Thursday, January 15, 2009

வரலாற்று கேள்விபதில்கள் - 15-01-2009

இந்தவாரம் டாக்டர் ப்ரூனோவின் கேள்விக்கணைகளுக்கான பதில்கள்!

1. பார்த்திபன் கனவு கதைக்கு ஆதாரம் வரலாற்றில் இருக்கிறதா ??

பார்த்திபன் கனவில் பல்லவ அரசர் முதலாம் நரசிம்மவர்மர் பார்த்திப சோழனை வெற்றி கொள்வதாகவும் அவன் மகன் விக்ரம சோழனுக்கு தன் மகள் குந்தவையை மணம் செய்து கொடுத்து அயல் நாட்டிற்கு மன்னனாக அனுப்புவதாகக் கதை.
நரசிம்ம வர்மருக்கு குந்தவை என்ற மகள் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் சோழ வம்சம் விஜயாலய சோழனுக்கு முன் எங்கே இருந்தார்கள் என்பதற்கான ஆதாரமும் இல்லை. ஆகவே இந்த நிகழ்வு கற்பனையாகப் படுகிறது.


2. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த மன்னர்கள் பற்றி குறிப்புகள் ஏதாவது இருந்தால் கூறவும்..

வீர பாண்டிய கட்டபொம்ம நாயகலு உட்பட பலர் பாளையக் காரர்கள். முதலில் மதுரை நாயக்கர்களின் 'ஏரியா ரெப்ரெசென்டேடிவ்'ஆக இருந்த இவர்கள் ஆற்காட்டு நவாபின் ஆட்சிக்குப் பின் அவர்கள் பிரதி நிதிகளாக அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வரி வசூலித்து அதில் ஒரு பகுதியை நவாபுக்கு கிஸ்தியாக செலுத்தி வந்தனர்.

சற்று பின்னோக்கிப் பார்த்தால், நவாப் பதவிக்கு சந்தா சாகிப்பிற்கும், முகம்மது அலிக்கும் போட்டி. சந்தா சாகிப் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியையும், முகம்மது அலி ஆங்கிலேயர்களின் உதவியையும் நாடினர். இவர்களின் பெயரால் ஆங்கிலேயர்களும், ஃப்ரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தில் 'கர்னாடிக் வார்ஸ்' என்றழைக்கப்படும் ஆங்கிலேய-ஃப்ரெஞ்சு போர்களில் ஈடுபட்டனர். முடிவில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெறவே, ஆங்கிலேயர்களின் தரப்பில் இருந்த முகம்மது அலி ஆற்காட்டு நவாப்பாக பதவியேற்றார்.

அவர் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு சம்பளமாக தமிழகத்தின் திவானி உரிமையை விட்டுக்கொடுத்தார். அதாவது இதற்குப் பிறகு பாளையக்காரர்கள் முதலானோர் நவாப்பிற்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்கு (ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு) கிஸ்தி செலுத்தவேண்டும்.

இதை ஆங்கிலேயர்கள் கேட்கவும், கட்டபொம்மு மறுக்கவும் நிகழ்ந்ததுதான் பாஞ்சாலங்குறிச்சிப் போர். இறுதியில் கட்டபொம்முவிற்குத் தூக்கு. இந்தப் பகுதியை நேரடியாக நிர்வாகம் செய்தது கம்பெனி (பழந்தமிழில் கும்பினி). இப்படித்தான் ஆரம்பித்தது, ஆங்கிலேயர்களின் ஆட்சி.

ஆகவே இதை ஒரு வகையில் கட்டபொம்மு 'சுதந்திர பாளையம்' அமைக்க மேற்கொண்ட முயற்சி என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் முயற்சி இதுவாகத்தான் இருக்கும்.


3. கிரேக்க இஸ்லாமிய படையெடுப்புகள் தமிழகம் வரை வராததன் காரணம் என்ன (என்னென்ன)?

