Wednesday, June 24, 2009

சக்கரவியூகம் - இரண்டாம் பாகம் . . . 6

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிச்சூழல் காரணம் பற்றி இத்தொடரை பதிவேற்றவியலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். இப்போது மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். இம்முறை தடை வராது என்றே நம்புகிறேன். சில காலமாகிவிட்டபடியல், சக்கரவியூகத்தின் இதுவரை நடந்தவற்றை ஒரு சிறு பகுதியில் அலசி விடலாம்.


இதுவரை

கதையின் காலம் கி.பி.1308 முதல்... காஞ்சிக் கடிகையில் பயிற்சியை நிறைவு செய்த முக்கிய மாணவர்களுக்கு அதன் தலைமைஆசிரியர் சக்கரவியூகத்தைப் பற்றி விளக்க முற்படுகிறார். ஆனால் முழுமையாகச் சொல்லவில்லை. பயிற்சி முடிந்து பாண்டிய இளவல் வீர பாண்டியனும், திருவெள்ளரையைச் சேர்ந்த இளவழுதியும் திருவெள்ளரைக்குச் செல்கின்றனர். அங்கு பாண்டிய நாட்டின் நிலையை விளக்குகிறார், இளவழுதியின் தந்தை. இந்த நிலையில் பாண்டிய நாடு செல்கின்றான் வீரபாண்டியன் அவனுடன் செல்கிறாள் இளவழுதியின் சகோதரி கயல்விழி. அங்கே அரசரது அந்தரங்க ஆலோசனையில் வீரபாண்டியனுக்குத்தான் பட்டம் என்று முடிவாகிறது. ஆனால் அரசர் திடீரென மாண்டுவிடவே வீரபாண்டியனின் சகோதரன் சுந்தர பாண்டியன் ஆட்சிப் பீடமேற உள்ளடி வேலைகளைச் செய்கிறன்.

பயிற்சி முடிந்து ஸ்ரீரங்கம் சென்ற ஹொய்சள மன்னன் வல்லாளனை இளவழுதி சந்தித்து அவனது உதவியை வீரபாண்டியனுக்குக் கேட்கிறான். உதவுவதாக மேலுக்கு வாக்களித்தாலும்,உள்ளே வேறு திட்டமிருக்கிறது. இளவழுதியின் தந்தையும், அத்தை மகள் தேன்மொழியும் கொல்லிமலையில் ரகசியப் படையை தயார் செய்து வருகிறார்கள்.

இடையில் சிதம்பரத்தில் அனைவரும் சக்கரவியூகத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையான சக்கரவியூகம் என்ன என்பது இளவழுதிக்குத்தான் தெரிகிறது.

ஹொய்சள நாட்டை அடைந்த வல்லாளன் பாண்டியர்களை அழிக்க திட்டமிடுகிறான். மாலிக் கஃபூருடன் இணையவும் முடிவு செய்கிறான். பாண்டிய நாட்டை, வீரபாண்டியனுக்க்கும், சுந்தர பாண்டியனுக்கும் சமமாகப் பிரித்து அளிக்க அவர்களது மாமன் விக்ரம பாண்டியன் முயற்சிக்கிறான்.

இனி...

====

அத்தியாயம் - 6: இரு தலை நகரங்கள்

பாண்டியர் வம்சம் சோழர்களைப் போலவோ, பல்லவர்களைப் போலவோ நேர் வம்சமன்று. பல்வேறு கிளைகள் அதிலுண்டு. ஒன்று பட்டுப்போனாலும் அடுத்தது தழைக்குமாறு அமைக்கப் பட்டிருந்தது பாண்டிய வமிசம். அதனால்தான் முதற்சங்கம் தொட்டு தமிழகத்தின் கடைசி அரசு வரை பாண்டியர்கள் ஆட்சி செய்யமுடிந்தது. சோழர்களோ, பல்லவர்களோ ஒரு கால கட்டத்திற்கு மேல் தொடர்ந்து ஆட்சியிலிருக்க முடியவில்லை.

