Wednesday, December 10, 2008

உல்ழான் - திரை விமர்சனம்


வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது. இது இந்தப் பட டைரக்டர் வோல்கர் ஷ்லூன்டர்ஃப் சொன்ன கருத்து.

உல்ழான் (Ulzhaan) - இது ஒரு ஃப்ரென்ச் மொழித் திரைப்படம். கஜக்ஸ்தானில் எடுக்கப் பட்டது.

மொத்தம் மூன்று பாத்திரங்கள்தான். மற்றவர்கள் ஒன்றிரண்டு காட்சிகளில் வருகிறார்கள்.

கதை

ஒருவன் ஏதோ ஒன்றைத் தேடிச் செல்கிறான். ஒருத்தி அவனுக்கு உதவுகிறாள். ஏன்? அவன் தேடிச் சென்றது கிடைத்ததா? அவள் என்ன ஆனாள்? இவ்வளவுதான் கதை.




திரைக்கதை

கதையின் நாயகன் ஏதோ ஒன்றைத் தேடி கஜக்ஸ்தானில் உள்ள 'கான் டெங்க்ரி' மலைக்குத் தனியாகச் பயணப் படுகிறான். கூட யார் வந்தாலும் தடுத்து விடுகிறான். அவனது செயலும் பேச்சும் சந்தேகப் படும் வகையில் இருக்கிறது.முதலில் அங்கு ஒரு புதையலைத் தேடிச் செல்வதாகச் சொல்கிறான். ஆனால் அவன் நோக்கம் அதுவல்ல என்று பிறகு தெரிகிறது.

செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் குதிரை வாங்குகிறான். அந்த குதிரை வாங்கும் போது, உல்ழான் என்னும் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் தானும் அவனுடன் வருவேனென்று அடம் பிடிக்கிறாள். இருவரும் குதிரையில் கஜக்ஸ்தானின் 'ஸ்டெப்பி' காடுகளின் வழியே பயணிக்கிறார்கள்.

வழியில் ஷகுனி என்று ஒருவன் தன்னை 'வார்த்தை வியாபாரி' என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறான். இப்போதுதான் 'தர்மா' என்ற வார்த்தையை விற்றதாகச் சொல்கிறான். (இது அந்தப் பகுதி மக்களின் அறியாமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது). அவன் தன்னை 'ஷமன்' என்று கூறிக் கொள்கிறான். 'ஷமன்' என்போர் நம்மூர் மந்திரவாதி போன்றவர்கள். உலகின் பல பகுதியில் இவர்கள் இருக்கிறார்கள்.

மேலும் செல்லும் வழியில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்திய பகுதியைக் கடக்கிறார்கள். அங்கு ஒரு புல் பூண்டு கூட இல்லை. இயந்திரங்களும் கட்டடங்களும் பாழடைந்து கிடக்கின்றன.

இறுதியில் கான் டெங்க்ரி மலைப் பகுதியை அடைகிறார்கள். கஜக்ஸ்தானின் உயரமான மலை அது. நமது எவரெஸ்ட் போல பனி படர்ந்த மலை. சுற்றிலும் பனியைத் தவிர வேறெதுவும் இல்லை. அங்கங்கே ஒரு சில பாறைகள். உல்ழானைத் திரும்பிப் போக வற்புறுத்துகிறான். அவளையும் வந்த குதிரையையும் அங்கேயே விட்டுவிட்டு எதையும் கொண்டு செல்லாமல் சூன்யத்தை நோக்கி திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பிக்கிறான். அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் உல்ழான் இரு குதிரைகளையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்கிறாள்.

ஆனால் மீண்டும் திரும்பி வந்து ஒரு கல்லில் அந்தக் குதிரையைக் கட்டிவிட்டு, அந்த்க் குதிரைக்கு சிறிது புல்லும் போட்டு விட்டு அவள் மட்டும் சென்று விடுகிறாள். மலையில் வெகுதூரம் சென்றுவிட்ட நாயகன், திரும்பிப் பார்க்கிறான். குதிரை புல்லைத் தின்பது தெரிகிறது. உல்ழான் செல்வது தெரிகிறது. இந்தக் காட்சியில் படம் நிறைவுறுகிறது.

இறுதிக் காட்சி, எதுவும் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவும், அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் அமைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப்படத்தில் பிலிப் டோர்டன் நாயகனாக நடித்துள்ளார். அகனத் சென்பாய் (தி நோமாட்ஸ் -ல் நடித்தவர்) உல்ழானாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார். டேவிட் பென்னெட் ஷகுனியாக நடித்துள்ளார். இவர் இந்த இயக்குனர் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற 'தி டின் ட்ரம் (1979)'ல் சிறு பையனாக நடித்தவர். படம் வெளி வந்த ஆண்டு 2007.

படத்தின் கருத்து

மேலை நாகரீகத்தின் பொருள்சார் தேடல்களுக்கும் (மெடீரியலிஸ்டிக் வேர்ல்ட்) கீழை நாடுகளின் அகத்தேடல்களுக்கும் (ஸ்பிரிசுவலிஸ்டிக் வேர்ல்ட்) இடையே ஏற்படும் ஒவ்வாமையை படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒருவன் அனைத்தையும் விட்டுவிட்டு எதையோ தேடித் தனியாகச் செல்வது, முன்பின் பார்த்திராத ஒருவனுக்காக ஒருத்தி அவன் பின் செல்வது, ஒருவன் தன்னை வார்த்தை வியாபாரி என்று கூறிக் கொள்வது நம்மைப் பொறுத்தவரை, அதாவது 'மெடீரியலிஸ்டிக் அவுட்லுக்கில்' பைத்தியக்காரத் தனம். ஆனால் இவற்றிலெல்லாம் ஒரு அர்த்தம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

அதனால்தான் 'வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது'.

வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இந்தப் படத்தைப் பாருங்கள்.

5 comments:

CA Venkatesh Krishnan said...

test

குடுகுடுப்பை said...

'வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாத போதுதான் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகிறது'.

//
என் வாழ்க்கை என் அர்த்தமில்லாமல் என் பதிவுகள் போல இருக்குன்னு இப்பதான் புரியுது. என்னோட பதிவுக்கு வாங்க பெரிய அதிர்ச்சி காத்திருக்கு உங்களுக்கு

☀நான் ஆதவன்☀ said...

நான் உழவன் படம் தான் பார்த்திருக்கேன் :-)

CA Venkatesh Krishnan said...

அய்யா குடுகுடுப்பை, இது மிகப் பெரிய அதிர்ச்சிதான் :))

கீழே உள்ள உங்க கமென்டப் பாருங்க. இது டிசம்பர் 4ம் தேதி நீங்க போட்ட கமென்ட்.


//
குடுகுடுப்பை கூறியது...
சரித்திரக்கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது படிக்கும்போது புரிகிறது

December 4, 2008 11:30 PM
//

உங்க பதிவுல போட்டிருக்கிறதப் பாருங்க. இது டிசம்பர் 10ம் தேதி நீங்க போட்ட பதிவு

//
நான் வாசிக்க நினைத்திருக்கும் ஒரு சரித்திர பதிவு நண்பர் இளைய பல்லவனின் சக்கர வியூகம்,
//

எனக்கு அதிர்ச்சியா இருக்குமா இருக்காதா?

அழைப்புக்கு நன்றி. நிச்சயம் இந்த வாரத்திலேயே பதிவிட்டு விடுகிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
நான் உழவன் படம் தான் பார்த்திருக்கேன் :-)
//

ஆஹா. இப்படி வேற இருக்கா. சரி சரி.