அத்தியாயம் 12 - யாரைத்தான் நம்புவதோ
வல்லாளனையும் இளவழுதியையும் தேசிகரிடத்தில் விட்டுவிட்டு மதுரைக்கு வந்துவிட்டோமல்லவா? அங்கே மேற்கொண்டு என்ன நடந்ததென்று பார்ப்போம்.
வல்லாளனின் பதிலைக் கேட்டு இளவழுதி அதிர்ச்சியுற்றாலும், தேசிகர் சிறு புன்முறுவலை மட்டும் வெளிக்காட்டினார்.
'வல்லாளா? நாமெல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள். நமக்குள் சண்டை இருக்கலாம். ஆனால் அடுத்தவன் வரும்போது நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இல்லாத போது எவ்வளவு பலமிருந்தாலும் அதனால் பயனிராது. பாஸ்கராசாரியார் சக்கரவியூகத்தைப் பற்றி விசேஷமாகக் கூறியிருப்பாரே.'
'இல்லை சுவாமி. அவர் கோடிட்டுக் காட்டியதுடன் நிறுத்திவிட்டார். மேற்கொண்டு ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் மாதவனைக் கேட்டுக் கொள்ளும் படி கூறிவிட்டார்' என்றான் வல்லாளன்.
'நாராயண. நீங்கள் இன்னும் பக்குவப் படவில்லை என்று நினைத்திருக்கலாம். அவர் மாதவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொன்னதால் அவனே சொல்வது நலம். எப்போது அவனைச் சந்திக்கப் போகிறீர்கள்'
'வரும் மார்கழித் திருவாதிரை அன்று தில்லையம்பலத்தில் சந்திப்பதாக நிர்ணயித்திருக்கிறோம். ஆனால் இதில் இவ்வளவு மர்மமென்ன என்று தான் புரியவில்லை.' இடையில் புகுந்தான் இளவழுதி
'இதில் மர்மமொன்றுமில்லை இளவழுதி. அனைத்தும் நாம் அறிந்ததுதான். ஆனால் அவற்றை முறையாக நோக்கும் போது நமக்குத் தெளிவு பிறக்கிறது. ஒன்று மட்டும் சொல்கிறேன். சக்கரவியூகம் என்பது போர் முறை மட்டுமல்ல. அதற்கும் மேற்பட்டது. சில சமயம் நாம் சில விஷயங்களை அரையும் குறையுமாகத் தெரிந்து கொண்டு சிக்கிக் கொள்கிறோம். ஆனால் வெளியே வருவது முடியாததாக இருக்கிறது. உங்களுக்கு இவை நன்கு தெரிந்திருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிக முக்கியமானதாகிறது. ஆகவே மாதவனிடம் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற தேசிகர், அரசியலைப் பற்றி பேசிய போது இளவழுதியின் முகம் ஒருவாறு சென்றதை கவனிக்கத் தவறவில்லை.
'இளவழுதி, தெய்வத் தொண்டாற்றுபவனுக்கு அரசியல் ஏன் என்று நீ நினைக்கலாம். அந்த நினைப்பில் பொதுவாகத் தவறில்லை. ஆனால் இதற்குப் பதிலிறுத்தல் அவ்வளவு சுலபமன்று.
அரசியலும் மதமும் ஒன்றை ஒன்று நீங்காத அளவுக்குப் பின்னிப் பிணைந்து விட்டன. அரசுகள்தான் எந்தக் கோவில் வேண்டும், எந்தத் தெய்வம் வேண்டும் என்று நிர்ணயிக்கின்றன. ஒரு அரசன் சிவ வழிபாடுதான் வேண்டுமென்று தில்லையில் கோவிந்த ராஜனை கடலில் எறிந்தான். மற்றொரு அரசன் ராமானுசரை நாடு கடத்தி அவர் சீடனைக் குருடனாக்கினான். இவற்றுக்கெல்லாம் முன்னர் பல்லவ மகேந்திர வர்மன் ஜைனத்திலிருந்து சைவத்திற்கு மாறியவுடன் ஜைன மதக் கோவில்களை அப்புறப்படுத்தினான்.