பாண்டியர்களில் ஒரே சமயத்தில் ஆறு இளவரசர்கள் கூட இருந்திருக்கிறார்கள். ஆனால் அரசன் ஒருவன்தான். தலை நகர் மதுரை ஒன்றுதான். மற்றவர்கள் மைய அரசிலோ, மற்ற குறிப்பிட்ட கேந்திரங்களிலோ மதுரை அரசனுக்கு உட்பட்டு தங்கள் அதிகாரத்தை செலுத்திவந்தனர். அத்தகைய கிளை அரசர்களுள் ஒருவர்தான் இந்த விக்ரம பாண்டியன். எப்போதோ விக்ரம பாண்டியனுடைய முன்னோர்களுக்கு மதுரை அரியணையின் தொடர்பு அற்றுவிட்டாலும், கொள்வினை கொடுப்பினை காரணமாக நெருங்கிய உறவு மட்டும் இருந்து வந்தது. அந்த வகையில் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் விக்ரம பாண்டியன் மேல் மதிப்பு இருந்து வந்தது. அதனடிப்படையிலேயே, பாண்டிய ராஜ்ஜியத்தை பிரிக்க விக்ரமன் சொன்ன யோசனையை இருவராலும் தட்ட முடியவில்லை. வீரபாண்டியனுக்கு மட்டும் ராஜ்ஜியம் பிளவு படுவது பிடிக்கவில்லை. ஆனாலும் அரியணை ஏறும் ஆசையும் விடவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக தத்தளித்தான்.


"மாமா, இந்த யோசனை எனக்கு சரியாகப் படவில்லை. ராஜ்ஜியத்தைப் பிரிப்பதென்பது என் தந்தையாருக்கு ஏற்புடையதாக என்றுமே இருந்ததில்லை. எனது பாட்டனார் ஜடாவர்மராகிய சுந்தரபாண்டியத் தேவர் எவ்வளவோ முயற்சியெடுத்து இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவினார். அந்த கஷ்டமெல்லாம் வீணாகிவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அதற்காக அரியணையை மட்டும் சுந்தரனுக்கு விட்டுத்தருவேன் என்று கருத வேண்டாம். எங்கள் தந்தையின் விருப்பம் நான் அரியணையேற வேண்டுமென்பதுதான் என்பது நமக்குத் தெரியுமல்லவா? தெரிந்தும் சுந்தரன் போடும் நாடகத்திற்கு நீங்கள் துணை போகிறீர்களோ என்று ஐயுறுகிறேன். என் எண்ணத்தைத் தெளிவாக்கிவிட்டேன். தவறாக இருந்தால் மன்னியுங்கள்" என்று எழ முயற்சித்தான்.

அவனை அமர்த்திய விக்ரமபாண்டியன், "சற்றுப் பொறு வீரா. இவையனைத்தும் எனக்கும் தெரிந்ததுதான். நானும் என் இள வயதிலேயே உன் பாட்டனாருடன் எத்தனையோ போரில் பங்கு பெற்றிருக்கிறேன். எனக்கும் இந்த ராஜ்ஜியம் உருவானதில் பங்குண்டு. அத்தகைய ராஜ்ஜியத்தை பங்கு போட வேண்டும் என்று நான் கூற வேண்டிய நிலை வந்துவிட்டதை எண்ணி நான் வருந்துவதை உங்களால் உணர முடியாமல் போகலாம். ஆனால் ஆபத்தர்மம் என்று ஒன்று உண்டு. அதாவது நமக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் நாம் பிழைத்திருக்க செய்யவேண்டிய செயல்கள் அனைத்தும் நியாயமானவையே. நம் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு சிங்கத்துடன் சண்டையிடும் போது அந்த சிங்கத்தைக் கொல்வது ஆபத் தர்மம்.

