Sunday, November 16, 2008

ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?

தோழர் வினவு, ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற அவரது நட்சத்திரப் பதிவில், ஐ.டி.துறையில் தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவிற்குப் பின்னூட்டமிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த சிந்தனைகள் ஒரு முழுப் பதிவிற்குண்டான செய்திகளை அளித்ததால் இந்தப் பதிவு.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.

அவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும்?. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.

முதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?

தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.

இத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.

2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.

இது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.

3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.

4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.

ஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.

5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.

இது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.


கலெக்டிவ் பார்கெய்னிங்

மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.

ஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.

தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.


இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.


ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.

இந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

29 comments:

நான் ஆதவன் said...

நல்ல பதில்..ஆனால் செங்கொடி பிடிப்பவர்க்கு அதெல்லாம் உறைக்காதே...

நான் ஆதவன் said...

//உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்//
:-)

Akaran said...

ஐயா, Ilayapallavan,

தங்களுடைய பதிவை வாசித்தேன். நீங்கள் சொல்லுவது என்னவென்றால், ஐ.டி. தொழிலாளியின் கோணத்தில் இருந்து, தொழிற்சங்கம் தீர்வாகாது என்பது. "தீர்வாகாது" என்பதை விருப்பத்துக்குரியதாகாது என்று சொல்வதே பொருத்தம். நீங்கள் கூறும் நடைமுறை யாவும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்கனவே வந்து விட்டது. அங்கே சாதாரண துப்பரவுத் தொழிலாளி அல்லது கட்டட தொழிலாளி கூட நீங்கள் கூறும் ஐ.டி. ஊழியரின் நிலைமையில் தான் இருக்கிறார். அவர்களுக்கும் தொழிற்சங்கம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்களும் நீங்கள் கூறும் நியாயங்களை தான் முன் வைக்கின்றனர். அந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்கள், அனைத்து தொழிலாளரின் உரிமைகளையும் கவனித்துக் கொள்கின்றன. அதனால் தான் சாதாரண தொழிலாளி அது பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறான். நீங்கள் சிறு பிள்ளையாக எந்தக் கவலையுமற்று வாழ்ந்த காலத்தில், உங்கள் தந்தை எல்லாப் பொறுப்பையும் தனது தலை மேல் போட்டுக் கொண்டு குடும்பத்தை பார்த்ததை நினைத்துப் பாருங்கள். ஐ.டி. நண்பர்களே, நீங்கள் இப்போதும் தந்தையின் நிழலில் வாழும் உலகம் தெரியாத சிறு பிள்ளைகளைப் போல பேசுகின்றீர்கள்.

நீங்கள் இங்கே தொழிற்சங்கம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாதது தான் பிரச்சினை. அது தொழிலாளரை நிறுவனப்படுத்தும் அமைப்பு. தொழிலாளரின் நலன்களை மட்டும் காக்கும் அமைப்பு. இன்னும் விரிவாக சொல்கிறேன். நண்பரே! உங்கள் ஐ.டி. கம்பெனி முதலாளிகளுக்கு தொழிற்சங்கம் இருக்கும் விடயம் தெரியுமா? அமெரிக்காவில் கூட எல்லா முதலாளிகளுக்கும் தொழிற்சங்கம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வேறு பெயர் வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் முதலாளிகளின் நலன் பேணும் சங்கம் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இது ஏதோ செங்கொடி காரரின் போதனை என்று பயந்து ஓடுகிறீர்கள். தவறு நண்பா, தவறு. உனது சிந்திக்கும் முறையை மற்ற வேண்டும். முதலாளிகள் எதற்காக தமக்கு தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர்? கொஞ்சம் சிந்தியுங்கள். தொழிற்சங்கம் என்பது குறிப்பிட்டவர்களின் நலன்களை பேணும் நிறுவனம். நீங்கள் நினைப்பதைப் போல அது ஒன்றும் கம்யூனிச சித்தாந்தம் அல்ல.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது. ஏனென்றால் அவன் உங்களிடமிருந்து சுரண்டும் பணத்தை சேர்த்து தான் கோடீஸ்வரன் ஆகின்றான்.

முகு said...