இவ்வாறாக அரசுகளுக்கு பிடித்த மதம், மதத்தையே ஆட்டுவிக்கிறது.
இவ்வாறு அடித்துக் கொண்ட அரசுகள் கோவிலுக்குத்தான் அதிக நிவந்தங்களை அளித்துள்ளன. கோவில்களில்தான் நமது பண்டைய கலைச் செல்வங்கள் நிறைந்துள்ளன. கோவில்கள்தான் கலைகளைப் போஷிக்கின்றன. கோவில்கள்தான் ஆபத்துக் காலத்தில் மக்கள் கூடும் இடமாக உள்ளன. இவை அனைத்தும் ஏன் கோவில்களை மையமாக வைத்து இயங்கவேண்டும்?. மனிதன் பயப்படுவது கடவுளுக்குத் தான். ஆகவே கடவுள் உறையும் கோவில்கள்தான் இவற்றைப் பாதுகாக்கச் சிறந்த இடம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.
வீர பாண்டியனின் பாட்டனார் ஜடாவர்ம சுந்தர பாண்டியர் தஞ்சையையும் கங்கை கொண்ட சோழ புரத்தையும் அழித்தாரே ஒழிய அதன் கோவில்களைத் தொடவில்லை. அவ்வளவு ஏன். இந்தத் திருவரங்கத்தில் குலோத்துங்கன் செய்த திருப்பணிகளோடு அவரும் அல்லவா சேர்த்துப் பொன் வேய்ந்தார். இவ்வாறாக, அரசனடி ஒற்றி ஆலயம் தொழுவது தொன்றுதொட்டு நிகழ்வதாக உள்ளது.
இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பது எங்களது கடமையாகிறது. ஆகவே அரசுகளுக்கு மதம் பிடிக்காமல் மக்களைப் பாதுகாப்பதற்கு அரசியல் பேசவேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு பகவத் காரியம்தான். ஆகவே, இதில் தவறில்லை என்பதை விட வேறு வழியில்லை என்று தான் கொள்ளவேண்டும்' என்று நிறுத்தனார்.
'சுவாமி. அபசாரமாக நினைத்திருந்தால் மன்னிக்க வேண்டும். என் தந்தை தங்களின் ஆலோசனையைக் கேட்க என்னை அனுப்பியதிலிருந்தே தெரிந்து விட்டதே, ஆயினும் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவலால் அவ்வாறு எண்ணலாயிற்று.' என்றான் இளவழுதி.
'ஒன்றும் பாதகமில்லை. நீ வல்லாளனை வழியனுப்பிவிட்டு வா. உன் தந்தைக்கு பதில் ஓலை தருகிறேன். இன்று இரவு இங்கே தங்கிவிட்டு நாளைக் காலை செல்லலாம். உன் இல்லம் அருகில் தானே இருக்கிறது' என்று இளவழுதியிடம் கூறியவர்,
'வல்லாளா, இன்று சொன்னதை மறக்கமாட்டாய் என்று எண்ணுகிறேன். அரங்கன் அருள் எப்போதும் உண்டு. சென்று வா' என்று வழியனுப்பினார்.
====
வல்லாளனை அனுப்பிவிட்டு இரவு போஜனத்தை மடத்திலேயே முடித்துக் கொண்ட இளவழுதி, இரண்டாம் ஜாம முடிவில் தேசிகர் அழைப்பதாகத் தகவல் வரவே, அவர் அறைக்குள் பிரவேசித்தான்.
'இளவழுதி, உன் தந்தை வல்லாளன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் எண்ணம் மற்றவரைப் பற்றி சரியாக இருக்கலாம். ஆனால் வல்லாளன் வேறு விதமானவன். அவனை நம்ப வேண்டாம் என்று சொல்'
'சுவாமி, உங்கள் முன்னிலையில்தானே அவன் ஒப்புக் கொண்டான்?'
