Wednesday, December 16, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 16

அத்தியாயம் 16 - இணைந்த இதயங்கள்


நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் வீரதவளப்பட்டணத்திற்குச் செல்கிறோம். வீரபாண்டியன் தன் தலை நகரை மிக விரைவில் நிர்மாணம் செய்து செயல்பட வைத்திருந்தான். காஞ்சிக்கு சற்று அருகில் இருந்தும், இந்த நகருக்குள் பல்வேறு புதிய கட்டடங்களையும் எழுப்பியிருந்தான். வீரதவளப்பட்டணத்திலிருந்து சற்று தள்ளி இருந்த படைவீட்டில் (தற்போது படவேடு என்று அழைக்கப்படுகிறது) அவனது படைகள் தண்டு இறங்கியிருந்தன. பாண்டியப்படைகளில் ஒரு பகுதியும், இந்த நகரம் அமைந்தபின் சேர்த்த படையுமாக சேர்த்து, சற்றேறக்குறைய பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். அவர்களை பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்காக, மாராயர் அங்கேயே முகாமிட்டிருந்தார். அவருக்குத் துணையாக இளவழுதியும் அங்கேயே இருந்தான். அவர்களோடு, கொல்லிமலை வில்லவர்கள் ஐன்னூற்றுவரும் அங்கே இருந்து வந்தனர்.

போருக்கான ஆயத்தம் செய்யவேண்டும் என்று விக்ரம பாண்டியர் சொல்லிவிட்டதன் விளைவாக, அங்கே பல்வேறு பொருட்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பொதி வண்டிகள், அவற்றை நடத்த பொதி மாடுகள், படைகள் தங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட கூடாரங்கள், உணவு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், அரிசி, பருப்பு ஆகியவை தனியே ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டது.

போர்த்தளவாடங்களான, வாள், வேல், கவசம், சலாகை முதலியவை அங்கேயே அமைக்கப்பட்ட கொல்லர் பட்டறைகளில் தயாராகிக் கொண்டிருந்தன. மேலும் குதிரைகள், யானைகளுக்குத் தேவையான கவசங்களும், உணவுப் பண்டங்களும் திரட்டப்பட்டன.

ஆனால் இத்தனை பெரிய படையை அங்கே நிர்வகிப்பது, புதிய அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் சுணக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. புதிய அரசுக்கு வரி கொடுப்பதில் ஆங்காங்கே குழப்பம் நீடித்தது. ஆயினும் இவற்றையெல்லாம், விக்ரம பாண்டியர் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு வந்தார்.

வீரபாண்டியன் தன் மனையாள் கயல்விழியுடன் வீரதவளப்பட்டணத்திலேயே சிறிது காலம் உல்லாசமாக இருந்து வந்தான். அவர்கள் இருவருக்கும் மிக மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றிருந்தது. ஆகவே நமக்குக் கூட அழைப்பு அனுப்பவில்லை!. இப்போதுதான் நாம் தெரிந்து கொண்டாலும் மனதைத் தேற்றிக்கொண்டு மணமக்களை வாழ்த்துவோம்!!.

ஆனால் இளவழுதியும், தேன்மொழியும் இன்னும் சிறிது காலம் காதலர்களாகவே தொடர்ந்து இருப்பதாக முடிவு செய்து விட்டனர் போலிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தேன்மொழி, வீரதவளப்பட்டணத்திலேயே இருந்து வந்தாள். படைவீடு செல்ல அவளுக்கு விருப்பமென்றாலும், ஏனோ மாராயர் மறுத்து வந்தார். அவ்வப்போது அங்கே வரும் இளவழுதிக்கு சில நல்ல யோசனைகளும் தெரிவித்து வந்தாள்.

====

காதலர்களுக்கு உகந்த நேரம் மாலைப் பொழுதுதான். அப்போதுதான் சூரியன் மலைவாயிலில் விழுவதற்கும் சந்திரன் அலைவாயிலில் எழுவதற்கும் சரியாக இருக்கும். அப்போது ஒளியிருந்தும் இல்லாதது போன்ற ஒரு மயக்கமான சூழல், காதலர்களின் மனதை ஒத்ததாக இருப்பதால் அவர்களுக்கும் அந்தி நேரத்தில் எண்ணங்கள் விழுந்தும் எழுந்தும் ஒருவித மயக்கத்தைத் தரும். அத்துடன் பூங்கா போன்ற மனதிற்கினிய இடத்தில் இருந்துவிட்டால் இந்த மயக்கம் மேலும் வாட்டி எடுக்கும். இதை பசலை நோய் என்பர் கவிஞர் திலகங்கள்!