அய்யா இளைய பல்லவன்,

தொழிற்சங்கமோ அல்லது மற்ற ஏனைய சங்கமோ உரிமையைக்
கேட்கத்தானே தவிர வீண்சண்டை போட அல்ல.

மேலும் விமான ஓட்டுனர் (பைலட்) கூடத்தான் 2லட்சம் முதல்
5 லட்சம் வரை வாங்குகின்றனர்.அவர்கள் கூட சங்கம் மூலம்
தான் உரிமையை கேட்டு பெறுகிறனர்.

இங்குதான் தொழிற்சங்கம் என்றாலே ஏதோ பயங்கரவாதிகளை
பார்க்கும் சூழ்நிலைதான் உள்ளது.

இளைய பல்லவன் said...

நன்றி ஆதவன்.

செஞ்சட்டைக் காரர்களின் நோக்கத்தில் தவறேதும் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஒற்றுமையே பலம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆயினும் அமைப்பு ரீதியிலான தொழிற்சங்கம் என்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லாதது என்பதே என் கருத்து.

இளைய பல்லவன் said...

விரிவான அலசலுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி அகரன்.

என் கருத்து தொழிற்சங்கம் தற்போதைய சூழலுக்குத் தீர்வாகாது என்பதே தவிர அமைப்பு ரீதியிலான சங்கம் தேவையில்லை என்பதல்ல.

இளைய பல்லவன் said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி முகு.

புருனோ Bruno said...

இ.ஆ.ப அலுவலர்கள் சங்கம் வைத்துக்கொள்வது எதற்கென்று தெரியுமா

--

eurasian said...

அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம். இந்தியாவில் குறைந்த கூலியில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருளை, அதிக பட்ச விலை நிச்சயித்து அமெரிக்கா விலைக்கே இந்திய நுகர்வோருக்கும் விற்று தான் பில் கேட்ஸ் போன்றவர்கள் கோடீஸ்வரரானார்கள். மைக்ரோசொப்டின் விண்டோஸ் போன்ற அனைத்து மென்பொருட்களையும் பயன்படுத்தும் நிறுவனமொன்று காப்புரிமைப் பணம், வருடாந்த வாடகை என்று ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டிவருவதும், இந்த செலவை இறுதியில் எம்மைப் போன்ற அப்பாவி நுகர்வோர் செலுத்துவதும் எத்தனை பேருக்கு தெரியும்? உலகம் முழுவதும் கணனிப் பாவனையாளர்கள் தனது பொருட்களை மட்டுமே கட்டாயப்படுத்தி வாங்க வைத்து, ஏகபோக கொள்ளையடிக்கும் பில் கேட்ஸ் தான் இந்திய "கணனிக் கண்மணிகளின்" கண் கண்ட தெய்வம்.

http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_23.html

குடுகுடுப்பை said...

முதலாளி , தொழில்,தொழிலாளி, விவசாயம் எல்லாம் வேண்டாம் சும்மா எல்லாரும் குந்திக்கினு போராட்டம் பண்ணுவோம்.

அமர பாரதி said...

இளைய பல்லவன்,

எதுக்கு நேரத்த வேஸ்ட் பன்றீங்க.

அகரன்,

//உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது.// இப்படி சொல்லிக்கிட்டே திருப்திப்பட்டுக்குங்க. அப்படியாவது மகிழ்ச்சியா இருந்தா சரி. அய்யா, உங்களோட தொழிற்சங்கத்து இருக்கற எல்லோரும் முதலாளிக்கு நிகரா ஆயிட்டீங்களா?

//அமெரிக்காவில் இரண்டு பேர் செய்யும் வேலையை இந்தியாவில் ஒரு ஆளை கொண்டு செய்வித்து விட்டு, அரை ஆளின் சம்பளம் வழங்கி, ஒன்றரை ஆளின் சம்பளத்தை லாபக் கணக்கில் சேர்க்கும் அதி புத்திசாலி கம்பனிகள் பெருக்கிக் கொள்ளும் மூலதனம் இந்தியாவின் வருடாந்த பட்ஜெட் தொகையை விட அதிகம்//

அமெரிக்க சம்பளத்தை இந்தியாவில் கொடுக்க சொல்கிறீர்களா?
இது அத்தனைக்கு அப்புறமும் இந்தியாவில் இவர்கள் வாங்கும் சம்பளம் மற்ற துறைகளை விட பன்மடங்கு அதிகம் அல்லவா? அவன் அதி புத்திசாலியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

இளைய பல்லவன் said...

