'அட்சம்பேட்ட (அடிசன்பேட்டை) யாராவது கீறீங்களாபா?' என்ற கண்டெக்டரின் கத்தல் அவன் காதுக்கருகில் ஒலித்து தூக்கத்தைக் கலைத்தது. என்ன செய்வது சீட் கிடைக்காமல் பின்படிக்கெட்டுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்திருந்தான் அப்படியும் களைப்பில் தூங்கிவிட்டான். வெகு நாட்களுக்குப் பிறகு அதாவது ஏழு வருடங்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் வருகிறான்.
எத்தனை காலமானாலும் உலகமே தலைகீழானாலும் காஞ்சிபுரம் மட்டும் மாறப்போவதில்லை. அதே பஸ் ஸ்டாண்டு. கொஞ்சம் விரிவாக்கம் செய்திருந்தாலும் அந்த பழைய நாற்றம் போகவில்லை. சக்தி கபேயின் நசுங்கிய டம்ளர்கள், சுற்றியுள்ள இனிப்பகங்கள், பழக்கடைகள்...
வெளியே வந்தால் ராஜவீதிகளை ஒன் வே செய்திருக்கிறார்கள். அட, சிக்னல் கூட போட்டிருக்கிறார்கள். அப்படியே கங்கனாமண்டபம் (கங்கை கொண்டான் மண்டபம்) வழியாக ஏகாம்பர நாதர் கோவிலுக்கு அருகில் உள்ள அவன் வீட்டிற்குச் சென்றான்.
அய்யப்ப பக்தர்களின் கூட்டமும், வடமாநில மக்களின் கூட்டமும் சேர்ந்து அந்தப் பகுதியே கசகச என்றிருந்தது. படிக்கும் காலங்களில் மதியான நேரத்தில் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டால் போதும். படிக்கும் மூட் இருந்தால் படிப்பு சூப்பராக வரும். தூங்கும் மூட் இருந்தால் அதுவும் தானாக வரும். பெரும்பாலும் இரண்டாவது மூட் தான்.
வீட்டிற்கு வந்து சம்பிரதாயமாகப் பேசிவிட்டு குளியல் டிபன் முடித்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். இவன் ஒட்டுறவே இல்லாமல் இருந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்ததன் காரணம் அவன் வீட்டில் தெரிந்தே இருந்தது.
நேராக வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டான். அவன் வழக்கமாக எடுக்கும் கடைதான். இவன் வருகைக்காகவே நல்ல சைக்கிள் வைத்திருப்பார் அந்த கடைக்காரர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இவனை மறக்க வில்லை என்பதை அவர் பேச்சு காட்டியது. 'இன்னாபா, இத்தன்நாளா எங்க பூட்ட. ஆளயே காணமே. நல்லாக்கிறயா' கடைக்காரர் கேட்டது தான் இன்னும் அயல்மனிதனாகவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது.
'நல்லா இருக்கறங்க. வேல ஜாஸ்தியா இருந்துட்டதால வரமுடில. நீங்க நல்லாயிருக்கீங்களா'.
'ஆமாம்பா, ஏதோ ஓடிகினு கெடக்குது. இந்த வண்டி பூட்டி ஒரு மாசந்தான் ஆவுது. நீ எட்துனு போ'
நன்றாகவே இருந்தது சைக்கிள். கைலாச நாதர் கோவில் நோக்கி வண்டியை செலுத்தினான். கைலாச நாதரை பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் தொந்தரவு செய்வார்கள். சிவராத்திரியின் போது அங்கு கூடும் கூட்டம் சொல்லி மாளாது. மற்ற காலங்களில் தினமும் வரும் டூரிஸ்டுகள்தான் அவரது விசிட்டர்கள். பெரும்பாலும் வெளி நாட்டினராதலால் உள்ளே வருவதும் குறைவு.
