்திலே சூரியனிலிருந்து மூன்றாவது கோளாக இயங்கிக் கொண்டிருக்கிறது நமது பூமி. திருவள்ளுவர் ஒரு குறளில் குறிப்பிடுவார். தலைவர்கள் நெருப்பைப் போன்றவர்கள். மிகவும் நெருங்கினால் பொசுக்கிவிடுவார்கள். தொலைவில் நின்றால் பலன் கிடையாது. ஆகவே சரியான தூரத்தில் இருந்து அதன் பலனை அனுபவிக்க வேண்டுமென்று அதன் பொருள் இருக்கும். அது போலத்தான் பூமியும். சரியான தூரத்தில் இருப்பதால் நாம் உயிர் வாழ முடிகிறது!!அத்தகைய பூமியில் எத்தனையோ கண்டங்கள் இருக்க, ஆசியா என்றொரு கண்ட்ம் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நடு நாயகமாக இந்தியா என்றொரு தேசம் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்ததே. அதன் தென் கிழக்கு மூலையில் தமிழ் நாடு என்றொரு மா நிலம் இருக்கிறது என்று சொன்னால் என்னை நீங்கள் அடிக்க வருவீர்கள். அதிலும் அதன் தலை நகர் சிங்காரச்சென்னை என்று சொன்னால் உங்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடும். பரவாயில்லை.


சரி விஷயத்திற்கு வருகிறேன். (பார்த்தீர்களா வளர்ச்சியை ! இதற்கு முன்பு இரண்டாவது பாராவிலேயே விஷயத்திற்கு வருபவன், இப்போது மூன்றாவது பாராவிற்கு வந்துள்ளேன். இப்படியே போனால்.....) என்ன இன்னும் விஷயத்திற்கு வரவில்லையா? சரி சரி. அதாவது 'ஸ்பெஷல்' என்ற ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இருக்கலாம். ஆனால் அதன் பயன் பாடு இங்குதான் அதிகம்.


யாராவது நம்மை ஸ்பெஷலாகக் கவனிக்க மாட்டார்களா? என்ற ஒரு ஏக்கம். கடவுள் தரிசனம் செய்ய ஸ்பெஷல் க்யூ. சினிமாவில் ஸ்பெஷல் ஷோ. ஸ்பெஷல் ட்ரெயின். ஸ்பெஷல் பஸ், இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும் ஸ்பெஷல் தான்.


பள்ளிக்கூடத்தில் கூட ஸ்பெஷல் கிளாஸ் இருக்கிறது என்றால் என்னவென்று சொல்வது.


தோசையை எடுத்துக் கொள்ளுங்களேன். சாதாவும் இருக்கிறது. ஸ்பெஷலும் இருக்கிறது. இரண்டிற்கும் ஒரு மி.மீ. சுற்றளவுதான் வித்தியாசம். ஆனால் நம் மக்கள் உணவகத்திற்குச் சென்றால் ஸ்பெஷல் தான் ஆர்டர் செய்வார்கள். என்ன செய்வது, இவர்களெல்லாம் பந்தா பரமசிவன்களாயிற்றே.


இன்னொரு விஷயம் மக்களுக்கு ஸ்பெஷல் என்று சொல்லக் கூட வாய் வலிக்கிறது. ஸ்பெஷல் எஸ்.பி ஆகிவிட்டது. ஒரு எஸ்.பி போடு என்று சொன்னால் பக்கத்தில் யாராவது எஸ்.பி இருந்தால் இவன் டெரரிஸ்ட் போல இருக்கிறதே என்று சொன்னவரையே போட்டுத் தள்ளிவிடும் அபாயம் கூட இருக்கிறது!!


சரவண பவனில் இன்னும் கொடுமை என்னவென்றால் ஸ்பெஷல் காப்பியாம். அதே காப்பி, ஸ்பெஷல் என்ற வார்த்தையைச் சேர்த்து, கூட இரண்டோ மூன்றோ ரூபாய்களை அள்ள வேண்டியது. இவர்களும் கொடுப்பதை விழுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு வந்து சேர வேண்டியது. இதே மாதிரி ஸ்பெஷல் மீல்ஸ், ஸ்பெஷல் இட்லி, ஸ்பெஷல் பணியாரம், ஸ்பெஷல் தண்ணீர்!... அட தேவுடா...


டெலிபோனில் கூப்பிட்டு சார் நாங்க எக்ஸ்.ஒய்.இஜட் கம்பெனிலேருந்து பேசறோம். உங்கள ஸ்பெஷலா செலக்ட் பண்ணி ஒரு ஸ்பெஷல் ஆஃபர் குடுக்கறோம். நீங்க நேர்ல வந்து ஒரு அமவுண்ட கட்டிட்டு இந்த ஸ்பெஷல் ஆஃபர வாங்கிக்கலாம்னு சொல்லுவாங்க. ஆகா, இந்த ஸ்பெஷல் படும் பாடு இருக்கிறதே, சொல்லி மாளாது.


====


இவ்வளவு சொல்கிறாயே. நீ என்ன ஸ்பெஷலா? என்று நீங்கள் கேட்கலாம். இல்லாவிட்டாலும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் இந்தப் பதிவு எதற்கு???


என்னைப் பொறுத்த வரை நான் ஒரு 'ஸ்பெஷல்' அல்லெர்ஜிக். அதாவது ஸ்பெஷல் எனக்கு ஆகவே ஆகாது. ஸ்பெஷல் ட்ரெயின் வந்தால் ஏறவே மாட்டேன். ஸ்பெஷல் பஸ்சிலோ காலே வைக்க மாட்டேன். ஸ்பெஷல் காப்பிதான் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நான் சரவண பவன் பக்கமே தலை வைப்பதில்லை.


எப்போதுமே சாதா தோசைதான் சாப்பிடுவேன். பள்ளிக்கூடத்தில் எப்போதுமே ஸ்பெஷல் கிளாசுக்குப் போனதே இல்லை (ரெகுலர் கிளாசுக்கு? என்று நீங்கள் கேட்பது அவுட் ஆஃப் சில்லபஸ். ஆகவே சாய்சில் விடப்படுகிறது)


கோவிலுக்குச் சென்றால் ஸ்பெஷல் கியூவில் எல்லாம் நிற்கவே மாட்டேன். நேராக நமக்குத் தெரிந்தவர் மூலம் உள்ளே சென்றுவிடுவேன்.


மொத்தத்தில் ஸ்பெஷல் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு ஆகாது.


இதுதான் என் ஸ்பெஷாலிட்டி. இது எப்படி இருக்கு.

Thursday, June 25, 2009

லவ் ஆல் (உரையாடல் போட்டிக்கான சிறுகதை)

நகரின் மையமான சாலையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தை நீங்கள் அந்த வழியாகச் செல்லும் போது ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள். அந்தக் கட்டிடத்தில் கம்பெனி இருக்கிறதென்பதே ஒரு மிகப் பெரிய அட்ராக்ஷன். அப்படித்தான் ராகவனுடைய கம்பெனிக்கும் கிடைத்தது. கம்பெனியின் பெயர், அந்த கட்டிடத்தின் பெயர் எழுதிவிட்டால் போதும். யாரும் வந்துவிடுவார்கள். எப்போதும் விறுவிறுப்புடனும் சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் இருப்பது கம்பெனி, கட்டிடம், ராகவன் ஆகியோரின் ஸ்பெஷாலிட்டி.