//புருனோ Bruno சொன்னது…
இ.ஆ.ப அலுவலர்கள் சங்கம் வைத்துக்கொள்வது எதற்கென்று தெரியுமா
//

Collective Bargaining ஐ.டி.துறையில் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று என் பதிவில் கூறியிருக்கிறேன்.

இளைய பல்லவன் said...

//eurasian சொன்னது…//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி eurasian.

இளைய பல்லவன் said...

//அமர பாரதி சொன்னது… //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமர பாரதி. என் கருத்து ஐ.டி.துறையில் தொழிற்சங்கங்கள் இன்றைய சூழலில் சாத்தியமில்லாதது என்பதே. தொழிற்சங்கங்கள் தேவையற்றது என்பதல்ல. இந்தியாவில் தொழிற்சங்கம் என்றாலே, போராட்டம், கதவடைப்பு என்றாகி விட்ட நிலை இரு சாராரும் ஏற்படுத்தியதே.

இளைய பல்லவன் said...

//குடுகுடுப்பை சொன்னது… //

:))
:((

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்கள் said...

இங்கே தொழிர்சங்கம் வேண்டும் என்று சொல்லும் கணவான்களின் நோக்கம் தொழிலாளர் பலன் அல்ல என்பதைத் தாங்கள் உணரவேண்டும்.

இவர்களுக்கு CCP யிலிருந்து பணம் வருகிறது. இவர்கள் இங்கே போராட்டம் நடத்தி இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்களையும் முடக்கினால் தான் அங்கே உள்ள தொழிற்சாலைகள் உலகச் சந்தையில் முன்னிலை வகிக்க முடியும்.

INDIA, INC., என்ற போட்டிய உலகச் சந்தையிலிருந்து துரத்தியடிக்க சீனா ஏவிவிடும் ஏவல் நாய்கள் தான் இவர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்த்திட வேண்டும்.

Akaran said...

//என் கருத்து தொழிற்சங்கம் தற்போதைய சூழலுக்குத் தீர்வாகாது என்பதே தவிர அமைப்பு ரீதியிலான சங்கம் தேவையில்லை என்பதல்ல.//
I respect your opinion Ilayapallavan.

//INDIA, INC., என்ற போட்டிய உலகச் சந்தையிலிருந்து துரத்தியடிக்க சீனா ஏவிவிடும் ஏவல் நாய்கள் தான் இவர்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்த்திட வேண்டும்.//
What a non sence.

//அய்யா, உங்களோட தொழிற்சங்கத்து இருக்கற எல்லோரும் முதலாளிக்கு நிகரா ஆயிட்டீங்களா?//

தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நிகராக வர வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அப்படியே வந்தாலும் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. தொழிலாளர்கள் தமது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக தான் தொழில்சங்கம் தேவை என்பது தான் எனது கருத்து. தொழிற்சங்க பாதுகாப்பு இல்லையென்றால் முதலாளிகள் எம்மை விரும்பிய படி அதிக வேலை வாங்கி கசக்கிப் பிழியலாம். இளையபல்லவன் கூட எனது கருத்துடன் ஒத்துப் போகின்றார். ஆனால் அவர் கூற வருவது, இன்று ஐ.டி. துறை இருக்கும் நிலையில் தொழிற்சங்கம் தேவையில்லை என்பது. முதலில் அவரது கருத்திற்கு மதிப்புக் கொடுக்கிறேன்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரை இந்த நிலைமை நிரந்தரமல்ல. ஏனெனில் மேலைநாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் தொழிலாளருக்கு சட்டப் பாதுகாப்புகள் இல்லை, அல்லது அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் குறைவு. இன்று என்ன நடக்கின்றது என்றால் ஐ.டி. கம்பெனி தனது தொழிலாளர் நன்மை கருதி பல காப்புறுதி நிறுவனங்களில் பணம் கட்டி வருகின்றது. ஆனால் இது அங்கே வேலை செய்யும் காலத்திற்கு மட்டும் தான். மேலும் வருங்காலத்தில் செலவை குறைப்பதற்காக அந்த திட்டங்களை இரத்து செய்யலாம். அப்போது ஐ.டி. பணியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அப்போது தான் தமக்கு ஒரு தொழிற்சங்கம் இருந்திருந்தால் நல்லது என்று உணர்வார்கள்.