அத்தகைய ஒரு அழகான உத்தியான வனத்தில் மாலை உலா சென்ற தேன்மொழிக்கு அத்தகைய பசலை கண்டு பலவேறு எண்ணங்கள் வந்து வாட்டின. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோமல்லவா? இது என்ன? பொதுவாக பசலை படர்ந்தவர்கள் இளைத்து காணப்படுவர். ஆனால் தேன்மொழியோ நல்ல வனப்புடன் இளமைச் செழிப்புடன் இருக்கிறாளே? ஒருவேளை பசலையென்பது பொய்யோ? ஆனால் அவ்வப்போது விம்மித்தணியும் எழில் சிகரங்கள் அவளது மனப்பாங்கை ஒருவாறு உணர்த்துவதை நாம் அறியலாம். என்ன செய்வது. இருந்த ஒரு தோழி கயல்விழியும் கல்யாணம் செய்துகொண்டு கற்புக்கரசியாகிவிட்டாள். இவள் பாடு அல்லவா திண்டாட்டமாகிவிட்டது.

தேன்மொழியின் இதயத்தில் இளவழுதியின்பால், அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, துக்கம், பயம் போன்ற விதவிதமான உணர்ச்சிகள் அலையலையாய் எழும்பின. இன்று வருவதாய் வாக்களித்திருந்தவனிடம் வெளிப்படையாகக் கேட்டுவிடுவது என்றே எண்ணியிருந்தாள். திருமணம் என்ற உறவு ஏற்பட்டால்தான், உரிமை பலப்படும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

உத்தியான வனத்திலிருக்கும் விளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரியேற்றுவோர், தம் பணிகளைச் செய்யத் துவங்கினர். இரூளும் மெல்ல சூழ்ந்தது. காத்திருந்த கண்கள் களையிழந்தன. காதலனைக் காணாத காரணத்தால். தேன்மொழி தன்னையே கடிந்து கொண்டாள். மீண்டும் ஒரு நெடிய பெருமூச்சுடன் அரண்மனை திரும்பத்துவங்கினாள்.

அங்கிருந்த பல்வேறு மலர்ச்செடிகளும், மாலை நேரத்தில் மொட்டவிழ்த்து மணம் பரப்பத் துவங்கியிருந்தன. அதன்பால் தன் கவனத்தைத் திருப்பியவள், அந்த மணத்தை ரசித்தவாறு தன் நிலை மறந்து மெல்லக் கைவீசி நடந்து கொண்டிருந்த போது, அவளது கரங்களைப் பற்றினான் அவள் காதலன். ஆயினும் அவன் கண் தன் கடைக்கண் பார்வையையும் செலுத்தவில்லை. என்ன விந்தை. அவன் வருவானா என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவளுக்கு அவன் முன்னால் நின்றாலும் அவனை நோக்க மனமில்லை. தன் மனப்போக்கை எண்ணி சற்று நகைக்கவும் செய்தாள். அது புன்முறுவலாக வெளிப்பட்டது. அதை அவளது சம்மதமாக எண்ணி தன் பக்கம் இழுத்தான் இளவழுதி. அதை எதிர்ப்பாராத தேன்மொழி, அவன் மீது விழுந்தாள்.

ஒரு நாழிகை நேரம் காதலர் இருவரும் வேருலகம் சென்று வந்தனர். அவர்கள் செய்கையைப் பார்ப்பது அநாகரீகமான செயல் என்பதால் நாம் சற்று நேரம் அவ்வனத்தில் உலாவிவிட்டு மீண்டும் அங்கே வந்து அவர்களைப் பார்த்தால் வழக்கம் போல் அவர்கள் உடல் இங்கே இருந்தாலும், உள்ளம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிகிறது. எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒரு சிறு தென்றல் காற்று அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தழுவிச் சென்றபோது சிலிர்த்த அந்த மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள் அவர்களை இவ்வுலகிற்கு மீட்டன.