====

அன்று வழக்கம் போல் படு டென்ஷனான நாள். நாளை தேவைப்படுவதை நேற்றே வேண்டுமென்று இன்று தலைமையலுவலகத்திலிருந்து வந்த மெயில் எல்லாரையும் பம்பரமாகச் சுழற்றியது.

"அருண், எஞ்சினீரிங்க்லருந்து அந்த ஸ்பெக் ஷீட் ஃபில் பண்ணி வந்துருச்சா?"

"அருண், அக்கவுன்ட்ஸ்ல பட்ஜெட் வேரியன்ஸ் அனலசிஸ் பண்ணிட்டாங்களா?"

"அருண், கையோட மார்க்கெட்டிங் அப்டேட் குடுங்கப்பான்னு கேட்டா அல்வாதான் குடுக்குறாங்க. போய் உடனே வாங்கிட்டுவா"

இப்படியாக சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருந்தான் ராகவன். வயது 36 இருக்கலாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை டை அடிக்கிறான். முடி வளர்வது நின்றுவிட்டதோ என்ற கவலை உண்டு. இப்போதெல்லாம் சலூனுக்குப் போகும்போது லைட்டா ட்ரிம் பண்ணுங்க என்றுதான் சொல்வான். பத்து வருடங்களுக்கு முன்பு, ஃபுல்லா ஷார்ட் பண்ணிடுங்க என்று சொல்பவன்.


செல்போன் சிணுங்கியது. ப்ச் என்றவாறே எடுத்தவன், "குட் மார்னிங்க் சார். இன்னும் ஆஃப் அன் அவர்ல உங்க இன்பாக்சுக்கு வந்துடும் சார்."

"...."

" ஹி.ஹி.. இங்க இப்பதான் பவர் வந்து சிஸ்டம்லாம் பூட் ஆயிட்டிருக்கு. அதனாலதான் டிலே. "

"..."

"அதெல்லாம் இல்ல சார். நெஜமாவே. இவ்ளோ பெரிய பில்டிங்க்னுதான் பேரு. மெயின்டனன்ஸ் டீமுக்கு காட்டமா ஒரு மெய்ல் போட்டிருக்கேன். உங்களுக்கும் காப்பி போட்டிருக்கேன்."

"..."

"என்னாது.. வர்லியா.. ஓ சாரி சார், மெய்ல் சர்வர் கூட டவுன் தான். இப்ப அனுப்பிச்சிடுறேன்"

"..."

"ஆமா சார். டேட்டாதான்"

"...."

"ஓகே சார். டெஃபனிட்லி"

"...." (டொக்)

"தேங்க்ஸ்" என்று வைத்தவன் வாயிலிருந்து "உஃப்" என்ற ஒலி முத்தாய்ப்பாகக் கேட்டது.

சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ரிப்போர்ட்கள் சென்றுவிட, அடுத்த சுழலுக்குத் தயாரானது கம்பெனி.

====

லஞ்ச் ரூமில் எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"ஒரே ரோதனையாப் போச்சுப்பா. ராகவா, இதுக்கு ஏதாவது வழி பண்ண மாட்டியா?" அருண் கேட்டான்.

"..." மவுனமும் புன் சிரிப்பும் கலந்த பதில்தான் வந்தது ராகவனிடமிருந்து.

====

"ஹலோ, மதுரை?, நான் ராகவன் ரீஜினல் ஆஃபீஸ்லருந்து, கலாவுக்குக் கனெக்ட் பண்ணுங்க"

"கலா எப்படியிருக்கீங்க? செல் ஃபோன் ஆஃப்ல இருக்கு. எனி பிராப்ளம்?"

"..."

"ஓக்கே. ஓக்கே. சாரி. பட் அர்ஜன்ட் ரிகுயர்மென்ட் ஃப்ரம் ஹெச்.ஓ. ஐ அம் ஹெல்ப்லெஸ். உடனே பண்ணி அனுப்புங்க. மெய்ல் அனுப்பியிருக்கேன். இன்ஃபாக்ட் இதை நேத்தே நீங்க அனுப்புவீங்கன்னு எதிர்பார்த்தேன். இனிமே கொஞ்சம் ப்ரோ ஆக்டிவா இருந்துக்குங்க".

"...."

"அதெப்படிங்க, டேட்டா கேட்டா மட்டும் சர்வர் டவுன் ஆகும், பவர் கட் ஆகும்? இந்த ப்ராப்ளம்லாம் இருக்கக் கூடாதுன்னுட்டுதானே, பெரிய புது பில்டிங்க்ல ஆஃபீஸ் புடிச்சது?"

"..."

"இந்தக் கதையெல்லாம் வாணாம். எனக்கு ஒரு மெய்லும் வர்ல"

"..."

"தட்ஸ் யுவர் பிராப்ளம். முடிச்சி அனுப்பிச்சுட்டு, ஒரு தடவ ஃபோன் பண்ணுங்க. நான் ஓக்கே சொன்னதும் கெளம்பிடலாம். பட் உங்க அதர் காண்டாக்ட் நம்பரக் கொடுங்க. ஐ வில் ட்ரை டு அவாய்ட் டிஸ்டர்பிங்க் யூ அஸ் ஃபார் அஸ் பாசிபிள்"

"..."

"ஓகே. தாங்க்ஸ். பை." மறுபடியும் ஒரு "உஃப்"

"ரிப்போர்ட் கேட்டா கத கதயா சொல்றாப்பா" அருணிடம் சொல்லியது ராகவன்தான்.

====

மாலை அலுவலகத்தின் கேம்ஸ் ரூமில் டேபிள் டென்னிஸ் ஆட வந்திருந்தான் ராகவன். கூட அருண்.

"தாங்க்ஸ் பா. எப்படியோ மதுரைலருந்து வாங்கி கொடுத்துட்ட. அந்தம்மா நாளைக்குன்னு சொன்னதும் ரொம்ப டென்ஷனாயிட்டேன். இப்ப ஹெச். ஓக்கு அனுப்பனதுதார் ரிலீஃபா இருக்குது. ஏம்பா எத கேட்டாலும் பிராஞ்ச்ல உடனே கொடுக்க மாட்றாங்க?"

"சரி சரி அதான் முடிஞ்சிடிச்சில்ல. வா. சர்வீஸ் போடு. லவ் ஆல்"

"ஓகே. லவ் ஆல்..." டொக். டொக். டொக். டொக்....

பந்து இங்கும் அங்கும் வந்து போய்க்கொண்டிருந்தது.

Wednesday, June 24, 2009

சக்கரவியூகம் - இரண்டாம் பாகம் . . . 6

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிச்சூழல் காரணம் பற்றி இத்தொடரை பதிவேற்றவியலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். இப்போது மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். இம்முறை தடை வராது என்றே நம்புகிறேன். சில காலமாகிவிட்டபடியல், சக்கரவியூகத்தின் இதுவரை நடந்தவற்றை ஒரு சிறு பகுதியில் அலசி விடலாம்.