அதைப் போன்று நாம் இப்போது இக்கட்டான சூழலில் இருக்கிறோம். பாண்டிய தேசமும் அத்தகைய இக்கட்டான சூழலில் இருக்கிறது. சற்று எண்ணிப்பார். உன்னைச் சுற்றி உள்ளவர்களை. காஞ்சியில் காடவன் நமக்கு அடங்கியிருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிர்க்க ஆயத்தமாக இருப்பான். ஹொய்சள வல்லாளன் நம் மீது வஞ்சம் தீர்க்க சரியான தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கிறான். மேற்கே கேரளவர்மனும் அதே நிலையில்தான் இருக்கிறான். அவனது பாட்டனார் வீர ரவிக்கு உனது பாட்டனார் இழைத்த கொடுமைக்கு வஞ்சம் தீர்க்கும் நிலையில்தான் இருக்கிறான். ஆனால் அவனிடம் அவ்வளவு படைத்திறமில்லை. இலங்கையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எப்போதும் நம் மீது அவர்களுக்கு ஒரு கண்.

இந்த அபாயகரமான சூழலில் குலசேகரபாண்டியர் நம்மை விட்டுப் பிரிந்து விட்ட துர்பாக்கியமான நிலை ஏற்பட்டது. பின்னர் நீங்களிருவரும் இந்த ராஜ்ஜியத்தின் வாரிசுரிமைக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். சுந்தரன் அவ்வளவு திறமையற்றவனல்லன். உன் தந்தைக்கு அவனைக் கண்டால் பிடிப்பதில்லை. அவ்வளவே. உன்னையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. நீங்கள் இருவருமே இணைந்திருப்பதுதான் இன்றைய பாண்டிய அரசுக்கு மிக்க நன்மை பயப்பதாக இருக்கும். இதன் பொருட்டே நான் இரு தலை நகரங்களை உருவாக்கத் தீர்மானித்தேன்."

"சரியாகச் சொல்லுங்கள் மாமா. இரு தலை நகரங்களல்ல. இரு ராஜ்ஜியங்கள்" திருத்த முயன்றான் சுந்தர பாண்டியன்.

"இல்லை சுந்தரா. நான் சொன்னதுதான் சரி. இரு தலை நகரங்கள்தான். தேசம் ஒன்று. தலை நகரங்கள் இரண்டு."

"எனக்குப் புரியவில்லை" சுந்தரன் சொன்னான் அழுத்தம் திருத்தமாக.

"எனக்கும்தான்" தொடர்ந்தான் வீர பாண்டியன்.

சிறிது நேரம் மௌனத்திலிருந்த விக்ரமபாண்டியன், "நல்லது. வீரா, சுந்தரா, உங்களுக்குப் புரிய வேண்டியது மிக முக்கியமானது. அதன் அடிப்படையில்தான் இந்த பாண்டிய தேசத்தின் ஆயுள் நிர்ணயிக்கப்படும். கவனமாகக் கேளுங்கள். நீங்கள் இருவரும் பாண்டிய ராஜ்ஜியம் தழைத்தோங்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களல்லவா?"

"ஆம்" ஒரே குரலாய் ஒலித்தது இருவர் குரலும்.

"மகிழ்ச்சி. கேளுங்கள். பாண்டியர்களது பகைவர்களைப் பற்றி சற்று முன்னர்தான் சொன்னேன். இப்போது அந்தப் பகைவர்களை முழுமையாக அழிக்க வேண்டியது இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். ஆகவே, உள்ளுக்குள் நீங்கள் இருவரும் பாண்டிய தேசத்தின் எதிர்காலத்திற்கு பங்கம் வரும் பட்சத்தில் ஒன்று சேர வேண்டும். செய்வீர்களா"

"நிச்சயமாக" மீண்டும் சேர்ந்தது இருவர் குரலும்.

"சரி. தொடர்ந்து கேளுங்கள். இப்போது தேசம் பிளவு படுவது போன்ற தோற்றம் வெளியே தெரியும். ஆனால் உள்ளே நீங்கள் இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் பிளவு பட்டிருக்கிறீர்கள் என்றெண்ணி, நம் பகைவர்கள், முக்கியமாக ஹொய்சளர்கள் வலுவில்லாத படையுடன், அதாவது பாதி பாண்டியப் படையை எதிர்க்க வேண்டிய அளவிலான படைகளுடன் வருவர்கள். அப்போது நாம் சேர்ந்து தாக்கினால், ஹொய்சளர்களை வீழ்த்தி விடலாம்" அவர்கள் வீழும் போது ராஜ்ஜியம் மேலும் விரிவடையும். மற்றவர்களையும் வீழ்த்தி விடலாம். புரிந்ததா"