'அவன் மேலுக்குச் சொன்னது அது. ஆகவே அதை பொருட்படுத்துதல் முறையன்று. உங்கள் உதவிக்கு வருவான். ஆனால் முழுமையாக உதவமாட்டான். இதை உன் தந்தையிடம் தெரிவி. தற்போது எந்த ஒரு ஆபத்தும் இல்லையென்றாலும் ஒரு ஆறு மாதங்களுக்குள் நிலை மாற வாய்ப்பிருக்கிறது. அப்போது அவர் உதவி மதுரையை விட திருவரங்கத்திற்கு அதிகம் தேவைப் படுமென்று கூறு. அதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே மேற்கொள்ளவேண்டுமென்று நான் ஆசைப் படுவதாகச் சொல். இதில் உன் பங்கு முக்கியமென்பதை நினைவில் கொள். மற்றவை எல்லாம் அல்லும் பகலும் அனந்தசயனத்திலிருக்கும் அரங்கன் பார்த்துக் கொள்வான். காலை எனக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. விடிந்தவுடன் புறப்பட்டுவிடலாம். நாராயண' என்று முடித்தார் தேசிகர்.
பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் அவனைத் தாக்கியதில் நிலை குலைந்திருந்த இளவழுதிக்கு அவர் விடை கொடுத்ததை உணர சற்று அவகாசம் தேவைப்பட்டது. தான் சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டோமோ என்று கூட எண்ணினான்.
====
மதுரையில் விக்ரம பாண்டியன் அரண்மனையில் இருந்த கயல்விழிக்கு இருப்பே கொள்ளவில்லை. எவ்வளவு நேரம் தான் உள்ளேயே சுற்றிச் சுற்றி வருவது. அனைவரிடமும் பேசியாயிற்று. காலையில் விட்டுச் சென்ற வீர பாண்டியன் மாலை வரை வரவில்லை. மதியம் வந்த விக்ரமபாண்டியரும் 'சாப்பிட்டாயா, ஒரு குறைவும் இல்லையல்லவா? என்று வினவினாரே ஒழிய வீரனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சே இவனை நம்பி வந்து விட்டோமே என்று ஒரு கணம் எண்ணியவள் அவனையும் தன்னையும் மனதிலேயே வைது கொண்டாள். மாலையில் இல்லத்தின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தான் வீர பாண்டியன்.
'கயல்விழி, மதுரை நன்றாக இருக்கிறதா? என்று வினவினான் ஆவலாக.
'ஓ. உங்கள் மாமன் வீடு தான் மதுரையோ. அதைத்தான் காலையிலிருந்து சுற்றிச்சுற்றி வந்து விட்டேனே. மிக மிக நன்றாயிருக்கிறது. இதைப் பிடிப்பதற்குத்தான் அண்ணன் தம்பிகளுக்குள் போட்டியா? நன்றாயிருக்கிறது. ஹூம்' என்று பழிப்புக் காட்டினாள்.
கோபத்தில் சிவந்திருந்த முகமும், துடிக்கும் அதரங்களும், அலைபாயும் கண்களும், ஏறித்தழையும் அவயங்களும் அவன் ஆசையை மேலும் தூண்டியது.
'சற்று சாந்தப் படு கயல்விழி. உன்னைப் பார்த்தால் கனல்விழியைப் போலல்லவா இருக்கிறது. மற்றொரு கண்ணகியை இந்த மதுரை தாங்காதம்மா' என்றவாறே அவள் தோள்களைத் தொடமுயன்ற வீர பாண்டியனுக்குத் தோல்வியே கிட்டியது. விழி மட்டும் கயலல்ல நானும்தான் என்று சொல்லாமல் சொல்லி நழுவினாள் கயல்விழி.
ஊடல் நாடகம் தொடரத் தொடர ஆசைச் சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள், ஊடல் முடிந்த போது காதல் சிகரம் தொட்டனர். ஊடலால் வரும் காதலின் இறுக்கம் அளவிட முடியாததல்லவா? அவள் அடித்தது வலித்தாலும் தேனாய் இனித்தது வீர பாண்டியனுக்கு.
'கயல் நீ வந்ததால் என் எண்ணம் ஈடேறாமலே போய்விடுமோ என்று தோன்றுகிறது. உன்னைப் பார்த்தால் காதல் வயப் பட்டுவிடுகிறேனேயொழிய மூளை வேலை செய்ய மாட்டேனென்கிறது'
'உங்களுக்கு அத்தகைய அவயம் ஒன்று இருக்கிறதா என்ன' என்று சிரித்தவாறே கேட்டாலும், 'அய்யா, தாங்கள் சென்ற காரியம் என்னவாயிற்று. அதைக் கூறுங்கள் முதலில். பிறகு என்ன செய்வதென்று யோசிப்போம்.'