தரை வழியாக வட இந்தியாவில் படையெடுப்புத்தவர்கள் கிரேக்கர்கள், மங்கோலியர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலர். இவர்கள் அனைவருக்கும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெரும்பாலும் கொள்ளை. அல்லது விஜய யாத்திரை.

இவர்கள் தென்னாடு வரை வர விந்தியாசலம் என்னும் விந்திய மலைகளைக் கடக்கவேண்டும். அந்த விந்தியாசலத்தில் இமய மலையைப் போல நல்ல கணவாய்கள் இல்லை. இதற்குமுன் வந்த சமுத்திர குப்தர் கலிங்கம் வழியாகவே தமிழகம் வந்துள்ளார். ஆகவே விந்தியாசலத்தைத் தாண்டும் இவர்கள் முயற்சிக்கு இயற்கை முதல் முட்டுக்கட்டை போட்டது.

பண்டைய புராண இதிகாசங்களில் விந்தியாசலம் தான் பாரதத்தின் தென் பகுதி என்று கருதப்பட்டு வந்தது. எனவே சிலர் அதற்கு மேல் வேறொரு தேசம் என்று நினைத்திருக்கலாம். இது வரலாறு போட்ட முட்டுக்கட்டை.

இமயமலை முதல் விந்தியம் வரை பல்வேறு அரசுகளின் தடுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் பலம் குன்றியிருக்கவேண்டும். கிடைத்தவரை லாபம் என்று திரும்பியிருக்கவேண்டும். இது வட இந்திய அரசுகள் போட்ட முட்டுக்கட்டை.

இவ்வாறாக பல்வேறு முட்டுக்கட்டைகள் இந்தப் படையெடுப்புகளை விந்தியம் தாண்டி வரவிடாமல் செய்தன.


4. கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு பிறகு ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு அரசர்கள் / நாயக்கர்கள் (கட்டபொம்மன் உட்பட) ஆட்சியில் தமிழ் தப்பி பிழைத்தது எப்படி. அந்த நேரம் வேறு குறுநில தமிழ் மன்னர்கள் இருந்தார்களா?

உங்கள் கேள்விக்கு டாக்டர் மு.வரதராசனார், அவரது 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் ஒரு அத்தியாயமே வழங்கியிருக்கிறார். அவரது வார்த்தைகளில் சொன்னால்,


'அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் தொடர்ந்து பெற்று வந்த வளர்ச்சியுடன் நன்கு வேரூன்றித் தழைத்திருந்த காரணத்தால், அந்தச் சில நூற்றாண்டுகளின் அரசியல் குழப்பம் அந்த இலக்கியச் சோலையைப் பெரிதும் தாக்கவில்லை. வழக்கம் போல் பூத்துக் குலிங்கிக் காய்த்துப் பெரும் பயன் தராவிட்டாலும், கோலையின் பசுமை அடியோடு மாறிப்போகவில்லை; புதி தளிர்கள் விட்டன. இலைகள் தழைத்தன; அரும்புகள் அரும்பின; சிற்சில பூக்களேனும் பூத்தன; சிறுசிறு அளவிலேனும் காய்களும் கனிகளும் காணப்பட்டன'.

மிக அழகாக எடுத்தியம்பியிருக்கிறார் மு.வ.!!

அருண்கிரி நாதர், வில்லிபுத்தூரார் (வில்லிபாரதம் இயற்றியவர்), காளமேகப் புலவர், குமர குருபரர் போன்ற பலர் இந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

ஆகவே தமிழ் தன் இயல்பால் வாழ்ந்து கொண்டிருந்தது.

விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர்களும், அவர்களுக்குப் பின் வந்த மராட்டியர்களும் தங்கள் மொழிகளோடு தமிழையும் வளர்த்தார்கள். என்ன வித்தியாசமென்றால், தமிழில் இந்தக் காலகட்டத்தில் சமயம் சார்ந்ததும் தனிமனிதப்புகழ் சார்ந்ததுமான நூல்கள் விரவிக்கிடப்பதைக் காணலாம்.

