அத்தியாயம் 12: குறில் நெடில்
தொரசமுத்திரம் என்று கொச்சையாக அந்நாளில் அழைக்கப்பட்டதும் ஹளபேடு என்று இன்னாளில் அறியப்படுவதுமாகிய ஹொய்சளர்களின் தலை நகரமாகிய த்வார சமுத்திரத்திற்கு மீண்டும் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக வல்லாளனைத் தனியாக விட்டுவிட்டு வந்து விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும். ஏனெனில், இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்யத் துவங்கியிருந்தது.
அது ஒரு கார்கால நாளின் மாலைப் பொழுது. காலை முதல் பெய்திருந்த மழை சற்று ஒய்ந்து லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. நடுவானில் மேகங்கள் திரண்டிருந்தாலும், மேற்கே மேகங்கள் இல்லாததால் சூரியனின் செந்நிற கிரணங்கள் பூமியை எட்டிப்பார்த்தன. நன்றாகப் பெய்த மழையில் கரும்பச்சை வர்ணத்தைப் பெற்றிருந்த மரங்கள் மேலைச் சூரியனின் கிரணங்களால் மெருகூட்டப்பட்டு மேலும் தகதகத்தன. சூரியனின் ஒளி லேசாக அடித்துக் கொண்டிருந்த சாரலில் பட்டுத் தெரித்ததால் கீழ்வானில் தோன்றிய வானவில், வானுலகின் தோரணவாயிலோ என்றெண்ணும் வகையில் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சமுத்திரம் என்ற பெயருக்கேற்றார்ப்போல் நீண்டு பரந்து விரிந்திருந்த த்வாரசமுத்திர ஏரியானது மழையால் நிரம்பி காற்றால் தளும்பிக் கொண்டிருந்தது. ஏரியிலிருந்து வந்த குளிர்காற்றும், மழைச்சாரலும், ஒரு இன்பானுபவத்தை அளித்துக் கொண்டிருந்தன.
அந்த ஏரியின் கரையில் அமைந்திருந்த மண்டபத்தின் மேல் உப்பரிகையில் அமர்ந்து ஏரியை நோக்கிக்கொண்டிருந்தான் வல்லாளன். இத்தகைய ரம்மியமான சூழல் இருந்தும் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் அவனது இருப்பு இங்கில்லை என்பதை தெளிவாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.
ஒவ்வொரு அரசகுலமும் ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பான நிலையை அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ஹொய்சளர்களில் வல்லாளனின் கொள்ளுத்தாத்தாவாகிய இரண்டாம் வல்லாளன் காலத்தில் ஹொய்சளர்களின் கீர்த்தி சிறப்பான நிலையை எட்டியிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். அதற்குப் பிறகு அவரது மகன் சோமேஸ்வரன் ஒரு விதமாக நாட்டைப் பரிபாலனம் செய்தான், இறுதியில் அவனால் கட்டிக்காக்க முடியாமல் போகவே தனது இரு மகன்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டான். நரசிம்மன் என்ற மகனை த்வாரசமுத்திரத்திற்கும், ராமனாதன் என்ற மகனை தமிழகப் பகுதிக்கும் தலைவனாக நியமித்தான். ஆனால் ஜடாவர்ம சுந்தர பாண்டியரின் பராக்ரமத்தால் ராமனாதன் முறியடிக்கப்பட்டதோடு, அவனது உதவிக்கு வந்த நரசிம்மனும் குடகு வரை விரட்டப்பட்டான். இந்தத் தோல்வி நரசிம்மனை வெகுவாக பாதித்தது. அதைவிட அவனது மகனாகிய வல்லாளனை மிகவும் கொதிப்படைய வைத்தது. சமயம் பார்த்து பாண்டியர்களை வஞ்சம் தீர்க்க திட்டமிட்டிருந்தான். இந்தப் பின்னணியில்தான் மாலிக் கஃபூர் படையெடுப்புக்கான ஏற்பாடுகளும், சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியனுக்கிடையேயான அரசப் பிளவும் ஏற்பட்டிருந்தன.