அரண்மனையில் நடந்தவற்றை விளக்கிய வீர பாண்டியன், சுந்தரனின் நடத்தையில் தெரிந்த மாற்றத்தைப் பற்றி சந்தேகத்தை எழுப்பினான்.
'அவர் உண்மையிலேயே மனம் மாறியிருக்கலாம். எனினும் இன்னும் சமரசம் முடியாத நிலையில் நாம் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது. உங்கள் தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நிம்மதியை அளிக்கிறது. உங்கள் மாமா எப்போது உங்களிருவரிடமும் பேசப் போகிறார்?'
'தெரியவில்லை கயல்விழி. மதியத்திற்கு மேல் அவரைக் காணவில்லை. சுந்தரனும் அவன் அரண்மனைக்குச் சென்றுவிட்டான். நான் என்ன செய்வதென்று தெரியாமல் உன்னிடம் வந்தேன்.'
'அழகுதான். ஒன்றும் செய்யாமலிருக்கும் போதுதான் என் நினைவு வருகிறார்ப்போலிருக்கிறது. இப்போதே இப்படியென்றால்...'
'ஏன் இழுக்கிறாய். சொல் கயல் சொல். இப்போதே இப்படியென்றால்..'
'உங்களை நம்புவதற்கில்லை. இனி எப்போதும் உங்களுடன்தான்' என்று முடித்தாள் புன்னகையோடு.
(தொடரும்)
13 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அக்காலத்தில் அரசியலில் மதம் எவ்வளவு முக்கியம் வகிக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறீர்கள் பல்லவன்.
ஆனால் இக்காலத்தில் மதம் வேறு விதமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது :-(
வீரன் கயல் காதல் வசனம் அருமை பல்லவன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பல்லவன்
//சே இவனை நம்பி வந்து விட்டோமே என்று ஒரு கணம் எண்ணியவள் அவனையும் தன்னையும் மனதிலேயே வைது கொண்டாள்//
லேடீஸ் செண்டிமெண்ட்...????
வாழ்த்துக்களுக்கு நன்றி, கலை.
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றி ஆதவன்
அதனால்தான் அதற்குப் பெயர் 'மதம்'.
//
SUREஷ் கூறியது...
லேடீஸ் செண்டிமெண்ட்...????
//
ம் ம் :))
நன்றாக இருக்கிறது.
சுபா
வீரன், கயல் உரையாடல் அருமை.. ம்ம்ம் அப்புறம்
//
நசரேயன் கூறியது...
வீரன், கயல் உரையாடல் அருமை.. ம்ம்ம் அப்புறம்
//
நன்றி நசரேயன்
தொடருக்கான எனது ஒட்டு மொத்த பின்னூட்டம் இதுதான்
:)
உங்கள் பரிந்துரையைத்தான் காலையில் பார்த்தேன். இன்ப அதிர்ச்சி.
நன்றிகள் பலப்பல. உங்கள் இடுகையில் கூறியுள்ளது போல் இது என் பொறுப்பை அதிகமாக்கியுள்ளது. நல்ல முறையில் அளிக்க அனைத்து வகையிலும் முயல்வேன்.
மிக நன்று.
கதை மிகவும் அருமையாக போகின்றது.
இன்று தான் நேரம் கிடைத்து மொத்தமாக படித்தேன்.
என் கருத்து என்னவென்றால், கதை கொஞ்சம் வேகமாக செல்வதாக தோன்றுகின்றது. இன்னும் வர்ணனைகள் சேர்த்து கொஞ்சம் மெதுவாக செல்லலாம்.
நன்றி ராஜ்குமார்
//
என் கருத்து என்னவென்றால், கதை கொஞ்சம் வேகமாக செல்வதாக தோன்றுகின்றது. இன்னும் வர்ணனைகள் சேர்த்து கொஞ்சம் மெதுவாக செல்லலாம்.
//
உங்கள் கருத்துகளைக் கருத்தில் கொள்கிறேன் !!
Post a Comment