இதுவரை

கதையின் காலம் கி.பி.1308 முதல்... காஞ்சிக் கடிகையில் பயிற்சியை நிறைவு செய்த முக்கிய மாணவர்களுக்கு அதன் தலைமைஆசிரியர் சக்கரவியூகத்தைப் பற்றி விளக்க முற்படுகிறார். ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை. பயிற்சி முடிந்து பாண்டிய இளவல் வீர பாண்டியனும், திருவெள்ளரையைச் சேர்ந்த இளவழுதியும் திருவெள்ளரைக்குச் செல்கின்றனர். அங்கு பாண்டிய நாட்டின் நிலையை விளக்குகிறார், இளவழுதியின் தந்தை. இந்த நிலையில் பாண்டிய நாடு செல்கின்றான் வீரபாண்டியன் அவனுடன் செல்கிறாள் இளவழுதியின் சகோதரி கயல்விழி. அங்கே அரசரது அந்தரங்க ஆலோசனையில் வீரபாண்டியனுக்குத்தான் பட்டம் என்று முடிவாகிறது. ஆனால் அரசர் திடீரென மாண்டுவிடவே வீரபாண்டியனின் சகோதரன் சுந்தர பாண்டியன் ஆட்சிப் பீடமேற உள்ளடி வேலைகளைச் செய்கிறன்.

பயிற்சி முடிந்து ஸ்ரீரங்கம் சென்ற ஹொய்சள மன்னன் வல்லாளனை இளவழுதி சந்தித்து அவனது உதவியை வீரபாண்டியனுக்குக் கேட்கிறான். உதவுவதாக மேலுக்கு வாக்களித்தாலும்,உள்ளே வேறு திட்டமிருக்கிறது. இளவழுதியின் தந்தையும், அத்தை மகள் தேன்மொழியும் கொல்லிமலையில் ரகசியப் படையை தயார் செய்து வருகிறார்கள்.

இடையில் சிதம்பரத்தில் அனைவரும் சக்கரவியூகத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையான சக்கரவியூகம் என்ன என்பது இளவழுதிக்குத்தான் தெரிகிறது.

ஹொய்சள நாட்டை அடைந்த வல்லாளன் பாண்டியர்களை அழிக்க திட்டமிடுகிறான். மாலிக் கஃபூருடன் இணையவும் முடிவு செய்கிறான். பாண்டிய நாட்டை, வீரபாண்டியனுக்க்கும், சுந்தர பாண்டியனுக்கும் சமமாகப் பிரித்து அளிக்க அவர்களது மாமன் விக்ரம பாண்டியன் முயற்சிக்கிறான்.

இனி...

====

அத்தியாயம் - 6: இரு தலை நகரங்கள்

பாண்டியர் வம்சம் சோழர்களைப் போலவோ, பல்லவர்களைப் போலவோ நேர் வம்சமன்று. பல்வேறு கிளைகள் அதிலுண்டு. ஒன்று பட்டுப்போனாலும் அடுத்தது தழைக்குமாறு அமைக்கப் பட்டிருந்தது பாண்டிய வமிசம். அதனால்தான் முதற்சங்கம் தொட்டு தமிழகத்தின் கடைசி அரசு வரை பாண்டியர்கள் ஆட்சி செய்யமுடிந்தது. சோழர்களோ, பல்லவர்களோ ஒரு கால கட்டத்திற்கு மேல் தொடர்ந்து ஆட்சியிலிருக்க முடியவில்லை.

பாண்டியர்களில் ஒரே சமயத்தில் ஆறு இளவரசர்கள் கூட இருந்திருக்கிறார்கள். ஆனால் அரசன் ஒருவன்தான். தலை நகர் மதுரை ஒன்றுதான். மற்றவர்கள் மைய அரசிலோ, மற்ற குறிப்பிட்ட கேந்திரங்களிலோ மதுரை அரசனுக்கு உட்பட்டு தங்கள் அதிகாரத்தை செலுத்திவந்தனர். அத்தகைய கிளை அரசர்களுள் ஒருவர்தான் இந்த விக்ரம பாண்டியன். எப்போதோ விக்ரம பாண்டியனுடைய முன்னோர்களுக்கு மதுரை அரியணையின் தொடர்பு அற்றுவிட்டாலும், கொள்வினை கொடுப்பினை காரணமாக நெருங்கிய உறவு மட்டும் இருந்து வந்தது. அந்த வகையில் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் விக்ரம பாண்டியன் மேல் மதிப்பு இருந்து வந்தது. அதனடிப்படையிலேயே, பாண்டிய ராஜ்ஜியத்தை பிரிக்க விக்ரமன் சொன்ன யோசனையை இருவராலும் தட்ட முடியவில்லை. வீரபாண்டியனுக்கு மட்டும் ராஜ்ஜியம் பிளவு படுவது பிடிக்கவில்லை. ஆனாலும் அரியணை ஏறும் ஆசையும் விடவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக தத்தளித்தான்.


"மாமா, இந்த யோசனை எனக்கு சரியாகப் படவில்லை. ராஜ்ஜியத்தைப் பிரிப்பதென்பது என் தந்தையாருக்கு ஏற்புடையதாக என்றுமே இருந்ததில்லை. எனது பாட்டனார் ஜடாவர்மராகிய சுந்தரபாண்டியத் தேவர் எவ்வளவோ முயற்சியெடுத்து இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவினார். அந்த கஷ்டமெல்லாம் வீணாகிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அதற்காக அரியணையை மட்டும் சுந்தரனுக்கு விட்டுத்தருவேன் என்று கருத வேண்டாம். எங்கள் தந்தையின் விருப்பம் நான் அரியணையேற வேண்டுமென்பதுதான் என்பது நமக்குத் தெரியுமல்லவா? தெரிந்தும் சுந்தரன் போடும் நாடகத்திற்கு நீங்கள் துணை போகிறீர்களோ என்று ஐயுறுகிறேன். என் எண்ணத்தைத் தெளிவாக்கிவிட்டேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள்" என்று எழ முயற்சித்தான்.

அவனை அமர்த்திய விக்ரமபாண்டியன், "சற்றுப் பொறு வீரா. இவையனைத்தும் எனக்கும் தெரிந்ததுதான். நானும் என் இள வயதிலேயே உன் பாட்டனாருடன் எத்தனையோ போரில் பங்கு பெற்றிருக்கிறேன். எனக்கும் இந்த ராஜ்ஜியம் உருவானதில் பங்குண்டு. அத்தகைய ராஜ்ஜியத்தை பங்கு போட வேண்டும் என்று நான் கூற வேண்டிய நிலை வந்துவிட்டதை எண்ணி நான் வருந்துவதை உங்களால் உணர முடியாமல் போகலாம். ஆனால் ஆபத்தர்மம் என்று ஒன்று உண்டு. அதாவது நமக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் நாம் பிழைத்திருக்க செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும் நியாயமானவையே. நம் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு சிங்கத்துடன் சண்டையிடும் போது அந்த சிங்கத்தைக் கொல்வது ஆபத் தர்மம்.

அதைப் போன்று நாம் இப்போது இக்கட்டான சூழலில் இருக்கிறோம். பாண்டிய தேசமும் அத்தகைய இக்கட்டான சூழலில் இருக்கிறது. சற்று எண்ணிப்பார். உன்னைச் சுற்றி உள்ளவர்களை. காஞ்சியில் காடவன் நமக்கு அடங்கியிருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிர்க்க ஆயத்தமாக இருப்பான். ஹொய்சள வல்லாளன் நம் மீது வஞ்சம் தீர்க்க சரியான தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கிறான். மேற்கே கேரளவர்மனும் அதே நிலையில்தான் இருக்கிறான். அவனது பாட்டனார் வீர ரவிக்கு உனது பாட்டனார் இழைத்த கொடுமைக்கு வஞ்சம் தீர்க்கும் நிலையில்தான் இருக்கிறான். ஆனால் அவனிடம் அவ்வளவு படைத்திறமில்லை. இலங்கையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எப்போதும் நம் மீது அவர்களுக்கு ஒரு கண்.