அன்றும் வந்து செல்லவேண்டிய பேருந்துகள் போய்விட்டன. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தன. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். ஒவ்வொரு இடமாக செல்லும் போதும் பழைய நினைவுகள் அவனை ஆட்கொண்டன. பள்ளிக்காலத்தில் ஆண்டர்சனிலிருந்து அவன் வீட்டுக்கு நேரடியாகச் செல்லலாம். ஆனால் கைலாச நாதரை விசிட் செய்வது வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். தனிமை தந்த சுகம் அது. அருகிலேயே பள்ளி விளையாட்டு மைதானம் இருந்ததும் ஒரு காரணம்.
அப்படித்தான் ஒரு முறை ஹோம் ஒர்க் செய்யவில்லை. மதியானம் சாப்பிட்டவுடன் சரவணனுடன் கோவிலுக்கு வந்துவிட்டான். மாலை வழக்கம் போல் வீடு. சில காலத்திற்கு இது வழக்கமானது. பிறகு வீட்டிலும் பள்ளியிலும் தெரிந்த போது நல்ல உதை. இப்போது அவன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு. நண்பர்களின் தொடர்பும் அற்றுப் போய் விட்டது. அமெரிக்காவிலிருந்து அய்யம்பேட்டை வரை பிரிந்திருந்தனர் நண்பர்கள். டாக்டர், இஞ்சினியர், சார்டர்ட் அக்கவுன்டன்ட், க்ளெர்க், கடை முதலாளி, தொழிலாளி, பட்டு நெசவாளி என பல வண்ணங்கள்.
கோவில் ப்ரகாரத்தில் ஓடி விழுந்த குழந்தையின் அழுகை அவனை இன்றைக்கு இழுத்துக் கொண்டு வந்தது.
வெளியே வந்தவன் பிள்ளையார் பாளையத்திற்குச் சென்றான். அங்குதான் அவன் நண்பன் சரவணனின் வீடு இருக்கிறது. அவனொருவன்தான் பள்ளிப்பருவ நினைவுகளின் நிஜம். அதுவும் இப்போது இல்லை என்ற நினைப்பே ஆயாசத்தைத் தந்தது.அவன் வீடு இருக்கிறது. அவன் இல்லை இப்போது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது எல்லாம் முடிந்து.
அந்தத் தகவல் கேட்டுதான் வந்திருக்கிறான் இவன். சரவணனின் வீட்டில் இயல்பு நிலை திரும்பியது போல் காணப்பட்டது. நடு நடுத்தரக் குடும்பம்தான். பட்டு நெசவுடன் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் விவசாயமும் நடந்து வந்தது. அவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அனைவரும் இருக்கிறார்கள். தந்தையும் தாயும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று கூறியிருக்கிறான்.
'வாப்பா. அவன் இப்பிடி பண்ட்டு போவான்னு யாருமே நெனக்கிலியே. சொல்லாம பூட்டானே.' என்று கூறினார்கள் அவன் தாய். அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டிருக்கும் போல. அவன் சகோதரி 'காப்பித்தண்ணி சாப்புடுண்ணா' என்று கொடுத்தாள். ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் கல்யாணமாகி இப்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
'என்ன ஆச்சி' சம்பிரதாயமாகக் கேட்டான்.
'மலைக்கு போய்ட்டு வந்தாம்பா. நல்லாதான் இருந்தான். சக்தியோட கோவிலுக்கு(கைலாச நாதர் கோவில்)ப் போய்ட்டு வரேன். நல்லா சமச்சி வைய்யின்னு சொல்ட்டு போனான். கோவில்லயே நெஞ்சுவலி வந்துட்ச்சி போல. சக்தி அங்கருந்து ஆட்டோல பெரியாஸ்பத்திரிக்கி தூக்கினு போச்சி. அங்கருந்துதான் பெரியவனுக்கு தகவல் வந்துச்சி. அங்க போறதுக்குள்ள அல்லாம் முட்ஞ்சிரிச்சி. மொதல்லயே நெஞ்சுல கோளாறு போல. ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டாம்பா. இல்லன்னா இப்படி வுட்ருப்போமா? ' என்று சொல்லி முடித்தார்கள். எத்தனையாவது முறையாக சொல்லியிருப்பார்களோ.