மேற்கண்ட நிகழ்வுகளின் காரணம் பற்றி பாண்டியர்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகக் கருதினான் வல்லாளன். அதற்கான ஆதாரம் இருக்கவே செய்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இருந்தது பாண்டிய தேசம். சுற்றியுள்ள பகைவர்கள் யாரும் அந்த அளவுக்கு வலுவில்லாததே காரணம். அதனால் பாண்டிய வீரர்களுக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாண்டிய தேசம் இரண்டாகப் பிரிந்தது மேலும் பலவீனத்தைக் கூட்டியது. பாண்டியனைப் பழி தீர்க்க இதுதான் சமயமென்று கருதினான் வல்லாளன். ஆனால் மாலிக் கஃபூர் பற்றிய சிந்தனை அவன் மனதை விட்டகலவில்லை.
இவ்வாறாக பற்பல யோசனைகளில் இருந்ததால், இயற்கையில் கலா ரசிகனான வல்லாளன் அந்தச் சூழலிலிருந்து அன்னியப்பட்டுப்போனான். சூரியன் மலை வாயிலில் விழுந்து இருள் கவியத் தொடங்கி பந்தங்கள் ஏற்றப்பட்ட போதுதான் அவனது நினைவு இவ்வுலகிற்குத் திரும்பியது. நெடிய பெருமூச்சுடன் ஆசனத்தை விட்டெழுந்து கீழே இறங்கி மாளிகை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
=====
அரச மாளிகையானது கோட்டையின் மேற்குப் பகுதியை ஒட்டினார்ப்போல் அமைக்கப் பட்டிருந்தது. அதை ஒட்டி த்வாரசமுத்திரமென்னும் ஏரி இருந்ததால் அது இயற்கை அரணாக மட்டுமின்றி, சுகமான காற்றுக்கும் வழி செய்தது. ஏரியிலிருந்து வெட்டிவிடப்பட்ட கால்வாய் அந்தப்புரத்திலுள்ள நந்தவனத்திற்கு நீரைச் சேர்த்ததோடு அங்கே உள்ளே அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திற்கும் நீரைப் பாய்ச்சியது. அந்தப்புர வாசிகள் அங்கே நீராடுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குளமும் அதைச் சுற்றியுள்ள நந்தவனமும் வல்லாளனின் இல்லாளான நீலாவின் கைவண்ணத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.
இத்தகைய எழில் கொஞ்சும் சூழல் எதிலும் மனதைச் செலுத்தமுடியாமல் அந்தப்புரம் வந்த வல்லாளன் நேராக உள்மாளிகையை அடைந்து ஆகாரமும் அருந்தாமல் படுக்கையறைக்குச் சென்றான். உடை கூட மாற்றாமல் மஞ்சத்தில் அமர்ந்து தனது சிந்தையிலிருந்த சிந்தனைக் குதிரையை மீண்டும் விரட்டினான்.
அரசன் உள்ளே வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதுமே நீலா தனது பணிகளை முடித்துக் கொண்டு மகனை உறங்கச் செய்துவிட்டு, படுக்கையறைக்கு விரைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி புதிதாக இல்லை. கடந்த சில நாட்களாகவே வல்லாளனின் நிலை இதுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், ஒரு நெடிய மூச்சின் காரணமாக அவள் அவயவங்கள் எழும்பித் தாழ்ந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு மஞ்சம் நோக்கிச் சென்றவள், ஏதும் பேசாமல் அவனருகில் அமர்ந்தாள்.
பொதுவாகவே கலா ரசிகனும், இன்பப்பிரியனுமான வல்லாளன், நீலாவிடத்தில் அளவிடற்கரிய அன்பை வைத்திருந்தான். அவளருகாம அவனை எப்போதுமே இன்பத்தில் ஆழ்த்தும் திறமை படைத்தது. அப்படியிருந்தவனையும் மாற்றக்கூடிய பெருங்கவலை என்னவென்பதை அவளிடத்தில் தெரிவிக்காமலேயே இருந்தான் வல்லாளன். ஆனால் சிறந்த மதியூகியான நீலா அவன் மனதில் ஓடிய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். ஆயினும் அவனே சொல்லட்டுமென்று வாளாவிருந்துவிட்டாள். இப்போது அவனது நிலை மோசமாகிவிடவே இனி அப்படியே விடுவதில் ஒரு பயனுமில்லை என்ற முடிவிற்கு வந்தவளாய், அவனை சற்றே உலுக்கினாள்.