மேலும் 20000 ரூபாய் சம்பளம், பிற சலுகைகள் எல்லாம் இந்த பணியாளர்களுக்கு ஐ.டி கம்பெனிகள் கொடுக்கும் லஞ்சமாக தான் கருத வேண்டியுள்ளது. இன்று எத்தனை ஐ.டி. பணியாளர்கள் முதலாளிகளுக்கு சார்பாக பேசுகிறார்கள்? தங்களுக்கு தொழிற்சங்கம் தேவையில்லை என்று வாதாடுகிறார்கள்? அதிகம் தேவையில்லை. இந்தப் பதிவில் கூட எத்தனை பேர் ஐ.டி. முதலாளிகளுக்கு ஆதரவாக பின்னூட்டம் போடுகிறார்கள்? இவர்கள் எல்லாம் அதிகமாக சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள். உங்களால் இதனை மறுக்க முடியுமா? இதெல்லாம் நான் சொன்னதை சரியென்று மெய்ப்பிப்பதாகவே உள்ளது. யாருடைய பணம் உனக்கு கிடைக்கிறதோ, அவனைப் போலவே பேசக் கற்றுக்கொள்வாய் என்பது பழமொழி.

Akaran said...

//அமெரிக்க சம்பளத்தை இந்தியாவில் கொடுக்க சொல்கிறீர்களா?
இது அத்தனைக்கு அப்புறமும் இந்தியாவில் இவர்கள் வாங்கும் சம்பளம் மற்ற துறைகளை விட பன்மடங்கு அதிகம் அல்லவா? அவன் அதி புத்திசாலியாக இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?//

கிரிமினல்களின் திருட்டு வேலையை அதி புத்திசாலித்தனம் என்று மெச்சும் அறிவுக் கொழுந்து அமராவதி அவர்களே,
இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பது தயாரிக்கப்படும் மென்பொருளின் உற்பத்தி செலவை குறைப்பதற்காக தானே? அப்படியானால் கடையில் விற்கும் விலையும் குறையத்தானே வேண்டும்? அது தானே நியாயம்? ஆனால் எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்னவென்றால், இப்போதும் அமெரிக்க விலையில் தான் இந்தியாவில் ஒரு software விற்கிறார்கள். அது ஏன்? நீங்கள் ஏன் விலையை குறைக்கும் படி சொல்லவில்லை?

இளைய பல்லவன் said...

டாக்டர் ப்ரூனோ, இ.ஆ.ப சங்கம் இருக்கிறதே என்கிறார். இ.ஆ.பவினருக்கு ஒரே முதலாளிதான். மேலும் அனைவருக்கும் கிடைக்கும் படி, சம்பளம் ஒரே அளவுதான். எனவே அந்தச் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்துகிறது.

ஐ.டி. துறையில் அவ்வாறல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக சங்கம் தொடங்க வேண்டும். அதில் இன்றிருப்பவர்கள் நாளை இருப்பார்களா என்பது கேள்விக்குறி.

இந்தச் சூழலில் அமைப்பு ரீதியான சங்கம் சிறந்த வழியாகப் படுகிறது. உதாரணமாக நாஸ்காம் இருக்கிறது. எங்கள் சி.ஏ. அசொசியேஷன் இருக்கிறது. அதைப் போல் ஐ.டி. ப்ரொஃபெஷனல்ஸ் அசோசியேஷன் அமைத்து அதை அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளலாம்.

