Sunday, November 30, 2008

தி வொயிட் பலூன் (பெர்சியன்) - திரை விமர்சனம்
தி வொயிட் பலூனைப் பார்க்கும் வரையில் வெளி நாட்டுத் திரைப்படங்களில் அத்துணை நாட்டம் இருந்ததில்லை. ஆங்கிலப் படங்களும் குறிப்பாக குங்க்ஃபூ, ரஷ் அவர் மாதிரியான படங்களே, என் வெளி நாட்டுப் படப் பட்டியலில் இருந்து வந்தன. இந்தத் திரைப் படத்தைப் பார்த்த பிறகுதான் அயல் நாட்டுப் படங்களின் ஆழ்ந்த கருத்துகளும், வாழ்வியல் சிந்தனைகளும் மனிதகுலம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளின் கோர முகங்களும் வெளிப்பட்டு நம்மை அந்த சூழ் நிலைக்கு எடுத்துச் செல்கின்றன என்பது புரிந்தது. அந்த விதத்தில் தி வொயிட் பலூனுக்கு மிக்க நன்றி.

சில படங்களில் கதை மிக அழுத்தமாக இருக்கும். சில படங்களில் கதையே இருக்காது. ஆனாலும் வெற்றி பெறும். அதற்குக் காரணம் முகத்தில் அறைவதைப் போன்ற நிதர்சனத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுதான். இந்த ஈரானியப் படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். கதை என்றால் ஒரு போஸ்ட் கார்டில் கால் பங்கு கூட எழுத முடியாத அளவுக்குச் சிறியது. ஆனால் ஈரானின் உண்மை முகத்தைக் காட்டும் அதன் காட்சி அமைப்புகளும், கதை மாந்தர்களும் நம்மை ஈரானுக்கே அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இப்போது கதையும் விமர்சனமும்.

கதை

ஈரானியப் புத்தாண்டு நாள். அதற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க ஒரு சிறு பெண், தனக்கு நல்ல 'கோல்டன் ஃபிஷ்' தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். புத்தாண்டில் தங்க மீன் இருந்தால் நல்லதாம். இத்தனைக்கும் அவள் வீட்டில் இருக்கும் சிறிய தொட்டியில் நிறைய தங்க மீன்கள் இருக்கின்றன. அருகிலுள்ள அனைவரும் இங்கிருந்து தான் தங்கமீனை எடுத்துச் செல்கின்றனர். அவள் சகோதரனும் அவர்கள் தாயிடம் போராடி அவளிடம் இருக்கும் கடைசி 500 ஈரானிய ரூபாய் நோட்டை வாங்கிக் கொடுக்கிறான். சந்தோஷமாகக் கடைக்குச் செல்லும் அந்தச் சிறுமி வழியில் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறாள், எப்படிப் பணத்தைத் தொலைக்கிறாள். கடைசியில் அந்தப் பணம் அவளுக்குக் கிடைத்ததா, தங்க மீன் வாங்கினாளா? என்பது தான் கதை.

திரைக் கதை

ஒரு கீழ் நடுத்தர அல்லது மத்திய நடுத்தர ஈரானியக் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது இந்தக் கதை. குடும்பத் தலைவி வீட்டு வேலைகளுடன் வெளியே சென்று பொருட்கள் வாங்கி வருவது வரை அனைத்தையும் நிர்வகிக்கிறார். குடும்பத் தலைவன் என்று ஒருவனின் குரல் இடை இடையே கேட்கிறது. அதற்கு எல்லோரும் பயப் படுகிறார்கள் அல்லது வெறுப்படைகிறார்கள். இது ஈரானில் நிலவும் ஆணாதிக்கத்தையும் பெண்களின் நிலையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும் அந்த சிறுமி தன் தாயோடு சந்தைக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் போது, பாம்பாட்டியின் வித்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப் பார்ப்பதற்காக சற்று நிற்கும் போது அவள் தாய், 'பெண்கள் இங்கெல்லாம் நிற்கக் கூடாது, அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல' என்று அறிவுரை கூறி இழுத்துக் கொண்டு செல்கிறாள். மீண்டும் அந்தச் சிறுமி காசு கிடைத்தவுடன் தங்க மீன் வாங்கச் செல்லும் போது பாம்பாட்டியிடம் தன் பணத்தை இழக்கிறாள். பிறகு பாம்பாட்டி அந்தச் சிறுமியிடம் பரிதாபப் பட்டு அந்தப் பணத்தைத் திருப்பி அளித்து விடுகிறார். அந்த வழியே செல்லும் ஒரு பாட்டி, இவளிடம் நடந்தவற்றைக் கேட்டுவிட்டு, 'பெண்கள் இங்கு வரக்கூடாது என்று உன் தாய் கூறவில்லையா?' என்று கேட்கிறார்.