புதுக்கோட்டை, ராம நாதபுரம் தவிர்த்து தமிழைப் பின்புலமாகக் கொண்ட மன்னர்கள் / குறு நில மன்னர்கள் யாரும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.


5. சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்களின் மொழி எது

இருவருக்குமே கன்னடம்தான் மொழி. தமிழிலிருந்து முதலில் பிரிந்து தனி மொழியாக மாறியது கன்னடம். அதனின்றும் பிரிந்தது தெலுங்கு. தமிழிலிருந்து பிற்காலத்தில் பிரிந்தது மலையாளம். ஆகவே தமிழின் முதல் தங்கை கன்னடம்தான்!.


====


இது தவிர நண்பர் வெங்கட்ராமன் இந்திய சுதந்திரம் பற்றியும், காந்தியின் பங்கு பற்றியும், மற்ற தலைவர்களின் செயல்கள் மறைக்கப்பட்டது பற்றியும் கேட்டுள்ளார். இது குறித்து தனிப் பதிவு எழுத எண்ணியுள்ளேன்.

உங்கள் கேள்விகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

நன்றிகள் பல.

17 comments:

சதுக்க பூதம் said...

//தரை வழியாக வட இந்தியாவில் படையெடுப்புத்தவர்கள் கிரேக்கர்கள், மங்கோலியர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலர். இவர்கள் அனைவருக்கும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெரும்பாலும் கொள்ளை. அல்லது விஜய யாத்திரை.

//
கிரேக்க அரசர் அலெக்சாண்டரின் நோக்கம் கொள்ளை அடிப்பதோ விஜய யாத்திரையோ அல்ல.உலகம் முழுதும் ஒரே கலாச்சாரம் அதாவது கிரேக்க கலாச்சாரம் அமைப்பது மற்றும் உலகம் முழுதும் ஒரெ ஆட்சியில் கொண்டு வருவது. ஆனால் அவரது படையினர் சொந்த நாட்டை விட்டு வந்து பல காலம் ஆனதால் திரும்பி போக கலகம் செய்ததால் அவர் கிரேக்கம் நோக்கி திரும்பும் படி ஆயிற்று .
மங்கோலிய மன்னன் சென்கிஸ்கான் இந்தியா நோக்கி படை யெடுத்ததாக கருத பட்டாலும், என்ன காரணம் என்று அறியபடாமல் அவர் சீனா நோக்கி தன் பயணத்தை மாற்றி கொண்டார். அவர் வட இந்தியா கூட வரவில்லை.
இசுலாமிய மன்னர்கள் பலபேர் வெற்றி கரமாக தமிழகத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். அடிமை வம்ச மன்னர்கள் (அலாவுதீன் கில்ஜி என்று நினைக்கிறேன்) தமிழகம் வரை படையெடுத்து பாண்டிய மன்னர்களை வீழ்த்தி தென் தமிழ்நாடு வரை வெற்றி கொண்டனர்.அவ்ரங்கசீப்பின் ஆட்சி கோட தமிழ்நாடு வரை பரவி இருந்தது

SUREஷ் said...

//இறுதியில் கட்டபொம்முவின் கழுவேற்றம்.//கழுவேற்றுவது என்றால் எப்படி ஐயா?

வீ.பா. கட்டபொம்மனில் வருவது போல் தூக்கில் போடுவதா...


காத்தவராயன் படத்தில் பி.யூ.சின்னப்பாவுக்கு கொடுக்கப் படும் தண்டனை போன்றதா...

கயத்தாறில் புளியமரம் வேறு இருக்கிறது.

இளைய பல்லவன் said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சதுக்க பூதம் அவர்களே,
//
உலகம் முழுதும் ஒரெ ஆட்சியில் கொண்டு வருவது.
//

இதைத்தான் விஜய யாத்திரை என்று கூறினேன்.