அவளது அருகாமையின் வாசம் அவனது நாசியைத் தொளைத்து அவனை இவ்வுலகிற்கு இழுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அந்த உலுக்கல் அவனை உடனே டுக்கையறையில் இறக்கியது. அவளை நோக்கித் திரும்பியவன், "நீலா" என்றான். புன்முறுவல் செய்ய முயன்று தோல்வியும் கண்டான்.
"சுவாமி. உங்களிடம் இந்த மாறுதலை கடந்த சில வாரங்களாகவே பார்த்து வருகிறேன். உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். ஆயினும் நீங்களே சொல்லாமல் நான் கேட்பது அவ்வளவு நன்றாயிராது என்பதாலேயே வாளாவிருந்துவிட்டேன். ஆனால் இப்போது உங்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இனி தாமதிப்பதில் பயனில்லை. சொல்லுங்கள்." என்றாள் ஆறுதலாக அவனை வருடியவாறு. நீலாவின் பேச்சும் வருடலும் வல்லாளனை இளக்கிவிட்டன. இவ்வளவு புரிதலுள்ள மனைவி அமையப்பெற்றிருக்க தான் வீணே வருந்திக்கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவன், "நீலா, எது எப்படியாயினும் உன் அருகாமையில் நான் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். ஆனால் என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாதது ஒன்றுண்டு. அதுதான் பாண்டியர்களிடம் என் தந்தை அடைந்த தோல்வி. தன் சகோதரனைத் தாக்க வந்தவனைத் தடுக்க வந்தவனிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்து கொள்ளாமல் மிகவும் மோசமாக நடந்து கொண்டான் பாண்டியன். அது நம் பரம்பரைக்கே அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. அதைத் துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இத்தனை நாளும் வாளாவிருந்துவிட்டேன். இப்போது காலம் கனிந்து விட்டது. பாண்டியர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம். கணக்கை நேர் செய்யவேண்டிய தருணம். பாண்டியர்களை அடியோடு அழித்து தமிழகத்தை ஹொய்சள ராஜ்ஜியத்துடன் சேர்த்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை முடித்துவிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் வடக்கில் மாலிக் கஃபூர் தண்டு இறங்கியிருக்கிறான். அவனைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனைக் கவனிப்பதா, இல்லை பிளவு பட்டிருக்கும் பாண்டியர்களுடனான பகையைத் தீர்த்துக் கொள்வதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய் நீலா". என்று கடகடவென பள்ளி சென்று திரும்பிய குழந்தை அனைத்தையும் தாயிடத்தில் ஒப்பிப்பது போல் கொட்டிவிட்டான். இப்போது அவனும் குழந்தையாகப் படுத்துவிட்டான் அவள் மடியில்.
இவையனைத்தும் நீலா அறிந்ததேயென்றாலும், உடனடியாக ஒன்றும் சொல்லாமல், அவனது தலையைக் கோதியவாறே மந்தகாசப் பார்வையை அவனது விழிகளோடு கலக்க விட்டாள். அது பூரணமாக அவனை கவலையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. "சுவாமி, ஆந்திரத்தில் அமைந்துள்ள காகதீய அரசின் மகாராணியார் ருத்ராம்பா தேவியிடத்தில் சில காலம் பழக நேர்ந்தது. கலை மகளும், அலை மகளும், மலை மகளும் ஒருங்கே இருப்பது போன்ற வடிவில் இருந்தார்கள் அந்த தேவி. ஆயினும் ஒரு அன்னையைப் போல் ஆதுரத்துடன் எங்களிடத்தில் பழகுவார்கள். ஒரு முறை அவர்களது அரசவைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அவர்களது அரசாட்சித் திறனைக் கண்டு வியந்திருக்கிறேன். நாமும் இது போல் ஒரு நாள் சிறந்த ராஜதந்திரியாவோம் என்றும் எண்ணியதுண்டு. அதற்கேற்றார்ப்போல், தாங்களும் அவ்வப்போது என்னிடத்தில் யோசனைகள் கேட்டு வருகிறீர்கள். தாங்கள் காஞ்சிக் கடிகையில் பயிலச் சென்றிருந்தபோது, இந்த நாட்டை என் சக்திக்கேற்றார்ப்போல் நிர்வகித்தேன். ருத்ராம்பா தேவி இந்த நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணுகிற போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்". என்று சொல்லி நிறுத்தியவள், அவன் கண்ணோடு கண்ணை மீண்டும் கலந்தாள்.