இந்த அபாயகரமான சூழலில் குலசேகரபாண்டியர் நம்மை விட்டுப் பிரிந்து விட்ட துர்பாக்கியமான நிலை ஏற்பட்டது. பின்னர் நீங்களிருவரும் இந்த ராஜ்ஜியத்தின் வாரிசுரிமைக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். சுந்தரன் அவ்வளவு திறமையற்றவனல்லன். உன் தந்தைக்கு அவனைக் கண்டால் பிடிப்பதில்லை. அவ்வளவே. உன்னையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. நீங்கள் இருவருமே இணைந்திருப்பதுதான் இன்றைய பாண்டிய அரசுக்கு மிக்க நன்மை பயப்பதாக இருக்கும். இதன் பொருட்டே நான் இரு தலை நகரங்களை உருவாக்கத் தீர்மானித்தேன்."

"சரியாகச் சொல்லுங்கள் மாமா. இரு தலை நகரங்களல்ல. இரு ராஜ்ஜியங்கள்" திருத்த முயன்றான் சுந்தர பாண்டியன்.

"இல்லை சுந்தரா. நான் சொன்னதுதான் சரி. இரு தலை நகரங்கள்தான். தேசம் ஒன்று. தலை நகரங்கள் இரண்டு."

"எனக்குப் புரியவில்லை" சுந்தரன் சொன்னான் அழுத்தம் திருத்தமாக.

"எனக்கும்தான்" தொடர்ந்தான் வீர பாண்டியன்.

சிறிது நேரம் மௌனத்திலிருந்த விக்ரமபாண்டியன், "நல்லது. வீரா, சுந்தரா, உங்களுக்குப் புரிய வேண்டியது மிக முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் இந்த பாண்டிய தேசத்தின் ஆயுள் நிர்ணயிக்கப்படும். கவனமாகக் கேளுங்கள். நீங்கள் இருவரும் பாண்டிய ராஜ்ஜியம் தழைத்தோங்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களல்லவா?"

"ஆம்" ஒரே குரலாய் ஒலித்தது இருவர் குரலும்.

"மகிழ்ச்சி. கேளுங்கள். பாண்டியர்களது பகைவர்களைப் பற்றி சற்று முன்னர்தான் சொன்னேன். இப்போது அந்தப் பகைவர்களை முழுமையாக அழிக்க வேண்டியது இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். ஆகவே, உள்ளுக்குள் நீங்கள் இருவரும் பாண்டிய தேசத்தின் எதிர்காலத்திற்கு பங்கம் வரும் பட்சத்தில் ஒன்று சேர வேண்டும். செய்வீர்களா"

"நிச்சயமாக" மீண்டும் சேர்ந்தது இருவர் குரலும்.

"சரி. தொடர்ந்து கேளுங்கள். இப்போது தேசம் பிளவு படுவது போன்ற தோற்றம் வெளியே தெரியும். ஆனால் உள்ளே நீங்கள் இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் பிளவு பட்டிருக்கிறீர்கள் என்றெண்ணி, நம் பகைவர்கள், முக்கியமாக ஹொய்சளர்கள் வலுவில்லாத படையுடன், அதாவது பாதி பாண்டியப் படையை எதிர்க்க வேண்டிய அளவிலான படைகளுடன் வருவர்கள். அப்போது நாம் சேர்ந்து தாக்கினால், ஹொய்சளர்களை வீழ்த்தி விடலாம்" அவர்கள் வீழும் போது ராஜ்ஜியம் மேலும் விரிவடையும். மற்றவர்களையும் வீழ்த்தி விடலாம். புரிந்ததா"

இருவர் முகத்திலும் திருப்தியடைந்ததற்கான அறிகுறி காணப்பட்டது. புன்னகையுடன் தலையசத்தனர் இருவரும். இத்தனை விவரமாகப் பேசியவர்கள், ஒரு தீவிர ஆபத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. சுந்தரனுக்கு அது ஆபத்தாகவே தெரியவில்லை. வீரபாண்டியனுக்கோ அது வல்லாளனின் தலையெழுத்து என்று எண்ணியிருந்துவிட்டான். விக்ரமபாண்டியனோ அந்த அளவுக்கு யோசிக்கவில்லை. அங்கேதான் விதியின் கோரச் சிரிப்பு விஸ்தாரமாகக் கேட்டது. அது "மாலிக் கஃபூர்" "மாலிக் கஃபூர்" என்று சத்தமிட்டது போல் தோன்றியது. ஆனால் அங்கே கூடியிருந்தவர்களுக்கு அது கேட்கவில்லை போலும்.

ஒருவேளை கேட்டிருந்தால் நான் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். நீங்களும் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்!

(தொடரும்)

Tuesday, June 23, 2009

நடிகர்களுக்கு கட்சி தேவையா?

நடிகர் திரு.விஜய், 'அரசியலுக்கு வருவதில் தவறில்லை' என்ற கருத்தைத் தனது பிறந்த நாளன்று சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதே. பொதுப்பணியாற்றுவதற்கு ரசிகர் மன்றம் என்ற அமைப்பை விட கட்சி என்ற அமைப்பு அதிக வலுவானதாகவும் வசதியானதாகவும் இருக்கும் என்ற கருத்தும் ஏற்புடையதே. அவருக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதோடு மக்கள் அவரது செய்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தவற மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி தலைப்புக்கு வருவோம் (!!!). சேர்ந்தே இருப்பது என்று இப்போது சிவனார் தருமியைப் பார்த்து கேட்பாரேயானால், நடிகர்களும் கட்சிகளும் என்று சொல்லியிருப்பார். அந்த அளவுக்கு நடிகர்கள் கட்சிகளைத் துவக்கியும், கட்சிகளில் இணைந்தும் வருகிறார்கள். எல்லாருக்கும் ஆதர்சமாக இருப்பவர்கள் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் அவர்களும் இன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களும்தான். அவங்களே முதல்வராயிட்டாங்க நாம ஆக முடியாதா! என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கலாம். அதாவது இவர்கள் அவர்களை விட சற்று அதிகத் தகுதி வாய்ந்தவர்கள் என்ற எண்ணம் என்றும் சொல்லலாம்.

இப்போதைய கேள்வி, நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் போணியாகுமா ஆகாதா? என்பதுதான். சற்று வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் இதற்கான விடை கிடைக்கலாம்!


நடிகர்களின் அரசியல் வரலாறு:

நடிகர்கள் என்ற ஒரு பிரிவினர் தோன்றியது 19ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் என்று கொள்ளலாம். அதுவரை இருந்த கலைஞர்களாக இருந்தவர்கள் அரசர்களையும், நிலப் பிரபுக்களை நம்பியும் காலம் தள்ள வேண்டிவந்தது. பெரும்பான்மையினரின் கல்வியறிவின்மையால் புதுமை மற்றும் புரட்சிக் கருத்துக்களை மக்களி டையே பரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

பிரிட்டிஷாரின் கல்வி முறையும் நிர்வாக சீர்திருத்தங்களும் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, பண்டைய பாரம்பரிய சமுதாய அமைப்பைக் கட்டுடைத்தன. புதிய நகரங்கள் தோன்றி பல்வேறு மக்கள் குடியேறும் நிலை ஏற்பட்டு அவர்களின் பொழுது போக்கிற்காக கலை நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. இவ்வாறு புதிய நகரங்களில் புதுமையான நிகழ்ச்சிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு பாய்ஸ் கம்பெனி போன்ற நாடகக் குழுக்கள் தொடங்கப் பட்டன.