எப்போதும் சுதாரிப்பது பெண்ணினம்தான். அந்த வகையில் தேன்மொழியும் தன் நிலை உணர்ந்தாள். ஆனால் அவனிடமிருந்து விலக மனம் மறுத்தது. காலம் காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட கற்பு நெறி பற்றிய தெளிவு அவனிடமிருந்து பிரிந்து செல்ல அறிவுறுத்தியது. வேண்டாவெறுப்பாக சற்று விலக முயன்றாள். அந்த முயற்சியும் இளவழுதிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவளது இயற்கை அழகுடன் இயைந்து உறவாடும் நிலையைப் பெற்றான். கண்ணோடு கண் நோக்கிவிட்டால் வாய்ச்சொற்களுக்குப் பயன் என்ன? ஆனால் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லையே. ஏதாவது பேசினால்தானே நாம் கேட்க முடியும். ஹூம் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?

ஒருவழியாக இளவழுதி தனது தொண்டையைக் கனைத்தான். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தேன்மொழியிடமிருந்து ஒரு ஹும். அடடா. என்ன இது. இன்று போய் நாளைதான் வரவேண்டும் போலிருக்கிறதே. இதோ இளவழுதி பேசிவிட்டான்.

"தேன்மொழி, கோபமா?"

"நல்ல கேள்வி, இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்துவிட்டு.."

"ஏதாவது பேசவேண்டுமல்லவா?"

"எல்லாம் பேசுவீர்கள், ஒன்றைத் தவிர"

"எந்த ஒன்று?"

"நான் அதையும் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமா? சரி சொல்லித் தொலைக்கிறேன். மாமா என்னிடம் பலமுறை கேட்டுவிட்டார் என் திருமணத்தைப் பற்றி. உங்கள் எண்ணம் என்னவென்று தெரியாமல் நான் என்ன சொல்ல"

"என் எண்ணம் தெரியாதா உனக்கு"

"எல்லாம் தெரிகிறது. ஆனால் திருமணம் பற்றி ஒன்றுமே பேசமாட்டேன் என்கிறீர்களே"

இதற்குப் பதிலாக, இளவழுதியிடமிருந்து ஒரு பெருமூச்சுதான் வெளிவந்தது. அதுவரை இருந்த குதூகலம் சட்டென்று மாறி முகத்தில் ஒரு வித குழப்பம் குடிகொண்டது. "தேன்மொழி, உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் ரகசியத்தைக் கூறியதில்லை. நானே சொல்ல வேண்டுமென்றிருந்தேன். நீயும் கேட்டுவிட்டாய். என் வாழ்வில் ஒரு பெண் என்றால் அது நீதான். என் மனையாளும் நீதான். ஆனால் நம் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் ஒரு சில நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்."

அவன் பதில் அவளையும் குழப்பியது. "ஒன்றும் புரியவில்லையே, என்ன நிகழவேண்டும்".

"தேன்மொழி" என்று அழைத்தவன் சற்று நிறுத்தினான் அவளது கண்ணோடு கண் நோக்கி. "நான் சென்ற வருடம் தில்லையம்பலம் சென்றிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்திருக்கிறேன். அது இன்னும் ஓரிரு திங்களில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அதன் பின் நம் திருமணம்தான்".

"என்னவென்பதை எனக்கு விளக்கிச் சொல்லுங்களேன்" விடுவதாக இல்லை தேன்மொழி.

"உனக்கும் தெரியவேண்டியதுதான். இங்கே உட்கார். தில்லையில் எனக்கு ஒரு சூத்திரம் கற்றுத்தரப்பட்டது. அதன் பெயர் சக்கர வியூகம். அதை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சிக்குப் பின் நம் திருமணம் சாத்தியமாகிவிடும்".

"சக்கரவியூகமா? அதை நாம் பாரதக்கதையிலல்லவா படித்திருக்கிறோம்."

"இது வேறு. நிச்சயமாக உனக்கு இதைப்பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு என்னையும் என் வார்த்தைகளையும் நம்பு".

"இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள் தேன்மொழி ஏக்கத்துடன். அனிச்சையாக எழுந்த அவள் கரங்களைத் தன் கரங்களுள் ஏந்தினான் இளவழுதி. இணைந்த அந்தக் கரங்கள் சக்கர வியூகத்திற்கு ஒரு புது சூத்திரம் அமைத்தன.

(தொடரும்)

3 comments:

இரவுப்பறவை said...

ரொம்ப நல்லா இருக்குங்க இந்தவாரம்...
தொடர்ந்து எழுதுங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தொடருங்கள்..,

☀நான் ஆதவன்☀ said...

//இரவுப்பறவை said...

ரொம்ப நல்லா இருக்குங்க இந்தவாரம்...
தொடர்ந்து எழுதுங்க..//

ரிப்பீட்டே :)