Wednesday, April 15, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 5

அத்தியாயம் 5 : அரசாளும் ஆசை

கலை நயம் கொஞ்சும் ஹொய்சள அரண்மனையின் அந்தரங்க மண்டபத்தின் தூண்களில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக பதுமைகளைச் செதுக்கி வைத்திருந்தனர். புதிதாக அங்கு வருபவர்கள் அவை உண்மையான மகளிர் என்றே எண்ணுவர். அத்துணை உயிரோட்டமுள்ளவை அந்தப் பதுமைகள். அன்று மன்னன் பகன்ற மொழிகளைக் கேட்ட அவையோர் பதுமைகளாகச் சமைந்து நின்றனர் சில நேரம். மாலிக் கஃபூரை தக்ஷிணபாரதமே தடுத்து நிறுத்த முயற்சிக்கும் வேளையில் அவனை எதிர்க்கப் போவதில்லை என்று அரசன் கூறுவது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இவனை நம்பி இன்னும் இந்த தேசத்தில் இருப்பது தவறோ என்று கூட சிலர் எண்ணத் துவங்கினர்.

மன்னனின் முடிவை மற்றையோர் எதிர் பார்க்கவில்லையானாலும், அவன் குணத்தை உணர்ந்திருந்த மகாமாத்யருக்கு மட்டும் அதிர்ச்சியளிக்கவில்லை. அவன் தொடர்வதை எதிர்ப்பார்த்திருந்தார்.

"உங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் மகாமாத்யர் இதை எதிர்பார்த்தார் என்பதை அவர் முகமே எடுத்துக்காட்டுகிறது. நண்பர்களே, மாலிக் கஃபூரை எதிர்க்கப் போவதில்லை என்று சொன்னேனே தவிர அவனை அழிக்கப் போவதில்லை என்று சொல்லவில்லையல்லவா?" என்று நிறுத்தினான்.

குழப்பத்திலாழ்ந்திருந்தவர்களுக்கு மன்னனின் தெளிவுரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் அதை உணரும் நிலையிலேயே யாரும் இல்லை. மாலிக் கஃபூரை எதிர்க்கப் போவதில்லை என்பது சிங்கத்தின் வாய்க்குள் தானாகவே தலையைத் தருவது போன்றது என்பதை அவர்கள் உணர்ந்தேயிருந்தனர். எதிர்ப்பதற்கும் அழிப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை கண்டறியும் திறனற்றவர்களாயிருந்தார்கள். மகாமாத்யரும் மன்னரே தொடர்வது நல்லது என்று மௌனவிரதம் கடை பிடிக்கத் துவங்கினார்.

இவர்களின் நிலை தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது வல்லாளனுக்கு. அதன் காரணம் பற்றி சிறு புன்னகை பூத்தவனின் உத்தரவுகள் தெளிவாக இருந்தன. "நண்பர்களே, இனி எதுவும் நான் சொல்வதற்கில்லை. செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே எண்ணுகிறேன். சேனாபதியாரே வட எல்லை தண்ட நாயகனை அவன் படைகளுடன் வடமேற்கில் நிற்கச் சொல்லுங்கள். வட எல்லையில் மேலுக்கு சில வீரர்களை நிறுத்துங்கள். யாராவது வரும் போது அவர்களை தடுப்பது போல் தடுத்து நாட்டுக்குள்ளே வரச் செய்யுங்கள். இப்போதைய முக்கியத் தேவை வட எல்லையிலிருந்தும் இங்கிருந்தும் உடனடி தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும். ஆகவே குதிரை வீரர்களை வழி நெடுகிலும் நிறுத்திவையுங்கள். வட எல்லை தாக்கப் பட்டதும் நம் அடுத்த கட்ட நடவடிக்கை துவங்கும். இனி அனைவரும் செல்லலாம். மகாமாத்யரே தங்களை மீண்டும் மாலையில் சந்திக்கிறேன். " என்று கூறி எழுந்தான்.