இதற்கிடையே சினிமா என்ற அரிய கண்டுபிடிப்பு நகர மாந்தர்களிடையே புதுக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமாவும் நாடகமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளாகவே இருந்தன. நாடகத்திலிருந்து சினிமாவிற்குச் செல்வது இயற்கையான பரிணாம வளர்ச்சியாகக் கருதப்பட்டது.

இந்தக்கால கட்டத்தில்தான் இரு பெரும் அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று சுதந்திரப் போராட்டம். மற்றொன்று சமூக நீதிப் போராட்டம். இவற்றின் இன்றியமையாமையையும் தாக்கத்தையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் ஊடகமாக நாடகங்களும் சினிமாவும் செயல்பட்டன.

இயற்கையாகவே அமைந்த திறமை, போராட்டத்தால் ஏற்பட்ட தாக்கம், அதுவரை கண்டும் கேட்டுமிராத கதைகள், வசனங்கள் ஆகியவை மக்களைக் கட்டிப்போட்டன. இந்தக் கால கட்டத்தில் சினிமா என்பது மாயக்கண்ணாடியாகவே அறியப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் முதல்வர்கள் முறையே, சி.என்.அண்ணாதுரை அவர்கள், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்கள் நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் பிரவேசித்தார்கள். அப்போதுதான் பாடல்கள் ஆக்கரமித்திருந்த சினிமாவில் வசனங்கள் இடம்பெற ஆரம்பித்தன. கூர்மையான வசனங்களை அளித்த எழுத்தாளர்களும், அவற்றை மக்களுக்கு அளித்த நடிகர்களும் தெய்வமாகவே (Larger than Life portrayal) மதிக்கப் பட்டார்கள்.

இவர்கள் சமகாலத்தில் அரசியல் அரங்கிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆக இவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலிலிருந்து சினிமாவிற்குச் சென்றதால் ஏற்றமடைந்தார்கள் என்றால் மிகையாகாது.


அக்காலத்து மற்றவர்கள்:

நடிகர் திலகம் சிவாஜிகணேசன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட நடிகர் திலகம் அரசியலில் சோபிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. எஸ்.எஸ்.ஆர். பெருமளவு சாதிக்கவில்லை.

ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவகுமார் போன்றோர் நல்ல நடிகர்களாகப் பரிணமித்தும் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்கள். இவர்களுக்கு அரசியல் பின் புலம் இல்லை என்பதே உண்மை.

முக்கியமாக புரட்சித் தலைவி ஜெயலலிதா மட்டுமே அரசியல் பின் புலமின்றி, நடிகையாகப் பரிணமித்து அரசியலில் வெற்றி கண்டவர் என்று சொல்லலாம்.


இக்காலத்து மற்றவர்கள்:

திரு.விஜயகாந்த், திரு. சரத் குமார், திரு. விஜய டி. ராஜேந்தர், திரு.கார்த்திக் போன்றோர் கட்சிக்குத் தலைவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்குமே திரைக்கு வருவதற்கு முன் நேரடி அரசியல் பின்புலம் இல்லை. இவர்களால் அரசியலில் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.

மற்றபடி திரு.தியாகு, திரு.சந்திரசேகர், திரு. நெப்போலியன், திரு.ராதாரவி, திரு.எஸ்.எஸ்.சந்திரன், திரு.எஸ்.வி.சேகர் மற்றும் பலர் பல காலம் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பவர்கள். இவர்களுக்கு முதல்வர் நாற்காலி மேல் காதல் இல்லை என்று சொல்லலாம். ஆனால் முன் பாராவில் சொன்னவர்களுக்கு அந்தக் காதல் அதிகம் உண்டு.

ஜெ.கே.ரித்தீஷ் இவர்களில் வித்தியாசமானவர், முதலில் சிறு அளவில் அரசியல், பின்பு சிறு அளவில் நடிப்பு என்று வந்து இப்போது பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். இவரது வளர்ச்சி கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


ஆக வெள்ளித் திரையில் காண்பது பிம்பம் என்ற உண்மை மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அத்தகைய பிம்பத்தை நேரில் பார்க்கும் ஆவல் உண்டாவது இயற்கையே. அதனால்தான் நடிகர்கள் எங்கு சென்றாலும் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தை அரசியல் சக்தியாக மாற்றலாம் என்ற எண்ணம் தவறானதென்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் போது, இந்த நடிகர்களுக்குத் தெரியாமல் போவது வருந்தத்தக்கது.

நடிகர்கள் நடிகர்களாகவே இருக்க விரும்புவதில்லை. அதற்கும் மேல் சென்று ஒரு கை பார்த்துவிட விரும்புகிறார்கள். ஆனால் உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பதே உண்மை. அரசியலில் நிரந்தர வெற்றிபெற நல்ல அடித்தளம் வேண்டும். சினிமா அத்தகைய அடித்தளத்தை தராது என்பதே இன்றைய காலத்தின் கோலம்.

நடிகர்களுக்குக் கட்சி தேவையாக இருக்கலாம்.

ஆனால் நடிகர்களின் கட்சி மக்களுக்குத் தேவையா என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது????

Saturday, June 20, 2009

யவன ராணி Vs கடல் புறா

சாண்டில்யனின் பல்வேறு படைப்புகளில் மிகச் சிறந்தவையாக நான் கருதுபவை யவன ராணியும், கடல் புறாவும். இவையன்றி, ராஜ திலகம், ராஜ பேரிகை, விலை ராணி, ஜல தீபம், ராஜ முத்திரை உள்ளிட்டவைகளையும் படித்திருக்கிறேன்.

ஆயினும் யவனராணியும் கடல்புறாவும் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இவ்விரண்டில் எது முதன்மையானது என்பதைப் பற்றிய என் ஆய்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.


முதலில் இப்படைப்புகளைப் பற்றி சிறு அறிமுகம்.

யவன ராணி

இது முற்காலச் சோழர்களின் தலை சிறந்த அரசனான கரிகால்வளவன் சோழப் பேரரசை மீட்டதைப் வந்ததைப் பற்றிய கதை. கோச்செங்கட்சோழனின் மறைவிற்குப் பின் சோழ நாட்டில் வேளிர்களின் ஆட்சி நடக்கிறது. சோழ குல இளவல் திருமாவளவனை அழிக்கவும் திட்டமிடுட்டு அவன் தங்கியிருந்த அரண்மனைக்கு தீயிடுகிறார்கள் அங்கிருந்து தப்பிக்கும் போது திருமாவளவனின் கால் தீயினால் கருகுகிறது. அன்று முதல் திருமாவளவன் கரிகால்வளவனாகிறார். இது வரலாற்றை ஒட்டிய நிகழ்வு.

யவனர்கள் (ஐரோப்பியர்கள்) தமிழகத்தில் மிக அதிக அளவில் வாணிபம் செய்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் முக்கியமானது 'தி பெரிப்ளூஸ் ஆஃப் எரித்ரீயன் ஸீ" என்ற நூலாகும். இது ஒரு 'ட்ராவலாக்'.

இதன் அடிப்படையில் தமிழகத்தின் முக்கியத் துறைமுகமான புகாரைக் கைப்பற்றி அங்கு யவன அரசு அமைக்கும் முயற்சி நடை பெறுகிறது. அதை இந்தப் புதினத்தின் நாயகன் இளஞ்செழியன் எப்படித் தடுத்தான். அவனுடைய அயல் நாட்டுப் பயணங்களில் என்ன நிழந்தது என்று மிகச் சுவையாக புனையப்பட்டிருக்கும்.