ஐ.டி. துறையில் கிடைக்கும் சலுகைகளை லஞ்சமாக ஏன் கருத வேண்டும்? மற்ற தொழில்களைப் போல் கேட்ட பின் கொடுக்காமல், முதலிலேயே கொடுத்து விட்டால் பிரச்சனை இருக்காது என்ற எண்ணத்தினால் இருக்கலாம் அல்லவா. ஏனென்றால், ஐ.டி. துறையில் தொழிலாளர்கள் தான் மூலதனம், இயந்திரம் எல்லாம். முதலாளிகளுக்கு இவையிரண்டின் பாதுகாப்பு மிக முக்கியம். அந்த வகையில் அவர்களது தொழில் தடைபடாமல் இருக்க ஐ.டி. தொழிலாளர்களின் நலனும் முக்கியமானதாகிறது.

Akaran said...

நான் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று காரணம் இல்லாமல் சொல்லவில்லை.ஒரு உதாரணம் பார்ப்போம். இந்தியாவில் இன்போசிஸ் போன்ற ஐ.டி. கொம்பனிகள் மட்டுமா அமெரிக்க கம்பெனிகள்? கோக கோலா அமெரிக்க கம்பெனி இல்லையா? அவர்கள் இந்தியாவில் தொழிற்சாலை நிறுவி இந்திய தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கவில்லையா? அந்த தொழிலாளர்களுக்கும் ஐ.டி துறையில் கொடுக்கும் அதே சம்பளமும், சலுகைகளும் கொடுக்கிறார்களா? சில வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு அருகில் கொரிய ஹயுண்டேய் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தவில்லையா? என்ன தான் வெளிநாட்டு கம்பெனிகளாக இருந்தாலும், இந்தியர்களுக்கிடையில் பாரபட்சமான சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது நான் சொல்லாமலே புரியும். ஏன் இந்த பாரபட்சம்? ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா? மற்றவர்கள் மாடுகளா?

நீங்கள் ஒரு பதில் சொல்லாலாம். ஐ.டி. துறையில் வேலை செய்தவர்கள் படித்து பட்டம் பெற்றவர்கள் அதனால் சம்பளம் அதிகம் என்று. படிப்பிற்கு ஏற்ற சம்பளம் இருக்க வேண்டும் தான். ஆனால் இது போன்ற பெரிய வித்தியாசம் தேவையில்லை. இந்த அமெரிக்க கம்பெனிகள், தமது நாடான அமெரிக்காவில் நிலைமை எப்படி இருக்கின்றது என்பது தெரியாதா? அங்கே துப்பரவு பணியாளருக்கும், ஐ.டி. பணியாளருக்குமான சம்பளத்தில் 20% ற்கு மேல் வித்தியாசம் இருக்காது. இந்தியாவிலும் அப்படியா? இந்தியாவில் வசதியான வாழ்க்கை வாழ 20000 ரூபாய் தேவை. அதை தானே ஐ.டி.யில் அடிப்படை சம்பளம் என்று நீங்களே பதிவிட்டிருக்கிறீர்கள்? அதன் அர்த்தம் என்ன? ஒரு மனிதனின் அடிப்படை வாழ்க்கை வசதிக்கு தேவையான பணத்தை தான் ஐ.டி.துறையில் சம்பளமாக கொடுக்கிறார்கள். கோக கோலா கம்பெனி தொழிலாளிக்கு அந்த அடிப்படை வசதி தேவையில்லையா? அவன் மனிதனில்லையா? நாலு கால் விலங்கா?

எந்த கம்பெனி என்றாலும் நிர்வாகம் ஒன்று தான். யாருக்கு என்ன சம்பளம் கொடுப்பது என்பதை நிர்வாகம் தான் தீர்மானிக்கின்றது. அதே வெளிநாட்டு கம்பெனி அதிகம் படிக்காத இந்திய தொழிலாளிக்கு குறைந்த சம்பளமும், படிப்பறிவுள்ள ஐ.டி பணியாளருக்கு கேட்காமலே அதிக சம்பளமும் அள்ளிக் கொடுப்பதன் மர்மம் என்ன? இங்கே தான் விஷயம் உள்ளது. ஐ.டி. பணியாளர்கள் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே நான் எழுதியதை வாசித்து புரிந்து கொள்ளுமளவிற்கு அறிவு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நான் சொல்வது உண்மை என்று தெரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். "இந்தியாவில் அமெரிக்க சம்பளம் கொடுக்க சொல்கிறீர்களா?" என்று தன்னை தானே ஒரு ஐ.டி. முதலாளி போல நினைத்துக் கொண்டு பின்னூட்டம் இடுவார்கள். அவர்களை அப்படி செய்ய வைப்பது எது? பணம் அய்யா பணம். ஐ.டி. துறையில் அவர்களுக்கு கிடைக்கும் தாராளமான பணம், சலுகைகள் என்பன, அவர்களை வேறு பக்கம் கவனத்தை திசை திருப்ப விடாமல் வைத்திருக்கின்றன. அதனால் தான் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம், சலுகைகள் எல்லாம் ஐ.டி. முதலாளிகள் கொடுக்கும் லஞ்சம் என்று கூறினேன்.