//
மங்கோலிய மன்னன் சென்கிஸ்கான் இந்தியா நோக்கி படை யெடுத்ததாக கருத பட்டாலும், என்ன காரணம் என்று அறியபடாமல் அவர் சீனா நோக்கி தன் பயணத்தை மாற்றி கொண்டார். அவர் வட இந்தியா கூட வரவில்லை.
//

செங்கிஸ்கான் டெல்லி வரை வந்ததாக சரித்திரமுள்ளது.

//
இசுலாமிய மன்னர்கள் பலபேர் வெற்றி கரமாக தமிழகத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். அடிமை வம்ச மன்னர்கள் (அலாவுதீன் கில்ஜி என்று நினைக்கிறேன்) தமிழகம் வரை படையெடுத்து பாண்டிய மன்னர்களை வீழ்த்தி தென் தமிழ்நாடு வரை வெற்றி கொண்டனர்.அவ்ரங்கசீப்பின் ஆட்சி கோட தமிழ்நாடு வரை பரவி இருந்தது
//

டில்லி சுல்தான்களோ, மொகலாயர்களோ இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தவர்களல்ல. அவர்கள் இந்தியாவில் நிலையான ஆட்சியை நிறுவியவர்கள். டில்லி சுல்தான்களால் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியவில்லை. (சக்கரவியூகம் இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலமைந்தது) அவுரங்கசீப் காலத்தில் கூட தமிழகம் முழுமையாக மொகலாயர் வசப்பட்டது என்று கூறவியலாது.

இளைய பல்லவன் said...

///
SUREஷ் கூறியது...
//இறுதியில் கட்டபொம்முவின் கழுவேற்றம்.//கழுவேற்றுவது என்றால் எப்படி ஐயா?
///

தவற்றைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி சுரேஷ்.

திருத்திவிட்டேன்.

இளைய பல்லவன் said...

TEST

குடுகுடுப்பை said...

கட்டபொம்மன் திருடன் என்று தமிழ்வானன் புத்தகம் எழுதிய புத்தகம் படித்தீர்களா?

இளைய பல்லவன் said...

//
குடுகுடுப்பை கூறியது...
கட்டபொம்மன் திருடன் என்று தமிழ்வானன் புத்தகம் எழுதிய புத்தகம் படித்தீர்களா?
//

இப்போதுதான் கேள்விப்படுகிறேன். முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி குடுகுடுப்பையாரே.

RamKumar said...

கிரேக்க மன்னர்களால் வட இந்தியாவையே முழுமையாக வெல்லமுடியவில்லை, இன்றைய பாகிஸ்தான் வரை தான் அவர்களால் வர முடிந்தது, அதற்குள் பியாஸ் நதிகரையில் கிரேக்க வீரர்கள் போரினால் களைத்து வீட்டுக்கு திரும்பி செல்ல போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் அலெக்ஸாந்தர் தன் தளபதிகளின் பொறுப்பில் ஆக்கிரமித்த இடங்களை ஒப்படைத்துவிட்டு செல்ல நேர்ந்தது. அதன் பின் அவர்களை சந்திரகுப்தர் வெற்றிக்கொண்டது நாம் அறிந்ததே. இசுலாமியர் கில்ஜி வம்சம் முதலே தமிழகத்தின் மீது படையெடுத்து வந்துள்ளனர், விஜயநகர பேரரசு தக்கான பிரதேசத்தில் இசுலாமியர்களை தடுத்து எதிர்கொண்டு தமிழகத்தை காத்துவந்துள்ளது, அதன் பின்னர் மராத்தியர்கள் நமக்கு ஒரு அரன் போல் இருந்தனர்

நான் ஆதவன் said...

நல்ல வரலாற்று தொகுப்பு....