யவன ராணி, பூவழகி என்று வழக்கம் போல் இரு நாயகிகள். பிரும்மானந்தர் என்ற ஒரு முக்காலும் அறிந்த சாமியார். டைபீரியஸ் என்ற யவன தளபதி. மற்றும் சாம்பிராணி நாட்டு மன்னன், அவனது மகள் அங்கே ஒரு சாமியார்ஆகிய கேரக்டர்கள் உண்டு. இரண்டு பாகங்கள்.


கடல் புறா

இராஜராஜ சோழனுக்குப் பிறகு இராஜேந்திர சோழத் தேவர் ஆட்சி ஏறும் போது அவருக்கு வயது கிட்டத்தட்ட 55க்கு மேல். அவர் ஆட்சிக்குப் பிறகு 10 வருடங்களுக்குள்ளாகவே நான்கு அரசர்களை அரியணையேற்ற வேண்டிய நிலை சோழர்களுக்கு. அவர்களுக்குப் பிறகும் நேர் வாரிசு இல்லாத காரணத்தால் மகள் வழி மகனான அனபாயன் சோழ சாம்ராஜ்யத்திற்கு வாரிசானான்.

இந்த அனபாயன் தான் சுங்கம் தவிர்த்த சோழன், கலிங்கம் கொண்ட குலோத்துங்கன். இவனது காலத்தில் சீன சாம்ராஜ்யத்திற்கு ஒரு அரச தூதுக் குழு சென்றதற்கான ஆதாரம் உள்ளது. இதே காலத்தில் கடாரம், ஸ்ரீவிஜயத்திலும் சோழ வீரர்கள் வந்து சென்றதற்கான ஆதாரமும் உள்ளது. மேலும் கலிங்கப் போர் ஏற்படக் காரணமாக ஒரு நிகழ்வு புனையப் படுகிறது. இதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் மூன்று பாகங்கள் கொண்ட கடல் புறா.

கதையின் நாயகன் இளையபல்லவன். (கதை அருமையாக இருக்கும் என்பதற்கு இதற்கு மேலும் சான்று வேண்டுமா?!) இவனது இயற்பெயர் கருணாகர தொண்டைமான். கலிங்கத்துப் பரணியில் இவன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. வழக்கம் போல் இரு நாயகிகள். காஞ்சனாதேவி, மஞ்சளகி. அகூதா என்ற சீன கடலோடி. சுவர்ணதீபத்தில் ஒரு தளபதி என்று வெரைட்டி உண்டு.இனி இவற்றின் ஒற்றுமைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. இரண்டுமே சோழர்களைப் பற்றியது.

2. இரண்டும் சோழ வாரிசு குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

3. கடல் மற்றும் கப்பல் சம்பந்தப் பட்டவை

4. அயல் தேசத்தில் நமது வீரர்களின் சாகசங்கள் விவரிக்கப் பட்டிருக்கும்.

5. இரண்டிலும் இரண்டு நாயகிகள்.

6. இரண்டிலும் அரச பரம்பரையினரின் சாகசங்களை விட தளபதிகளின் சாகசம் அதிகமாக விவரிக்கப் பட்டிருக்கும்.

7. இரண்டு நாயகர்களுக்கும் ஆரம்பம் "இளைய" என்றிருக்கும். இளஞ்செழியன், இளையபல்லவன்.

8. இரண்டு நாயகர்களும் சோழ நாட்டைச் சேர்ந்தவர்களல்ல. இளஞ்செழியன் பாண்டிய நாட்டவன். இளையபல்லவன் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன்.பொதுவாகவே, சாண்டில்யனின் நாயகர்கள் 'இன்வின்சிபிள்' வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எத்தகைய சூழலையும் வெற்றி கொள்வார்கள். ஆனால் சூழலின் கடுமையும் அதிலிருந்து 'லாஜிக்கல்'ஆக வெளிவரும் தன்மையை விவரிக்கும் விதமுமே அந்த நாயகர்களின் மதிப்பை உயர்த்தும். அவ்விதத்தில் கடல் புறாவில் லாஜிக் அதிகம் உள்ளது.


யவனராணியில், சாம்பிராணி நாட்டில் இளஞ்செழியன் நிகழ்த்தும் சாகசம் மடசாம்பிராணியால் கூட நம்ப முடியாது! மேலும் யவன தேசத்தில் அவன் தேரோட்டுவதும் பொருள் தீட்டுவதும் அதீத கற்பனைக்கும் மேல் என்றால் மிகையாகாது!.


எப்படியிருந்தாலும், இவையிரண்டுமே மிகச் சிறந்த 'விருந்து' என்பதில் ஐயமில்லை!.


"ஃபர்ஸ்ட் அமாங்க் ஈக்வல்ஸ்" என்ற அடிப்படையில் கடல் புறாவே சிறந்தது என்பதை நடு நிலையாளர்கள் மறுக்க மாட்டார்கள் என ஐயம்திரிபற சொல்லலாம். (கதையின் நாயகன் இளைய பல்லவன் என்பதால் இந்த முடிவு அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்!!!)


உங்கள் கருத்துக்களையும் சொல்லலாமே.

Wednesday, June 17, 2009

ஏன் ? (இது கேள்வி பதில் தொடர்தான்!!)

நான் ஒரு பட்டயக் கணக்கர். அதாவது ஆடிட்டர். திருவிளையாடல் தருமி போன்று எனக்கு கேக்கதான் தெரியும்.

ஆனாலும் தொடர் பதிவு, அதுவும் சுய புராணம் பாடுவது என்பது அல்வா சாப்பிடுவது போல் என்பதால் இதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு மாதத்திற்கும் மேல் பதிவு ஏற்ற முடியாத நிலை. ஆனால் அவ்வப்போது இந்தப் பக்கம் வந்து யார் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வது, தவிர்க்க முடியாத சூழலில்(!) பின்னூட்டமிடுவது என்று ஓடியது ஒரு மாதம். இந்தச் சூழலில் தொடர் பதிவு.

ஆஹா யாராவது நம்மை அழைக்க மாட்டார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தால்.. மருத்துவர் ஐயா அதாவது சுரேஷ் (பழனியிலிருந்து) இழுத்து விட்டார்.


சுரேஷ் (பழனியிலிருந்து) அவர்களே, ஒரு அருமையான லீட் கொடுத்து கூப்பிட்டு இருக்கீங்களே, உங்களுக்கு என் பொன்னான மணியான முத்தான இன்னும் பிறவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எந்தப் பெயர்? ஏன் இந்த கேள்வி? இது ஒரு கேள்வியா ரெண்டு கேள்விகளா? அப்படின்னுல்லாம் கேக்கத் தோணுது. ஆனாலும் அதையெல்லாம் கேக்காம நீங்க கேட்டதுக்கு பதில் சொல்றேன். நோட் பண்ணிக்குங்க.

நமக்கு ஒரு புனைப் பெயர் தேவையா இருந்திச்சா. நமக்கு வரலாற்று நாவல்னா ரொம்பப் புடிக்குமா. அதுலயும் சாண்டில்யன்னா உசுரா. அதுலயும், யவனராணியும், கடல்புறாவும் என்னை ரொம்பவும் கவர்ந்துச்சா. அதுல வர்ற ஈரோக்கள் ரொம்ப சூப்பரான கேரக்டர்களா இருப்பாங்களா.