இருவர் முகத்திலும் திருப்தியடைந்ததற்கான அறிகுறி காணப்பட்டது. புன்னகையுடன் தலையசத்தனர் இருவரும். இத்தனை விவரமாகப் பேசியவர்கள், ஒரு தீவிர ஆபத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. சுந்தரனுக்கு அது ஆபத்தாகவே தெரியவில்லை. வீரபாண்டியனுக்கோ அது வல்லாளனின் தலையெழுத்து என்று எண்ணியிருந்துவிட்டான். விக்ரமபாண்டியனோ அந்த அளவுக்கு யோசிக்கவில்லை. அங்கேதான் விதியின் கோரச் சிரிப்பு விஸ்தாரமாகக் கேட்டது. அது "மாலிக் கஃபூர்" "மாலிக் கஃபூர்" என்று சத்தமிட்டது போல் தோன்றியது. ஆனால் அங்கே கூடியிருந்தவர்களுக்கு அது கேட்கவில்லை போலும்.

ஒருவேளை கேட்டிருந்தால் நான் இந்தக் கதையை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். நீங்களும் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்!

(தொடரும்)

11 comments:

சதீசு குமார் said...

'ஒற்றுமையே பலம்'! தமிழினத்திற்கு தற்போது அவசியம் தேவைப்படுகின்ற ஓர் அருமருந்து!

அதனை தங்களுடைய வரலாற்றுத் தொடர் நன்கு எடுத்துரைக்கின்றது..

☀நான் ஆதவன்☀ said...

ஆகா ஒரு வழியா வந்திட்டீங்களா. கதையின் முன் சுருக்கம் கொடுத்தது நல்லதா போச்சு. திரும்ப நினைவூட்ட ஒரு வாய்ப்பு.

வழக்கம் போல சுவாரஸ்யமான பாகம். தொடருங்கள்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//பாண்டியர்களில் ஒரே சமயத்தில் ஆறு இளவரசர்கள் கூட இருந்திருக்கிறார்கள். ஆனால் அரசன் ஒருவன்தான். தலை நகர் மதுரை ஒன்றுதான்.//


பன்ஞ் டயலாக் பட்டையக் கிளப்புதே தல..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நான் சொன்னதுதான் சரி. இரு தலை நகரங்கள்தான். தேசம் ஒன்று. தலை நகரங்கள் இரண்டு."
//

ஆஹா..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இரண்டு தலைநகரங்கள் அமைத்தால்

நிர்வாகம் எப்படி செய்டிருப்பார்கள்?

அதுவும் வெளிநாட்டு ஒற்றர்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு..,

பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்,,

இளைய பல்லவன் said...

நன்றி சதீசுகுமார். உண்மையான வார்த்தைகள்.

இளைய பல்லவன் said...

ஆமாம் ஆதவன். எனக்கும் ஒரு ஃப்ளோ கெடச்சுது. இனி நிக்காது. சக்கர வியூகம் தொடர்ந்து சுழலும் !!!

இளைய பல்லவன் said...

ஆஹா, நான் ஒண்ணு எழுத நீங்க ஒண்ணா பாக்குறீங்களே தல..
வரலாறு திரும்புதுங்கறது இதுதானோ..

இளைய பல்லவன் said...

சுரேஷ்,
வரலாறு சில சமயம் கதைகளை விட சுவாரசியமும் திருப்பங்களும் நிறைந்தது. நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பை சக்கரவியூகம் நிறைவேற்றும் என்றே நம்புகிறேன்!!

RamKumar said...

ponniyin selvan cartoonin trailer

http://www.youtube.com/watch?v=ohg8W_n2_kk

thamilarasan c said...

பாண்டியர்கள் மள்ளர்கள்(மருத நில மக்கள் தேவேந்திர குல வேளாளர்)அல்லது பள்ளர்கள் என்ற வரலாற்று உண்மையை மறைத்து நீங்கள் எழுதுவது மிக பெரிய துரோகம் என்பதை நினைத்து பாருங்கள்