நான் இங்கே கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் தான் ஐ.டி.துறையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அப்படி இல்லா விட்டால் தான் அது அதிசயம். ஐ.டி. முதலாளிகள் சொல்ல வருவது இதைத் தான்: "நாங்கள் உங்களுக்கு அதிக சம்பளம் சலுகை எல்லாம் தருகிறோம். இந்தியாவில் வேறு இடத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டுகொள்ளாமல் உங்களது சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்."

அமர பாரதி said...

//அங்கே துப்பரவு பணியாளருக்கும், ஐ.டி. பணியாளருக்குமான சம்பளத்தில் 20% ற்கு மேல் வித்தியாசம் இருக்காது.// அய்யா, உங்களுடைய உலக (உளறல்) ஞானம் என்னை பிரம்மிக்க வைக்கிறது.

இந்த லட்சனத்தில் இந்த வயித்தெரிச்சல் வேறு.

//இந்தியாவில் அமெரிக்க சம்பளம் கொடுக்க சொல்கிறீர்களா?" என்று தன்னை தானே ஒரு ஐ.டி. முதலாளி போல நினைத்துக் கொண்டு பின்னூட்டம் இடுவார்கள்//

உங்களுடைய மனநிலை தெளிவாத் தெரிகிறது. விரைவில் ஒரு நல்ல மருத்துவரைப் பாருங்கள். ரொம்ப வயித்தெரிச்சல் அதிகமானால் ஜெலுசில் சாப்பிடுங்கள்.

அமர பாரதி said...

//இந்தியாவில் இன்போசிஸ் போன்ற ஐ.டி. கொம்பனிகள் மட்டுமா அமெரிக்க கம்பெனிகள்?// இன்போசிஸ் அமெரிக்க கம்பெனியா?. மறுபடி மறுபடி என்னை பிரம்மிக்க வைக்கிறீர்கள்.

அமர பாரதி said...

//கிரிமினல்களின் திருட்டு வேலையை அதி புத்திசாலித்தனம் என்று மெச்சும் அறிவுக் கொழுந்து அமராவதி அவர்களே// அய்யா சாமி, அதி புத்திசாலி என்று சொன்னது நானில்லை. அது வேறொருவர்.

/உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. நீங்கள் என்ன தான் சம்பாதித்தாலும் முதலாளிக்கு நிகராக வர முடியாது. ஏனென்றால் அவன் உங்களிடமிருந்து சுரண்டும் பணத்தை சேர்த்து தான் கோடீஸ்வரன் ஆகின்றான்// தொழிலாளி முதலாளிக்கு நிகரா வர முடியாது என்று சொன்னது தாங்கள்தான்.

பிறகு இதை
//தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நிகராக வர வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அப்படியே வந்தாலும் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை//

சொன்னதும் தாங்கள் தான்.

உங்களுடைய கேள்வி என்ன?

Akaran said...