'உடும்மா. அண்ணன் என் வயத்தல வந்து பொறக்கும். அப்ப மறுபடியும் வளத்துக்கோ.' அவள் அம்மாவை தேற்றியவள் 'ஆமாண்ணா, ஏன் ஊரு பக்கமே வர்றதில்ல. என்னாச்சி? நீ இருந்திருந்தின்னா அண்ணன் இப்பிடி போயிருக்காதோ என்னமோ. அதுக்கு இன்னான்னு உங்கிட்டயாவது சொல்லியிருக்கும்'
'இல்லமா. வரக்கூடாதுண்ட்டுல்லாம் இல்ல. வேல அப்பிடி. இப்ப கூட சரவணனுக்கோசரந்தான் வந்தேன். ஃபோன்ல பேசறப்பகூட எதுவுமே சொல்லலயே. உன் கல்யாணம். விவசாயம் பத்தில்லாம் பேசுனான். இதப்பத்தி வாயே தெறக்கல. அவனுக்கே தெரீல போல. கவலப்படாதீங்க. மனசத் தேத்திக்கிங்க. வேறென்ன சொல்றது.'
'பரவால்லபா. இதுக்கோசரம் இம்மாந்தூரம் வந்தியே. நீயாவது ஒடம்ப பாத்துக்க. ஏதாவதுன்னா ஒடனே டாக்டர் கிட்ட காட்டிடு.' என்றார்கள் சரவணின் தாய்
'சரிங்க. நீங்களும் உங்க ஒடம்ப பாத்துக்குங்க. எனக்கு அப்பப்ப ஃபோன் பண்ணுங்க.'
அவர்கள் சொன்ன அடுத்த வார்த்தைகள் அவனை சிலையாக்கின.
'சரிப்பா. ஆனா ஒண்ணு. அன்னிக்கி யாருமே ஒரு நெலமைல இல்ல. அப்பறந்தான் தோணிச்சி, அதுங்கண்ணுங்களையாவது குட்துருக்கலாமேன்னு.'
9 comments:
காஞ்சித் தலைவன்,
என்ன ஒரு சுவராஸ்யம் இல்லயே கதைல.”சப்”ன்னு இருக்கு.
புரியல பல்லவன்...
"சரிங்க..." தலைப்பு??
நமக்கு ஒன்னும் புரியலையே. இதுல ஏதாச்சும் பின் நவீனத்துவமா இருக்குமோ???
வாங்க ரவிசங்கர்.
'சப்'ன்னு இருக்குன்னு 'நச்'ன்னு சொல்லிட்டீங்க !!
அதாவது ஒரு படிப்பறிவில்லாதவங்க தன் மகன் இறந்துட்டான்னாலும் அவன் கண்களை தானம் பண்ணனும்ன்ற எண்ணம் வந்திருக்கு. இதை ஒரு படிப்பறிவில்லாத தாய் இதே சூழலில் உண்மையாகவே சொல்லியிருந்தாங்க. அவர்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு நமக்கும் வரவேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் கதை. அதைத்தான் கொஞ்சம் காஞ்சிபுரம் பாஷையில் காஞ்சிபுரம் சூழலில் சொல்லியிருக்கிறேன்.
//
நான் ஆதவன் கூறியது...
புரியல பல்லவன்...
"சரிங்க..." தலைப்பு??
நமக்கு ஒன்னும் புரியலையே. இதுல ஏதாச்சும் பின் நவீனத்துவமா இருக்குமோ???
//
இது பின் நவீனத்துவம்னு வகைப்படுத்தி என் கண்களைத் திறந்து வைத்திருக்கிறீங்க!
என்னாலயும் பின் நவீனத்துவமா எழுத முடியும்னு நம்பிக்கை குடுத்திருக்கீங்க!!
உங்களுக்கு பின் நவீனத்துவமா ஒரு நன்றி சொல்லிக்கிறேன்!!!
மேலே சொன்ன விளக்கத்தப் பாருங்க.
Things could have been directly told.
the objective did not reach the ends.
Things could have been directly told.
the objective did not reach the ends.
Sakthimani,
Thanks for your comments.
I am attempting a different style of writing called 'surrealism'.
I understood that this needs refinement. Will try to be better in next writing.
Post a Comment