நமக்கு சொந்த ஊரு காஞ்சிபுரமாச்சா. ஒரு கெத்து கெடக்கணும்னு தோணுச்சா. அதனால பிளாக் டைட்டில் காஞ்சித்தலைவன்னு வச்சனா. அதுக்கு சமமா யோசிச்சனா. இளையபல்லவன் மாட்டிச்சா. இப்படித்தான் வந்தது என் பட்டப்பெயர்.

நாம செலக்ட் பண்ணது நமக்கே பிடிக்காமப் போகுமா. ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா அமஞ்சுதுன்னு தோணுது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அவ்வ்வ்வ்னு கமென்ட் போட்டா அழுதா மாதிரின்னா இன்னிக்கி கூட அப்படியாச்சு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

எந்த கையெழுத்து. சிக்னேசர்னு சொல்லுவாங்களே அதுவா அல்லது பொதுவா எழுதறதா? அப்படி எழுதறதுன்னா எந்த மொழியில? தமிழா, இங்கிலிபீசா, இந்தியா, கன்னடமா, மலையாளமா, துளுவா, கொண்கணியா, ஹனலுலுவா, மடகாஸ்கரா, ஐஸ்லாண்டா, அலஸ்காவான்னு கேக்கலாமுன்னுபாத்தா பதில் சொல்லத்தான் இந்தப் பதிவுங்கறாங்க.

சரி எதுனாலும் என் கையெழுத்து ரொம்ப நல்லாவே இருக்கும்.


4.பிடித்த மதிய உணவு என்ன?

பசி ருசியறியாது. ஆனாலும் சாய்ஸ்னு பாத்தா நுனி வாழையிலையில் பரிமாறப்படும் ஃபுல் மீல்ஸ்தான் ஃபர்ஸ்ட் பிரிஃபெரென்ஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்னாங்க இது. வேற யாரோட வச்சிக்காம என்னோடயேவா நட்பை வச்சிக்கிறது. நல்லா கேக்கறாங்கப்பா. நாங்களே (பட்டயக் கணக்கர்களே) தேவலாம் போல இருக்கே!.
உடனே நட்ப வச்சிக்குவேன். கொஞ்சம் காலம் போன பிறகுதான் தொடர்வதா வேணாமான்னு தெரியும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில் உவ்வே. அருவியில் ஊலலல்லா..

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவரைத்தான்!

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் பிடிக்காது. பிடிக்காத விசயம் பிடிச்சதுன்னு கடிக்கலாம்னு பாத்தா முடிய மாட்டேங்குதே.

பிடித்தது விடா முயற்சி. பிடிக்காதது அதன் காரணம் பற்றி எழும் கூடுதல் சுமை.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என்னங்க இது என் சரிபாதியும் என்னில்தானேங்க இருக்குது. அப்படின்னா எந்த சரிபாதி? வலதா இடதா, மேலேயா, கீழேயான்னு வெவரமா கேளுங்கன்னு கேக்கலாம். சரிபாதிங்கறது வாழ்க்கைத் துணைன்ற பொருள் கொண்டு பதில் சொல்றேன்.

பிடித்தது: வேறுபட்ட ரசனைகள்

பிடிக்காதது: எல்லாவற்றையும் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்து என்னை சோம்பேறியாக்குவது.


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

புதசெவி.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை வேட்டி. சென்னை வெயிலுக்கு இதுவே சாஸ்தி...

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிடரைப் பார்த்துக் கொண்டு, கீபோர்ட் ஒலியையும் மின் விசிறியின் ஒலியையும் மற்றும் பரவியுள்ள நிசப்தத்தின் ஒலியையும் கேட்டுக்கொண்டு.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

மல்டிகலர்னு சொன்னா கோச்சுப்பீங்களான்னு தெரியல. ஆனா பிடித்த வர்ணம் நீலம். ஆகவே நீல வர்ண பேனான்னு வச்சுக்கலாம்.

14.பிடித்த மணம்?

குழந்தையின் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எல்லாரையும் எல்லாரும் அழைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நான் அழைக்கலாம் என்று நினைப்பது வாத்தியார் அவர்களை. முன்னமே சினிமா தொடருக்கு அழைத்திருக்கிறேன். அப்போது ரொம்ப பிசின்னு சொன்னார். இப்போ என்னன்னு தெரியல பாப்பம்.

அவரைப் பத்தி தெரிஞ்சிக்கலாமேன்னுதான்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

எதைத் தள்ள எதை அள்ள அப்படின்னு ஒரு சொலவடை உண்டு. நண்பர் சுரேஷ் (பழனியிலிருந்த்) அவர்களுடைய கனவுகளே வலைப்பூவில் உள்ள அனைத்து மலர்களுமே வாசம் வீசும் செண்டு. அதன் மகரந்தத்தில் மயங்கிய நான் ஒரு வண்டு. அவரது எழுத்தில் எல்லா சுவைகளும் உண்டு. எப்பொழுதும் அவர் எழுத்தில் களிப்பேன் கண்டு (கவித கவித).
இதன்னியில் அவர் மருத்துவம் சார்ந்து எழுதிய கேன்சர் பற்றிய தகவல் மிக மிக உபயோகமானதாக இருந்தது.


17. பிடித்த விளையாட்டு?

அ அ விளையாட்டு.

18.கண்ணாடி அணிபவரா?

ஆம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நல்ல படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்

21.பிடித்த பருவ காலம் எது?

யாருக்குன்னு நெறய பேர் கேட்டுட்டாங்க. ரெண்டு மூணு படிச்சிருக்கேன். நல்லா இருந்தா மாதிரிதான் இருந்தது.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

போன வாரம் வரை கம்பெனி செக்ரடரி தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். இப்போது சிவகாமியின் சபதம் (ந்த் டைம்) படித்துக் கொண்டிருக்கிறேன்.

இது தவிர டாக்டர் மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தாரின் தமிழ் நாட்டு வரலாறு (சோழப் பெருவேந்தர் காலம்) ஆகியவை.

ஆங்கிலப் புத்தகங்கள் மிக அரிதாகத்தான் படிப்பது வழக்கம். நீண்ட காலத்திற்கு முன் ஜான் கிரிஷாம் எழுதிய தி ஃபர்ம் மற்றும் தி ரெயின் மேக்கர் மறக்க முடியாதவை.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதும் இல்லை.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தவை குழந்தைகளின் மழலை மற்றும் சிரிப்பு. பறவைகளின் சத்தம். இளையராஜாவின் இன்னிசைப் பாடல்கள். நிசப்தம்.

பிடிக்காதது எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வேலை விஷயமாக லூதியானா சென்ற போது வாகா பார்டர் சென்றிருக்கிறேன். இதுவரை இந்திய எல்லையைத் தாண்டியதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஆஹா, இதைப் பத்தி ஒரு தொடரே போடலாமே. ஆனாலும் அவையடக்கம் பற்றி 'ஏகசந்தாக்ரஹி' என்று கல்கி அவர்கள் ஒரு வார்த்தையாடல் செய்வார். அதைப் போன்று எந்த ஒன்றைப் பற்றியும் உடனடியாக புரிந்து கொள்வது எனது தனித் திறமை என்று கருதுகிறேன். பிறகு.... (இப்போதைக்கு இது போதும்)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏமாற்றுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எல்லா மலைவாசஸ்தலங்களும்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இருந்தா இப்படி இருக்கணும்னு எல்லாரும் சொல்றா மாதிரி இருக்கணும்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பதிவு போடுவதுதான்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

ஒரு வரி எப்படிங்க. வருமான வரி, வணிக வரி, சுங்கவரி, சேவை வரி, சாலை வரி, கல்விவரி, உற்பத்தி வரி, நுழைவு வரின்னு வரிவரியா வருதுங்களே.