அதற்கு அந்தச் சிறுமி 'என் அம்மா சொன்னார்கள். ஆனாலும் பெண்களுக்கு எது நல்லதல்ல என்று தெரிந்து கொள்வதற்காக வந்தேன்' என்று கூறுவாள். இந்த பதில் தான் இந்தப் படத்தின் பன்ச் டயலாக்.

இப்படிக் கிடைத்த பணம் மீண்டும் வழியில் ஒரு சாக்கடையில் விழுந்து விடுகிறது. அதன் மேல் இரும்பு மூடி இருக்கிறது. அதைத் திறக்க அந்தக் கடைக்காரன் வர வேண்டும். ஆனால் அவன் புத்தாண்டைக் கொண்டாட தன் இல்லத்திற்குச் சென்று விட்டான். அருகில் ஒரு தையற்காரன் கடை. அங்கு வரும் பல்வேறு மனிதர்களின் உரையாடல்களும் சுவையானவை.

அந்தக் கடைக்காரனுக்காகக் காத்திருக்கும் போது, சிறுமியிடம் ஒரு படை வீரன் பேச்சுக் கொடுக்கிறான். அயலாருடன் பேசக் கூடாதென்று தன் தாயார் கூறியிருப்பதாக அந்தச் சிறுமி கூறுகிறாள். அந்தப் படை வீரன் தனக்கும் அவளைப்போல சகோதரிகள் இருப்பதாகக் கூறுகிறான். பிறகு அவனும் சென்று விடுகிறான்.

அந்தச் சிறுமியும் அவள் சகோதரனும் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பணத்தை எடுக்க முடிய வில்லை. அப்போது ஒரு ஆஃப்கன் சிறுவன் பலூன் விற்றுக் கொண்டு வருகிறான். அவனிடம் ஒரு கம்பு. அதில் பல நிறங்களில் பலூன்கள் இருக்கின்றன. அவன் சிறிது நேரம் கழித்து அதே பகுதிக்கு வருகிறான். அவனிடம் அப்போது ஒரு வெள்ளை பலூன் மட்டுமே இருக்கிறது. அவனும் அந்தப் பணம் இருப்பதைப் பார்க்கிறான்.

அந்தச் சிறுமியின் அண்ணன், ஆஃப்கனிடம் கம்பை வாங்கி அதன் அடியில் பபிள் கம்மை ஒட்டி அந்தப் பணத்தை வெளியே எடுத்து விடுகின்றான். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் இருவரும் அவனுக்கு நன்றி கூட கூறாமல் ஓடி விடுகின்றனர். பின்னணியில் புத்தாண்டு வந்துவிட்டதற்கான இசை கேட்கிறது. கடைசி காட்சியில் அந்த ஆஃப்கன் சிறுவனும் அவன் வெள்ளை பலூன் கம்பு மட்டுமே தனித்திருக்கின்றன. இத்துடன் படம் நிறைவடைகிறது.

ஆஃப்கன் சிறுவன் ஈரானில் ஒரு அகதி. மற்றவர்கள் புத்தாண்டு கொண்டாடும் போது அவன் மட்டும் தனித்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடித்த சிறுமி 'அயிடா மொஹம்மத்கனி' மிகச் சிறப்பாக நடித்திருந்தாள் என்று சொல்வதை விட அந்தச் சிறுமியாகவே வாழ்ந்திருந்தாள் என்று கூறுவதுதான் பொருத்தம்.

இந்தப் படத்தின் கதையை எழுதியது, ஈரானின் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் 'அப்பாஸ் கியரோஸ்தமி'. இவர் ஒரு புரட்சிகர இயக்குனர்.

இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1995. கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது.

கண்டிப்பாக இந்தப் படத்தை வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

7 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மிக அருமையான திரைப்படம்.

திரைப்படங்களின்பால் அதிக ஈர்ப்பு இல்லாதவர்களைக்கூட கவர்ந்திருக்கிறது என்றால் இதுதான் இப்படத்தின் சிறப்பு.

இளைய பல்லவன் said...

Thanks உண்மைத் தமிழன்(15270788164745573644)

Anonymous said...

good movie

நான் ஆதவன் said...

சிறிது நாட்களுக்கு முன்னால் ஒரு வார இதழில் இந்த படத்தைப் பற்றி படித்ததலிருந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் ஆவலை மேலும் தூண்டிவிட்டீர்கள்.

ஏதாவது லின்ங் இருந்தால் கொடுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும்...:-)

இளைய பல்லவன் said...

சும்மா சேனலை ஸ்கேன் பண்ணிட்டிருந்தவனைக் கட்டிப் போட்ட படம் சார் இது.

அடிக்கடி வேர்ல்ட் மூவீஸ் சேனல் அல்லது என்.டி.டி.வி. லுமியரில் போடுவாங்க. பாக்க மறக்காதீங்க. மத்தபடி, நீங்க கேட்கறது டவுன்லோடு பன்ற லிங்குங்களா? அதெல்லாம் நமக்குத் தெரியாதுங்க:((

suba. said...

suba says,
This induced me to see the movie as early as posible.

இளைய பல்லவன் said...

thanks suba