//இந்தியாவில் இன்போசிஸ் போன்ற ஐ.டி. கொம்பனிகள் மட்டுமா அமெரிக்க கம்பெனிகள்?// இன்போசிஸ் அமெரிக்க கம்பெனியா?. மறுபடி மறுபடி என்னை பிரம்மிக்க வைக்கிறீர்கள்.//

Hi, Amarabarathi,
Infosys Is A Leading North American Applications Outsourcing Provider
Infosys is among the strongest offshore providers in applications outsourcing (AO). Like its contemporaries, its rapid growth indicates that it is competing effectively in the AO market. Infosys is not always viewed as the most price-competitive of the offshore providers, but its strong reputation for cultural fit among North American customers allows it to compete effectively with multinational corporations (MNCs) and offshore rivals alike. - by Bill Martorelli

//தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு நிகராக வர வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அப்படியே வந்தாலும் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. சொன்னதும் தாங்கள் தான். உங்களுடைய கேள்வி என்ன?//

அமரபாரதி,
நான் முதலில் கூறியது இன்று உள்ள உலக வழமை குறித்து. நான் சொல்பவற்றை நம்பாவிட்டால், இந்தப் பதிவை இட்ட இளையபல்லவனை (பட்டயக் கணக்கர்) (சார்டர்ட் அக்கவுண்டன்ட்) கேட்டுப் பாருங்கள். இன்றுள்ள பொருளாதார அமைப்பின் படி ஒரு கம்பெனியில் தொழிலாளி மாதாமாதம் சம்பளமாக எடுப்பதை விட பல மடங்கு அதிகமாக அந்த கம்பெனி முதலாளி லாபமாக சம்பாதிக்கிறான். இந்தியாவில் ஐ.டி. துறையில் இருக்கும் கம்பனிகள் பெரும்பாலும் அமெரிக்க அவுட் சோர்சிங் கம்பனிகள். இளையபல்லவன் சொன்ன உதாரணத்தை காட்டியே புரிய வைக்கிறேன். //ஐ.டி. துறையில் தொழிலாளர்கள் தான் மூலதனம், இயந்திரம் எல்லாம்.// அதன் அர்த்தம் அமெரிக்க ஐ.டி. வேலை ஒன்றை இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் செய்வதன் மூலம், அந்த கம்பெனி லாபம் அடைகின்றது. உண்மையில் ஒவ்வொரு மாதமும் இந்திய ஐ.டி. பணியாளர் எடுக்கும் சம்பளத்தை விட மூன்று அல்லது நான்கு மடங்கு பணம் இந்த அவுட் சோர்சிங் கம்பெனிகளுக்கு வருமானமாக கிடைக்கின்றது.

நான் தொழிலாளி முதலாளிக்கு நிகராக வருவதில் தவறில்லை என்று கூறியது. எல்லோரும் சம மனிதர்களாக கணிக்கப்பட வேண்டும் என்ற நன்நோக்கத்தோடு தான். ஒரு முதலாளி தனது அதிக பட்ச வருமானத்தை தொழிலாளியோடு பங்கு போட முன்வந்தால் அதில் தவறெதுவும் இல்லை. ஆனால் அப்படி நடக்க கூடிய சாத்தியக் கூறு இருக்கிறதா? ஒரு முதலாளி எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதே அமரபாரதி போன்ற நபர்களுக்கு இன்னும் தெரியாது.

அமரபாரதி,
அமெரிக்காவிலும், அய்ரோப்பிய நாடுகளிலும் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர் துப்பரவு பணியாளராகவும், ஐ.டி. பணியாளராகவும் வேலை செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கின்றது என்பது எனக்கு தெரியும். அமெரிக்காவில் எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்பது அந்த கம்பனியை பொறுத்த விடயம் என்பதால், கம்பனிக்கு கம்பெனி சம்பளம் வேறுபடலாம். நான் இங்கே சராசரி வேறுபாடு பற்றி மட்டும் கூறியுள்ளேன். அந்த வேறுபாடு இந்தியாவில் இருப்பதைப் போல மிகப் பெரிய வித்தியாசம் இல்லை.

இதனை நீங்கள் நம்பினால் நம்புங்கள். ஐ.டி. மட்டும் தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருக்கும் அமரபாரதி போன்றவர்களுக்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. சொன்னாலும் கேட்கப் போவதில்லை. நான் ஏற்கனவே கூறியது போல, அதிக சம்பளம் என்ற லஞ்சப் பணம் அவரது கண்களை மறைக்கிறது. முதலாளி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக இங்கே வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டுப் போகிறார்.

கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்கள் said...

//
முதலாளி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக இங்கே வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டுப் போகிறார்.
//

அவனவன் செய்வது தான் அவனவன் புத்தியில் இருக்கும்.