மகாமாத்யர் மட்டும் "மன்னன் சக்கர வியூகம் அமைக்கப்போகிறான். ஆனால் முழுமையாகப் பயிலவில்லை போல் இருக்கிறது. மாலை சந்திப்பில் தெளிவு படுத்திவிட வேண்டும்" என்று எண்ணியவாறு சென்றார்.

=====

ஹொய்சள தேசத்திற்கு வந்து சில காலம் இங்கேயே தங்கிவிட்டதால் பாண்டிய நாட்டின் நிகழ்வுகளை கவனிக்கத் தவறிவிட்டோம். ஆனாலும் பாதகமில்லை. இப்போதே பாண்டிய நாட்டின் நிலையை அறிய மதுரைக்குப் பயணிப்போம்.

மண் மணம் மாறா மதுரையம்பதி மன்னர் மாற்றத்தால் மாறிவிடப் போகிறதா என்ன? குலசேகரப் பாண்டியர் இறந்துபட்ட பிறகு நடந்த அரியணைப் போர் மக்கள் மத்தியில் இல்லாமல் அரண்மனைக்குள்ளேயே நடந்து விட்டதால் வெளியில் விஷயம் அவ்வளவாகக் கசியவில்லை. சுந்தர பாண்டியன்தான் அரியணை ஏற வேண்டுமென்று அமைச்சர் குழு முடிவெடுக்க, வீர பாண்டியனும் அவன் மாமன் விக்ரம பாண்டியனும் அவையை விட்டு உடனே வெளியேறி விட்டாலும் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட வில்லை.

மீண்டும் அவையைக் கூட்ட வேண்டும் என்று வீர பாண்டியனும் விக்ரம பாண்டியனும் வற்புறுத்தவே சில தினங்களுக்குப் பிறகு அவை கூடியது. அப்போது நடந்த ஆலோசனையில் வீர பாண்டியனுடைய உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் யார் அடுத்த அரசர் என்ற கேள்விக்கு பதிலில்லை. சுந்தரன் பிடிவாதமாக இருந்தான். வீரன் அமைதியாக இருந்தாலும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று நின்று கொண்டிருந்தான். எந்தப் பக்கமும் முன்னேற்றமில்லாமல் ஸ்தம்பித்தது சபை.

அன்று இரவு விக்ரம பாண்டியன் சுந்தரனையும், வீரனையும் தனிமையில் சந்தித்தான். சுந்தரனிடம் நிலைமையை விளக்கினான். எல்லாம் தெரிந்தவன் ஒன்றும் பேசாமல் நின்றான். வீரனின் பொறுமை எல்லை மீறியது. ஏதோ சொல்ல வந்தவனை அடக்கினான் விக்ரம பாண்டியன்.

சிறிது நேர அமைதியைப் பிளந்து கொண்டு வந்தது விக்ரமனின் யோசனை. அது பிளந்தது பாண்டிய தேசத்தை. வேண்டாமென்று சொல்ல மற்ற இருவருக்குமே மனமில்லை. அரசாளும் ஆசை விடவில்லை அவர்களை.

(தொடரும்)

3 comments:

SUREஷ் said...

//மண் மணம் மாறா மதுரையம்பதி மன்னர் மாற்றத்தால் மாறிவிடப் போகிறதா என்ன?//

கலைஞர் பாணிக்கு வந்துவிட்டீர்களா...

இளைய பல்லவன் said...

///
SUREஷ் said...
//மண் மணம் மாறா மதுரையம்பதி மன்னர் மாற்றத்தால் மாறிவிடப் போகிறதா என்ன?//

கலைஞர் பாணிக்கு வந்துவிட்டீர்களா...
///

அண்ணே,

என்னண்ணே சொல்றீய. ஒண்ணுமே வெளங்கலயேண்ணே!

தெளிவாத்தேஞ்சொல்லிப்போடுங்கண்ணே!!

நான் ஆதவன் said...

அப்ப சக்கர வியூகத்த தொடங்கிட்டீங்க போல...இனி மேலும் வேகம் எடுக்கட்டும்