"சுவாமி, ஸ்தான பலம் என்று ஒன்று உண்டு. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையாதீர்கள். நமக்கருகில் இருக்கும் மாலிக் கஃபூர் தற்போதைக்கு அசையாவிட்டாலும், நம் அசைவுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். நெடுங்காலம் அவனால் தாமதிக்க முடியாது. விரைவில் நகர ஆரம்பித்துவிடுவான். அவனது கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது த்வாரசமுத்திரம். இதை நீங்கள் இப்போது விட்டகன்றால் உடனே படையெடுத்து வந்து அழித்துவிடுவான். ஆகவே, தாங்கள் இங்கே தாமதித்து, அவனை எதிர்கொள்வதே நல்லது. பாண்டியர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.அருகில் ஒரு எதிரியை வைத்துக் கொண்டு நெடுந்தூரம் செல்லாதீர்கள். உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். " என்று கூறி முடிக்கும் போது இருவரும் மஞ்சத்தில் சாய்ந்திருந்தனர். அவளது கடைசி வரிகளைக் கேட்ட வல்லாளனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. நீலாவின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், வல்லாளனது கைகள் அவளது அங்கங்களை ஆராய்ந்து கொண்டிருந்தன. அவை ஒன்றும் புதிதல்லவென்றாலும், ஒவ்வொருமுறையும் புதிதாய்த் தோன்றியது வல்லாளனுக்கு. அவனது ஆராய்ச்சியில் வெகுவாக மயங்கிய நீலா தான் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லிவிட்டாள்.
அவனது புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் என்னவென்று கேட்டாள். உனது கடைசி வரிகளில் குறிலும் நெடிலும் விளையாடுவதை எண்ணினேன். புன்னகை மலர்ந்தது, என்று கூறி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் விளக்கவும் செய்தான். அதன் பலனை உடனடியாகவும் பெற்றுக்கொண்டான்.
அதற்குப் பிறகு வந்த உம் என்ற ஒற்றை ஒலியைத் தவிர அந்த அறையில் புரியும்படியான ஓசை எதுவும் கேட்கவில்லை.
(தொடரும்)
9 comments:
//பந்தங்கள் ஏற்றப்பட்ட போதுதான் //
சொந்தங்கள், பந்தங்கள் வாழ்த்திட இங்கே,,,,,,,,,
//உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். "//
நல்ல சிந்தனை தல,...,
Very good writing
now your this story writing very improved than
pervious chapter
Thanks,
V.Ramachandran
Singapore
///SUREஷ் (பழனியிலிருந்து) said...
///சொந்தங்கள், பந்தங்கள் வாழ்த்திட இங்கே,,,,,,,,,///
//உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். "//
நல்ல சிந்தனை தல,...,///
நன்றி தல!
Thanks Mr. Ramachandran.
Comments like this would help me to horn up my writing skills.
Please keep visiting this blog.
இப்ப டைம் இல்ல. அப்பாலிக்கா வரேன்
இந்த பாகத்தில் கடந்த பாகங்களை விட நடையில் மெருகு கூடி இருப்பது நன்றாகவே தெரிகிறது. இயற்கை பற்றிய வர்ணனை, கதை மாந்தர் எண்ண ஓட்டம், அவற்றின் பின் புலம், கொஞ்சம் காதல் ரசம், சரித்திர நாவல்களுக்கே உரித்தான "மந்தகாசம், வாளாவிருத்தல்" போன்ற சொற்கள் என அனைத்துமே இந்த பாகத்தில் அமைந்தது காரணமாய் இருக்கலாம். எல்லாவற்றையும் விட கடைசியில் விளையாடிய "குறில் நெடில்" தான் சிகரம். வரும் பகுதிகளில் இன்னும் நெறைய எதிர் பார்க்கிறோம் இளைய பல்லவன் (குறில் நெடிலை மட்டுமல்ல.. மற்றவற்றையும்தான்).
Dear ilayapallavan
I am regular visitor your blog
as well as i am follower also
i think you
never check your followers list.
Thanks,
V.Ramachandran
ஆகா ரொமாண்டிக் பல்லவன். கலக்குறீங்க போங்க.
ஒரு டவுட்டு //சூரியனின் ஒளி லேசாக அடித்துக் கொண்டிருந்த// இந்த வார்த்தை அப்போவே இருந்ததா?
Post a Comment