சீனாக்காரனிடம் காசு வாங்கி உளறுவது தான் இவன் வேலை. இதையே மற்றவர்களுக்கும் பொருத்திப் பார்க்கிறான்.

குடுகுடுப்பை said...

முதலாளி அள்ளிக் கொடுக்கும் பணத்திற்கு நன்றிக்கடனாக இங்கே வந்து எதையாவது உளறிக் கொட்டி விட்டுப் போகிறார்.

//
சம்பளம் வாங்கிவிட்டு முதலாளியை திட்ட வேண்டுமா?
எனக்கு புரியவில்லை

இளைய பல்லவன் said...

//இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. //

இந்தப் பதிவின் கடைசி பாராவை ரிப்பீட்டிக் கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான கருத்துகள் விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.

மற்றவைகளை தயவு செய்து தவிர்க்கவும். உங்கள் அனைவரின் மேல் உள்ள நம்பிக்கையில்தான் 'கமெண்ட் மாடரேஷன்' ஆப்ஷனை எடுத்திருக்கிறேன்.

புரிதலுக்கு மிக்க நன்றி.

Akaran said...

//சம்பளம் வாங்கிவிட்டு முதலாளியை திட்ட வேண்டுமா?
எனக்கு புரியவில்லை//

பணம் கொடுக்கிறான் என்று ஒரு காரணத்தை சொல்லி, முதலாளி செய்யும் தப்பை எல்லாம் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லுவது தான் உங்களது நியாயமா? நான் ஏற்கனவே சொன்னதை தான் உங்களது வார்த்தைகள் நிரூபிக்கின்றன. அதாவது ஐ.டி. முதலாளி கொடுக்கும் அதிக சம்பளம் என்பது ஒரு லஞ்சம். அதனால் தான் ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள் பலர் முதலாளிக்கு எதிராக வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள், முதலாளி எதிர்பார்ப்பது போல எமக்கு தொழிற்சங்கம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்த சமர்த்துக் குட்டிகளைப் பார்த்து ஒரு முதலாளி சந்தோஷப்படுவானா மாட்டானா?

ஒரு முதலாளி உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் என்பது உங்களது வேலைக்கு கொடுக்கும் கூலி மட்டும் தான். நீங்கள் வேலை செய்கிறீர்கள், அவன் அதற்கு கூலி கொடுக்கிறான். அத்தோடு கதை முடிந்தது. நான் சொல்வதை நம்பாவிட்டால் இந்தப் பதிவை இட்ட பட்டயக் கணக்காளர் இளையபல்லவனை கேளுங்கள். நிலைமை இப்படி இருக்கும் போது பணம் கொடுக்கும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. வேலை செய்யும் எங்களுக்கு சுய மரியாதை தேவையில்லையா? பணம் கொடுக்கும் முதலாளிக்கு நன்றிக் கடன் காடிக் கொள்பவர்களுக்கும், தனக்கு சாப்பாடு போடும் எசமானுக்கு நன்றிக்கடன் காட்டும் நாய்க்குமிடையில் என்ன வித்தியாசத்தை கண்டு விட்டீர்கள்? மன்னிக்கவும், நான் இப்படி சொல்வதற்கு குறை நினைக்க வேண்டாம், இளைய பல்லவன். சிலருக்கு அப்படி சொன்னால் தான் உண்மை புரிகிறது.

Akaran said...

//சீனாக்காரனிடம் காசு வாங்கி உளறுவது தான் இவன் வேலை. இதையே மற்றவர்களுக்கும் பொருத்திப் பார்க்கிறான்.//

நீங்கள் இப்படி சொல்வதை உங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களே நம்ப மாட்டார்கள். எனக்கு சீனாக்காரன் காசு கொடுக்கிறான் என்று நிரூபிக்க உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் ஐ.டி. முதலாளிகளுக்கு சார்பாக பேசுபவர்களுக்கு, ஐ.டி. கம்பனிகள் பணம் அள்ளிக் கொடுக்கிறன என்பதை நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இந்தப் பதிவிலேயே இளையபல்லவன் அதை குறிப்பிட்டிருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.

//ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும்.//