ஆக்சுவலா இதை சொல்லலாம்னு நினைக்கிறேன்.

"முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை வெல்லாது" ஆகவே, முயன்று வாழ்க்கையை 'வாழ்வோம்'.


அப்பாடா ஒரு வழியா எழுதி முடித்து விட்டேனுங்க. இனி உங்க பொன்னான கருத்துக்களை கண்டிப்பா சொல்லிட்டு போங்க.

ஏன் ? (இது கேள்வி பதில் தொடர் அல்ல..)

இப்போதெல்லாம் சினிமா டைட்டிலுடன் ஒரு வாக்கியம் வருவது ஃபேஷன் ஆகி விட்டது. சிவாஜி, தி பாஸ் என்பது போல்.


இதை ஏன் பதிவில் அமல் படுத்தக் கூடாது என்ற எண்ணம் எழுந்த போது வந்ததுதான் இந்த டைட்டில்.


ஏன் என்ற கேள்வியை வைத்து ஏன் டைட்டில் வைக்க வேண்டும் என்ற கேள்வி ஏற்பட்ட போது தோன்றியதுதான் இந்த சப் டைட்டில்.


ஏன் என்றால் இப்போது 32 கேள்வி பதில் தொடர் ஓடிக்கொண்டிருக்கிறதல்லவா? ஏன் என்ற பதிவு கேள்வி பதில் தொடருக்கானதாக இருக்கலாம் என்று யாராவது இதைப் படிக்காமல் போய்விட்டால் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த சப் டைட்டில்.


சரி ஏன் ஏன் என்ற கேள்வி நீங்கள் கேட்கலாம் தப்பில்லை. நான் அதற்கு ஏன் ஏன் கூடாது என்று பதிலிறுக்கலாமல்லவா?


ஏன் இப்போதெல்லாம் இளைய பல்லவன் மொக்கையாகவே எழுதுகிறார் என்ற கேள்வியும் உங்களுக்குத் தோன்றலாம். ஏன் எழுதக்கூடாது என்று நான் நினைப்பதில் தப்பில்லையல்லவா? மொக்கையில்லாத பதிவு, காதலில்லாத வாழ்க்கையைப் போன்றது என்பது நீங்கள் அறிவீர்கள்தானே.


இதை ஏன் படித்துத் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆனால்...

எனக்கு மட்டும் இதன் சம்பந்தமாக ஏன் ஒன்றும் தோன்ற மாட்டேன் என்கிறது என்றுதான் தெரியவில்லை.


ஆகக் கூடி, ஏன் பதிவுலகிற்கு வந்தோம் என்று நீங்கள் எண்ணுவீர்களேயானால் அதுவே இந்தப் பதிவின் வெற்றியாக ஏன் இருக்கக் கூடாது என்று நான் ஏன் எண்ணக்கூடாது.


டிஸ்கி:-

1. இப்போது எத்தனை ஏன் என்று எண்ணுங்கள்...

2. பின்னூட்டங்களில் ஏன் என்ற வார்த்தையைத் தவிர்க்கவும்.

Saturday, June 13, 2009

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன் ! ! !

வலைப்பூவும், தமிழ்மணமும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருக்க
வாராமல் வந்துகொண்டிருந்தேன் இத்துணை நாளாய்.

ஆம்
என் வலைப்பூ வழியாக வாராமல், பதிவுலகத்தின் பக்கங்களை
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வப்போது.
ஏக்கங்கள்...
என்னால் எழுத முடியவில்லையே என்று
எண்ணங்கள்....
எதுவும் தொடரமுடியவில்லையே என்று...

அழுத்தும் பணிச்சுமைகள்
அன்றாடம் ஆறு மணி நேரம்
அதுதான் ஓய்வின் சமயம்

இடையில் ஒரு தேர்வுக்கான தயாரிப்பு
இத்துணை இக்கட்டான நிலையிலும்...
இதுதான் வாழ்க்கை
இப்படியான சூழலின்
இறுக்கம் குறைந்திருக்கிறது
இப்போது...

நண்பர்களும் அன்பர்களும்
நலமென்று தெரிகிறது
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்
நன்றாய் வளர்கிறது வலைப்பூங்காவனம்.
நான் மட்டும்....


ஒன்று புரிந்தது...

வலைப்பூவில்லா வாழ்க்கை
வாழ்க்கையில்லா வாழ்க்கை..


இதோ...

வந்து கொண்டிருக்கிறேன்..மீண்டு(ம்)
வந்துகொண்டிருக்கிறேன்...
வந்துவிடும் சக்கர வியூகமும், மொக்கைக் கவிதைகளும்...

வலைப்பூவே நீ வாழ்க வாழ்க..

என்னைக் காணாமல் ஏங்கிய (?) அன்பு நெஞ்சங்களுக்கும்
எண்ணத்தை வெளிப்படுத்திய சுரேஷ் (பழனியிலிருந்து), சதீசுகுமார், தீனதயாளன் அவர்களுக்கும்
என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நான் ஆதவனுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

டிஸ்கி: இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஓட்டும் போடுங்க..

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன்!!!

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன்!!!

வலைப்பூவும், தமிழ்மணமும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருக்க
வாராமல் வந்துகொண்டிருந்தேன் இத்துணை நாளாய்.

ஆம்
என் வலைப்பூ வழியாக வாராமல், பதிவுலகத்தின் பக்கங்களை
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வப்போது.
ஏக்கங்கள்...
என்னால் எழுத முடியவில்லையே என்று
எண்ணங்கள்....
எதுவும் தொடரமுடியவில்லையே என்று...

அழுத்தும் பணிச்சுமைகள்
அன்றாடம் ஆறு மணி நேரம்
அதுதான் ஓய்வின் சமயம்

இடையில் ஒரு தேர்வுக்கான தயாரிப்பு
இத்துணை இக்கட்டான நிலையிலும்...
இதுதான் வாழ்க்கை
இப்படியான சூழலின்
இறுக்கம் குறைந்திருக்கிறது
இப்போது...

நண்பர்களும் அன்பர்களும்
நலமென்று தெரிகிறது
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்
நன்றாய் வளர்கிறது வலைப்பூங்காவனம்.
நான் மட்டும்....


ஒன்று புரிந்தது...

வலைப்பூவில்லா வாழ்க்கை
வாழ்க்கையில்லா வாழ்க்கை..


இதோ...

வந்து கொண்டிருக்கிறேன்..மீண்டு(ம்)
வந்துகொண்டிருக்கிறேன்...
வந்துவிடும் சக்கர வியூகமும், மொக்கைக் கவிதைகளும்...

வலைப்பூவே நீ வாழ்க வாழ்க..

என்னைக் காணாமல் ஏங்கிய (?) அன்பு நெஞ்சங்களுக்கும்
எண்ணத்தை வெளிப்படுத்திய சுரேஷ் (பழனியிலிருந்து), சதீசுகுமார், தீனதயாளன் அவர்களுக்கும்
என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நான் ஆதவனுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

டிஸ்கி: இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஓட்டும் போடுங்க..