தொடரட்டும் பல்லவன். நானும் சில கேள்விகளுடன் வருகிறேன்

இளைய பல்லவன் said...

//
RamKumar கூறியது...
//

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ராம்குமார்.

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் கூறியது...
நல்ல வரலாற்று தொகுப்பு....

தொடரட்டும் பல்லவன். நானும் சில கேள்விகளுடன் வருகிறேன்
//

நன்றி ஆதவன்.

ஆதித்தன் said...

உங்கள் பதில்கள் நன்றாக இருக்கின்றன.
விஜயாலய சோழன் காலத்தில் குமராங்குச சோழன் என்ற இன்னொரு மன்னன் உறையூரை ஆண்டான். விஜயாலய சோழன் முதல் பழையாறையை தலைநகராகக் கொண்டு ஆண்டுவிட்டு, பின் தஞ்சையைக் கைப்பற்றி தலைநகராக்கிக் கொண்டான்.

இளைய பல்லவன் said...

வாங்க ஆதித்தன்,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குமராங்குச சோழன் பற்றிய தகவல்கள் எங்கே கிடைத்தன என்பதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

இளைய பல்லவன் said...

::

Marathamizhan said...

கட்ட பொம்மானுக்கு முன்னரே நெல் கட்டான் சேவல் புலித்தேவன்( 1750 கலீல்)ஆங்கிலேயரை எதிர்த்து வென்ற வரலாரே முதன் முதல் சுதந்திர போராகும்.
கட்டப் பொம்மன்,எட்டப்பன் உட்பட அனைத்து நாயக்கர்(தெலுங்கு) பாளையங்ககலும்
ஆங்கிலேயருக்கு அடிபணிந்து கப்பம் கட்டியவைதான். தமிழ் பாலயங்கலான மறவர் பாலயங்கள் அனைத்தும் புலித்தேவன் தலைமையில் வரிகத்தாமல் இறுதிவரை எதீர்த்தே இருந்தன. ஜாக்ஸன் கூப்பிட்டான் என்று பான்சாளக்குரீசியிலிருந்து விழாத்ிக்குலம்,கமுதி என்று ஓடியவர் தான் கட்டபோம்மன். நன்றாக அலைய விட்டு இறுதியாக ராமநாததபுரத்தில் தான் ஜக்ஸன் சம்மதித்து சந்தித்தான். வெள்ளையாத்தேவன் காப்பாற்றவில்லை என்றாள் அன்றைக்கே கதை முடிந்து இருக்கும். உண்மையில் வெள்ளையாத்தேவனும் சுந்தராலிங்கமும் இல்லை என்றாள் கட்டபோம்மன் வரலாறு கிடையாது. ஊமைத்துறை சிறந்த வீரன் என்பதில் சந்தேகம் இல்லை.கட்டபோம்மன் மறைவிற்கு பின்னர் ஆங்கிலேய எதிர்ப்பை மீறி ஊமைத்துறைக்கு அடைக்கலம் கொடுத்து 1800 ல்ஆங்கிலேயருக்கு எதிராக புதிய தமிழ் புரட்சி அணியையை மருத்து பாண்டியர்கல் உருவாக்கினர்.

இளைய பல்லவன் said...

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி மறத்தமிழன் அவர்களே!

நியோ / neo said...

மருதநாயகம் / யுசுப் கான் சாகிப் - 1763-இல் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டு இறக்கிறார். மதுரையை ஆங்கிலேயரின் Commander ஆக ஆளத் துவங்கிய அவர், பின்பு 1761-62இல் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்து அவர்களை ஒரு வருடத்துக்கும் மேலாக எதிர்த்து ஆட்சி செய்திருக்கிறார்.

கான் சாகிப்பே முதல் கிளர்ச்சி செய்தார் என்றும் வரலாறு சொல்கிறது.

ஆனால் அதற்கும் முன்னதாகவே வேலூர் கிளர்ச்சி 1757-இல் நிகழ்ந்து விட்டது.